மயக்கம் தயக்கம் 31 (final episode 1.1. )

அப்பாவும் மகளும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை கேட்ட சந்தனாவுக்குள் ஏதோ ஒன்று நெகிழ்ந்தது. தனது மகள் தன்னை புரிந்து கொண்டுவிட்டாள். தவறாக நினைக்கவில்லை என்பதாலா,இல்லை விஜயராகவன் ராகினியை தனது மகள்தான் என்று அவளுக்கான அங்கீகாரத்தை கொடுத்ததாலா என்று அவளுக்குத்தான் தெரியும்.

பொதுவாக ஏற்கனவே குழந்தை இருக்கும் ஆணை ஒரு பெண் திருமணம் முடித்தால் அந்தக் குழந்தையை தனது குழந்தையாக ஏற்றுக்கொண்டுவிடுவாள். சித்திகே கொடுமைகள் எல்லாம்  அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான். ஆண்கள் அப்படி கிடையாது. நிறைய ஆண்களின் மனதில் ‘யாருக்கோ ஒருத்தனுக்கு பிறந்த குழந்தையை நா ஏத்துக்கணுமா?” என்று உள்ளுக்குள் இருக்கும். சிலர் அதை வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள்.சிலர் சொல்ல மாட்டார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் மணமகன் -மணமகள் இருவருமே ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் தாம்.இருவருக்கும் குழந்தை உண்டு.மணமகன் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது ,’மணமகள் தனது குழந்தையை பெற்றவர்களிடம் அல்லது ஹாஸ்டலில் விட்டுவிட்டு தனது மனைவியாக ,தன் குழந்தைக்கு அம்மாவாக வரவேண்டும் என்பதுதான். மனம்மகள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. நடைமுறையில் பெண்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை இது. இதனாலேயே நிறைய கணவனை இழந்து அல்லது விவாகரத்து ஆன குழந்தையுடன் இருக்கும் பெண்கள் மறுமணம் செய்துகொள்ள யோசிக்கிறார்கள். இதில் அப்படியே ஒப்புக்கொண்டாலும் பெண் குழந்தை இருக்கும் பட்சத்தில் யாரையும் நம்ப முடியாது. நான் சொல்வது புரிகிறது தானே!

இங்கே விஜயராகவன் ,தனது மகள் தயாவும் ,ராகிணியும் தன்னை பொறுத்தவரை ஒன்று தான் என்று சொல்லிவிட்டதில் எதிலோ ஜெயித்துவிட்ட உணர்வு.ராகினி அவன் சொன்னவற்றை ஏற்றுக்கொண்டது பேரானந்தம்.  எது மாறினாலும் உண்மையை வெளியே சொல்லும் தைரியம் யாருக்கும் கிடையாது. வெளி உலகத்தை பொறுத்தவரையில் கீதா -அரங்கனின் மூத்த மகள் சந்தனா, இளைய மகள் ராகினி.அவ்வளவுதான்!

நிதானமாக உள்ளே வந்த சந்தனா ராகினியை வரவேற்றாள்,”என்னடி எப்போ வந்தே?ஏதாச்சும் சாப்பிட்டியா?உங்க விஜயன் சார் எதாச்சும் சாப்பிட கொடுத்தாரா?” என்று கேட்டவாறே விஜயனை கேள்வியாக பார்த்தாள். மனைவியின் இந்த யதார்த்த பாரவையின் வீச்சில் விஜயனின் மனம் மயங்கியது.

” சாரி சனா… பேச்சு வாக்குல மறந்துட்டேன்.வீட்டுலயும் அம்மா வேறே இல்லையா.சும்மா ராகியோட ஸ்டடிஸ் பத்தி பேசிட்டிருந்தேன்.நேரம் போனது தெரியல.” என்று அசடு வழிந்தான். கோவம் கொள்ள முடியாமல் தோற்றவளாக,”சரி..சரி ,ரெண்டுபேரும் லஞ்சு சாப்பிடீங்களா…இல்ல சாப்பாடு சூடு செய்யவா?” என்றவளிடம் ,

“வேணா..நாம மூணு பேரும் எங்கயாச்சும் வெளியே போயி சாப்பிடலாம்.நீ பிரெஷ் ஆகிட்டு வா.நானும் தயாராகுறேன்.உனக்கு ஓகே தானே சனா?” என்றான்.தயா அவளது பாட்டியுடன் வெளியே சென்றிருக்கிறாள்.

” ம்ம்..சரி ,ஒரு இருபது நிமிஷம் ஆகும். வெயிட் பண்றீங்களா?’— சந்தனா.

ராகவனிடமிருந்து வெறும் தலையசைப்பு மட்டும் தான். குளிக்கும் பொழுதுதான் சந்தனா என்ற பெயரை அவன் சனா என்று சுருக்கி அழைத்தது உறைத்தது.எவ்வளவோ வருஷங்களாக அவன் இப்படித்தான் அழைக்கிறான் என்பதை போல இருந்ததால் அங்கே அதை உணராமலே விட்டுவிட்டாள். அவன் அழைத்தவிதம் அவளது மனதின் அடிவரை தித்தித்தது.

மூவருமாக வெளியே நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு பிரபல உணவகத்துக்கு சென்றார்கள். சந்தானா ஒரு சைவ பட்சி. அவர்கள் வீட்டிலும் சைவம் தான்.அவளை திருமணம் செய்துகொள்ள நினைத்தவன் முதலில் விடுத்தது அசைவம் சாப்பிடுவதைத்தான்.ஏற்கனவே விபத்து நடந்த பிறகு அசைவம் எடுக்காமல் இருந்தவன் தான். வீட்டில் அசைவம் சமைப்பதையே வாணி நிறுத்த சொல்லிவிட்டார்.வெளியே செல்லும் பொழுது ஆனந்தும் வாணியும் சாப்பிடுவார்கள்.வீட்டில் நிச்சயம் ‘நோ’தான். விஜயன் யாரையும் சாப்பிட கூடாது என்று சொல்வதில்லை. தயாவையும் சைவ உணவுக்கு பழக்கியிருந்தாள் சந்தனா.

திருமணம் ஆகி வந்த புதியதில் விஜயன் தனக்காக என்று உணவு பழக்கத்தை மாற்றிக்கொண்டுவிட்டான் என்று தெரிந்த பொழுது ஒருபக்கம் சந்தோஷமாகவும்,இன்னொருபக்கம் கஷ்டமாகவும் இருந்தது.விளக்கங்கள் கொடுக்காமலேயே அவன் தன்னை அவளுக்கு புரிவைத்துக்கொண்டு வருகிறான். ஆரம்பத்தில் பெரியதாக அவனை பற்றி தெரிந்துகொள்ளாமல் ஏற்பட்ட ஈர்ப்பு, மெல்லிய நேசம் இப்போது இன்னமும் நன்றாக வளர்ந்திருக்கிறது.

அவளை அடிக்கடி வெளியே அழைத்து செல்வது. ராகினிக்கு தேவையானவரை செய்து கொடுப்பது,keetha-அரங்கனை தனது பெற்றவர்களுக்கு சமமாக நடத்துவது, என்று அவளது மனதில் ஆழமாக தடத்தை பதிய தொடங்கியிருந்தான்.ரிசப்ஷன் வைக்கவில்லையே தவிர இருவரும் கணவன் மனைவி என்று வெளியுலம் தெரிந்து கொள்ளட்டும் என்பதுபோல் தான் அவனது நடவடிக்கைகள் இருக்கும்.

இதைவிட நல்ல கணவன் கிடைப்பது கடினம் என்று சந்தனாவுக்கு ஏதாவது ஒருவழியில் புரியவைத்துக்கொண்டே இருந்தான். அவனிடமும் நிறைய குறைகள் உண்டு. வைத்தது அதே இடத்தில் இல்லை என்றால்,ஈர டவல் கட்டிலின் மீது இருந்தால் அலுவலக வேலை செய்யும் பொழுது நடுவில் வந்து பேசினால் ,சாப்பாட்டை வீணாக்கினால் என்று அவன் கோவப்படும் விஷயங்களின் பட்டியல் பெரியது.

அவனை புரிந்து கொண்டால் ,”சோ ஸ்வீட் ” வகை. இந்த எட்டு மாதங்களில் அவளை தன்பால் வளைக்க தெரிந்தவன் அவளை கட்டிலுக்கு இன்னமும் நிர்பந்தம் செய்யவில்லை. அன்று சொன்னது தான். தானே கணியவேண்டிய உறவு.காத்திருக்கிறான். உணவகத்தில் அமர்ந்தவாறே அவனைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தவளிடம் “என்ன மேடம்,நா இங்கேயே உன்னோட பக்கத்துல உட்கார்ந்திருக்கேன்.வெறும் என்னோட நினைவுகளோடே ட்ராவல் செஞ்சா எப்படி?” என்று மானாவாரியாக அவளை கிண்டல் செய்தான்.ராகினி கூட அவன் பேச்சிலும் சந்தனாவின் தலை உலுக்களிலும் சிரித்து விட்டாள். சந்தனாவுக்கு தான் “செம்ம டேமேஜ்’ நிலவரம்.

 

ஒரு பெருமூச்சுடன் உணவு மேசையை கவனிக்க அனைத்துமே அவளுக்கும் ராகினிக்கும் பிடித்த உணவு வகைகள். இத்தனை மாதங்களில் அவனுக்கு பிடித்த உணவு வகை என்ன என்று அவளுக்கு தெரியாது. அனேகமாக அவளுக்கு பிடித்த விஷயங்கள் இருக்கும்.

மாமியாரிடம் கேட்டதற்கு ,அவனுக்கு பறக்கிறது,நீந்துறது,நடக்குறதுன்னு எல்லாமே பிடிக்கும். தினமும் அசைவம் சாப்பிட சொன்னாகூட அவனுக்கு ஓகேய் தான் . உனக்காக சைவம் சாப்பிட ஆரம்பிச்சிருக்கான். இனிமே சைவத்துல பிடிச்சது என்னனு பழகிடுவான்” என்றார். சந்தனாவுக்குத்தான் ஒருமாதிரி ஆகிவிட்டது. எனக்காக,எனது விருப்பத்திற்க்காக என்று அவர்  எவ்வளவு தன்னை மாற்றிக்கொள்கிறார். அவருக்காக நான் என்ன செய்கிறேன்?செய்திருக்கிறேன்.

அன்பும் காதலும் இருவழிப்பாதையாக இருக்கவேண்டுமே! அவரது அன்பை என்னால் நன்றாக உணரமுடிகிறது.என்னால் அவரை காதலிக்க முடியுமா?” என்று தங்களது வாழ்க்கைக்கான இரண்டாவது படியில் காலெடுத்து வைத்தாள்.

முதல் படி ராகவனை திருமணம் முடித்தது என்று நான் சொல்லாவிட்டாலும் உங்களுக்கு புரிந்திருக்கும்.  ஒருமாதம் ஓடியபிறகு ஒருநாள் திடீரென்று ,” நாம நம்மோட கல்யாணத்தை எல்லாருக்கும் தெரிய படுத்தணும் அத்தான். ஒருவருஷமே ஆகிருச்சு நம்ம கல்யாணம் முடிஞ்சு. இதுக்கு மேலயும் தாமதம் வேணாம்.” என்றவளை ஆச்சர்யமாக பார்த்தான் விஜயராகவன். அவளது மனம் தெளியட்டும் என்று காத்திருந்தது வீணாகவில்லை என்று புரிந்து கொண்டான்.

அடுத்த இரண்டு நாட்களில் ரிஸப்ஷனுக்கான பத்திரிகை டிசைன்கள் வீட்டுக்கு வர ,மாலையில் வீட்டுக்கு வந்தவன் தனது மனைவியை அருகில் அமர்த்திக்கொண்டு அவற்றை பார்வையிட்டான். இப்போதெல்லாம் கணவனின் தொடுகைக்கு அவள் உடல் பழகிவிட்டது. தினமும் காலையில் அலுவலகம் கிளம்பும் பொழுது மனைவி வீட்டில் இருந்தால் கண்டிப்பாக அவளை இறுக்கி அணைத்து முத்தங்களை கொடுத்துவிட்டு செல்வதை பழக்கமாக்கி கொண்டான்.

ஆரம்பத்தில் தவிர்க்க முடியாமல் ஏற்றவள் ,பிறகு பழகிக்கொண்டாள். ‘என்று’ என தெரியாமல் எதிர்பார்க்கவும் தொடங்கிவிட்டாள். மனைவியை அருகில் வைத்துக்கொண்டு நிதானமாக இருப்பதெல்லாம் கதைகளில் வரும்.காலம் முழுவதும் நண்பர்களாகவே இருப்போம் என்று விஜய் ஒருபொழுதும் சொன்னதில்லை. மனைவிக்கு கொஞ்சம் சகஜமாக நேரம் கொடுத்தவன் அடுத்த நிலைக்கு தங்கள் உறவை கொண்டு செல்வதில் நாட்டம் கொண்டான்.

ராகினிக்கு பன்னிரண்டாம் வகுப்பு ஜரூராக சென்றது. நீட் தேர்வுக்காக சிறந்த பயிற்சி மையத்தில் வகுப்புகள் வேறு சென்று கொண்டிருக்க அவளுக்கு நேரம் போதவில்லை. அவளது மனதில் இருந்த தெளிவு அவளை சோர்வடையாமல் பயணம் செய்ய வைத்தது.

ஒரு மாதம் கழித்து ஒரு  ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வரவேற்புக்கென்று இரண்டு தளங்களை எடுத்தான். பிரம்மாண்டமான வரவேற்பு. திருமணம் எப்போது நடந்தது என்பது பற்றி ஒருவரும் கேட்கவில்லை. கீதாவும் அரங்கனும் தங்களது உறவினர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் என்று அழைக்க , சந்தனா தனனுடன் வேலை செய்யும் செவிலியர்களையும், மருத்துவர்களையும் அழைத்தாள்.

அரவிந்தனின் வீட்டுக்கே சென்று சந்தனாவின் பெற்றவர்கள் பத்திரிக்கை கொடுக்க, சந்தனா அவர்கள் இருவரும் மதியம் ஒன்றாக அமர்ந்திருக்கும் நேரமான மதிய உணவு நேரத்தில் அரவிந்தனின் கேபினுக்கு சென்று பத்திரிக்கையை கொடுத்தாள். அரவிந்தன் சிரித்த முகமாகவே வாங்கிக்கொண்டான்.மனைவியின் காதல் அவனை மாற்றி இருந்தது.

மாலையில் சந்தனா கிளம்பும் நேரத்தில் விஜயராகவன் மருத்துவமனைக்கு வர வந்தவனை  கண்டவளுக்கு இவருக்கு உடம்புக்கு என்ன என்று பதட்டம் தொற்றியது.வேகமாக தன்னருகே வந்த மனைவியை கண்டவனுக்கு ஒரே சிரிப்புதான்.அவளின் தோளில் கைபோட்டு அணைத்தவாறே அவன் அவளை அழைத்து சென்றது மருத்துவமனை டீனின் அறைக்கு தான்.

இவ்வளவு நாட்களில் சந்தனா அறிந்து கொள்ளாதது மருத்துவமனை டீன் விஜயராகவனின்  சிறுவயது நண்பர் என்பதை. இருவரும் வெகு சாதாரணமாக பேசிக்கொண்டிருக்க பெண்ணின் பிபி எகிறியது. ஒருவழியாக பேச்சை முடித்துக்கொண்டு, “எங்க கல்யாண ரிசெப்ஷன் பத்திரிக்கைடா .கண்டிப்பா பேமிலி கூட்டிட்டு வந்திரனும்” என்றுவிட்டு இருவரும் கிளம்பினார்கள். டீனை பார்த்தாலே மருத்துவமனை நடுங்கும். இருவரும் நண்பர்களா?” என்றுதான் அவளுக்கு தோன்றியது.அவளை அறிந்தவன் “நாங்க ரெண்டுபேரும்  ஒண்ணாவது வகுப்பிலேந்து ட்வெல்த் வரைக்கும் ஒண்ணா படிச்சோம்.அவனுக்காகவே நா பயோ எடுத்தேன். அவனுக்கு மெடிசின் இன்டெரெஸ்ட்.எனக்கு எஞ்சினீரிங்,மேனேஜ்மென்ட்.  இன்னிக்கும் எங்க நட்பு மாறல ” என்று சிரித்தான். சந்தனா பதில் சொல்லவில்லை. இன்னமும் பதட்டத்தில் தான் இருந்தாள்.

முதல்நாளே ராகவன் வீட்டினரும், சந்தனா வீட்டினரும் ஹோட்டலுக்கு சென்றுவிட்டார்கள். சந்தனாவும் ராகவனும் தாயாவுடன் சென்று ஏற்பாடுகளை பார்வையிட்டார்கள். மனம் லேசாக உணர்ந்தாள் சந்தனா.அவள் யோசித்திராத நிகழ்வுகள்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page