மயக்கம் தயக்கம் 31 (final episode 1.2 )
வரவேற்புக்கான நாளும் வெகு அழகானதாக விடிந்தது. சந்தனாவின் மனதில் இருக்கும் சஞ்சலங்கள் முன்பு அளவுக்கு இப்போது இல்லை. இன்னமும் ஆண் -பெண் உறவு பற்றிய பயம் அவளது மனதில் இருக்கிறது.கணவனின் பார்வை, தொடுகை ,பேச்சு என்று விஜயராகவனின் எதிர்ப்பார்ப்பு புரிந்தவளுக்கு என்றாவது ஒருநாள் இவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.காலம் முழுவதும் இப்படியே இருந்துவிட முடியாது என்று அறிந்தவள் தான்.
மனநல மருத்துவரிடம் செல்வதற்கு அவளுக்கு இஷ்டமில்லை. காலம் எல்ல புண்களையும் ஆற்றும் மருந்து என்பதை சந்தனா புரிந்துதான் வைத்திருக்கிறாள். அவள் மனதிலிருந்து சொல்லவேண்டும் என்றால் கணவன் மீதான எதிர்பார்ப்புகள் அவளுக்குள்ளும் வேர் விட தொடங்கி மாதங்கள் ஆகிறது. அடுத்த அடி எடுத்து வைக்க மனதுக்குள் இருக்கும் பயம். கணவன் அருகில் இருக்கும் பொழுது தனது அப்பாவிடம் அனுபவித்த அதே பாதுகாப்பு உணர்வு. மொத்தத்தில் கணவனின் அருகாமைக்கு ஏங்குபவள் அவன் அருகில் வந்தால் மிரள்கிறாள்.
இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தை சொல்ல விழைகிறேன். சந்தனாவுக்கு நடந்தது போல ஏதும் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்திராவிடினும் திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் பெண்களுக்கு பொதுவாக இருக்கும் மிரட்சி தான் இது. பொதுவானது.அவளது பதினைந்து வயதில் நடந்த விஷயத்தை நிச்சயம் மறக்கவோ மறுக்கவோ முடியாது.அதன் தாக்கம் வாழ்நாள் முழுமையிலும் இருக்கும். அதற்க்காக திருமணத்தின் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காமல் சன்யாச வாழ்க்கை வாழ முடியாது.அது கூடவும் கூடாது. நம் தவறு இல்லாத பொழுது வருத்தம் கொள்ள அவசியம் என்ன?
ஆகாய வர்ணத்தில் காஞ்சி பட்டு .அதன் உடல் முழுவதும் வெள்ளி சரிகை. வைரம் மின்னும் அட்டிகை. சந்தனா அணிந்து கொண்டு இருந்த நகைகள் மொத்தமும் வைரம் தான். நீளமான அடர்ந்த கூந்தலை தளர பின்னியிருந்தாள் . நீல நிறத்தில் கல் வைத்த போட்டு. வகுட்டில் கிளம்புவதற்கு முன் கணவன் வைத்துவிட்ட குங்குமம். மிதமான ஒப்பனை. இயற்கையான அழகு. சிவந்த உதடுகளுக்கு ஒரு துளி லிப் க்ளாஸ். இவ்வளவு தான் சந்தனாவின் ஒப்பனை. அந்த அழகில் கிறங்கி நிற்கும் கணவனை நிமிர்ந்து பார்க்க விடாமல் வெட்கம் தின்றது.
அவனோ இவளை தவிர வேறு எதையும் பார்ப்பதாக இல்லை. அவளது தாடையை மெல்ல நிமிர்த்தி மருண்ட கண்களில் முத்தமிட்டவன் ,அவளை தன் மார்பில் சாய்த்துக்கொண்டான். அவ்வளவு சந்தோசம் அவனுக்கு. அவனது உடல் வெம்மை கடத்தப் பட்டதில் சுதாரித்துக்கொண்ட பெண்,அப்போது தான் கணவனை நிமிர்ந்து பார்த்தாள். கருப்பு நிற ப்ளேசர் அணிந்து நிமிர்ந்து நிற்கும் கணவனின் கம்பீர தோற்றத்தில் அவள் மனம் நிச்சயம் மயங்கியது. அடர்ந்த கருநிற மீசையில் புதியதாக இரண்டு நரை முடிகள். அவ்வளவு அழகாக இருந்தான் விஜய ராகவன். தனது கண்ணில் இருக்கும் மையை லேசாக எடுத்து கணவனின் காதுக்கு பின் இட்டவள், “கண்டிப்பா வீட்டுக்கு போனபிறகு அம்மாவை திருஷ்டி சுத்தி போட சொல்லணும் ” என்றவள் கண்களில் இருக்கும் மயக்கத்தை மிச்சமின்றி புரிந்துகொண்டான் .அவள் குரல் கிறங்கி மென்மையாக ஒலித்தது. இன்னொருமுறை மனைவியை இறுக்கி அணைத்து விடுவித்தவன் ,”ஓகே ,போலாம். ஏற்கனவே நேரமாகிடுச்சு.எல்லோரும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என்று அவளையும் அழைத்துக்கொண்டு விழா நடக்கும் ஹாலுக்கு விரைந்தான். அவனது கட்டுப்பாடுகள் தளர ஆரம்பித்திருந்தது. அவனது நரம்புகள் மனைவியை தேடியது. தன்னை நினைத்தே பயம் கொண்டான்.
விழாவுக்கு வந்திருந்த கூட்டத்தை பார்த்து சந்தனா திகைத்தாள். குறைந்தது ஐநூறுபேராவது வந்திருப்பார்கள். ஏழு மணிக்கு ஆரம்பித்த விழா முடிய இரவு பதினோரு மணி ஆனது விழா முடிய. நடுநடுவே இருவரும் சாப்பிடவென்று ஏதாவது வந்து கொண்டே இருந்ததில் இருவருக்கும் பசி இல்லை.
எப்பொழுதடா உறங்க செல்வோம் என்று ஆனது இருவருக்குமே. சிரித்தபடிக்கு வெகுநேரமாக முகத்தை வைத்திருந்தது, வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது என்று இருவருக்குமே கால்வேறு கடுத்தது. முகத்தில் எதையும் வெளிக்காட்டாமல் சந்தனா முகம் மாறாமல் இருந்துவிட்டாள். எல்லாம் முடிந்து தூங்க செல்லும் பொழுது மணி ஒன்றை தொட்டது.
ராகவன் உடை மாட்டிக்கொண்டு வருவதற்குள் பெண் அணிந்திருந்த ஆடையுடன் டூங்க சென்றுவிட்டாள். ‘இந்த கசகசப்பில் உறங்கினால் தூக்கம் கெடும் என்று உணர்ந்தவனாக அவளை நிதானமாக எழுப்பி உடை மாற்றி முகம் மட்டும் கழுவி வர செய்தான். வரும்பொழுது அம்மா “வெறும் வயித்தோட ரெண்டு பேரும் தூங்கிடாந்தீங்க “என்று சொல்லி கொடுத்தனுப்பிய பிளாஸ்க் பால் சூட இருக்க அதை இரண்டு கோப்பைகளில் ஊற்றி தன்னுடையதை எடுத்து அவன் குடிக்கவும்,பெண் முகம் கழுவி ஆடை மாற்றிக்கொண்டு வரவும் சரியாக இருந்தது.
அவளும் பாலை குடித்துவிட்டு படுத்துவிட்டாள்.தயா தனது புதியதாக கிடைத்த சித்தி ராகினியுடன் சென்று தூங்கிவிட்டாள். இவர்கள் அறையில் விஜயனும் சந்தனாவும் தான்.
கொஞ்சநேரம் உறங்கிய சந்தனா கால் வலியில் புரண்டு படுக்கவும் விஜய் ராகவன் விழித்துவிட்டான். சந்தனாவின் பாதங்கள் லேசாக வீங்கி இருந்தது. கண்களில் வலி தாங்காமல் நீர் வழிந்திருந்தது. அவள் இன்னும் அரை உறக்கத்தில் தான் இருந்தாள். அவளை லேசாக தட்டிக்கொடுத்தவன் , கையில் தைலம் ஏதும் இல்லையென்று தானே கொஞ்சநேரம் கால்களையும் பாதத்தையும் அமுக்கிவிட்டான் வலி குறைந்ததில் அவள் உறங்க தொடங்கிவிடவே, குளியல் அறையில் இருந்து சுடுநீர் எடுத்து வந்து ஒத்தடம் கொடுத்தான். வலி மட்டுப்பட பெண் சுகமாக உறங்கியது.
விஜயனும் அவளது காலருகில் தலை வைத்து தூங்கிவிட்டான். காலையில் சந்தனா எழுந்து கொள்ளும் பொழுது வலி சுத்தமாக இல்லை. காலருகே கணவனின் தலை தெரிய அரண்டு போனது பெண். கீழே ஒரு குவளையில் நீரும் அதன் அருகே துணியும் இருப்பதை கண்டவளுக்கு நடந்தவை புரிந்து போனது. தூங்கிக்கொண்டிருந்த விஜயின் தலையில் கைவைத்து கோதிவிட ,சிரிப்புடன் எழுந்தவனின் அன்றைய போகுது சிறப்பாக சென்றது. மதியம் எல்லாவற்றையும் பாக் செய்து கொண்டு கிளப்பினார்கள். வந்த பொழுது இருந்த துளி சஞ்சலமும் சந்தனாவிடம் இப்போது இல்லை
விஜயராகவன் -சந்தனா இருவருக்குமான இடைவெளி குறைய தொடங்கியிருந்தது. தயா, ராகினி அழைப்பதை பார்த்து அவளும் சந்தனாவை ‘சதும்மா’ என்று அழைக்கத் தொடங்கி இருந்தாள். தயா இப்போதெல்லாம் பாட்டி தாத்தாவிடம் கதைகள் கேட்டு கொண்டே தூங்கிவிடுகிறாள். அப்பாவை மட்டும் தெரிந்து வைத்திருந்த பொழுது அவனை மட்டும் தேடியவள் இப்போது இரண்டு பக்க பாட்டி தாதாக்கள், அத்தை,சித்தி என்று நிறைய பேரை தெரிந்து கொண்டு இப்போது எல்லோரிடமும் பழக ஆரம்பித்திருக்கிறாள்.
விஜய ராகவனது மனைவிக்காக தேடலை சந்தனா நன்றாகவே உணர்கிறாள்.பெரியவர்கள் தயாவை தங்களுடன் அழைத்து சென்று விடுவதற்கும் காரணம் புரிகிறது. இருவருக்குள்ளும் தயக்கம். கணவன் தொடும் நேரத்தில் உடல் அனிச்சையாக குழைவதை சந்தனாவால் தடுக்க முடியவில்லை.அப்பட்டமாய் தான் கணவனை உணர்கிறோம்,தேடுகிறோம் என்ற எண்ணமே அவளுக்குள் வெட்கத்தை கொடுத்தது.
ஆனந்தன் விஜயனை கூப்பிட்டே சொல்லிவிட்டார்,”விஜி,நீங்க ரெண்டு பேரும் சின்ன பசங்க இல்லை. நீ முப்பதுகளில் கடைசில இருக்கே. நா சொல்லி தெரிய கூடாது. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் முடியுது. ஒன்னு பண்ணு, ரெண்டு பேருமா ஹனிமூன் போயிட்டு வாங்க. இந்தா டிக்கெட் என்று பத்து நாட்களுக்கான ஹோட்டல் ரிசர்வேஷன் செய்த ஆன்லைன் காபியையும் ,விமான டிக்கெட்டையும் அவனிடம் கொடுத்துவிட்டார்.
சந்தனா லீவு கிடையாது. குழந்தையை விட்டு போக முடியாது என்று ஆயிரம் சொன்னாள். ஏற்கனவே ஆக்சிடென்ட் ஆனதில் நிறைய லீவு எடுத்தாச்சுப்பா என்று விஜயன் ஆயிரம் சொன்னான். அவர்கள் சொல்வதை கேட்பதற்கு பெரியவர்கள் தயாராக இல்லை.
குலு மணாலியின் குளிர் சந்தனாவுக்கு முகம் சிவக்க வைத்தது வெளியே வரவே மாட்டேன் என்று அடம். குளிருக்கான ஆடைகளை அணியச்சொல்லி ஒருவழியாக அவளை கூட்டிக்கொண்டு வெளியே சுற்றினான் விஜயன். ஏற்கனவே நண்பர்களுடன் வந்திருக்கும் இடம் தான் .இப்போது மனைவியுடன். ஒருவருடன் ஒருவர் உரசிக்கொண்டு நடப்பதும் ரசனைகளை பகிர்ந்து கொள்வதும், ஒருவர் தட்டிலிருந்து இன்னொருவர் உணவை எடுத்து ருசி பார்ப்பதும் இயல்பானது. கணவனது உரசல் தந்த கதகதப்பில் சந்தனா தன் வசம் இழந்தாள்.போதாத குறைக்கு அவள் எதையாவது தீவிரமாக பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத அவனது முத்தங்கள் அவளுக்குள் ஏதேதோ எதிர்பார்ப்பையும் ஏக்கங்களையும் முகிழ்க்க செய்திருந்தது. கணவன் கண்டுபிடித்துவிட கூடாதே என்று அவள் பதுங்க அதையும் சேர்த்து கண்டுகொண்டான் கணவன்.
முதல் இரண்டு நாட்கள் சுற்றியவர்கள் மூன்றாம் நான் பனிப்பொழிவு அதிகமாக இருக்குறது என்று அறைக்குள் முடங்கினார்கள். சாப்பிடுவதும்,தொலைக்காட்சி பார்ப்பதும் ஜன்னலின் வழியே பனியை ரசிப்பதும் போர் அடிக்க சிறு உறக்கம். உறக்கம் விலகி எழுந்தவள் கண்டது தான் வாகாய் கணவனின் மார்பில் முகம் புதைத்து இருப்பதை தான். வெகு அருகில் அவனின் முகம் அவளின் மூச்சை நிறுத்துவது போல இருக்க, கண் விழித்தவன் பார்வையில் இருந்தது என்ன?
மனைவியின் திகைத்த,ரசனை மிகு பார்வையில் அவள் சம்மதத்தை உணர்ந்தவன் அவளுள் தன்னை நிரப்ப சித்தமன்னன். அவள் உடலில் காற்றுப் புகாத இடங்களிலும் அவன் முத்தமிடும் சப்தம் கேட்டது.கிறங்கி கிடந்தது பெண்மை. இதற்க்கு மேல் இப்போது வேண்டாம் என்று விலகினான். கேள்வியாய் பார்த்தவளிடம் ,”இப்போ இது போதும் தூங்கு “என்று அவளை உறங்க செய்தான்.உண்மையில் வெறும் முத்தங்களில் அவளது உணர்வுகளை விழித்தெழ செய்திருந்தான்.
ஏற்கனவே அவள் பட்ட காயங்களின் ரணம் திரும்ப அவளை காயம் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்தவன் ,முதல் மூன்று நாட்களில் அடுத்த கட்டத்துக்கு செல்லவே இல்லை. நிதானமாக அவன் கையாண்டதில், அவள் தன்னை எந்த தடங்கலும் ,மனக்கசப்புகளும் இன்றி முழுதாக அவனின் வசம் தன்னை கொடுத்தாள், அவனை பெற்றாள்.
அவள் அனுபவித்திருந்த வலியின் சுவடு இல்லை. எவ்வளவு மென்மை. அவள் கண்களை பார்த்து அவளுக்கு சேவகம் செய்தான். ராணியாக கட்டிலில் அவள் தன்னை உணர செய்தான். அவள் முழுமையாக விஜய ராகவன் ஆகிப்போனாள். மேலும் இரண்டு நாட்கள் அங்கேயே இருந்தார்கள். விட்டு நொடியும் அகல முடியாமல் காதல் மயக்கத்தில் தேனீக்களாக மாறியிருந்தார்கள்.
இருவராக சென்றவர்கள் இப்போது மூவராக வந்தார்கள். அங்கிருந்து கிளம்பும் பொழுதே ராகவன் உயிரணு ,பெண்ணவளின் வயிற்றை தனக்காக தெரிவு செய்து விட்டது.
ஆறு ஆண்டுகள் கழித்து,
ராகினி மருத்துவம் முடித்துவிட்டு தனது அக்கா வேலை செய்த மருத்துவமனையிலியே பயிற்சிக்காக சேர்ந்து விட்டாள். குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்று சந்தனா வேலையை விட்டு விட்டாள். தயா இப்போது ஐந்தாம் வகுப்பிலும் ,அவள் தம்பி இப்போது யு கே ஜி யிலும் படிக்கிறார்கள். இப்போது அடுத்த குழந்தையை வயற்றில் சுமக்கிறாள் சந்தனா. இது ஆறாம் மாதம்.
அரவிந்தனும் அவனது மனைவியும் சேர்ந்து அடையாறில் ஒரு கிளினிக் ஆரம்பித்து விட்டார்கள். வீட்டையும் அங்கேயே மாற்றிக்கொண்டும் சென்று விட்டார்கள். வித்யா இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்திருக்கிறாள்.அதற்க்கு அவளுக்கு இவ்வளவு காலம் தேவை பட்டிருக்கிறது.
அரங்கன்-கீதா தங்களது இரண்டாவது மகள் ராகினிக்காக மாப்பிள்ளை தேட , விஜயராகவனிடம் அந்தரங்க காரியதரிசியாக இருந்த சுந்தரத்தின் பேரன் முரளியை பார்க்கலாம் என்று விஜயன் சொல்லி இருக்கிறான்.
முரளி தில்லியில் பிரதம மந்திரி அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. சுந்தரத்தின் பெண் வயிற்று பேரன். விஜயனை வீட்டு மனிதர்கள் முன் அப்பா என்றும் வெளியில் சார் என்றும் அழைப்பதை ராகினி இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை.
சில ரகசியங்கள் அப்படியே இருக்கட்டும். காதலின் இன்னொரு பரிமாணம் சந்தனா விஜயராகவனின் வாழ்க்கை . இருவருக்குள்ளும் இருந்த தயக்கங்கள் விலகி ஒருவருவருக்கொருவர் மீதான மயக்கத்தில் .அவர்களை வாழ்த்தி நாமும் பயணப்படுவோம் !
