நினைவு -16

இருள் என்ற போர்வையை மெல்ல விலக்கி, சூரியன் துயில் கலைத்து எழுந்த அதிகாலை நேரம் அது…

தன் ஒளிக்கதிர்களை பூமியின் அனைத்துத் திசைகளிலும் பரப்பி, தன் பணியை செவ்வனே செய்யத் தொடங்கியிருந்தது…

அந்த அறையில் சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவனின் விழிகளில் சூரிய ஒளி பட்டு தெறிக்க, மெல்ல கண்களைத் திறந்தவனின் பார்வைக்கு தரிசனமாக அவன் மனையாள் தான் தெரிந்தாள்.

ஆம், கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவள் இவன் புறமாக திரும்பிப் படுத்திருக்க, கண் விழித்தவுடன் அவன் விழிகளுக்கு அவள் முகம்தான் முதலில் பதிந்தது.

முகத்தில் புன்னகை பொங்க, அவளை அவனோ ரசித்து பார்த்துக் கொண்டிருக்க, அவன் மனசாட்சியோ,

“நீ தப்பு பண்ற ஆதி… அவளின் விருப்பம் இல்லாமல் அவளை ரசிக்கிறது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? அதுவும் அவ மனசுல வேற ஒருத்தன் இருக்கும்போது நீ பண்றது மிகப் பெரிய பாவம்…” என்று எடுத்துரைத்தது.

அது அவனுக்கு புரிந்தாலும், அவனால் அவளை விட்டு விழிகளைப் பிரிக்க முடியவில்லை.

எத்தனை வருட தவம்!… காலையில் கண் விழித்தவுடன் இப்படி அவளை பார்க்க வேண்டும் என்பது அவனின் எத்தனை வருட கனவு. 

இது எல்லாம் கனவில் கூட நடக்காது என்று நினைத்திருந்தவனுக்கு, இப்போது நிஜமாக நடக்க, அதை எப்படி கையாளுவது என்று அவனுக்கு உண்மையிலேயே தெரியவில்லை.

எவ்வளவு நேரம் அப்படியே பார்த்திருந்தானோ அது கடவுளுக்கே வெளிச்சம்…

அவளிடம் சிறு அசைவு தெரிய, அவன் விரைவாக எழுந்து அமர்ந்து, அலைபேசியைப் பார்ப்பது போல கையில் எடுத்துக் கொண்டான். 

ஆனால்… அவனின் ஓர விழிகள் இன்னும் அவளைத்தான் தழுவிக் கொண்டிருந்தன.

கண்களை மூடியவாறே மெல்ல எழுந்து அமர்ந்தவள், சோம்பல் முறித்து, கைகளை ஒன்றோடொன்று தேய்த்து கண்ணில் ஒற்றி எடுக்க, அவள் விழிகளில் விழுந்த முதல் காட்சி அவன்தான்.

ஆம், சோபாவில் அமர்ந்திருந்தவன் தான் அவள் விழிகளுக்கு முதலில் தெரிந்தான். அவள் முகமோ குழப்பத்தில் சுருங்கியது…

அவள் முகம் குழப்பமாக சுருங்குவதிலேயே அவனுக்கு புரிந்தது… அவளுக்கு நேற்று நடந்தது இன்னும் நினைவுக்கு வரவில்லை என்று.

குழப்பமாக முகத்தை சுருக்கியவள் அறையை சுற்றி கண்களை அலைபாய விட, அப்போதுதான் நேற்று நடந்த அனைத்தும் அவள் நினைவுக்கு வந்தது.

இவ்வளவு நேரம் இலகுவாக இருந்த அந்த முகத்தில் மீண்டும் இறுக்கம் வந்து ஒட்டிக் கொள்ள, அதைப் பார்த்தவன் மனம்தான் உடைந்துபோனது…

இருந்தாலும் அதை வெளியில் காட்டாமல் மறைத்தவன், அவளிடம் புன்னகை முகமாக,

“குட் மார்னிங்…” என்று சொல்ல, அவளும் பதிலுக்கு மெதுவாக தலையசைத்தாள்.

“பிரஷ்ஷப் ஆயிட்டுவா இசை… நான் உனக்கு காபி எடுத்து வர சொல்றேன்,” என்றவன் அலைபேசி வழியாக சொல்லிவிட்டு, அவள் உள்ளே சென்று வந்த பிறகு, அவனும் குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

சிறிது நேரத்தில், காக்கி உடையில் கம்பீரமாக வெளிவந்தவன்,

“இசை, முக்கியமான கேஸ் வேலையா வெளியே போறேன். திரும்பி வர எப்படியும் நைட் ஆகிடும்னு நினைக்குறேன். சோ, தயவு செஞ்சு நீ நேரத்துக்கு சாப்பிட்டுட்டு மட்டும் இரு,” என்றான் கிளம்பத் தயாராக.

“ஈவினிங் சீக்கிரமா வீட்டுக்கு வந்துரு ஆதி… உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்,” என்றவளை பார்த்தவனுக்கு உள்ளுக்குள்…

இவ்வளவு நேரம் பேசாமல் இருந்தவள் இப்போது பேசுகிறாளே என்ற சந்தோசப்படுவதா? இல்லை ‘என்ன முக்கியமான விஷயம்?’ என்று குழப்பிகொள்வதா ?…அவனுக்கே புரியவில்லை.

ஆனால் அவளுக்கு பதிலாக, “சரி…” என்று மட்டும் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து கிளம்பினான்…

படிகளின் வழியாக கீழே இறங்கி வந்தவன் விழிகளில், கையில் சூட்கேஸுடன் காத்திருந்த அவன் தங்கை மதி தான் முதலில் பட்டாள்.

“என்ன மதி, அதுக்குள்ள கிளம்பிட்டியா? அண்ணனோட ரிசப்ஷனை பார்க்காம போறியா?” என்று கேட்க,

“அண்ணா, உன்னோட ரிசப்ஷன்ல நான் இல்லாம எப்படி? அதுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு தானே. நாளைக்கு ஒரு முக்கியமான எக்ஸாம் இருக்குண்ணா. அதை முடிச்சுட்டு உடனே ஓடி வந்துட்றேன்,” என்றவள் அவசரமாக.

“சரிண்ணா, ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சு… நான் கிளம்புறேன்,” என்று சூட்கேஸை எடுத்துக்கொண்டு நடக்க தயாராக,

“இரு மதி… நானே உன்னை டிராப் பண்றேன்,” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு விமான நிலையம் நோக்கி கிளம்பினான்.

 

_ _ _ _ __ _ _ _ _ _ _ _ _

 

விமான நிலையத்தில்…

“சரிண்ணா, இனிமே நான் கிளம்புறேன்… நீ பார்த்து போண்ணா,” என்றவளை பார்த்தவன்,

“இரு மதி… முக்கியமான ஒரு சீஃப் கெஸ்ட் வரணும். அவர் வந்தவுடன் பார்த்துட்டு உடனே கிளம்பிடுறேன்,” என்றான்.

“யார்னா அந்த சீஃப் கெஸ்ட்?” என்று குழப்பமாக கேட்டவள்,

“அதுவா… ம்ம்… ஆன்… நீ வெளிநாட்டிலிருந்து வந்தப்போ ஏர்போர்ட்ல இருந்து யாரு உன்னை கார்ல கூட்டிட்டு வந்தாங்களோ…

யார் உனக்காக ஒரு வாரமா டிரைவர் வேலை பார்த்தாங்க… யார் நேத்து நைட்டு பன்னண்டு மணிக்கு உன் ரூமுக்கே திருட்டுத்தனமா வந்தாங்களோ…”

சிறிது இடைவெளி விட்டு, அவன் குரல் கடினமாய்,                                                        “அவங்கள தான் சொல்றேன்.”

அவன் முகத்தில் கோபத்தின் சாயல் தெளிவாக தெரிய…                                              செய்வதறியாமல், திருத்திருவென நின்றுவிட்டாள் அவள்.

“ஹாய் மாமா!”                              கையசைத்தவாறே புன்னகையுடன் அவன் அருகில் வந்து நின்றான் அகிலன்.

அவனிடம் பதிலுக்கு புன்னகைத்தவன், அவன் அருகில் வந்ததும் திடீரென கையை மடக்கி அவன் வயிற்றிலே ஒரு குத்து விட்டான்.

“அம்மா!” என்று அலறியவனை பார்த்து பதறியவள், விரைவாக வந்து அவனைத் தாங்கி பிடித்தாள்.

“எவ்வளவு தைரியம் இருந்தா, கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணு ரூமுக்கு நைட்டு பன்னண்டு மணிக்கு வருவ நீ ?” என்றவன் கடுப்பாக கேட்க…

அதை அலட்சியமாக பார்த்த அகிலன்,

“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே ஒரு பொண்ணோட கசமுசா பண்ணுவ?” என்று எதிராக கேட்க,

“என்ன?!”

அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள் அவள்.

 

 

                                            தொடரும்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page