வீட்டுக்கு வந்த தனது பெற்றவர்களையும்,தங்கையையும் அவளது பத்துமாத குழந்தையையும் கண்டவனுக்கு மனதில் விவரணம் செய்யவியலாத சந்தோஷம் பேராழியாக சுழற்றியது. கடந்த நாட்களில் குழந்தைக்காக மருத்துவமனையில் வாசம் செய்ததில் மனதளவில் வெகுவாக துவண்டு இருந்தவனுக்கு, வெயிலில் காய்ந்த வாடிய செடிக்கு ஊற்றிய நீரைப்போல குளுமையான உணர்வு என்று சொல்லலாமா?
அப்படித்த்தான் இருந்தது. குழந்தை தியாவுக்கு தன்னைவிட குட்டியாக, மென்மையான சிறு கை கால்களுடன்,புதியதாக முளைத்திருக்கும் இரு பால் பற்களுடன், வேகமாக தவழ்ந்து தனது அருகே வரும் கொழுக் மொழுக் குழந்தையை பார்த்து ஆரவாரம் தான்.
குழந்தையை பார்த்த வேகத்தில் அவளது ஏக்கங்களும், சந்தனா பற்றிய எண்ணங்களும் பின்னே சென்று விட்டிருந்தது. பொம்மைபோல், வெள்ளை வெளேரென்று தன்னருகே வரும் குழந்தை அதனை மடியில் தான் வைத்துக் கொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கத்தொடங்கி விட்டாள்.
மடியில் குழந்தையை வைத்திருக்கும் ரோஷினியிடம் அவள் தோள் வளைவில் சாய்ந்து கொண்டு அத்தையை சொந்தம் கொண்டாடும் தியாவின் மனம் , அத்தையிடம் அம்மாவை சலுகையாக தேடியது.ரோஷிணியும் அண்ணனின் மகளை புரிந்தவளாக தயாவை தன்னுடனே இருத்திக்கொண்டாள்.
தனது குழந்தைக்கு குளித்துவிடும் பொழுதும்,உணவு ஊட்டும் பொழுதும்,தூங்க வைக்கும் பொழுதும்,விளையாடும் பொழுதுகளிலும் தயாவை தன்னுடைய மூத்த மகளாக பாவித்ததில் குழந்தை தயாவின் மனதில் முளைத்திருந்த அம்மா ஏக்கம் மட்டுப்பட்டது.
வீட்டுக்கு வந்த பெரியவர்களுக்கும் கூட தயாவின் நிலைமையை யோசித்து மனக்கஷ்டம் தான்.மகனது பிடிவாதத்தால் ஒரு திருமணம் ,இப்போது குழந்தையின் நிலைமை? அவர்கள் இருவருக்கும் திவ்யாவை நினைத்து அப்படியொரு கோவமும், கசப்புணர்வும் வளர்ந்து விட்டிருந்தது.
முன்பாவது தங்கள் மகனின் நிலைமை மட்டும் யோசித்தவர்கள்.தயாவை நினைத்து வருத்தம் கொஞ்சமாக உண்டு.இப்போது மகனை விட பேத்தியின் நிலைமையை பார்க்கும்பொழுதும் உணர்ச்சிபூர்வமாக அவர்களுக்கு திவ்யாவின் மீதான வெறுப்புணர்வு அதிகமாகிக்கொண்டே வந்தது.
ரோஷினியிடம் தயா தனக்கான அம்மாவை தேடுவதை,அவளது ஏக்கத்தை புரிந்து கொள்ள முடிந்தவர்களால் தங்கள் மன உணர்வுகளை நிச்சயம் கட்டுப்படுத்த இயலாது.
தயாவின் பாட்டி தாத்தா இருவருக்குமே அவளது தேடல் கண்ணில் நீரை வரவழைத்தது. மகன் மீதும் கோவமாக வந்தது. பெற்றவர்கள் தங்கள் இருவருக்குமான பிரச்சனையில் இந்த சிறு குழந்தையின் உணர்வுகளுடன்,ஆசைகளுடன் விளையாடுவதும்,அவளது ஏக்கம் அதிகமாவதையும் வீட்டின் பெரியவர்களால் அனுமதிக்க முடியவில்லை.
அந்த பெண்ணும் இன்னொரு உறவுக்குள் நுழைந்துவிட்டாள் என்னும்பொழுது அவளை திரும்ப வீட்டுக்கு அழைத்து வருவதும் நடக்க முடியாத ஒன்று. ஏற்கனவே,தயா சிறு குழந்தை என்றும் நினைத்து பார்க்காமல், குடும்ப அமைப்பை,கணவனை அதை விட பெற்ற குழந்தையை விட்டு,’தனது சுதந்திரம் முக்கியம்.வேலைதான் முக்கியம் என்றெல்லாம் பிதற்றிவிட்டு வீட்டை விட்டு சென்றுவிட்ட பெண்ணின் மீது மரியாதைக்கு வழி இல்லை.அவளை மீண்டும் இந்த குடும்பத்துக்குள் அழைத்துவருவதும், நம்புவதும் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றெல்லாம் பெரியவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
“ம்மா, நாம கிளம்பும் முன்னால அண்ணாவுக்கு பெண் பார்த்து திருமணம் செஞ்சு வச்சிடலாம். ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்து ஆனவங்க, கணவனை இழந்தவங்கன்னு இருந்தாலும் பரவாயில்ல . ஏற்கனவே ஒரு குழந்தைக்கு அம்மாவா இருந்தாலும் சரி. நம்ம தயாவை நல்லா பார்த்துக்ககுற மாதிரி,குடும்பத்தை அதன் அஅமைப்பை மதிக்கிறா மாதிரி தேடுவோம். அண்ணாவும் எவ்ளோ வருஷம் தனியா இருக்க முடியும்? என்றாள்.
ரோஷினி சொல்வதில் இருக்கும் உண்மை புரிந்தவர்கள் அவளிடம்,”நீ சொல்லுறதும் சரிதான். நம்ம அளவுக்கு வசதியானவங்களா இல்லாம போனாலும்,பெண் நல்லவளா இவனையும் நம்ம தயாவையும் நல்ல முறையில பார்த்துக்குறவளா இருந்தாலே போதும். யோசிக்கணும்.நிறைய யோசிக்கணும்.அவன்கிட்ட பேசி புரியவும் வைக்கணும்.பெண் தேடணும்.ஹ்ம்ம்… செய்யலாம்” என்றுவிட்டு இருவரும் தங்கள் அறைக்கு சென்று விட்டார்கள்.
ரோஷினியின் முன்னெடுப்பில் தயா வீட்டின் அருகே இருக்கும் சிறார் பள்ளியில் சேர்க்கப்பட்டாள். மதியம் வரை அங்கே இருந்துவிட்டு வீட்டுக்கு வருவாள். விஜயனின் அம்மா குழந்தைக்கு மதிய உணவு ஊட்டி, கொஞ்சநேரம் தூங்க வைப்பதும், மாலையில் தயா தனது அத்தை ரோஷினி, குட்டி குழந்தையுடன் விளையாடுவதும் வழக்கமானது.
இரவு தனது அப்பாவுடனான நேரத்தை மட்டும் சின்னசிட்டு மாற்றிக்கொள்வதாக இல்லை. இப்போது நடப்பவை விஜயனை நிம்மதியாக மூச்சுவிட அனுமதி கொடுத்திருக்கிறது. பாரம் குறைந்த உணர்வு. தனியாளாக வேலையில் அதிகமாக கவனம் செலுத்த முடியாமல் குழந்தையையும் சரியாக கவனிக்க முடியாமல் பெரும் திண்டாட்டத்தில் இருந்தவனுக்கு தனது பெற்றவர்களின் வரவு பெரிய வரமே! அதோடு ரோஷினி தயாவிடம் நடந்துகொள்ளும் விதமும்,அவளது பாசமும் அவனை நெகிழ செய்திருந்தது.குழந்தையின் தேடலை அவனும் கவனித்துக்கொண்டுதானே இருக்கிறான்.
குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாத பொழுது தான் பட்ட அவஸ்தை என்ன , இப்போது நினைத்தாலும் அந்த நிலைமை மனதுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. வீட்டின் பெரியவர்கள் அவனிடம் பேசுவதற்கு சரியான நேரத்தை பார்த்து காத்திருந்தார்கள்.
விஜயன் வீட்டுக்கு வருவதற்கு அதிக தாமதம் ஆனது. அலுவலகத்தில் வருடத்தின் மூன்றாவது காலாண்டுக்கான அறிக்கைகளை தயார் செய்து, கம்பெனி நிர்வாகிகளுடன் சேர்ந்து அறிக்கைகள் தயாரித்து, அதை ஆடிட்டர் மற்றும் கம்பெனி செக்ரெட்டரியுடன் அமர்ந்து ஆலோசனை செய்து என்று நேரம் சரியாக இருந்தது. மூச்சு விடவும் நேரம் இன்றிதான் அவனது வேலைகள் அவனை இழுத்துக்கொண்டது. தயா தனது அப்பாவை சரியாக பார்க்க முடியாமல் ஏங்கினாள்.என்னதான் வீட்டில் பாடி தாத்தா அத்தை எண்டு இருந்தாலும் இத்தனை வருஷங்களாக தந்தையின் முகத்தை மட்டுமே பார்த்து வளர்ந்தவள் அவள். திடீரென இப்படி அப்பாவை பார்ப்பதே பெரிய விஷயம் என்று ஆவதை அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை.. அடம் பிடிப்பதையும் அழுவதையும் தவிர்த்து அப்பாவை பார்க்க வேறு வழியில்லை என்று நினைத்துக்கொண்டாளோ என்னவோ அதிகமாக அழுதாள்.சொல்வதை கேட்காமல் பிடிவாதம் பிடித்தாள்.
விஜயனின் பெற்றவர்களுக்கு புரிந்தது. புரிந்த விஷயத்தை குழந்தையிடம் சொல்ல முடியாது. குழந்தையின் தகப்பனிடம் பேச நேரம் அமையவில்லை.
ஒருவழியாக தீபாவளிக்கு முன்பாக தனது வேலைகளை முழு மூச்சுடன் முடித்தவன் குடும்பத்துடன் ஒரு வாரத்திற்கு கொடைக்கானல் சென்று வர தீர்மானித்தான்.அவர்களது பூர்வீகம் அங்குதான். ஆனந்துக்கு அங்கே சொத்துக்களும் இருக்கிறது. எல்லோருமாக கிளம்பினார்கள்.குழந்தைக்கு அப்பாவுடனேயே நாள் முழுவதும் என்றடவுடன் சுற்றி இருப்பவர்களை கூட மறந்து அப்பவுடனேயே ஒட்டிக்கொண்டு சுற்றினாள். சாப்பிடவும்,தூங்கவும் குளிக்கவும் என்று அவளது அப்பாவுக்கான தேடல் அதிகமாக இருந்தது. அதை புரிந்துகொண்டவனும் மகளை விட்டு நகர்ந்தானில்லை.மற்றவர்களுக்குமே புரிய அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பா -மகள் உறவுதான் எத்தனை அழகு?பெரும்பாலும் ஆண்களுக்கு தங்களது பெண் குழந்தை என்றால /மனைவியை கோவம் கொள்ளும் ஆண்கள் கூட தனது மகள்களிடம் தணிவாக அன்பாக பேசுவதையும் பார்த்திருக்கிறேன்.
நம் தயாவும் கூட டாடி ‘ஸ் லிட்டில் பிரின்சஸ் “தான்.
கொடைக்கானலுக்கு செல்வதற்கு முன்பு மதுரையில் தங்கி ஆலயங்களை தரிசித்துவிட்டு பிறகு மீண்டும் கொடைக்கானல் நோக்கி அவர்களது கார் வேகமெடுத்தது.
சென்னையில் சந்தனாவின் வாழ்க்கை எந்த சிக்கலும் இல்லாமல் வழக்கமாக சுற்றும் சக்கரம் போலத்தான் சென்றுகொண்டிருந்தது. அவள் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டு இருந்தாள். அவளது பொறுமையை பார்த்து வி ஐ பி தளத்தில் சேர்க்கப்பட்டிருந்த அமைச்சரின் தம்பியின் குடும்பம் பத்து நாட்களுக்கு அவளை நோயாளியை கவனித்துக்கொளவென்று மருத்துவ மனை நிர்வாகத்தில் கேட்டு அவளை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். பகல் நேரத்தில் மட்டும் அங்கே இருப்பேன்.இரவுக்கு வேறு ஒருவரை நியமித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லித்தான் அவள் அவர்கள் வீட்டுக்கு சென்றதே! அதன் படிக்கு இரவு நேரத்தில் மற்றொரு நர்ஸ் நியமிக்கப் பட்டிருந்தார்.
காலை நேரத்தில் அவர்கள் வீட்டிலிருந்து கார் வந்து இவளை அழைத்து செல்லும்.மாலையில் அவர்களே வீட்டுக்கு கொண்டுவந்து விட்டு விடுவார்கள்.
இந்த விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து மருத்துவன் அரவிந்துக்கு ,அந்த பெண்ணை காதலிப்பவனாக அசூயைகிளம்பிவிட்டது. இவளுக்கு எதற்கு இந்த வேலை?அடுத்தவர் வீட்டுக்கு சென்று சேவை செய்யவில்லை என்றால் என்னவாகிவிடும் ?என்றெல்லாம் புழுங்கினான். அவனால் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவளோ மறந்தும் இவனை பற்றி யோசிப்பது இல்லை. தன் வேலை உண்டு. தான் உண்டு என்று இருந்து கொள்பவளிடம் பேசுவதற்கு கூட இயல்பில் அவள் வாய்ப்பு அளிக்கவில்லை.
அரவிந்தனின் வீட்டில் வேறு அவன் அம்மா இவனை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திக்கொண்டே இருக்க, மனம் கலங்கி இருந்தான் அரவிந்த்.மனதில் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு மற்றொரு பெண்ணுக்கு தாலி அணிவித்து எப்படி குடும்பம் செய்வாய் ?என்று அவனை திட்டிய மனதையும் அடக்க அவனால் இயலவில்லை.
அவன் தங்கை திருமணம் செய்து கொடுத்த வீட்டிலிருந்து உறவுக்கார பெண்ணுக்காக இவனை கேட்க இவனது அம்மாவின் இவன் மீதான அழுத்தம் கூடிக்கொண்டே சென்றது.எவ்வளவு தூரம் என்றால்,பல நேரங்களின் வேலை இருக்கிறது என்று வீட்டில் சொல்லிவிட்டு மருத்துவமனையிலேயே தங்கிவிடும் அளவுக்கு.
காதல் துன்பம் ஒருபக்கம், வீட்டின் அழுத்தம் மறுபக்கம் என்று தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினான் அரவிந். சந்தனாவின் வீட்டுக்கு சென்று பார்க்கும் துணிவும் இல்லை. அவளுக்கு தனது காதலை புரியவைக்கவும் தெரியவில்லை.அவளது வீட்டில் சென்று திருமணம் செய்துகொடுக்க கேட்கவும் தைரியம் இல்லை. கூடவே நிலைமையை கையாளும் பக்குவமும் பொறுமையும் இல்லை. அவனிடம் இருப்பது அவள் மீதான ஈடுபாடு மட்டும்தான்.இதை காதல் என்று என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
