யஷ்வந்த் அவளுக்கான தனிமையை கொடுத்து விட்டு வெளியேறி விடவும். கண்கள் பனிக்க மெல்லிய புன்னகையோடு, “நான் நல்லா இருக்கேன் ராணிம்மா. என்னை அவங்க ரொம்ப நல்லா பாத்துக்குறாங்க. அதோட எல்லா உண்மையும் அவங்க வீட்ல தெரிஞ்சிடுச்சு. பிரச்சனை வந்துச்சு தான், இப்ப பரவாயில்ல” என்றவளோ அனைத்து விஷயத்தையும் கூறி முடித்தாள்.
“என்னம்மா சொல்ற, உன்னையும் தப்பான பொண்ணுனு நினைச்சுட்டாங்களா.. ஐயோ! எல்லாம் என்னால தான். எனக்கு குழந்தை இல்லாத ஆசையினால உன்ன இங்கேயே வச்சு வளர்த்துட்டேன். வெளியில எங்கேயாவது வச்சு வளர்த்திருந்தா, உனக்கு இப்படி ஒரு அவப்பெயர் வந்திருக்காது. எல்லாம் என்னால தான். என்னை மன்னிச்சிடுமா” என்றார் குற்ற உணர்வோடு.
“என்ன பேசுறீங்க ராணியம்மா, நீங்க மட்டும் இல்லனா இன்னைக்கு நான் உயிரோட இருப்பேனான்றதே சந்தேகம் தான். என்னை இத்தன வருஷம் வளர்த்து ஆளாக்கியதோட மட்டும் இல்லாம, என் வாழ்க்கை நல்லபடியா அமையனும்னு எனக்காக பொய் சொல்லி அந்த இடத்துல இருந்து என்னை காப்பாத்துனீங்க..
நீங்க எனக்கு செஞ்சது வெறும் உதவி மட்டும் இல்ல, அதுக்கும் மேல ரொம்ப பெருசு. என்னுடைய உயிர், மானம் இது இரண்டையுமே நீங்க தான் காப்பாத்தி கொடுத்திருக்கீங்க. ஒரு பொண்ணுக்கு இது ரெண்டும் தானே முக்கியம். இதை விடவா என்னை மத்தவங்க பாத்துக்க முடியும். நான் இருந்த இடம் தப்பான இடம் தான்.
அந்த தப்பான இடத்துலயும் எனக்கு எந்த தப்பும் நடந்துடாம பாதுகாக்க நீங்க எவ்வளவு போராடுனீங்கன்னு தினம் தினம் நேர்ல இருந்து பார்த்திருக்கேன். உங்க மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லம்மா, உண்மையை சொல்லப்போனா உங்களுக்கு நான் நிறையவே நன்றி கடன் பட்டிருக்கேன்” என்றார் கண்ணீர் பொங்க.
“என்ன பேசுறமா நீ, நன்றி கடன் அது இதுன்னு.. எனக்கு உன் வாழ்க்கை சந்தோஷமா அமைஞ்சா போதும். நீ நல்லபடியா தம்பியோட சந்தோஷமா வாழறேன்னு தெரிஞ்சுக்கிட்டேன்ல போதும்.. அதுக்காக தான் நான் இப்போ போன் பண்ணேன். போன் பண்ணி தம்பிகிட்ட விசாரிக்கவும் சங்கடமா தான் இருந்துச்சு. அதுக்காக அப்படியே விடவும் மனசு வரல. அந்த தம்பிய பத்தி எதுவுமே தெரியாது.
அவர் பேசினதை வச்சு நம்பி தான் உன்ன அனுப்புனேன். ஆனாலும், மனசுக்குள்ள ஒரு நெருடலாவே இருந்துச்சு. நீ அங்க எப்படி இருக்கியோ, என்ன பண்ணுறியோனு பயமாவும் இருந்துச்சு. அதான் ஒரே ஒருமுறை விசாரிச்சுக்கலாம்னு போன் பண்ணேன். இனி பயப்படாம தைரியமா இருப்பேன். அந்த தம்பியோட நீ சந்தோஷமா வாழுறேன்னு சொல்லிட்ட இல்ல. எனக்கு இந்த ஒரு வார்த்தை போதும். உன்ன பத்தின கவலை இல்லாம இனி நான் நிம்மதியா தூங்குவேன்” என்றார் ஆசுவாசமாய்.
“ராணிம்மா” என்றாள் நா தழுதழுக்க.
“அது ஒன்னும் இல்லம்மா, புள்ளைங்கன்னு இருந்தா தெரியாது. தனி கட்டயா இருக்கேன்ல, சின்ன வயசுலருந்து உன்ன பெத்த புள்ள மாதிரி நினைச்சு வளர்த்துட்டேனா.. நீ இப்போ திடீர்னு இங்க இருந்து போயிடவும் ஒரு மாதிரி கஷ்டமா தான் இருக்கு. இங்கேயே இருந்து உன் வாழ்க்கை நாசமா போயிடாம ஒரு நல்லவன் கைக்கு நீ போய் சேர்ந்திருக்கனு நினைக்கும் போது மனசுக்கு நிம்மதியாவும், ஆறுதலாவும் இருந்தாலும், இனி உன்ன பார்க்க முடியாதுன்னு நினைக்கும்போது தான் ரொம்ப வருத்தமா இருக்குமா”.
“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க ராணியம்மா. உங்களுக்கு பிறக்காம போயிருந்தாலும் நானும் உங்க பொண்ணு மாதிரி தானே. அப்படித்தானே நீங்க என்னை பார்த்தீங்க”.
“அதான்.. அந்த காரணத்துக்காக தான் உன்ன பத்தி விசாரிக்கணும்னு போன் போட்டேன். நீ நல்லா இருக்கல்ல தாயி எனக்கு அது போதும். உன் நல்ல மனசுக்கு நிச்சயம் நீ நல்லா தான்மா இருப்ப. உனக்கு எந்த குறையும் வராது. நிறைய பிள்ளைகள பெத்து குடும்பமா சந்தோஷமா நீ வாழனும். முடிஞ்சா நேரம் கிடைக்கும்போது எப்போவாவது போன் பண்ணி என்கிட்ட ஒரு வார்த்தை பேசுமா. இனி நானா உனக்கு போன் பண்ண மாட்டேன். என்னால எந்த ஒரு சூழ்நிலையிலும் உன்னுடைய வாழ்க்கைக்கு எந்த ஒரு பிரச்சனையும் வந்துடக்கூடாது. நீயா பேசும்போது பேசுறேன்”.
“கண்டிப்பா பேசுறேன் ராணிமா” என்றவள்.
மேலும், சற்று நேரம் அவரின் உடல் நிலையை பற்றி விசாரித்துவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
அவரின் அன்பிலும், அக்கறையிலும் மனமே நிறைந்து போய்விட்டது. இந்த ஒரு ஜீவனால் தானே அவள் இன்று வரை உயிர் வாழ்வது.
கண்கள் கண்ணீரை சுரக்க, ஏதேதோ நினைவுகள் அலைமோத, ஜன்னலை வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
வாழ்க்கை எத்தனை விசித்திரமானது அல்லவா..
தாய் தந்தை யார் என்று தெரியாமல்..
குடும்பம் என்ற ஒன்று இல்லாமல்..
எங்கே பிறந்தாள், யாருக்கு பிறந்தாள், எப்படி பிறந்தாள் என்ற எந்த ஒரு விவரமும் அறியாமலே எங்கோ பிறந்து, யாராலோ வளர்க்கப்பட்டு இப்பொழுது இங்கே வந்து கரை சேர்ந்திருக்கிறாள்.
எப்பொழுதுமே அவளின் வாழ்க்கை அவளுக்கு ஒரு புரியாத புதிர் தான்.
அது நகர்த்திக்கொண்டு செல்லும் பாதையில் சென்று கொண்டிருக்கிறாள். இத்தனை நாட்கள் எந்த ஒரு பிடிப்பும் இன்றி சென்று கொண்டிருந்தவள். இப்பொழுது பற்றுகோலாய் யஷ்வந்தை பலமாக பிடித்துக் கொண்டு அவனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.
அவளின் எண்ண ஓட்டம் எங்கெங்கோ அலை மோதி அவளுக்குள் சதிராடிக் கொண்டிருந்தது.
“என்ன பேசி முடிச்சிட்டியா?” என்று அறைக்குள் நுழைந்தான் யஷ்வந்த்.
“ம்ம்”.
“என்ன மேடம் ரொம்ப சோகம்?” என்றவாறு அவளை இடித்துக் கொண்டு அவன் அமரவும்.
“ஒன்னும் இல்ல”.
“ஓய், என்னன்னு சொல்ல மாட்டியா?”.
பெருமூச்சை வெளியேற்றியவள், “ஒன்னும் இல்ல பாவா, சும்மா யோசிச்சிட்டு இருந்தேன்”.
“ரொம்ப யோசிக்கிற பவி, இவ்வளவு யோசனைக்கெல்லாம் உன் உடம்பு தாங்காது. அண்ணா படத்துக்கு டிக்கெட் எடுத்திருக்கான் ஈவினிங் எல்லாரும் ஒன்னா போயிட்டு வரலாம்”.
“நானுமா?”.
“ஆமா, நீயும் தான். நீ இல்லாம நான் மட்டுமா?” என்றான் அவளை லேசாய் முறைத்துப் பார்த்து.
“ச்ச.. ச்ச.. அப்படி கேக்கல பாவா” என்று அவள் தடுமாற.
எங்கே இவள் வந்தால் திருமூர்த்திக்கு பிடிக்காமல் ஏதேனும் பிரச்சனை உருவாகிவிடுமோ என்ற பயம் தான் அவளை அலைக்கழிக்கிறது என்பதை சரியாக புரிந்து கொண்ட யஷ்வந்த், அவள் கேட்காமலேயே விவரமாக கூற துவங்கினான்.
“அம்மாவும், அப்பாவும் வீட்ல தான் இருக்க போறாங்க. அண்ணா, அண்ணி, நீ, நான், நித்யா.. யாஷிகாவ அம்மா பாத்துப்பாங்க. நம்ம மட்டும் தான் படத்துக்கு போறோம்”.
“ஓ” என்றவளின் மூளைக்குள் இவர்கள் தன்னை அழைத்து செல்வதால் தான் திருமூர்த்தி வரவில்லையோ என்ற கேள்வி வேறு வண்டாய் குடைந்தது.
“என்ன தான் டி.. அப்படி என்ன தான் யோசிச்சிட்டு இருக்க? நான் பாட்டுக்கு பேசிட்டிருக்கேன். ஒன்னும் பதில் பேசாம உக்காந்து இருக்க”.
“கேட்டா நீங்க கோபப்படுவீங்க” என்றாள் மெல்லிய குரலில்.
“கோபப்படுவேன்னு தெரியுதுல. அப்புறம் எதுக்கு கேக்குற?”.
அவள் சிணுங்கிக் கொண்டு தன் முகத்தை திருப்பிக் கொள்ளவும்.
“சரி சரி கேளு கோவப்படல”.
“அது.. நான் வரேன்னு தான் உங்க அப்பாவும், அம்மாவும் படத்துக்கு வரலையா?”.
“இதைத்தான் இவ்வளவு நேரமா யோசிச்சிட்டு இருந்தியா?” என்றவனோ அவளின் தலையில் வலிக்காமல் ஒரு கொட்டு வைத்து, “அதெல்லாம் ஒன்னும் இல்ல, அவங்களுக்கு படம் பார்க்க இன்ட்ரஸ்ட் இல்ல. நாங்க கேட்கும்போதே வரலைன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் தான் நாங்க டிக்கெட் புக் பண்ணோம். ரொம்ப யோசிக்காதடி”.
“ம்ம்”.
அப்படியே மதிய உணவு நேரம் வந்துவிட்டது. உண்டு முடித்து அனைவரும் சற்று நேரம் அறைக்குள் படுக்க சென்று விடவும்.
கிச்சனில் நின்று கொண்டிருந்த நித்யா கமலேஷீடன் செல்பேசியில் பேசிக்கொண்டிருந்தாள்.
“அடுத்த வருஷம் எப்படியாவது தல தீபாவளி கொண்டாடலாம்னு பார்த்தா இப்படி ரெண்டு வருஷம் கல்யாணத்த தள்ளி வச்சுட்டீங்களேடி. உங்களுக்கெல்லாம் மனுஷனோட அவஸ்தை புரியுதா.. என்னை பாத்தா கொஞ்சம் கூட பாவமா இல்லல”.
அவனின் புலம்பலை கேட்டு அவள் சத்தமாக புன்னகைக்கவும்.
“சிரிக்கிறியா.. நல்லா சிரிடி. இதுக்கெல்லாம் சேர்த்து இருக்கு உனக்கு”.
“இப்போ என்ன உங்களுக்கு பிரச்சனை? அடுத்த வருஷமே தல தீபாவளி கொண்டாடனும் அதானே.. கொண்டாடலாமே.. அதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு” என்று ஆர்வமாய் அவள் கூறவும்.
அவளின் ஆர்வம் அவனையும் தொற்றிக் கொண்டது.
“அப்படியா என்ன ஐடியா?” என்று சுவாரசியமாய் கேட்டான்.
“இப்ப நம்ம லவ் பண்றது வீட்ல தெரியாது. அவங்களா கல்யாணத்துக்கு பேசினதால தான ரெண்டு வருஷம் தள்ளி வச்சிருக்காங்க. நீங்க என்ன பண்றிங்க, உங்க அம்மா அப்பா கிட்ட நம்ம லவ் பண்ற விஷயத்தை சொல்லி கல்யாணத்தை சீக்கிரமா வைக்கலாம்னு சொல்லிடுங்க. அவங்களும் வீட்ல பேசி சீக்கிரமா கல்யாணத்தை வச்சிடுவாங்க” என்று அவள் கூறிக் கொண்டே திரும்பவும்.
தண்ணீர் எடுத்து செல்வதற்காக வந்த பவித்ரா அவள் கூறியதை கேட்டுவிட்டாள்.
பவித்ராவை இங்கே சற்றும் எதிர்பாராத நித்யா திடுக்கிட்டு விழித்தவள், “நான் அப்புறம் பேசுறேன் கமல்” என்றவாறு அழைப்பை சட்டென்று துண்டித்து விட்டு செல்பேசியை இறுக்கமாய் பற்றிக் கொண்டாள்.
அவள் பேசிய அனைத்தும் கேட்டிருந்தாலும், அதைப் பற்றி எதுவும் அவளிடம் கேட்டுக் கொள்ளாத பவித்ரா தண்ணீரை எடுத்துக்கொண்டு அறைக்கு சென்று விட்டாள்.
“அச்சோ! இவங்க எல்லாத்தையும் கேட்டுட்டாங்க போலருக்கே. அண்ணா கிட்ட சொல்லிட்டா.. அண்ணா என்ன நினைப்பாங்க” என்று தன் கையை உதறி புலம்பியவள் பதட்டத்தோடு அறைக்கு ஓடி விட்டாள்.
அறைக்குள் நுழைந்த பவித்ரா யஷ்வந்திடம் இதைப் பற்றி எதுவுமே கூறவில்லை. ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர் என்பது வரை அவளுக்கு தெரிந்து விட்டது.
குடும்பமே பேசி அவர்களுக்கு திருமணம் முடிக்கவும் முடிவு செய்துவிட்டனர். இப்பொழுது ஏன் குழப்ப வேண்டும் என்று எண்ணியவள் தான் கவனித்ததை அப்படியே விட்டு விட்டாள்.
மாலை போல் அனைவரும் குடும்பமாக கிளம்பி படத்திற்கு சென்றனர். நித்யா சற்று பதட்டத்தோடு அவ்வப்பொழுது பவித்ராவின் முகத்தை பார்ப்பதும் திரும்புவதுமாகவே இருந்தாள்.
அவளின் பார்வையை உணர்ந்தாலும் பவித்ரா எதுவும் கண்டு கொள்ளவில்லை.
“படம் ரொம்ப நல்லா இருந்துச்சு இல்லடா” என்றான் சேரன்.
“ஆமாண்ணா, நல்ல ஃபேமிலி கான்செப்ட்”.
அனைவரும் படத்தை பற்றி பேசி சிரித்தவாறு மகிழ்ச்சியான மனநிலையோடு வீடு நோக்கி புறப்பட்டனர்.
வீட்டில் திருமூர்த்தி இவர்களின் மனநிலைக்கு நேர் எதிராய் கொதித்து போய் அமர்ந்திருந்தார்.
அவரின் கோபத்தை யஷ்வந்த் தனிப்பானோ தவிர்ப்பானோ..
ஆனால், நிச்சயம் அவரின் கோபம் பவித்ராவை பொசுக்கும்..
