இதயம்! – 09

இதயம்!

துடிப்பு – 09

அடியாட்கள் இருவருடன் தம்மை நோக்கி வந்த வண்டியைக் கண்டதும்,திக்குத் தெரியா காட்டில் சிக்கிக் கொண்டது போல இருந்தது,பாவையவளுக்கு.

எப்படியும் தான் தப்பித்துச் செல்ல முயன்ற விடயம்,அவர்களின் காதை எட்டினால்,நேரமென்ன காலமென்ன என தூக்கிப் போட்டு விட்டு,இன்று இரவே திருமணத்தை நடாத்தி வைத்து விடும் சாத்தியம் உண்டு என்பதை உணர்ந்தவளின்,நெஞ்சில் நீர் வற்றிப் போன உணர்வு.

“அம்மாடி என்ன பண்றது..? சீக்ரமா வா உன்ன கொண்டு விட்றேன்..எப்டியாச்சும் தப்பிச்சிப் போ..” முத்து,வேகவேகமாக வண்டியைக் கிளப்ப முயன்ற போதிலும்,அவள் அசையவில்லை.

வண்டியோட்டி,அவர்களிடம் இருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கும் என அவளால் நம்ப முடியவில்லை.

அதற்குள்,அவள் முன் வந்து வண்டி நிறுத்தப்பட,அதில் இருந்து இறங்கியவனைக் கண்டதும்,அவளுக்கு சற்றே நிம்மதி பிறந்தாற் போல்.

அவளின் கல்லூரித் தோழன்.அரசியல் மோகத்தில்,கணேஷ்வரியின் அடியாளாய் இருப்பவன்,அவன்.

அவ்வப்போது,அவனைக் கண்டால் புன்னகைப்பதோடு சரி.ஒரு தடவை அவனின் தாயாரின் மருத்துவ தேவைக்காக,பார்வதியிடம் இருந்து பணம் வாங்கிக் கொடுத்ததும்,அவள் தான்.

முதலில்,அவனிடம் உதவி கேட்க நினைத்த போதும்,அவன் ஊரில் இல்லை என்ற செய்தி வரவுமே,ரகுவை அண்டியது.

“அறிவில்லாம இப்டி தான் தப்பிச்சிப் போவியா..?” அடிக்குரலில் சீறியவனோ,தன்னருகே இருந்தவனிடம் கண்ணைக் காட்ட,அவனோ வண்டியை மீளவும் கிளப்ப ஆயத்தம் ஆனான்.

“நாளக்கி உன் கல்யாணம் நடக்காது..நம்பு என்ன..எங்கம்மாவுக்கு நீ பண்ண உதவிக்கு நா இதக் கூட பண்ணலன்னா மனுஷனே இல்ல..இப்போ வண்டில ஏறு..மீதிய அப்றம் பாத்துக்கலாம்..” அவன் அதட்ட,சரியென்பதாய் முத்துவுடன் வண்டியில் ஏறிக் கொள்ள,வண்டியும் கிளம்பியது.

அதி வேகத்தில் செலுத்தி வந்து,பார்வதி இருந்த காருக்குள் அவள் ஏற,அவர் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.

ரகுவிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை,அவள் அவரிடம் காட்டவும்,முதன் முறையாக தன் மகன் மீதே வெறுப்பு வந்தது,அவருக்கு.

ராகவிக்கு,அடுத்து என்ன நடந்திடுமோ என்கின்ற பயம் பெருமளவு இருக்க,அது முகத்தில் அப்பட்டாக தெரிந்திட,அவளின் கையை அழுத்திக் கொடுத்தாள்,பாவையவள்.

கணேஷ்வரி,தனது ஆட்களை கிளப்பிக் கொண்டு சென்று ஐந்து நிமிடங்கள் கூட கடந்திராத சமயத்தில்,பாவையவளும் ஆட்களும் மண்டபத்தை வந்தடையட,அவ்விடத்தில் அப்படியொரு அமைதி.

“வண்டி பாதில மக்கர் பண்ணுடுச்சுங்க..அதான் வர லேட் ஆயிடுச்சு..” புடவை முந்தானையால் முகத்தை துடைத்தவாறு,பார்வதி கூறிட,யாரும் அவரை சந்தேகித்திடவில்லை.

உடன் இருந்த ஓரிரு அடியாட்களும் ஒத்து ஊதிய பின்னரும்,அவர்களை நம்பி விட்டிருக்க,கணேஷ்வரிக்கும் தகவல் போயிருந்தது.

அவரோ,சில நிமிடங்களில் பின்னர் கிளம்பி வர,அவர் பார்வையில் இருந்த உஷ்ணத்தில்,பார்வதியும் சற்றே பயந்து தான்,போனார்.

கணேஷ்வரி,அவர்கள் கூறியது எதையும் நம்பிடவில்லை,என அவரின் நடத்தை தெளிவாய் வெளிக்காட்ட,அப்படி இருந்த போதிலும்,அவர் எந்த வித எதிர்வினையுமின்றி இருந்தது,பார்வதிக்கு பெருத்த நிம்மதி.

தான் ஏதேனும் செய்தால்,உறவுக்காரர்களின் முன்னே,தன் மரியாதைக்கு இழுக்காகும் என நினைத்தவரோ,அடியாட்களை எச்சரிக்கத் தவறவுமில்லை.

நேரம் நள்ளிரவு பன்னிரெண்டு மணி.உறங்காமல் பாவையவளுடன் மற்றைய இருவரும் விழித்திருக்க,அவர்களின் அறைக்கு வெளியே காவலுக்கென நான்கு பேர் கையில் துப்பாக்கியுடன் அங்குமிங்கும் நடந்த வண்ணம்.

மெல்லியதாய் கதவைத் திறந்து பார்த்த ராகவிக்கு,துப்பாக்கியை கண்டதும் இருந்த பயம்,மேலும் அதிகரிக்க,நெஞ்சுக் கூடு படபடவென அடித்துக் கொண்டது.

“எப்டிடி தப்பிச்சிப் போலாம்?அவன் சொன்னான்னு உன்னால எப்டி மாடிக்கு போக முடியும்..?” அவள் கேட்கும் போதே,யாரோ அவர்களின் யன்னலைத் தட்டும் சத்தம்.

எழுந்து சென்று கதவைத் திறக்க,அங்கு  பைப் லைன் கம்பியில் தொங்கிக் கொண்டு இருந்தான்,அவளது கல்லூரித் தோழன்,சுரேஷ்.

“ராகவிய எப்டியாச்சும் வெளில வர சொல்லு தமிழ்..” என்க,அவள் ஏனென்று கேட்டிட,அவன் முகம் கடுகடுத்தது.

“சொன்னா செய்ய்ய்ய்ய்..” சீறியவனின் பேச்சுக்கேற்ப,எப்படியோ அந்த நள்ளிரவில் மண்டபத்தை விட்டு வெளியே வந்திருந்தாள்,ராகவியும்.

                ●●●●●●

வின்னோரா கிரகம்!

விழிகளில் எந்த வித உணர்வையும் காட்டாது இருந்த,அழுத்தமான பெண்ணவளின் மீது சாத்வேதின் பார்வை மெச்சுதலாய் படிந்தது.

அத்தனை பெரிய,அவளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாததோர் விடயத்தை அவர் போட்டுடைத்த போதிலும்,அவள் எந்த வித அதிர்வுமின்றி இயல்பாய் இருந்தது,அவரை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றதென்னவோ,சத்தியமான உண்மை.

“இவ்ளோ பெரிய விஷயம் சொல்றேன்..உன் மொகத்துல எந்த விதமான ரியாக்ஷனயும் காணோம்..” என்க,அவளிதழ்களில் மெல்லிய முறுவல் மட்டுமே.

“நீங்க சொன்னதுக்கு நா எந்த விதமான மறுப்பும் சொல்லல..அப்டின்னா ஒத்துக்கறேன்னு அர்த்தம் சார்..”

“உன் கூட வர்ரது என்னோட நம்பிக்கயான ஒருத்தர்..ஆஜுவோட அஸிஸ்டன்ட் தான் அவன்..ரொம்ப நம்பிக்கயான பையன்..அவன நம்பி நீ போவ தான..”

“கண்டிப்பா சார்..” என்றவளின் முகத்தில் துளிச் சந்தேகமும் வராதது,அவரை யோசனைக்குள்ளும் தள்ளின.

“நீயும் அவனும் நாளக்கி விடியக்காலைல கெளம்பி போயிருங்க..அவ்னித் கொண்டு போய் நம்ம எல்லைல விடுவான்..அங்க இருக்குற நம்ம ஆளுங்க உன்னயும் அவனயும் அந்த நாட்டுக்குள்ள எடுத்துருவாங்க..ரொம்ப சின்ன நாடு தான் ஜெகஷிவ்..பிரதீஷ் சொன்ன படி இப்போ அந்தாளு அந்த நாட்டோட கேபிடல்ல இருக்கான்..அங்க போய் எப்டி சரி கண்டு பிடிச்சாகனும்..”

“நா பாத்துக்குறேன் சார்..”

“நீ பொய்ட்டு வர்ர வர உன்னோட குடும்பம் என்னோட பொறுப்பு மா..” இறுகிய முகத்தில் அப்போது மெல்லிய நிம்மதி பரவியதை அவரால் கண்டு கொள்ள முடிந்தது.

அவளோ,அதற்கு மேலும் பேச எதுவும் இல்லாதிருக்க,அனுமதி கேட்டவாறு கிளம்பிச் செல்ல,அவரோ யோசனையுடனேயே அபிஷேக்கின் அறைக்குள் சென்றார்.

விழிகள் அங்குமிங்கும் அசைந்தவாறு இருக்க,ஆக்ஸிஜன் மாஸ்கின் உதவியுடன் சுவாசித்திருந்தவனின் தோற்றம்,அவரை வெகுவாய் பாதித்தது.

“அபி!” என அவளின் விரல்களை பற்றிக் கொண்டு மனிதர் அமர்ந்து விட,அவனும் மெதுவாய் அவரின் ஸ்பரிசத்தில் விழி திறந்தான்.

அவ்வப்போது,அவனிமை பிரித்து,விழியுருட்டுவது வழக்கம்.

கிளம்பிச் சென்ற பவனிக்கும்,சாத்வேதிடம் ஏதோ கேட்க வேண்டியிருக்க,அவரைத் தேடி வந்தவளுக்கு,அவர் அபிஷேக்கின் அறையில் இருப்பதாய் விஹானா கூறியதில்,விழிகளில் மெல்லிய கலவரம்.

“அவசரம் ஏதாச்சும்னா  போய் பாத்து பேசும்மா..” அவர் கனிவாய்க் கூற,இவளுக்கு இதயம் தடதடத்தது.

“இல்ல மேடம்..நா அப்றம் சார பாத்துக்கறேன்..” கடமைக்கென புன்னகைத்து விட்டு வெளியேறியவளோ,அபிஷேக்கின் முன் செல்வதை வேண்டுமென்றே தவிர்த்தாள்,என்பதே உண்மை.

               ●●●●●●

விடிந்தும் விடியாத பொழுதில்,”டேவிட்ட்ட்ட்!” என்கின்ற அரிமாவவனின் அறை அதிரும் கர்ஜனையில் கண்ணைக் கசக்கிக் கொண்டு வெளியே வந்தான்,அவன்.

 

“எதுக்கு இந்த விடியக்காலைல இப்டி கத்தறாரு..?” காதைக் குடைந்து கொண்டு வந்தவன்,சுதாரிக்கும் முன்னமே கன்னம் தெறிக்கும் விதமாய் அறை.

அறை என்றால்,வெறுமனே அறை அல்ல அது.உதட்டோரம் கிழியும் வீரியத்துடன்,கன்னம் தெறிக்கும் விதமாய் ஒரு பேயறை!

கன்னத்தை பொத்திக் கொண்டு நின்றவனின் விழிகளில் பூச்சி பறக்க,முகம் சிவக்க விழிகளில் செந்தணலுடன் நின்றிருந்த அரிமாவவனை,ஏறிட்டுப் பார்க்கவே பயமாக இருந்தது,டேவிட்டுக்கு.

அவனின் காட்டுக் கத்தலில்,அடித்துப் பிடித்து எழுந்து,கீழே வந்த தோழர்களுக்கும்,அரிமாவவன் நின்றிருந்த தோரணை சற்றே பயத்தைக் கொடுத்தது.

“இவனுக்கு என்னாச்சு..?” என்றவர்களின் பார்வை,கன்னம் வீங்க நின்றிருந்த டேவிட்டிடம் படிய,அடித்தது தோழன் தானா என்கின்ற சந்தேகம் உள்ளுக்குள்.

சினம் வெடித்தாலும்,ஆத்திரம் ஆழம் தாக்கினாலும்,நிதானமாய் இருப்பதில் கை தேர்ந்தவன் ஆயிற்றே,அரிமா அவன்.

அவன் கை நீட்டியிருப்பதையே,அவர்களால் நம்ப முடியாது போக,தான் அறை வாங்கிய காரணம் தெரியாது,விழித்துக் கொண்டு நின்றிருந்தான்,டேவிட்.

“எதுக்கு அறஞ்சீங்க..?” அதை கேட்டு முடிக்கும் முன்னமே,அடுத்த கன்னத்திலும் அவனின் கைத்தடம்.

“ஆ..” அவன் கத்த முனைய,அதையும் அடக்கியது,அவன் விழகளின் அனல் வீச்சு.

“எதுக்கு இந்த காட்டல நீ என் கிட்ட..?” அடிக்குரலில் உறுமியவனோ,டேவிட்டின் அலைபேசியை தூக்கி காட்ட,அதன் தொடுதிரையைக் கண்டதும்,முன்னிருந்தவனின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

தெரியக் கூடாது என்று நினைத்து,அனைத்தையும் அவன் செய்திருக்க,உரியவனிடமே அது அகப்பட்டுக் கொண்டதில் மிரண்டிருந்தான்,அவன்.

“எதுக்கு என் கிட்ட காட்டல..?” அரிமா அவன்,சீறிட அவனோ என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்,திகைத்து பதிலின்றி நிற்க,கோபம் கொந்தளித்தது,முன்னிருந்தவனின் மனதில்.

“சொல்லு..எதுக்கு காட்டல என் கிட்ட..? அதுவும் அட்டன்ட் வேற பண்ணி இருக்க..இடியட்ட்ட்ட்ட்..” பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பியவனுக்கு,டேவிட்டை அடித்து தீர்த்து விடும் வேகம்.

“இப்ப தானா..? இல்லன்னா இதுக்கு முன்னாடியும் கால் வந்து இருக்கா..?” எகிறியவனின் வார்த்தைகளின் காரணம் புரியாது தலையை சொறிந்தனர்,தோழர்கள்.

“இல்ல இல்ல..இது மட்டுந்தான்..இதுக்கு முன்னாடி எதுவும் வந்தது கெடயாது..” என்க,அவன் முகத்தில் நம்பாத பாவம்.

“நெஜமா தான்..” அவன் தலையில் கை வைத்து சத்தியம் செய்திட நம்பியவனுக்கு,இனி உபயோகம் இருக்காது என இங்கு பயன்படுத்திய அலைபேசியையும் சிம் கார்டையும் அவனிடம் கொடுத்துச் சென்ற தன் மீது கோபமாக வந்தது.

“நா சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க..நேத்து அந்த ராகவி பொண்ணு என்ன பாக்க வந்தா..” என்க,அரிமா அவனின் நேத்திரங்கள் அளவுக்கு மீறிய அதிர்வை காட்டின.

இத்தனை வருடங்கள் கழித்து தன்னை அவள் அழைத்திருக்க,அதுவே பெரும் யோசனையைத் தந்தது என்றால்,அவள் தோழி வீடு தேடி வந்திருப்பது..?

ஏதேனும் சிக்கல் தான்,உறுதிப் படுத்திக் கொண்டவனின் மனம் படபடக்க,எப்படியும் அது அவளைக் காணும் வரையில் இயல்பாக மாறப் போவதில்லை,என்பது மட்டும் உண்மை.

“ஷிட்ட்ட்ட்..” தன்னைத் தானே நொந்து கொண்டவனோ,யாரிடமும் எதுவும் கூறாது வண்டியைக் கிளப்பச் செல்ல,அவனுடன் எப்படியோ வந்து இணைந்திருந்தனர்,மற்றைய மூவரும்.

“ஆஜு..டேய் எங்கடா போறோம்..?டேய் உன்னத் தான் கேக்கறோம்..ஆஜு..”

“டேவிட்..இவன் என்னன்னா இந்த உலகத்துலயே பொறந்து வளந்தவன் மாதிரி வண்டிய ஓட்டிட்டு போறான்..எங்க தான் போறான் இவன்..? உன்னத் தான் கேக்கறேன்..ஆஜு நீயாச்சும் வாயத் தெற..” என்க,அழுத்தக்காரனின் இதழ்கள் அத்தனை எளிதில் பிரிந்திடுமா என்ன..?

எதுவும் பேசாதவனின் கைகளில் ஸ்டியரிங் அகப்பட்டு சிக்கித் தவிக்க,வண்டியோ மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது,அவன் மனதில் விரிந்திருக்கும் பதட்டத்தின் பிரதிபலிப்பாய்.

எப்படி இருப்பாளோ..?

அவளுக்கு என்ன பிரச்சினையோ..?

அழைத்தும் தான் ஏற்காததை என்னவென்று நினைத்து இருப்பாளோ..?

பதிலின்றி அழைப்பு துண்டிக்கப்பட என்னவெல்லாம் யோசித்து இருப்பாளோ..?

சிந்தனை முழுவதும்  அவளை சுற்றி வர,விழிகளில் அலைப்புறுதல் படம் விரித்தது.

அவளுக்கே ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ என நினைக்கையிலேயே,மனம் அடித்துக் கொள்ள,அவனில் தடுமாற்றத்தின் பேரலை.அப்படி ஏதும் இருக்காது என தன்னைத் தானே தேற்றிக் கொள்ளவும் செய்தான்.

விழிகளில் கலக்கம் மின்ன,ஒரு வித தவிப்புடன்,சிந்தையில் வேறேதோ நிறைந்திருக்க,வண்டியோட்டி வந்த தோழனை புருவம் சுருக்கி பார்த்தான்,அமிதேஷ்.

“டேவிட் எங்க போறோம்..?” சற்றே காட்டமாய் அவனிடம் வினவ,அவனோ என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான்.

பதில் சொல்லப் போய் வீண் வம்பாகிப் போய் விடும் என்று பயந்து இருப்பான்,போலும்.

இங்கோ,திருமண மண்டபத்தில் முகம் கொள்ளாப் புன்னகையுடன்,அக்னி குண்டத்தின் முன்னர் அமர்ந்து இருந்தான்,சதீஷ்.

என்னவாயினும்,அவன் முகத்தில் சின்ன மலர்வொன்றை காணக் கிடைத்திட,அது கணேஷ்வரியின் விழிகளில் இருந்து தப்பவில்லை.

ஐயர் கூறும் மந்திரங்களை ஓதி,சடங்குகளை சரிவர செய்தவனின் பார்வை,அடிக்கடி வேறு புறம் தாவிட,தோழர்களின் கேலி அவனை செவியை நிறைத்திட,அலட்சியமாய் புறம் தள்ளினான்,அவன்.

பார்வதிக்கோ,விழிகள் கலங்கி,கண்ணீர் வழிந்து விடேன் என்று மிரட்டியவாறு இருக்க,ராகவியின் நிலையை சொல்லவே வேண்டாம்.

ஒரு மூச்சு அழுது தீர்த்தவளுக்கு,கணேஷ்வரியின் ஆட்களிடம் மாட்டிக் கொண்ட சுரேஷை எண்ணியும் ஒரு புறம் தவிப்பு.

அவன் எப்படி சிக்கிக் கொண்டான்,என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்ற போதிலும்,அவனை வண்டியில் இழுத்துச் செல்வதாக முத்து கூறியதை வைத்தே,கணிக்க முடிந்து இருந்தது,அதை.

ஓரமாய் நின்றிருந்த முத்துவுக்கும்,நிலமை கை மீறிப் போனதில் பெருமூச்சு.எதிர்த்துப் போராட முடிந்த போதிலும்,அவரின் குடும்பம் கண் முன்னே வந்து,அந்த எண்ணத்துக்கு தடை போட்டது.

“நாழியாடுய்ச்சு..பொண்ணு அழச்சிண்டு வாங்கோ!” என ஐயர் அழைத்திட,உறவுக்கார பெண்கள் சிலருடன் அழைத்து வரப்பட்டாள்,பாவையவள்.

முகத்தில் துளியும் புன்னகை இல்லாதிருக்க,விழிகளில் வெற்றுப்பாவம் மின்னியது.

அரக்கு நிறப் பட்டுப் புடவையில்,மெல்லிய அணிகலன்கள் அவளை அலங்கரிக்க,வழமைக்கு மாற்றமான அவளின் தோற்றம்,விழிகளை கவர்வதாய்.

கணேஷ்வரிக்கு,மொத்த நகைகளையும் அவளுக்கு போட்டு விட ஆசை என்றாலும்,சதீஷ் தான் மறுத்திருந்தான்,அவளுக்கு பிடிக்காது என்று தெரிந்தும்.

அவள் அணிந்து வந்தது எல்லாமுமே,அவளின் பாட்டி அவளுக்கென பார்வதியிடம் கொடுத்து வைத்திருந்த,ஆபரணங்கள்.அந்த விடயம் இன்னும்,கணேஷ்வரிக்குத் தெரியாது.

தன்னருகே வந்து அமர்ந்தவளை இமைக்காமல் பார்த்திருந்தான்,சதீஷ்.முதன் முதலாக,அவள் ஏதோ செய்தாள்,அவன் மனதை.பார்வையை,அவளை விட்டு விலக்குவது,அவனுக்கு எளிதாக இல்லாது போயிருக்க,அவனின் பார்வையில் அவள் தான்,வெறுப்புடன் அமர்ந்து இருந்தாள்.

அவளை மனைவியாக்கி விட்டு,தனது தான்தோன்றித் தனமான வாழ்க்கையை அப்படியே தொடரலாம் என்று தான் எண்ணியிருந்தான்.அது தான்,திருமணம் நிச்சயம் ஆன பின்பும்,பெண் சகவாசத்தை தொடர்ந்தது.

ஆனால்,இந்நொடி அவனுக்குள் சின்னதாய் ஒரு மாற்றம்.மீள திரும்பி,அவள் முகத்தை பார்த்து,”அழகா இருக்க!” என்று கூறிட,அவள் வாயில் கெட்ட வார்த்தைகளே நிரம்பியது.

“நாசமாப் போறவனே! உன் கண்ணுல கத்திய எடுத்து குத்த..” என்று கருவியவளுக்கு,அப்படியே எழுந்து கத்தி கூச்சலிட்டு திருமணத்தை நிறுத்தினால் என்ன என்கின்ற எண்ணம் எட்டிப் பார்த்த போதிலும்,நேற்றிரவு நாசூக்காய் மிரட்டிச் சென்ற,கணேஷ்வரியின் மிரட்டலில் அமைதியாய் அமர்ந்து இருந்தாள்,தன் கோபத்தை அடக்கிக் கொண்டு.

அவன் மீது மட்டும்,மனதில் சிறு நம்பிக்கை.ஆயினும்,அது கொஞ்சம் கொஞ்சமாய் குறைவது போல்.

ராகவியோ,அட்சதை தட்டை அனைவரும் நீட்டிக் கொண்டிருக்க,அதைப் பார்த்தவளின் விழிகள் அவன் வந்து விட மாட்டானா,என்கின்ற ஏக்கம்.

ஏனோ,அது விழிகளில் ஈரத்தையும் ஏற்றி விட,தாலித் தட்டு சதீஷின் முன்னே நீட்டப்பட,அவனை எதிர்ப்பார்த்து முற்றாய் உடைந்து போனாள்,அவள்.

சரியாக,அந்தத் தருணம்,அவ்விடம் காவல் துறையினருடன் வந்து இறங்கினான்,சுரேஷ்.

உதடுகள் கன்றிப் போய்,முகத்தில் ஆங்காங்கே வீக்கம் காணக்கிடைத்திட,அவ்விடத்தில் காவலர்களை எதிர்பாரா அதிர்வு அனைவரின் முகத்திலும்.

“என்ன எதுக்காக இப்டி போலீஸ் வந்து இருக்கீங்க..?” கட்டைக் குரலில்,தர்மேந்திரன் வினவிட,அசிஸ்டன்ட் கமிஷ்னர் சிவபிரசாத் தயக்கம் காட்டினார்.

அவருக்கு தெரியும்,பெரிய இடத்து சமாச்சரம் என்று.கமிஷ்னரே,கையை விரித்து இருக்கையில்,அவரும் என்ன தான் செய்திட..?

ஏதோ,நடந்து இருப்பது புரிந்தது,அவருக்கு.அரசியல் பெரும் புள்ளி எனத் தெரிந்தும்,கமிஷ்னர் தன் பாட்டில் ஏதேனும் செய்து கொள் என தன்னை விட்டு விட்டதன் பிண்ணனியில்,நிச்சயம் மறைமுகக் காரணம் இருக்கும் என்று உணர முடிந்திருந்தது,அவரால்.

“இந்த பொண்ணுக்கு உங்க பையன விருப்பம் இல்லாம கட்டி வக்கிறதா சொல்லி கம்ப்ளைன் வந்துருக்கு சார்..”

“எவன் டா அது..? எவன்டா..? போடு உங்க கமிஷ்னருக்கு ஃபோன..அவனுக்கு தெரியாதா இது..?”

“அவரு தான் சார்..சட்டப்படி ஆக்ஷன் எடுங்கன்னு சொல்லி எங்கள அனுப்பி விட்டதே..” அவர் கூற,தர்மேந்திரனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“போங்க போய் அந்த பொண்ணு கிட்ட கேளுங்க..” கேமராக்களின் வெளிச்சம் பரவி நின்றதில்,தன்னை சுதாரித்துக் கொண்டு கண்ணைக் காட்டிட,கணேஷ்வரியின் முகமும் இயல்பானது.

சுரேஷுடன் காவல் துறையினர்,அவள் அருகே செல்ல,பார்வதியின் முகத்தில் பரவசம் என்றால்,ராகவிக்கு உயிர் திரும்பி வந்த உணர்வு.

ஆனால்,அவள் முகத்தில் தான் தெளிவின்மை.அவளால் ஏதேனும், பிரச்சினை நடந்து திருமணம் தடைப்பட்டால்,பார்வதியை கொன்று விடுவதாய் நேற்று மிரட்டிச் சென்ற,கணேஷ்வரின் குரூர முகம் அவளை அச்சத்தில் ஆழ்த்தியது.

அவன் இருந்தால்,அவள் நிச்சயம் எதிர்த்து இருப்பாள்.அது மறுக்க இயலாத உண்மை.ஆயினும்,இந்த நொடி அந்த தைரியம் வரவில்லை:வரவும் செய்யாது.

“அம்மாடி உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா..? நீ புடிச்சி போய் தான் இவரோட பையன கல்யாணம் பண்ணிக்கப் போறியா..?” சிவபிரசாத் கேட்டிட,அவளிடம் இருந்து பதிலில்லை,சில நொடிகளுக்கு.

“உன்னத் தான் மா கேக்கறேன்..உன் விருப்பம் இல்லாம இந்த கல்யாணம் நடக்குறதா கம்ப்ளைன் பண்ணி இருக்காங்க..நீ தான் உண்ம என்னன்னு சொல்லனும்..” அவர் கூறக் கூற,அவள் முகத்தில் மாற்றம்.

சட்டென திரும்பியவளின் பார்வை கணேஷ்வரியைத் தழுவ,அவர் முகத்தில் தெரிந்த கொடூரத்தில் அதீதமாய் பயந்து தான் போனாள்,அந்த நொடி.

“உண்மய சொல்லு தமிழ்..” ராகவி மனதுக்குள் வேண்டிட,சுரேஷின் நம்பிக்கையோ,அவளின் அமைதியில் கொஞ்சமாய் தேய்ந்து கொண்டிருந்தது.

“உன்ன தான் மா..”

“எனக்கு இந்த..” திணறியவளின் குரல் உடைந்தது.

“எனக்கு!” என்றவளின் விழிகள்,வாசலைத் துழாவின.ஆழமாய் ஒரு நொடி அவள் விழி மூடித் திறந்து,அழுத்தமான பார்வையுடன் சிவ பிரசாத்தை ஏறிட்டாள்.

“எனக்கு..” அவள் இழுக்கும் முன்னமே,அவ்விடம் அதிரும் வண்ணம் அவன் குரல்.

“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல..நாம லவ் பண்றோம்னு சொல்றதுல உனக்கு எதுக்கு இவ்ளோ பயம் அரசி..?”  நுதலுரசிய அடர் கேசம் ஒதுக்கி,சிரசை பக்கமாய் மெல்லக் குலுக்கி,கழுத்தை வருடி ஷர்ட்டின் காலரை இழுத்து விட்டவாறு,ராஜ தோரணையுடன் அவளை நோக்கி வந்தவனையே மொய்த்தது,அனைவரின் பார்வையும்.

அவள் இதழ்களோ,”வேதாஜி” என முணுமுணுக்க,அடுத்த நொடி வழிந்த கண்ணீருடன் மாலையை கழற்றி விட்டு எழுந்து நின்றிருந்தாள்,மனம் முழுக்க நிரம்பிய ஆசுவாசத்துடன்.

அகலாத பார்வையது அவள் விம்பத்தை சேமிக்க,தன்னைக் கண்டதும் அவள் விழிகளில் வந்து போன உணர்வுகளை பொக்கிஷப்படுத்தியவனாய்,அவள் முன்னே வந்து நின்றான், ஆஜ்வின் வேத்விக்!

அவனை அவ்விடம் கண்டதுமே,அவளிதயம் இயல்பாய் துடித்தது.

துடிக்கும்!

2026.03.22

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page