நீலனும் அமுதனும் முத்துவின் பழைய வீட்டிற்கு சென்று பார்த்த போது தான் தெரிந்தது அவன் படிக்கவே இல்லை அவன் ஏதோ ஒரு இடத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்றும் அவர் பெற்றோர்கள் சிறுவயதிலேயே இறந்து விட்டனர் என்றும் தெரிந்தது.
அதன் பின் மேலும் விவரங்கள் தெரிய அவர் வேறு ஒருவனை காட்டவும் அவன் வரும் வரை அவன் வீட்டின் வாசப்படியிலிலையே காத்திருக்க அவனும் ஒரு வழியாக வந்து சேர அவனிடம் விசாரித்த போது முதலில் தெரியாது என்று மறுத்தவன் பின்பு கேரளாவிற்கு வேலைக்குச் சென்றவன் ஒரு விபத்தில் சிக்கி அங்கேயே இறந்து விட்டதாகவும், அவன் தான் சென்று எல்லா காரியங்களையும் செய்து விட்டு வந்ததாகவும் கூறினான்.
அதைக் கேட்ட இருவரும் தன் சித்தப்பாவையும் எப்படி தேற்றுவது என்று யோசனையிலேயே எப்படி ஊருக்கு வந்து சேர்ந்தார்கள் என்று தெரியாமல் இருவரும் வீட்டிற்கு வந்து நிற்க, அமுதனின் மாமா அவர்களை இன்முகத்தோடு வரவேற்று, ” என்னாச்சுப்பா போன காரியம் நல்லபடியா முடிஞ்சுது தானே” என்றார்.
அவர்கள் இருவரும் திக்கித் திணறி அங்கு நடந்தவற்றை கூற, அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி சரிந்தார். அவரை அவசரமாக தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் வந்து சேர்த்து விட்டு வெளியே நிற்கும் போது
நீலா வந்து இருவரிடமும், ” நீங்க தான அவரை கொன்னுட்டு வந்து இப்ப அவர் செத்துட்டாருன்னு பொய் சொல்றீங்க” என்றாள்.
“அப்படியெல்லாம் எதுவும் பண்ணல பா ” அமுதன் சொல்லவும் “ஏய் நீ எதுவும் பேசாத நீ தான் ஏதாவது பண்ணி இருப்பியோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு ” என்றாள்.
“ஏய் அவன் ஏன் அப்படி பண்ண போறான்” என்று நீலன் கேட்டதற்கு “இவனுக்கு என் மேல் ஆசை அதனால என்னை எப்படியாவது கட்டிக்கணும்னு சொல்லி இது மாதிரி பண்ணி இருப்பான் அண்ணா ” என்று அவன் தோளில் சாய்ந்து அழுதாள்.
இதை எல்லாம் பார்த்த அமுதனின் தாய் அமுதனிடம் வந்து “அவ ஏதோ சோகத்தில் அழுகிறாய் இது பெருசா எடுத்துக்காத அமுதா” என்று கூறினார்.
அவனும் “புரிதுமா” என்றான்.
நீலன் அழும் தன் தங்கையை “நிமிர்த்தி இங்க பாரு நீலா நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் நடக்கல பா என்ன நடந்ததுனா” என்று அவன் ஆரம்பிக்கும் போதே மருத்துவர் வந்து, பெரியவர் கண் திறந்து விட்டார் என்று கூறவும்
நால்வரும் உள்ளே ஓடி போய் பார்த்து, “உங்ககளுக்கு ஒன்னும் இல்லை மாமா” என்று முதலில் அமுதன் கை பிடிக்க அவரும் அமுதனின் கையை அழுத்தமாகப் பிடித்து, “இதை உன்கிட்ட கேட்கலாமான்னு தெரியல ஆனா இந்த சூழ்நிலையில் உன்னை தவிர வேற யார்கிட்டயும் கேட்க தோணல அமுதா ” என்று தயங்கினார்.
“உங்களுக்காக என் உயிரை கூட கொடுப்பேன் மாமா உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க” என்றான் அமுதன்.
அவர் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் தன் தங்கையை பார்க்க அவரும் “நீங்க என்ன கேட்க வரீங்கன்னு எனக்கு புரியுது அண்ணா எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் நீங்க முதல்ல சரியாய் வாங்க” என்று தன் அண்ணனின் எண்ணத்தை சொல்லாமலே புரிந்து கொண்டார் அந்த தாய்!!
இருந்தாலும் அமுதனின் கையை இறுக்கிப் பிடித்தவர் “நீலாவை கட்டிக்கிறியா” என்று கேட்டார்.
இந்த வார்த்தை அமுதனை விட நீலனுக்கு அதிர்ச்சியாகி போக “சித்தப்பா என்ன வார்த்தை கேக்குறீங்க” என்று கேட்டான்.
“கேட்கக் கூடாது தான் பா ஆனா எனக்கு வேற வழி தெரியலையே” என்றார் அவர்.
“அதுக்குன்னு ஒருத்தன் கிடைச்சா அவன் மேல ஏறி உட்காருவீங்களா” என்று அவன் கோபித்துக் கொண்டு அங்கிருந்து நகரும் போது நீலனின் கையை மெதுவாக பிடித்து அமுதன் நிறுத்திவிட்டு “மாமா நான் நீலாவை கட்டிக்கிறேன் ஆனால், நீலாவையும் கேளுங்க” என்றான்.
அவர் தன் மகளைப் பார்க்க தன் கலங்கிய கண்களை துடைத்துவிட்டு ‘இதற்குத்தானே நான் ஆசை ஆசையா காதலிச்ச என்னோட முத்துவை கொன்ன, உன்னையே கட்டிக்கிட்டு வாழ்நாள் முழுவதும் உன்னை நான் சாகடிப்பேன்’ என்று மனதில் சூள் உரைத்துக் கொண்டு, ” எனக்கும் சம்மதம்பா” என்று கூறிவிட்டு அவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.
அமுதனுக்கு அவள் தன்னை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டாள் என்பது அதிர்ச்சி நீலகண்டனுக்கு அமுதனின் மீது கோபம் வந்து “நான் சொன்னா நீ கேட்க மாட்ட இல்லை ” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அவனும் நகர்ந்து விட்டான்.
ஆனால், இங்கு யாரும் அமுதனின் மன நிலையை புரிந்துக் கொள்ளவே இல்லை… அவனுக்கு நீலா மீது எப்போதும் பிரியம் என்பதே இல்லை, அவன் முழுக்க முழுக்க ஒத்துக் கொண்டது தன் மாமனுக்காக மட்டுமே, காரணம் சிறு வயதில் தந்தையை இழந்த தன்னை இன்று வரை மகனை போல பாவித்து படிக்க வைப்பதால், தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை இவன் மாமன் சொல் மிக்க மந்திரமில்லை என தன் மனதில் ஒரு மந்திரமாகவே எழுதிக் கொண்டான்.
அதன் பிறகு தன் மாமனை அவர் அருகில் இருந்தே தேற்றி வீட்டிற்கு அழைத்து வந்து அடுத்த முகூர்த்தத்திலேயே அமுதன் நீலாவின் திருமணம் இனிதே நடைபெற்ற முடிந்தது.
பெயருக்கென்று சாந்தி முகூர்த்த ஏற்பாட்டை செய்ய அமுதனின் “தாயோ எதுவாயிருந்தாலும் வாழ்க்கையை விட்டுக் கொடுத்துட்டு போ கண்ணா” என்று தன் மகனுக்கு நெற்றியில் ஒரு முத்தம் வைத்துவிட்டு அனுப்பி வைத்தார்.
அவருக்கு தான் சிறுவயதிலேயே கணவனை இழந்தவர் தனக்கு ஒருவன் இப்படி வாழ்க்கை கொடுத்திருந்தால் அது நன்றாக இருந்திருக்குமே அது போல தான் தன் மருமகளுக்கு இன்று தன் மகன் வாழ்க்கைத் தந்திருக்கிறான் என்று அவர் தன் மனதை தேற்றிக் கொண்டார்.
அவனும் தன் தாய் சொன்னதை கேட்டு அந்த அறைக்குச் செல்லும் போது நீலனை தொட அவனும் அவன் கையை தட்டி விட்டு வேக வேகமாக வெளியே சென்று விட்டான்.
அது எல்லாம் பொறுத்துக் கொண்டு அவன் அந்த அறைக்கு செல்ல அவன் எப்போது வருவான் என காத்திருந்த நீலாவோ அவனிடம், “இங்க பாரு என் முத்துவை நீ கொன்னுட்ட அதுக்கு உன்னை பழி வாங்கறதுக்காக மட்டும்தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஊருக்கு மட்டும் தான் நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி, அதனால் புருஷன் என்ற உரிமையை எடுத்துக்கிட்டு என் விரல் நகத்தை கூட நீ தொடக்கூடாது என் வயித்துல வர குழந்தையை கூட நீ தொடக்கூடாது ” என்றாள்.
“நீலா என்ன பேசுற நீ அது உன்னோட பாஸ்ட் லைஃப், எதுவா இருந்தாலும் மறந்துட்டு புது வாழ்க்கையை தொடங்கலாம் நீலா ” என்று அவள் கையை தொட அவள் தட்டி விட்டு, “நான் சொன்னா சொன்னது தான் அப்படி என்கிட்ட நெருங்கி வரணும் நினைச்சா நான் செத்து விடுவேன். அதனால ஜாக்கிரதையா இரு அதுவுமில்லாம உன் மாமா முன்னாடி எப்படி நடக்கணுமோ அப்படி நடந்துக்கோ ” என்று சொல்லிவிட்டு அவனுக்கு படுகையை கீழே விசிறி தூக்கி அடித்து விட்டு கட்டிலில் ஏறிபடுத்துக் கொண்டாள்.
அவனும் தன் வாழ்க்கை ஒரு நாள் மாறும் என கீழே படுத்துக்கொண்டான்.
இப்படியே 20 நாட்கள் கழிய கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று தன் பைகளை அடுக்கிக் கொண்டிருந்தவனிடம் வந்து, ” பொண்டாட்டிக்கு ஒரு அஞ்சு ரூபா பூ வாங்கி கொடுக்க முடியல உனக்கு எல்லாம் எதற்கு கல்யாணம்” என்றாள்
“நான் இப்போ என்ன பண்ணணும் நீலா” என்றான் அமுதன்
“என்னையும் சென்னை கூட்டிட்டு போ அங்க எனக்கு சம்பாதித்து போடு” என்றாள்.
“நீலா நான் இப்போ தான் படிச்சிட்டு இருக்கேன் இன்னும் டூ இயர்ஸ் ஆகும் நான் இயர்ன் பண்றதுக்கு” என்றான்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு இந்த ஊரை விட்டு போகணும்” என்றாள்.
“அப்போ சரி நான் பார்ட் டைம்ல ஒரு வேலை தேடிட்டு வீடு பார்த்துட்டு உன்னை வந்து கூட்டிட்டு போறேன்” என்றான்.
“எப்போ” என்றாள் கைகளை கட்டிக் கொண்டு எகத்தளமாக!!
“ஒரு ரெண்டு மாசம்” என்றான்.
“ரெண்டு மாசம் ஆகுமா, உன்னை எல்லாம் எங்க அப்பா சொன்னாருன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாரு எல்லாம் என் தலையெழுத்து ” என தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
அவள் அழுவதை தடுப்பதற்காக அவள் கையை மெல்ல தொட அவள் “சீ என தொடாத” என்று தள்ளி விலகி உட்கார்ந்து கொண்டாள்.
அதை கண்டவனுக்கு ஏதோ போல் ஆகி விட சற்று நேரம் அமைதியாக இருக்க நீலா தன் மகனைச் சீ என்று விளக்கியதை அவனின் அன்னை பார்த்து விட்டார். ஆனால் பார்க்காதது போல் உள்ளே வந்து அந்த சூழ்நிலையை சமாளித்து, ” அமுதா இந்தா இந்த நகைகளை வச்சிட்டு ஊருக்கு போய் ஒரு பத்து நாள்ல வீடும் வேலையும் பாத்துட்டு நீலாவை கூட்டிட்டு போ பாவம் நீ இல்லாம எப்படி இருப்பா” என்று எதுவும் அறியாதது போல் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
நீலாவிற்கோ மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை, ” அதுதான் உங்க அம்மாவே சொல்லிட்டாங்களே சீக்கிரமா வீடு பார்த்துட்டு என்னை வந்து கூட்டிட்டு போ” என்று இருந்து வேக வேகமாக வெளியில் வந்து விட்டாள்.
அமுதன் தன் அன்னையிடம் வந்து “அம்மா இந்த நகை எல்லாம் வேண்டாமா நீ வச்சுக்கோ” என்று மறுக்க, அவன் அன்னை “அவ சின்ன பொண்ணு டா சிலது இன்னும் புரியல நீ தான் விட்டுக் கொடுத்து போகணும் ” என்றுக் கூறி தன் துக்கத்தை மறைத்துக் கொண்டு அவனை அனுப்பி வைத்தார்.
அவனும் தன் அன்னையின் நகையை அடகு வைத்து வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி போட்டுவிட்டு கல்லூரி முடிந்தவுடன் மாலையில் வேலை செய்ய ஒரு ஹோட்டலில் வேலையும் வாங்கிக் கொண்டு வந்து அவளை அழைத்துச் சென்று விட்டான்.
அதன் பிறகு நிதமும் அவனுக்குத் தொல்லை தான் எவ்வளவு கொண்டு வந்து கொடுத்தாலும் பத்தவில்லையே என்று கூறுவாள். ஒரு நாளும் சமைக்க மாட்டாள் இவனே அவளுக்கும் சேர்த்து சமைத்து வைத்துவிட்டு வீட்டில் உள்ள எல்லா வேலையும் பார்த்துவிட்டு வேலைக்கும் சென்று வருவான்.
அதிலும் அவள் திருப்தி அடைய மாட்டாள்.
அமுதனுக்குத் தான் ஏன் டா வாழ்கிறோம் என்பது போல் இருக்கும், அவனால் வெளியில் சொல்லவும் முடியாது, ஏன் நண்பனிடம் தன் அம்மாவிடம் கூட எதுவும் சொல்லவே மாட்டான் தனக்குள்ளே எல்லாவற்றையும் புதைத்து வைத்துக் கொள்வான்.
இப்படி அமைதியாக இருந்தவனே அவள் செய்தக் காரியத்தில் ஒரு நாள் ஆவேசமாக மாறிபோனான்.
