அத்யாயம்-7

திருக்குறள்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

அதிகாரம் -2  வான் சிறப்பு  குறள் எண் -17

அத்யாயம் -7

  வெண்டைக்காய் சாப்பிட்டா கணக்கு நல்லா வருன்னு தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. வேற எதுவோ கூட நல்ல வருமாம். அது சரி மலச்சிக்கல் பல சிக்கல் தான் இல்லையா? பொதுவாக எல்லாரும் பிரச்சனை வந்தா தானே தெரியும் என்று சொல்வார்கள். மல சிக்கலில் இருப்பவர்கள் தான் வராம இருந்தா தானே தெரியும் என்று சொல்வார்கள் .

ப்ரோடீன் நிறைந்த உணவு,கீரை, வெண்டைக்காய் என்று எல்லாவற்றயும் நன்றாக கடித்து முழுங்கியவனுக்கு பின் காலத்தில் பெற்றவர்களின் சொல்லை முழுங்க முடியாமல் தவித்துப் போனான் .

” இது சாப்பிடு. அது இதுக்கு வேணும்.இது அதுக்கு நல்லது. இந்த மாத்திரை இந்த காம்போசிஷன். இந்த மருந்து அந்த இந்த கம்பனி., நோவார்டிஸ் கான்செர் கேஸ் படி., வாந்தி வந்தால் கூட சொல்ல பயம். வாந்தி மாத்திரைக்கு இந்த காம்போசிஷன்., பேதி மாத்திரைக்கு இது., போரோ பயாடிக் வயத்துல இது பண்ணும்., அது செய்யும்… அப்பப்பா எத்தனை மாத்திரைகள் எத்தனை காம்போசிஷன் ?

ஒரு நேரத்தில் எதுவுமே எனக்கு வேணாம்” என்று கத்த வேண்டும் போல இருந்தது. அப்படி எல்லாம் அங்கே கத்தி விட முடியாது. அத்தனை கண்டிப்பான பெற்றவர்களிடம் முகம் திருப்பக் கூட அனுமதி கிடையாது அந்த வீட்டில்.

“முத புள்ளைய ஆம்பிளையா பெத்து கொடுத்துட்டா என் மருமக.” முதலில் இவர்களின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத மாமனார் கூட பேரனைப் பார்க்க ஓடி வந்து விட்டார். மகளுக்கு இருந்த அத்தனை கொண்டாட்டங்களை விடவும் ரவிக்கு அதிகமாகவே இருந்தது.

அதிலும் அவன் தந்தை அவனை வருங்கால டாக்டர் என்றே சொல்ல ஆரம்பித்து விட்டார். முதலில் எல்லாம் பெருமையாக உணர்ந்தாலும் வயது ஏற ஏற அவனுக்கு அறிவியல் பிடிக்கவில்லை. பொருளாதாரம் தான் பிடித்தது. அதற்கு அவனுக்கு கிடைத்த பாடங்களும் ஒரு முக்கியக் காரணம்.

தாத்தா தன்னுடைய இறுதி நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட போது கொடுத்த விலை அதிகம் தான். “உள்ளே என்ன நடக்கிறது?” தெளிவாக சொல்ல மாட்டார்கள். இது இத்தனைக்கும் பெற்றோர் வேலைப் பார்த்த மருத்துவமனை தான். பணம் கட்டினால் தான் அடுத்த மருத்துவம். பெரிய மருத்துவமனையில் வேலை பார்ப்பது என்பது வேறு. அங்கேயே நோயாளியாக அனுமதிக்கப்படுவது என்பது வேறு.

தன்னுடைய மகன் டாக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணம்தான் அவனின் பெற்றோருக்கு முக்கியத் தேவை. டாக்டர் ஆனா என்னப்பா பெனிபிட்? தந்தையிடம் கேட்டான்.

“அது பொருளாதாரத்துல உன்னை இன்னும் நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்.”

மருத்துவர்கள் எப்படி தங்களது மருத்துவமனையை பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வைக்கிறார்கள் என்பதை அப்போது பார்த்தவனுக்கு பொருளாதாரத்தில்தான் ஆசை வந்தது. மருத்துவத் துறையில் ஏதோ ஒரு விதமான அலர்ஜி பின் வந்த வருடங்களில் வெறுப்பாக மாறி விட்டது. காம்பில் பாலைக் கறப்பதா பெரிய விஷயம் ? கொம்பிலும் நான் கொஞ்சம் கறப்பேன் என்று தான் ரவிக்கு தெரிந்தது . இன்சூரன்ஸ் இருந்தால் ஒரு மாதிரி இன்சூரன்ஸ் இல்லை என்றால் வேறு மாதிரி அவன் பார்த்த எல்லா இடங்களிலும் பொருளாதாரம் தான் வந்து நின்றது .

 

பெற்றவர்கள் கூட அவன் மருத்துவம் படிக்க வேண்டும் என்று சொன்னார்களேத் தவிர நல்ல மருத்துவர்கள், சேவை செய்யும் எண்ணம் இருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று சொல்லித் தரவில்லை. ஒரு வேளை சுவாமி சிவானந்தா போல சேவை செய்த மருத்துவர்களின் கதைகளை கூறி இருந்திருக்கலாம்.(அப்துல் கலாம் ஐயா குறிப்பிடுவது இவரைத் தான் )

அல்லது பத்து ரூபா வண்ணாரப்பேட்டை மருத்துவர் போல இருக்கும் பலரை கைக் காட்டி மகனை வளர்த்திருக்கலாம். பிள்ளைகளுக்கு தன்னுடைய கனவுகளை திணிக்காமல் அதன் பாதையில் செல்வதற்கான சிறந்த வழி முறையை காட்ட வேண்டும். ரவியின் பெற்றவர்களும் தான் என்ன செய்வார்கள். அவர்களும் தான் பணத்தின் பின்னால் தான் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

 

 

பெற்றவர்களாக அவர்கள் செய்தது சரிதான். வருங்காலத்தில் பிள்ளைகள் கஷ்டப் படக் கூடாது. என்ற இந்த ஒரு எண்ணம்தான் அவர்களின் மனதில் இருந்தது. பையனுக்கு டாக்டர் சீட் வாங்க வேண்டும். அதுக்கு நிறைய செலவாகும். பணம் சேக்கனும். பொண்ணுக்கு நல்ல டாக்டர் மாப்பிள்ளையா பார்த்து கட்டி வைக்கணும். பெண்ணவளுக்கு கணினித் துறையில் தான் விருப்பம் இருந்தது.

“ரவியோ எனக்கு டாக்டர் எல்லாம் படிக்க முடியாதுப்பா. பொருளாதாரம் படிக்க தான் விருப்பம்.” தெளிவாகக் கூறி விட்டான்.
“ஏன்டா போயும் போயும் பீ.ஏ படிச்சுட்டு என்னடா பண்ணப் போற? இந்த காலத்துல ஆர்ட்ஸ் குரூப் படிக்கறவங்க எல்லாம் எந்த வேலைக்கும் போக முடியாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. உலகம் இன்டர்நெட், ரோபோன்னு எங்கையோ போகுது. இன்னமும் நீ உக்காந்து எகனாமிக்ஸ் படிக்கப் போறான்னு சொல்லற ?”

“பீ ஏ க்கு மேல படிப்பே இல்லையாப்பா ?”

எத்தனை விதமாக சொன்னாலும் மகன் பிடிவாதமாகத் தான் இருந்தான். நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருந்தான்.

“உனக்கு இருக்கற மார்க்குக்கு சயின்ஸ் குரூப் எடுப்பா . டாக்டர் ஆகலாம்.” பார்த்தவர்கள், தெரிந்த ஆசிரியர் எல்லாருமே அதைத் தான் சொன்னர்களேத் தவிர யாருமே எது படிச்சாலும் நல்லாப் படி. சாதிக்கணும். பெரிய ஆளா வரணும். நல்ல மனுஷனா இரு என்று சொல்லவே இல்லை.

“நீ டாப் ரேங்க் வாங்கி இருக்க. உனக்கு சயின்ஸ் குரூப் தான்” பிடிவாதமாக சொன்ன ஆசிரியையிடம் ,

“இல்ல மேம் எனக்கு சைன்ஸ் வேணாம்.” என்று இவனும் பிடிவாதமாக வேறு பிரிவு எடுத்துக் கொண்டான்.

தந்தையின் கனவு ,நம்பிக்கை சுக்கு நூறாக உடைந்துப் போனதில் மிகவும் கோபமாக இருந்தார் மகன் மீது. இருப்பினும் அவன் மீது கொண்டப் பாசம் அவரால் அவனிடம் பேசாமல் இருக்க முடிவதில்லை.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்தான். இப்போதும் நல்ல மதிப்பெண்கள்தான். அவன் கல்லூரிக்கு பணம் கட்டி விட்டு வந்தவருக்கு லேசாக இதயத்தில் வலி. மருத்துவம் , மருந்து , மாத்திரை எல்லாமே ஆரம்பித்து விட்டது. பெரிய வயது எல்லாம் இல்லை. நாற்பது ஐந்து வயது தான் ஆகிறது.

வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். இப்போதெல்லாம் அன்னை இவனிடம் முகம் பார்த்து பேசுவதில்லை. தேவையான உணவு சமைத்துக் கொடுப்பதோடு சரி. நான் என்ன தப்பு செய்தேன்? என்னால் ஒரு விஷயம் படிக்க முடியாது என்று நான் முடிவெடுத்தது இத்தனை பெரிய தவறா? மருத்துவன் ஆக விருப்பம் இல்லை என்று தானே பள்ளியில் கூட வேறு பாடப் பிரிவில் சேர்ந்தேன். அவர்கள் சொல்வதைத் தான் நான் செய்ய வேண்டுமா? இனி உன் முடிவுகளை நீ எடுத்துக் கொள்ளலாம். அரசு சொன்ன பதினெட்டு வயதுக்கு பிறந்த நாள் வந்து விடும். நீ நாட்டை தீர்மானிக்கலாம். அரசு சொன்னது. “

அதையே அன்னை வேறு விதமாக சொன்னார்.

“நீ தான் பெரிய மனுஷராகிட்டியேப்பா. இனி நாங்க எதுக்கு? இனி நீயே தான் எல்லா முடிவும் எடுக்கணும். நல்லதோ கெட்டதோ எங்களை கூப்பிடாதே.” கையெடுத்துக் கும்பிட்டார். இரவெல்லாம் பிழிய பிழிய அழுதான்.

கீர்த்தி தான் வந்து அவன் முகம் துடைத்தாள்.

“அண்ணா ! அழாத அண்ணா.” சொன்னவளும் தேம்பி தேம்பி அழுதாள்.

ஏன்? தெரியாது. தனக்கு உயிராவன் அழுகிறான். அதனால் தனக்கும் அழுகை வருகிறது.

“அண்ணா! நீ எதுக்கும் கவலை படாத. என்ன அம்மா அப்பாவுக்கு ஒரு டாக்டர் வேணும் அவ்ளோதான. நான் டாக்டர் ஆகறேன் . அப்பா உடம்பை நினச்சு கவலைப் படாத. ப்ளீஸ் அண்ணா!. எட்டாம் வகுப்பு படிக்கும் தங்கை பெரிய மனுஷியாக அண்ணாவின் முகத்தை மடியில் சாய்த்துக் கொண்டாள் . தங்கைக்காக அழுகையை நிறுத்தியவன். எழுந்து முகம் கழுவிக் கொண்டான்.

“நீ ஒன்னும் கவலைப் படாத. தூங்கு.” தங்கையை சமாதானம் செய்து விட்டு இப்போது அவளை தன்னுடைய மடியில் சாய்த்துக் கொண்டான்.

அன்னையோ காதல் கணவனின் உடல் நிலை இப்படியாகி விட்டதே என்று நினைத்து கவலையில் புரண்டு புரண்டுப் படுத்து தூங்கினோமா இல்லையா என்றுத் தெரியாமல் மறு நாள் எழுந்துக் கொண்டார். முதல் நாள் இரவில் பெற்றவர்களிடம் என்ன பேச வேண்டும் எப்படி வேண்டும் என்று ஒத்திகை செய்துக் கொண்டான். அம்மா அப்பா கிட்ட பேசக் கூட ஒத்திகை செய்து கொள்ள வேண்டுமா? அவனுக்கு மனதில் விரக்தி தான் வந்தது. எப்போது பெற்றவர்களுக்கும் தனக்கும் இத்தனை பெரிய பிளவு வந்தது? என்னக் காரணம் என்று தெரியும். ஏன் என்றும் தெரியும் . ஆனால் இது சரியா என்பதற்கு தான் இவனிடம் பதில் இல்லை. பெற்றவர்கள் பதில் சொல்லி விடுவார்கள். அதை இவனால் ஏற்றுக் கொள்ள முடியாது.

உடல் அயற்சியில் இருந்தவன் அப்படியே திரும்பிப் படுத்துக் கொண்டான். இடப் புறமாக திரும்பியவனுக்கு எதிரில் ஒரு பக்கம் பெற்றவர்களின் அறை. அதற்கு அடுத்து தங்கையின் அறை . இப்போதெல்லாம் யாரும் அறையை தாழிடுவதே இல்லை.

தங்கையும் அன்னையும் உறங்கி விட்டார்கள். அவர்களும் பாவம் இப்போது தான் சில மாதங்களாக உறங்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு புறம் தன்னால் பெற்றவர்களுக்கு கஷ்டம் என்றால் தங்கையின் வாழ்க்கை வீணானது மற்றொரு புறம்.

போதும் நிறுத்து உன் ஆர்ப்பாட்டத்தை. மனதை அடக்கி மூளை அவனை உறங்க வைத்தது.

 

 

=============================================

 சூர்யா விரைவாகவே கிளம்பி விட்டாலும் ஏதோ ஒரு லாரி விபத்து . அந்த இட்லிக்காக அவன் அங்கே கத்துக்க கொண்டிருந்ததால் இவன் தப்பித்திருக்கலாம். அல்லது அவன் மனைவியின் மாங்கல்ய பாக்கியம் கூட காரணமாக இருக்கலாம். யார் அறிவார்?

மதியத்திற்குள் மடி க்கேறி செல்ல வேண்டும் என்று நினைத்தால் இங்கேயே இத்தனை தாமதம். எத்தனை நேரம் தான் ஸ்டியரிங்கில் தாளம் தட்டிக் கொண்டு அமர்ந்திருக்க முடியும்? அலுலகத்திற்குப் பேச வேண்டிய அழைப்புகள், ஈ மெயில் எல்லாம் பார்த்து விட்டான். மனம், மூளை இரண்டுமே சும்மா இருந்தால் ஆபத்து தான். எல்லாருக்கும் அது பொது நியதி அல்ல.

தொழில் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு அந்த பக்கம் வந்த பள்ளிப் பிள்ளைகள் அவனது அலுவக சிந்தனையில் இருந்து சொந்த வாழ்விற்கு அழைத்துக் கொண்டுப் போனார்கள் .

யாரோ ஒரு பெண் கையில் ஒரு சின்ன பிள்ளையை பிடித்துக் கொண்டும் இடுப்பில் ஒரு சின்னக் குழந்தையுடன் தோளில் ஒரு பள்ளிப் பை . ரோஸ் நிறம். பார்பி படம் போட்டிருந்தது. அருகே இருந்த சின்ன பெட்டிக் கடையில் குழந்தை கேட்டது ஏதோ ஒரு தின்பண்டம் வாங்கிக் கொடுத்து பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

அடுத்து அவன் பார்த்தது வேறு ஒரு பள்ளிக் குழந்தை . அவளே இவனின் இடுப்பு வரை தான் இருப்பாள். அவள் அதை விட சின்னதாய் இருந்த இன்னொரு பிள்ளையை அழைத்துக் கொண்டு போனாள் .

தனக்கும் ஒரு பிள்ளை இருந்திருந்தால் இப்போது எத்தனை வயது இருக்கும்? திருமணம் ஆன போது இருந்த வேகத்திலேயே சென்றிருந்தால் நிச்சயம் ஒரு வயது இருக்கும். ஏனோ அந்த நினைப்பே அவனுக்கு முகம் சிவக்க வைத்தது.

துடிக்கும் இதயம் அவளுக்காக …

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page