இதயம்! – 13

இதயம்!

துடிப்பு – 13

இரு கைகளாலும் தலையைத் தாங்கிய வண்ணம்,அமர்ந்து இருந்தாள்,பவனி.

மனம் முழுவதும் அழுத்தம் நிரம்பி வழிய,இரு தடவையும் தவற விட்ட தன்னை எண்ணி அவளுக்கு அப்படியொரு கோபம்.

தார்விக்கின் மனமோ,அவளுக்கு நேரவிருந்த விபரீதத்தை நினைத்து கலங்கியிருக்க,அவளை தனியே விட்டுச் சென்ற தன் செயலை கருதி,உள்ளுக்குள் வெட்கினான்,அவன்.

“சாரி பவனி..நா உன்ன தனியா விட்டுட்டு போனதால தான இப்டி ஆயிடுச்சு..சாத்வேத் சார் கால் பண்ணாரு..அதான் போனேன்..ஆனா இப்டி நடக்கும்னு எதிர்பாக்கல..” 

அவள் தெளிந்து அமர்ந்த பின்,குற்றவுணர்வுடன் மன்னிப்புக் கேட்டிட,அவளுக்கு அவன் மீது தவறென்று கூறிட முடியவில்லை.

பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டு நகர்ந்தவன்,தெரிந்து கொண்டே இப்படிச் செய்யவில்லையே.

அவள் கண் விழிக்கும் வரை,அவன் உறங்கவில்லை என்பதை அவனின் சிவந்த விழிகளே காட்டிக் கொடுக்க,தன்னிலை மீளும் வரை அவன் குற்றவுணர்வில் தவித்து இருப்பான் என்பது அவளுக்கும் புரியாமல் இல்லை.

போதைவஸ்தின் வீரியத்தில் அவளுக்கு விழிப்புத் தட்டுகையில் மதியம் நெருங்கியிருக்க,அதன் பின் அவனைத் தேற்றுகையில் அவளுக்கு போதுமென்று ஆகி விட்டிருந்தது.

“சரி இப்போ எதுக்கு தலய பிடிச்சி கிட்டு உக்காந்து இருக்க..? நாம வேணும்னா பண்ணோம்..எனக்குன்னா அவனுங்க கைல மாட்டாம நீ தப்பிச்சதே போதும்னு இருக்கு..அந்தாள பத்தி நீ யோசிக்காத..”

“இல்லடா..எனக்கு மிஸ் பண்ணிட்டோமேன்னு ஒரு கில்டியா இருக்கு..இப்போ எப்டி அந்தாள கண்டு பிடிக்கிறதுன்னு தெரிலியே..”

“சரி மொகத்த பாத்தியா நீ..?”

“ம்ஹும்..எனக்கு சரியா தெரில மொகம்..ஆனா கண்டிப்பா கொஞ்சம் வயசான ஆளா தான் இருக்கும்..அப்டி தான் எனக்கு தோணுது..”

“சரி ரொம்ப அலட்டிக்காத..ஆம்பளன்னு தெரியும்..வயசான ஆளுன்னும் தெரியும்…டைம் இருக்கு தான நம்மளால கண்டு பிடிக்க முடியும்..”

அவன் ஆறுதல் மொழிந்த போதிலும்,அவள் மனம் யோசனைக்குள்ளேயே சிக்கிக் கிடந்தது.

               ●●●●●●●

காலை உணவை உண்ட பின்னர்,அரிமா அவனும் தோழர்களும் கிளம்பிச் செல்ல,அரிமா அவனின் பார்வை கூட,அவள் மேல் படியாததை உணரத் தவறவில்லை,அவள்.

அவளுக்குமே,தான் பேசியதில் தவிப்பு இருக்க,அவன் புறக்கணித்தது என்னவோ போல் இருந்தாலும்,சமாளித்துக் கொண்டாள்,பாவையவள்.

பாவையவளின் பார்வை,அவனையே சுற்றி வருவதையும்,விழியைக் கூட உரசாமல் அரிமாவவன்,பாராமுகம் காட்டுவதும் ராகவியின் விழிகளில் இருந்து தப்பாதிருக்க,அவளுக்குள்ளும் யோசனைகள்.

அத்தனை களேபரத்திலும்,அவன் தோழியின் கரம் பற்றியது,அவளுக்குள் விதைத்த நிம்மதிக்கு அளவே இல்லையென்று இருக்க,கணவன் – மனைவி பிரச்சினை என்று விட்டு விட முயன்றாலும்,மனதில் உறுத்தல்.

அறைக்குள் வந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்த பாவையவளுக்கோ,அடுத்த கட்டம் என்னவென்கின்ற குழப்பம் இருந்தாலும்,ஆஜ்வின் வந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறப் போட்டு விட்டாள்.

“தமிழ்..”தோழியழைத்திட,நிமிர்ந்து பார்த்தாள், *தமிழரசி!*

“உனக்கும் அண்ணாவுக்கும் ஏதாச்சும் ப்ரச்சனயா..?”

“யாரு அண்ணா..?” கேட்டவளுக்கு,சத்தியமாய் புரிந்திட சில நொடிகள் தேவைப்பட்டது.

“எரும மாடு..உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு..உன் புருஷன் அப்போ எனக்கு அண்ணன் தான..?” அவள் சீற,சட்டென அமைதியாகிப் போனாள்,தமிழவள்.

“ஏய் என்னடி அமைதியா இருக்க..?”

“என்ன அந்த வீட்ல தனியா விட முடியாது கூடவே அழச்சி பாதுகாப்பான ஒரு எடத்துக்கு தன்னோட கூட்டிட்டு போகனுங்குற ஒரே ஒரு காரணத்துக்காக தான் வேதாஜி என் கழுத்துல தாலி கட்டுனாரு..”

“அவரு அப்டி தாலி கட்டலனா அந்த சதீஷோட அப்பாவோட பவர யூஸ் பண்ணி கணேஷ்வரி எப்டியாச்சும் அந்த வீட்டுக்கு இழுத்துட்டு போயிருப்பாங்க..”

“அப்டி நடந்தது தான் எங்க கல்யாணம்..அந்த கல்யாணத்த எப்டி எடுத்துக்குறதுன்னே எனக்கு தெரில..வேதாஜி மேல எனக்கு நெறய மதிப்பு இருக்கு மரியாத இருக்கு எல்லாமே இருக்கு..அவரு புடிக்குங்குறது உண்ம..ஆனா அதத் தாண்டி நா யோசிச்சது இல்ல..”

“என்ன விடு இப்போ அவரு எடத்துல இருந்து யோசிச்சு பாரு..என்ன காப்பாத்த தாலி கட்டுன மனுஷன்..அவருக்கு வரப் போற பொண்டாட்டிய பத்தி எத்தன ஆச எத்தன கனவு இருக்குமோ எனக்குத் தெரியாது..”

“எனக்குன்னு ஒரு குடும்பம் சொந்த பந்தம்னு யாராச்சும் இருந்தாலும் பரவால..அது எதுவும் இல்லாத அனாத நா..அவரு வீட்ல எப்டி என்ன ஏத்துப்பாங்க..? அட்லீஸ்ட் காதலிச்சு கல்யாணம் பண்ணி இருந்தா கூட பரவால..இது கடமக்காகவும் இல்ல..விட்டுட்டு போக முடியாதுங்குற ஒரே ஒரு காரணத்துக்காக பண்ணி கிட்ட கல்யாணம்..”

“அத எப்டி டி அவரு மேல திணிக்க முடியும்..? அவரு குடும்பம் ஏத்துப்பாங்களா..? எனக்கே சும்மா இல்லாம அவருக்கு ஃபோன் பண்ணி அவரயும் சிக்கல்ல இழுத்து விட்டு அவரு வாழ்க்கய கெடுத்து விட்டோம்னு இருக்கு..இப்போ இந்த கல்யாணத்த உண்மன்னு நா ஏத்துக்கனுமா..?”

அவள் கூறக் கூற,அவள் யோசிக்கும் கோணத்திலும் அவன் மீதான நேசத்தையே கண்டாள்,தோழி.ஆயினும்,எதுவும் பேசவில்லை.

அவளே தெளிந்து உணர வேண்டியதை,விளக்கி உணர்த்தி விட அவளுக்கு விருப்பமில்லை.அவளாகவே,உணரும் போதே அது ஆழம் தாக்கிடும்.

“இப்போ நீ என்ன தான் சொல்ற..? டைவோர்ஸ் பண்ணப் போறியா..?”

“டைவோர்ஸ் எதுக்கு பண்ணனும்..அவங்கள ஏமாத்த அப்றமா ரெஜிஸ்டர் பண்றதா சொல்லிட்டு வந்தோம்..ரெஜிஸ்டர் பண்ணலன்னா எதுக்கு டைவோர்ஸ் பண்றது..?”

“அப்போ என்ன பண்ணப் போற நீ..? இது வெறும் மஞ்சக்கயிறு தான்னு சொல்லிட்டு பிரிஞ்சு போகப் போறியா..?”

“சொன்னாலும் சொல்லலன்னாலும் இது வெறும் மஞ்சக்கயிறு தான்..எங்களுக்குள்ள நடந்தது ஒரு பொம்மக் கல்யாணம் தான்..இத நா காலைல வேதாஜி கிட்டவும் சொல்லிட்டேன்”

அவள் தன்னிலை மறந்து கூற,பட்டென்று பிடித்துக் கொண்டாள்,தோழி.ஆக,அவனின் பாராமுகத்தின் காரணம் நிச்சயம்,இவளின் வார்த்தைகள் தான் என்று சரியாகவே யோசித்தாள்.

“நேத்து அவ்ளோ பாத்து பாத்து பண்ண மனுஷன இவளோட பேச்சு தான் கோவப்படுத்தி விட்டு இருக்கு..கடவுளே..” தன் நெற்றியில் அறைந்தவளுக்கு,தோழியை அலசிட வேண்டிய கட்டாயம்.

“சரி ஒரு வேள,அதான் வேதாஜி..உன் புருஷனே இந்த கல்யாணத்த ஏத்து கிட்டா என்ன பண்ணுவ..?” கொக்கி போட்டவளுக்கும் அந்த சந்தேகம் இருந்தது.

என்ன தான் அவளைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்த போதிலும்,அவன் தாலி கட்டியது அதற்காகத் தான் என்று நினைத்திட முடியவில்லை,அவளால்.

தாலியை முடிச்சிடும் போது அந்த விழிகளில் தெரிந்த உணர்வுக்கோலங்கள்..

வண்டியில் வரும் போது அடிக்கடி அவளை உரசிச் சென்ற பார்வைக் கீறல்கள்..

பாவையவளுடன் ஓரிரு வார்த்தைகள் கதைத்திடினும்,அதில் வழிந்த கனிவு..

அவளின் வார்த்தைகளுக்கு,அவன் கடைபிடித்திடும் பாரமுகம்..

இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் காதல் என்று சொல்ல முடியாவிடினும்,பாவையவள் மீது அவனுக்கு சிறு பிடித்தமேனும் இருக்கக் கூடும் என்றே நம்பினாள்,அவள்.

ராகவியின் கேள்வியில் அவள் அதிர்ந்திட,அதன் பதில் என்னவென்று கொஞ்சமும் புரியவில்லை,பாவையவளுக்கு.

வாஸ்தவமான கேள்வி என்ற போதிலும்,பதிலைக் கண்டறியா முடியாது மனம் தவிக்க,ஏனோ விழிகளில் பெரும் அலைப்புறுதல்.

“அது அவருக்கு அப்டி விருப்பம் எல்லாம் வராது..என்னன்னாலும் கட்டாயத்துல நடந்த கல்யாணம் தான இது..அப்டிலாம் இந்த கல்யாணத்துல விருப்பம் வராதுடி..” 

ஏனோ,மறுக்கும் முனைப்பில் அடித்துக் கூறுவது போலவே,இருந்தது அவளின் தொனி.

“இங்க பாரு அவரு யாரு என்னன்னு உனக்கு தெரியாது..அவரு வேல என்னன்னும் உனக்கு தெரியாது..குடும்பம்னு ஒன்னு இருக்கா..?அப்டியே இருந்தாலும்,அவங்க குடும்பத்துல யாரு இருக்கா என்னன்னு எதுவுமே உனக்கு தெரியாதுல..”எனும் போதே,பாவையவளின் விழிகள் சிறு அதிர்வை தமக்குள் ஏற்றன.

“ஜஸ்ட் ஒரு மூனு வாரப் பழக்கம் தான..அப்டி இருக்கும் போது உனக்கு அவரு மேல மதிப்பு மரியாதன்னு எல்லாம் வந்துச்சு..ஏன் காதல்னு இல்லன்னாலும் ஒரு நல்ல மனுஷனா ஒரு நல்ல கேரக்டரா அவரு மேல விருப்பமும் வந்துச்சு..அப்போ நீங்க கல்யாணமும் பண்ணி இருக்கல..”

“ஆனா அவருக்கு உன்ன பத்தி எல்லாம் தெரிஞ்சு இருக்கு..தெரிஞ்சு தான் தாலியும் கட்டி இருக்காரு..அப்டி இருக்கும் போது ஒரு சின்ன விருப்பம் கூட வராதுன்னு எப்டி சொல்ல முடியும்..?”

குறி பார்த்து கவனமாய் கோர்த்து,அவள் எய்திருந்த சொல்லம்புகள்,ஆழம் தைக்கா போதிலும்,ஓரம் கீறி விட,என்னென்னவோ எண்ணங்கள்,பாவையவளின் மனதில்.

அப்படி அவளே,குழம்பிட யோசிக்கும் சமயம்,அறைக்கதவு தட்டப்பட டேவிட்டின் மனைவி ஸ்டெல்லா தான் வந்திருந்தாள்.

வேலை இருப்பதாகவும்,அவள் வெளியே செல்வதாகவும் கூறி விட்டு அவள் வெளியே செல்ல,அலைபேசியில் ஆழ்ந்து போயினர்,இருவரும்.

முகநூலை ஆராய்ந்து கொண்டிருந்த ராகவியின் விழிகள் மெல்ல இடுங்கின.

“என்னடி இது..? பூமிக்கு வேற்று கிரக வாசிங்க வந்து இருக்குறதா சந்தேகப் பட்றாங்கன்னு ஆளாளுக்கு அடிச்சி விட்றானுங்க..இது ஏன் திடீர்னு ட்ரெண்ட் ஆச்சுன்னு தெரிலியே..”

“அதான..? ஆமா ஏலியன்ஸ் நெஜமாலுமே இருக்காங்களா கவி..?”

“தெரிலியே..ஆனா நேத்து உன் வேதாஜியும் அவரு ஃப்ரெண்ட்ஸும் இத பத்தி ஏதோ டாக் போட்டுட்டு இருந்தாங்க..பேசாம அவர் கிட்டவே என்னன்னு கேளேன்..” என்றிட,நெற்றி சுருக்கினாள்,பாவையவள்.

              ●●●●●●●●

கார்வேனியா!

அவ்னித் அமர்ந்து இருக்க,அதீத யோசனையுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்,சாத்வேத்.

“ஜெகஷிவ் இல்லாம நம்ம மத்த மூணு நாட்டோட ஜனாதிபதிங்களும் ஒன்னு கூடினதா தகவல் வந்து இருக்கு சார்..அதுக்கெல்லாம் மெய்னா இருக்குறது அந்த காஷ்யப் தான்..” அவ்னித் கூறியது மீளவும் செவிகளில் எதிரொலிக்க,அவர் முகத்தில் பெருமளவு யோசனைகள்.

“சார்! காஷ்யப் புதுசா ஒரு வெப்பன கண்டு பிடிச்சு இருக்கான்..இப்போ வர அணு ஆயுதம் தான் தான் பயங்கரம்னு நாம நெனச்சிகிட்டு இருப்போம்..பட் அத விட பவர்ஃபுல்லான வெப்பன் தான் அவன் கிட்ட இருக்குறது..மே பீ அத விட மைன்யூட் பார்டிக்கல்ஸ வச்சு அவன் உருவாக்கி இருக்கலாம்..”

“…………………”

“அவனோட டீலிங் கூட,நம்மள தம்பேத்வின்,ஜெகஷிவ்,மப்ரேரி இவங்க மூணு பேரும் சேந்து அட்டாக் பண்ணனுங்குறது தான்..அதுக்கு அவங்க ஒத்து கிட்டா அவன் வெப்பன கொடுப்பான்..”

“பட் அந்த வெப்பனால என்ன யூஸ்..? நம்ம நாட்ட அட்டாக் பண்ணாலும்  மப்ரேரி மட்டுந்தான அவனுங்க பிடிக்கறதுக்கு இருக்கு..அந்த சின்ன நாட்டுக்காக இவ்ளோ பண்ணுவாங்களா அவ்னித்..மே பீ பெரியா ஏதாச்சும் ரீசன்..”

“இருக்கு சார்..யார் கிட்டவும் இல்லாத ஸ்பேஸ் ஷிப்..ஸ்பேஸ் பத்தின ஆராய்ச்சி விஷயங்கள் அது மட்டும் இல்லாம நமக்கே தெரியாத புதிய புதிய இன்னோவேஷன்ஸ் அவன் கைல இருக்கு..அத வச்சி க்விக்கான டைம்ல ஈஸியா பூமிய ரீச் பண்ணலாம்னு உங்களுக்கே தெரியும்..அதயும் தர்ரான்னு சொல்லி பூமியவும் அவங்களோட ஆதிக்கத்துக்கு கீழ கொண்டு வர்ரதுக்கு..”

அவ்னித் இழுக்க,சாத்வேதுக்கும் அதுவே சரியெனப் பட்டது.மிகப் பெரிய இலாபம் எதுவுமின்றி,தமக்கு எதிராக அந்த நாடுகள் திரும்ப மாட்டாது என்று அவர் நன்கு அறிவார்.

“அதுல்லாம காஷ்யப்போட இன்னோவஷேன்ஸ் இருக்குற லேப் இருக்குற எடம் கூட நமக்கு எதுன்னு தெரியாது..ஸோ அதுல  இன்னும் நம்ம ரெண்டு உலகத்துக்கே ஆபத்தான விஷயம் இருக்கும்னே தோணுது..”

“எஸ் அப்டி இருக்கும்..நாம அந்த உலகத்த ஆக்கிரமிக்க போனாலும் சரி அவங்க நம்ம உலகத்த ஆக்கிரமிக்க வந்தாலும் சரி அது ரொம்ப பெரிய ப்ரச்சன..பூமிய போய் ஆக்கிரமிக்கிறதால என்ன நடந்துறப் போகுது…?”

“என்னால அத ஏத்துக்க முடியாது..எங்கப்பா அத சொல்லித் தான் இவ்ளோ நாள் ஆட்சி செஞ்சாரு..அதுல்லாம பூமி நம்ம வின்னோராவ விட நல்ல எடமா இருந்தா நம்ம மக்கள் எல்லாரும் அங்க போயிருவாங்க..அப்போ நம்ம வின்னோராவுக்கு என்ன ஆகறது..?”

“கண்டிப்பா இத தடுதது ஆகனும் அவ்னித்! அதுக்கு நாம அந்த மூணு நாடுங்க கூடவும் பேசனும்..”

“ஆல்ரெடி நாம பேச ரிக்வெஸ்ட் பண்ணத அவங்க மறுத்துட்டாங்களே சார்..அப்றம் என்ன பண்றது..?”

“இப்போ இருக்குறது ஒரே ஒரு வழி தான்..காஷ்யப்ப நம்ம கஸ்டடிக்கு கீழ கொண்டு வர்ரது..அதத் தவிர வேற வழியில்ல..அவன் பின்னாடி இருப்பாங்குற தைரியம் தான் அவங்க எல்லாரயும் நமக்கு எதிரா தூண்டி விடுது..அத நாம இல்லாமப் பண்ணோம்னா ஆல் வில் பீ ஓகே..”

தீர்க்கமாய் உரைத்த போதிலும்,தேடும் நபரை எங்கு சென்று தேடுவது என்று தான் தெரியவில்லை.ஓரிரு வருடங்கள் கண்ணில் சிக்காமல் இருந்தாமல் கூட பரவாயில்லை.

கிட்டத்தட்ட இருபது வருடங்கள், இருக்கும் சுவடின்றி காய் நகர்த்துபவரை எப்படி கண்டு பிடிப்பது என்று தான் தெரியவில்லை,அவர்களுக்கு.

“அவன் ரொம்ப டேஞ்சரான அதே மாதிரி ரொம்ப ஷார்ப்பான ஆளு..கண்டிப்பா அவ்ளோ ஈஸியா அவன நம்மளால கண்டு பிடிக்க முடியாது..அதுவும் இல்லாம அவன் இப்போ எப்டி இருப்பான்னு கூட,நமக்கு தெரியாது..” என்றவருக்கோ,எந்த வித யோசனையும் வரவில்லை.

             ●●●●●●●●

போதையில் இருந்து மீண்டவாறு தன் அறைக்கதவை திறந்திடவும்,அவரின் பக்கத்து அறைக்கவு திறக்கப்படவும் சரியாக இருக்க,வெளியே வந்தான்,தார்விக்.

அவனை அவ்விடம் கண்டதும்,ஹஸ்தேனிக்கு சட்டென பொறி தட்டிட,பவனியின் நிலையைக் கேட்கச் சொல்லி,மனம் பரபரத்தது.

மகள் மீது ஒரு தந்தைக்கு இருக்கும் அக்கறை அது.வேறெந்த எண்ணமும் இருக்கவில்லை,அப் பரபரப்பில்.

நேற்று அவளை காப்பாற்றிய பொழுதில்,அவசர வேலையொன்று வந்திடவே,அவளை அவ்விடம் அப்படியே விட்டு விட்டு வந்தது.

அப்படி வந்த பின்,மனம் கேட்கவேயில்லை,அவருக்கு.அவள் நிலை என்னவானதோ,அவ்வப்போது எண்ணமொன்று அழுத்திட,அவளின் அடையாளமோ இருப்பிடமோ தெரியாததால் அதை புறந்தள்ள வேண்டியிருந்தது.

கட்டுக் கோப்பான உடற் கட்டுடன்,திடமாய் தன் முன்னே நிற்பவரின் மீது,பார்வை படிந்து மீள,கடமைக்கென அவரைப் பார்த்து புன்னகைத்தான்,தார்விக்.

அவர்கள் தேடித் திரியும்,நபர் இவர் தானென்று அவனுக்கு தெரிந்திருக்க கொஞ்சமும் சாத்தியம் இல்லை.

அவனின் புன்னகைக்கு பதில் புன்னகை கொடுத்தவரின் விழிகளோ,அவன் விழிகளில் கொஞ்சமே கொஞ்சமாய் தெரிந்த பயத்தை கண்டு கொள்ள,அவரின் புன்னகை மேலும் விரிந்தது.

இது நாள்,சாந்தியைத் தவிர அவரைப் பார்த்திடும் அனைவரின் விழிகளிலும் பயம் வந்து போகும்.ஏன் சாந்தி கூட,முதன் முதலில் அவரைக் கண்டு மிரண்டு விழித்து நின்றதெல்லாம் வேறு கதை.

முதல் பார்வையில் அவரின் ஆறடி உயரத்தையும் ஆஜனாபாகுவான தோற்றத்தையும் கண்டு பயப்படாதவர்களையும் விரல் விட்டு எண்ணி விடலாம்.

ஆகினும்,ஒரு பார்வையை மட்டும் அவரால் இன்றளவும் மறக்க முடியாது.தார்விக்கின் பயத்தைக் கண்ட போதிலும்,அந்த விழிகள் தான் நினைவில் வந்தது.

மேற்சட்டையின்றி முறுக்கிக் கொண்டு நின்று தன்னை அச்சத்தின் எச்சம் கூட இன்றி,வெட்டிக் கொண்டு நேர்ப்பார்வை பார்த்திட,”செம்ம தில்லு தான் போல..” அக்கணம் நினைத்திடவே செய்தார்,மனிதர்.

இருவரும் இடித்துக் கொள்ளப் பார்த்து,நூலிழையில் சுதாரித்து விலகிய பின்னரே,நடந்திருந்தது அந்தப் பார்வை பரிமாற்றம்.

பவனி வரும் சத்தத்தில் நிமிர்ந்தவரோ,தன்னிலையில் இருந்து மீள,அவளை ஆராய்ந்து முடித்த பின்னரே,ஆசுவாசம் பெற்றது அவரின் மனது.

அவளோ,அவரை கவனிக்காது போக,கொஞ்சம் கவனித்து இருந்தாலும் சிறு சந்தேகமாவது பிறந்து இருக்கும்.

அவரை கடந்து இருவரும் செல்ல,அவரின் பாதங்களும் நீண்டன.

வெளியில் சென்றவரோ,ஹோட்டலின் பூங்காவில் போடப்பட்டிருந்த கல் இருக்கையில் சாவகாசமாக அமர்ந்திட,சாந்தியின் நினைவு தான் அதிகமாய் வாட்டியது.

காதல் என்று புரியாத போதும்,அவர் மீது காதலை கொட்டிக் கவிழ்த்தவருக்கு,யாரோ ஒருவரின் பேச்சைக் கேட்டு தன்னை விட்டுச் செல்லாது இருந்திருக்கலாமே என்கின்ற ஆதங்கம் எழாமல் இல்லை.

அவரிடம் கேட்க வந்த சமயம்,நடந்தேறியது அனைத்தும் அவருக்கு காலம் கடந்தே தெரிய வர,அதற்கு காரணமானவர்களின் மீது கொலைவெறி இருந்தாலும்,அவர் நம்பியிருக்க கூடாதே என மனம் இப்பொழுதும் ஓலமிட்டது.

தாலி ஏற்காமல் அவரின் வாரிசை சுமந்தவரின் மனநிலை எத்தகையதாய் இருந்து இருக்கும் என்று காலம் கடந்தே அவர் புரிந்துணர,விதியின் வாய்ப்புக்கள் அங்கே நிராகரிக்கப்பட்டு இருந்தன.

தன்னைப் பற்றி முழுதாக தெரிந்தறிந்த பின்பு,சாந்தி அவரை நிச்சயம் ஏற்றிருக்க வாய்ப்பில்லை என்பது புரிய மனதில் சிறு கசப்பு.

அதுவும்,கரு வயிற்றிலேயே அழிந்து விட்டதாய் அவர் கூறியது,மனிதரை இன்னுமே வதைத்து என்றால் மிகையாகா.

“நம்ம கொழந்த” அவர் மணி வயிற்றில் அவரின் கையை எடுத்து வைத்து உரைத்த போது,தேகம் சிலிர்த்ததை இப்போதும் உணர்வது போல் மயிர்க்கால்கள் எழுந்து நின்றன.

அப்பொழுது இருந்தே,குழந்தை மீது அலாதி அன்பை வைக்கத் தொடங்கி இருந்தவருக்கு,அது பெண் குழந்தை என்றே மனம் அடித்துக் கொண்டது.

“இது பையன் இல்ல நம்ம பொண்ணு தான்..” சாந்தியிடம் கூறியவாறு,வயிற்றில் இருக்கும் தன் மகவிடம் பேசுவார்.

“ராஜாத்தி..” இரண்டு மாதக் கருவை அவர் கொஞ்சும் போது,சாந்திக்கே சிரிப்பு வந்து விடும்.

எல்லா சந்தோஷமும் சில நாட்களுக்கு என்பது போல,கரு அழிந்து விட்டதாய் அவர் கூறியிருந்தது,மனதை துண்டாக்கியிருக்க,அவரும் இல்லாது போக,அவரின் வாழ்வில் வெறுமை மட்டுமே.

அவ்வண்ணமோ என்னவோ,இருபதுகளில் இருக்கும் யுவதிகளை காணும் போது,அவருக்குள் சிறு கண்டிப்பும் தந்தையுணர்வும் கிளர்ந்தெழும்.

அது தான்,பவனியைக் காப்பாற்றும் போதும் வெளிப்பட்டு இருந்தது.

அவரைக் கடந்து பவனியும் தார்விக்கும் செல்ல,”என் பொண்ணும் இருந்தா இந்த வயசு தான் இருப்பா..” மனதுக்குள் நினைத்தவரின் இதயமோ,வலியில் சீரின்றி துடித்தது.

துடிக்கும்.

2026.03.26

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page