திருக்குறள்
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம் குன்றிக்கால்.
அதிகாரம் -2 வான் சிறப்பு குறள் எண் -14
அத்யாயம் -4
சூர்யாவிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டவர் கல்லாவில் மூன்று முறை சுற்றி விட்டு இறைவனிடம் வேண்டிக் கொண்டு பெட்டியில் போட்டுக் கொண்டார்.
அக்கா இட்லியை வாழை இலையில் மடித்துக் கட்டி ஒரு கவரில் போட்டுக் கொடுத்தார்.
“ரொம்ப நன்றி!” enசொல்லி விட்டு கிளம்பினான் .
“ஜாக்கிரதை தம்பி. பார்த்து கவனமா போங்க. “
தன்னிடம் இத்தனை ஆதரவாக பேச இப்போது யாரும் இல்லை. அம்மா அப்பா இல்லை என்றாலும் அவனுக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது. சித்தி சித்தப்பா அவர்களுக்கு ஒரு பிள்ளை ஆதவன்.
இவன் பிறந்த அடுத்த சில நாட்களில் இவன் அன்னை இறந்து விட்டார். ஏதோ பிரசவ கோளாறு. உடம்பு தாங்கலை ஜன்னி கண்டுருச்சு என்றார்கள் . அன்னை இல்லையென்றாலும் தந்தையும் அவரின் குடும்பமும் தான் இருக்கிறார்களே. பார்த்துக் கொள்ள பாசம் காட்ட. இவன் ஆறாம் வகுப்பு படிக்கும் போது பிடிவாதமாக ஊட்டியில் இருந்த கான்வென்ட்டிற்கு அனுப்பப்பட்டான்.
“அண்ணா ! இங்க நம்ம ஊருல இருக்கறதை விட அங்க இன்னும் படிப்பு நல்லா இருக்கும் . நாம யாரு ஜாமீன் பரம்பரை. இந்த ராஜ்யத்தை கட்டி ஆள வேண்டாமா? நம்ம காலம் போல இனி வரப் போகற காலம் இருக்காதுண்ணா . நிறைய போட்டி, பொறாமை எல்லாமே இருக்கும். எல்லாத்தையும் கடந்து அவன் வரணும். மகாராஜா போல ஆளனும். அத்தனைக்கும் ஏத்த படிப்பு மட்டும் போதாது. வேற பல திறமைகளும் வேண்டும். அது அத்தனைக்கும் இந்த பட்டிக்காடு சரியா வராது.”
தம்பி திவாகரன் சொல்வது சூர்யாவின் அப்பாவுக்கும் சரியாகவேத் தெரிந்தது . இதே காரணத்தை சூர்யாவும் ஒத்துக் கொண்டது தான் அதிசயம்.
“எனக்கு இங்கேயே இருக்கனும். அப்பாவை விட்டு உங்களை எலாம் விட்டு எங்கையும் போக மாட்டேன்.” என்று சூர்யா அழவே இல்லை.
தன்னுடைய 12 வயது மகனிடம் தந்தை இதையே கேட்ட போது,
“நீங்க எனக்கு நல்லது தானேப்பா செய்வீங்க. நான் எதுக்கு அழணும் ? என்றவனின் மன முதிர்ச்சியா அல்லது வயது முதிர்ச்சியா என்பது தெரியவில்லை. சூர்யாவும் எளிதில் யாரிடமும் அத்தனை எளிதில் ஒட்டிக் கொள்ள மாட்டான். பாசமாக இருப்பது போல வெளியில் தோன்றினாலும் அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை யாராலும் அறிய முடியாது. என்ன தான் இருந்தாலும் அன்னை என்ற ஒருத்தி இருந்திருந்தால் சூர்யா சென்றிருக்க மாட்டானோ ? என்ற எண்ணம் தான் சூர்யாவின் தந்தைக்கு மகனைப் பிரிந்தவுடன் வந்து கொண்டே இருந்தது. அவனைத் திரும்ப வரவழைத்துக் கொள்ளலாம். இருப்பினும் அவனுடைய எதிர்காலம் என்னுடைய பாசத்தை விட முக்கியம் என்று அவனின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்தவருக்கு தன்னுடைய எதிர்காலத்தில் மாட்டும் இல்லை அவனின் நிகழ்காலத்தில் கூட., தான் இருக்கப் போவதில்லை என்ற உண்மை தெரியவில்லை.
அடுத்த சில வருடங்களில் தந்தையும் மாரடைப்பால் காலமானார். சித்தி சித்தப்பா தனக்கு இருக்கிறார்கள் என்று நம்பினான். அதற்கு ஏற்ற வகையில் தான் அவர்களும் நடந்துக் கொண்டார்கள்.
எப்போதுமே இவனுக்கு ராஜா என்ற அழைப்புடன் ராஜா போலவே நடத்தினார்கள். “ராஜா! ராஜா !”என்று அவர்களும் அவனை அழைப்பதும் அவன் சொல்வது தான் இறுதி என்றும் உண்மையான ராஜா போலவே தான் இருந்தது அவனுக்கான (ராஜ)மரியாதை.
சித்தியும் ராஜ மரியாதையுடன் நடத்தாமல் அன்னை இல்லாத பிள்ளைக்கு அன்னை போல நடந்து கொண்டிருந்தால் உறவுகளின் தேவையும், அவர்களின் முக்கியத்துவம் என்ன என்பதும் புரிந்திருக்கலாம் . பிள்ளையார் அன்னை தந்தையை சுற்றி வந்தது போல சூர்யாவின் உலகம் சித்தி சித்தப்பா என்று சுருங்கி விட்டது.
=========================================================================================
கார்த்திக் . இவரைப் பற்றிய அறிமுகம் தேவையே இல்லை. சூர்யாவின் அசிஸ்டண்டாக வேலை செய்பவன்தான் . இருபத்து எட்டு வயது கட்டிளம் காளை .மாநிறம். வெடுவெடுவென்று உயர்ந்து நிற்கும் பனை மரத்திற்கு தம்பி என்று சொல்லலாம். மாநிறம். கம்பீரம். கலகலப்பானவன். இப்படி எல்லாம் இருந்தா எத்தனை பொண்ணுங்க பின்னாடி வருவாங்க. வருவாங்கதான். பின்னாடி வருவாங்க. வாழ்க்கை முழுக்க துணையா வருவார்களா? ஏன் வர மாட்டாங்களா ? என்று கேட்காதீங்க.
செவ்வாய் தோஷம் இருக்கற தங்கச்சி இருந்தா வாழ்க்கை துணையா வருவார்களா? நார்மலா இருந்தாலே சந்தோஷம் பொங்கிடும். எந்த பிக்கல் பிடுங்கலும் இருக்க கூடாதுன்னு சொல்லறாங்க. இப்ப சொல்லுங்க யாராவது வருவார்களா? வருவாங்க. பல நல்ல உள்ளங்கள் இருக்கு. அந்த கதை எல்லாம் இங்க வேணாம். ஏன்னா இது வேற கதை .
கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரியும் தங்கை வந்தனா அழகாக காட்டன் புடைவையில் ரெடியாகி வந்தாள் .
“என்ன அண்ணா பாக்கற?”
நெற்றியில் சந்தனக்கீற்று குட்டி ஸ்டிக்கர் போட்டு சகிதம் வந்தவள் பளிச்சென்று இருந்தாள்.
“இல்ல! டீச்சர்னாலே குடையும் காதுக்கு மேல சைட்ல ரோசும் வச்சுக்கிட்டு தானே வருவாங்க. நீ என்ன இப்படி சாதாரணமா வந்துருக்க?”
“அண்ணா நீ இன்னும் 90 ஸ் கிட்ஸ் தானு கரெக்ட்டா காட்டற.” சொல்லிக் கொண்டே அண்ணாவுடன் பைக்கில் ஏறி அமர்ந்தாள் .
“ஏண்டி ?”
“முதல்ல வண்டிய எடு . நான் கரெக்ட்டா போய்டுவேன். உனக்குத்தான் தான் அந்த வீரசிங்கம் திட்டுவாரு .”
“ஏய்! எங்க பாஸுக்கு எவ்ளோ அழகான பேரு இருக்கு . அவரை போய் இப்படி பேசற?”
“உங்க பாஸை நீதான் தூக்கி வச்சு கொண்டாடணும். அவரு முகத்தை பார்த்தாலே அப்பப்பா பயங்கரமா இருக்கு.”
அவளையும் அறியாமல் ஒருமுறை உடல் சிலிர்த்தது .
“உனக்கு எங்கடி அந்த நல்ல மனுஷனோட அருமை தெரியப் போகுது?”
“அது சரி” உதடு சுளித்து அலுத்துக் கொண்டாள் .
“அதெல்லாம் இருக்கட்டும். நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்ல?” ஹெல்மெட்டில் முகத்தை மறைத்தவன் தன்னுடைய ராயல் என்பீல்டை இயக்கினான் .
“இந்த ரோஜா பூ வை சைடுல வைக்கறது எல்லாம் எனக்கு பிடிக்காது. உனக்கு தெரியாதா?”
அவள் சொன்னதற்கு அவன் பதில் எதுவும் சொல்லவில்லை ஏனென்றால் இப்போது மெயின் ரோட்டிற்கு வந்து விட்டார்கள் . இனி அவன் எதுவும் பேச மாட்டான். சாலையில் மட்டுமே கவனம் இருக்கும். இவளும் அமைதியானாள். அவளை நேரத்துக்கு முன்னாலேயே கொண்டு வந்து கல்லூரியில் இறக்கி விட்டவன் ,
“வீட்டுக்கு போகும்போது மழை பெய்தால் என்ன பண்ணுவ?”
கையில் இருந்து உள்ளங்கை அளவு இருக்கும் ஒரு கவரை ஆட்டி ஆட்டி காட்டினாள் .
“இது என்னடி?
“ரெயின் கோட் .”
“இத்துனூண்டு இருக்கு. எவ்ளோ ரூவா?” அசால்டாக கேட்டான் கார்த்திக்.
“ரேட் கேட்டு அதிர்ச்சியாகிட கூடாது . ” இது வந்தனா
“முதல்ல எவ்ளோன்னு சொல்லு.” அண்ணனும் கறாராகப் பேசினான்
“சரி! சொன்னா எனக்கு என்ன கிடைக்கும் ?” கீழ் உதடு மடக்கி புருவத்தை ஏற்றி இறக்கி விளையாடிவள் முகம் புன்னகை அரசி ஸ்னேஹாவை நினைவுக்கு கொண்டு வந்தது.
“என்ன வேணுமோ சொல்லு. அப்புறம் யோசிப்போம் “
“பத்து ரூபா!”
“என்ன ? பத்து ரூபாவா? ” நம்பாதவன் மீண்டும் மீண்டும் அழுத்திக் கேட்டான் . அவன் அதிர்ச்சி அவன் கண்ணில் அப்பட்டமாக தெரிந்தது.
“ஆமா ! வெறும் பத்து ரூபா தான்.” அவளும் அழுத்திக் கூறினாள் . “ஆன் லைன் ஷாப்பிங்.”
“எனக்கு ?”
“இந்தா இது உனக்கு தான்.” ரோஸ் கலரை எடுத்து தனது பைக்குள் வைத்துக் கொண்டவள் நீல நிறத்தை இவனுக்குக் கொடுத்தாள் . “நான் இன்னும் என்னோட டிமாண்ட் சொல்லவே இல்லை. ஞாபகம் இருக்கட்டும். “சொல்லி விட்டு அவன் கையில் திணித்தாள்.
” பத்து ரூபா பொருளை கொடுத்துட்டு ரெண்டாயிரம் ரூபாய்க்கு செலவு வச்சிடாதம்மா “
“சரி! சரி! கிளம்பு காத்து வரட்டும் ” என்று உடன் பிறந்தவனை செல்லமாக விரட்டியவள் பெரிய தங்க நிற கேட்டை கடந்து சென்றாள் .
உடன் வந்த ப்ரொபெஸர் ரவி இவளைப் பார்த்து விட்டு காலை வணக்கம் சொன்னார். இவளும் அவருக்கு வணக்கம் வைத்தாள். இருவரும் சேர்ந்தே சென்றார்கள். இவளுக்கு அவர் தான் தலைமை.
“என்ன பஞ்சாயத்து அண்ணன் தங்கச்சிக்கு நடுல ?”
சிரித்துக் கொண்டே அவர் கேட்கவும் விஷயத்தை சொன்னாள் .
விஷயத்தை கேட்ட அவரும் உதட்டில் லேசானப் புன்னகையுடன் நடந்து வந்தார். மாணவர்கள் , சிலர் குட் மார்னிங் சொன்னார்கள்.
இவர்களும் தலையாட்டி அதை ஏற்றுக் கொண்டு அவர்களின் ஸ்டாப் ரூமுக்கு சென்றார்கள். அதனால் அவர்களுக்கு பேச எதுவும் பேச முடியவில்லை. பேச முடிந்தாலும் ரவி எந்தப் பெண்ணிடமும் அதிகம் பேச மாட்டான். பெண் என்று மட்டும் சொல்லி விட முடியாது. அவன் அதிகம் பேசுவது நாடுவது எல்லாமே புத்தகம் தான்.
அப்படிப் பட்ட ஆண்களைத் தானே பெண்களுக்குப் பிடிக்கிறது.
“சார் எனக்கு ஒரு சந்தேகம்” என்று இஷ்டத்துக்கு அழைப்புகள் வரும்.
“சாப்பிட்டாச்சா ?” வாட்ஸ் ஆப் தொந்தரவுகள் .
புத்தகத்திற்குள் காதல் கடிதம் …
கார்த்திக்கிற்கு ஒரு வந்தன பொல்லா ரவிக்கு கீர்த்தி தன உடன் பிறந்தவள். அவளுக்கும் தனி கதை உண்டு. ரவியும் சரி கீர்த்தியும் சரி புத்தகப் புழுக்கள் தான். வெளியில் யாரிடமும் அத்தனை எளிதில் பேசி விட மாட்டார்கள். “பேசினா காசு உண்டு” யாராவது அவர்களிடம் சென்று சொன்னால் கூட புத்தகத்தில் இருந்து தலையை நிமிர்த்தி அப்படியா? என்று கேட்டு விட்டு மீண்டும் படிப்பைத்தான் தொடர்வார்கள்.
வந்தனா அப்படி இல்லை. கார்த்திக்கின் நண்பர்களுக்கு இணையாகப் பேச பள்ளியிலிருந்தே தன்னை தயார் படுத்திக் கொண்டவள். அதனாலேயே அவளுக்கு சென்ற எந்த இடங்களிலும் ராகிங் தொல்லை இருந்ததில்லை. எப்போதும் அவளைச் சுற்றி நண்பர்கள் பட்டாளம் இருந்துக் கொண்டே இருக்கும் . அவர்கள் எல்லாருமே இவளுக்கு அண்ணன் முறைதான். அதுவே அதைத் தாண்டி வெளியில் யாரிடமும் அவள் அதிகம் பேசுவதில்லை. ஒரு புறம் ஆண்களின் முகம் தெரியும் என்பதாலும், இன்னொரு புறம் எங்காவது யாரிடமாவதுப் பேசி எங்கே தான் அவர்களின் காதலில் விழுந்துவிடுவோமோ என்ற பயமும்தான் காரணம். அதுனால என்ன? இளமைக்கும் வாலிபத்துக்கும் ஏற்ற வயது தானே ? வேறு என்ன ? தன்னுடைய தோஷம் வரப் போகும் கணவனுக்கு பாதிக்கும் என்ற எண்ணம் தான். அவளை ஆண்களிடமிருந்து தள்ளி நிறுத்தி வைத்திருக்கிறது.
துடிக்கும் இதயம் ……….
