“நான் பண்றேனே விடுங்களேன்” என்று யஷ்வந்திடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் பவித்ரா.
“சொன்னா கேக்க மாட்டியா பவி, போய் உட்காரு போ” என்று அதட்டினான் அவளின் கணவன்.
“ஐயோ பாவா, எனக்கு இப்போ உடம்பு பரவாயில்ல. தலை சுத்தல் எல்லாம் கூட குறைஞ்சிடுச்சு. நல்லா இருக்கும்போது நானே பண்றேன். ஏன் இப்படி அடம் பண்றீங்க நீங்க” என்று அவளும் மல்லுக்கு நீக்க.
“அதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பண்ணிக்கலாம். இப்போ ஒன்னும் அவசரம் இல்ல. போய் ஹால்ல உட்காரு போடி” என்று தன் பற்களைக் கடித்து அவன் அதட்டவும்.
முகத்தை சுருக்கிக் கொண்டு சமையலறையில் இருந்து வெளியேறி இருந்தாள் பவித்ரா.
காலை பொழுதுகளில் அவளுக்கு தலை சுற்றல் அதிகமாக இருந்ததினால் காபி போடும் வேலையை சில மாதங்களாக தனதாக்கி இருந்தான் யஷ்வந்த்.
இப்பொழுது அவளுக்கு மீண்டும் உடல்நிலை பழையபடி கொஞ்சம் கொஞ்சமாய் சீராக துவங்கவும், தானே செய்வதாய் கூறிக்கொண்டு அவனுடன் மல்லுக்கு நின்று கொண்டிருக்கிறாள்.
இருவருக்குமான காபியுடன் அவன் வெளியே வரவும். அழைப்பு மணி ஓசை கேட்டது. யார் என்று பார்க்க அவள் எழ முற்படவும்.
“கால ஒடிச்சிடுவேன். அசைஞ்ச அவ்வளவு தான் சொல்லிட்டேன்” என்று அவளை மிரட்டி விட்டு அவளின் கையில் காபி கப்பை திணித்துவிட்டு வாசல் கதவினை திறக்கச் சென்றிருந்தான் யஷ்வந்த்.
நடப்பதை உணரவே அவனுக்கு சற்று நேரம் பிடித்தது.
“என்ன பேந்த பேந்த முழிச்சுகிட்டு நிக்கிற, முதல் தடவ வீட்டுக்கு வந்திருக்கோம் வந்தவங்கள வாங்கன்னு கூப்பிடனும்னு தெரியாதா தள்ளு” என்று திருமூர்த்தி ஒரு அதட்டல் போட்டபடி வீட்டிற்குள் நுழையவும், அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் யஷ்வந்த்.
இந்த நிகழ்வே அத்தனை உணர்வுப்பூர்வமாய் இருந்தது. சட்டென்று அவனின் கண்கள் கண்ணீரை சுரக்க, அவருக்குமே கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது.
“போதும்.. போதும்.. தள்ளு, எல்லாரும் வீட்டுக்குள்ள வர வேண்டாமா. இப்படி வழிய மறைச்சிட்டா நிப்ப. எல்லாம் எப்படி வருவாங்க” என்று மீண்டும் ஒரு அதட்டல் போட்டவர் உள்ளே நுழையவும்.
சட்டென்று காபி கப்பை டேபிளின் மீது வைத்தவள், அனைவரையும் பார்த்து, “வாங்க” என்று இன்முகமாக அழைத்துவிட்டு ஓரமாக சென்று நின்று கொண்டாள்.
என்ன தான் இது தன் குடும்பம், தன் சொந்தம் என்று அவள் தன் மனதில் பதிய வைக்க முற்பட்டாலும், அவளையும் மீறிய ஒரு ஒதுக்கமும் தோன்ற தான் செய்கிறது.
அனைவரும் முதல் முறை இவர்களின் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அதுவே அவளுக்கு அளப்பெரிய மகிழ்ச்சியை வாரி வழங்கியது. ஆனாலும், அவர்களுடன் சகஜமாய் ஒன்றிணைய முடியவில்லை. அதிலும், திருமூர்த்தி என்ன நினைப்பாரோ என்றே ஒதுங்கி நின்று கொண்டாள்.
அனைவருக்குமே அவளின் ஒதுக்கம் நன்கு புரிந்தது. அவளின் ஒதுக்கத்தில் திருமூர்த்திக்கும், பரமேஸ்வரிக்கும் கூட மனம் வருந்தியது.
யஷ்வந்தும், பவித்ராவும் சில நொடிகள் செய்வதறியாது ஸ்தம்பித்து நின்று விட்டனர்.
பவித்ராவை கண்டதும் யாஷிகா சிணுங்கிக் கொண்டே அவளிடம் செல்ல தன் கைகளை நீட்டவும்.
அவளைத் தூக்கிக் கொண்டாள் பவித்ரா.
முதல் முறை அனைவரும் தங்கள் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். சொல்ல முடியாத உணர்வு தான். யஷ்வந்த், பவித்ரா இருவருமே உணர்வுகளின் பிடியில் சிக்கிக் கொண்டு நின்றனர்.
“ம்ம்… காபி ஸ்மெல் வாசல் வரைக்கும் வருதே எங்களுக்கெல்லாம் காபி இல்லயா?” என்று சூழலை உணர்ந்து அதை இலகுவாக்க முற்பட்டான் சேரன்.
“சாரி, ஒரு நிமிஷம் இருங்க” என்ற பவித்ராவோ வேகமாக குழந்தையை இந்துவிடம் கொடுத்துவிட்டு சமையலறைக்குள் நுழையவும்.
அவளின் பின்னோடே வந்து நின்றான் யஷ்வந்த்.
“இப்போ எதுக்கு இந்த ரன்னிங் ரேஸ், பொறுமையா நடந்து வந்தா ஆகாதா” என்று சிடுசிடுத்தான்.
“நான் தான் எல்லாரையும் பார்த்ததும் அப்படியே நின்னுட்டேன். நீங்களாவது அவங்களுக்கு குடிக்க ஏதாவது கொடுக்கணும்னு யோசிச்சிருக்கலாம்ல”.
“நானும் உன்ன போல தான் டி. எல்லாரும் வருவாங்கன்னு எனக்கு மட்டும் என்ன முன்னாடியே தெரியுமா? திடீர்னு பார்த்ததும் நானும் அப்படித்தான் ஷாக் ஆகிட்டேன்”.
அவனிடம் பேசிக்கொண்டே தண்ணீரை குவளையில் ஊற்றியவள், “இந்தாங்க எல்லாருக்கும் தண்ணி குடுங்க. நான் காபி போடுறேன் பால் இருக்குல்ல” என்று கேட்டுக்கொண்டே பிரிட்ஜை திறக்கச் சென்றாள்.
“ஏன் இதை நீ கொடுத்த ஆகாதா?” என்று முணங்கியவனுக்கு அவள் ஏன் கொடுக்கவில்லை என்ற காரணமும் புரியத்தான் செய்தது.
அன்று ஒரு நாள் திருமூர்த்திக்கு தண்ணீரை பவித்ரா கொடுக்கச் சென்று எத்தனை பெரிய பிரச்சனையாகியது. அதனால் தான் அவள் கொடுக்க மறுக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அவளை வற்புறுத்தவில்லை.
பாலை அடுப்பில் வைத்தவள் யஷ்வந்தை பின்தொடர்ந்து ஹாலிற்கு வந்து நிற்கவும். யஷ்வந்த் அனைவருக்கும் தண்ணீரை கொடுத்துக் கொண்டிருந்தான்.
யஷ்வந்த் நீட்டிய தண்ணீர் டம்ளரை கையில் வாங்காத திருமூர்த்தி பவித்ராவை திரும்பிப் பார்த்து, “வீட்டுக்கு வந்தவங்களுக்கு வீட்டு பொண்ணு தான் குடிக்க ஏதாவது கொடுத்து உபசரிக்கனும். உனக்கு அதெல்லாம் தெரியாதா.. உங்க வீட்டுக்கு தானே வந்திருக்கோம். அப்போ நீ தானே உன் கையால எங்க எல்லாருக்கும் தண்ணி கொடுக்கணும்”.
முதல் முறை அவளிடம் நேரடியாக இப்படி பேசுகிறார். கண்கள் எல்லாம் கரித்துக் கொண்டு வந்தது.
தான் கொடுத்தால் அவர் வாங்குவாரோ மாட்டாரோ என்ற தயக்கத்திலேயே தான் அவள் யஷ்வந்திடம் கொடுத்து அனுப்பியது. அது அனைவருக்குமே நன்கு புரிந்து விட்டது போல.
அவர் இப்படி கூறிய பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் யஷ்வந்திடமிருந்து வாங்கி அனைவருக்கும் அவளே நீட்டி இருந்தாள். அனைவருமே எதுவும் கூறாமல் புன்னகையுடன் பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் காபியும் கொடுக்கப்பட. காபியை குடித்து முடித்த திருமூர்த்தி, “மருமக உன்ன போலவே காபி அருமையா போட்டிருக்கா பரமு” என்றார் தன் மனைவியிடம்.
பவித்ராவிற்கு அப்படி ஒரு ஆனந்தம். தன்னைப் பற்றி முதல் முறை பேசுகிறார், அதுவும் நல்லவிதமாக.. மகிழ்ச்சியில் முக்குளித்துப் போய்விட்டாள் என்று கூறினால் கூட அது மிகையாகாது.
தன் கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு வீட்டை சுற்றும் முற்றும் பார்த்த திருமூர்த்தி, “வீடு நல்லா காத்தோட்டமா வசதியா தான் இருக்கு. இன்னைலருந்து நாம எல்லாரும் இங்கேயே இருந்துடுவோம். என்ன சொல்ற சேரா?” என்றார் தன் மூத்த மகனைப் பார்த்து.
“வரும்போதே அதானேப்பா பேச்சு. டிரஸ் எல்லாம் பேக் பண்ணி ரெடியா இருக்கு. நான் போய் எல்லாத்தையும் கொண்டு வந்துடறேன்”.
இவர்களின் பேச்சில் பவித்ராவும் யஷ்வந்தும் அதிர்ந்து நிற்க.
“என்னப்பா இதெல்லாம்?” என்றான் அதே அதிர்ச்சி மாறாத குரலில்.
“ஆமாப்பா, நேத்து நீ நம்ம வீட்லருந்து கிளம்பி வந்ததுக்கப்புறம் நாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து யோசிச்சுப் பார்த்தோம். நீ சொல்றதும் சரிதானே.. ஆனா, குடும்பம்னா ஒன்னா தான் இருக்கணும்னு உங்க அம்மா அடம் பிடிக்கிறா.. இப்போ என்ன அங்க இருந்தாலும் நாம எல்லாரும் தான் ஒன்னா இருக்க போறோம். இங்க இருந்தாலும் நாம எல்லாரும் தான் ஒன்னா இருக்க போறோம். அதான் நாங்க எல்லாருமே இங்க கிளம்பி வந்துட்டோம். நீ நினைக்கிற போல நடக்காதுன்னு உனக்கு நாங்க எப்படி நிரூபிக்க.. நாங்க வாய் வார்த்தையா சொன்னா நீ நம்புவியோ மாட்டியோ.. எங்களோட இருந்து பழகி பாரு, உனக்கு எப்போ திருப்தியா இருக்கோ அப்போ நம்ம வீட்டுக்கு போகலாம். அப்படியும் உனக்கு நம்ம வீட்டுக்கு வேண்டாம்னு தோணுச்சுன்னா, நாம இங்கேயே கடைசி வரைக்கும் இருந்துடலாம். எங்க எல்லாருக்குமே இதுல முழு சம்மதம் தான்”.
அவனைப் பேசவே விடாமல் வாயடைத்துவிட்டார்.
“அப்பா இது ரொம்ப சின்ன வீடு, இத்தனை பேருக்கு எப்படி செட் ஆகும்? பிடிவாதம் பிடிக்காம வீட்டுக்கு கிளம்புங்க என்ன விளையாட்டு இதெல்லாம்”.
“நாங்க ஒன்னும் விளையாடல பா. எங்களுக்கு உங்களோட இருக்கணும். அதே சமயம் நீ கேக்குற கேள்வியும் சரிதான். ஆனா, அப்படி நடக்காதுன்னு நாங்க எப்படி உனக்கு நிரூபிக்கிறது.. அப்பா சொல்ற போல எங்களோட ஒன்னா இருந்து பாத்தா தானே அப்படி நடக்காதுன்ற நம்பிக்கை உனக்கும் வரும்” என்று தன் பங்கிற்கு பேசியிருந்தார் பரமேஸ்வரி.
“அம்மா” என்றவனோ அயர்வாக அவரைப் பார்த்தான்.
“என்னடா அம்மா.. என்ன அம்மா.. அதான் நாங்க சொல்லிட்டோம்ல. உன்னுடைய சம்மதம் எங்களுக்கு தேவையே இல்ல”.
“நீ சொல்லுமா, உங்க வீட்ல நாங்க இருக்கட்டுமா இல்ல போகட்டுமா?” என்று திருமூர்த்தி பவித்ராவைப் பார்த்து தன் கணீர் குரலில் கேட்கவும்.
அவளுக்கோ சங்கடமாகிப் போனது என்ன கூறுவது என்று தெரியவில்லை.
“அச்சோ! என்ன இப்படி கேக்குறீங்க.. நீங்க தாராளமா இங்கேயே இருக்கலாம்” என்று பட்டென்று கூறிவிட்டாள்.
“அதான் மருமகளே சொல்லிட்டாளே.. இவன் மூஞ்ச என்னத்துக்கு பாத்துட்டு இருக்க. போய் சமையல் வேலையை பாருங்க. பிபி மாத்திரை போடணும்ல” என்ற திருமூர்த்தி.
“டிவி ரிமோட் எங்கடா வச்சிருக்க” என்றவாறு சோபாவில் அமர்ந்துக் கொண்டார்.
அவருக்கு டிவி ரிமோட்டை எடுத்துக் கொடுத்த யஷ்வந்த், “என்னண்ணா இதெல்லாம்?” என்றான் சேரனிடம்.
“எனக்கு எதுவும் தெரியாதுப்பா. என்னை ஒன்னும் கேட்காத. என்னை கூப்பிட்டு வந்தாங்க நானும் வந்துட்டேன் அவ்வளவு தான்” என்று சரண்டராகி இருந்தான் சேரன்.
பவித்ராவை யாரும் ஒரு வேலையும் செய்யவிடவில்லை.
“இவள வச்சுட்டு உட்காரு எல்லாம் நாங்க பாத்துக்குறோம்” என்று யாஷிகாவையும் அவளிடம் கொடுத்து அனுப்பிவிட்டனர்.
இந்துவும், பரமேஸ்வரியுமே அனைத்து சமையல் வேலைகளையும் பார்த்துக் கொண்டனர்.
அறைக்குள் யாஷிகாவுடன் விளையாடிக் கொண்டிருந்த பவித்ராவின் அருகில் வந்து அமர்ந்தவன். அவளின் மடியில் தலை சாய்த்துக் கொண்டு, “சொல்ல சொல்ல கேட்காம என்ன பண்றாங்கன்னு பார்த்தியா?”.
“அவங்களுக்கு அவங்க மகன் வேணும். நீங்க தான் அடம் பிடிக்கிறீங்களே.. அதனால இங்க வந்துட்டாங்க. அவங்க மகன் வீட்டுக்கு தானே வந்திருக்காங்க வேண்டாம்னு எப்படி சொல்லுவீங்க? அவங்களுக்கும் இங்க இருக்க முழு உரிமை இருக்கு” என்று அவர்கள் அனைவருக்காகவும் யஷ்வந்துடன் உரிமைப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தாள் பவித்ரா.
“எல்லாரும் கூட்டு சேர்ந்துட்டீங்க இல்ல.. அப்ப நான் மட்டும் தான் தனி. நான் தான் இங்க வில்லன். அப்படித்தானே” என்றவனோ எழுந்து அமர்ந்துக் கொள்ளவும்.
“அப்படி சொல்லல பாவா, அவங்களுக்கும் எல்லாரும் ஒன்னா இருக்கணும்னு ஆசை இருக்கும்ல. அதோட எனக்கும் எல்லாரும் ஒன்னா ஒரே குடும்பமா இருக்கணும்னு ஆசையா இருக்கு” என்றாள் மெல்லிய குரலில்.
“எனக்கு எல்லாம் புரியுது பவி. ஆனாலும், இது சரி வரும்னு தோணல. ம்ம்ச்ச்… நாளைக்கு ஏதாவது பிரச்சனைனா..”.
“ஏன் பாவா ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பிரச்சனை பிரச்சனைன்னு சொல்றீங்க. எந்த குடும்பத்துல தான் பிரச்சனை இல்லாம இருந்திருக்கு. எல்லா குடும்பத்துலயும் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்”.
“அப்போ நீ முடிவு பண்ணிட்ட” என்றான் அவளையே குறுகுறுவெனக் பார்த்துக்கொண்டு.
“இதுல நான் முடிவு பண்ண என்ன இருக்கு? என்னுடைய ஆசைய சொன்னேன் அவ்வளவு தான். நீங்க என்ன முடிவு பண்றீங்களோ அதான் என்னோட முடிவும்”.
