அன்றைய பொழுது அப்படியே கழிய. என்ன தான் அவனுக்காய் சமாதானங்கள் கூறியிருந்தாலும் அவளின் மனம் முழுக்க அத்தனை அழுத்தம்.
ஆம், யஷ்வந்தால் தான் இன்று ஒரு நல்ல கௌரவமிக்க குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
ஆனாலும், அவர்களின் குத்தி கிழிக்கும் வார்த்தைகளில் புண்பட்டு ரணமாய் போகும் இதயத்தினை தனக்குத்தானே ஆறுதல் கூறி ஆற்றிக்கொண்டாலும், காயங்கள் மொத்தமாய் காய்ந்து போய் விடுவதில்லையே.. வடுவாய் அதன் சுவடு என்றுமே அவளுக்குள் தடம் பதித்துக் கொண்டு தான் இருக்கிறது.
படுக்கையில் கிடந்தவளின் மனம் முழுக்க திருமூர்த்தியின் வார்த்தைகள் தான் வலம் வந்துக் கொண்டிருந்தது.
யஷ்வந்த் கேட்ட கேள்வியும் அவளை துளைத்தெடுத்தது. ‘இன்னும் எத்தனை காலம் காத்திருந்தால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்’ என்ற கேள்வி இவளையும் ஊசியென துளைக்க, தூக்கம் வரவில்லை.
கட்டிலில் புரண்டு புரண்டு படுத்திருந்தவளின் அசைவில் யஷ்வந்திற்கும் விழிப்பு தட்டி விட.
அவளை அள்ளி தன் கை அணைவுக்குள் கொண்டு வந்தவன். அவளின் நெற்றியில் இதமாய் இதழ் பதித்து, “தூங்கு பவி”.
அவனின் ஒற்றை அணைப்புக்கு தான் எத்தனை சக்தி. இத்தனை நேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவளின் கண்களை உறக்கம் சுழற்ற. அவனின் அணைப்பில் அத்தனை பாதுகாப்போடு உறங்கிப் போனாள்.
மறுநாள் விடியலே அத்தனை கோலாகலமாய் இருந்தது. இப்பொழுது தான் முதல் முறை ஒரு குடும்பத்தில் இருந்து தீபாவளி கொண்டாட்டத்தை காண்கிறாள்.
இதற்கு முன்பெல்லாம் அவள் எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடியதோ, புது துணி உடுத்திக் கொண்டதோ கிடையாது. எப்பொழுதும் போல் அன்றும் சாதாரண ஒரு நாளாக தான் கடந்து போகும்.
ஆனால், இந்த முறை அப்படி அல்ல..
குடும்பமாய் அனைவரும் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தது முதல், அனைத்தையும் அத்தனை ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வழக்கம் போல் தான் யாரும் அவளை கண்டுகொள்ளவில்லை. அதைப் பற்றி எல்லாம் அவளும் பெரிது படுத்தவில்லை. அவர்கள் செய்வது போன்று தானும் செய்து கொண்டாள். அனைத்திற்கும் யஷ்வந்த் அவளுக்கு துணையாய் நின்றான்.
அனைவரும் ஒன்றாக நின்று இறைவனை வணங்கினார்கள். அவளுக்கு அவர்களுடன் இணைந்து நிற்கவே ஒரு வித சங்கடமாய் இருக்க. நேற்று போல் இன்றும் ஏதேனும் பிரச்சனை வந்து விடக்கூடாது என்று சற்று தள்ளி நின்று கொண்டாள்.
விழி மூடி தனக்கு இப்படி ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த அந்த இறைவனுக்கு மனம் உருகி தன் நன்றியை தெரிவித்துவிட்டு அவள் தன் விழிகளை மலர்த்தவும், அவள் அருகில் நின்றிருந்தான் யஷ்வந்த்.
திருதிருவென அவனைப் பார்த்து விழித்தவள். திருமூர்த்தியையும், பரமேஸ்வரியையும் ஒரு பார்வை பார்க்க.
அவளின் தோளில் இடித்தவாறு ஒற்றைக் கண்ணை சிமிட்டியவன் ‘என்ன’ என்பது போல் சைகை செய்தான்.
‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையசைத்தவளுக்கு எங்கே நேற்று துணிக்கு பிரச்சனை எழுந்தது போல், இப்பொழுதும் ஏதேனும் பிரச்சனை எழுந்து விடுமோ என்று உள்ளுக்குள் அச்சமும் பரவியது.
கொஞ்சமாக நகர்ந்து குடும்பத்தினரை நெருங்கியும் இல்லாமல், அதே சமயம் மிகவும் விலகியும் இல்லாமல் நின்று கொண்டாள்.
அவளின் செயலை வைத்தே மனதை படித்தவனின் இதழிலும் குறும்பு புன்னகை. அவளைப் போன்றே நகர்ந்து அவள் அருகில் நின்று கொண்டவன் எதுவும் கூறவில்லை.
அதன் பின் சாப்பாட்டு வேலை தொடங்கியது. பொதுவாக இப்படி பண்டிகை தினம் என்றால் குடும்பமாக அனைவரும் அமர்ந்து தான் உணவருந்துவார்கள்.
எப்படியும் பவித்ரா அமர்ந்தால் திருமூர்த்திக்கு கோபம் வரும் என்று எண்ணிய பரமேஸ்வரி, ஆண்களுக்கு மட்டும் முதலில் உணவை பரிமாறினார்.
“மா எல்லாரும் ஒன்னா தானே உக்காந்து சாப்பிடுவோம். இப்ப என்ன புதுசா தனி தனியா?” என்றான் தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி சாதாரணம் போல்.
அவனின் முகம் சாதாரணமாக இருந்தாலும், குரல் ஒன்றும் சாதாரணமாய் இல்லை.
“குழந்தையை வச்சுட்டு இந்துவால சாப்பிட முடியாது பா. அதுக்கு தான் நீங்க முதல்ல சாப்பிட்டீங்கன்னா அடுத்து நாங்க எல்லாம் ஒன்னா உக்காந்துப்போம்” என்றார் சமாளிப்பாக.
தன் தாயின் சமாளிப்பு வார்த்தைகள் புரியாத அளவிற்கு சிறு பாலகன் இல்லையே அவன். அவரை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு பவித்ராவை எதிர்நோக்கினான்.
அவளோ தன் தலையை இடம் வலம் என அசைத்து காண்பித்து கண்களால் கெஞ்சுவது போல் பாவனை செய்யவும், எதுவும் பேசாமல் அமைதியாக உண்டு விட்டு எழுந்து விட்டான்.
பவித்ராவின் மனம் தான் காலை முதல் அடித்துக் கொண்டே இருந்தது. ஒரு புறம், இன்றைய தினம் நல்ல முறையில் செல்ல வேண்டுமே என்ற பதட்டம். நேற்று போல் எந்த பிரச்சனையும் ஆகிவிடக்கூடாது என்ற பயம்.
மற்றொரு புறம், இன்றைய நாளை இப்படி குடும்பமாய் செலவிடுவதில் உண்டான மகிழ்ச்சி என மாற்றி மாற்றி உள்ளுக்குள் உணர்வுகள் போட்டி போட அதிலேயே அயர்ந்து போய்விட்டாள்.
ஆண்கள் உண்டு முடித்து எழவும், பெண்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து கொண்டனர்.
இந்துவை பார்த்து தன் கண்களை காண்பித்திருந்தார் பரமேஸ்வரி.
“வா பவித்ரா, நீயும் வந்து உட்காரு” என்ற இந்து, “இந்தாங்க குழந்தையை வச்சு கொஞ்ச நேரம் விளையாட்டு காட்டுங்க” என்று சேரனிடம் யாஷிகாவை ஒப்படைத்தாள்.
அனைவரும் பேசி கலகலத்துக் கொண்டே உணவை உட்கொண்டனர். பவித்ரா எதுவும் பேசவில்லை. அமைதியாய் உண்டு கொண்டிருந்தாள்.
அனைவருக்கும் பார்த்து பார்த்து பரிமாறிய பரமேஸ்வரி, ஏதாவது வேண்டுமா என்று கூட பவித்ராவிடம் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை.
அனைவரின் ஒதுக்கமும் புரிந்தாலும், எப்படியாவது இந்த குடும்பத்திற்குள் தன்னை திணித்துக் கொள்ள வேண்டும் என்று அவளும் அயராது பாடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறாள்.
இந்து தான் அவளுக்கு வேண்டியதை பார்த்து வைத்தாள்.
அன்றைய நாள் நல்ல முறையில் கழியவும் தான் பவித்ராவிற்கு நிம்மதி பெருமூச்சே வெளியேறியது.
காலை உணவிற்கு பிறகு மீண்டும் அறைக்குள்ளே தான் அவளின் தஞ்சம்.
பட்டாசுகளை வெடித்து விட்டு உள்ளே நுழைந்த யஷ்வந்த் கைகளை கழுவி விட்டு வந்து அவள் அருகில் அமர்ந்தவன். அவளின் கையை எடுத்து தன் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.
“என்னாச்சு?” என்று தன் மனதில் இருக்கும் வருத்தத்தை துளியும் முகத்தில் காண்பிக்காமல் வெளியே புன்னகையோடு அவள் வினவவும்.
“கஷ்டமா இருக்கா பவி?”.
“எதுக்கு?”.
“அப்பா சட்டுனு அப்படி பேசினதுக்கு”.
“அதெல்லாம் எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல. நாம தான் பொறுமையா வெயிட் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்ல” என்று இலகுவாக தன் தோளை குலுக்கி அவள் கூறினாலும், அவளின் முக வாட்டம் அவனையும் வாட்டியது.
சற்று நேரத்திற்கு முன்பு பட்டாசு வெடிப்பதற்காக இளையவர்கள் அனைவரும் கிளம்ப. பவித்ராவை செல்ல விடாமல் தடுத்துவிட்டார் திருமூர்த்தி.
“ஏன் இவள அங்க கூப்பிட்டு போயி ஊரெல்லாம் எங்க மானம் போறதுக்கா.. இது ஒன்னும் தனி வீடு இல்ல அப்பார்ட்மெண்ட். இத்தனை குடும்பம் இருக்கு. எல்லார் முன்னாடியும் எங்க மானம் போற மாதிரி எதுவும் செஞ்சு தொலைச்சிடாத. ஏற்கனவே, மானத்தை கப்பல் ஏத்தி அனுப்பியாச்சு. இருக்க கொஞ்ச நஞ்சத்தையும் வாங்கிட்டு போயிடாத” என்று கோபமாக சிடுசிடுத்திருந்தார் யஷ்வந்திடம்.
அவனும் கோபமாக பதிலுக்கு ஏதோ கூற வாயை திறக்கவும். தன் தலையசைத்து அவனை தடுத்து விட்டிருந்தாள் பவித்ரா.
அத்தோடு அவள் அறைக்கு வந்துவிட. மற்றவர்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க சென்றிருந்தனர்.
யஷ்வந்திற்கு விருப்பமே இல்லை என்றாலும், நித்யாவும், சேரனும் இழுத்துக் கொண்டு சென்று விட்டனர்.
“அவங்க சொல்றதும் சரிதானே.. நமக்கு கல்யாணம் ஆனது நிறைய பேருக்கு தெரியாது. எல்லாரும் விசாரிப்பாங்க இல்ல”.
“அப்போ எல்லாருக்கும் தெரியப்படுத்திடலாமா?”.
“எப்படி?”.
“சிம்பிளா ஒரு ரிசப்ஷன் வச்சிடலாம்”.
“ஐயோ வேண்டாம்!” என்று அவள் பதறவும்.
“ஏன்?”.
“இப்போ எதுக்கு அதெல்லாம்.. கொஞ்சம் கொஞ்சமா எப்படியும் எல்லாருக்கும் தெரிய தானே போகுது. ரிசப்ஷன் எல்லாம் வேண்டாம். திரும்ப தேவையில்லாம ஏதாவது பிரச்சனையாகிட போகுது”.
“எத்தனை பிரச்சனை வந்தாலும் நீ தானே என் பொண்டாட்டி”.
“நான் இல்லைன்னு சொல்லலையே பாவா.. முதல்ல வீட்ல இருக்குறவங்க ஏத்துக்கட்டும். அப்புறமா மத்ததை எல்லாம் பாத்துக்கலாம்”.
அவளின் கழுத்தை சுற்றி தன் கையை மாலை போல் கோர்த்தவன், “அதுக்குள்ள நமக்கு ரிசப்ஷன் எல்லாம் வைக்க முடியாது. ஸ்ட்ரைட்டா அறுபதாம் கல்யாணம் தான் ஓகேவா?” என்று அவளுடன் நெற்றி முட்டினான்.
அவனின் கண்களை காதலோடு பார்த்தவள், “அறுபதாம் கல்யாணம்னா என்ன சும்மாவா.. உங்களோட அத்தனை வருஷம் வாழுற பாக்கியம் எனக்கு கிடைக்குதுல்ல.. எனக்கு அதுவே பெரிய சந்தோஷம் தான். அப்ப நீங்க சொல்ற போல நாம நேரா அறுபதாம் கல்யாணமே பண்ணிப்போம்”.
“பவி” என்று அவளை பார்த்து புன்னகைத்தவன், “வர வர நீ நல்லா பேச கத்துக்கிட்ட”.
இருவரின் கவனத்தையும் கலைக்கும் படி யஷ்வந்தின் செல்பேசி இசைத்தது.
“புது நம்பரா இருக்கு” என்றவாறு அவன் அழைப்பை ஏற்கவும்.
“தம்பி நல்லா இருக்கீங்களா?”.
“ம்ம்.. நல்லா இருக்கேங்க.. நீங்க யாரு பேசுறது?”.
“நான் நான் ராணி” என்று அவர் தயங்கி தயங்கி கூறவும்.
“ஓ! எப்படி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்களா?” என்று சாதாரணம் போல் வினவினான்.
எப்படியும் அவனுக்கு தன்னைப் பற்றிய எந்த ஒரு நினைவும் இருக்காது என்று எண்ணியவருக்கு, அவன் சாதாரணமாய் விசாரித்தது அத்தனை மகிழ்ச்சியை கொடுத்திருந்தது.
அவனின் விசாரிப்பில் ஒரு நொடி தடுமாறியவர், “ஆங்.. நல்லா இருக்கேன் தம்பி. பவித்ரா..” என்றார் மீண்டும் தயக்கமாக.
“இதோ தரேன் பேசுங்க” என்று அவளிடம் செல் பேசியை அவன் நீட்டவும்.
அவளோ புருவம் சுருக்கி அவனை பார்த்துக்கொண்டே செல்பேசியை காதில் வைத்தாள்.
“ஹலோ” என்று பவித்ராவின் குரல் கேட்டதும்.
“ஹலோ பவித்ரா எப்படி இருக்க? நல்லா இருக்கியா? அந்த தம்பி உன்ன ஒன்னும் கஷ்டப்படுத்திடலையே? நல்லா பார்த்துக்கிறாரா? அவங்க வீட்ல உன்ன பத்தின விஷயம் தெரிஞ்சிடுச்சா.. ஏதும் பிரச்சனை இல்லையே?” என்று படபடவென தன் மனதில் இருந்த கேள்விகள் மொத்தத்தையும் கொட்டிவிட்டார்.
“ராணிமா” என்றவளின் வார்த்தைகள் தழுதழுத்து வெளியேறியது.
“நான் ராணி தான்மா பேசுறேன். என்ன தெரியுதா?” என்றவர் ஒரு நொடி தயங்கி, “இதுக்கு அப்புறம் உன்கிட்ட பேசவே கூடாதுன்னு தான் நினைச்சேன். என்னால உன் வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாதுல. நீ இங்கிருந்து வந்த பொண்ணுனு தெரிஞ்சா, அவங்க குடும்பத்துல உன்ன ஏத்துப்பாங்களோ மாட்டாங்களோனு பயமா இருந்துச்சு. அதனால உன்னோட எந்த உறவும் வைக்க கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா, என்னமோ தெரியல ரெண்டு, மூணு நாளா மனசு கிடந்து அடிச்சுக்குது. உன் நினைப்பாவே இருந்துச்சு. நீ எப்படி இருக்கன்னு ஒரே ஒரு தடவ மட்டும் விசாரிச்சிட்டா போதும். அப்புறம் நிம்மதியாகிடுவேன். அதுக்குதான் போன் பண்ணேன்” என்று தன் பக்க விளக்கத்தை கொடுத்தார்.
