அத்தியாயம் 29

கவிதா அவளை நிதானமாக பார்த்து, உன் மருமகளுக்கு கல்யாணமாகி ஐந்து வருஷமாகுது. இன்னும் குழந்தை இல்லை தானே. பாவம் உன் புள்ளையும் அப்பாவாக வேண்டாமா! எனக்கு நீ சொன்ன அறிவுரையை நீயே பின்பற்றி அந்த பொண்ண உன் பிள்ளைக்கே கட்டி வச்சிடேன் என்று பதிலடி கொடுத்தவுடன் அந்த பெண்மணி வாயை மூடிக்கொண்டு போய்விட்டாள். அவள் சென்ற பிறகு கவிதா வந்துட்டாங்க ஊருக்கு உபதேசம் பண்ண, தான் வீட்டிலேயே ஆயிரம் வச்சிக்கிட்டு அடுத்தவங்க வீட்டை ஆராய வந்துட்டாங்க என்று சொல்லிக்கொண்டு திரும்பி பார்க்க, அங்கே வர்ஷினி கையில்  கவிஷ்ஷோடு நின்று இருந்தாள். அவளை பார்த்ததும் கவிதா, அந்த பொம்பள சொன்னதை எல்லாம் மனசில வைச்சிக்காதம்மா என்று கூற வர்ஷினி அழுகையுடன் கவிதாவை கட்டிக்கொண்டாள். கவிதா வர்ஷினி கையில் இருந்த குழந்தையை வாங்கி அங்கு இருக்கும் ஒரு பெண்மணியை அழைத்து இவனை மது கிட்ட கொடுத்துடும்மா என்று கூறிவிட்டு வர்ஷினியிடம் அழாதம்மா என்று முதுகில் தட்டி கொடுக்க, அத்தை கல்யாணத்திற்கு முன்பே படிக்கட்டுல உருண்டு விழுந்து கர்பபையில் அடி பட்டுடிச்சு. அதனால் தான் நான் இவரை சென்னையில் பார்த்தபோது, என்னை கல்யாணம் பண்ணிக்க  மறுபடியும் கேட்டும் நான் மறுத்துவிட்டேன். கல்யாணத்துக்கு முன்பே இந்த விஷயம் எல்லாருக்கும் தெரியும் அத்தை. நான் உங்களுக்கும் தெரியும்னு நினச்சேன். ஆனா எனக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது உங்களுக்கு இந்த விஷயம்  பற்றி ஒன்னும் தெரியாதுன்னு, நான் அப்புறமாவது உங்ககிட்ட சொல்லிருக்கணும். ஆனா நீங்க என்ன சொல்லுவீங்களோ என்று பயமாய் இருந்திச்சு. என்னை மன்னிச்சுடுங்க  அத்தை என்றதும், கவிதா அவள் கண்ணீரை துடைத்து விட்டு, வர்ஷினி எனக்கு இப்போதான் நீ சொல்லித்தான் இந்த விஷயமே தெரியும். கல்யாணத்திற்கு முன்பே தெரிந்திருந்தால் கூட நான் ஒன்னும் சொல்லிருக்க மாட்டேன் . ஏன்னா உன் அம்மா கஸ்தூரி எனக்கு நெருங்கிய தோழி. நாங்க இரண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா அப்படி பழகினோம். சின்ன வயசில நீ எப்போதும் என்கிட்டேயே  தான் இருப்ப. எனக்கு அப்பவே  உன்னை என் வீட்டுக்கு மருமகளா ஆகிக்கிடனும்னு ஆசை இருந்திச்சு. ஆனா நீங்க பெருசா வளர்ந்தீங்கனா  உங்களுக்கு தனிப்பட்ட ஆசை இருக்கும், அதனால தான் நான் என் விருப்பத்தை யார்கிட்டேயும் சொல்லல. அவ்வளவு நெருக்கமா பழகிய என் கஸ்தூரி தனக்கு இப்படி ஒரு வியாதி இருக்குதுனு சொல்லாமலே இங்கிருந்து போய்டா, அவளுடைய இறப்பை கூட நீங்க எங்க கிட்ட சொல்லல, கடைசியா  அவளுடைய முகத்தை கூட என்னால பார்க்க முடியாம போயிடிச்சேனு எனக்கு ரொம்ப வருத்தம் தான். நீயும் கௌரியை திரும்ப திரும்ப வேண்டாம்னு சொன்னதும் எனக்கு உன் மேல கோபம் இருந்தது உண்மைதான்.  எப்ப  கௌரி உன்னை தவிர யாரும் கட்டமாட்டேனு உன்னை  தன்  மனைவியா ஏத்துக்கிட்டானோ அப்பவே என் கோபம் எல்லாம் போயிடுச்சி. என் ஆசையும் நீ என் வீட்டுக்கு மருமகளா வரணும் தானே. அதனால நீ வருத்தப்படாதேம்மா  என்று பேசிக்கொண்டே இருக்கையில் வர்ஷினி கவிதாவின் கையிலேயே மயங்கி விழ கவிதா அவளை தாங்கி பிடித்தாள். வர்ஷினி, வர்ஷினி என்று அவளை தட்டி எழுப்ப அவ எழாததை கண்டு  வர்ஷினியை தன் மடியிலே படுக்க வைத்து யாராச்சும் இருந்தா தண்ணீர் கொண்டு வாங்க என்று உரக்க கத்த அங்கிருந்து ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து தர கவிதா வர்ஷினியின் முகத்தில் மீது தண்ணீர் தெளித்து அவளை எழ வைத்தாள்.   

 

அதற்குள் செய்தியை கேட்டு கௌரி, விக்னேஷ், மதுமதி  அங்கு வந்து விட, கௌரி அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டு என்ன வர்ஷினி எதனாலே மயக்கம் வந்தது, டாக்டரை போய் பாக்கலாமா என்று பதட்டத்துடன் கேட்க, காலையில் இருந்தே என்னால சரியாக சாப்பிட முடியலைங்க,  என்னமோ குமட்டிக்கிட்டே இருக்கு என்று கூறியதும், கவிதா இந்த மாசம் தலை குளிச்சாச்சா என்று கேட்க, அப்போதுதான் வர்ஷினிக்கு ஞாபகமே வந்தது, பத்து நாள் தள்ளி போயிருக்குனு, இதை எப்படி நான் கவனிக்காமல் போனேன் என்று நினைத்துக் கொண்டு இல்லை என்று தலையாட்ட கவிதாவின் முகத்தில் மகிழ்ச்சி, உடனே கௌரியை அழைத்து கௌரி உடனடியாக இவளை அழைத்து கொண்டு டாக்டர் கிட்ட போய் டெஸ்ட் பண்ணிடு வந்திடு என்று கூற, கௌரி இப்பவேயாம்மா, இங்கே நிறைய வேலை இருக்கே என்று கூற அது எல்லாத்தையும் விக்னேஷும் உங்க அப்பாவும் பாத்துப்பாங்க. நீ முதல்ல இவளை கூட்டிட்டு போ என்று விரட்ட, கௌரியும் வர்ஷினியும் அங்கே இருக்கும் சின்ன மருத்துவமனைக்கு சென்றார்கள். டெஸ்டை கொடுத்து ரிசல்டுக்காக ஆவலாய் காத்திருந்தனர். 

 

ரிசல்ட் என்ன வருமோ என்று வர்ஷினிக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. அவள் கௌரியிடம், சங்கர், ரிசல்ட் பாசிட்டிவ் தானே வரும். நான் கர்பமாயிடுவேன் தானே என்று கேட்டவுடன் கௌரி, வர்ஷினி நீ ரொம்ப பதட்டப்படாதே எது இருந்தாலும் ஏத்துக்கோ. மனச சாதாரணமாவே வைச்சிகோ, அதுதான் நல்லது என்று கூற, வர்ஷிணியால் தான் அப்படி இருக்க முடியவில்லை. அவளது வெகு நாள் கனவு, ஆசை அல்லவா. அந்த மருத்துவர் சொன்னதை போல் தனக்குள் ரிசல்ட் எனக்கு சாதகமாகத்தான் வரணும் என்றும், எனக்கு நிச்சயமா குழந்தை பிறக்கும் என்றும் சொல்லிக் கொண்டே இருந்தாள். சிறிது நேரம் கழித்து செவிலியர் வந்து மருத்துவர் உங்களை அழைக்கிறார்கள்  என்று சொன்னதும் இருவரும் எழுந்து அவரை பார்க்க சென்றார்கள். 

 

அந்த மருத்துவர் இருவரையும் பார்த்து  புன்னகைத்து வாழ்த்துக்கள். இவங்க கர்ப்பமாக இருக்காங்க. ஆனா இவங்க கர்ப்பப்பை  இன்னும் கொஞ்சம் வீக்க இருக்கிறதால இவங்கள நீங்க ஜாக்கிரதையாக பாத்துக்கணும். குழந்தை பிறக்கிற வரைக்கும் எந்த வேலையும் செய்யக்கூடாது. சின்ன குழந்தை போல் இவரை பாத்துக்கணும், என்று கூறிட இருவருக்கும் சந்தோஷத்தில் கண்கள் பனித்தது. கௌரி ரொம்ப நன்றி டாக்டர். நாங்க கண்டிப்பா நல்லா பாத்துப்போம் என்று கூறி வெளியே வந்தவுடன் கௌரி அவளை கையில் தூக்கி கொண்டான். வர்ஷினி என்ன இது, பொது இடத்தில் என்று வெக்கத்தில் கூறிட, கௌரி, டாக்டர் இப்பதானே  சொன்னாரு, உன்னை குழந்தை மாதிரி பாத்துக்கணும்னு, அதனாலே இனிமே நான் எது செஞ்சாலும் நீ எதுவும் பேசக்கூடாது என்று கூறி அவளை காரில் தூக்கி கொண்டு போய் அமரவைத்தான். காரில் சென்றதும் வர்ஷினி கௌரியை கட்டிக்கொண்டு கதறி அழுதாள். அவளது அழுகையே சொன்னது அவள் இத்தனை நாள் குழந்தைக்காக எவ்வளவு ஏங்கியிருக்கிறாள் என்று. கௌரி அவளை தேற்றும்விதமாக அவள் முதுகை தடவி கொடுத்தான். என்ன வர்ஷினி எதுக்கு இப்படி அழுறே? இனிமே நீ இப்படி எல்லாம் அழக்கூடாது. எப்பவும் சந்தோஷமாக மனசவச்சியிருக்கணும். அது தான் நம்ம குழந்தைக்கு நல்லது என்று கூறி அவளை மெதுவாக தட்டி கொடுத்தான். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. எங்கே என்னால உங்களுக்கு குழந்தை பெற்று தர முடியாம போயிடுமோ என்று பயந்துகிட்டே இருந்தேன், ஆனா இப்போ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு சந்தோஷத்தில் என்ன செய்யரத்னே தெரியல என்று அதிக உற்சாகத்தில் கூறிட, கௌரி 

அவளிடம் வர்ஷினி நார்மலாய் இரு. அதுதான் உனக்கும் நம்ம குழந்தைக்கும் நல்லது என்று மறுபடியும் சொல்ல வர்ஷினி இரண்டு மூன்று தரம்  இழுத்து மூச்சு விட்டு தன்னை சம நிலைக்கு கொண்டு வந்தாள். 

 

வீட்டில், வர்ஷினி கர்ப்பமாக இருக்கும்  விஷயத்தையும், மருத்துவர் கூறிய அறிவுறையையும் கூறிட அனைவருமே மிகவும் மகிழ்ந்தார்கள். கவிதா அவளை ஆரத்தழுவி தன் களிப்பை தெரிவித்தாள். பின் கௌரியிடம் திரும்பி, இதோ பார் கௌரி வர்ஷினி உன் கூட அமெரிக்காவுக்கு வரமாட்டா. அவளை பெட்ரெஸ்ட் எடுக்கணும்னு  டாக்டர் சொல்லிட்டாரு. உன்னாலே வேலையும் பாத்துகிட்டு இவளையும் பார்க்க முடியாது. அதனாலே குழந்தை பிறக்கிற வரைக்கும் நான் இவளை நல்லா பாத்துக்கிறேன், நீ மட்டும் அமெரிக்கா போய்ட்டு  வா என்று கூறியதும் கௌரியின் முகம் சட்டென்று வாடியது. அவனுக்கும்  அம்மா சொல்வது சரி என்று பட்டாலும் அவ்வளவு நாள்   வர்ஷினியை பிரிஞ்சிருக்க வேண்டுமா என்று நினைக்கையில்  வருத்தமாக இருந்தது. அவன் சோகமாக முகத்தை வைத்து கொண்டு சரி என்று சொன்னதும் கவிதாவுக்கு சிரிப்பு வந்து விட்டது. உன் பொண்டாட்டியை நான் ஒன்னும் கடிச்சு தின்னா மாட்டேன், பத்திரமாதான் பாத்துக்குவேன். நீ தானப்பா சொன்னே வர்ஷினி பெட் ரெஸ்ட் எடுக்கணும்னு, உன்கூட வந்தா நீ வேலைக்கு  போய்டபுரம் அவ தனியா தானே இருக்கனும், அப்போ அவளாலே எப்படி வேலை செய்யாம இருக்க முடியும்? என்று சொன்னதும் கௌரியும் நீங்க சொல்றது சரிதாம்மா என்று ஒப்புக்கொண்டான்.  

 

கௌரி ஊருக்கு போகும் நாளும் வந்தது. அவன் வர்ஷினியிடம் உடம்பை நல்லா பாத்துகோ, எந்த வேலையும் செய்யாதே, அம்மா உன்னை எந்த வேலையும் செய்ய விடமாட்டாங்க இருந்தாலும் உன்னால சும்மா இருக்க முடியாது. நான் செய்யறேன்னு போய் நிப்ப, அதெல்லாம் வேண்டாம். நல்லா சாப்பிடு என்று போக மனமேயில்லாமல் அவளை பார்க்க, வர்ஷினிக்கும் கௌரியை பிரிய மனமே இல்லை தான். இருந்தாலும் தான் வருத்தமாக இருப்பதை பார்த்து விட்டால் அவனால் நிம்மதியாக ஊருக்கு போக முடியாது என்று எண்ணி நான் பத்திரமாக இருப்பேன், நீங்க வருத்தப்படாம போய் வாங்க என்று கூறியதும் கௌரி தினமும் நான் இரவு உனக்கு போன் பண்ணுவேன்  நீ தவறாமல் எடுத்து அன்னைக்கு நடந்ததை எல்லாம் சொல்லணும், ஒரு நாள் கூட தவறக்கூடாது என்று அன்பு கட்டளை போட, வர்ஷினியும் சிறிது கொண்டே சரி என்று தலையாட்டினாள் . 

 

வெளியே வந்ததும் எல்லோரும் அவனை வழியனுப்ப வாசலில் நின்று கொண்டிருந்தனர். தீடீரென்று கௌரி, வர்ஷினி என்  பாஸ்ப்போர்ட்டை மறந்துட்டேன் கொஞ்சம் வந்து தேடி கொடு என்று அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றவன் கதவை சாத்தி தாளிட்டான். பிறகு அவள் அருகே வந்து அவளை நெருக்கமாக அணைத்து அவள் இதழில் முத்தமிட்டான். சற்று நேரத்தில் அவளிருந்து விலகி வா போகலாம் என்று வெளியே போக, வர்ஷினி பாஸ்போர்ட் எடுக்கணும்னு சொன்னேய்யடா என்றதும், மக்கு பொண்டாட்டி இதுக்காகத்தான் சொன்னேன்  என்று அவளை பார்த்துக் கொண்டே கூற அவளின் முகம் செவ்வானமாய் சிவந்தது. 

 

கௌரி அமெரிக்காவுக்கு சென்று  இரு மாதங்கள் கடந்திருந்தன. அன்று இரவு வர்ஷினி கௌரிக்கு போன் பண்ணியிருந்தாள். கௌரி உனக்கு ஒரு இனிமையான செய்தி சொல்லப்போறேன், என்னன்னு சொல்லு பார்க்கலாம் என்றதும், கௌரி சற்று யோசித்து விட்டு அண்ணி மறுபடியும் கர்பமாக இருக்காங்களா என்றதும் அவங்க இரண்டே போதும்னு இருகாங்க, அதில்லையா, வேறு என்னவா இருக்கும், அண்ணனுக்கு இந்த தடவை விவசாயத்தில் நல்ல மகசூலா, நல்ல லாபம் வந்திருக்கா என்று கேட்க, அவருக்கு எல்லாம் வருஷமும் நல்லா  லாபம் தான், ஏன்னா அவரு தன்னுனடய முழு உழைப்பையும் கொடுக்கிறாரு. அதனால அதில்லைடா, இது வேறு, நான் வேனா ஒரு க்ளூ கொடுக்கவா, சரி என்று கௌரி சொல்ல, இது விஷயம் எனக்கும் உனக்கும் சம்பந்தப்பட்டது. என்று கூறிட, கௌரி, இரண்டு பேருக்கும் சம்பந்த பட்டதா ஓ, உன் சீமந்தமா என்று கேட்க, போடா, சீமந்தத்துக்கு இன்னும் நாள் இருக்கு, அது இல்லை, என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியல நீயே சொல்லிடுடி, நமக்கு ஒன்றல்ல இரட்டை குழந்தை பிறக்கப்போகுது. இன்னைக்கு டாக்டர் கிட்ட  குழந்தை வளர்ச்சி பற்றி ஸ்கேன் எடுக்க போனப்ப சொன்னாங்க. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா என்றதும் அந்த பக்கத்தில் இருந்து கௌரி எதுவும் பேசவில்லை. ஏன்டா எதுவும் பேசாம இருக்க , நான் எவ்வளவு சந்தோஷமான விஷயத்தை சொல்லறேன் உங்கிட்ட இருந்து எந்த பதிலையும் 

காணோமே என்றதும் எனக்கும் சந்தோஷம் தான் வர்ஷினி, ஆனா ஒரு குழந்தை தாங்கறதே உன் கர்ப்பப்பை பலகீனமா  இருக்கறதா டாக்டர் சொன்னாங்க இப்போ இரண்டு குழந்தைகள் வேற, நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்  வர்ஷினி என்றதும், கவலைப்படாதடா, அத்தை என்னை அவங்க கையில வைத்து தாங்குறாங்க. அவங்களே எனக்கு சாப்பாடு கூட ஊட்டி விடறாங்க. சாப்பிட்டு காய் கழுவ கூட என்னை எழுந்திருக்க விடுவதில்லை. அவங்களே என் கையையும் வாய்யையும் சுத்தப்படுத்தி விடுறாங்க. அவ்வளவு நல்லா பாத்துக்கறதுக்கு  அவங்க இருக்கும் போது எனக்கென்ன பயம் என்றிட , கௌரி அம்மாவின் பாசத்தை நினைத்து மகிழ்ந்து போனான். இருந்தாலும் வர்ஷினி நீ கொஞ்சம் எதிலும் கவனமாக இருக்கனும். எனக்கு குழந்தைகள் மட்டுமல்ல நீயும் ரொம்ப முக்கியம் என்று கூறி போனை வைத்தான். கௌரி இவளுக்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்று  மனதார கடவுளை வேண்டிக்கொண்டான். 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page