இதயம்!
துடிப்பு – 14
கார்வேனியா!
நான்கு நாட்களுக்கு பிறகு,
ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டு,சுவாசத்துக்கு சிரமப்பட்டு மயக்க நிலையில் இருந்த பவனியை பார்க்கையில்,தன் தலையில் அடித்துக் கொண்டான்,தார்விக்.
அவன் அப்படி எளிதில் உணர்ச்சி வசப்படும் ரகம் இல்லை.ஆயினும்,தன் கவனயீனமே அவளை இந்நிலைக்கு தள்ளி இருப்பதாய்,தன்னை நிந்தித்தவனுக்கு தன் மீதே கட்டுங்கடங்காத ஆத்திரம்.
“ஷீ ஈஸ் அவுட் ஆஃப் டேஞ்சர்!”பிரஜின் கூறிய பின்னரே,அவனுக்கு நிம்மதி எழுந்தாலும்,என்ன நடந்ததென்று இன்னுமே அவனுக்கு புரியவில்லை.
ஹஸேரியில் இருக்கும் போது,திடுமென மயக்கம் போட்டு விழுந்து விட்டவளை,எத்தனை முயன்றும் எழுப்பிட இயலாது போக,என்னவேனும் நடந்து கொள்ளட்டும் என்று அங்கிருந்த மருத்துவமனையொன்றில் அனுமதிக்க,அவர்களுக்கு சந்தேகம் கிளம்பியிருந்தது.
அவ்னித்திடம் தகவலை தெரிவித்திருக்க,அவர் தான் எப்படியோ கள்ளத்தனமாய் ஆட்களிடம் வந்து,அவர்களை கார்வேனியாவுக்கு அழைத்துச் சென்றது.
ஒற்றை இரவில் அனைத்தும் நடந்து முடிந்திருக்க,தாங்கள் கார்வேனியாவுக்கு வந்தது,கனவு போல் தான் இருந்தது,அவனுக்கு.
என்ன நடந்தது என்று தெரியவில்லை,அவளுக்கு.மயக்கம் போட்டு விழும் அளவு அவளின் உடல் நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை,என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.
அந்த தைரியத்தில் தானே,அவளை ஜெகஷிவ்வுக்கு அனுப்பி வைத்தது.அப்படியிருக்கையில்,இது என்ன திடுமென..?
விடயம் கேள்வி பட்ட சாத்வேதுக்கு ஏனோ,மகன் பிழைப்பதன் நிகழ்தகவு மிகவும் குறைவெனவே,தோன்றிட படபடவென அடித்துக் கொண்டது,மனிதரின் இதயமும்.
பவனி இல்லாவிடின்,இருக்கும் இரு வாய்ப்புக்களில் ஒன்று முற்றாக இல்லாமல் போனது போன்ற நிலை ஆயிற்றே.
இப்போது,இரு இதயங்களில் ஒன்றை கண்டறிய வழியின்றிப் போனதை எண்ணி ஒரு தந்தையாய்,வெகுவாய் துவண்டு போனார்,மனிதர்.
ஆஜ்வின் இருந்தால் இந்நிலமையை கையாள இலகுவாய் இருக்குமே என்கின்ற எண்ணம் மனதை நிறைத்திட,பொருளாதராம் பற்றி நடக்கவிருந்த கலந்துரையாடல் உடனடியாக பிரஜினை சந்திக்கச் செல்லவும் தடையாக இருந்தது.
மருத்துவமனையில் அமர்ந்து இருந்த பிரஜினுக்கோ,பவனியின் மருத்துவ அறிக்கைகளை படித்த பின்னர்,மெல்லிய அதிர்வு.
அவள் ஜெகஷிவ்வை நோக்கி கிளம்பும் முன்னமே,அவளுக்கு உறுப்புக்களை மெதுமெதுவாய் செயலிழக்கச் செய்திடும் கொடிய வகை மருந்தொன்றை உட்செலுத்தியிருக்க,அதன் முதற் கட்டமே இந்த மயக்கம்.
இது நாள் வரை,அந்த மருந்துக்கான மாற்று மருந்து தன்னிடம் இருப்பது ஒரு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.கார்வேனியா,போரின் போது கண்டறிந்த அம்மருந்து,அவர்களின் இராஜ இரகசியம்.
அதற்கான மாற்று மருந்தை அறிமுகம் செய்யாததன் காரணமும்,ஏதேனும் நேரின் அவர்களின் தற்காப்புக்காகத் தான்.மறைந்திருக்கும் ஒற்றர்கள் யார் என்பது தெரியாது இருப்பதால்,நாட்டு மக்களிடம் கூட மாற்று மருந்து இருப்பதோ,அந்த கொடியை வகை மருந்து உடலில் ஏறியதை கண்டறியும் பரிசோதனை இருப்பதோ,தெரிவிக்கப்பட்டு இருக்கவில்லை.
இவ்விடயங்கள் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்து இருக்க,பவனியின் நிலை கண்டதுமே அவருக்கு புரிந்து போயிற்று.
சாத்வேதுக்கே,ஒரு தடவை இம்மருந்தை செலுத்தியிருக்க,மருத்துவம் பார்த்தது,அவர் ஆயிற்றே.அந்த அனுபவம் உடனே ஊகிக்கச் செய்ய,பரிசோதனை மேற் கொண்டவருக்கு,அது உறுதியாகது சத்தியமான அதிர்வு தான்.
மாற்று மருந்து இல்லை என்று தெரிந்தும்,மருந்தை கொடுத்து இருப்பின்,அது காப்பாற்ற முடியாது என்கின்ற எண்ணத்தில் தானே.
ஆக,இது ஒரு கொலைமுயற்சி!
அவளைப் பழிவாங்கும் படலமாய் இருக்கவும் வாய்ப்புண்டு.அபிஷேக்கை பிழைக்க விடாமல் செய்வதற்கு உண்டாக்கப்பட்ட சதியாகவும் இருக்கக் கூடும்.ஏனோ,ஒரு வித குற்றவுணர்வாய் இருந்தது,அவருக்கு.
நாடு – அரசியல் – பழிவாங்கல் எதுவுமின்றி,அரசியல் தந்திரங்கள் எதுவும் அறியாமல் நிம்மதியாய் வாழ்ந்து வந்தவளை,இந்த அதிகார சாக்கடைக்குள் இழுத்து விட்டது,தவறாகவே தோன்றிட நெற்றியொ நீவிக் கொண்டவருக்கு,யார் இதை செய்து இருப்பார்கள் என்று ஊகிக்க கூட இயலவில்லை.
சாத்வேத்,வந்த சமயம் அவரிடம் விடயத்தை கூறிட,அவருக்குமே எதுவும் புரியவில்லை.
“காஷ்யப் தான் நமக்கு ஒரே ஒரு எதிரின்னு நெனச்சிகிட்டு இருந்தேன்..இப்போ கண்ணுக்கு தெரியாம யாரு இது..?” தனக்குள் கேட்டுக் கொண்டவருக்கு,இதயம் தேடிப் பயணிக்கும் விடயம்,அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதில் அத்தனை உறுதி.
அடுத்த கட்ட நடவடிக்கையை,யோசித்திட முடியாமல் தளர்ந்து போய் அமர்ந்தார்,அவர்.
●●●●●●
பூமியில்..
நேற்று முழுவதும் அரிமா அவன்,பாராமுகம் காட்ட,அவள் வலியச் சென்று பேச முயன்ற போதிலும்,நாசூக்காய் தவிர்த்து விட,அவளுக்கோ ஏனோ மனதில் அத்தனை பாரம்.
அவள் பேசியது தான்.வார்த்தைகள் மொத்தமும் அவளது தான்.பிரிவென்று முடிவெடுத்த பின்னர்,அவனின் பாராமுகம் அவளுக்கு சரியெனத் தோன்றாமல்,வலியைத் தரும் காரணத்தை துருவிடவில்லை,தமிழவள்.
அரிமா அவனுக்குமே,சிந்திக்க அவகாசம் அவசியமாகிற்று.அவனுமே,அவளுடன் கை கோர்த்திடும் எண்ணத்தில் இல்லை.அது நிராசை என்றே மனதில் பதிய வைத்திருந்தான்.
அந்த திண்ணத்தில் தானே,இந்த காதலுடன் வாழ்ந்து விட வேண்டியது தான்,என்கின்ற முடிவுக்குள் அவன் வந்தது.
அவளை அவ்வீட்டுக்கு அனுப்ப இயலாது என்கின்ற காரணம் மட்டுமே,அவனை தாலி கட்ட வைத்தது.முடிச்சிடுகையிலேயே,முடிவெடுத்து இருந்தான்,அந்த பந்தத்தை அறுத்துக் கொள்வதென்று.
அவள் மனதில் யாரேனும் இருந்தால் கூட,அதை செய்வதாய் உறுதியும் எடுத்துக் கொண்டவனுக்கு,அவளின் நடவடிக்கைகளை பார்க்கையில் அவள் மனதில் வேறொருவன் இருக்க வாய்ப்பில்லை என கணிக்க முடிந்தது.
அதுவே,அவனுக்கு பெருத்த நிம்மதி தான்.
அவள் வாய்மொழியாக கூறக் கேட்பின்,அது இன்னும் அவனை ஆசுவாசப் படுத்தும்.
அவனே,அவளிடம் இதைப் பற்றி பேசி,அவள் வாழ்க்கையை பார்த்துக் கொள்ளச் சொல்லலாம் என்றிருக்க,அவளே வந்து பேசியது கொஞ்சம் கோபத்தை கிளறி விட்டது.
அவன் நினைத்ததை அவள் பேசியிருக்க,அவள் மனதை தான் துளியும் பாதிக்கவில்லையா என்கின்ற ஆதங்கம் எழுவதை அவனால் தடுக்கவே முடியவில்லை.
என்னவாயினும்,அவள் அப்படி பேசியிருக்க கூடாது;பேசியிருக்கவே கூடாது என்று தான் முரண்டு பிடித்தது,அரிமாவவனின் மனம்.
அவள் மீது தவறில்லை என்று புரிந்தும்,அவன் முறுக்கிக் கொள்வதன் காரணம் காதல் தானே.
அந்த எண்ணத்தில் அவனிருக்க,அன்று காலையும் அவளின் முகம் பாராது வெளியேறிவனின் நடத்தையை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தனர்,தோழர்கள்.
என்னவென்று கேட்டாலும்,வாயைத் திறந்து பதில் சொல்லி விட்டுத் தான் மறுவேலை பார்ப்பான் என்று அறிந்தவர்களோ,எதையும் கேட்டுக் கொள்ளவுமில்லை.
பிரதீஷிடம் இருந்து வந்த தகவலுக்கேற்ப,ஆட்கள் நிறைந்த கடைத்தெரு ஒன்றில் வண்டியை நிறுத்தச் சொல்லி கட்டளையிட்டவனின் கட்டளைக்கேற்ப,ஒரு ஓரமாய் வண்டியை நிறுத்தினான்,டேவிட்.
அவனின் வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே இருந்தது,அக்கடைத்தெரு.
“இங்க தான் இருக்குறதா பிரதீஷ் சார் கிட்ட இருந்து இன்ஃபார்மேஷன் வந்துருக்கு..இந்த ஏரியா ஐ மீன் கிட்டத்தட்ட த்ரீ ஹன்ட்ரட் ரேடியஸ்குள்ள தான் நாம தேட்ற ஆள் இருக்கும்னு சொல்றாரு..”
“சரி இப்போ இங்க இருக்குறவங்க எல்லாரயும் நீ தொட்டு தொட்டு பாக்கப் போறியா..?” கேட்ட அமிதேஷோ,ஆஜ்வினிடம் பல்ஸ் மானிட்டர் ஒன்றையும் நீட்டி இருந்தான்.
“ம்ஹும்..அதுக்கு தான் வேற வழி இருக்கு..” என்றவனோ,காரில் இருந்து கையில் எடுத்ததை புரியாமல் பார்த்தனர்,மூவரும்.
“இது என்னடா வெயிட் அளக்குற மெஷின் மாதிரி இருக்கு..ம்ஹும் வெயிட் அளக்குற மெஷினே தான்..இத வச்சி என்னடா பண்ணப் போற…?” கேட்டவனோ,அதை திருப்பிப் பார்த்திட,ஓரமாய் பொருத்தப்பட்டிருந்த சிறு கருவி அவனின் புருவத்தை சுருங்க வைத்தது.
“இது என்னடா..?”
“இது என் பாடிக்குள்ள இருக்குற ரேடியேஷன சென்ஸ் பண்ற ஒரு சென்ஸர் இருக்குற சின்ன இக்விப்மன்ட்..இத ஆன் பண்ணி நா டச் பண்ணா ஐ மீன் ரேடியேஷன் இருக்குறவங்க இந்த ஸ்கேல டச் பண்ண அது ஒரு சவுண்ட தரும்..” கூறியவாறு,அதை ஆன் செய்து அவன் கரத்தை வைத்திட,”டிக்” என்ற ஒலி கேட்டது.
அவன் கூறியதை முழுதாய் நம்பாமல்,அமிதேஷ் தொடவும் அதில் இருந்து எந்த பிரதிபலிப்பும் வராது போகவே,மூவரின் விழிகளிலும் அதிர்வு.
“டேய்! நீ இல்லன்னா பவனி இல்லாம கண்டு பிடிக்க முடியாது..நீங்க தொட்டா மட்டுந்தான் உங்களால கண்டு பிடிக்க முடியும் அப்டின்னு தான பிரதீஷ் சார் சொன்னாரு..அதனால தான பவனிய கூட அங்க அனுப்பி வச்சது..”
“வெயிட்..பொறுமயா இரு..பூமிக்க வர்ரதுக்கு முன்னாடி நாள் வர நானும் அப்டி தான் நெனச்சி கிட்டு இருந்தேன்..எனக்கு டவுட் இருந்துச்சு தான்..பட் கன்ஃபார்ம் இல்ல..அதுல்லாம ஒரே ஒரு சென்ஸர் மெஷின் மட்டுந்தான் கைல கெடச்சுது..”
“சரி அப்போ இத பவனி கைல கொடுத்துருக்கலாம்ல..”
“அத யோசிக்காம இருப்பேனா நான்..இது நம்ம ப்ளேனட்ல வர்க் ஆகாது..அப்டி தான் உருவாக்கப் பட்டிருக்கு..லம்னோரால இருந்து வர்ர சில ரேஸ் இந்த சென்ஸிங் எபிலிடிய டிஸ்டர்ப் பண்ணும்..இது பூமில மட்டும் அந்த ரேடியேஷன கண்டு பிடிக்கிறதுக்காக உருவாக்கப்பட்ட சென்ஸர் இருக்குற மெஷின்..”
“ஓஹ்!”
“இப்போ நா இந்த ஸ்கேல்ல இங்க வக்கப் போறேன்..ஸ்கேல்ல வந்து வெயிட் மெஷர் பண்ணிட்டு போறவங்களுக்கு பணம் தர்ரதா சொல்லுங்க..ஸோ எல்லாரும் வருவாங்க..மோஸ்ட்லி எல்லாரும் வருவாங்க.?அப்போ நம்மளுக்கு ஈசியா இருக்கும்..”
“………………..”
“அதுவும் இல்லாம இதுல ஒரு தடவக்கி மேல ஒருத்தர் வந்து டச் பண்ணா.. ஐ மீன் ஏறி நின்னா அதயும் காட்டிக் கொடுக்கும்..ஸோ நமக்கு ஆல்ரெடி வந்தவங்கள கண்டு பிடிக்கிற செரமம் இல்ல..”
“……………….”
“நாம ரெண்டு பேர் இங்க இருப்போம்..எனக்கு ஸ்பேஷ் ஷிப்கு ஒரு வாட்டி போய் வரனும்..யாராச்சும் ஒருத்தர் வாங்க என் கூட..” அவன் கூறிக் கொண்டு இருக்கும் போதே,இடைவெட்டினான் அமிதேஷ்.
“பிரதீஷ் சார்கு இந்த சென்ஸர் மெஷின் பத்தி எதுவும் தெரியாது..தெரிஞ்சு இருந்தா நாங்க கெளம்பும் போது நம்ம கிட்ட சொல்லி இருப்பாரு..அதுவும் இல்லாம சாத்வேத் சார் கிட்ட கூட இத பத்தி எதுவும் சொல்லல..அப்றம் எப்டி உன் கிட்ட மட்டும் இது..?”
அவனின் கேள்வியை மற்றைய இருவரும் ஆமோதிப்பது போல்,அரிமாவவனின் முகத்தை ஏறிட,அவனோ அதற்கு பதில் சொல்லாமல் நழுவிட,தோழர்களுக்குத் தான் மண்டை காய்ந்தது.
பணம் என்றதுமே ஆட்கள் திரளாய் திரளாய் அவ்விடம் வர,டேவிட்டுமே இத்தனை சனத்தை எதிர்ப்பார்த்து இருக்கவில்லை.
“இன்னிக்கி ஒரு நாள்லயே நம்மளால கண்டு பிடிச்சுர முடியும் போல இருக்க..” அமிதேஷ் டேவிட்டிடன் நக்கலாய் மொழிந்திட,அவனுமே அதை ஒப்புக் கொண்டான்.
“கவனமா இருங்க..ஏதாச்சும்னா கான்டெக்ட் பண்ணுங்க..” கூட்டத்தை ஒரு முறை பார்த்து,அவர்களிடம் மென்குரலில் கூறி விட்டு,விஷ்வினை அழைத்துக் கொண்டு சென்றான்,அரிமாவவன்.
டேவிட்டின் வீட்டின் பின் புறத்தில் இருக்கும் அடர்ந்த காட்டுப் பகுதி அது.ஆட்கள் நடமாட்டம் என்பது அப்பகுதியில் மிகவும் அரிது.அமானுஷ்ய சம்பவங்கள் பற்றிய கட்டுக் கதைகளும் பரவியிருந்த படியால்,பகல் வேளையில் கூட ஆட்கள் நடமாடப் பயப்படுவர்.
அமைதியான அத்துடன் அமானுஷ்ய பயத்தை தந்திடக் கூடிய சூழல்.கருதினால் ஒரு விதத்தில்,அவன் இவ்விடத்தில் வீட்டை அமைத்திட,அரிமாவவனுமே காரணம் தான்.
அடர் காட்டினுள் பிரவேசித்தவர்களோ,பழக்கப்பட்ட பகுதி போன்று நடந்து செல்ல,மையப்பகுதியை அண்டும் போதே,வெளிச்சம் மங்கிப் போய்,இருளின் சாயல்.
ஓரிடத்தில் மட்டும் ஒளிக்குவியல் போல தோற்றமளித்தது.
அடையாளமிடப்பட்டிருந்த இடத்தில் இருந்து தேடி எடுத்த கைக்கடிகாரம் போன்ற கருவியின் நீல நிற பொத்தானை அழுத்தியதும்,கண்ணைக் கூசிடச் செய்யும் விதமாய் வெளிவந்து கொண்டிருந்த கதிர்கள் அடங்கிப் போக,பார்வை வீச்சில் விழுந்தது,அவர்களின் ஸ்பேஸ் ஷிப்.
ஏறத்தாழ ஆறு பேர் பயணம் செய்யக் கூடிய அளவில் அமைக்கப்பட்டதால்,இடத்தை அதிகமாகவே பிடித்திருந்தது.
அதற்குள் ஏறி இருவரும் அமர்ந்து மீண்டும்,சிவப்பு நிற பொத்தானை அழுத்த,பார்வையில் இருந்து தப்பியது,அவர்களும் அவர்களின் ஸ்பேஸ் ஷிப்பும்.
ஸ்பேஸ் ஷிப்பின் முற்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த திரையை அவர்கள் இயக்கிடவும்,சடசடவென்று வந்து சேர்ந்தன,பிரதீஷினதும் அவ்னித்தினதும் காணொளிகள்.
அதை ஓடவிட்டுப் பார்த்திட,விஷ்வின்னின் விழிகளில் அதிர்வு தாக்கிட,அரிமா அவனின் தாடையோ இறுகிப் போனது.
பவனியின் நிலையை அவ்னித் கூறியிருக்க,அதைக் கேட்டவனால் அவளின் நிலைக்கு யார் காரணமென்று சரியாகவே ஊகித்திட இயலுமாய் இருக்க,ஆத்திரம் எழுந்தாலும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.
வின்னோரா சென்ற பிறகே,அவர்களைப் பற்றி யோசிக்க வேண்டும் என முடிவு எடுத்தவனுக்கு,பூமியில் இருக்கும் இதயத்தை தேடிப் பிடிப்பது,நிர்ப்பந்திக்கப்பட்டது போன்றதோர் எண்ணம்.
“ச்சே..பவனிய நாம இன்னும் கண்காணிச்சு இருக்கனும்..சேஃப்டி விஷயத்துல நாம தவறிட்டோம்..” என்க,அதை ஆமோதித்த அரிமாவவனுக்குமே,அவளின் நிலையில் மனவருத்தமே.
அதன் பின்னர் இருவரும் கிளம்பி கடைத்தெருவுக்கு வர,அங்கு முகத்தில் களைப்புடன் அமர்ந்து இருந்தனர்,மற்றைய இருவரும்.
விழி வழியேயான கேள்விக்கு,மறுப்பான உதடு பிதுக்கல் பதிலாய் வர,அப்படியே இரு மணி நேரங்கள் கடந்தது.
“டேய் அதே மாதிரி தான் டா..முன்ன இருந்த மாதிரி அதே எடத்த தான் பிரதீஷ் சார் சொல்றாரு..” என்கவும்,அவர்களுக்கு ஆயாசமாய் இருந்தது.
கடைத்தெருவில் இருந்த முக்கால் வாசிக்கு மேற்பட்டோருக்கு,காசு கொடுத்தாயிற்று.ஆயினும்,அவர்கள் தேடும் நபர் கிடைக்காது போக,சலிப்புத் தட்டியது.
“இந்த எடம் இல்லன்னா வீடு வீடா போய் தான் தட்டிப் பாக்கனும்..” டேவிட் அலுப்பாய் உரைத்திட,அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை,அவர்களுக்கு.
இடையில் ஒரு தடவை தங்கியிருக்கும் வீட்டுக்கு அரிமாவவன் செல்ல,அவளைத் தேடித் தேடித் தான் சுழன்றோய்ந்தன,விழிகள்.
மூன்று வருடங்கள் அவளைப் பாராமல் இருக்க முடிந்தவனுக்கு,தலைகீழாகி இருக்கும் தன்னிலையை எண்ணி,அதிர்வலைகள் கிளம்பாவிடின் தான் அதிசயம்.
“நம்ம பூமிக்கு ஏலியன்ஸ் வந்து இருக்காங்களாமே..எப்டி இருப்பாங்களோ தெரில..” தமக்குள் பெண்கள் கதையளந்த வண்ணம் இருக்க,அதை கேட்ட அரிமா அவனுக்கு,புறையேறியது தான் மிச்சம்.
டேவிட்டின் மனைவி ஸ்டெல்லாவுக்கும்,அவன் இந்த உலகத்தைச் சேர்ந்தவன் அல்ல என்கின்ற விடயம் தெரியாது.உண்மையை ஒப்புவித்தால்,காதல் கை கூடாமல் போய் விடுமோ என்கின்ற பயத்தில் அதை அப்படியே மறைத்தும் விட்டான்.
அரிமா அவன் வந்த அரவத்தில்,ஸ்டெல்லாவோ அவனை கவனிக்கும் படி அவளை துரத்தி விட,அவன் பின்னூடு வந்தவளுக்கு,அவனிடம் பேசவும் தயக்கம்.நீடித்திடும் பாராமுகத்தில்,அவளும் சோர்ந்து போயிருந்தாள்.
அவனோ,அவளை வந்ததை கண்டும் காணாதது போல்,நீரை வாயில் சரித்து விட்டு,தன்னறைக்கு படியேற,அவளின் பாதங்களும் அவனின் பாதச் சுவட்டை பின்பற்றின.
அவள் வருவது தெரிந்தும்,அவன் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்திட,அவளுக்கு என்னவோ போல் ஆனது.
தான் பேசியதற்குத் தான் இத்தகைய கோபம் என்றும் அவளால் யோசித்திட இயலவில்லை.அவளைப் பொறுத்த மட்டில் அவள் பேசியதில் எந்தப் பிழையையும் காணவில்லையே,அவள்.
யோசித்தவளுக்கு,அவனிடம் பேசி விடுவதே உசிதம் எனத் தோன்றிட,வெளியே வரும் வரை பொறுமை காப்போம் எனக் கருதி அவ்விடமே தரித்தாலும்,முடியாது போக அவனின் அறைக்கதவை தட்டி விட்டவளுக்கு,படபடவென்றிருந்தது.
“கம் இன்..” அவனின் கம்பீரக் குரல் கேட்க,ஏனென்று தெரியாமல் வெகுவாய் படபடத்துப் போனாள்,பாவையவள்.
கதவைத் திறந்து அவள் நுழைந்த பின்னும்,அவனோ தலையை துவட்டிக் கொண்டே,வேறு வேலையொன்றில் ஈடுபட,அவளுக்குள் ஆற்றாமை.
“வேதாஜி!”
“எஸ்..” திரும்பவேயில்லை,அவன்.
“சாரி..” என்றாள்,தவிப்பான குரலோசையில்.
“எதுக்கு..?” தெரியாதது போலவே,கேட்டான் அவன்.தவறில்லை என்ற போதிலும்,தவறென்றே மனம் வாதிட்டது.
“நா நேத்து பேசுனதுக்கு..”
“நீ பேசுனதுல எந்தத் தப்பும் இல்லயே..அப்றம் எதுக்கு சாரி கேக்கற..?” கொஞ்சம் அழுத்தமான குரலில்,அவன் விழி பார்த்துக் கேட்டிட,அந்தப் பார்வையின் அர்த்தம் சத்தியமாய் புரியவில்லை,பாவைக்கு.
“நா..” அவள் ஏதோ கூற வர,இடை மறித்து வேலையிருப்பதாய் அவன் கிளம்பிச் செல்ல,அடிபட்டுப் போனது அவளின் மனம்.
அதே மனநிலையில் அவளிருக்க,பார்வதியிடம் இருந்து அழைப்பு வர,யோசனையுடனேயே அவள் ஏற்றது.
அடுத்த சில மணித்தியாலங்களில்,இருட்டறையில் அவளிருக்க,ஏனோ அவளிதயம் பயத்தில் அதி வேகமாய் துடித்தது.
துடிக்கும்.
2026.03.27
