முரடன் 10

பகுதி 10

“என்னடி இப்படி திடீர்னு சொல்ற, இந்த மாசம் முழுக்க நீ வேலைக்கு வருவேனு நினைச்சேன்” என வருத்தமாக கூறிய தோழியிடம்…

“மேரேஜுக்கு இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு. அதனால இனிமே வேலைக்கு போக வேண்டாம்னு அப்பா சொல்லிட்டாரு. அதான் இன்னைக்கே கடையில சொல்லிட்டு போயிட்டலானு நினைக்கிறேன்” என்றாள் ரூபிணி.

“ஏய் ரூபி, அட்லீஸ்ட் இன்னும் ரெண்டு நாளைக்கு மட்டுமாது வாடி. நீயும் நானும் எங்கயாவது வெளியில போயிட்டு வரலாம்” என அவள் கூற…

“இல்ல பவி, அப்பா இன்னைக்கே போக வேண்டாம்னு சொன்னாரு. நான்தான் ஒரு நாள் தானேப்பா… போயிட்டு நேரிலேயே சொல்லிட்டு வந்துடறேன்னு கிளம்பி வந்தேன். இன்னும் ரெண்டு நாள்னா கண்டிப்பா அப்பா விடமாட்டாங்க” எனக் கூறினாள்.

“சரிடி, நீ ஓனர்ட்ட சொல்லிட்டு கெளம்பு. நானும் லீவ் போட்டுட்டு வரேன் ரெண்டு பேரும் அப்படியே ஜாலியா எங்கயாவது சுத்திட்டு வீட்டுக்கு போகலாம் சரியா” என்ற பவித்ராவிடம்…

“அய்யோ அதெல்லாம் வேணாம்டி. அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாரு” என்றாள் ரூபி பயந்தவாறு.

“அடியேய் அவருக்கு தெரியாமெல்லாம் எங்கேயும் போக போறதில்ல. நானே போன் பண்ணி அவர்கிட்ட சொல்லிடுறேன். நீ போய் ஓனர்கிட்ட சொல்லிட்டு வா போ” என்று கூறியவள், ரூபிணின் தந்தைக்கு அழைத்து விஷயத்தைக் கூற அவரும் சரி என்றிருந்தார்.

பிறகு மேனேஜரிடம் விடுப்பு தெரிவித்தவிட்டு வந்த பவித்ரா, ரூபிணியை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.

“பவி, இப்ப நம்ம ரெண்டு பேரும் எங்க போக போறோம்” என ரூபிணி கேட்க…

“அப்படியே டவுன் வரையிலும் போய், ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வருவோம் வா” என்றாள் அவள்.

“டவுனுக்கா.. அங்க தாண்டி அவர் கடை வைச்சிருக்காரு” ரூபிணி கூற…

“ரொம்ப நல்லதா போச்சு, அதான் இப்ப வரையிலும் அவரை பார்க்கவே இல்லையே. அப்படியே அவரையும் பார்த்துட்டு வந்துருவோம் வா” என தோழியை அழைத்துக் கொண்டு பேருந்தில் ஏறினாள் பவி.

சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்த இருவரும், அருகில் இருந்த உணவகத்திற்கு சென்று சாப்பிட்டுவிட்டு.. அப்படியே அருகில் இருந்த கடைகளில் சுற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது… முக்கியமான வேலையை முடித்துவிட்டு அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த பைரவன் அன்று கடையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்தவனை பார்த்து விட… ஆத்திரத்தில் அவனை அடித்து துவைத்து கொண்டிருந்தான்.

அவன் அடிப்பதை கூட்டமாக நின்று, மக்கள் பார்த்துக் கொண்டிருக்க…

அதை கவனித்த ரூபிணி… “அங்க என்னடி கூட்டம்” என தோழியுடன் அவ்விடம் சென்றாள்.

“விட்ருங்க சார், வலிக்கிது சார்.. விட்டுருங்க” என்று தோய்ந்த குரலில் அந்த நபர் பைரவனிடம் கெஞ்ச.. அவன் பேச்சை காதில் வாங்காமல் வெறிபிடித்தவன் போல் அவனை தாக்கிக் கொண்டிருந்தான் பைரவன்.

அதை பயந்தவாறு பார்த்த… ரூபிணி., “ஹே பவி, இவன் அன்னைக்கு நம்ம கடையில ஒரு பொண்ணுகிட்ட” என்றவள், “அவன்தானே அது” என்றாள் வேகமாக.

“ஆமாடி, இது அவன்தான்” என்றாள் அவள்.

ரூபிணி… “அவங்க அத்தை சொன்ன மாதிரியே, சரியான ரவுடி பயதான் போல. எப்படி மனசாட்சியே இல்லாம, அந்த ஆளை அடிச்சிட்டு இருக்கா பாரேன்” என முகத்தை சுளித்தவள், “இவன மாதிரி ஆளுங்களையெல்லாம்… போலீஸ்ல சொல்லி, முட்டிக்கு முட்டி தட்டனும்” என்றாள் வெறுப்பாக.

உடனே பவி… “ஆமா, அப்படியே உள்ள புடிச்சு போட்டு, தட்டிட கிட்டிட போறானுங்க, காசு பணம் இருக்கவங்கலை எல்லாம் என்னிக்கிடி போலீஸ் பிடிச்சிருக்கு” என சலித்தக் கொண்டவள்… “நம்ம வந்த வேலையை பார்ப்போம் வாடி” என தோழியை இழுத்துச் சென்றாள்.

பைரவனை திரும்பிப் பார்த்துக் கொண்டே தோழியின் இழுப்புக்கு சென்றவள், இவனைத்தான் மணந்து கொள்ளப் போகிறோம் என்று தெரியாமலே.. மனதில் அவனை திட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு முறை ரூபிணி பைரவனை பார்க்கும்போதும் அவன் தவறானவன் என்ற பிம்பமே அவன் மேல் விழ… அதை அறியாத பைரவன்… அந்த நபரை நன்றாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த வைரம், அவனைப் பார்த்து அதிர்ந்தாள்.

“ஐயோ… எதுக்கு இவர் அந்த ஆளை போட்டு, இப்படி அடிச்சிட்டு இருக்காருன்னு தெரியலையே” என பதட்டமடைந்து, உடனே ப்ரசாந்த்துக்கு அழைத்து விஷயத்தை கூற… பத்து நிமிடத்தில் அவ்விடம் வந்து சேர்ந்திருந்தான் ப்ரசாந்த்.

நடு ரோட்டில் நண்பன் செய்யும் சாகசத்தை பார்த்து, தலையில் அடித்துக் கொண்டு, “பைரவா… பைரவா… டேய் அவனை விடுடா” என இடையில் புகுந்து தடுத்தவன், அடிபட்டவனை மறைத்துக் கொண்டு நிற்க..

“டேய், ஒழுங்கா தள்ளிப்போயிடு. இல்ல உனக்கும் சேர்த்து அடி விழும்” என்று நண்பனை எச்சரித்த பைரவன்.. அக்னியின் வெப்பத்தை எதிரொலித்தான்.

ஆனால் அதனை பொருட்படுத்தாத ப்ரசாந்த்… “பைரவா, எதுக்குடா இப்படி நடுரோட்டில சண்டை போட்டுக்கிட்டு இருக்க.. யாருடா இவன்” எனக் கேட்க…

“இவன்தான்டா அன்னைக்கு கடையில அந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிட்டவன்” என்றான் பைரவன் பற்களை கடித்துக் கொண்டு.

“என்னடா சொல்ற, அவனா இது” என்ற ப்ரசாந்த், நன்றாக உற்றுப் பார்க்க… சட்டையெல்லாம் கிழிந்து, முகம் முழுவதும் ரத்தம் சிந்த, மயங்கி கிடந்தவனை…, அவனுக்கு சரியாக அடையாளம் தெரியவில்லை.

அதனால் கண்களை தேய்த்துக் கொண்டு மீண்டும் பார்த்த ப்ரசாந்த்… “அன்னைக்கு வேற மாதிரி இருந்தானே” என யோசித்தவன், “அடையாளம் தெரியாத அளவுக்கு அடிச்சி மூஞ்ச வீங்க வச்சிருக்கியேடா… பார்த்ததும் போலீஸ்ட்ட சொல்ல வேண்டியதானே. அத விட்டுட்டு இப்படி அடிச்சிருக்க” எனக் கூற.. நண்பனை கொலை வெறியில் முறைத்தான் பைரவன்.

“சரி முறைக்காதே” என்ற ப்ரசாந்த், உடனே போலீஸிற்க்கு அழைத்து கூற..

இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை, தள்ளி நின்று படபடப்பாக பார்த்து கொண்டிருந்தாள் வைரம்.

அப்போது அங்கிருந்த முதியவர் ஒருவர்… “பொறுக்கி பய, குடிச்சிட்டு.. இப்படி நடுரோட்டில ஒருத்தனை போட்டு அடிக்கிறானே” என பைரவனை வசைபாட,

அதைக் கேட்டு கோபமடைந்த வைரம்… “நீங்க பாத்தீங்களா, அவர் குடிச்சதை” என்றாள்.

“ஆமா.. பாத்தாதான் சொல்லனுமா… அதான் அவன் மொகரலையே எழுதி ஒட்டி இருக்கே. சரியான குடிகார பையனு” என அவர் கூற…

“ஓ.. உங்களுக்கு முகத்தை பார்த்தே ஜோசியம் சொல்ற வித்தையெல்லாம் தெரியுமா” என போலியாக வியந்தவள், “அப்படியே கண்ணாடில போய் உங்க முகத்தையும் பாத்து, நீங்க எப்படிப்பட்டவர்னும் தெரிஞ்சுக்கோங்க” என்றாள்.

உடனே அவர்.. “ஏம்மா இப்ப நான் என்ன சொல்லிட்டன்னு வயசுல பெரியவன்னு கூட பாக்காம என்கிட்ட இப்படி பேசுற” என அந்த முதியவர் கேட்க…

“ஒருத்தரைப்பத்தி எதுவும் தெரியாம இப்படி வாய்க்கு வந்ததை பேசுரவங்ககிட்ட வேற எப்படி பேசுவாங்க…. போய் வேலையை பாருங்க” என ஆத்திரமாக கூறிய வைரம், பைரவனையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதை கவனித்த அந்த முதியவர், “இந்த காலத்து பிள்ளைங்களுக்கெல்லாம், இந்த மாதிரி பொறுக்கிகளை தான் பிடிக்கும் போல” என புலம்பியவர், தலையில் அடித்து கொண்டே சென்றார்.

அதேநேரம் போலீஸ் அங்கு வர… அந்த நபரை அவர்களிடம் ஒப்படைத்த பைரவன்.. அன்று நடந்ததை கூறி வீடியோ ஆதாரத்தையும் காட்ட, அவனை கைது செய்த காவல் அதிகாரி.., “பாதிக்கப்பட்ட பொண்ணை ஒரு கம்ப்ளைன்ட் மட்டும் எழுதிக் கொடுக்க சொல்லுங்க சார்” என்றார்.

“இல்ல சார், அது ஸ்கூல் படிக்கிற பொண்ணு. அதனால அந்த பொண்ண இதுல இழுக்க வேண்டாம். நாங்களே கம்ப்ளைண்ட் கொடுக்கிறோம்” என்ற பைரவன், காவல் நிலையத்திற்கு சென்று, அவன் பெயரில் புகார் அளித்தான்.

பிறகு பைரவன், நண்பனிடம் விடை பெற்றுக்கொண்டு, அலுவலகம் சென்றுவிட… வைரத்தை தேடி வந்தான் ப்ரசாந்த்.

அவன் அருகில் வந்ததும்.. “என்ன மாமா பிரச்சனை எதுக்கு அவர் அந்த ஆளை அடிச்சாரு” என பதட்டமாக கேட்டாள் வைரம்.

“அதை ஏன் கேக்குற” என்ற ப்ரசாந்த் அன்று நடத்தையை கூற…

“டேய் முரடா நிஜமாவே நீ கிரேட்டுடா”.. என எண்ணி மெல்லிய புன்னகை புரிந்தாள். உடனே அவளது உள்ளம்… “ஆனா அந்த கிரேட்டான மனுஷன் உனக்கு கிடைக்கப் போறது இல்லை” என கூறிட… முகம் வாடி நின்றாள்.

இதையெல்லாம் கவனிக்காத ப்ரசாந்த் அனைத்தையும் கூறி முடித்துவிட்டு… “சரி.. நீ இங்க என்ன பண்ற, ஆபீஸ் போகமா” என கேட்க….

“உடம்பு முடியல அதான் லீவ் போட்டுட்டு வந்தேன்” என்றவளை, ஏற இறங்க பார்த்தவன்.. “உன்னை பாத்தா உடம்பு சரியில்லாத மாதிரியே தெரியலையே” என்றான் கேலியாக.

“ம்ம்.. பார்த்த தெரியாது, பார்க்க பார்க்கதான் தெரியும்” என்ற வைரம்… சற்று நேரம் அவனிடம் பேசிவிட்டு, பிறகு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

அடுத்த நாள் காலை…

இரவெல்லாம் உறங்காமல் பைரவனை நினைத்து அழுது கரைந்தவள், விடியற்காலை தான் கண்ணயர்ந்திருக்க.. வெகு தாமதமாகவே கூடத்திற்கு வந்தாள்.

சோர்வாக வந்தமர்ந்த மகளைப் பார்த்து.. “என்னடி கண்ணெல்லாம் இப்படி சிவந்து கிடக்கு இன்னும் உடம்பு சரியாகலையா” என அவளின் தாய் கேட்க…

“உடம்பெல்லாம் நல்லதாமா இருக்கு, கொஞ்சம் ஒர்க் இருந்தது. அதை முடிச்சுட்டு நைட் லேட்டா படுத்தேன்… அதனாலதான் கண்ணு அப்படி இருக்கு” என பொய் உரைத்தாள் வைரம்.

“உடம்பு சரியில்லைன்னு சொல்லி தானே நேத்து லீவ் போட்டு வந்த. இங்க வந்தும் வேலை செஞ்சா, அப்புறம் எப்படி சரியாகும். இப்படி உடம்பை கெடுத்துக்கிட்டு, விடிய விடிய தூங்காம வேலை செய்யனுனு உனக்கென்ன அவசியம்.. நான் சொல்றதை” என அவர் ஆரம்பிக்க…

“அம்மா ஏற்கனவே எனக்கு தலை வலிக்குது, நீங்க வேற எதையாவது பேசி.. இன்னும் வலியை அதிகமாக்காதீங்க, வேணும்னா நான் இன்னைக்கும் ஆஃபீஸ் போகல போதுமா”.. என்றவள், “ப்ளீஸ் காஃபி குடுங்க” என தாயை தடுத்தாள்.

“அதானே.. உனக்கு நான் பேசினாலே தலைவலி வந்துருமே” என்றவர், மகளுக்கு காஃபி தயாரிக்க சமையலறை செல்ல..

அப்போது குழந்தையுடன் வந்த தங்கம்… “வைரா இவனை கொஞ்ச நேரம் பாத்துக்கடி, நான் ரெடியாகிட்டு வந்துடறேன்” என்றாள்.

தமக்கையிடமிருந்து குழந்தையை வாங்கியவள், “காலையிலயே ரெடியாகி, மேடம் எங்க போக போறீங்க” எனக் கேட்க…

“சக்திவேல் அண்ணாவோட குழந்தைக்கு இன்னைக்கு பேர் வைக்கிறாங்கடி, அதுக்குத்தான் போகப்போறோம். நேத்தே உங்க மாமா சீக்கிரம் ரெடியாகிடுனு சொன்னாரு, ஆனா இவனால லேட்டாதான் எந்திரிச்சேன்” என்றவள், “இன்னும் கொஞ்ச நேரத்தில அவர் வந்துருவாரு, அதுக்குள்ள நான் ரெடியாகிடுறேன், நீ அப்படியே இவனை ரெடி பண்ணிடு” என வேகமாக அறைக்குச் சென்றாள்.

வைரம்.. “ஹே, இந்தாடி என்னை பாத்தா உனக்கு எப்படி தெரியுது” என கத்தியவள், தமக்கை கூறியதை ரீவைண்ட் செய்து பார்க்க.. சட்டென ஒரு யோசனை தோன்றியது.

உடனே, இன்றும் தான் விடுமுறை என அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியவள், தோழிக்கும் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

பிறகு.. “அக்கா இங்க வாங்களேன்” என்று பணிப்பெண்ணை அழைத்தவள்… “இவனை ரெடி பண்ணுங்க., நான் வந்துடுறேன்” என குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு, அவளும் தன்னறைக்கு சென்று தயாரானாள்.

சற்று நேரத்தில் எளிமையாக தயாராகி வந்த இளைய மகளை… கோபமாக பார்த்த விஜயா… “இன்னைக்கு லீவ்னு சொன்ன, ஆனா இப்போ ஆஃபீஸ் ரெடியாகி கிளம்பிட்ட” என்றார்.

“இல்லம்மா, அக்கா ஏதோ ஃபங்க்ஷனுக்கு போறாளாம். அதான் நானும் அவகூட போறேன்” என்றவள், “காஃபி எங்கம்மா” என்றாள்.

“ஆமா காஃபியை கேட்டுட்டு குளிக்க போயிடு, நான் பாத்ரூம்ல கொண்டு வந்து கொடுக்கிறேன்” என்றவர், வேறு ஒரு காபி தயாரித்து அவளிடம் கொடுக்க…

“ஏய் பையனை ரெடி பண்ணுடினு சொன்னா, நீ மட்டும் ரெடியாகி உட்கார்ந்திருக்க. எங்கடி பையன்” என கேட்டபடியே வந்தாள் தங்கம்.

“உன் பையன் ரெடியாகி இருப்பான். இரு போய் தூக்கிட்டு வரேன்” என்ற வைரம், பணிப்பெண்ணிடம் இருந்த குழந்தை வாங்கி வந்தவள்… “தங்கம் டைமாகுது, இன்னும் மாமா வரலயே ஃபோன் பண்ணு” எனக் கூறினாள்.

“அதெல்லாம் பண்ணியாச்சு வந்துகிட்டு இருக்காராம்” என்ற தங்கம், “உன்னை ஆஃபீஸ்ல டிராப் பண்ணனுமா” எனக் கேட்க…

“இல்ல.. நான் ஆஃபீஸ்க்கு போகல, இன்னைக்கு லீவ்” என்றவளிடம்.. “அதான் ஆஃபீஸ் போகலையே. அப்பறம் எதுக்கு இப்படி அழகா ரெடியாகி உட்கார்ந்திருக்க” என்றாள் தங்கம்.

“ஒரு ஃபங்ஷனுக்கு போகும்போது வேற எப்படி டி போவாங்க” என அவள் கூற….

“நீயும் ஃபங்ஷனுக்கு போறியா என்ன ஃபங்க்ஷன்” எனக் கேட்டாள் தங்கம்.

“நீ போற அதே ஃபங்ஷனுக்குதான் நானும் வரேன்” என வைரம் கூற,
“நீ எதுக்குடி அங்க” என்றாள் அவள்.

“ஏன், நான் வரக்கூடாதா, நீயும் உன் புருஷன் மட்டும்தான் ஜோடி போட்டு போகணுமா” என கேட்டவளை கையெடுத்து கும்பிட்ட தங்கம்.. “அம்மா தாயே அப்படியெல்லாம் இல்லை, வந்து தொலை” என்றாள்.

“ம்ம்ம்‌.. அது” என்ற வைரம்… “பட்டுக்குட்டி.. சித்தியும் உங்கூட வருவேனாம், நாமெல்லாம் ஜாலியா போவோமாம்” என குழந்தையை கொஞ்ச…

அப்போது ப்ரசாந்த் வாகனத்தின் சத்தம் கேட்டது.

உடனே தாயிடம் கூறிவிட்டு இருவரும் வெளியேற… மனைவியுடன் வந்து வைரத்தை பார்த்து…“ஹே, நீயும் எங்கு கூட வரியா” என கேட்டான் ப்ரசாந்த்.

“எஸ் மாம்ஸ், நானும் உங்ககூட தான் வரேன், இன்னைக்கு அக்காவை டிவோர்ஸ் பண்ணிடுங்க” என சிரித்தவள் வாகனத்தின் பின் இருக்கையில் அமர, தங்கம் குழந்தையுடன் கணவனின் அருகில் அமர்ந்தாள்.

“ஏன்மா, நான் நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா, இன்னைக்கு ஒருநாள் உன்கூட சுத்திட்டு.. நாளைக்கு அவகிட்ட போனா என்னை கொன்னுடுவா. அதனால எனக்கு எப்பவும் என் பொண்டாட்டியே போதும். வேற யாரும் வேண்டாம்” என்றவன், “நீ வாடி என் தங்கம்” என மனைவியை கொஞ்சினான்.

இதை கேட்டு சகோதரிகள் இருவரும் வாய் விட்டு சிரிக்க.. “அந்த பயம் இருக்கட்டும்” என்றாள் தங்கம்.

இப்படியே பேசிக் கொண்டு சென்றவர்கள் அரைமணி நேரத்தில் சக்திவேலின் வீட்டிற்கு வந்து சேர… அங்கு விழாவிற்கு ஏற்பாடுகள் அனைத்தும் பரபரப்பாக நடந்துக் கொண்டிருந்தது.

ப்ராசாந்த், தங்கம் மற்றும் வைரத்துடன் வீட்டிற்குள் நுழைந்ததும் சக்திவேல் அவர்களை வரவேற்க.. “தங்கச்சியும் குழந்தையும் எங்கடா” என்றான் ஃப்ரசாந்த்.

“ரெண்டு பேரும் ரூம்ல ரெடியாகிட்டிருக்காங்க” என்ற சக்தி, தங்கத்திடமிருந்து குழந்தை வாங்கி கொஞ்சயவாறு இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தான்.

இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்கவே.. வைரம் பைரவனை தேடி, வீடு முழுக்க தன் கண்களை அலையவிட…
“பைரவன் இன்னும் வரலையாடா” எனக் கேட்டான் ப்ரசாந்த்.

பைரவனை பற்றி கேட்டதும் சக்திவேலின் பதிலுக்காக ஆர்வமாக வைரம் காத்திருக்க… அவன் கூறியதைக் கேட்டு மிகவும் சோர்வடைந்தாள்.

“அவனுக்கு எதுவும் முக்கியமான வேலை இருக்காம்., அதை முடிச்சிட்டு, முடிஞ்சா இப்போ வரானாம். இல்லன்னா ஈவினிங் வரேன்னு சொல்லிட்டான்டா” என்றவன், “சரி எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு அதை முடிச்சுட்டு வந்துடறேன் வெயிட் பண்ணு” என்றவன், குழந்தையை தங்கத்திடம் கொடுக்க….

“இருடா.. நானும் வரேன்.. என்ற ப்ரசாந்த்.. “தங்கம் நீங்க ரூமுல தங்கச்சிகூட இருங்க” எனக் கூறிவிட்டு நண்பனுடன் சென்றான்.

உடனே தங்கமும் குழந்தையுடன் அறைக்கு செல்ல… வைரம் அந்த இடத்திலிருந்து அசையாமலிருந்தாள்.

அதை பாரத்த தங்கம்..‌ “ஹே, ஏன் நிற்கிற… வா உள்ள போகலாம்” என அழைக்க…

“இல்ல, எனக்கு ஒரு மாதிரி தலைவலியா இருக்கு. நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்றாள் சலிப்பாக.

அவள் கூறியதை கேட்டு எரிச்சலடைந்த தங்கம்.. “லூசாடி நீ… நீதான நானும் வரேன்னு கிளம்பி வந்தே.. இப்ப ஏன் வீட்டுக்கு போறேன்னு சொல்ற” எனக் கேட்க..

“ஆமாடி, நானேதான் வந்தேன்
இப்பவும் நானே தான் கிளம்புறேன்னு சொல்றேன், பாய்” என்றவள், தங்கம் அழைப்பதை கண்டுகொள்ளாமல் நடந்தாள்.

வேகமாக நடந்து வாயிலை கடந்தவள், எதிரில் வருபவனை கவனிக்காமல் மோதி சரிய, வைரம் கீழே விழுந்து விடாமல், தாங்கிப் பிடித்தது, அவள் மோதியவனின் முரட்டு கரம்.

விழுந்து விடப் போகிறோம் என்று பயந்து கண்களை மூடியிருந்தவள், அப்படி எதுவும் நடக்காததால் தன் மலர்விழிகளை திறந்து பார்க்க…

அவள் முரடனின் முரட்டு பிடியில் சிக்கியிருந்தவள், உடலெங்கும் சிலிர்த்து… விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் இமைக்க மறந்திருந்தது.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page