உன்னில் சிறையாகிறேன்- 30

காலமென்னும் எழுதுகோலில் எழுதப்படாத கவிதையே நம் காதல்…!

உன்னில் சிறையாகிறேன்  – 30

காலைச் சூரியனின் கரங்கள் பூமியில் படர்ந்து பனித்துளிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஊறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்க, கண்களை சிரமப்பட்டு பிரித்தாள் அருவி,

கலைந்த கேசமும் தரையில் கிடந்த அவளது உடைகளும் வெற்றுடல் மீது தழுவியிருந்த ஒற்றைப் போர்வையும் முந்தைய நாள் இரவின் நிஜத்தை அவளுக்கு உணர்த்த,

அவளையும் அறியாமல் கண்கள் நீரில் நனைந்தது, அவன் ஒன்றும் பலவந்தப் படுத்தவில்லை ஆனால் அதேசமயம் இவள் ஒன்றும் எதிர்க்கவில்லை,

அவனின் அத்துமீறலை தடுக்காமல் அவனோடு இன்பத்தைப் பகிர்ந்து கொண்டாள் தான், ஆனாலும் அவளின் மனம் ஏதோ ஒரு பாரத்தை சுமந்தது போல அழுத்தியது,

போர்வையை இன்னும் இறுக்கமாக உடலைச் சுற்றிக் கொண்டு எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க, 

விடிய விடிய அவளின் துக்கத்தைக் கெடுத்தவன் விடியும் முன்னரே அங்கிருந்து கிளம்பி விட்டான் போலும், அவனைக் காணவில்லை, 

மெல்ல தட்டுத் தடுமாறி எழுந்தவள் அதே போர்வையோடு பாத்ரூமில் நுழைந்து கொண்டவள், சவரை ஆன் செய்து விட்டு அதனடியில் வெற்றுடலோடு நின்றாள்,

வெதுவெதுப்பான நீர் அவளின் உடலுக்கு இதமாக இருக்க, உடலின் அயர்ச்சி தணியும் வரை நன்கு குளித்தவள், அங்கிருந்த டவலை உடலில் சுற்றிக் கொண்டு க்ளாசெட்டுக்கள் நுழைந்தாள்,

லகுவான உடையுடுத்தி அளவான ஒப்பனை செய்து கண்ணாடியின் முன்பு நின்றவளுக்கு அவளருகே அவனின் பிம்பம் வந்து புன்னகைக்க, 

நீண்ட பெருமூச்சு விட்ட படியே அவனின் அறையை விட்டு வெளியே வந்தவள் ஹாலுக்குச் செல்ல அங்கே, ஹாலில் திருவாசகம் ஐயா யாழினியோடு விளையாடிக் கொண்டிருந்தார்,

அருவியைக் கண்டதும் யாழினி “மம்மி…” என்று ஓடி வந்து அவளது கால்களைக் கட்டிக்கொண்டாள்,

“மம்மி… மம்மி… இங்க பெரிய கார்டன் இருக்கு தெரியுமா, தாத்தா அங்க கூட்டிட்டு போனாரு, ரொம்ப ஜாலியா இருந்துச்சு, 

வா மம்மி உனக்கு அந்த கார்டனை காட்டுறேன், வா மம்மி” என்று வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுக்க,

“குழந்தை ஆசைபடுறா இல்ல, போயிட்டு வாம்மா அருவி” என்றார் திருவாசகம்,

“சரி சரி நான் வர்றே, போலாமா” என்று குழந்தையுடன் தோட்டத்துப் பக்கம் போனாள் அருவி, 

அங்கிருந்த பெரிய தோட்டத்தில் வண்ணவண்ண மலர்களும் பச்சைபசேலென்ற செடிகளும் நிறையவே இருந்தது, 

பல வண்ண நிற பட்டாம் பூச்சி ஒன்று பூக்களில் அமர்ந்து தேனருந்திக் கொண்டிருக்க அதைப் பார்த்த யாழினி அருவியின் கையை விட்டு பட்டாம்பூச்சியைப் பிடிக்கச் சென்றாள்,

பட்டாம் பூச்சியோ பறந்து பறந்து மலருக்கு மலர் தாவிக் கொண்டிருக்க, அதைப் பிடிக்கும் முயற்சியில் யாழினி பிஸியாக இருந்தாள்,

யாழினியின் விளையாட்டை ரசித்தபடியே மெய்மறந்து நின்றவளின் பின்னாலிருந்து இரு கைகள் அவளது இடையைச் சுற்றி வளைத்தன, 

அருவி திடுக்கிட்டுத் திரும்பினாள், அங்கே அக்னி! அவன் எப்போது வந்தான்? என்று அவள் விழி விரியப் பார்த்துக் கொண்டிருக்க,

“குட்டிம்மாவுக்கு ப்ரேக் பர்ஸ்ட் ரெடி, வாங்க சாப்பிடலாம்” என்று ரவி கையில் உணவுத் தட்டோடு வந்தார், யாழினிக்குட்டி பட்டாம்பூச்சியை விட்டு விட்டு ரவியிடம் ஓடினாள், 

ரவியின் அழைப்பு கேட்டு நிதர்சனத்திற்கு வந்த அருவி சுற்றிம் முற்றும் திரும்பிப் பார்க்க, அவளின் பிரம்மையாக வந்தவன் காற்றோடு காற்றாக கரைந்திருந்தான்,

இப்ப தானே பக்கத்துல இருந்தான் அதுக்குள்ள எப்படி மறைஞ்சு போனான்னு தெரியலையே என்ற குழப்பத்தோடு நின்றவளுக்கு, வந்தவன் தன் கற்பனை என்றே அறியாமல் போனது தான் ,

அதே சமயம், விமானத்தில் அமர்ந்து ​வானில் பறந்து சென்று கொண்டிருந்த அக்னிக்கு, உடல் மட்டும் வெற்றுகூடு போல அங்கிருக்க,

மனம் நேற்று இரவின் பிடியில் சிக்கி சிலிர்த்துக் கொண்டிருந்தது, தன்னவளது கூந்தலின் வாசம் அவனது நாசிக்குள் இன்னும் அகலாமல் அப்படியே இருந்தது,

​பக்கத்தில் அமர்ந்திருந்த திலீபன், தன் பாஸின் மனநிலையறியாமல் மீட்டிங் சம்மந்தமாக பேசிக் கொண்டே வந்தான்,

“பாஸ்… இந்த ப்ராஜெக்ட் டீடைல்ஸ் ஒருவாட்டி செக் பண்ணிடுங்க,” என்று சொல்லிக் கொண்டே அக்னியைப் பார்த்தான்,

அக்னி திலீப்பனின் வார்த்தைகளை எதையும் காதில் வாங்காமல் ஜன்னல் வழியாக மேகத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்,

​”பாஸ்… பாஸ்… பாஸ்” என்று திலீபன் சத்தமாக அழைக்க, அக்னி திடுக்கிட்டுத் திரும்பினான்,

​”என்ன…. என்னாச்சு..” என்றான் அக்னி

​”இல்ல பாஸ்… மூணு வாட்டி கூப்பிட்டுட்டேன், என்ன ஆச்சு, உடம்பு எதாவது சரியில்லையா பாஸ்” என்று திலீபன் அக்கறையாகக் கேட்க, அக்னி தன் சட்டையின் காலரைச் சரி செய்து கொண்டான்.

​”ஒன்னுமில்லை… வேலையைப் பாரு, மீட்டிங் முடிஞ்சதும் உடனே கிளம்பணும்,  முடிஞ்சா இன்னைக்கு நைட்டே ரிட்டர்ன் போயாகனும்,” என்றான் அக்னி,

​திலீபன் ஆச்சரியமாகப் பார்த்தான், 

“இது ஒருவார மீட்டிங் பாஸ் இன்னைக்கு ஒரேநாள்ல எப்படி முடிக்க முடியும், இது பெரிய ஆப்ர்சூனிட்டி, அதனால எடுத்தோம் கவிழ்த்தோம்னு இல்லாம பொறுமையா முடிக்கனும்னு நீங்க தானே சொன்னீங்க” என்று திலீப் நியாபகப்படுத்த,

​”நான் இப்போ சொல்றேன்ல… சீக்கிரம் முடியுற மாதிரி பாரு, எனக்கு… எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு,” என்றான் அக்னி, திலீப் அதற்கு மேல் வாதிட முடியாமல்,

“ஓகே பாஸ்” என்று மட்டும் சொல்லி விட்டு தன் போனை எடுத்து மீட்டிங்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான், பழையபடியே அவனின் நினைவுகளை ஆக்கிரமித்தாள் அருவி, 

அதிகாலை நேரத்தில் அலாரத்தின் அழைப்பு மணி கேட்டு எழுந்தவன், தன் மார்பில் துயில் கொண்டவளை ஆசையோடு அள்ளியணைத்து முகமெங்கும் முத்தமிட்டு, 

சிறிதேனும் சலனப்படுத்தாமல் படுக்கையில் கிடத்தி விட்டு ஏசியின் குளிரைக் குறைவாக வைத்தவன் போர்வையை நன்றாக போர்த்திவிட அவளோ திரும்பி படுத்த போது கதகதப்பிற்காக அவன் கையை தன்னோடு இழுத்துப் பிடித்துக் கொண்டாள்,

“என்னை தனியா விட்டுட்டு போகாத, நீ இல்லாம என்னால  இருக்க முடியாதுடா அக்னி” என்று அவள் சொல்வது போல அவனுக்குத் தோன்ற, மெல்லிய புன்னகை ஒன்று அவன் இதழிகளில் தவழ்ந்தது,

“உன்னை விட்டு போக எனக்கு மட்டும் ஆசையா என்ன, ஆனாலும் என்ன பண்றது போய் தான் ஆகனும், ரொம்ப நாளா நான் எதிர்பார்த்து காத்திட்டு இருந்த பெரிய ப்ராஜெக்ட்டோட டெண்டர்,

அதற்கு நான் போன் தான் சரியா இருக்கும் வேற வழியில்ல, எவ்ளோ சீக்கிரம் மீட்டிங் முடிக்க முடியுமோ அவ்ளோ சீக்கிரமா திரும்பி வந்திடுவேன் மகிழ்” என்று சொல்லி அவளிடம் இருந்து மெல்ல தன் கையை பிரித்துக் கொண்டவன்,

சிறிது நேரத்திலேயே குளித்து முடித்துக் கிளம்பி தயாரானான், அங்கிருந்து புறப்படும் முன்பு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு சிலபல முத்தங்களை வாரிவழங்கி விட்டு மனமே இல்லாமல் கிளம்பினான் அக்னி,

​”என்னை நீ என்ன செஞ்ச மகிழ், எனக்குள்ள நீ எப்போ வந்த, மகிழ் உனக்கு என் நேசம் என்னன்னு தெரியுமா, இல்ல என் பாசம் எவ்வளவுன்னு புரியுமா, நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு உங்கிட்ட சொல்லனும் ரொம்ப ஆசையா இருக்கு,

அதேமாதிரி உங்கிட்ட இருக்க மொத்த லவ்வையும் எனக்காக நான் எடுத்துக்கனும் அதைவிட கொள்ளை ஆசையா இருக்கு, உனக்கும் என்னை பிடிக்கும்தான மகிழ், 

பின்ன பிடிக்காமலா விடிய விடிய எங்கூட இருந்திருப்பா அதெல்லாம் என்னைப் பிடிக்கும் இல்லையா மகிழ்” என்று அவனது உள்மனம் அவளிடமே தஞ்சமானது,

பல வருடங்களாகக் கட்டி எழுப்பிய அவனது இரும்புக்கோட்டை, ஒரே ஒரு சிறு பெண்ணால் சரிந்து விழுந்ததை அவனால் இன்று வரை நம்பவே முடியவில்லை,

அவனது நினைவுகள் சில வருடங்கள் முன்நோக்கிச் சென்றது,

அன்று ஒருநாள் மாலை நேரம், அக்னி தனது காரில் சென்று கொண்டிருந்தான், நகரத்தின் மத்தியில் ஒரு சிக்னலில் அக்னியின் கார் நின்றபோது, திடீரென ஒரு பெரும் சத்தம்,

​சிக்னலை கவனிக்காமல் வந்த ஒரு ஸ்கூட்டி மீது, மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று மோதியது, ஒரு நொடிதான், அந்தப் பெண் தூக்கி வீசப்பட்டாள்,

சாலை எங்கும் ரத்தம், கார் மோதிய வேகத்தில் அந்தப் பெண்ணின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது,

​சுற்றி நின்றவர்கள் பதறினார்கள், சிலர் போனில் வீடியோ எடுத்தார்கள், 

சிலர் பயந்து தள்ளி நின்றார்கள், அக்னி தன் காரைத் திறந்து இறங்கி உதவி செய்ய ஓடினான், ஆனால், அவனுக்கு முன்னால் ஒரு ஒரு பெண் ஓடிவந்து அடிபட்ட பெண்ணைத் தாங்கினாள்,

​அவள் பதறவில்லை, ஒரு கையில் போனில் ஆம்புலன்ஸ்க்கு லொகேஷனைச் சொல்லிக் கொண்டே, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தப் பெண்ணின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள் அவள் தான் அருவி, 

ரத்தம் வழிந்தோடிய பெண்ணின் கழுத்து நரம்பு துடிப்பதை உறுதி செய்தாள், அந்தப் பெண்ணின் உயிர் பிரியும் தருவாயில் இருந்தது, கண்கள் சொருகிப் போக, அருவி விடாமல் அவள் கன்னத்தைத் தட்டி, 

“அக்கா… கண்ணைத் திறங்க! ஒன்னும் ஆகாது… நான் இருக்கேன்… ப்ளீஸ் கண்ணைத் திறங்க” என்று கத்தினாள்,

தன் துப்பட்டாவை எடுத்து அடிபட்டு ரத்தம் நிற்காமல் வழிந்த இடத்தில் இறுக்கமாக கட்டி விட்டு பார்த்தால்,  மூச்சும் துடிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது,

சட்டென எதைப்பற்றியும் சிந்திக்காமல் தன் இரு உள்ளங்கைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாகக் கோர்த்து, அந்தப் பெண்ணின் மார்பின் மையப்பகுதியில் வைத்து அழுத்தத் தொடங்கினாள்,

“ஒன்று… இரண்டு… மூன்று…” என மனதிற்குள் எண்ணிக்கொண்டே, தன் முழு பலத்தையும் கைகளில் ஏற்றி அழுத்தக் கொடுத்தாள், 

ஒவ்வொரு அழுத்தத்தின் போதும் அந்தப் பெண்ணின் உடலுக்குள் உயிர் திரும்பாது எனச் சொல்லும் மரணத்திற்கும், உடலுக்குள் உயிர் திரும்பியே ஆக வேண்டும் என அடம்பிடிக்கும் அருவிக்கும் இடையே ஒரு மாபெரும் யுத்தமே நடந்தது,

​அருவியின் நெற்றியில் வேர்வைத் துளிகள் அரும்பி, ரத்தக் கறையோடு கலந்து அவள் முகத்தில் வழிந்தது, கை தசைகள் வலிக்கத் தொடங்கினன, மூச்சு வாங்கியது, ஆனாலும் அவள் நிறுத்தவில்லை அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டே, 

“ப்ளீஸ்… எந்திரிங்க… உங்களுக்காக உங்க வீட்ல இருக்கிறவங்க காத்துட்டு இருப்பாங்க… ப்ளீஸ், மூச்சை விட்டுடாதீங்க” என உடைந்த குரலில் கெஞ்சினாள்,

​திடீரென, அந்தப் பெண்ணின் உடல் லேசாக அதிர்ந்தது, ஒரு நீண்ட, ஆழமான மூச்சை இழுத்துவிட்டு அந்தப் பெண் இருமினாள், 

மரணத்தின் பிடியில் இருந்த உயிர், அருவியின் அந்த விடாமுயற்சியால் மீண்டும் உடலுக்குள் எட்டிப்பார்த்தது,

அந்த ஒரு நொடி அக்னி ஸ்தம்பித்து நின்றான், சுயநலமில்லாமல் யாரோ ஒருவரின் உயிரைக் காப்பாற்ற தனி ஒரு பெண்ணால் இ‌வ்வளவு தூரம் போராட முடியுமா,

​அருவியின் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் அந்தப் பெண்ணின் கையில் விழுந்தது, அது வெறும் கண்ணீரல்ல, ஒரு உயிரை மீட்டெடுத்த வெற்றியின் துளி,

​அப்போது தூரத்தே ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டது, அது வரும் வரை, காலனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் தனியாளாய நின்று போராடினாள் அருவி, 

ஆம்புலன்ஸ் வந்ததும், அங்கிருந்தவர்களின் உதவியோடு அந்தப் பெண்ணை உள்ளே ஏற்றினாள்,

​உயிர் பிழைத்த அந்தப் பெண், ஆம்புலன்ஸ் கதவு மூடுவதற்கு முன், நடுங்கும் கைகளை உயர்த்தி அருவியைப் பார்த்துக் கும்பிட்டாள், ஆம்புலன்ஸ் கிளம்பியதும், அங்கிருந்த டிராஃபிக் போலீஸ் ஓடி வந்தார், 

“சரியான நேரத்துல ஒரு உயிரை காப்பாத்தி இருக்கம்மா, உன்னை மாதிரியே எல்லாரும் இருந்தா, ஆக்ஸிடெண்டுல போகிற பல உயிர்களை காப்பாத்த முடியும், ஹேட்சாப்ம்மா” என்று பாராட்டினார், 

சுற்றியிருந்தவர்கள் கைதட்டி அவளை உற்சாகப்படுத்தினர், ஆனால் அருவி,

​”இது என் கடமை சார்…” என்று மட்டும் ஒற்றை வரியில் சொல்லிவிட்டு,

அவள் ​தன் உடையில் படிந்திருந்த இரத்தக் கறையை ஒரு பொருட்டாக எண்ணாமல் தன் பையை எடுத்துக்கொண்டு, எவ்விதக் கர்வமும் இன்றி நடந்தாள், 

அங்கிருந்த கூட்டம் கலைந்து போனது ஆனால் அக்னி மட்டும் அங்கேயே நின்று அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான்,

தொடர்ந்து வாசிப்போம் வாங்க

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page