சுவாசம் – 4

மயக்கத்திலிருந்து பெண்ணவள் சிறிய முனங்கலுடன் மெல்ல கண் விழிக்க, சத்தம் உணர்ந்து செல்லயிருந்த சத்தியன் கூட அங்கையே நின்று விட்டான்.

பின் சுற்றி விழிகளை சுழலவிட்ட பாவையோ தன்னதிரே நின்ற மூன்று பேரையும் மிரட்சியாக பார்த்துவிட்டு “நா..ன் நா..ன் எங்க இருக்..கேன்” என்று திக்கி திணறி கேட்டப்படி எழ முயல, கை காலை அசைக்க முடியாததில் “அம்மா” என்று கத்தி விட, 

அவளின் அருகில் விரைந்த இஷா “என்னாச்சி ரொம்ப பெயினாயிருக்கா” 

“கை கா..ல அசை..க்க முடி..யல வலிக்..குது” என்றதும் அவளின் கையையும் காலையும் அசைத்து பார்த்து எங்கவெல்லாம் வலியிருக்கிறது என்பதை கேட்டறிந்த இஷாவோ தன்னுடைய பையிலிருந்த பேண்டைட் எடுத்து அவளின் ஒரு கை மற்றும் காலில் சுற்றிவிட்டு தோளை தட்டி கொடுத்தவள் “பயப்பட ஒன்னும் இல்ல.. ஜஸ்ட் பிராக்ஸர் தான் நல்லா ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்.. அதுசரி கை கால் அடிப்படுறளவு என்ன நடந்துச்சு” என்றதை கேட்டு ஒரு நொடி முகம் சுருங்கியவள் “கீ..ழ கீ..ழ விழுந்..துட்..டன்” என்றவளுக்கு ஏனோ பயம் மட்டும் மட்டுப்படவில்லை.

அதனை உணர்ந்து அவளின் கையை பற்றி அழுத்தம் கொடுத்த இஷா “நீங்க சேப்பான இடத்துல தான் இருக்கீங்க.. உங்கள காப்பாத்திட்டு கூட்டிட்டு வந்தது இவரு தான்..” என்று அக்னியை கைகாட்டி கூறியவள் “சோ பயப்படாம நல்லா ரெஸ்ட் எடுங்க சீக்கிரம் சரியாயிடுவீங்க” என்றதை கேட்டு மெல்ல புன்னகைத்தவள் அக்னியை பார்த்து “தேங்க்ஸ்..” என்க, அவனும் அதனை ஏற்று கொண்டு தலையசைத்தான்.

அவளின் உடல் பயத்தில் நடுங்குவதை கண்ட சத்தியன், அவளை இயல்பாக்கும் நோக்கில் “ஹாய் ஸ்வீட் ஹார்ட்.. நான் சத்திய தேவன் உன்ன காப்பாத்தி கூட்டிட்டு வந்தானே அவனுக்கு அத்தை பையன் நண்பன் பிஏ எல்லாமே நான் தான்” என்று கூறியவனின் வார்த்தையில் சற்று கர்வமும் தென்ப்பட்டது.

அதைக் கேட்டு பெண்ணவள் புன்னகையை பதிலாக கொடுக்க, சத்தியனோ “உன் நேம் ஸ்வீட் ஹார்ட்” 

“பூவி..தழ்” என்றவளின் இதழ் மெய்யாலுமே பூவை போல் மென்மையாக இருக்க, அதில் தன்னை மீறியே அக்னியின் பார்வை பாவையின் இதழில் படர, அதிலிருந்து பார்வையை திருப்ப சிரமப்பட்ட அக்னி ‘என்ன பண்ணிட்டு இருக்க அக்னி” என்று தன்னை தானே கடிந்து கொண்டவன், கண்களை மூடி திறந்து தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டான்.

சத்தியன் அவளிடம் பேசுவதை கவனித்த இஷா ‘ஸ்வீட் ஹார்டாம் ஸ்வீட் ஹார்ட்.. என்னமா வழியுறான்’ என்று அவனை கண்டப்படி திட்டியவள், பூவிதழிடம் தன்னுடைய பெயரை கூறி அறிமுகப்படுத்தி கொள்ள, அவளின் பார்வையோ அக்னியை ஒரு கணம் பார்த்தது.

அவள் பார்ப்பதை உணர்ந்து தானும் பார்வையை நிலைக்க விட்டவன் திண்டாடி போனான்.

அவளின் பார்வை போன திசையை கண்டு கொண்ட சத்தியன் “ஹே ஸ்வீட் ஹார்ட்.. அவன் எதுவும் பேசாம அமைதியா இருக்கான் பாக்குறியா” என்றதுக்கு பெண்ணவளும் ஆமென்று தலையசைக்க,

“அவன் அப்படி தான் ஸ்வீட் ஹார்ட் பெருசா யார்டயும் பேச மாட்டான்.. எப்போவும் உர்ன்னு இஞ்சி தின்ன குரங்கு போல இருப்பான்.. அவன விடு நான் பேசுறேன்” என்றதை கேட்டு பெண்ணவள் சிரிக்க, அக்னியோ நண்பனை தீயாக முறைத்து கொண்டிருந்தான்.

அதனை அலட்டிகொள்ளாதவன் “ஸ்வீட் ஹார்ட் அவன் பேரு அக்னி தேவன்.. பேருக்கு ஏத்த போல ஆள் ரொம்பவே பயர்..” என்றதை கேட்டு அக்னியை பார்த்தவள், அவனின் பார்வையில் தெரிந்த நெருப்பை கண்டு ‘கரெக்ட்டா தான் பெயரு வச்சிருக்காங்க’ என்று தனக்குள்ளே சொல்லி பார்த்தவளின் இதழ் மெலிதாக விரிந்து மறைய, அதை அக்கள்வனும் கண்டு கொண்டான்.

சத்தியனோ விடாமல் பேசி கொண்டிருக்க, அக்னி தான் “சத்யா அத்தை கூப்பிட்டாங்க தான போய் பாத்துட்டு வா”

“நான் ஈவ்னிங் தான் வரேன் சொல்லிருக்கேன்.. கொஞ்சம் நேரம் ஸ்வீட் ஹார்ட்கிட்ட பேசுறேன்” என்றதை கேட்டு பூவிதழோ “இ..ல்ல எ..தா..வது முக்..கியமா இ..ருக்க போ..குது நீ..ங்க போ..ங்க நம்ம அப்..புறம் பேச..லாம்” என்றாள்.

அதில் முகம் வாடியவன் “நீ வேற அவங்க பாசமாலாம் கூப்பிடல ஸ்வீட் ஹார்ட் வீட்டுக்கு போனாலே கல்யாணம் கல்யாணம் டார்ச்சர் பண்ணுவாய்ங்க..” 

“ஏ..ன் கல்யா..ணம் பண்ணி..க்க இஷ்டம் இல்..லையா”

“பொண்ணு ஓகே சொன்னா நான் பண்ணிக்க மாட்டேனா சொல்லுறேன்..” என்றவன் இஷாவை பார்வையால் வருட, அவளோ கண்டும் காணாதது போல் இருந்து கொண்டாள்.

அவனின் பார்வை போன திசையும் பார்த்த பூவிதழோ “பாத்..தா தா..ன ஓகே சொல்லு..வாங்க”

“பாத்துட்டு தான இருக்கேன்.. சரி விடு உனக்கு என்ன பிடிச்சிருக்குன்னா சொல்லு ஸ்வீட் ஹார்ட்.. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று அவளை பார்த்து கண்ணடிக்க, அதில் பேவென்று விழித்த பூவிதழ் “என்..ன என்..ன சொ..ன்னீ..ங்க”

“ஏய் சில் ஸ்வீட் ஹார்ட் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் பயப்படாத” என்றதை கேட்டு பெண்ணவள் மெல்ல புன்னகைக்க, இஷாவோ அவனை முறைத்து வைத்தாள்.

இதில் சம்பந்தமே இல்லாமல் கடுப்பான அக்னி, அவனின் முடியை பிடித்து இழுத்து “ஒழுங்கா வீட்டுக்கு போயிட்டு ஆபீஸ் போ..” என்று அவனை துரத்த முயல, 

“வீட்டுக்கு ஈவ்னிங் போயிக்குறேன்.. இப்போ ஆபீஸ் வேனா போறேன்” என்றவன் அங்கிருந்து விடை பெற, இஷாவும் “சரி அப்போ நானும் கிளம்புறேன் டியூட்டிக்கு டைம் ஆயிடுச்சு” என்று தன் பையிலிருந்த அவளுக்கான கொண்டு வந்த மருந்து மாத்திரை எடுத்து, அக்னியின் கையில் கொடுத்தவள் “அண்ணா அவங்க சாப்பிட்டதும் இத கொடுத்துருங்க” என்றாள்.

அவள் போகிறேன் என்றதும் சங்கடமாக உணர்ந்த இதழை கண்டு கொண்ட இஷா “எதாவது வேணுமா உங்களுக்கு”

“அ..து அ..து” என்று பெண்ணவள் தயங்க,

அவளின் தயக்கத்தை உணர்ந்து கொண்ட இஷாவோ “பயப்படாதீங்க நான் ஈவ்னிங் மேல வந்து உங்கள பாத்துட்டு போவேன்.. அண்ணா இங்க தான் இருப்பார் உங்கள பாத்துப்பார்”

“ஏன் நீ..ங்க இங்..க தங்..க மா..ட்டீங்..களா” 

“இல்ல.. நான் ஹாஸ்டல்ல தான் தங்கியிருக்கேன்” என்றதை கேட்டு முகம் வாடிய பூவிதழ், அதற்கு மேல் எப்படி கேட்பதென்று தயங்கி அமைதியாகி விட, இஷாவும் அங்கிருந்து விடை பெற்று சென்றாள்.

இருவரும் சென்றதும் சமையல் அறைக்கு சென்ற அக்னி தட்டில் இட்லி வைக்க, பின் பெண்ணவள் கை காயம் உணர்ந்து இட்லியை பிய்த்து போட்டவன் ஒரு சிறிய பௌலில் சாம்பாரையும் வைத்துவிட்டு முள் கரண்டியையும் எடுத்து கொண்டு அறைக்குள் வந்து அவளிடம் கொடுக்க,

பெண்ணவள் அதனை வாங்காமல் தயங்கி நிற்க, அதில் “என்ன” என்று கேட்டவனின் வார்த்தை கறராக ஒலித்தது.

அதில் பயந்தவள் “ப்ர..ஷ் பண்..ண..னும்” என்று தரையை பார்த்து கூற,

பின் சாப்பாட்டை கீழே வைத்தவன் பெண்ணவளை கைகளில் அள்ளி கொள்ள, பாவம் பெண்ணவள் தான் அவஸ்த்தையில் நெளிந்தாள்.

“ஏய் இப்போ எதுக்கு நெளியுற.. உன்ன துரத்திட்டு வந்தவனுங்க கிட்ட காப்பாத்தும் போது கூட இப்படி தூக்கிட்டு தான் வந்தேன்” என்றும் பாவையின் நிலை மாறாததில் “ஊப்..” என்று இதழ் குவித்து ஊதியவன் “இப்போ நெளிஞ்சேன்னு வச்சிக்கோயேன்.. நானே பொத்துன்னு கீழ போட்டுருவேன்” என்றதில் பெண்ணவள் அரண்டு பயத்தில் அடிப்படாத கையால் ஆடவனின் சட்டையை அழுத்தி பிடித்து கொண்டாள்.

பின் குளியல் அறையினுள் அவளை இறக்கிவிட, இதழோ “இடுப்பு..ல கை வச்..சா கூச்..சமா இருக்கா..தா பி..ன்ன நெளி..யாம என்..ன பன்..றதாம்” என்றவள் ஆடவன் முறைத்ததில் கப்பென்று வாய் மூடிக்கொள்ள, 

“வெளிய தான் நிப்பேன் ப்ரஷ் பண்ணிட்டு கூப்பிடு” என்றுவிட்டு வெளியே வந்தவனோ பெண்ணவள் பதில் மற்றும் பாவனையை நினைத்து தலைகோதி புன்னகைத்து கொண்டான்.

அதன் பின், அவள் அழைக்கவும் மறுபடியும் தூக்கி வந்து படுக்கையில் அமர வைத்தவன் உணவு தட்டை நீட்ட, பெண்ணவளும் அடிப்படாத கையால் முள் கரண்டி பிடித்து சாப்பிட, ஆடவனோ தன் மடிக்கணினியை எடுத்து கொண்டு எதிரேயிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.

அவள் சாப்பிட்டு முடித்ததும் மருந்து மாத்திரை கொடுக்க, பெண்ணவளும் மறுக்காமல் வாங்கி போட்டு கொண்டாள்.

அதோடு தன் கடமை முடிந்தது என்று  சோபாவை நோக்கி செல்ல போன அக்னி பெண்ணவள் “சா..ர்” என்ற அழைப்பில் நின்று திரும்பி என்னவென்று நோக்கினான்.

அவன் பார்ப்பது உணர்ந்தும் நிமிர்ந்து பாராத பாவையோ “சா..ரி.. என்..னால உங்க..ளுக்கு தேவை..யில்லா..த சிர..மம்..ல” என்று திக்கி திணறி கூறி முடித்திருக்க, 

அதில் என்ன நினைத்தானோ தெரியவில்லை பெண்ணவளின் கையை தட்டி கொடுத்து “கண்டத யோசிக்காம சீக்கிரம் சரியாகி வந்து எனக்கு பணிவடை செய்” என்றதை கேட்டு “ஹான்..” என்று விழிக்க,

“என்ன ஹான்.. உனக்கு சரியாகவே எப்படி ஒரு மாசாமாகும் அதுவரை நான் பாத்துக்குவேன்.. அப்புறம் நீ எனக்கு வாய்க்கு ருசியா சமைச்சி போட்டு பணிவிடை செய்.. கணக்கு கழிஞ்சிடும்” என்றுவிட்டு “ஆமா சமைக்க தெரியும் தான” என்றதை கேட்டு அவனையே மிரட்சியாக பார்த்தப்படி ஆமென்று பெண்ணவள் தலையாட்ட,

“குட்.. டேக் ரெஸ்ட்” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் மடிக்கணினியில் தலைவிட்டு விட, அவளும் படுத்து உறங்கி விட்டாள்.

****

மாலை போல் வேலையை முடித்துவிட்டு வேண்டா வெறுப்பாக வீட்டிற்குள் நுழைந்தான் சத்தியதேவன்.

சோஃபாவில் அவனின் ரெண்டாம் அத்தை யசோதை பூக்கட்டி கொண்டிருக்க, அவரின் அருகில் அமர்ந்த சத்தியன் “அத்தை அம்மா எங்க” என்றும் அவர் அமைதியாக இருந்ததில், அவரை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன் “இப்போ எதுக்கு என்கிட்ட முகத்தை தூக்கி வச்சிருக்க” என்க,

அவனின் கையை தட்டிவிட்ட யசோதை “நீ பண்ற எதுவுமே எனக்கு பிடிக்கல சத்யா.. எப்போவும் அவன் பின்னாடியே சுத்திட்டு திரியுற.. உன் கேரியர் பத்தி யோசிக்கவே மாட்டியா”

“என்ன அம்மா உன்கிட்ட பேச சொல்லி கோல் மூட்டுச்சா” என்றதும் முறைத்த யசோதை “அவ ஒன்னும் சொல்லல.. நானே தான் சொல்லுறேன் சத்யா..”

“உனக்கு என்னாச்சி அத்தை.. அக்னிக்கு அம்மா பாசத்த ஊட்டி வளத்தவளே நீ தான்.. ஆனா நீ இப்படி மாறுவேன்னு கொஞ்சம் கூட நினைக்கல” என்றவனின் வார்த்தையோ வருத்தமாகவே ஒலித்தது.

அவனின் கூற்றில் விரகத்தி புன்னகையை வீசியவர் “நான் மாறிட்டேனா” என்று இரு பக்கமும் தலையாட்டி “அவன் என்ன மாத்திட்டான்” என்று முடித்திருந்தார்.

அந்நேரம், அவ்விடம் வந்த சத்தியனின் தாய் ஆதிசக்தி “என்ன யசோ சொல்றான்.. உன் மருமகன்” என்றப்படி அவரின் அருகில் அமர, 

“அத்தைய பேச்சவிட்டுட்டு உள்ளயிருந்து ஒட்டு கேட்டுருப்ப தான ஏதோ தெரியாத மாதிரி கேக்க வேண்டியது” என்று சலித்து கொண்டு “எதுக்கு ஃபோன் போட்டு வா வான்னு டார்ச்சர் பண்ற..”

“ஆமாடா உனக்கு நல்லது பண்ணி பாக்கணும் நினைக்கிற நான் டார்ச்சரா தான் தெரிவேன்.. சரி இருந்துட்டு போகட்டும் போன வாரமே சொன்னது நினைவு இருக்கு தான நாளைக்கு பொண்ணு பாக்க போகனும்” 

“நான் தான் எந்த பொண்ணு பாக்க விரும்பலன்னு சொல்லிட்டன் தான.. பின்ன எதுக்கு என்ன இம்சை பண்ற.. உண்மையிலயே நான் சந்தோசமா இருக்கணும் அக்கறை இருந்தா உன்னோட தேவையில்லாத எண்ணத்த தூக்கி தூர போட்டுட்டு.. என் இஷாவயே எனக்கு கட்டி வை சந்தோசமா நாளைக்கே கூட கல்யாணம் பண்ணிக்குறேன்”

“உனக்கு பைத்தியம் முத்தி போச்சாடா.. அவளே ஒரு..” என்றதை கேட்டு, அவர் கூற வருவதை கணித்தவன் முடிப்பதற்குள் “அம்மா” என்று கற்சித்து எழுந்து நிற்க,

தானும் அவனுக்கு நிகராக எழுந்தவர் “இல்லாதது ஒன்னும் சொல்லல இருக்கிறத தான சொல்ல வந்தேன்.. இங்க பாரு சத்யா இந்த வீட்டுக்கு மருமகளா இருக்க தகுதி வேணும், அது அவளுக்கு இல்ல.. அத புரிஞ்சிக்கிட்டு அவள தலை முழுக்கிட்டு நான் சொல்லுற பொண்ணு கழுத்துல தாலி கட்டு”

“முடியவே முடியாதுமா” என்று கத்தியவன் டீபாயில் அழகுக்காக வைத்திருந்த பூ ஜாடியை தூக்கி கோவத்தில் தரையில் வீசிவிட்டு “இது தான் முதலும் கடைசியும் இதுக்கு அப்புறம் இஷாவ உங்க மருமகளா ஏத்துக்கிட்டா மட்டும் என்கிட்ட கல்யாணம் பேச்சு பேசுங்க.. அதுவரை இந்த வீட்டு பக்கம் தலை வச்சி கூட படுக்க மாட்டேன்” என்று செல்ல போனவன், 

மறுபடியும் பின்னோக்கி வந்து “என்ன சொன்னீங்க இஷாவுக்கு இந்த வீட்டுக்கு மருமகளா வர தகுதி இல்லையா.. ஆனா அம்மா எனக்கு பொண்டாட்டியா வருர தகுதி அவள தவிர யாருக்கும் இல்ல.. காட் இட்” என்று உறுமியவன் அங்கிருந்து நண்பனின் இல்லத்தை நோக்கி சென்றான்.

***

மருத்துவமனையிலிருந்து அக்னியின் வீட்டிற்கு வந்த இஷா, இதழிடம் நலம் விசாரித்துவிட்டு வெளியே வந்தவள், உள்ளே நுழைந்த சத்தியனை கண்டு பதறி துடித்தே விட்டாள்.

சுவாசம் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page