மொழி – 37

“அன்னைக்கு நான் தவிச்சு போய் பேச முடியாம கூனிக் குறுகி நின்னப்போ எனக்காக நீங்க இருந்தீங்க. எனக்கும் சேர்த்து நீங்க பேசுனீங்க.. ஆனா, நித்யாவுக்கு அப்படி கூட ஒரு ஆள் இல்ல இல்ல.. நிச்சயம் கமலேஷ் அண்ணா விட்டு இருக்க மாட்டாங்க தான். ஆனாலும், அவங்க பேச்ச எந்த அளவுக்கு எடுத்துப்பாங்கன்னு தெரியாதே.. நிச்சயம் தானே முடிஞ்சிருக்குனு ஊர் உலகத்துக்கு பயந்து தப்பான முடிவு எடுத்துட்டா.. அந்த பயத்துல தான் நான் பேசினேன். அவங்க ரெண்டு பேரும் விரும்புறாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்” என்றதும். 

அவனோ அவளை சந்தேகப் பார்வை பார்த்துக் கொண்டே, “என்கிட்ட நீ சொல்லவே இல்லயே.. எப்போ தெரியும் உனக்கு?”.

“நம்ம வீட்டுக்கு போய் இருக்கும் போது கமலேஷ் அண்ணா கிட்ட நித்யா பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன். அவங்களுக்கு தான் நிச்சயம் முடிஞ்சிடுச்சே அதனால அதை பத்தி நான் உங்ககிட்ட சொல்லல. எப்படியும் அவங்களுக்கு தானே கல்யாணம் நடக்கப்போகுதுன்னு விட்டுட்டேன். இப்படி ஒரு பிரச்சனை வரவும் பயம் வந்துடுச்சு. எங்க அவ வாழ்க்கை வீணா போயிடுமோனு தான் எல்லார் முன்னாடியும் கமலேஷ் அண்ணா கிட்ட அப்படி பேசினேன். ஆனா, என்ன இருந்தாலும் கமலேஷ் அண்ணா கிரேட்ல. தப்பே நடந்திருந்தாலும் நித்யாவை கட்டிப்பேன்னு சொன்னாங்க. அப்போ அவங்க மனசுல எவ்வளவு காதல் இருந்திருக்கணும்”.

“ஓ! அப்போ கமலேஷ் அண்ணாவுக்கு மட்டும் தான் நித்யா மேல ஓவர் காதல்னு சொல்றியா.. ஏன், உன் பாவாவுக்கு இந்த பவி மேல ஓவர் லவ் இல்லயாமா” என்றான் செல்லமாய் கோபத்தோடு முகத்தை திருப்பியவாறு.

அவனின் கன்னம் பற்றி முகத்தை தன்னை நோக்கி திருப்பியவள், “அதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா.. இப்படி ஒரு வாழ்க்கை..” என்று அவள் தொடங்கும் முன்பே அவளின் வாயை திறக்க விடாமல் அடைத்திருந்தான் தன் இதழ் கொண்டு.

அதில் அவளும் சுகமாய் தொலைந்து போக. சற்று நேரம் கழித்து அவளிடம் இருந்து பிரிந்தவன், “திரும்ப எனக்கு வாழ்க்கை கொடுத்த தெய்வமே நீங்க தான், என்னை வாழ வச்ச வள்ளலே நீங்க தான்னு ஏதாவது டயலாக் பேசின கொன்னுடுவேன் டி” என்றான் மிரட்டுவது போல். அதில், அவள் கலகலவென நகைத்து விடவும்.

“இப்படி என்னை முகத்துக்கு நேரா புகழாதடி எனக்கே ரொம்ப கூச்சமா இருக்கு” என்றான் வெட்கப்படுவது போல் பாவனையோடு.

“என்ன இருந்தாலும், நான் சொன்னது உண்மை தானே” என்கவும்.

அதற்கும் அவன் அவளை திட்டவும் என அன்றைய நாள் அவர்களுக்கு அப்படியே கரைந்தது.

குடும்பத்தார் ஒன்று கூடி முடிவு செய்தது போலவே நித்யா மற்றும் கமலேஷின் திருமணம் வெகு விமர்சையாக நடந்தேறியது.

மறு வீடு, விருந்து, ரிசப்ஷன் என நாட்கள் றெக்கை கட்டிக்கொண்டு பறந்த வண்ணம் தான் இருந்தது.

அவர்களின் திருமணத்திற்கு வந்திருந்த உறவுகள் அனைவருமே பவித்ராவை யார் என்று வினவ. அவளுக்கு தான் சற்று சங்கடமான நிலையாக இருந்தது.

ஆனாலும், குடும்பத்தினர் யாருமே அவளை விட்டுக் கொடுப்பதாக இல்லை. யஷ்வந்த் கூறிய அதே கதையை தான் அனைவரிடமும் மனப்பாடம் செய்தது போல் அனைவரும் ஒப்பித்திருந்தனர்.

இந்து ஒருபுறம் தனக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் அவளை அறிமுகப்படுத்தி வைக்க. 

பரமேஸ்வரி ஒருபுறம் தனக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் அவளை அறிமுகம் செய்து வைத்தார்.

திருமூர்த்தி இன்னமும் இவர்களிடம் சுமூகமான பேச்சுவார்த்தையை துவங்கவில்லை. தேவை என்றால் யஷ்வந்திடம் மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொள்வாரே தவிர்த்து, பவித்ராவிடம் அவர் தன் பாராமுகத்தையும் காட்டவில்லை, இலகுவாகவும் பேசவில்லை.

இலை மறைக் காயாய் தான் அவர்களின் உறவு சென்று கொண்டிருந்தது. ஏதோ ஒன்று அவரை அவளிடம் இலகுவாய் பேசவிடாமல் அலைக்கழித்தது.

குடும்பத்தினர் அனைவருமே பவித்ராவிடம் சகஜமாக பேச துவங்கி விட்டனர். அவளுக்கு இதுவே அத்தனை மன நிறைவாய் இருந்தது.

“ஏன்டா யஷ்வந்த் நீ வாயை திறந்தா மூட மாட்ட. உம்பொண்டாட்டி பேசவே காசு கேப்பா போலருக்கே. அமைதியான பொண்ணு எங்கிருந்து தான் புடிச்ச?” என்றும்.

“எங்க பையன் வாயை திறந்தா மூட மாட்டான். எப்படித்தான் நீ அவனை சமாளிக்கிறியோ.. ரெண்டு பேரும் ஜாடிக்கேத்த மூடி தான். நீ பேசாததுக்கும் சேர்த்து அவனே பேசிடுவான்” என்றும் அவர்களை கிண்டல் செய்தனர்.

அவர்கள் அனைவருக்குமே, “நான் என்ன பேச்சு போட்டிக்கா ஆள் எடுத்திருக்கேன். குடும்பம் நடத்துறதுக்கு எதுக்கு பேசணும் சித்தப்பா. உங்க மனச தொட்டு சொல்லுங்க, பேசாம அமைதியா இப்படி நமக்கு ஒரு பொண்டாட்டி கிடைக்கலையேனு உங்களுக்கு தோணல?” என்றான் தன் ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி.

அதில் அவரின் மனைவி அவரை முறைத்துப் பார்க்கவும். 

“ஏன் டா உன்கிட்ட போய் வாயைக் கொடுத்தேன் பாரு” என்று பதறியவரோ, “அவன் சும்மா விளையாட்டுக்கு சொல்றான் மா. நான் ஏன் அப்படி எல்லாம் நினைக்க போறேன்” என்று கோபித்துக் கொண்டு சென்ற தன் மனைவியின் பின்னோடே கெஞ்சிக் கொண்டு சென்றார்.

நிறைவாய் விசேஷம் முடிந்திருந்தது.

அடுத்த ஐந்து மாத காலமும் யஷ்வந்தும், பவித்ராவும் அவர்களின் வீட்டில் தான் இருந்தனர். அவ்வப்போது இங்கே வந்து விட்டும் செல்வார்கள். தற்பொழுது அவளுக்கு ஆறு மாதம் நிறைவடைந்திருந்தது.

அன்றும் வார இறுதி விடுமுறை யஷ்வந்தை பார்த்தே சில நாட்கள் ஆகிவிட்டது என பரமேஸ்வரி வீட்டிற்கு வரக்கூறியிருந்தார் பவித்ராவுடன்.

வந்திருந்தவன் வழக்கம்போல் அனைவரிடமும் பேசிக்கொண்டு கலகலத்துக் கொண்டிருந்தான்.

“இன்னும் எத்தன காலத்துக்கு தான் உன் பையன் இப்படி தனிக்குடுத்தம் நடத்த போறானாம். அந்த பிள்ளைக்கு வேற ஆறு மாசம் ஆயிடுச்சு. தனியா இருந்த வரைக்கும் போதும், இதுக்கு மேல நம்மளோட இங்க வந்து ஒன்னா இருக்க சொல்லு. ஏதாவது ஒன்னுனா கூட மாட ஒத்தாசைக்கு நாம இருப்போம்ல. புள்ளத்தாச்சி பொண்ணு ஒத்தையில அங்க என்ன பண்ணும்” என்றார் திருமூர்த்தி.

“அத போய் நீங்களே உங்க மகன் கிட்ட சொல்லுங்களேன்” என்றார் பரமேஸ்வரி.

“ஏன் உனக்கு சொல்ல என்னவாம். உனக்கும் அவன் மகன் தான.. இது மாதிரி நேரத்துல அந்த பொண்ணு என்ன பண்ணனும். உனக்கு தோணலையா.. இதையெல்லாம் நீயே சொல்லி இருக்கணும். நான் சொன்னாலும் என்னை போய் சொல்ல சொல்றியா? அப்படியே நான் போய் சொன்னாலும் அவன் வீம்புக்குன்னு தான் நிப்பான். நீ சொல்லு, நீ சொன்னா தான் அவன் கேட்பான்”.

அவரிடம் ‘சரி’ என்று கூறியவர்.

யஷ்வந்த் மீண்டும் அவர்களின் வீட்டை நோக்கிப் புறப்படும் பொழுது, “ஏன் யாஷ் அதான் இப்போ எல்லாமே சரியாகிடுச்சே இன்னும் எதுக்காக நீங்க அங்க தனியா இருக்கணும். பேசாம எல்லாரும் ஒன்னா இங்கேயே இருக்கலாம்” என்றார் கண்கள் மின்ன.

“ஆமா யாஷ், அம்மா சொல்றதும் சரிதான். நித்யா கல்யாணம் பண்ணி போன பிறகு வீடே அமைதியான மாதிரி இருக்கு. நீயும், பவித்ராவும் இங்கேயே இருந்தா நல்லா இருக்கும்” என்று சேரனும் அத்தனை உற்சாகத்தோடு கூறினான்.

இந்துவின் முகத்திலும் மகிழ்ச்சிக்கான சாயல் பிரதிபலித்தது.

திருமூர்த்தி எதுவும் கூறாமல் அமைதியாக நின்றிருந்தார். ஆனால், அவரிடம் எந்த ஒரு எதிர்ப்பும் இருப்பதாக தெரியவில்லை.

“இல்லம்மா அதெல்லாம் சரி வராது” என்று நிர்மலமான குரலில் கூறியிருந்தான் யஷ்வந்த்.

“ஏன் யாஷ்?”.

“அதான் நாங்க அப்பப்போ வந்துட்டு போறோமே அப்புறம் என்னம்மா?”. 

“இத்தன நாள் பரவாயில்ல. இப்ப பவித்ராவுக்கு ஆறு மாசம் முடியப் போகுது. இதுக்கு அப்புறம் நீங்க தனியா இருக்கிறது எப்படி சரிவரும். இங்க இருந்தா கை வைத்தியம், பத்திய சாப்பாடு எல்லாம் நான் செஞ்சு கொடுப்பேன். அவளயும் நல்லபடியா பாத்துக்க ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வீட்ல இருப்போம். இந்த மாதிரி நேரத்துல தனியா இருக்கிறது சரியா இருக்காது”.

“அம்மா அதெல்லாம் நான் பாத்துக்குறேன்”. 

“சொன்னா கேக்க மாட்டியா யாஷ். முதல்ல பிரச்சனையா இருந்துச்சு அதனால இங்க வேண்டாம்னு போன. இப்போதான் எல்லாம் சரியாகிடுச்சே அப்புறம் என்ன” என்று சற்று கோபமாகவே கேட்டிருந்தார்‌.

“நீங்க சொன்ன மாதிரி இப்ப எல்லாமே சரியா தான் மா இருக்கு. ஆனாலும், சில விஷயங்கள் சரியா தெரிஞ்சாலும் உண்மையில அப்படி இருக்காது. ஏதாவது ஒரு சண்டையிலயோ, மன வருத்தத்துலயோ அவள பாத்து தேவையில்லாம வார்த்தைய விட்டுட்டா அவளால அதை நிச்சயம் தாங்கிக்க முடியாது. என்னாலயும் தான்.. அதுக்கான வாய்ப்பை நாமலே ஏன் அமைச்சு கொடுக்கணும்”.

“யாஷ் அதெல்லாம் எதுவும் ஆகாது டா. அதான் அம்மா இவ்வளவு தூரம் சொல்றாங்கல்ல” என்றான் சேரன்.

“அண்ணா இப்ப மட்டும் என்ன குறைஞ்சு போச்சு. அதான் நாங்க அடிக்கடி வந்துகிட்டு போய்கிட்டு இருக்கோம்ல. சந்தோஷமா தானே இருக்கோம். இப்படியே இருந்துக்கலாம். அதுதான் நம்ம குடும்பத்துக்கு நல்லது” என்றவன் அதற்கு மேல் அங்கே நிற்காமல், “போகலாம் பவி” என்று அவளின் கையைப் பிடித்து அழைத்து வந்து விட்டான்.

வீட்டிற்குள் நுழைந்ததுமே, “என்ன ஆச்சு உங்களுக்கு பாவா? அத்த அவ்வளவு ஆசைப்படுறாங்க ஏன் வேண்டாம்னு சொல்றீங்க? எல்லாரும் திரும்ப ஒன்னா ஒரே குடும்பமா இருக்கலாம்ல.. எனக்கும் ஆசையா இருக்கு” என்றவளுக்குமே அந்த ஆசை அத்தனை இருந்தது. 

அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டவன், “இங்க பாரு பவி, சில விஷயம் தூரத்திலிருந்து பார்க்கும் போது நல்லதா தெரிஞ்சாலும், கிட்ட இருக்கும் பொழுது சரி வராது. இப்ப நாம எப்போவாவது போறோம் வரோம். அதனால பிரச்சனை இல்ல.. ஒன்னா இருக்கும் போது பிரச்சனை வரும்னு சொல்லல.. ஏதாவது ஒரு சூழ்நிலையில அவங்களயும் மீறி உன்ன பாத்து தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டா ரொம்ப கஷ்டமாயிடும் பவி சொன்னா புரிஞ்சுக்கோ”.

அவனின் வார்த்தையில் அவளின் முகமே வருத்தத்தில் வாடிப் போய்விட்டது.

“நீ எல்லாரும் ஒன்னா இருக்கணும்னு எவ்வளவு ஆசைப்படுறேன்னு எனக்கு புரியுதுடா பவி. ஆனா, நாளைக்கு இதுவே நமக்கு கஷ்டமாயிடக் கூடாதுல அதுக்கு தான் சொல்றேன்”  

இதற்கு மேல் என்ன பேசுவது என்று அவளும் அமைதியாகிவிட்டாள்.

தனக்காக பார்க்கிறான் என்று எண்ணும் பொழுது எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அதேபோல், தனக்காக அவன் அவனின் குடும்பத்தைப் பிரிந்து இருக்கிறானே என்பதை எண்ணும் பொழுதும் அத்தனை வருத்தமாக தான் இருக்கிறது.

அன்றைய நாள் அப்படியே கழிய. மறுநாள் விடியல் அத்தனை ரம்மியமாய் இருந்தது. இவர்கள் மற்றைய பொழுதுகளைப் போல் தான் அன்றும் ஒரு விடியல் என்று எண்ணிக் கொண்டிருக்க.

அன்றைய நாளோ அவர்களுக்கான ஆச்சரியத்துடனே தான் பொழுதைப் புலர்ந்திருந்தது.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page