நித்யா பதறிக்கொண்டு பயந்து போய் அமர்ந்திருந்தாள். எங்கே இவர்கள் பேசுவது போல் அவனுக்கு தன்னை திருமணம் முடித்துக் கொடுத்து விடுவார்களோ என்று..
“மா நான் எந்த தப்பும் பண்ணலைன்னு சொல்றேனே.. என்னை ஏன் நம்ப மாட்டேங்குறீங்க”.
“இப்போ என்ன பண்றதுன்னு தெரியலையே.. என் பொண்ணு வாழ்க்கை இப்படியா ஆகணும். ஒரே பொண்ணு எத்தன ஆசையா வளர்த்தோம். எங்க குடும்பத்து மேல யாரு கண்ணு பட்டுச்சோ. எல்லாம் தப்பாவே நடக்குது” என்று கூறி பரமேஸ்வரி ஒருபுறம் அழுதுக் கொண்டிருக்க.
யாரின் முகத்தையும் நிமிர்ந்தும் பார்க்க முடியாமல் குறுகிப்போய் அமர்ந்திருந்தாள் நித்யா.
“அடுத்து ஆக வேண்டியத பாப்போம் பரமு, இப்படி அழறதால என்ன ஆகிட போகுது” என்றார் சாரதா.
“ஒரு நிமிஷம் ஆன்ட்டி” என்ற பவித்ராவை அனைவரும் ‘என்ன’ என்பது போல் பார்க்கவும்.
அவளோ நேராக கமலேஷின் முன்பு சென்று நின்றவள், “நித்யா சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? அவ எந்த தப்பும் செய்யலனு சொல்றா” என்றாள் தீர்க்கமான குரலில்.
பவித்ராவின் வார்த்தையில் நித்யா அழுது கலைத்த முகத்தோடு கமலேஷை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனும் நித்யாவை பார்த்துக்கொண்டே, “எனக்கு அவ மேல முழு நம்பிக்கை இருக்கு. என்னை பொறுத்த வரைக்கும் இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. எவனோ செஞ்ச தப்புக்கான தண்டனையை இவளுக்கு கொடுக்கிறதுல எனக்கு விருப்பமும் இல்ல” என்றவன்.
தன் பெற்றோரைப் பார்த்து, “நானும், நித்யாவும் அக்கா கல்யாணத்துக்கு அப்புறம்லருந்து காதலிச்சிட்டு இருக்கோம். எனக்கு அவள ரொம்ப பிடிக்கும். நிச்சயமா அவ சொல்றது உண்மை தான்னு எனக்கு அவ மேல முழு நம்பிக்கை இருக்கு. அப்படியே ஒரு வேளை, ஏதாவது தப்பே நடந்திருந்தாலும், நான் நிச்சயமா அவள தான் கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன். கற்புன்றது உடம்புக்கு தான் மனசுக்கு கிடையாது. அவ மனசு முழுக்க நான் தான் இருக்கேன்னு எனக்கு தெரியும். எவனோ ஒருத்தன் அவ மேல சேத்த தெளிச்சிட்டான்றதுக்காக அவள அப்படியே நட்டாத்துல என்னால விட்டுட்டு போக முடியாது. அந்த சேத்துலருந்து அவள சுத்தம் பண்ணி அவளோட என் வாழ்க்கைய நான் சந்தோஷமா அமைச்சுப்பேன்” என்று திடமாக கூறினான்.
அனைவருமே அவனை அதிர்ந்து தான் பார்த்தனர்.
“கமலேஷ் அண்ணாவுக்கு உங்க பொண்ணு மேல இருக்க நம்பிக்கை கூட உங்களுக்கு இல்லையா.. அவ தான் இவ்வளவு சொல்றாளே, அங்க எந்த தப்பும் நடக்கலன்னு.. இப்போ அவர் வாயாலேயே கேட்டுட்டீங்க. இதுக்கு மேலயும் அந்த பையனுக்கு நித்யாவ கட்டிக் கொடுக்கணும்னு நீங்க நினைக்கிறீங்களா? அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிறாங்க. யாரோ பண்ண தப்புக்கு நித்யாவ தண்டிச்சிடாதீங்க. இது ஒன்னும் புராண காலமில்ல, தப்பு பண்ணலன்னு நிரூபிக்க தீக்குள்ள இறங்க” என்றவள் நித்யாவின் அருகில் சென்று அவளின் தோளைத் தட்டிக் கொடுத்தாள்.
அழுகையோடு பவித்ராவை அணைத்துக் கொண்ட நித்யாவிற்கு பேச வார்த்தைகளே இல்லை. அப்படி ஒரு அழுகை.
இந்துவும் பவித்ராவின் அருகில் வந்தவள், “பவி சொல்றது சரிதான். யாரோ பண்ண தப்புக்கு நாம ஏன் நித்யாவ தண்டிக்கணும். அவ மேல எந்த தப்பும் இல்ல” என்றவள்.
தன் தாய், தந்தையை பார்த்து, “அப்பா நீங்க என்ன சொல்றீங்க? கமலேஷ்க்கு இதுல விருப்பம். ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்க, நம்ம வீட்டு பொண்ணு பா அவ.. அவ மேல எங்க எல்லாருக்குமே நம்பிக்கை இருக்கு. நம்ம பேசினபடியே இந்த கல்யாணத்தை நடத்துவோம்”.
“என்னம்மா இப்படி கேட்டுட்ட.. எங்களுக்கு மட்டும் நித்யா மேல நம்பிக்கை இல்லையா என்ன? எங்களுக்கு கமலேஷ்க்கு நித்யாவை கல்யாணம் பண்ணி வைக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்ல முழு சம்மதம் தான். சம்பந்தி, கல்யாணம் பண்ண ஆக வேண்டியதை பாருங்க” என்றவரின் கையை உணர்ச்சிப் பெருக்கோடு பிடித்துக் கொண்டார் திருமூர்த்தி.
திருமூர்த்தியும், பரமேஸ்வரியும் அனைவரையும் நன்றி பொங்க பார்த்தனர்.
“அதான் கமலேஷ் இவ்வளவு தூரம் சொல்றானே சம்பந்தி, இன்னும் எதுக்காக நீங்க கண் கலங்கிட்டு இருக்கீங்க. விடுங்க, ஆக வேண்டியதை பார்ப்போம்” என்று அவனின் தாயும் கூற.
தன் கை கூப்பி கண்ணீர் சிந்திய பரமேஸ்வரி, “ரொம்ப நன்றி சம்பந்தி. என் பொண்ணோட வாழ்க்கையே அழிஞ்சிடுமோனு பயந்துட்டேன்”.
“சரி, அதான் எல்லாரும் ஒத்துக்கிட்டாங்களே.. எதுக்காக நாள கடத்திக்கிட்டு, அந்த பையன் திரும்ப ஏதாவது பிரச்சனை பண்ண போறான். பேசாம நாளைக்கே கல்யாணத்தை முடிச்சிடுவோம்” என்றார் சாரதா.
“இல்ல ஆன்ட்டி, கல்யாணம் பேசின மாதிரி இரண்டு வருஷம் கழிச்சு எல்லாம் வேண்டாம். அதுக்காக உடனேவும் அவசர கதியில செய்ய முடியாது. காதலிக்கும் போது நீங்க ரெண்டு பேரும் உங்க கல்யாணத்த எப்படி நடத்தணும்னு ஆசைப்பட்டீங்களோ, அதே போல பெருசாவே நடத்துவோம். அதுக்கு ஒரு மாசம் நேரம் இருந்தா போதும்ல” என்ற பவித்ரா யஷ்வந்தை பார்க்க.
அவனோ அவளையே பார்த்துக் கொண்டு, “போதும்”.
“ஆமா, பவித்ரா சொல்றது தான் சரி. எவனுக்கோ பயந்து நாங்க ஏன் எங்க வாழ்க்கையோட முக்கியமான தருணத்தை வீணடிச்சுக்கனும். எனக்கும், நித்யாவுக்கும் பிடிச்ச போல நாங்க ஆசைப்பட்ட போல தான் இந்த கல்யாணம் நடக்கும். ஒரு மாசத்துல ஒரு நல்ல நாள் பாருங்க, ஊரைக் கூட்டி ஜாம் ஜாம்னு தான் எங்க கல்யாணம் நடக்கணும்” என்றிருந்தான் கமலேஷ்.
அதன் பிறகு மறுநாளே கடத்தியவனை போலீஸ் கைது செய்திருந்தனர். ஒரு மாதத்தில் நித்யா மற்றும் கமலேஷுற்கு அவர்களின் விருப்பப்படியான திருமணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாய் துவங்கியது.
“கொஞ்ச நேரத்துல என்னல்லாமோ நடந்து போச்சு பரமு. உயிரே போன மாதிரி ஆயிடுச்சு. நித்யாவ காணும்னதும் என்ன பண்றதுன்னு ஒன்னுமே ஓடல. சாரதா வேற அந்த பையனுக்கே கட்டிக் கொடுத்திடுவோம்னு சொல்லவும், நானும் சமபந்தி வீட்டு ஆளுங்க என்ன நினைப்பாங்களோனு யோசிச்சு, ஊருக்கு பயந்து அதை தான் செஞ்சாகணும்னு நினைச்சிட்டேன். ஆனா, அந்த பொண்ணு எப்படி பேசிச்சு பாத்தியா..”.
கட்டிலில் படுத்துக்கொண்டு சோர்வாக பரமேஸ்வரியிடம் கூறினார் திருமூர்த்தி.
“பவித்ர பாரிஜாதம்” என்ற தன் மனைவியின் விளிம்பில் அவரை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தார்.
அவரின் அருகில் ஒருக்களித்துப் படுத்திருந்த பரமேஸ்வரி அவரின் முகத்தை பார்த்து, “அந்த பொண்ணோட பெயர், பவித்ர பாரிஜாதம்”.
“ம்ம்.. யஷ்வந்த் லைஃப்ல நாம கணக்கு போட்டத விட என்னல்லாமோ நடந்து போச்சு” என்றவாறு பெருமூச்சை வெளியேற்றியவர்.
“சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம். மாசம் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துறவங்க. பசங்களுடைய படிப்பு செலவுக்கு கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வச்சு அவங்களயும் கரை சேர்த்தாச்சு. அடுத்து கல்யாணம்னு வரும் போது அவங்களுக்கு இப்படி தான் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும்னு ரொம்பவே ஆசைப்பட்டோம்.
அதேபோல, சேரனுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சு. அடுத்து யாஷ், நம்ம வீட்டுலயே ரொம்ப திருதிருன்னு குறும்புக்காரனா சுத்தி வருவான். அவனுக்கும் சேரனை போல நல்ல வாழ்க்கை அமைச்சு தரணும்னு நினைச்சேன். எங்க அந்த பொண்ண கட்டி அவன் வாழ்க்கை வீணா போயிடுமோ, ஏமாந்துடுவானோன்னு ரொம்ப பயந்துட்டேன் பரமு. ஆனா, விதி அவனுக்கு இப்படி தான் நடக்கணும்னு இருந்திருக்கு. காலத்துக்கு தகுந்த மாதிரி நம்மளும் நம்ம மனச மாத்த தான வேணும்.
அவன் பிடிச்சிருக்குன்னு கல்யாணம் பண்ணி கூட்டி வந்துட்டான். என்ன தான் அந்த பொண்ணு தப்பான இடத்துல வளர்ந்திருந்தாலும், எந்த தப்பும் செய்யலனு தான யாஷ் சொன்னான். அந்த பொண்ணு பேசின பேச்செல்லாம் அவளுக்காகவும் சேர்த்து பேசின மாதிரி தான் எனக்கு தோணுச்சு. ஒரு வகையில பார்த்தா நித்யாவ போல தானே அந்த பொண்ணும் நம்ம முன்னாடி ஒரு நாள் அப்படி நின்னா. அந்த பொண்ணு தப்பான இடத்துல வளர்க்கப்பட்டிருக்கா, கிட்டத்தட்ட ரெண்டு பேருடைய நிலைமையும் ஒரே போல தான.. அவங்க மேல எந்த கலங்கமும் இல்லன்னு நம்ம கிட்ட நிரூபிக்கணும்னு எப்படி தவிச்சு போயிருப்பாங்க இல்ல. ஒருவேளை, அந்த பொண்ணு மட்டும்..”.
“பவித்ரா.. பவித்ரானே சொல்லுங்க” என்று திருத்தினார் பரமேஸ்வரி.
மென் புன்னகையுடன், “சரி, அந்த பொண்ணு பவித்ரா மட்டும் பேசாம இருந்திருந்தா, இந்நேரம் அந்த பையனுக்கே நம்ம நித்யாவை கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம்னு தப்பான முடிவ கூட எடுத்திருப்போம் இல்ல”.
“நடக்கிறது எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்க வேண்டியதுதாங்க. காரணம் இல்லாம எதுவும் நடக்காது. பவித்ரா நம்ம வீட்டுக்கு வந்ததும் முன்னமே விதிக்கப்பட்டது தான். எப்படியோ எல்லாம் நல்லபடியா முடியுது. அதுவரைக்கும் சந்தோஷம்னு நினைச்சுக்க வேண்டியது தான்” என்றார் பெருமூச்சோடு
வெகு நேரம் இருவரும் இப்படியே பேசிக்கொண்டு இருந்தவர்கள் எப்பொழுது அயர்ந்து உறக்கத்திற்கு சென்றனர் என்பதை அவர்களே அறியவில்லை.
என்ன தான் அங்கிருந்து வந்து விட்டாலும், எங்கே அவனுடனே தன் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விடுவார்களோ என்ற பயம் நித்யாவை வெகுவாய் பிடித்துக் கொண்டது.
இப்பொழுது அந்த பயம் எல்லாம் வீண் என்பதைப் போல் நீங்கிவிடவும், நிம்மதியான உறக்கத்தை தழுவி இருந்தாள்.
அதிலும், கமலேஷின் வார்த்தைகள்.. எத்தனை பெரிய வார்த்தையை கூறிவிட்டான். தவறே நடந்திருந்தாலும் தன்னை மணப்பெண் என்றானே.. இதை விட அவனின் காதலின் ஆழத்தை விவரிக்க முடியுமா என்ன.. தன் தேர்வு சரிதான் என்பதிலேயே அகம் மகிழ்ந்துப் போனாள். அன்றைய இரவு அப்படி ஒரு மன நிறைவான உறக்கம் அவளுக்கு.
********
“என்ன பவி டல்லா இருக்க?”.
“கொஞ்சம் அலைச்சலா இருந்துச்சுல இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு டல்லா இல்லனா தான் ஆச்சரியப்படனும். டல்லாகாம வேற என்ன ஆவாங்கலாம். பாவம் நித்யா, ரொம்ப அழுதுட்டா எனக்கும் ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. சின்ன பொண்ணு, ரொம்ப பயந்திருப்பா இல்ல பாவா. அதுவும் அவனுக்கே கல்யாணம் பண்ணி கொடுத்திடுவோம்னு ஆன்ட்டி பேசவும், அவ முகமே வெளிறிப் போச்சு. ஒரு நிமிஷம் எனக்கு அவள என்னை பார்த்த போலவே இருந்தது பாவா”.
“என்னடா” என்றவனோ அவளை தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான்.
“நிஜமா தான் பாவா, நித்யாவுடைய நிலைமையில் தானே நானும் நின்னேன். எந்த தப்பும் பண்ணலன்னாலும், நிரூபிக்க வழி இல்ல. பார்க்கிறவங்க பார்வை எல்லாமே அந்த மாதிரி இடத்துல வளர்ந்த பொண்ணு தப்பானவன்ற மாதிரி தானே இருக்கும். எவ்வளவு கஷ்டமா இருந்துச்சுன்னு தெரியுமா.. யார் முகத்தையும் பார்க்க முடியல. அப்படியே கூனிக் குறுகிப் போயிட்டேன். நித்யாவ அப்படி பார்க்கவும் எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு பாவா. தப்பே பண்ணாம அந்த பொண்ணு எதுக்காக தண்டனையை அனுபவிக்கணும். அதுவும் அப்படி ஒரு கேடு கெட்டவனோட ஒரு வாழ்க்கை தேவையா?”.
