நினைவு -14

மணமக்களுக்கு ஆரத்தி எடுத்தவர், அவர்களை வீட்டின் வாசற்படியின் முன்பு நிற்க வைத்து,

“இசை, வாசல்ல இருக்குற படியைத் தட்டி விட்டுட்டு, ஆதியோட கையைப் பிடிச்சு, ரெண்டு பேரும் வலது காலை எடுத்து வைத்து ஒன்னா உள்ள போங்க…” என்றார்.

அவளும் அவ்வாறே செய்ய முனைந்தாள்.

ஆனால், அவனுக்கு வந்த அழைப்பு மணியில் அவன் பேசி முடிக்கும் வரை காத்திருக்கலாம் என்று அமைதியாக நின்றாள்.

அழைப்பை ஏற்று பேசியவன், எதிர்திசையில் சொல்லப்பட்ட செய்தியில் கோபத்தின் உச்சிக்கே சென்றவன்…

அடுத்த நொடியே…வாசலில் இருந்த படியை காலால் எட்டி உதைத்திருந்தான்.

வானளவு இல்லை என்றாலும், அந்த வீட்டின் சீலிங் ஃபேன் உயரம் வரை பறந்த அந்தப் படி, நேராக ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தவனின் மண்டையிலே நங்கென்று விழுந்தது!…

விருந்தினர்களை உபசரிக்க அவன் கையில் கொடுக்கப்பட்ட ஜூஸை முதல் வாய் அருந்தப் போன அந்த நேரம்… அது தலையில விழ, அதீத வலியில் அலறினான் அவன்.

ஆம்… நீங்கள் நினைப்பது சரிதான். அது சிந்தனைச் செல்வனே!

“ஹா… ஹா… ஹா…!”

அவனுக்கு அருகில் அமர்ந்திருந்தவள், கண்முன்னே நடந்த காட்சியில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

அவள் யார் என்று சொல்லவேண்டுமா?       ஆம்… ஷாதனா, அவனின் தோழியேதான்.

அவளின் சிரிப்பொலி ஹாலையே நிரப்ப, வலியிலும்… அதைவிட அவள் சிரிப்பால் வந்த எரிச்சலிலும், கொலைவெறியில் அவளை முறைத்துப் பார்த்தான் அவன்.

‘மவளே… தனியா சிக்குனா நீ செத்துட்டடி!’   என்று மனதுக்குள் கடிந்துகொண்டவன் அவளை பார்வையால் எரிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

“ஷட் அப்!”

அந்த இடமே அதிர கத்தியவனின் குரலில், சிரித்துக் கொண்டிருந்தவளின் சிரிப்பு ஸ்விட்ச் போட்டதைப் போல நின்றது.

அனல் பறக்கும் விழிகளோடு அவர்களின் முன் வந்து நின்றவன், அந்த நிலையிலும் அவளின் கையைப் பிடித்து அழைத்து வர மறக்கவில்லை.

தெரிந்து செய்தார்களோ, இல்லையோ…விதியின் முடிவு அதுதானோ… இருவரும் வலது காலை எடுத்து வைத்தே உள்ளே நுழைந்தனர்.

கண்களில் அக்னி பறக்க, ருத்ரமூர்த்தியாக நின்றவனைப் பார்த்தவர்களுக்கு, பயத்தில் தொண்டை தண்ணி வற்றினாலும், வணக்கம் வைக்க மறக்கவில்லை.

“சார்!”

இருவரும் கோரஸாக வணக்கம் வைக்க, கண்களை இடுங்க அவர்களை பார்த்தவன்,

“நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க?” என்று ஊசியாய் துளைக்கும் குரலில் கேட்டான்.

“சார்… தேவமித்ரன் ஹாஸ் எஸ்கேப்…” தயக்கமாக சொன்னான் அவன்.

“வாட்?!”

அதிர்ச்சியில் அவன் கண்கள் அகன்றன. அங்கிருந்த அனைவரின் முகமும் அதையே பிரதிபலித்தது.

உறவினர்களிடையே சலசலப்பு கிளம்ப, இங்கு இதைப் பேசுவது சரியில்லை என்று நினைத்தவன்,

“சரி… ரெண்டு பேரும் கிளம்புங்க. போற வழியில எல்லாத்தையும் பேசிக்கலாம்.” என்றவன்.…

அன்னையை நோக்கி, “அம்மா, புரிஞ்சுக்கோங்க… ப்ளீஸ். ரொம்ப எமர்ஜென்சி. போயே ஆகணும்…” என்றவன்,

இசையிடன் திரும்பி, “இசை…” என்று தொடங்க,

“பாத்து பத்திரமா போயிட்டு வா, ஆதி. நான் இங்க பாத்துக்குறேன்.” என்றாள் அவள் அமைதியாக.

அவளின் அந்த ஒரு பதில்.…அவனுக்கு போதுமானதாக இருந்தது.…

அங்கிருந்த உறவினர்களை எல்லாம் மரியாதையோடு பார்த்தவன், “அனைவரும் சாப்பிட்டு தான் கிளம்பணும்…” என்று வலியுறுத்தி கூறிவிட்டு, அவசரமாக அங்கிருந்து புறப்பட்டான்.

 

_ _ _ _ _ _ _ _ _ _ _ _

சென்னை புறநகர் பகுதி…

இரு பக்கமும் அடர்ந்த மரங்களால் சூழப்பட்ட அந்த சாலையில், அவர்களின் கார் வேகமாக வழுக்கிக் கொண்டு சென்றது.

சிறிது நேரத்தில், அந்த வனப்பகுதியின் இடதுபுறம் ஒரு மண்சாலை பிரிய,                     ஒரு வார்த்தையும் பேசாமல், வாகனத்தை அந்த வழிக்குத் திருப்பினான் அவன்.

அவன் முகத்தில் இன்னும் கடுமை ஒட்டிக் கொண்டே இருந்தது. வரும் வழியிலேயே என்ன நடந்தது என்று அவர்களிடம் விசாரித்து விட்டான்.

ஆம், தேவமித்ரனை கைது செய்து அழைத்துச் சென்ற வழியில் பள்ளி வேன் ஒன்று விபத்துக்குள்ளாகி இருந்தது…

அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற முனைப்பிலும்… அவன் கை விலங்கோடு அந்த வாகனத்தில் கட்டி வைக்கப்பட்டு இருக்கிறான் என்ற தைரியத்திலும்… அவர்கள் சென்று விட…

ஆனால்… அந்த ஒரு நிமிடம்… அந்த  சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தேவமித்ரன் தப்பித்துவிட்டான்.

அவர்களின் தவறில் இருந்த நியாயம் அவனுக்கு புரிந்தாலும், கோபம் கொஞ்சம் கூட குறையவில்லை.

அலைபேசி மூலம் உடனடியாக ஒரு டீமை அவனைத் தேட அனுப்பி வைத்தவன், இவர்களோடு இங்கே வந்திருந்தான்.

அந்த மண்சாலையின் முடிவில் வண்டியை நிறுத்தியவன், அதிலிருந்து கீழே இறங்க, அவனின் முன்பு இருந்தது ஒரு பழைய பாழடைந்த கட்டிடம்.

அதை பார்ப்பதற்கு ஏதோ ஆய்வுக்கூடம் போல தோன்ற, அந்த கேட்டின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த பலகை அதுதான் உண்மை என உறுதி செய்வது போல இருந்தது.

அந்த கேட்டைத் திறந்தவன், இவர்கள் இருவரோடு உள்ளே செல்ல முற்பட.…

அதே நேரம்.… அந்த கட்டிடத்துக்குள் இருந்து இருவர் அவசரமாக வெளியே வந்தனர்.

ஒருவன் காக்கி உடையில் வேகமாக வந்தவன், “சார்!” என்று சல்யூட் அடித்தான்.

அவனுக்கு பின்னால் வந்த டாக்டர், மரியாதை நிமித்தமாக தலையசைத்தார்.

அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டவன், 

“ம்ம்… சொல்லுங்க, சதீஷ்.” என்றான்.

“சார்… அதே பேட்டன்லதான் இந்த கொலையும் நடந்திருக்கு.”

ஒரு நொடி அமைதி அங்கே நிலவியது…

“அதே பேட்டன்லையா?”

“எஸ் சார். அச்சு பிசங்காம… அதே மாதிரி.” என்றவனின் பதிலில், அவன் பார்வை டாக்டரிடம் திரும்பியது.

“பாரன்சிக் ரிப்போர்ட் என்ன சொல்லுது?” டாக்டரிடம் அவன் கேள்விக் கணைகள் பாய்ந்தது…

“சார்… முதல் அஞ்சு பேரோட உடலுக்கும் இதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாமே ஒரே மாதிரி.

உயிரோடு இருக்கும் போதே முகத்தில ஆசிட் அடிச்சு… அதுக்கப்புறம்…”

ஒரு கணம் தயங்கியவர்,

“அவனோட பிறப்புறுப்பை வெட்டி எடுத்திருக்காங்க. இவன் அவனோட          கடைசி மூச்சு வரைக்கும் வலியில அலறி கத்திக்கிட்டே தான் செத்திருக்கான்.”

அந்த வார்த்தைகள் காற்றில் கனமாக தொங்கின.

டாக்டர் அங்கிருந்து நகர, அவன் முகம் இன்னும் கறுத்தது.

“இப்போ சொல்லுங்க சதீஷ்… அவன் யார்?”

“சார்… இவனும் ஹை ப்ரொபைல் கேஸ் தான். பிஸ்னஸ்மேன் ராமச்சந்திரனோட ஒரே பையன். 

மாசம் மாசம் ஒரு வாரம் பிரண்ட்ஸோட ட்ரிப் போறது அவனோட ஹேபிட். ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கிளம்பினவன்… அதுக்கப்புறம் வீடு திரும்பவே இல்ல.”

“அப்படின்னா… வீட்டுல கம்ப்ளெயின்ட்?”

“இல்ல சார்… அதுதான் டவுட். அவங்க வீட்டுல இருந்து எந்த கம்ப்ளெயின்டும் வரல.

இன்பாக்ட்… அவங்களுக்கு அப்படி ஒரு மகன் இருந்ததே மறந்துட்ட மாதிரி பேசறாங்க.”

அவன் கண்கள் கூர்மையானது.

“அப்படின்னா…”

“எஸ் சார். முன்ன அஞ்சு கேஸ்ல பேரண்ட்ஸ் எப்படி ரியாக்ட் பண்ணாங்களோ… அதே மாதிரிதன் இவங்களும் ரியாக்ட் பண்றாங்க.”

ஒரு ஆழ்ந்த அமைதி அவனிடத்தில்…

“சரி. கேஸோட ஃபுல் டீடெயில்ஸ் எனக்கு வேணும்.” என்றவன் திரும்பி…

“செல்வா… இதை எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு டைரக்டா ஸ்டேஷனுக்கு வா.”

“சாதனா… நீங்க இன்னொரு தடவை அவங்க பேமிலி கிட்ட போய் விசாரிச்சு எனக்கு ரிப்போர்ட் பண்ணுங்க.”

அதற்கு மேல் ஒரு வார்த்தையும் சொல்லாமல், அவன் அங்கிருந்து கிளம்பினான்.…

அவன் நடையில் இருந்த வேகம்…இந்த கேஸை முடிக்காமல் ஓயமாட்டேன் என்று சொல்வது போல இருந்தது…

 

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

 

இரவு பத்து மணி…

அந்த ஸ்டேஷனில் உள்ள அவன் அறையில், அந்த சேரில் அமர்ந்தவாறே பின்னால் சாய்ந்து கண்களை மூடி இருந்தான் ஆதி.

அவன் புருவம் சுருங்கி இருப்பதிலேயே தெரிந்தது, அவன் ஏதோ தீவிர யோசனையில் இருக்கிறான் என்று…

வேறு எதைப் பற்றி அவன் யோசிக்கப் போகிறான்? எல்லாம் அந்த கேஸ் விஷயமாகத்தான்.

கடந்த ஒரு வருடமாக இந்த கேஸ் அவனுக்கு ஒரு மிகப்பெரிய தலைவலியாக இருந்தது.

எவ்வளவு முயற்சி செய்தும் கூட அவனால் ஒரு சின்ன தடயத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. 

எவ்வளவு வேகமாக எறிந்தாலும் சுவரில் அடித்து வரும் பந்தைப் போல…. 

எவ்வளவு தூரம் சென்றாலும் அந்த கேஸ் மீண்டும் ஆரம்பித்த புள்ளியிலேயே வந்து நிற்பது போல அவனுக்கு தோன்றியது.

அவன் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியைத் தழுவ, உண்மையில் சோர்ந்துதான் போய்விட்டான். 

அடுத்து என்ன என்பது பற்றி கூட அவனால் சிந்திக்க முடியவில்லை…

அந்த யோசனையிலேயே மூழ்கியிருந்தவனின் சிந்தனையை கலைப்பதற்காகவே அந்த தொலைபேசி அழைக்கப்பட…

கைகளை நீட்டி அதை எடுத்தவன், முகத்திற்கு நேராக வைத்து யாரென்று கண் திறந்து பார்த்தான்; அவன் அன்னைதான் அழைத்திருந்தார்.

“சொல்லுங்கம்மா.” அழைப்பை ஏற்றவன் பேச,

“ஆதி, எங்க இருக்க?” என்றவரிடம்,

“ஸ்டேஷன்லதான்ம்மா. ஏம்மா, என்ன ஆச்சு?” என்றவனின் குரல் மிகவும் சோர்ந்து ஒலித்தது…

“ஆதி, நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வா.”

“ஏம்மா, எதாவது பிரச்சனையா?” என்றவனிடம் சிறு பதட்டம் எட்டி பார்க்க…

“பிரச்சனையாவா? ஆதி, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா? இங்க உன் பொண்டாட்டி நீ கிளம்பினதுக்கு அப்புறம் சொந்தக்காரங்க எல்லாத்தையும் சாப்பிட வச்சு அனுப்பிட்டு சோபாவில் உட்காந்தவதான். 

அதுக்கப்புறம் அந்த இடத்தவிட்டு நகரவே இல்லை. காலைலிருந்து இன்னும் சாப்பிட கூட இல்லை. கேட்டா, நீ வந்ததுக்கப்புறம் சாப்பிடுறேன்னு சொல்லிட்டு இருந்தா.

சரிமா, மேல போய் தூங்குன்னு சொன்னா, அதுவும் நீ வந்ததுக்கப்புறம் போய்க்கிறேன்னு சொல்லிட்டு உட்கார்ந்து இருக்கா.

ஒழுங்கா வந்து அவளை சாப்பிட வச்சி, தூங்க வச்சுட்டு நீ எங்க வேணா போ. ஆனா தயவு செஞ்சி இப்போ வீட்டுக்கு வாடா.” என்றவரிடம்,

“சரி மா, நான் வரேன்.” என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.

 

 

                   

                                       தொடரும்..…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page