ரசிகை – 26

ஒரே நாளில் இரண்டு முறை அவனது ஆவேசமான அன்பில் நனைந்ததால், நிற்கக் கூடத் திராணி இல்லாமல் துவண்ட கொடியாய் மெத்தை மேல் சரிந்து கிடந்தாள் பூர்ணிமா. அவளது உடல் தளர்ந்திருந்தாலும், மனது மட்டும் ஏதோ ஒரு சுகமான மயக்கத்தில் வானில் மிதந்து கொண்டிருந்தது.

“ஏய் சோம்பேறி! எழுந்திரிடி…” என்று சூர்யா அவளது கன்னத்தைத் தட்டி எழுப்பினான் சூர்யா.

“இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே…” என்று அவனது மார்பில் முகம் புதைத்துச் செல்லமாகச் சிணுங்கினாள்.

“அப்படியா? அப்போ உங்க முத்து மாமா கல்யாணத்தைப் பார்க்கப் போக வேண்டாமா நீ?” என்று அவன் காதோரம் குனிந்து கிசுகிசுக்க, அந்தப் பெயரைக் கேட்டதுமே மின்சாரம் தாக்கியது போல அடித்துப் பிடித்துக்கொண்டு படுக்கையில் இருந்து எழுந்தாள்.

சூர்யா அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்வை எங்கே நிலைத்திருக்கிறது என்று கவனித்துக் குனிந்து பார்த்தாள். அப்போதுதான் அவளுக்கு உறைத்தது, தன் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லை என்பது!

அவளது நீளமானக் கூந்தல் கலைந்து, சிதறிய மேகம் போல அவளது முதுகுப்புறத்தை முழுதாய் மறைத்திருந்தது. பால் வண்ண மேனியில், சூர்யா அவளைத் தன் வசமாக்கியதற்கான சாட்சிகளாய் ஆங்காங்கே சிவந்த தழும்புகள்! அவனது நகக்கீறல்களும், பற் தடம் பதித்த முத்திரைகளும் அவளது கழுத்துச் சரிவிலும், தோள் பட்டைகளிலும் பல நூறு கோலத்தை வரைந்திருந்தன. 

அவை அனைத்தும், ‘உன் தேகம் முழுதும் இப்போது சூர்யாவிற்குச் சொந்தம்!’ என்பதைப் பறைசாற்றுவது போலிருந்தது.

பதற்றமானவள், சட்டென அருகிலிருந்த பெட்ஷீட்டை எடுத்துத் தன் மேனியைச் சுற்றிக் கொண்டே, “இன்னைக்கு என்ன கிழமை?” எனக் கேட்டாள்.

“வெள்ளிக்கிழமை நடு ராத்திரி பதினொன்னு! நாளபின்ன டாக்டர் கேட்டா கரெக்ட்டா தேதிய சொல்லிடு…” என்றான் அவன், ஒரு கிண்டல் சிரிப்புடன்.

வெட்கத்தில் அங்கம் அங்கமாக சிவந்தவள், “சும்மா இரு சூர்யா… ஞாயித்துக்கிழமைதான கல்யாணம்? இப்போவே எதுக்குக் கிளம்பணும்?” என்று விழிகளை சுருக்கியபடி கேட்டாள்.

“என்ன இருந்தாலும் அவன் என் சகலை முறை. போதாக்குறைக்கு வீடு தேடி வந்து பத்திரிகை வச்சு கூப்பிட்டு இருக்கான். அதுவும் முதல் பத்திரிகை வேற! அவனுக்காக நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்குதுல்ல? அதான் இப்பவே கிளம்புறோம்.” 

சூர்யா எதார்த்தமாகப் பேசுகிறானா? இல்லை இதில் ஏதாவது பெரிய உள்குத்து இருக்கிறதா? என்று சத்தியமாகப் பூர்ணிமாவிற்குப் புரியவில்லை. ஆனால், அவன் கண்களில் மின்னும் ஒளி, ஏதோ ஒரு பெரிய சம்பவத்திற்குச் சென்னை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவளுக்குச் சொல்லாமல் சொன்னது.

‘எங்களால முத்து மாமா, காவ்யா கல்யாணத்துல எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது. அதுக்கு கல்யாணம் முடிகிற வரை இவனை சென்னை பக்கம் போகவே விடக்கூடாது!’ என்ற முடிவுக்கு வந்தாள் அவள்.

“சீக்கிரம் ரெடியாகு… சென்னைல நமக்காக ஒரு பெரிய கூட்டமே காத்துட்டு இருக்கு!” என்று அவன் கிளம்பத் தயாராக, 

பூர்ணிமா, “அவசியம் நாம அந்த கல்யாணத்துக்கு போகணுமா? இங்கேயே இருந்து வேற ஏதாவது பண்ணலாமே…” என்று அவன் விரல் நுனியை பிடித்துக்கொண்டே கேட்டாள்.

“இங்க இருந்து என்ன பண்றது?”

“என்ன வேணாலும்…” என்று சொல்லிக் கொண்டே போர்வையை விலக்கியவள், இரு கரம் நீட்டி அவனை அழைத்தாள்.

“தாங்குவியாடி?” இதழ் கேட்டாலும், உடல் முன்னேறிச் சென்றிருந்தது…

சனி இரவு… ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த அந்த நேரத்தில், பிரபாவின் வீட்டில் மட்டும் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. மறுநாள் காலையில் திருமணம் என்பதால், அந்த வீடே ஒரு திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.

வாசலில் பந்தல் கால் நடப்பட்டு, தொரணங்கள் காற்றில் அசைந்தாடிற்று. வீட்டு மதில் சுவர் முழுக்கச் சீரியல் லைட்டுகள் மினுக் மினுக் என கண்ணாமூச்சி ஆடின. அந்த வண்ண விளக்குகளின் பிரதிபலிப்பு, தெருவோரச் சிமெண்ட் தரையில் விழுந்து ஜொலித்துக் கொண்டிருந்தது.

வீட்டு வாசலை கட்டப்பட்டிருந்த ஸ்பீக்கரில் பழைய எஸ்பிபி-யின் கல்யாணப் பாடல்கள் சன்னமான குரலில் ஒலித்துக் கொண்டிருக்க, உறவினர்களின் அரட்டையும் சிரிப்புச் சத்தமும் அந்த நள்ளிரவிலும் குறையவே இல்லை. அடுக்களையில் இருந்து நெய்யும் ஏலக்காயும் கலந்த பலகார வாசம் வீடு முழுக்கத் தூக்கலாக வீசியது. அடுத்தநாள் சீர்வரிசை பலகாரமாய் கொடுப்பதற்கு அதிரசமும் முறுக்கும் ஒரு பக்கம் தயாராகிக் கொண்டிருந்தது.

“அட, அந்தத் தாம்பூலப் பையை அங்கே வைங்கப்பா…” என்று பிரபாவின் அதிகாரம் கலந்த குரலும், 

“காவ்யாவுக்கு அலங்காரம் செய்ய பியூட்டி பார்ல இருந்து நாலு மணிக்கு எல்லாம் ஆளுங்க வந்துடுவாங்க. அதுக்குள்ள அவளை தூங்க சொல்லுங்க” என்ற மங்கையின் உத்தரவுகளும் மாறி மாறி ஒலித்தன.

காவ்யாவின் மனதில் கொண்டாட்டமும் குதூகலமும் கூரை பிய்த்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தது. அறையெங்கும் ஜொலிக்கும் பட்டுச் சேலைகளின் அந்தப் புது வாசம்… கையைத் தீண்டினால் வழுக்கிக் கொண்டு ஓடும் அந்தப் பட்டின் சரசரப்பு… என சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

கண்ணாடி முன்னால் நின்று, மார்பு நிறையப் பொன் நகைகளை ஒவ்வொன்றாக மாற்றி மாற்றிப் போட்டு அழகு பார்த்துக் கொண்டே, “இந்த நெக்லஸ் எனக்கு எடுப்பா இருக்கா திவ்யா? இல்ல அந்த மாங்காய் மாலையைப் போடவா? முத்து மாமாவுக்கு எது பிடிக்கும்னு தெரியலையே?” என்று ஆசையாகக் கேட்டாள்.

அருகிலேயே கட்டிலில் சாய்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திவ்யா, பதில் ஏதும் சொல்லாமல் மௌனம் இருந்தாள். எப்போதும் சலசலக்கும் ஓடை போல தனக்கு மிச்சமாய் பேசும் தங்கை, இன்று அமைதியாக இருப்பது அவளுக்கு கொஞ்சம் விசித்திரமாக இருந்தது.

“ஏய், என்னடி ஆச்சு உனக்கு?” என்று திவ்யாவின் தோள்களைப் பிடித்து உலுக்கினாள் காவ்யா.

உடனே சுதாரித்துக் கொண்டவள், “இல்லக்கா, நாளைக்கு நீ போனதுக்கப்புறம் நான் மட்டும் தனியா இங்கே இருக்க போறேன்ல. அத பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்” என்று பொய் சொல்லி சமாளித்தாள். 

அதை அப்படியே நம்பிக் கொண்ட காவ்யா, “விடுடி, பக்கத்துல தானே? அடிக்கடி வந்து போவேன்” என்று கூறிவிட்டு மீண்டும் அலங்கார வேலைகளை பார்க்க போய்விட்டாள்.

திவ்யாவின் மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களே வேறு. 

அன்று ஒரு நாள் முத்து, ‘உங்க அப்பா அம்மாவுக்கு பணம் தான் முக்கியம். வரதட்சணை கொடுக்க விருப்பம் இல்லாமதான் காவ்யாவை எனக்கு கட்டிக் கொடுக்க அவசரப்படுறாங்க. இது போக சூர்யாகிட்ட பெரிய தொகையை லஞ்சமா வாங்கி இருக்காங்க. அதை அப்படியே உங்க அப்பா பதுக்கிட்டாரு!’ என்று சொன்னான்.

அன்றிலிருந்து திவ்யா விழித்துக்கொண்டாள். 

‘முத்து மாமா பொய் சொல்ல மாட்டார். அப்படியென்றால் அப்பா அவ்வளவு பணத்தை எங்கே வைத்திருக்கிறார்? நமக்காகத்தான் சேர்த்து வைத்திருக்கிறாரா? இல்லை முத்து மாமா சொன்னபடி பதுக்கி விட்டாரா?’ என்ற கேள்வி அவள் மண்டையை குடைந்தது.

வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து, மூலை முடுக்கெல்லாம் தேடி அலசிய திவ்யாவிற்குப் பிரபா பதுக்கி வைத்திருந்த ரகசியப் பெட்டி சிக்கியது. அதைத் திறந்து பார்த்தவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அதில் கட்டு கட்டாகப் பணமும், ஜொலிக்கும் நகைகளும் இருந்தன. 

ஆனால், காவ்யா திருமணத்திற்கு, கைக்காசை போட்டு புது நகையை வாங்கினார்கள். எண்ணி ஒரு வாரத்தில், தாத்தாவின் வயலை விற்று அப்பாவும் அத்தையும் ஆளுக்கு பாதியாக பணத்தை பிரித்துக் கொண்டது அவளுக்கு தெரிய வந்தது. 

மோகனா அதை மண்டபத்திற்கும், மற்ற செலவுகளுக்கும் பயன்படுத்த, பிரபா மகளின் சீதன பொருட்களுக்காக பயன்படுத்திக் கொண்டார். 

‘அப்போ, அக்கா கல்யாணத்துக்காக அப்பா தன் கை காசுல இருந்து ஒத்த ரூபா கூட போடல. முத்து மாமா சொன்னது உண்மைதான்! அம்மா, அப்பா ரெண்டு பேரும் நகையையும் பணத்தையும் நமக்காகச் சேர்த்து வைக்கல… தங்களோட சுயநலத்துக்காகப் பதுக்கி வச்சிருக்காங்க! என்று அவளது நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் புரிந்தது.

கூடவே, ‘அவளுக்கு முத்து மாமா அமைஞ்சுட்டாரு. ஆயுசு முழுக்க அவளை வச்சு காப்பாத்திடுவாரு. என்னை யாருக்கு கட்டிக் கொடுப்பாங்க? என் சீர்வரிசைக்கு எங்கிருந்து பணம் கொண்டு வருவாங்க?’ என்ற கேள்விகள் மனதில் எழ, எதிர்காலமே சூனியமாக தோன்றியது.

மங்கை, “இன்னும் தூங்கலையாடி நீ?” என்று ஒரு குரல் கொடுத்ததும் காவ்யா, அத்தனை நகைகளையும் பெட்டிகளில் அடுக்கினாள். அதை 

அவற்றை தலைமாட்டிலேயே வைத்துவிட்டு நிம்மதியாய் உறங்கப் போனாள். நாளை முத்து மாமாவின் கழுத்தில் மாலை சூட்டும் நினைப்பில் அவளுக்குச் சீக்கிரம் உறக்கம் வந்துவிட்டது. ஆனால், மறுநாள் விடியல் அவளுக்கு ஒரு மரண அடியைக் காத்திருந்தது.

நான்கு மணிக்கு அலாரம் அடிக்க, மெல்லக் கண் விழித்தாள் காவ்யா. கை தானாகத் தலைமாட்டில் இருந்த நகை பெட்டிகளைத் தேடியது. ஆனால் அங்கே வெறும் மேஜைதான் கையில் பட்டது. பதறிப்போய் எழுந்து அமர்ந்தாள்.

“அம்மா… அம்மா…” என்று அலறியபடி அருகில் பார்த்தவளுக்கு இன்னொரு அதிர்ச்சி. எப்போதும் எட்டு மணி வரைக்கும் குறட்டை விட்டுத் தூங்கும் திவ்யாவையும் இன்று கட்டிலில் காணவில்லை!

காவ்யாவின் அலறல் சத்தம் கேட்டு, அடுத்த அறையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த பிரபாவும் மங்கையும் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர். காவ்யா தலைவிரி கோலமாய் படுக்கையில் அமர்ந்து மேஜையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு மங்கை துடித்துப் போனாள்.

“என்னாச்சு காவ்யா? எதுக்கு இப்படி உக்கார்ந்திருக்க? இன்னும் மூணு மணி நேரத்துல கல்யாணத்தை வச்சுக்கிட்டு என்ன விளையாட்டு இது?…” என்று மங்கை முடிக்கவில்லை, அதற்குள் காவ்யா அழுகையினூடே மேஜையைக் காட்டினாள்.

“அம்மா… நகை… நகை பெட்டி எதையுமே காணோம்மா! நைட் இங்கதான் அடுக்கி வச்சுட்டுத் தூங்குனேன். இப்போ ஒன்னு கூட இங்க இல்லம்மா…”

பிரபாவுக்கு தலை விண்விண்ணெனத் தெறித்தது. உடனே அவர் பித்துப் பிடித்தவர் போலத் தன் அறைக்கு அவசரமாய் ஓடினார்.

மங்கை, “நகையெல்லாம் எங்கடி போச்சு? யாராவது திருடன் உள்ள வந்துட்டானா? நகை மட்டும் இல்லாம திவ்யாவையும் காணோமே?” என்று பதற்றத்தில் அறையைச் சுற்றி, கட்டிலின் அடியில், அலமாரி இடுக்குகளில் எனப் பித்து பிடித்தவள் போல் தேடினாள்.

“அம்மா, திவ்யாவையும் காணோம்மா. அவ நேத்து ராத்திரியே ஒரு மாதிரி இருந்தா…” என்று காவ்யா விக்கி விக்கி அழ, மங்கையின் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டியது போல இருந்தது.

“திவ்யா! திவ்யா!” என்று மங்கை வீடே அதிரக் கத்தியும் எந்தப் பதிலும் வரவில்லை. சத்தம் கேட்டு வாசலில் நின்றிருந்த உறவினர்கள் மெல்ல எட்டிப் பார்க்கத் தொடங்க, மங்கை சட்டெனத் தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.

முகத்தில் ஒரு போலிச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, “ஒண்ணுமில்ல… பியூட்டி பார்லர்ல இருந்து ஆளுங்க வந்துட்டாங்க. இதுங்க ரெண்டும் இன்னும் குளிக்காம உட்கார்ந்திருக்கு. அதான் திட்டிட்டு இருக்கேன்… நீங்க போங்க…” என்று பொய் சொல்லிச் சமாளித்துவிட்டு, கணவனைத் தேடித் தன் அறைக்குள் பாய்ந்தாள்.

அங்கே… பிரபா, அலமாரிக்குள் தான் ரகசியமாகப் பதுக்கி வைத்திருந்த நகையையும் பணத்தையும் காணாமல், சிலை போல உறைந்து போய்க் கிடந்தார்.

மங்கை பதறிக் கொண்டு, “என்னங்க? என்னாச்சு? ஏன் இப்படி இடிஞ்சு போய் உக்காந்து இருக்கீங்க?” என்று கேட்க,

“அடியே… உன் பொண்ணு நம்ம மூணு பேருக்கும் மொத்தமாப் பட்டை நாமத்தைச் சாத்திட்டுப் போய்ட்டாடி!” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

அந்நேரம் அந்த அறைக்குள் நுழைந்தார் ராசம்மாள் பாட்டி. பிரபா ரகசியமாகப் பணம் வாங்கிய விஷயமே தெரியாத அந்தப் பாட்டியிடம், “காவ்யாவோட கல்யாண நகைகளைத் திருடிக்கிட்டுத் திவ்யா ஓடிட்டா அத்தை!” என்று மங்கை ஒப்பாரி வைத்தாள்.

“பொட்டக் கழுதைக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? கண்டிப்பா அவ பேர்ல போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்காம விடக்கூடாது!” என்று ஆங்காரமாகத் துள்ளினார் பாட்டி.

இதற்குள் பிரபாவின் செல்போன் அலறியது. எடுத்துப் பார்த்தால் முத்துவின் தாய் மோகனா.

“அண்ணே… பந்திக்குச் சமைக்க ஆளுங்க வந்துட்டாங்க. காலையில டிபனுக்கு இட்லி தோசை பூரி பொங்கல் நாலும் செய்ய சொல்லிட்டேன். அதைச் சொல்லத்தான் போன் பண்ணேன். நீ தாலி எடுத்துக்கிட்டு, பொண்ணைக் கூட்டிக்கிட்டு நேரத்தோட மண்டபத்துக்கு வந்துடு. லேட் பண்ணிடாத!” என்று சொல்லிவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் காலை கட் செய்தாள்.

சுயம் தொலைத்து நின்றவர்களுக்கு, அப்போதுதான் திருமண வேலைகள் காத்திருக்கிறது! எனும் நிதர்சனம் புத்தியில் உரைத்தது.

“இனிமே கவலைப்பட்டு எந்தப் பிரயோஜனமும் இல்லை. பேசாம அலங்காரம் பண்ண வர்ற பொண்ணுங்க கிட்ட இருந்து கவரிங் நகையை வாங்கி மாட்டி விடுவோம். கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் மத்ததைப் பாத்துக்கலாம். இப்போதைக்குக் கௌரவத்தைக் காப்பாத்திக்கப் பாருங்க!” என ராசம்மாள் பாட்டி யோசனை சொன்னார்.

“வேற வழியே இல்லைங்க… அப்படியே பண்ணிடுவோம்” என்றாள் மங்கையும்.

பிரபாவுக்கும் அதுதான் சரி என்று பட்டது. ஊர் உலகத்தைச் சமாளிக்கக் கவரிங் நகையை நம்பி அவர்கள் களம் இறங்கத் தயாரானார்கள்.

இதுவரை நடந்தது அனைத்தும் திவ்யாவின் திட்டம்! 

சூர்யா இன்னமும் தன்னுடைய ஆட்டத்தையே ஆரம்பிக்கவில்லை. திவ்யா செய்த இந்தச் சின்னத் தில்லுமுல்லுக்கே நிலைகுலைந்து போயிருக்கும் இந்தக் குடும்பம், நிஜமான ‘புயல்’ (The Smiling Storm) களத்தில் இறங்கினால் தாங்குமா?

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page