இதயம்! – 08

இதயம்!

துடிப்பு – 08

படபடவென துடித்த,அவளிதயத்தை அடக்கும் வழி தெரியாது,திணறியவளுக்கு மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படாதது,பெரும் ஏமாற்றமே.

ஆயினும்,”இல்ல இல்ல வேதாஜி ஏதாச்சும் வேலயா இருப்பாரு..” எனக் கூறி தன்னை தேற்றியவளுக்கு,ஏனோ மனம் ஒரு நிலையில் இல்லை.

சட்டென அவள் அறியாமலே,விழிகள் கலங்கிப் போக,”என்னடி..?”எனக் கேட்டாள் அவள் தோழி,கண்ணீரில் பதறியவளாய்.

“இல்ல வேதாஜி ஃபோன் ஆன்ஸர் பண்ணல..” எத்தனை முயன்றும் குரல் உடைய,அவளுக்கு அவன் நலனில் சிறு தவிப்பு.

ராகவியின் பார்வையில் மாற்றம்.கலங்கியிருந்த விழிகளை,அவள் பார்வை ஆழம் அலசிட,அதில் வெறுமனே மரியாதையும் அக்கறையும் தென்படுவதாய் இல்லை.

“அவரு ஒரு சூப்பர் ஹீரோ மாதிரி தான் டி..” முகம் விகசிக்க,விழிகள் மின்ன,புகழ்ந்து தள்ளும் தோழியவள் இந்நொடி இல்லை,என்பதை தெளிவாகவே எடை போட முடிந்திருந்தது,அவளால்.

அவள் நினைத்த அர்த்தம் வேறு என்றிருக்க,அது உண்மை தானா என்று காலம் தான் பதில் சொல்லியாக வேண்டும். 

“ஃபோன் ஆன்ஸர் பண்ணலன்னு எதுக்குடி அழுதிகிட்டு இருக்க..?” அவளின் கண்ணீரை துடைத்து விட்டவளுக்கு,தன் சந்தேகத்தை உறுதிப் படுத்திக் கொள்ளும் வேகம்.

இது வரை,அவனைக் கண்டது இல்லை,அவள்.ஆயினும்,அவ்வப்போது அவனைப் பற்றி கடை பரப்பும் பாவையவளால்,யாரென்று தெரியாத அவன் மீது,அவளுக்கே பெரியதோர் நம்பிக்கை இருந்தது.

எந்தளவு சாத்தியம் என்று தெரியாத போதிலும்,தோழிக்கு அவனே கணவனாக வந்தால் நன்று என்ற எண்ணம் எப்போதும் அவள் மனதில் இருப்பதுண்டு.

“இதுங்க ரெண்டயும் பேசாம சேத்து வச்சுட்டா என்ன..?” பாவையவள் விழுந்து விழுந்து கதை கூறிடும்,பல சமயங்களில் அவள் நினைத்திருக்கிறாள்.

ஆயினும்,அதை தோழியிடம் சொல்லத் தயக்கம்.இந்த நொடி,அவள் விழிகளில் சிதறியிருக்கும் வித்தியாசத்தை,வார்த்தைகளில் மறைந்திருக்கும் சங்கேதத்தை,உடல் மொழியில் ஏறியிருக்கும் தவிப்பை முன்பு அவள் கண்டது கிடையாது.

ஆகையால்,நாவின் நுனி வரை வரும் கேள்விகளை அப்படியே விழுங்கிக் கொண்டு புன்னகைத்திடுவாள்.

“உன்னத் தான் கேக்கறேன்..அவரு ஃபோன அட்டன்ட் இப்டி கண்ண கசக்கி கிட்டு நிப்பியா..? என்ன தான் ஆச்சு..?” கோர்த்தெடுத்த வார்த்தைகள்,அம்பாய் அவள் மனம் தாக்க,சட்டென அவள் முகத்தில் தவிப்பும் குழப்ப ரேகைகளும்.

“நா வித்யாசமா நடந்துக்குறேன்ல..” அவள் திணறும் போதே,அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டிட,முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டவளோ,கால் ஹிஸ்ட்ரியை முதலில் நீக்கம் செய்திட்டாள்,பயம் சூழ.

“சரி தான..” எனக் கேட்டவாறு கதவைத் திறந்திட,அங்கு நின்றிருந்த பார்வதியைக் கண்டதுமே,சுவாசம் திரும்பியது போல்.

“என்ன சித்தி..?” இழுத்துப் பிடித்த மூச்சை வெளியிட்டவாறு வினவினாள்.

“இன்னிக்கி நைட் மண்டபத்துக்கு கெளம்பிப் போனும்..முத்து அண்ணன் கிட்ட சொல்லி இருக்கேன்..அவரு உன்ன வழில எறக்கி விடுவாரு..ரகு உன்ன அங்க இருந்து பிக்கப் பண்ணிட்டு ஏர்போட்ல விட்ருவான்..பயப்டாத சரியா..” என்றவருக்கு குரல் கம்மியது.

ஏனோ,மனதில் சிறு நெருடல்.என்னவாயினும்,அவளின் வாழ்க்கையை காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தவருக்கு,பயமும் ஒரு புறம்.

“சரி அண்ணி உங்க ரெண்டு பேர் ஃபோனயும் எடுத்துட்டு வர சொன்னாங்க..அவங்களுக்கு டவுட் வந்துருச்சு போல இருக்கு..ஃபோன கொடுங்க..” 

கரம் நீட்டிக் கேட்டதும்,ஒரு நொடி தயங்கினாள்,பாவையவள்.

“சித்தி ஒரே ஒரு நிமிஷம்!” கூறியவளோ,மீளவும் அதே எண்ணுக்கு அழைப்பெடுக்க,சில நொடிகளின் பின் அழைப்பு ஏற்கப்பட அவள் முகத்தில் கோடி மின்னல்.

“வேதாஜி!” இதழ்கள் நடுங்க உச்சரித்தவளின் விழிகள் கலங்கிட,துளிக்கண்ணீர் கன்னம் தழுவிட,காரணம் தெரியவில்லை,அவளுக்கு.

ஆனால்,மறுநொடி பதிலில்லாது போக,மீள மீள “வேதாஜி” என்ற போதிலும்,பதிலில்லை மறுமுனையில் இருந்து.

அவள் யோசிக்கும் போதே,அழைப்பு துண்டிக்கப்பட கணேஷ்வரி வரும் அரவம் கேட்டது.

அனைத்தையும் சரிபார்த்து விட்டு,அலைபேசியை பார்வதியின் கைகளில் கொடுத்திருந்த போதிலும்,அவளில் இருந்த நம்பிக்கை கொஞ்சமும் குறைந்திருக்கவில்லை.

                  ●●●●●●●

பரவியிருந்த மெல்லிய வெளிச்சத்தில்,ஒலித்துக் கொண்டிருந்த பாடலுக்கேற்ப,வயது வித்தியாசமின்றி ஆண் பெண் பேதம் பாராது ஆட்கள் ஆடிக் கொண்டிருக்க,மெல்ல அகன்று நழுவி முன்னே வந்தாள்,அவள்.

வந்தவளின் பார்வையோ,பார் ரெஸ்டாரன்டின் முன் அமர்ந்து இருந்தவரின் மீது மையலுடன் படிந்து மீள,அவள் விழிகளில் தன்னை மீறிய மயக்கம்.

அந்த நபரோ,”வன்ஸ் மோர்..” என சர்வீஸ் பாயிடம் கூறி விட்டு,தன் கையில் மதுக்குவளையை அப்படியே வாயில் சரித்திட,அதன் துளிகள் கொஞ்சமாய் அணிந்திருந்த கோர்ட்டிலும் சிதறிற்று.

சர்வீஸ் பாயோ,சற்றே அதிர்ந்து தான் பார்த்தான்.”எத்தன ரவுண்ட் போனாலும் இப்டி ஸ்டெடியா இருக்காரே..என்ன மனுஷனோ..?” உள்ளுக்குள் துளிர்த்த எண்ணத்தை விழுங்கிய படி மீண்டுமொரு,மதுக்குவளையை நீட்ட,அதையும் ஒரே மிடரில் குடித்து விட்டு,இருக்கையில் சுழன்றவாறு திரும்பியவளின் முன்னே வந்து நின்றாள்,அவள்.

மையல் ததும்பிட,தன்னை நோக்கி நின்றவளைக் கண்டதும்,அவர் புருவங்கள் ஏறி இறங்கிட,அவளை ஒரு முறை ஆராய்ந்தது,அவர் பார்வை.

அவள் பார்வையும் அவரைத் தான் அளவெடுத்தது அலசி மீண்டது.முப்பத்தைந்து வயதுத் தோற்றம் என்ற போதிலும்,அந்த கம்பீரம் அவளை வெகுவாய் ஈர்த்தது,உண்மை.

“ஹாய் ஹேன்ட்ஸம்..” என குழைந்தவாறு தன்னருகே வந்தவளை சற்றுத் தள்ளியே நிறுத்தினார்,அவர்.

தன் மேல் வந்து விழும் பெண்களை எட்ட நிறுத்தும் அளவு நல்லவரா என்று கேட்பின்,அது சத்தியமாய் இல்லை.இப்போதெல்லாம் பெரிய மாற்றம் அவரிடத்தில்.அதன் துவக்கம் எப்படியும் பல வருடங்களுக்கு முன்பே நடந்திருக்க கூடும்.

அவர் சற்றே தள்ளி நிறுத்தியதும்,அவள் முகத்தில் அப்பட்டமான எரிச்சல்.ஏறியிருந்த போதை,தெளிவாய் சிந்திக்கவும் விடவில்லை.

“என்ன ஹேன்ட்ஸம்..”என அவள் அவரின் சட்டைக் காலரை தடவுகையில்,பட்டென உதறி விட்டு எழுந்து நின்றவளின் முகத்தில் கடுமை பரவியிருந்தது.

முகத்தில் பெரும் சீற்றம் வழிய,விழிகள் சிவக்க,உறுத்து விழித்தவரின் பார்வையில்,அத்தனை அனல்.மது மயக்கத்தில்,மாதுவுக்கு அது உரைக்காது போக,விழிகளில் மையல் தேங்க,மீண்டும் அவரை நெருங்கிட,உறுமினார்,அவர்.

“எனக்கு உங்கப்பன் வயசு இருக்கும் டி இடியட்..” கர்ஜனைக் குரல்,அவள் செவி மோத,இருந்த மொத்த மயக்கமும் வடிந்தது போல் விழித்தாள்.

அவளால்,அவர் கூறியதை நம்ப முடியவில்லை.நம்பவே முடியவில்லை.மேலிருந்து கீழ் அளவெடுத்து பார்த்த போதிலும்,முப்பத்தைந்தை தாண்டி வயதொன்றை எண்ணவே முடியவில்லை.

“யூ ஆர் லையிங்..” சிணுங்கும் தொனியில் வினவிட,அவர் முகத்தில் ஆயாச பாவம்.

“ஐ ஆம் ஃபிஃப்டி த்ரீ கேர்ள்!” சத்தியமாய் அவரின் குரலில் குழைவில்லை.ஒரு தந்தையின் கண்டிப்பும் அக்கறையுமே நிரம்பி இருந்தது.

அவளோ,இன்னும் அதே இடத்தில் நிற்க,பெருமூச்சுடன் தன் பதிவு அட்டையை எடுத்துக் காட்ட,அதில் அவரின் வயதை தெரிந்து கொண்டவளுக்கு மயக்கம் வராத குறைவு தான்.

திகைப்பு மாறாமல் அவள் அவ்விடம் இருந்து செல்ல,மதுக்குவளையொன்றை ஆர்டர் செய்து கொண்டு,மூலையில் போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தார்,அவர்.

கோர்ட்டை கழற்றி ஓரமாய் வைத்தவரோ,ஷர்ட்டின் முதல் மூன்று பட்டன்களையும் திறந்து விட,அணிந்திருந்த ஆர்ம் கட் பனியன் விம்மிப் புடைத்த மார்பை படம் போட்டுக் காட்ட,சிலரின் பார்வை அவரை தொட்டு மீள மறந்திடவில்லை.

அவருக்கு ஐம்பத்தி மூன்று வயதென்று சத்தியம் செய்தாலும்,கொஞ்சமும் நம்பிக்கையை தந்திடாத் தோற்றம்.

நாளாந்த உடற் பயிற்சியும்,நெறி தவறாத உணவு முறையும் கட்டுக் கோப்பான உடலையும்,வயதைக் காட்டிடா தோற்றத்தையும் தந்திருக்கும் போலும்.

“ஹஸ்தேனி..” சில நிமிடங்களில் அவரை அழைத்தவாறு,நரைத்த முடியுடன் வந்து சேர்ந்தார்,ஒருவர்.

எப்படியும் எழுபதுகளின் முற்பகுதியில் இருப்பார் போன்றதோர் தோற்றம்.

அவரை,அவ்விடம் கண்டதும் அவரின் இதழ்கள் சின்னப் புன்னகையை சிந்திய போதிலும்,தன்னைத் தேடியே அம்மனிதர் வந்திருப்பது,அவருக்கு  புரியாமல் இல்லை.

“சொல்லுங்க சார்..என்ன விஷயமா என்னத் தேடி இவ்ளோ தூரம் வந்து இருக்கீங்க..?”

“நா அன்னிக்கி சொன்னத யோசிச்சு பாத்தீங்களா..?நீங்க மட்டும் சரின்னு சொன்னா என்னோட கம்பனில பாதிய எழுதி தந்துருவேன்..” என்க,இல்லையென்பதே அவரின் பதிலாய்.

“அத விட முக்கியமான வேல ஒன்னு இருக்கு சார்..அது முடிக்காம என்னால வேற எந்த வேலைக்குள்ளயும் என்ன நுழச்சிக்க முடியாது..”

“எத்தன வருஷமா இதயே சொல்லிட்டு இருப்பீங்க ஹஸ்தேனி..டென் இயர்ஸ்..டென் இயர்ஸா அப்டி என்ன வேல உங்களுக்கு..? வேற எந்த வேலயயும் பாக்க விடாத அளவுக்கு..?” சற்றே எரிச்சலுடன் அவர் பேசிட,அவரை நோக்கி வெற்றுப் பார்வையை வீசினார்,மனிதர்.

“உங்களத்தான் ஹஸ்தேனி..” எனக் கேட்கையிலேயே,கோர்ட்டை தோளில் போட்டவாறு எழுந்து கொண்டவரோ,அடுத்த கணம் தாமதியாமல் விடுவிடுவென வெளியேறி இருந்தார்,அவ்விடத்தில் இருந்து.

தன் வீட்டுக்கு வந்த போதிலும்,மனிதரின் மனமோ,இயல்பாகிடவில்லை.எங்கும் இன்றி,பழைய நினைவுகளுக்குள் மனம் புதைந்து போக,மனதில் மட்டுமல்ல மேனியிலுமே சில உணர்வுகளில் தாக்கம்.

விழிகளை அழுந்த மூடித் திறந்தவரோ,புயல் போல் தன்னறைக்குள் நுழைந்திட,அங்கு சுவரின் ஒரு பக்கம் முழுவதுமே,மதுபான போத்தல்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்க,அதுலிருந்த பாட்டிலொன்றை எடுத்து அப்படியே மடமடவென பருகினார்,மனிதர்.

விழிகளில் செவ்வரியோடியிருக்க,சிறு மயக்கத்திற்கும் அதீதமாய் போதை தேவைப்பட்டது.

மெல்ல மெல்ல தேகம் போதையில் திளைக்க,அகம் மெது மெதுவாய் சுற்றம் மறந்திட,அப்படியே தரையில் மல்லாக்க விழுந்தார்,மனிதர்.

கை கால்களை விரித்து அப்படியே படுத்து இருந்தவரின் விழிகள் விட்டத்தை வெறிக்க,அதில் பிரித்தறிய முடியா சில உணர்வலைகள்.

இதழ்கள் தமக்குள் ஏதோ பிதற்றித் தீர்க்க,மது போதையுடன் தீராக் காயங்களும் ஒன்று சேர்ந்து வாட்டி வதைத்திட,உறக்கம் அவரைத் தழுவிட,சற்றே காலம் தாழ்ந்தது.

             ●●●●●●●●

இன்னும் சில மணி நேரங்களில் மண்டபத்திற்கு செல்ல வேண்டும்.மண்டபத்தில் இன்றிரவு ரிஷப்ஷன் இருக்க,நாளை காலையில் முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டிருந்து.

நேரம் கடந்திட,ஏனோ பாவையவளை இனம் புரியா பதட்டம் சூழ்ந்து கொண்டது.

“நாம நெனச்ச மாதிரி எல்லாம் நடந்துரும் தான..” எண்ணிலடங்கா தடவைகள்,ராகவியின் கரத்தைப் பற்றிக் கொண்டு,கேட்டிட அவளுக்கு பயம் என்ற போதிலும்,” எல்லாம் நல்ல படியா நடக்கும் டி..” என ஆறுதல் மொழிந்தாள்,அவள்.

“எனக்குன்னா அந்த பொண்ணுங்க மேல முழுசா நம்பிக்க இல்ல..எதுக்கும் அவ மேல ஒரு கண்ணு இருக்கட்டும்..” தனது அடியாளிடம் கூறியே வைத்திருந்தார்,கணேஷ்வரி.

“என்னம்மா ரெடியாகிட்டீங்களா..?”

“தேவயானத எல்லாம் எடுத்து வச்சிட்டீங்களா தமிழ்..?”

கேள்வி கேட்கும் சாக்கில்,அடிக்கடி அவளின் அறைக்குள் நுழைந்து,அடிக்கடி நோட்டமிடுவதும் உண்டு.

இதோ,அதோவென மண்டபத்துக்கு கிளம்பும் நேரமும் வந்திட,சதீஷை அழைத்துக் கொண்டு முன்பே மண்டபம் கிளம்பியிருந்தனர்,அநேகமானோர்.

தன் உடன் பிறப்புக்களும் வீட்டின் பெரியவர்களும்,சதீஷை அழைத்துச் செல்கையில் வரவேண்டும் என்பது,கணேஷ்வரியின் அன்புக் கட்டளை.

பார்வதி உட்பட,சிலரே சொந்தத்தில் மிகுதியாய் இருக்க,அந்த குறையை தீர்க்கும் விதமாய் நிரம்பி இருந்தனர்,கணேஷ்வரியின் அடியாட்கள்.

எப்படியோ,அவர்களை சமாளித்து விட்டு,பார்வதி ராகவியுடன் சேர்ந்து ஒரே வண்டியில் ஏறிக் கொள்ளலானாள்,பாவையவள்.

முத்துவே,வண்டியை செலுத்த முன் வர,எல்லாம் சரியாக நடந்து விடும் என்கின்ற நம்பிக்கை முதன் முதலாய்.

பாதி வழியில்,ஒருவாறு ஆட்களின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு,வேறொரு காருக்கு மாறி ஏறி,ரகு வருவதாய் சொன்ன இடத்துக்கு அழைத்துச் சென்றார்,முத்து.

“பாப்பா எப்டியாச்சும் இவனுங்க கண்ல படாம தப்பிச்சிப் போய்டு..என்ன நடந்தாலும் திரும்பி வராத..ரகு தம்பி பத்ரமா உன்ன கொண்டு போய் விட்ரும்..பத்ரமா போய் சேந்துக்கோ பாப்பா..” அவளிடம் கூறிக் கொண்டே வந்தார்,முத்து.

தன் மகளின் வயதில் இருக்கும்,தன்னை மனிதனாய் நடத்தும் பாவையவளின் மீது,அவருக்கு மிகப் பெரித மரியாதையும் அளவு கடந்த பாசமும் இருப்பதில் தவறேதும் இல்லை.

சொன்னவாறு ஒன்பது மணிக்கு,அவ்விடத்து வந்த போதிலும்,ரகுவின் வண்டியை அவ்விடம் காணவில்லை.

பத்து நிமிடங்கள் கடந்த போதும்,அவன் வராது போக,பயம் பிடிக்க ஆரம்பித்தது,பாவையவளுக்கு.

ரகுவுக்கு அழைத்த போதிலும்,அவன் அழைப்பை ஏற்காது துண்டிக்க,என்ன செய்வதென்று தெரியாமல் திணறினாள்,என்றும் இல்லாத அளவு.

“உன் லைஃப சேவ் பண்ணப் போய் என்னால சாக முடியாது..உன் ப்ரச்சனய நீயே பாத்துக்க..” அவனிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியைக் கண்டதும் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது,பாவையவளுக்கு.

அதில் இருந்து மீளும் முன்னமே,ஹெட்லைட் வெளிச்சம்.அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது,கணேஷ்வரியின் அடியாட்களை சுமந்த வண்டியொன்று.

இங்கு மண்டபத்திலோ,பாவையவளைக் காணாது அங்குமிங்கும் பதட்டத்துடன் நடந்து கொண்டிருந்தார்,கணேஷ்வரி.

“சரியாப்பாத்தா இந்நேரத்துக்கு அவங்க எல்லாரும் வந்து இருக்கனுமே.. ஏன் இவ்ளோ லேட் ஆகுது..?” தர்மேந்திரனிடம் எரிந்து விழுந்தவரோ,தம்பி ரத்னவேலையும் விட்டு வைத்திடவில்லை.

“என்னடா உன் பொண்டாட்டிக்கி பொண்ணு பாசம் பொத்துட்டு வந்து ஏதாச்சும் கிறுக்குத்தனம் பண்றாளோ..?” சாடியவருக்கு,ஏதோ தவறாய்ப்பட,யோசியாது கிளம்பி இருந்தார்,அவர்களைத் தேடி.

அதே நேரம்,

அடர் கேசத்தை பின்னே தள்ளியவாறு,குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு இருந்தான்,ஆஜ்வின்.

முகத்தில் குழப்பம்.விழிகளில் கலக்கம்.இதயம் ஒரு வித அவஸ்தையில் தடுமாறியது.

“இவன் என்னடா இங்க வந்ததுல இருந்து ஒரு மாதிரி இருந்தான்..இப்போ என்னன்னா இவ்ளோ டல்லா இருக்கான்..அமித் என்ன தான்டா இவன் ப்ரச்சன..?” விஷ்வின் புலம்பித் தள்ளிட,அது புரிந்த போதிலும் எதிர்வினை கிடைக்கப் பெறவில்லை,அரிமா அவனிடம் இருந்து.

அமிதேஷின் மனதிலும் அதே எண்ணமே.இயல்பை தொலைக்காதவனின் இயல்பின்மை,அவனை யோசிக்க வைத்தது.

இதில் அக்ஷதி வேறு மிரட்டி அனுப்பி இருந்தாளே,விஷ்வினை.அவனுக்கும் மறுக்கும் வழியின்றி போக,சரியென்று தலையாட்டி விட்டு வந்திருந்தான்.

அவர்கள் வேறு நாட்டுக்குச் செல்வதாகவே,நெருங்கியவர்களிடம் கூட தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது.இதயம் தேடி பூமி வருவதாக,ஒரு சிலரை தவிர வேறு யாருக்கும் தெரியாதிருக்க,அதுவும் ஒரு பாதுகாப்புக்காக தான்.

சொந்த மகளிடம் கூட,உண்மையை உரைத்து இருக்கவில்லை,சாத்வேத்.

“இங்க பாருங்க..வேற நாடு போறீங்க அது இது போறீங்க..அதெல்லாம் ஓகே..ஆனா ஆஜு மேல யார் பார்வ கூட படக் கூடாது…யாராச்சும் பொண்ணுங்க தவறுதலா இடிச்சா கூட உன்னத் தான் கொல்லுவேன்..அது மாதிரி ஆஜுவும் எந்த பொண்ணயும் பாக்க கூடாது..ஆஜு யாரயாச்சும் பாத்தா உன் கண்ண தோண்டி எடுத்துருவேன்..” 

அவள் மிரட்டல் விடுக்க,”கிட்டத் தட்ட சைக்கோவா மாறிட்டா போல..” என புழுங்கியவளோ,வெளியில் இளித்து வைத்தது எல்லாம் வேறு கதை.

“விஷ்..என்னடா யோசிக்கிற..?”

“நத்திங்..சரி இவனுக்கு என்ன தான்டா பிரச்சின..நாம வந்த வேலய விட்டுட்டு இவன் பாட்டுக்கு தன்னோட யோசனைல இருக்கான்..”

“அவன் யோசனைல இருந்தாலும் அடிக்கடி செய்ய வேண்டியதெல்லாம் சரியா ப்ளேன் பண்ணிட்டு தான் இருக்கான்..எப்டியும் நாளக்கி காலைல நாம தேடி போகத் தான் போறோம்..அந்த ஸ்பெஷல் ஹார்ட்ட..சரி அத விடு..ஆனா,அவன் ஏன் இப்டி இருக்கான்னு தெரிலியே..” 

தோழர்களின் சம்பாஷணை இவ்வாறு தொடர,எப்போது உறக்கத்தை தழுவினார்கள் என்று இருவருக்கும் தெரியாது.

நள்ளிரவு பன்னிரெண்டு மணி இருக்கும்.இயற்கை அழைத்திட,எழுந்து கொண்ட விஷ்வின்னுக்கு பால்கனிப் பக்கமாய் ஏதோ சத்தம் கேட்டிட எட்டிப் பார்த்தான்.

வாயிலில் நின்று டேவிட் யாரோ,பெண்ணொருத்தியுடன் பேசிக் கொண்டிருப்பது தெரிய,அவன் விழிகள் இடுங்கின.

அவளோ,டேவிட்டிடம் ஏதோ கேட்டுக் கெஞ்சுவதும் அவன் காரசாரமாய் ஏதோ பேசுவது போலத் தான் தோன்றிற்று,பார்க்கையில்.

“இவ இந்த நேரத்துல எதுக்கு ஒரு பொண்ணு கூட நின்னு பேசி கிட்டு இருக்கான்..அதுவும் வீட்டுக்குள்ள கூட எடுக்காம..” என நாடித் தட்டி யோசிக்கும் போதே,கண்களை துடைத்துக் கொண்டு,அப்பெண் அங்கிருந்து கிளம்புவதும் தெரிந்தது.

முகத்தில் கோபம் கொப்பளிக்க,முன் கதவை அடைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தான்,டேவிட்.

“எவ்ளோ தைரியம் இருந்தா வீடு தேடி வந்து இருப்பா..இடியட்ட்..” அவளுக்குத் திட்டியவனின் மனதில் சில கேள்விகள் வரிசை கட்டி நின்றன.

பெண் உருவம் மறைந்ததும்,கட்டிலுக்கு வந்து படுத்துக் கொண்ட போதிலும்,விஷ்வின்னின் மனமோ,அப்பெண்ணை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.

“யாரு அந்த பொண்ணு..எதுக்கு டேவிட்ட மீட் பண்ண வரனும்..” யோசனையுடன் அவன்  உறங்கிப் போக,விடியலும் வந்தது.

தன் முன்னே வந்து நின்ற டேவிட்டின் கன்னத்தில் கைத்தடம் பதிய அறைந்தவனின்,ஆத்தரம் அடங்க மறுத்திட,விழிகளில் அப்படியொரு சீற்றம்.

அரிமா அவனின்,கோபத்தில் டேவிட் மிரண்டு விழிக்க,பயத்தில் அவனிதயம் அதிவேகமாய் துடித்தது.

துடிக்கும்.

2026.03.20

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page