மயக்கம் – தயக்கம் 11
கொஞ்ச நேரத்தில் தன்னை மீட்டுக் கொண்டவன் உணர்வுகளின் வலையை அறுத்துக்கொண்டு வெளியே வந்து விட்டான். “அப்பா, இவ திவ்யா. என்னோட லேடி லவ் . ரொம்ப டீப்பா லவ் பண்றோம் என்று ஆரம்பித்து இப்போது அவள் தனது அலுவலகத்திலேயே பயிற்சியில் சேர்ந்திருப்பதை கூட மறைக்காமல் சொல்லிவிட்டான். கேட்ட அவனது பெற்றவர்களுக்குத்தான் நெஞ்சை அடைத்தது. இதையெல்லாம் எங்கெல்லாமோ ,யாரோ என்று கேள்விப் பட்டதும், நாளிதழ்களில் படித்துவிட்டு ஒருவருக்கொருவர் கணவனும் மனைவியுமாக விவாதித்தும் இப்போது ஞாபகத்தில் வந்து வதைத்தது.
“உன்கிட்ட இதையெல்லாம் நாங்க எதிர்பார்க்கல கண்ணா.உன்னை நாங்க வளர்க்கிறதுல எங்கே மிஸ் பண்ணோம்னு தெரியல. இந்தப் பொண்ணு…ஏம்மா , நீ இப்படி இருக்குறது உங்க வீட்டுல தெரியுமா? இதெல்லாம் அவங்களுக்கு சம்மதமா? ” என்று திவ்யாவை பார்த்து வாணி கேட்டதும் திவ்யாவுக்கு கோவம் வந்து விட்டது.
“ஆன்டி,நீங்க உங்க பையனோட பேசுற வரையிலும் சரி.அதுக்குள்ள நா வர மாட்டேன். பட், என்னை பத்தியோ,என்னோட பேமிலி பற்றியோ பேசுறது என்னால அனுமதிக்க முடியாது. கேட்டுட்டு நா சும்மா இருக்கவும் மாட்டேன்.” என்றுவிட்டாள்.
கையாலாகாத ஒரு பார்வையை மகனை நோக்கி வீசியவர்கள்,” சரி, நீங்க ரெண்டு பேரும் ஏதாவது ஒரு நல்ல முடிவுக்கு வாங்க. நீயே தேவைப் படும்பொழுது எங்களுக்கு கூப்பிடு ” என்றுவிட்டு கிளம்பி விட்டார்கள்.வாணியின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. ரோஷிணியோ அண்ணனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள்.
தனது பெற்றவர்களிடம் கோவமாக பேசினாள் என்று அவனும் திவ்யாவிடம் மௌனத்தை கையில் எடுத்தான்.இப்படியே ஒரு வாரம் நகர்ந்தது. திவ்யா ஞாயிறு முழுவதும் அங்கே அவனுடன் தான் இருந்தாள். அவனது மவுனம் அவளுக்கு சலிப்பைக் கொடுக்க திங்கட்கிழமை அலுவலகத்திலிருந்து கிளம்பி தான் தங்கி இருக்கும் அறைக்கு சென்று விட்டாள். அவனை சமாதானம் செய்யும் எண்ணமெல்லாம் அவளுக்கு இல்லை.
‘உன் பெற்றவர்கள் என்னைப் பற்றி பேசினார்கள்.திருப்பிக்கொடுத்தேன்.அவ்வளவு தான். தவறில் உன் பங்கும் இருக்கும் பொழுது அவர்கள் எப்படி என்னைக் கேட்கலாம் என்ற எண்ணம்.’ அதனால் அவள் மன்னிப்பும் கேட்பதாக இல்லை.
ஒருவாரம் பாராமுகமாக இருந்தவனுக்கு அதற்குமேல் முடியவில்லை. அவனே அவளிடம் இறங்கி வந்தான். இருவருமாக பேசி திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தார்கள்.அடுத்த வார இறுதியில் அவன் தனது பெற்றவர்களையும்,திவ்யா தனது பெற்றவர்களையும் சந்திக்க சென்றார்கள்.
சென்னையில் அவன் தனது விருப்பத்தை சொல்லி திருமணத்தை நடத்தி தர வேண்டும் என்று கெஞ்ச ,திவ்யாவோ “எனது வாழ்க்கை துணையை தெரிவு செய்து விட்டேன். திருமணத்தை நீங்களே வந்து நடத்தி கொடுத்தால் உங்களுக்கு மரியாதை ” என்றுவிட்டாள்.
மகளின் வார்த்தைகள் பெற்றவர்களுக்கு வலிதான். அதிர்ச்சி தான். வளர்க்கும் பொழுதே,வளரும்பொழுதே கண்டித்திருக்க வேண்டும்.இப்போது எல்லாம் கை நழுவிய பிறகு என்ன செய்ய முடியும் ? நல்லவேளை திருமணம் எல்லாம் ஹம்பக் என்று பேசாமல் ஒருவனை தெரிவு செய்திருக்கிறாளே! அதுவே நலம் என்று அமைதியாக சம்மதித்து விட்டார்கள்.வேறு வழியும் இல்லையே!
காதல் என்று வந்த பிறகு மற்ற விஷயங்களை என்னவென்று பேசுவது என இரு பக்க பெற்றவர்களும் திருமணத்தை உறுதி செய்து அதற்க்கான ஏற்பாடுகளையும் செய்தார்கள். திருமணத்திற்கு முதலில் சங்கீத் வைக்கவேண்டும் என்று மணப்பெண் வெகுவாக விருப்பம் கொள்ளவே ,”இதெல்லாம் நம்ம வீட்டுல பழக்கம் இல்லடா ..”என்று மணமகனின் பெற்றவர்கள் எடுத்துக்கூறிய பிறகும்,” இது எங்களோட கல்யாணம் மா.காலத்துக்கும் மனசுல நிக்கும். இன்னிக்கு வேணாம்னு சொன்னா அவ மனசு கஷ்டப்படும் “என்று எதையோ சொன்னான் மணமகன். ஏற்கனவே இருவரும் குடும்பமே செய்ய ஆரம்பித்த பிறகு பெற்றவர்கள் பின்னால் தான் என்று நகர்ந்து கொண்டார்கள்.
படு கோலாகலமாக நடந்தது சங்கீத். ஹால்தி, மெஹந்தி , சங்கீத் என்று எல்லாமே வட இந்தியப் பாணியில் திருமண கொண்டாட்டங்கள். திவ்யா முகத்தில் அவ்வளவு சந்தோஷமும்,கூடவே பிடித்தவனை கரம் பிடிக்கப் போகும் கர்வமும்.கூடவே அன்று அவனை பெற்றவர்கள் தன்னைப் பற்றிப் பேசியதன் கோவமும்.
அதன் முதல் விளைவை அனுபவித்தவன் அவனே! ஆட்டமும்,பாடமுமாக அனைவரும் சிரித்து சந்தோஷமாக இருக்கும் சமயத்தில் அவனை இழுத்துக்கொண்டு மேடை ஏறியவள் ,”தேங்க்ஸ் டு அவர் பேரன்ட்ஸ். நாங்க இவ்ளோ நாள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருந்ததை புரிஞ்சுக்கிட்டதும் ,எங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இப்போ மேரேஜ் செஞ்சுக்க ஒப்புக்கிட்டதுக்கும் ” என்று நேரே அவனது பெற்றவர்களின் காலில் சென்று விழுந்தாள்.
அங்கிருந்தவர்களுக்கு அவளது அணுகுமுறை அதிர்ச்சியாகவும், பேசுபொருளாகவும் ஆகிப்போனது. இருபக்க பெற்றவர்களும் அவமானமாகவே உணர்ந்தார்கள். அதிலும் திவ்யாவின் பெற்றவர்களுக்கு மகள் வாழ்ந்திருந்தவிதம் பெரிய அதிர்ச்சி.இது வெறும் காதல் கல்யாணம் என்று தான் அவர்களுக்குத் தெரியும்.இப்போது மற்றவர்கள்,உறவினர்கள் பார்வையில் நிரம்பவும் தலையிறக்கமாகிப் போனது. பெண்ணை பெற்றவர்களின் நிலையை சொல்வது கடினம்.
இத்தனைக்கும் மேல் கல்யாணம் செய்துகொள்ள போகும் அவனது நிலை சொல்லவே வேண்டாம். தனியே இருக்கும் பொழுது இனித்த அந்த உறவு,மற்றவர்கள்முன் பேசுபொருளானதும் என்ன மாதிரி உணர்ந்தான் என்று எப்படி சொல்வது?
” நா செஞ்சது தப்பில்ல.ஆனா பாரு ,அதை பொதுவெளியில் சொல்லிக்கொள்ள முடியாது .அவ்வளவுதான்!” இது தானே?
எதைப்பற்றியும் திவ்யா கவலைப்படுவதாக இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை. பெண்ணைப் பெற்றவர்களுக்கு ,”பெண்ணை சரியாக வளர்க்கவில்லை”என்று நெருங்கிய உறவுகள் பேச ,பையனை பெற்றவர்களிடம் ,”உங்க பையனா இப்படி செஞ்சது?நம்பவே முடியலையே! என்று துக்கம் விசாரிப்பதுபோல் அவர்களின் மனதோடு விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.
திருமண சமயத்தில் எங்கே சென்று ஒளிந்து கொள்ள முடியும்? ஒருவழியாக திருமணம் முடிந்தது. திவ்யா அவனது வீட்டுக்கு வரவே மாட்டேன் என்று தீர்த்து சொல்லிவிட்டாள். அவளை வீட்டுக்கு கூட்டி செல்லும் எண்ணமும் பிள்ளையை பெற்றவர்களுக்கு இல்லை. சங்கீத் முடியும் வரை ‘எப்படியோ,நம் வீட்டுக்கு வரும் பெண் ” என்று நினைத்தவர்கள் தான்.
திவ்யாவின் பெற்றவர்களும் அவளிடம் பேச்சை வளர்க்காமல் திருமணத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் போல கிளம்பி சென்றும் விட்டார்கள். திவ்யா எதற்கும் கலங்கவில்லை. இருவரும் அவனது ஒற்றை படுக்கையறை வீட்டுக்கு வந்து சேரும்பொழுது இரவு ஆகிவிட்டது. ஆலம் சுற்றி வரவேற்க அங்கு யாரும் இல்லை.அவளை விளக்கேற்ற சொல்லவும் ஆளில்லை.
இருவரும் வரும்பொழுதே இரவு உணவை முடித்துக்கொண்டு வர , வீட்டுக்குள் வந்தவுடன் களைப்பு மிகுதியில் தூக்கம்தான்.மனது நிறைந்த சந்தோஷத்தில் திருமண நிகழ்வில் பங்கெடுத்தவனுக்கு இப்போது அது மொத்தமாக வடிந்திருந்தது. சொன்னால் அவள் புரிந்துகொள்ளப் போவது இல்லை என்று அமைதியாக கடந்து விட்டான். ஆனாலும் அந்த காயம் லேசில் ஆறுவதாக இல்லை. திரும்ப அலுவலகம் சென்ற பொழுது இவர்களுக்கு திருமண வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு கூடவே ” லிவ் இன் லைப் எப்படி இருந்துச்சு?” என்று பேட்டி எடுத்துவிட்டு சென்றார்கள்.
இது எதுவுமே பெண்ணை பாதிக்கவில்லை. புதியதாகவா கேட்டார்கள்? என்று சுலபமாக கடந்துவிடும் தைரியம் அவளுக்கு இருந்தது. அவனுக்கு அந்த துணிச்சல் இல்லை. கொஞ்சநாட்கள் இவர்களது விஷயம் பேசுபொருளாக இருந்தது.பிறகு மக்கள் வேறு விஷயத்திற்கு சென்றுவிட்டார்கள்.இதுதான் உலகம்.
அடுத்த ஆறு மாதங்களில் ரோஷினியையும் அழைத்துக்கொண்டு ஆனந்த் – வாணி தம்பதிகள் அமெரிக்காவுக்கு சென்று விட்டார்கள். ஆனந்தால் இவற்றையெல்லாம் ஜீரணிக்கவும் முடியவில்லை.அனுமதிக்கவும் பிடிக்கவில்லை.எல்லாவற்றையும் விட தன் எதிரில் பேசவும் யோசிப்பவர்கள் முன்னால் தானும் தனது குடும்பமும் பேசுபொருளானது, அடுத்து பெண்ணின் திருமணம் பற்றிய கவலைகள் என்று அவருக்கு இந்தியாவில் இருக்கும் மனநிலை சுத்தமாக விட்டுப் போயிருந்தது.
கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்புதான் மகனை அழைத்து ,” இந்தா ப்பா… இது இந்த வீட்டோட சாவி. நானும், என்னோட குடும்பமும் இனி இங்கே ,இந்தியாவுக்கே இனி எப்ப வருவோம்..வருவோமானே தெரியாது. நீயும் உன்னோட மனைவியும் தேவைப்பட்டா இந்த வீட்டுல வந்து இருங்க.இல்ல வாடகைக்கு விட்டு,பணத்தை ரோஷினி பேருல டெபாசிட் செஞ்சாலும் சரிதான். இன்னும் ஒரே வாரம் .நாங்க கிளம்புறோம்.” என்றுவிட்டார்.
அப்பா சொன்னதைக் கேட்டவனுக்கு திகைப்பு ஒருபுறம் என்றாலும்,'”அப்போ ,நா யார்? இவங்க குடும்பம் இல்லையா?” என்றுதான் தோன்றியது. அவரிடம் பேசுவதற்கு அவனிடம் வார்த்தைகள் கிடையாது. அவர்கள் இந்த முடிவை எடுக்க பெரிய காரணம் தான் மட்டும்தான் என்று தெரிந்தவனுக்கு என்னவென்று பேசமுடியும்?
“உங்க முடிவை மாத்திக்கலாமேப்பா… நீங்க பீல் பண்ணுற அளவுக்கு ஒண்ணும் ஆகல ” என்றான். அவன் வார்த்தைகளை கோர்க்கும் முன்னே குரல் இடறியது. அவனுக்கே அவனது சொற்கள் அபத்தமாக ஒலித்தது.
அவர்கள் கிளம்பி அடுத்த ஒரு மாதத்தில் தனது மனைவியுடன் பெற்றவர்கள் இருந்த இந்த பெரிய மாளிகைக்கு வந்துவிட்டான். அவன் மனம் வலித்தது. அவன் மனைவிக்கு புது வீட்டுக்கு வந்த சந்தோசம். திவ்யா பற்றி ஒன்று சொல்லவேண்டும். அவனுடன் ஒற்றை படுக்கையறை வீட்டைக்கூட அவள் குறைப்பட்டுக்கொண்டதில்லை. சந்தோஷமாகவே இருந்தாள். இதோ இவ்வளவு பெரிய வீடும் கூட அவளுக்குள் பெரிய மாற்றத்தை ஒன்றும் கொடுக்கவில்லை.
இருவரும் சந்தோசமாகவே வாழ்க்கையை நகர்த்தினார்கள். ஒருவருக்கொருவர் எந்த நிர்பந்தமும் செய்துகொள்ளவில்லை.நாட்களும்,காதலும் இனித்தது.திகட்ட திகட்ட கலவியை அனுபவித்தார்கள். இவருக்கான தனி உலகம். எல்லாம் வெகு நன்றாகவே சென்று கொண்டிருந்தது. திவ்யாவின் பெற்றவர்கள் மறந்தும் தங்களது பெண்ணுடனோ,மருமகனுடனோ தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. இருந்த வீட்டையும் காலி செய்து,வீட்டை விற்றுவிட்டு சென்றவர்கள் தாம். என்னவானார்கள் என்று தெரியவில்லை.
திவ்யாவும், அவனும் முடிந்தவரை தேடிப் பார்த்தும் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. திவ்யா சோர்ந்து போனாள். இருவருக்குமே இப்படி நடந்ததில் வருத்தம் தான். அதற்க்காக தாங்கள் பிடித்தபடி வாழாமல் இருக்கவேண்டுமா? என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் திவ்யா.
திருமணம் முடிந்து மூன்றாம் ஆண்டு தொடக்கம். திருமண நாளை இருவரும் வெகு சிறப்பாக கொண்டாட , அவனது நண்பன்,”இன்னும் எத்தனை நாள் நீங்க ரெண்டு பேருமே சேர்ந்து கொண்டாடுவீங்க? ஜூனியர் எப்போ வருவாரு ?” என்று கேட்க மற்றவர்களும் அதையே பேச அவனது மனதில் குழந்தையை இன்னமும் தள்ளிப் poda காரணம் இல்லையே என்று தோன்றியது.
