என்ன தான் மனநிறைவாக தான் நினைத்தவனே தனக்கு மணமகன் ஆகிய சந்தோஷத்தில் முக்குளித்துக் கொண்டிருந்தாலும், நித்யாவின் மனதிற்குள் ஓரமாய் தன் அண்ணன் இந்த இடத்தில் இல்லையே என்ற வருத்தம் உறுத்திக் கொண்டு தான் இருந்தது.
சேரனை விட யஷ்வந்த் மிகவும் கலகலப்பானவன். சேரன் படிப்பு, படிப்பு என்று அதிலேயே மூழ்கிப் போய் கிடப்பான். இப்பொழுது, வேலை என்று அதிலேயே கிடக்கிறான்.
ஆனால், யஷ்வந்த் அப்படியெல்லாம் கிடையாது. குடும்பத்தினருடன் நிறைய நேரம் செலவிடுபவன். அதனாலேயே வீட்டில் அனைவருக்கும் அவனின் இத்தகைய செயல் பெரும் இடியாய் மாறிப்போனது என்று கூறினால் அது மிகையாகாது.
இதுவரை எந்த ஒரு விசேஷத்திலும் இவர்கள் இப்படி தனித்து இருந்தது கிடையாது. குடும்பமாய் அனைவரும் ஒன்றாய் இருந்து தான் அதை கொண்டாடுவார்கள்.
அத்தனை கலகலப்போடும், மகிழ்ச்சியோடும் மன நிறைவாகவும் அரங்கேறிய அந்த நிகழ்வுகளின் சாயல் இன்னமும் அவளின் மனதில் சுவடாய் பதிந்திருந்தது.
அதைப் பற்றிய எண்ணங்கள் எல்லாம் மேலெழ. நித்யாவிற்கு தொண்டையை எதுவோ அடைப்பது போன்ற உணர்வு.
தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கான முதல் விசேஷம். இதில் தன் அண்ணன் இல்லையே என்ற வருத்தம் ஏக்கமாய் மாற. விசேஷத்தின் கலகலப்பு அவளிடம் துடைத்து எடுத்தார் போல் மறைந்திருந்தது.
அவளின் முக சுணக்கத்தை கவனித்த கமலேஷினால் அனைவரின் முன்னிலையிலும் எதுவும் பேச முடியாமல் போக.
நல்ல முறையில் நிகழ்வு முடியவும், பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு புறப்பட்டிருந்தான் தன் குடும்பத்தாருடன்.
அறைக்குள் நுழைந்த நித்யா புடவை, ஆபரணங்கள் என எதையுமே கலையாமல் சோர்ந்து போன முகத்தோடு ஏதோ பெரிய சிந்தனைக்குள் மூழ்கிப் போய் அமர்ந்திருந்தாள்.
அவளின் அறைக்குள் குழந்தையுடன் நுழைந்த இந்து, “என்ன நித்யா அப்படியே உட்கார்ந்துட்ட. ட்ரஸ் மாத்தலையா?” என்றவாறு அவள் அருகில் அமரவும்.
“யாஷ் அண்ணா ஞாபகமாவே இருக்கு அண்ணி. மனசே சரியில்ல.. என்னவோ போல இருக்கு. அண்ணா இருந்திருந்தா இந்த விசேஷம் இப்படியா இருந்திருக்கும். சொல்லுங்க, எவ்வளவு கலகலப்பா இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும். அண்ணா இல்லாம நம்ம வீட்ல நடக்கிற முதல் விசேஷம் அண்ணி. மனசுக்கு ரொம்ப பாரமா இருக்கு. ரொம்ப கஷ்டமாவும் இருக்கு. முழுமையா இந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியல. அண்ணாவை ரொம்ப மிஸ் பண்றேன்” என்றவளுக்கு முணுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்து விட்டது.
அவளின் கண்ணீரை துடைத்து விட்ட இந்து, “ஐயோ! என்ன இது நித்யா? இப்போ தான் நல்ல விஷயம் நடந்திருக்கு. அதுக்குள்ள இப்படி கண்ண கசக்கிக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு. கஷ்டமா தான் இருக்கு என்ன பண்றது.. யாஷ் இருந்திருந்தா இன்னும் செலிப்ரேஷன் வேற லெவல்ல இருந்திருக்கும். எல்லாரையும் ரொம்ப கலகலப்பாவும், இந்த விசேஷத்தையே ரணகளம் பண்ணி இருப்பான்” என்றவள்.
பெருமூச்சோடு, “ஆனா, இப்போ என்ன பண்றது? எல்லாம் சரியாகும்னு கூட நினைக்க முடியல. இதெல்லாம் எப்படி சரியாகும்னு பதட்டமா இருக்கு. ஆனா, சரி ஆகனும்”.
“கல்யாணத்துக்குள்ளவாவது இது எல்லாம் சரியாகனும்னு இருக்கு அண்ணி. யாஷ் அண்ணாவை விட்டுட்டு கல்யாணத்தை பத்தி எல்லாம் யோசிக்கக்கூட முடியல. நம்ம குடும்ப விசேஷம் அண்ணா இல்லாம எப்படி?” என்னும் பொழுது அவளின் தொண்டையை உருவமில்லா உருண்டை கவ்வி பிடித்தது.
அவளின் கையை அழுத்தமாக பற்றிய இந்து, “அதெல்லாம் எதுவும் ஆகாது. அதுக்குள்ள இந்த விஷயம் சீக்கிரம் சால்வாகிடும். ஏதாவது நடக்கும் பார்க்கலாம்” என்றவள் மனதிற்குள் ஒரு முடிவெடுத்துக் கொண்டாள்.
“நீ ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா அத்தை டயர்டா இருக்குன்னு படுத்துட்டாங்க. உன்கிட்ட பாப்பாவ கொடுத்துட்டு நானும் ட்ரஸ் சேஞ்ச் பண்ணலாம்னு வந்தேன். ஆனா, நீ இன்னும் இப்படி உட்கார்ந்து இருக்கியே” என்றதும்.
தன் முகத்தை துடைத்துக் கொண்ட நித்யா, “2 மினிட்ஸ் அண்ணி வந்து பாப்பாவ வாங்கிக்கிறேன்” என்று இலகு நிலைக்கு மாறினாள்.
அவளிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தங்கள் அறைக்கு வந்த இந்து, “என்னங்க என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க ஆள் வரர்து கூட தெரியாம”.
“எல்லாம் நம்ம யாஷ் பத்தி தான். அவன் நினைப்பாவே இருக்கு” என்றான் சேரன் வருத்தம் இழைந்தோடும் குரலில்.
என்ன தான் வெளியே வெளிப்படையாக கூறிக் கொள்ளாவிட்டாலும், அனைவரின் மனதிற்குள்ளும் யஷ்வந்தை பற்றிய எண்ணம் தான் அலைக்கழிப்பாய் இருந்தது.
“அண்ணனும், தங்கச்சியும் ஒரே மாதிரி போல. இவ்வளவு நேரம் நித்யாவும் யாஷ் பத்தி தான் பேசி ஃபீல் பண்ணிக்கிட்டு இருந்தா. அவள சமாதானம் செஞ்சு முடிச்சுட்டு வரவும் நீங்களும் அதையே சொல்றீங்க”.
“கல்யாணத்துக்கு நிச்சயம் அவன் இருக்கணும் இந்து. அவன் இல்லாம இந்த விசேஷம் நடந்தது மனசுக்கு என்னவோ போல இருக்கு. சின்ன விசேஷம் தான். ஆனாலும், அவன் இல்லாம தாங்க முடியல” என்றான் உடைந்து போய்.
“நானும் இத பத்தி உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்னு தான்ங்க நினைச்சுகிட்டு வந்தேன்”.
‘என்ன’ என்பது போல் அவன் பார்க்கவும்.
“மாமா கிட்ட இத பத்தி நீங்க பேசி பார்க்கலாம்ல”.
“என்ன பேசுறது?”.
“யாஷ் திரும்ப வீட்டுக்கு வர்றத பத்தி”.
“அவன் தனியா வர மாட்டானே” என்றான் யோசனையோடு.
“புரியுதுங்க. இங்க அந்த பொண்ணு இருந்த வரைக்கும் அவ பழகினத வச்சு சொல்றேன். ஒருவேளை, யாஷ் சொன்னது எல்லாம் உண்மையா இருந்தா.. அவர் தான் எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாம வெளிப்படையா எல்லா விஷயத்தையும் சொன்னாரே. அவர் சொன்ன போல அந்த பொண்ணு எந்த தப்பும் செய்யாதவளா இருந்திருந்தா”.
“நம்ம மனசுக்காக நம்ம எப்படி வேணும்னாலும் சமாதானம் செஞ்சுக்கலாம். ஆனா..”.
“என்ன ஆனா, யாஷ் நம்மகிட்ட சொன்னதுல ஒரு விஷயம் மட்டும் தான் பொய். அந்த பொண்ணு அந்த மாதிரி இடத்துல வளர்ந்தவன்றத மறச்சு அனாதை ஆசிரமத்துல வளர்ந்தவன்னு சொன்னாரு. மத்தபடி அந்த பொண்ணு தப்பு பண்ணலன்னு அவர் சொல்றதுல எனக்கும் நம்பிக்கை இருக்குங்க”.
“புரியுது இந்து. எனக்குமே அந்த பொண்ணு தப்பு பண்ணலன்னு தான் தோணுது”.
“அப்புறம் என்ன.. மாமா கிட்ட நீங்க பேசி பாருங்களேன். ஒருவேளை, நீங்க பேசி மாமா மனசு மாறுனா”.
“ம்ம்.. சரி பேசி பார்க்கிறேன். ஆனா, இதுவே அப்பாவுடைய கோபத்தை அதிகப்படுத்தாம இருந்தா சரி” என்று தன் தந்தையை உணர்ந்து கூறியவன் எழுந்து வெளியேறி இருந்தான்.
*****
யஷ்வந்த் அலுவலகம் முடிந்து வீடு திரும்ப. வீட்டில் என்னவோ மாற்றம் இருப்பதைப் போல் தோன்றியது.
அவனுக்காக காபியை கொண்டு வந்து கொடுத்தவளின் முகத்தை குறுகுறுப்பாக அவன் பார்க்கவும்.
“இதெல்லாம் உன் வேலை தானா?” என்றான் புன்னகையோடு.
“ம்ம்.. பிடிச்சிருக்கா பாவா?” என்றவளின் கையை பற்றி இழுத்தவன், அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டு, “பிடிச்சதால தான கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்றான் அவளுடன் இழைந்து கொண்டு.
“ம்ம்ச்ச்.. நான் அத கேக்கல. அந்த வால் ஹேங்கிங்” என்றவாறு சுவற்றில் இவள் அலங்காரம் செய்து மாட்டி இருந்ததை காண்பித்து கேட்டாள்.
“ம்ம்.. சூப்பரா இருக்கு. வந்ததுமே என்னமோ வித்தியாசமா இருக்கேன்னு பார்த்தேன். அப்புறம் தா ன் கண்டு பிடிச்சேன். இந்த வால் ஹேங்கிங் நீயே செஞ்சியா?” என்றவாறு ஒற்றை கரத்தில் அவள் கொடுத்த காபி கப்பை தாங்கியவாறு, மற்றொரு கரத்தை தன் இடுப்பில் வைத்தவன் எழுந்து சென்று வால் ஹேங்கிங்கின் எதிரில் நின்றான்.
“நல்லா பண்ணி இருக்கியே எப்படி பண்ண?”.
“நீங்க தான் போன் வாங்கி கொடுத்தீங்களே. வீட்ல போர் அடிச்சது அதான் யூடியூப்ல பார்த்து செஞ்சேன்”.
“இதுக்கு தேவையான திங்க்ஸ்க்குலாம் என்ன பண்ண?.
“சும்மா வாக்கிங் மாதிரி போய் வாங்கிட்டு வந்தேன்”.
தன் புருவங்கள் மேலுயர அவளை மெச்சும் பார்வை பார்த்தவன், “பரவாயில்லயே, கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டீங்க போலருக்கே”.
“அப்புறம் நீங்க ஆபீஸ் போன பிறகு வீட்ல நான் தனியா என்ன செய்யுறதாம். எனக்கும் போர் அடிக்குது. நீங்க போகும்போதே சமையல் வேலையும் முடிஞ்சிடுது. நாள் ஃபுல்லா போனை நோண்டிக்கிட்டு இருக்க முடியுமா.. எதேர்ச்சையா இந்த வீடியோவை பார்த்ததும் செய்யலாம்னு தோணுச்சு. அங்க இருக்கும் போது கூட நான் நிறைய இந்த மாதிரி செஞ்சிருக்கேன்” என்று சட்டென்று கூறிவிட்டவள். பின் தன் நாக்கை கடித்து அவனை சங்கடத்தோடு பார்த்தாள்.
“சாரி பாவா, தெரியாம வந்திடுச்சு” என்று அப்பாவி போல் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறியவளின் செயலில் அவனின் மனமும் தடுமாற.
அவளின் கழுத்தை சுற்றி தன் கையை மாலையாய் கோர்த்துக் கொண்டவன், “இப்போ எதுக்கு இந்த சாரியாம்?” என்றான் அவளின் நெற்றி முட்டி.
“அங்க இருந்தத பத்தி எதுவும் பேச கூடாதுன்னு சொல்லி இருக்கீங்கல்ல. அதை மறந்து பேசிட்டேன்”.
“என்கிட்ட மட்டும் பேசலாம் தப்பில்ல” என்றான் தன் கண்களை சிமிட்டி இலகுவாய்.
இப்பொழுது தான் அவளின் முகமும் மலர்ந்தது, “ம்ம்” என்று தலையையும் ஆட்டிக் கொண்டாள்.
“படிக்கிறியா பவி?”.
“என்ன?” என்று அவள் விழி விரிக்கவும்.
“வீட்ல போரடிக்குதுன்னு சொன்னியே.. டுவல்த் வரைக்கும் முடிச்சிருக்க மேற்கொண்டு படிக்கலாம்ல”.
“அத பத்தி எல்லாம் எதுவும் யோசித்ததில்ல”.
“நீ தான் இவ்வளவு அழகா டிசைன் பண்றியே. உனக்கு டிசைனிங்லயும் இன்ட்ரஸ்ட் நிறையவே இருக்கு. அப்போ ஃபேஷன் டிசைனிங் படியேன்” என்றதும்.
அவளின் முகம் பிரகாசிக்க, “நிஜமாவா?” என்றாள் தன் கண்களை உருட்டி பெரிதாய் விரித்தவாறு.
அவளின் செயலில் மொத்தமாய் அவனின் மனம் அவளிடம் சரணாகதி தான்.
“சோதிக்கிற பவி” என்றான் கிறக்கமான குரலில்.
“உங்ககிட்ட எப்படி பேசணும்னே தெரியல. எப்படி பேசினாலும் இதையே சொன்னா நான் என்ன பண்ண” என்று அவள் தன் கையை விரித்து காட்டவும்.
விரிந்திருந்த கைகளுக்குள் பாந்தமாய் பொருந்தியவன், “நீ ஒன்னும் பண்ண வேண்டாம். நானே எல்லாம் பண்ணிக்கிறேன்” என்றான் விஷமமாய் கண் சிமிட்டி.
“ஐயோ!” என்று அவள் தன் முகத்தை மூடிக்கொள்ளவும்.
அவளின் முழு பாரத்தையும் சுகமாய் சுமந்தவாறு அவளை தன் கைகளில் தாங்கிக் கொண்டவன், “மறுபடியும் மறுபடியும் சோதிச்சிட்டே இருக்க” என்றவாறு அவளுடன் அறைக்குள் தஞ்சம் புகுந்தான்.
கோடி மின்சாரம் பாயும் உணர்வோடு கோடான கோடி நட்சத்திரங்களாய் மிண்ணிக்கொண்டிருந்தாள் பவித்ரா அவன் அருகில்.
வண்ணமயமான வாழ்க்கை அமையவில்லை என்பதை விட, நமக்கு அமைந்த வாழ்க்கையை வண்ணமயமாய் மாற்றிக்கொள்ள முயற்சித்தாலே போதும். வாழ்க்கையின் அழகும், சுவாரசியமும் முழுதாய் உணர முடியும்.
