ஆதி சத்தம் போட .மூவரும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றனர்.
சுதா தான்,” கொஞ்ச நேரம் அமைதியா இருங்க ஆதி”
” என்ன சுதா .என்ன அமைதியா இருக்க சொல்ற? அவங்க இவ்ளோ நாளா நம்ம விருப்பம் சொல்லிட்டு, இப்போ தடாலடியா வந்து கிளம்புனு சொல்லிட்டு இருக்காங்க .நீ என்ன அமைதியா இருக்க சொல்ற?”
“நீங்க இருங்க” என்று தன் கணவனிடம் கூறியவள்.
மாமியாரின் அருகில் போய் நின்றாள்.
“என்ன சுதா இன்னும் உனக்கு என் மேல நம்பிக்கை வரலையா? அங்க வரணும் என்ற எண்ணமும் இல்லையா? இப்பயும் உன்னை நான் தகாத வார்த்தை பேசுவேன் தான் உனக்கு தோணுதா ?”என்றார் அழுகையுடன் ,
மாமியாரின் கையை பிடித்து கொண்டவள் .”அத்தை இப்பவும் சொல்றேன். அன்னைக்கு நீங்களும், உதயாவும் பேசுறதுக்கு ஒரு காரணம் இருந்துச்சு. நீங்களா எதும் பேசவும் கிடையாதுன்னு எனக்கு தெரியும் “
” சுதா அது” என்றவர் பேச முடியாமல் தயங்க.
“அத்தை நான் பேசி முடிச்சிடுறேன். நானும் ஒரு சில விஷயம் மனசு விட்டு பேசணும் தான்” என்றாள்.
ஆதி ,”என்ன சுதா பேச போற?”என்றான்.
“கொஞ்ச நேரம் பேசறதை அமைதியா கேளுங்க” என்றவள். “அத்தை நான் அங்க இருந்து வந்து கொஞ்ச நாள் கழிச்சு நம்ம தெரு முக்குல இருக்க வசந்தா அக்காவை கோவில்ல ஒரு நாள் பார்த்தேன். அவங்க நிறைய விஷயம் எனக்கு சொன்னாங்க. ஆதி முதல்ல நம்ம மேலயும் தப்பு இருக்குன்றத உணரணும்”
அவன் அமைதியாக மனைவியை பார்க்க .”அத்தை எடுத்த எடுப்பிலேயே என்னை தகாத வார்த்தை சொல்லி பேசிடல இல்ல. அவங்க உங்ககிட்டையும் சரி ,என்கிட்டயும் சரி ரெண்டு மூணு முறை தனிப்பட்ட முறையில் கேட்டிருந்தாங்க. ஆமாம் தானே! நீங்களும் அதை அசால்ட்டா எடுத்துட்டு போயிட்டீங்க, ஒரே வார்த்தையா எனக்கு சுதா ஒரு பையன் கூட வர்றது தெரியும்னு நீங்களும் அமைதியா போயிட்டீங்க ,நானும் உங்களுக்கு தெரியும்ன்றதால அத பெருசா எடுக்காம அத்தைக் கேட்கும் போது சாதாரணமா கடந்து போயிட்டேன்.
அவங்க ஒரு டைம் கேட்டு இருந்து நம்ம நகர்ந்து இருந்தாலும் பரவால்ல .அவங்க ரெண்டு மூணு டைம் உங்ககிட்டையும் , என்கிட்டயும் தனிப்பட்ட முறையில் கேட்டும் நம்ப அவங்களுக்கு நின்னு பதில் சொல்லாதது தான் நம்மளோட தப்பு. அதுதான் நம்ம செஞ்ச முதல் தப்பு .இன்னொரு நாள் அவங்க என்ன கேட்கும் போது ,நமக்கான தனிப்பட்ட நேரம் கிடைக்கலனு நான் வேகமா நீங்க கூப்பிட்ட உடனே அத்தை பேசுறதை பெருசா எடுத்துக்காம உங்கள பாக்க ஓடி வந்துட்டேன். அது என்னோட தப்பும் கூட .
நீங்களும் நின்னு பதில் சொல்லல. நானும் நின்னு பதில் சொல்லல , அவங்க கேட்கிறதுக்கு நம்ம நின்னு பதில் சொல்லி இருந்தா இது இவ்ளோ தூரம் வந்திருக்காது .அன்னைக்கே அவங்க சந்தேகத்தை தீர்த்து வச்சி இருக்கணும் .அதை பண்ணாம விட்டது நம்மளுடைய தப்பும்” என்று ஆதியிடம் கூறியவள்.
மாமியாரின் புறம் திரும்பி ,”நீங்க என்கிட்ட ஆரம்பத்துல ஃபர்ஸ்ட் டைம் நான் அன்பு கூட வரும்போது நீங்க எதும் கேட்கல.
தொடர்ந்து வரவும் தான் என்கிட்டயுமே கேட்டீங்க. நானும் அது இவருக்கு தெரியும்னு சொல்லிட்டு, என் ஆபீஸ்ல வேலை செய்றவரு, நம்ம வீடு தாண்டி போறாரு, அதனால அவர் கூட வரேன்னு சொன்னேன். நான் பஸ் பிடிச்சு வர லேட் ஆகும் வீட்டுக்கு, நேரம் கழிச்சு வந்தா வீட்டு வேலை செய்ய லேட் ஆகும்னு சொல்லி இருந்தேன். அப்போ கூட நான் பார்க்க மாட்டேனா ? வீட்டு வேலையனு நீங்க கேட்டு இருந்தீங்க ,உங்க இடத்திலிருந்து எல்லாமே சரி தான் ,எதுவுமே தப்பு கிடையாது .
தொடர்ந்து நான் அன்பு கூட வரவும், அந்த நேரத்துல வெளியே உக்காந்து நம்ம தெருவுல இருக்குறவங்க எல்லாரும் பேசிட்டு இருப்பாங்க,நான் தொடர்ந்து ஒரு பையனோட வர்றதை பார்த்தவங்க கண்ணு,காது ,மூக்கு வச்சு எல்லாம் பேசிட்டாங்க .அவங்க பேசும்போது அந்த இடத்துல நீங்க என்ன விட்டு கொடுக்காமல் சண்டை போடட்டும் வந்துட்டீங்க.
உதயாவும் கூட எனக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு தான் வந்துட்டா. ஆனா இருந்தாலும் கூட, தொடர்ந்து வர்றது உறுத்தவும் நீங்க என்கிட்ட கேட்டாலும் ,நான் அலட்சியப்படுத்தவும் உங்களுக்கு தப்பா போயிடுச்சு ,கொஞ்சம் நெருடல் ஆயிடுச்சு, அதை தாண்டி அன்னைக்கு நீங்க என்ன பேசுறதுக்கு முன்னாடி நிறைய விஷயம் நடந்திருக்கு, நம்ப தெருவிலேயே ஒரு பொண்ணு கல்யாணம் ஆகி வேற ஒரு பையனோட ஓடிப்போயிருக்கா. அதை பத்தி நீங்க பேசிட்டு இருக்கும்போது, உன் மருமகளே வேற ஒருத்தன் கூட டெய்லி ஊர் மேஞ்சிட்டு வரா அதை கேட்க துப்பில்ல ,நீ என் மருமகள பத்தி பேசுறியானு அந்த வீட்டம்மா பேச போய் உங்களுக்கு சுருக்குன்னு ஆயிடுச்சு.
அதே வார்த்தையை உதயாவும் உங்க கிட்ட கேட்டு இருக்கா.வீட்டுக்கு வந்து உன்னை யாருமா போய் அங்க அசிங்கப்பட்டு ,மூக்கு உடஞ்சு வர சொன்னாங்கனு ,சொன்னாலும் சொல்லாட்டியும் உண்மைதானே உன் மருமகளே தினம் ஒருத்தன் கூட வரும்போது நீ ஏன் போய் அவங்க வீட்டு மருமகள பத்தி பேசுறன்னு அவ சாதாரணமா சொன்னாலுமே கூட, அந்த வார்த்தை உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கஷ்டமாயிடுச்சு,
நீங்க பேசிட்டு இருக்குற நேரத்துல நானும் அன்னைக்குன்னு பார்த்து அன்பு கூட வந்து இறங்கவும், நீங்க அப்பவும் என்கிட்ட சாதாரணமா தான் கேட்டீங்க, நானும் உங்களுக்கு அதை ஒழுங்கா எக்ஸ்பிளைன் பண்ணாததால், வந்த பிரச்சனைதான் இது. அன்னைக்குன்னு பார்த்து அம்மா என்னை தேடி வரவும்,நீங்க அம்மாகிட்ட கேட்டீங்க, அப்பவும் பெருசா வார்த்தை தடிக்கல. அம்மாவும் என்னன்னு புரியாம பேசிட்டு இருக்கும்போது, ஆதி வரவும் தான், அவரு உங்களுக்கு பிடி கொடுக்காம பேச போக வார்த்தை தடிச்சுடுச்சு அது தப்புதான் ஆனா” என்றவள் அமைதியாக.
” இன்னும் உன்னால அதிலிருந்து வெளிவர முடியலையா சுதா ?”என்ற அவள் கையை பிடித்துக் கொண்டு அழுதார்.
” இல்லத்தை நான் உங்களோட நம்ப வீட்டுக்கு வரேன்.எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. நம்ம வீட்டுக்கு வர எனக்கு முழு சம்மதம்” என்றாள் தன் கணவனை பார்த்துக் கொண்டே,
“சுதா அம்மாவுக்காக இந்த முடிவு எடுக்காத “என்றான்.
“இல்ல ஆதி நான் எனக்காகவும் சேர்த்து தான் சொல்றேன். ஒவ்வொரு முறையும் என்ன தேடி வந்திட்டு தான் இருக்காங்க . என்ன எந்த வார்த்தையும் பேசல அன்னைக்கு அவங்க பேசினதுக்கான காரணமும் உணர்ந்துட்டேன். ஆனா எனக்கும் கொஞ்சம் டைம் தேவைப்பட்டுச்சு, அது எனக்காக.. உங்களை யாரையும் நான் பிரிக்க விரும்பல, அதே சமயம் எனக்கும் குடும்பமா இருக்கத்தான் ஆசையா இருக்கு. நான் இப்படி தனிச்சு நிக்க விரும்பல” என்றாள்.
” என் மருமகளே சொல்லிட்டா இன்னும் என்னடா ஆதி போகலாம் வா டா. உன்னால இன்னும் இந்த அம்மாவை மன்னிக்க முடியலைடா ?”என்றார் இப்பொழுது மகனின் கையை பிடித்து நெற்றியில் வைத்துக்கொண்டு ,”என்ன மன்னிச்சிடு ஆதி. அன்னிக்கு நான் பேசுனது தப்புதான்” என்றார் கண்ணீருடன்,
“மா என்னமா பண்ற ?”என்று பதறி அவரை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
” ப்ளீஸ் ஆதி பசங்கள கூட்டிட்டு வாடா போகலாம்” என்றார்.
அதன் பிறகு குடும்பமாக கிளம்பினர் ,தங்களது இருப்பிடத்தை நோக்கி ,கமலாவும் உடன் வந்து மகளை புகுந்து வீட்டில் விட்டுவிட்டு ,கொஞ்ச நேரம் இருந்துவிட்டு கிளம்பி இருந்தார்.
தனிமையில் மனைவியிடம்,” சுதா எனக்காக இந்த முடிவு எடுத்து இருக்கியா ? அதும் இந்த மாதிரி நேரத்துல இன்னும் கொஞ்சம் ஸ்டைன் பண்ணிக்காத சுதா, நெறைய விஷயத்தை மனசுல போட்டு குழப்பிக்காத,நீ நீயா இருக்க தாண்டி ஆசைப்படறேன். ப்ளீஸ் அம்மு, அன்னைக்கு நான் பண்ணது தப்புதான். ஆனா ,இனி அப்படி ஒரு தப்பு பண்ண விரும்பல, திரும்பத் திரும்ப என்ன குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்காத அம்மு, எனக்கு அம்மா, அப்பா எந்த அளவுக்கு முக்கியமோ ,அதே அளவுக்கு நீயும் முக்கியம் தாண்டி. அவங்களுக்காக உன்னை விட்டுக்கொடுத்துற மாட்ட அம்மு.இனி ஒரு தரம் ப்ளீஸ் அம்மு உனக்கு விருப்பம் இல்லாம நீ இங்க இருக்க வேணாம்” என்றான் உருக்கமாக,
அவனை வேகமாக கட்டி அணைத்து , நெற்றியில் முத்தமிட்டு, இதழ்களோடு இதழ் பொருத்தியவள் ,சிறிது நேரத்திற்கு பிறகு அவனிடம் இருந்து விலகி ,”லவ் யூ ஆதி !”என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டவள்.
” இல்ல ஆதி. நான் எனக்காக தான் இந்த முடிவு எடுத்து இருக்கேன். நானும் குடும்பத்தை விட்டு பிரிஞ்சு இருக்க விரும்பல. எனக்கும் குடும்பமா இருக்கத்தான் ஆசை ,கொஞ்சம் டைம் தேவைப்பட்டுச்சு, அவ்வளவுதான். இப்போ ஓகே ஆதி! அத்தை கூப்பிட்டது ஒரு காரணம், எனக்கு உடம்பு முடியலன்னு பதறி அத்தை வரத்தான் செஞ்சாங்க .அது எந்த அளவுக்கு பதறினாங்கன்னு பார்த்த எனக்கு தெரியும். அவங்க அவங்களா தான் ஆதி இருக்காங்க இப்ப வர. அவங்க கிட்ட எந்த மாற்றமும் கிடையாது. அன்னிக்கு அவங்க பேசுனது தப்பா இருந்தாலும் கூட, அந்த தப்பையும் உணர்ந்து, குற்ற உணர்ச்சியில் தான் இத்தனை நாள் தவிச்சிட்டு இருக்காங்களே தவிர ,அவங்க இந்த நிமிஷம் வரைக்கும் என்னை தப்பா நினைக்கல.
அத்தை ஆகட்டும் ,உதயா ஆகட்டும் ரெண்டு பேருமே இப்படி மாற நம்மளும் ஏதோ ஒரு வகையில ஒரு காரணம் தானே! அவங்கள மட்டும் தப்பு சொல்லிட முடியாது, நம்ம தப்பை நம்மளும் உணர்ந்து அவங்களுக்கு இடம் கொடுக்கணும் , இல்லனா அதுக்கப்புறம் நான் குற்ற உணர்ச்சியோட தவிக்க வேண்டி வரும் . அத்தை எடுத்த எடுப்பில் என்னை அந்த வார்த்தை பேசி இருந்தாங்கன்னா அவங்க மேல தப்புன்னு சொல்லலாம். அவங்க என்கிட்டயும் சரி, உங்க கிட்டையும் சரி தனிப்பட்ட முறையில் கேட்டாங்க இல்லையா ,நம்ம பிடி கொடுக்காம விட்டுடோம்.
இன்னொன்னு அதோட சீரியஸ்னஸ் தெரியாம சாதாரணமா எடுத்துகிட்டோம். அது நம்மளோட தப்பு தானே, அவங்க முதல் முறை பேசும்போது அதோட சீரியஸ்னஸ் தெரியாம இருந்திருக்கலாம் .திரும்பத் திரும்ப பேசும்போது அதோட சீரியஸ்னஸ் நீங்களும் சரி, நானும் சரி உணர்ந்திருக்கணும். ஏன் அன்னைக்கு இவ்வளவு விஷயம் நடக்கும்போது அன்னைக்காச்சும் நம்ம சீரியஸ்னஸ் உணர்ந்து இருக்கணும். நான் பேசிட்டு இருக்கும்போதே, அம்மா வந்துட .அம்மா வந்த உடனே இன்னும் கொஞ்சம் பேச ஆரம்பிச்சிட்டாங்க.
நீங்களும் வந்திங்க, மொத்தமா அத்த மேல மட்டும் நம்ம தப்பு சொல்லிட முடியாது. ஆதி எனக்கும் குடும்பத்தோட இருக்க தான் விருப்பம்.”
சரி என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. தங்களுக்கான நேரமாக ஒதுக்கி கொண்டார்கள். இங்கிருந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். மருமகளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார். ஏற்கனவே நன்றாக தான் பார்த்துக் கொள்வார். இப்பொழுது ஒன்றுக்கு இரண்டு உயிராக இருக்கிறாள். அது மட்டும் இல்லாமல் தான் செய்த தவறுக்கு பிரார்த்தித்தம் செய்ய வேண்டும் என்பது வேறு அவர் மனதில் உறுத்திக் கொண்டிருக்கிறது.
பேரப்பிள்ளைகள் டியூஷன் போவதை நிறுத்த சொல்லி கேட்டிருந்தார்.
” இல்லம்மா இந்த வருஷம் போகட்டும் . டியூஷன் போயிட்டு இருக்க பிள்ளைகளை பாதியில நிறுத்தினா நல்லா இருக்காது”
‘ தன் கூட தானே இருக்க போகிறார்கள்’ என்று சரி என்று அமைதியாகிவிட்டார்.பேர புள்ளைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்.
மருமகளுக்கு பிடித்தமான உணவு வகைகளை செய்து போட்டார். மூன்று மாதங்கள் கடந்து இருந்தது.. அவளால் சுத்தமாக முடியவில்லை .எதை சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தபடியே இருந்தாள். சோர்வாக காணப்பட்டாள்.
உள்ளுக்குள் எதுவும் செல்லாமல் இருக்க ,ரொம்பவே சோர்வாக இருந்தாள். அன்று காலையிலிருந்து நான்கு முறை வாந்தி எடுத்து விட்டாள். உள்ளுக்குள் எது சென்றாலும் வெளியே வந்தபடியே இருந்தது.
ஒரே வார்த்தையாக அவளின் சோர்வு,சாப்பிடாமல் இருப்பது,உடல் நிலை, வேலை பளு என அனைத்தையும் கருத்தில் கொண்டு,”வேலையை விட்டுட்டு சுதா. உன்ன மொத்தமா வேலையை விட சொல்லல , குழந்தை பிறந்து பால் மற கடிச்ச பிறகு ,ஒரு வருஷம் கழிச்சு கூட வேலைக்கு போ” என்றார்.
அப்போதுதான் வேலைக்கு கிளம்பி தன் அறையில் இருந்து வெளியில் வந்த ஆதி,” உங்க புத்தியை காண்பிச்சிடீங்க இல்லையா? இப்போ அவ வேலைக்கு போறது உங்களுக்கு பிரச்சினையா இருக்கு . அவளோட சம்பளத்துல பாதிய அவங்க அம்மாவுக்கு தர்றது உங்களுக்கு பிரச்சனையா இருக்கு அதானே! கொஞ்ச கொஞ்சமா அடி போட ஆரம்பிச்சிட்டீங்க ” என்றவுடன் சித்ரா கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்து நின்றது பேச்சு எழவில்லை.
‘தன் மகனுக்கு இப்பொழுது கூட தன் மீது நம்பிக்கையில்லையா? ‘என்றுதான் அவருக்கு வருத்தமாக இருந்தது .
நேசன் தான் ,”ஆதி!”என்று சத்தம் போட்டு இருந்தார் .
சுதா வேகமாக ,”ஆதி என்ன பண்றீங்க ?”என்று அவன் கையைப் பிடித்தாள்.
“விடு சுதா.அதான் அவங்க அவங்க புத்தி என்னன்னு காமிச்சிட்டாங்க பாரு “என்றான் சீற்றத்துடன் ,
“ஆதி நீங்க திரும்ப திரும்ப தப்பு பண்றீங்க. அன்னைக்கு அத்தை பேசும் போது ,எதும் கேட்காம அமைதியா நின்னீங்க , இன்னைக்கு இப்போ எனக்காக அத்தையை தப்பா பேசுறீங்க. தப்பு ஆதி.” என்றாள்.
சித்ரா எதுவும் பேசாமல் முந்தானையை வாயில் வைத்து அழுதபடி இருக்கவும்,
” அத்தை!” என சுதா அவர் அருகில் சென்றாள்.
அவர் எதுவும் பேசாமல் அமைதியாக கிச்சனுக்குள் நுழைந்து கொண்டார்.
சுதா அவரை தேடி கிச்சன் போக ,”நீ கிளம்பு உன்னை நான் கொண்டு போய் ஆபீஸ்ல விட்டுட்டு நான் வேலைக்கு போறேன்”
“ஆதி ப்ளீஸ்! அத்தை சொல்லலனா கூட நானே வேலையை விடுறதா தான் இருந்தேன். இப்போ இன்னைக்கு என்னால பஸ்ட் போகவும் முடியாது. இன்னைக்கு இல்ல, இனி கொஞ்ச நாள் வேலைக்கு போகல,ரொம்ப சோர்வா இருக்கு, நம்ம மகியும் ,மிதுவும் வயித்துல இருக்கும்போது எனக்கு வாமிட்டிங் பெருசா கிடையாது. நான் நார்மலா இருந்தேன். இந்த அளவுக்கு சோர்வாவும் கிடையாது.ஆன இப்போ ரொம்ப சோர்வா இருக்கு ,என்னால ஒர்க் பண்ண முடியும்னு எனக்கே தோணல. அது மட்டும் இல்லாம எனக்கு குடும்பத்தோடு இருக்கவும் விருப்பமா இருக்கு. பசங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ண ஆசைப்படுறேன்.
அத்தைய தப்பா பேசுறத இதோட நிறுத்திக்கோங்க. இப்ப வரைக்கும் அத்தை என் சம்பளத்தில் பாதி அம்மாவுக்கு தர கூடாதுன்றதுக்காக அவங்க பேசல. அவங்க பேசுனதுக்கான காரணம் வேற, அது எனக்கு தெரியும், உங்களால உணர முடியலனா விட்ருங்க .ஆனா, அத்தையை தப்பா சொல்லாதீங்க.”
” என்னடி காரணம்? அவங்க நீ வந்த நாளிலிருந்து இப்ப வரைக்குமே அத்தைக்கு காசு குடுக்க கூடாதுன்னு சொல்லிட்டு இருக்காங்க தான?”
” போதும் ஆதி. ஸ்டாப்பிட் “என்று வேகமாக கத்தினாள்.
கிச்சனிலிருந்து வந்த சித்ரா” இந்த நேரத்துல இப்படி சத்தம் போடதா சுதா!”என்று அவளுக்கு தண்ணீர் கொடுக்க .
“இப்ப கூட அவங்க வீட்டு வாரிசு என் வயித்துல இருக்குன்றதுக்காக பாக்கல ஆதி அதையும் தப்பா பேசாதீங்க” என்று தன் கணவனிடம் கூறியவள்.
” அத்த அவர்தான் பேசினாருன்னா உங்க பையன் தானே நான் அப்படி பண்ணலடான்னு சொல்ல முடியாதா?”
“அவனுக்கு என் மேல நம்பிக்கை இல்லையே சுதா. என் மேல அவன் வச்சு இருந்த நம்பிக்கை போயிடுச்சு. அதுக்கு நான் தானே காரணம். ஏதோ ஒரு இடத்துல அவன் நம்பிக்கையை இழந்து நிற்கிறேன் தானே!” என்று அழுதார்.
அவனுக்கே கஷ்டமாகிவிட்டது.
” அத்த நீங்க அன்னைக்கு ஒரு நாள் தப்பு செஞ்சிட்டீங்கன்றதுக்காக அதுக்கப்புறம் பண்ற எல்லாமே தப்புனு ஆகிடாது “என்று மாமியாரிடம் கூறியவள். அவர் கையை தட்டிக் கொடுத்துவிட்டு, “இப்போ வரைக்கும் அத்தை அம்மாவுக்கு காசு கொடுக்க வேண்டாம்னு சொன்னதுக்கு முக்கியமான காரணம் ஒன்னு இருக்கு .அம்மா இப்போ வரைக்கும் நந்தா கூட பேச்சு வார்த்தை பெருசா இல்லமா, அவன் இங்க வரப்போக இல்லாம இருப்பது தான் அத்தைக்கு கஷ்டமா இருக்கு.
பையன்னு ஒருத்தன் இருந்தும் நான் ஏன் காசு தரேன்னு என்றது அவங்களுக்கு பிரச்சனை கிடையாது .அம்மாவோட இடத்துல இருந்து யோசிச்சாங்க அத்தை .பையன் இருந்தும் பையனோட வாழ்க்கைக்காக அவனை விட்டு அம்மா விலகி இருக்காங்க ,என்னோட சம்பளத்துல பாதியை ஏன் நான் அவங்களுக்கு தரனும்னு நேரடியா எத்தனையோ முறை அம்மாகிட்டயுமே பேசி இருக்காங்க. ஏன் மகன் இருக்க,மக கிட்ட இருந்து காசு வாங்குறீங்கன்னு சண்டை போட்டு இருக்காங்க .ஆனா, இதுவரைக்கும் நான் காசு கொடுக்க கூடாதுன்னு அவங்க நினைச்சிருந்தாங்கன்னா, ஸ்டிர்க்ட்டா எத்தனையோ வழியில் அதை தடுத்து இருக்க முடியும். என் முழு சம்பளத்தை அத்தை கூட வாங்கி வச்சி இருந்திருக்கலாம். இதுவரைக்கும் என் சம்பளத்தை ஒரு வாட்டியாச்சு கேட்டிருக்காங்களா ?நல்லா யோசிச்சு பாருங்க ஆதி” என்றவள் அமைதியாக.
சித்ரா தன் மருமகளை கட்டிக்கொண்டு அழுதார். “நீ என் மனசை புரிஞ்சுகிட்ட வரைக்கும் போதும் சுதா. அவன் புரிஞ்சுக்கலைன்னு நான் வருத்தப்பட போறது இல்ல”
” அத்தை கொஞ்சம் இருங்க. அவருக்கும் புரிய வைக்கணும். அவரோட தப்பு என்னன்றத புரிஞ்சிக்கணும்.கொஞ்ச நேரம் அமைதியா இருங்க “என்றவள் கணவனைப் பார்த்தாள்.
