மொழி – 39 (இறுதி அத்தியாயம்)

“கேடி டி நீ.. என்ன சொன்னா நான் ஒத்துப்பேன்னு தெரிஞ்சே என்னை படுத்துற இல்ல.. சோதிக்கிற பவி” என்றான் மெல்லிய புன்னகையோடு.

“அப்போ ஓகேவா!” என்று கண்கள் மின்ன அவள் கேட்கவும்

அனைவருடனும் ஒன்றாக இருக்க அவள் எத்தனை ஏங்குகிறாள் என்பது அந்த ஒற்றை வார்த்தையிலேயே அவனுக்கு புரிந்து போனது.

“ம்ம்” என்றவனை இறுக்கமாக கட்டிக் கொண்டவள்.

“தேங்க்ஸ் பாவா” என்றாள் கண்கள் கலங்க.

அதனைத் தொடர்ந்து இந்த மகிழ்ச்சியான விஷயம் குடும்பத்தினருடனும் பகிரப்பட. அனைவருக்குமே அப்படி ஒரு ஆனந்தம். மீண்டும் குடும்பம் ஒன்றிணைவதில் அப்படி ஒரு கொண்டாட்டம்.

அன்றே அனைவரும் தங்கள் வீட்டிற்கு இடம் பெயர்ந்திருந்தனர். யாருமே பவித்ராவை ஒதுங்கி நிற்க ஒரு நொடியும் விடவில்லை.

அனைத்து விஷயத்திலும் அவளை தங்களுடனேயே வைத்துக் கொண்டனர். அவளுமே அழகாய் அந்த குடும்பத்தினுள் ஒன்றிப் போனாள்.

யஷ்வந்த் அவளுக்கு எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க நினைத்தானோ, அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை பவித்ரா அவனின் கண் முன்னேயே வாழ்ந்து கொண்டிருந்தாள்.

அதில் அவளுக்கும் அப்படி ஒரு மனநிறைவு. அவனுக்கும் அத்தனை பரம திருப்தி.

திருமணம், ரிசப்ஷன் என்று எதுவுமே இவர்களுக்கு வைக்காததால் வளைகாப்பை பெரிதாய் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டனர்.

அதன்படி அத்தனை விமர்சையாய் அனைத்து உறவுகளையும் அழைத்துக் கோலாகலமாய் கொண்டாடப்பட்டது பவித்ராவின் வளைகாப்பு விழா.

ஐயனாரின் குடும்பத்தாருக்கு எதையும் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத நிலை, மற்றவர்களை போல் உறவுக்காக வந்து தலையைக் காண்பித்து விட்டு சென்றனர்.

####

இரண்டு வருடங்கள் கழித்து, 

“என்ன பவி அதுக்குள்ள வீட்டுக்கு வரணும்னு என்ன அவசரம்? நான் தான் உன் பொண்ண பார்த்துக்குறேன்ல. பொறுமையா வர வேண்டியது தான” என்று அவளிடம் ஒரு அதட்டல் போட்டார் பரமேஸ்வரி.

பவித்ரா தற்பொழுது டிசைனிங் ஸ்டுடியோ ஆரம்பித்து திறம்பட அதனை நடத்திக் கொண்டிருக்கிறாள்.

“இல்லத்த, இத்தன நாள் கூடவே இருந்துட்டு பத்து நாளா அவளோட இல்லையா.. அவ நினைப்பாவே இருக்கு வேலையே ஓட மாட்டேங்குது. அதான் சீக்கிரம் கிளம்பி வந்துட்டேன்” என்றவள் தன் மகளை கையில் அள்ளி முகம் முழுவதும் முத்த மழையை பொழிந்திருந்தாள்.

இக்காட்சியை கோபமாக பார்த்துக் கொண்டே அறைக்குள் நுழைந்திருந்தான் யஷ்வந்த்.

அவனின் கோப பார்வையை ஓரப்பார்வையால் கண்டவளிற்கு ‘ஏன் இந்த கோபம் இப்பொழுது’ என்பது தான் விளங்கவில்லை.

“சரி, நீ போய் ஃபிரஷ் ஆகிட்டு வா. நான் பாப்பாவ வச்சுக்கிறேன்” என்றவர் குழந்தையை கையில் வாங்கிக் கொண்டார்.

அவளும் அறைக்குள் நுழைய உம்மென்ற முகத்துடன் தான் அமர்ந்திருந்தான் யஷ்வந்த்.

அவன் அருகில் சென்று அமர்ந்தவள், “என்னாச்சு பாவா, ஏன் கோவமா இருக்கீங்க?”.

“எல்லா முத்தத்தையும் உன் பொண்ணுக்கே கொடுத்துட்டா. அப்போ எனக்கு என்னடி பண்ணுவ?” என்றான் கோபமாய்.

அவன் கூறிய விதத்தில் அவளுக்கு சிரிப்பும் வந்துவிட்டது, கலகலவென நகைத்துவிட்டாள்.

“சிரிக்காத பவி, செம கடுப்புல இருக்கேன். இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து நீ என்னை கண்டுகிறதே இல்ல. அதுவும்  குழந்தை பிறந்ததிலிருந்து நீ என்னை சுத்தமா கண்டுக்கிறதே இல்ல” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டான்.

கடினப்பட்டு தன் சிரிப்பைக் கட்டுப்படுத்தியவள், “ரொம்ப சின்ன புள்ளத்தனமா இருக்கு பாவா நீங்க பண்றது” என்றாள் சிரிப்பினோடு.

“ஓ அப்படியா!” என்று அவன் அப்பொழுதும் உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு கேட்கவும்.

குழந்தைக்கு முத்தத்தை வாரி வழங்கியது போலவே அவனின் கன்னத்தை தன் கைகளில் தாங்கியவள் முகம் முழுவதும் முத்த மழையைப் பொழிந்திருந்தாள்.

அதில் இதமாய் நனைந்தவனின் இமைகள் தானாய் சுகமாய் மூடிக் கொண்டது.

மழை அடித்து வெளுத்து நிறைவடைந்த பொழுது தன் விழிகளை மலர்த்தியவன், “இங்க” என்றவாறு தன் இடது கன்னத்தில் கை வைத்துக் காட்டி இருந்தான்.

மறுக்காமல் அவன் காட்டிய இடத்திலும் அழுத்தமாய் தன் இதழைப் பதித்திருந்தாள் பவித்திர பாரிஜாதம்.

அவள் நினைத்து ஏங்கியது போன்ற அத்தனை அழகான வாழ்க்கை அவளுக்கு கிடைத்துவிட்டது.

அவளின் ஆசைகளும், ஏக்கங்களும் அனைத்துமே கை கூடி விட்டது.

மாற்றி மாற்றி அன்பை பொழியும் குடும்பம்..

எந்த ஒரு சூழலிலும் அவளின் கையை நொடியும் விலகாமல் அனுசரணையாய் பாதுகாப்பாய் ஆதரவாய் அவளுடனே நிற்கும் கணவன்.

அவர்களின் வாழ்க்கைக்கும், காதலுக்கும் ஆதாரமாய் முத்தைப் போல் மகள். 

நினைத்து நினைத்து உள்ளம் மகிழ்ந்து போனாள்.

ஆனால், அதற்கான நன்றியை ஒருநாளும் அவள் யஷ்வந்திடம் தெரிவித்தது கிடையாது.

அப்படி ஏதாவது கூறும் விதமாக அவள் தன் வாயைத் திறந்தாலே, அவனின் கண்டன பார்வைக்கு ஆளாகி விடுவாள். அதனாலேயே அவனிடம் அப்படியெல்லாம் வாயைத் திறக்காமல் ஜாக்கிரதையாய் இருந்து கொள்வாள்.

அவளின் செயலில் கரைந்து போனவன், “சோதிக்கிற பவி” என்றான் தாபக் குரலில்.

அதில் வெட்கத்தில் அவளின் கன்னங்கள் இரண்டும் சிவந்து விட.

அவன் அவளை நோக்கி குனிந்த சமயம் கதவு தட்டப்படும் ஓசை.

“ம்ம்ச்ச்.. போச்சு.. யாருக்கோ மூக்கு வேர்த்துடுச்சு” என்றான் சிடுசிடுப்பாய்.

“சும்மா இருங்க பாவா” என்றவள் எழுந்து சென்று கதவைத் திறக்கவும், இந்து தான் நின்று கொண்டிருந்தாள்

பவித்ராவின் கையைப் பிடித்து வேகமாய் வெளியே இழுத்துக் கொண்டு வந்தவள்.

“பவி இங்கு வாயேன், இங்க பாரேன்” என்று அந்த காட்சியைக் காண்பித்தாள்.

பவித்ராவிற்கு மனமே நிறைந்து விட்டது. யாஷிகாவின் பிஞ்சு மடியில் இவர்களின் மகள்.

“பாப்பாவ மேடம் தான் வளர்க்க போறாங்களாம். யாருக்கும் கொடுக்க மாட்டாங்களாம்” என்று அங்கலாய்ப்பாய் கூறி இருந்தாள் இந்து.

இப்பொழுது தான் வெளியே சென்று விட்டு அயர்வாக வீட்டிற்குள் நுழைந்த திருமூர்த்தி, “அம்மாடி பவித்ரா, குடிக்க தண்ணி கொண்டு வா மா”. 

அவரின் குரலுக்கு அடுத்த நொடி அவரின் முன்பு தண்ணீர் சொம்பை நீட்டி இருந்தாள் பவித்ரா.

“இந்து, பவி ரெண்டு பேரும் இங்க தான் இருக்கீங்களா.. இங்க பாருங்க, இந்த ரெண்டு சாரில எந்த சாரி நல்லா இருக்குன்னு பார்த்து சொல்லுங்களேன். நித்யாவோட வளைகாப்புக்கு இதுல எத கட்றதுன்னு ரொம்ப குழப்பமா இருக்கு” என்றவாறு தன் மருமகள்களிடம் இரண்டு புடவையை நீட்டினார்.

“இந்த எல்லோ கலர் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும் அத்த” என்று தன் விருப்பத்தை கூறினாள் பவித்ரா.

“ஆமா அத்த, பவி சொல்றது தான் சரி. இந்த எல்லோ சாரி உங்களுக்கு எடுப்பா இருக்கும். இதையே கட்டிக்கோங்க” என்று தன் அத்தையிடம் கூறியவள்.

“நீயும் நானும் ஒரே மாதிரி லாஸ்ட் டைம் எடுத்தோம்ல, அதை நாம கட்டிக்கலாம்”.

“சரிக்கா”.

“நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு சொன்னாலும் கேட்கவே மாட்டீங்களா.. போன விசேஷத்துக்கும் ஒரே மாதிரி புடவையை கட்டிக்கிட்டிருந்த போதே, காஞ்சனா அண்ணி உங்களயே குறுகுறுன்னு பாத்துட்டு இருந்தாங்க. இப்பவும் ஒரே மாதிரி கட்டுனா எல்லார் கண்ணும் உங்க மேல தான் இருக்கும்”. 

“அத்த அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும். அவங்க தான் அவங்க மெண்டாலிட்டிய மாத்திக்கணும். ஒரே குடும்பத்துக்கு மருமகளா வந்திருக்கிறவங்க ஒரே போல தான் கட்டுவாங்க”.

“ரெண்டு பேரும் ஒன்னாகிட்டிங்கன்னா உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா.. என்னவோ பண்ணுங்க. நான் இந்த புடவைக்கு மேட்சிங் பிளவுஸ் ரெடி பண்றேன்” என்று விட்டு தங்கள் அறைக்கு சென்று விட்டார்.

அவள் ஆசைப்பட்டது போலவே அப்படி ஒரு நிறைவான வாழ்க்கை. அழகிய குடும்பம், அவளை எந்த ஒரு இடத்திலும் சங்கடம் கொள்ள விடாமல் பத்திரமாய் பார்த்துக் கொள்ளும் சொந்தங்கள்.

இவளின் சிறு முக சுருக்கத்தை கூட கவனித்துக் கேட்கும் கணவன். 

மூச்சடைக்க காதலித்தே சாகடித்து விடுவான் போலும், அப்படி தான் நாளுக்கு நாள் திகட்ட திகட்ட அவளை தன் காதலில் திளைத்துக் கொண்டிருக்கிறான்.

சற்று நேரத்தில் குழந்தை அழ ஆரம்பித்து விடவும், அவளை தூக்கிக்கொண்டு அறைக்கு வந்தாள் பவித்ரா.

“இவள தூக்கிகிட்டு வந்துட்டியா.. இனி என் பக்கம் கூட திரும்ப மாட்ட. மொத்தமா இவளே உன்ன என்கிட்ட இருந்து பிரிச்சிடுவா” என்று தன் மனைவியிடம் முறைத்துக் கொண்டு நின்றான் யஷ்வந்த்.

சிறுபிள்ளைப் போல் அவனின் கோபத்தை அத்தனை ரசித்துப் பார்த்தாள் பவித்திர பாரிஜாதம்.

“இந்த பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. இப்படி பார்த்து பார்த்து மனுஷன சாகடிக்கிற டி. சோதிக்கிற பவி நீ என்னை ரொம்ப”.

குழந்தையை தொட்டிலில் போட்டவள், “தேங்க்ஸ் பாவா” என்றாள் கண் கலங்க.

அதற்குள் இருக்கும் உள் அர்த்தத்தை புரிந்து கொண்டவன், “திரும்ப இப்படி பேசுன கடிச்சு வச்சிடுவேன்”.

“அப்படிதான் சொல்லுவேன். என்ன பண்ணுவீங்க நீங்க.. தேங்க்ஸ் பாவா”.

அவளின் ஒவ்வொரு நன்றிக்கும் அவளின் இதழை சுகமாய் தண்டித்துக் கொண்டிருந்தான் யஷ்வந்த்.

அவனின் தண்டனைக்காகவே மீண்டும் மீண்டும் அவனிடம் நன்றியை தெரிவித்துக் கொண்டிருந்தாள் பவித்திர பாரிஜாதம்.

நாட்களும் பொழுதுகளும் வண்ணமயமாய் கழிய.

நிறைவும் நெருக்கமும் கூடிக் கொண்டே போக.

அன்பும் அரவணைப்பும் மாரியென பொழிய.

அப்படி ஒரு மன நிறைவான வாழ்க்கையை ரசித்து வாழ்ந்துக் கொண்டிருந்தனர்.

யஷ்வந்தை சோதிக்கும் பவியும்..

பவித்ர பாரிஜாதத்தின் பாவாவும். 

யஷ்வந்த், இப்படி ஒருவன் இல்லாமல் போயிருந்தால் பவித்திர பாரிஜாதத்தின் வாழ்க்கை தடம் மாறியதோடு, அவள் இருந்த தடயமும் இல்லாமலேயே போயிருக்கும்.

******முற்றும்******

கதையை படித்து ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள் 🥰. உங்கள் கருத்தையும் விமர்சனங்களையும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள் 😊 நன்றி 

❤️ Loading reactions...
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page