பசுமையான மலைச் சரிவுகளின் இடையே பனியால் நனைந்த மரங்களில் நீர் சொட்ட, காலை நேரக் காற்று வந்து இலைகளை உலர வைத்தது. அதனுக்கு பின்னணி இசை போல தூரத்தில் அருவிகள் பாட்டிசைக்க, அப்பகுதியில் இருந்த குட்டி குட்டி குடிசை வீட்டு கூரைகளில் இருந்து புகை மெல்ல எழுந்து வானைத் தழுவிற்று. மலர்களின் நறுமணமும், பறவைகளின் கீதமும் அவ்விடத்தை ஒருவித அமைதியில் ஆழ்த்த, அவற்றை கலைக்காமல் மெலிதாய் படர்ந்தது சூரிய ஒளிக்கீற்று.
இத்தகைய இயற்கை அதிரும் வண்ணம், “ஐயோ இந்த அநியாயத்தை கேக்க யாருமே இல்லையா???” என்று மயிலா எழுப்பிய அலறல் சத்தத்தில், அந்த மொத்த சோலையூர் கிராமமும் விழித்து கொண்டது.
அடுத்த பத்தாவது நிமிடம் அந்த மலைக் கிராமத்தில் உள்ள நண்டு சிண்டு முதல், கிழடு கட்டை வரை பஞ்சாயத்து நடக்கும் அரசமரத்தடிக்கு வந்து விட, அங்கே அனைவருக்கும் நடுவில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் அந்த மலை கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான வீரய்யன்.
கூட்டத்தின் நடுவில் கண்ணீரும் கம்பலையுமாக நின்று கொண்டு இருந்தாள் மயிலா. அவள் கண்களில் கண்ணீர் வழிந்தாலும் பார்வையில் ஏதோ ஒரு திருட்டுத்தனமும் ஒளிந்து கொண்டு தான் இருந்தது. அங்கு கூடி இருந்த அனைவரின் கண்களும் அவளையே கேள்வியாய் நோக்கி கொண்டு இருந்தன. அதோடு அவர்கள் கண்களில் சந்தேகத்தின் சாயலும் மிகுதியாக வெளிப்பட்டது.
இப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் அவளை சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை அந்த பாமர மக்களால்.
ஏனென்றால் மயிலாவின் மகத்துவம் அப்படி. மயிலாவும் அவள் கூட்டுகாரி ராசாத்தியும் ஒன்று சேர்ந்து விட்டால், அந்த சோலையூரையே ஆட்டம் காண வைத்து விடுவார்கள்.
நன்கு முற்றி அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலக்கடலையை தோட்டக்காரருக்கு தெரியாமல் இரவோடு இரவாக பிடிங்கி சென்று விடுவது, குளத்துக்கு குளிக்க வரும் சிறுவர்களின் துணிகளை எடுத்து வைத்து கொண்டு அவர்களை அம்மணமாக வீதியில் ஓட விடுவது, ஒரு வீட்டின் கொடிகளில் காய்ந்து கொண்டு இருக்கும் துணிகளை அடுத்த வீட்டு கொடிகளில் போட்டுவிட்டு, இரு வீட்டு பெண்களும் அதனால் சண்டை போடுவதை பார்த்து ரசிப்பது என்று இவர்கள் இருவரும் செய்யாத அட்டூழியங்களே கிடையாது.
அப்படிப்பட்ட மயிலாவா ஒருத்தனிடம் ஏமாந்து நிற்கிறாள்?! இல்லை இல்லை, அப்படிபட்ட மயிலாவையா ஒருவன் ஏமாற்றி இருக்கிறான்? என்று நம்ப முடியாமல் அவளை பார்த்து கொண்டு இருந்தனர்.
கூட்டத்தில் நின்றிருந்த ஒரு பெண் முன்னே வந்து, “ஏட்டி மயிலா, ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு, இப்போ மனுசனையே கடிக்க வந்துட்டியா? எந்தெந்த விஷயத்துல வெளையாடரதுன்னு ஒரு வெவஸ்த வேணாம்!” என்று கேட்டாள்.
உடனே இவள் மேலும் சத்தமாக அழுதபடி, “எக்கோவ்!! நா இப்படி வாழ்க்கையவே தொலைச்சுட்டு நிக்கிறது உனக்கு வெளாட்டா தெரியுதா? ஒரு பொண்ணு எந்த விஷயத்துல வேணா பொய் சொல்லுவா! ஆனா தன்னோட கற்பு விஷயத்துல பொய் சொல்லுவாளா? சொல்லுக்கா. நீயும் ஒரு பொண்ணுதான? நான் கொஞ்சம் வெளாட்டா நடந்துக்குறவ தான்… மத்தவங்கள வம்பிழுக்குறவ தான்… ஒத்துக்குறேன்.. ஆனா எம்மேலையே நான் எதுக்காக இவ்ளோ பெரிய பழிய போட்டுக்கணும்…” என்று விசும்ப, அவளது உறுதியை கண்டு ஆடி போனது மொத்த கூட்டமும்.
ஒருவேளை அவள் சொல்வது உண்மைதானோ என்று எல்லோரும் நினைக்க ஆரம்பித்த நேரம், அதற்கு மேலும் பொறுமையாய் இருக்க விரும்பாத ஊர் தலைவர், தன் தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
“அட என்னம்மா அங்க வள வளன்னு… அந்த புள்ளையே தொலைக்க கூடாதத தொலைச்சிட்டு, நியாயம் கிடைக்கும்னு நம்மள நம்பி பஞ்சாயத்துக்கு வந்துருக்கு… அதுகிட்ட போயி.. கேள்வி மேல கேள்வி கேட்டு தொந்தரவு பண்றீயலே!!” என்று சொல்லிவிட்டு, பிறகு கூட்டத்தை பார்த்தார்.
“அசலூர்லருந்து வந்து நம்மூர் புள்ளைய கெடுத்த அந்த பயலுக்கு எம்புட்டு நெஞ்சுரம் இருக்கும்! டேய் முனியா அந்த செவத்தம்மா பேரன இழுத்துட்டு வாடே” என்று உத்தரவு பிறப்பித்தார்.
இருவர் செவத்தம்மா பாட்டி இருக்கும் குடிசையை நோக்கி ஓடினர். அங்கு கயித்து கட்டிலில் மல்லாக்க படுத்து உறங்கிக்கொண்டு இருந்த இளைஞனை எந்த விளக்கமும் சொல்லாமல் இழுத்து கொண்டு போக முற்பட்டனர்.
அப்போது அங்கு வந்த செவத்தம்மா பாட்டி, “எடேய், எடுபட்ட பயலுவளா! என் பேரனே ராத்திரி முழுசும் கண்ணு முழுச்சு காட்ட காவ காத்துட்டு, இப்போ தான் அசந்து தூங்குறான்! அவன ஏன்டே உசுப்புரீய?” என்று கத்தினார்.
“ஏ ஆத்தா, உம்பேரன் காட்ட காவகாக்காம, காவாலி பய வேலைல்ல செஞ்சுட்டு வந்திருக்கான்” என்றான் ஒருவன்.
“என் பேரன பத்தி தப்பா பேசுன… கொடுவாள எடுத்து மண்டைய பொளந்து போடுவேன் பாத்துக்க” என்று கோபமாக கத்தினார் செவத்தம்மா.
“நானா இப்டி சொல்லுதேன்… மொத்த ஊரையும் கூட்டி பஞ்சாயத்து வச்சு அந்த மயிலா புள்ள தான் சொல்லுதா. நீ எது கேக்குறதா இருந்தாலும் பஞ்சாயத்துல வந்து கேளு. தலைவர் இப்போ உம்பேரன கையோட கூட்டியார சொன்னாரு. எப்பா குமரா, வாப்பா போலாம் அங்க மொத்த சனமும் உன் ஒருத்தனுக்காக தான் காத்துகிட்டு இருக்கு” என்று கூறிய முனியனை ஒரு அழுத்தமான பார்வை பார்த்தான் குமரன். அடுத்த நொடி, தன் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டான் முனியன்.
தேக்குமர தேகம், ஆறு படிக்கட்டுகளையும் அப்பட்டமாக காட்டும் வயிறு, கத்தி முனை போன்ற கூர்மையான பார்வை, இழுத்து ஒரு அடி வைத்தால் பனைமரமும் சாய்ந்து விடும் அளவு தோள் வலிமை கொண்ட அவன் மீது தான் மயிலா புகார் கொடுத்து இருக்கிறாள்.
“ஏ யாத்தே!! கிறுக்கி மவ சிறுக்கிக்கு எம்புட்டு தகுரியம் இருந்தா, என் பேரன் மேல இப்படியொரு அபாண்டமான பழிய போட்டுருப்பா. ஊருக்குள்ள சண்டித்தனம் செஞ்சுட்டு திரிஞ்சுகிட்ட இருந்த கழுத அவ… அவள என் பேரன் ஒரு நாளாவது கண்ணெடுத்து பாத்து இருப்பானா?? அந்தக் கழுதை குரலையாவது, இவன் காது கொடுத்து கேட்டு இருப்பானா?? அந்த ஆத்திரத்துல, இப்படி என் குடும்பத்தை சந்தித்திருக்க வச்சுட்டாளே பாவிமவ!” என்று நெஞ்சில் அடித்து கொண்டு செவத்தம்மா புலம்பி கொண்டு இருந்தார்.
“பாட்டி! அழாத பாட்டி!! அவ சொன்னா, இதெல்லாம் உண்மையாயிடுமா? அப்புறம் எதுக்கு பஞ்சாயத்து தலைவர்னு ஒருத்தர் இருக்காரு? நான் போய் என்னன்னு பாத்துட்டு வந்துடுறேன்… அது வரைக்கும் நீ தைரியமா இரு…” என்று கூறி விட்டு குமரன் பஞ்சாயத்தை நோக்கி நடக்க, முனியனும் அவன் பின்னேயே ஓடினான்.
இங்கே பஞ்சாயத்தில்… குமரன் ஊர்க்காரர்கள் முன் குற்றவாளியாக நிறுத்தப்பட அனைவரின் கண்களும் அவனை குறுகுறுவென பார்த்து கொண்டு இருந்தது. ஆனால் அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நெஞ்சை நிமிர்த்தி நின்று தனக்கு எதிரே நின்று அழுது கொண்டிருக்கும் மயிலாவையே முறைத்து கொண்டு இருந்தான்.
“இந்தாப்பா குமரா!! இந்த புள்ள மயிலா உம்மேல பிராது குடுத்துருக்கு… அது என்ன ப்ராதுன்னு தெரியும்ல?” என்று தலைவர் கேட்க,
“தெரியுங்கையா!! அது ஏனோ பொய் சொல்லுது. நீங்களே சொல்லுங்க! நான் அப்டி செஞ்சிருப்பேனா? என்ன பாத்தா அப்டியா தெரியுது?”
“எய்யா, நீ இந்த ஊருக்கு வந்து மூணு மாசந்தேன் ஆகுது. இந்த மூணு மாசமும் நீ யார் கூடயும் வம்பு தும்புக்கு போனதில்லை. வீண் சண்டையும் போட்டது இல்ல. நீ உண்டு உன் வேல உண்டுன்னு தான் இருந்துருக்க. அது எல்லாம் சரிதான்.. ஆனா அதுக்காக, மயிலா உன் மேல சொல்ற புகார எங்களால விசாரிக்காம இருக்க முடியாது இல்லியா.”
“அப்புடி என்ன பிராதுங்க?” தெரிந்தும் தெரியாதது போல் கேட்க, மயிலா ங்கே! என ஒப்பாரி வைத்தாள்.
“வாய மூடு புள்ள. இங்க பாருய்யா குமரா, மயிலா நீ அவள கெடுத்துட்டதா புகார் சொல்லி இருக்கா! நீ இந்த புகாருக்கு என்ன பதில் சொல்ல போற?” என்று வீரய்யன் கேட்க குமரன் அப்போதும் மயிலாவையே முறைத்து கொண்டு இருந்தான். குமரன் வாய் திறக்காமல் நிற்பதை கண்ட மக்கள் தங்களுக்குள் கிசுகிசுக்க தொடங்கினர்.
“ஏட்டி எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்ன்னு யார் கண்டா? பச்ச புள்ள கணக்கா வாய் தொறக்ககாம இருக்கான்னு நெனச்சா இவன் மலமுழுங்கியா இருப்பான் போலயே?”
“அட ஆமாக்கா! அய்யா இம்புட்டு தூரம் கேக்குறாகளே, ஏதாவது வாய தொறக்கானா பாருங்க? கல்லூளி மங்கன் கணக்கா முழிச்சுட்டு நிக்கிறான்.”
“பாவம் அந்த புள்ள மயிலா. வெசனம் இல்லாம ஓடியாடி திரிஞ்சுது. அந்த புள்ளைய இப்புடி ஒரேடியா ஒக்கார வச்சுட்டானே இந்த பாவி” என்று கூட்டம் தங்களுக்குள் சலசலக்க வீரய்யனின் பொறுமை கரைந்து போனது.
“இந்தா பாருடே! முச்சூடும் உன் மூஞ்சிய பார்த்துட்டு இருக்கவா பஞ்சாயத்து வச்சோம். அவ பிராதுக்கு நீ முடிவா என்ன சொல்லுத?” என்று கேட்க, குமரன் அப்போதும் எதுவும் பேசாமல் நின்றான்.
அவன் பதில் பேசும் முன்னே, “நடந்ததுக்கு முதல்ல ஆதாரம் இருக்கான்னு கேளுங்க நம்ம மயிலாகிட்ட! ஒரு பொட்ட புள்ள சொல்லுதுன்னு கண்ண மூடிட்டு இந்த பையன நம்ம ஏசக்கூடாது!” என்றார் வீரய்யன் அருகே அமர்ந்து இருந்தவர்.
“என்கிட்ட ஆதாரம் இல்லாமலா நான் இம்புட்டு தூரம் உங்கள கூப்பிட்டு வச்சி பேசிட்டு இருக்கேன்! அவருக்கு தொப்புளுக்கு கீழ, நாளு வெரக்கட தள்ளி ஒரு மச்சம் இருக்கு! எங்க இல்லன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்!” என்று மயிலா கூற எல்லாரும் குமரனை பார்க்க அவனோ அவளை கண்கள் சிவக்க முறைத்துக் கொண்டு இருந்தான்.
“சரி நீ இம்புட்டு அழுத்தக்காரனா இருந்தா எங்களுக்கும் வேற வழி இல்ல. அந்த புள்ள வாழ்க்கை எங்களுக்கு முக்கியம். மயிலா என்னதான் சேட்டக்கார புள்ளையா இருந்தாலும் பொய் சொல்லாது… ஆமா நான் தான் செஞ்சேன் என்ன இப்போன்னு கேட்டாலும் கேக்குமே தவிர, மறச்சு பேச தெரியாது. அதுலயும் இந்த மாறி விஷயத்துல ஒரு பொண்ணு பொய் சொல்ல மாட்டா.. நீயும் வாய தொறக்க மாட்டேங்கித! அதனால இந்த வழக்கு மயிலாவுக்கு சாதகமா தீர்ப்பாவுது…” என்றிட மயிலாவின் விழிகள் பளிச்சிட்டது.
“வர வெள்ளிக்கிழமை மயிலாவுக்கும் உனக்கும் கண்ணாலம். இது தான் இந்த பஞ்சாயத்தோட தீர்ப்பு” என்று துண்டை உதறி தோளில் போட்டபடியே கூற, குமரன் அந்த தீர்ப்பை எதிர்த்தாவது எதாவது சொல்லியிருக்கலாம். ஆனால் அவன் அப்போதும் எதுவும் பேசவில்லை.
“இத்தோட இந்த பஞ்சாயத்து கலையிதுலே, போய் பொழப்ப பாருங்க…” என்று சொல்லிவிட்டு வீரய்யன் அங்கிருந்து சென்று விட, மக்கள் எல்லோரும் தங்களுக்குள் கிசுகிசுத்தபடி கலைய ஆரம்பித்தார்கள்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் குமரன் முன்னால் வந்து, “நான் கூட நீ பேசுறதையும் நடந்துக்குறதையும் பாத்து நல்லவனா இருப்பியாங்காட்டியுன்னு நெனச்சுப்புட்டேன்… செவத்தம்மா பேரன்னு உம்மேல நாங்கல்லாம் எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தோம் தெரியுமா? கடைசில உன் பட்டணத்து புத்திய காட்டிட்டியே! இருந்தாலும் அந்த புள்ளைக்கு நீ..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த நபரின் தலையை யாரோ பின்னாலிருந்து ஓங்கி அடிக்க, அவர் பயந்து கொண்டே திரும்பி பார்க்க, அங்கே மயிலா தான் நின்று கொண்டு இருந்தாள்.
“யோவ்!! எங்க வந்து என்ன பேசுத? என் புருஷன் எதிர்ல நின்னு பேசுற அளவுக்கு உனக்கு அவ்ளோ தகிரியமா? இன்னும் ஒரு நிமிஷம் இங்க நின்னனு வை… நானே உன்ன வகுந்துருவேன்.. போயா..” என்று சொல்ல,
“ஆத்தி!! எனக்கெதுக்கும்மா வம்பு! ஒனக்கு அனுசரணையா பேசினா, நீ என்னையவே அடிக்கிறியா! நீயெல்லாம்…” என்று புலம்பிக் கொண்டே அந்த நபர் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டான்.
அந்த நபரை வெளுத்து வாங்கிய மயிலா ஏனோ குமரனுக்கு எதிரில் பம்மிக் கொண்டு இருந்தாள். கோபத்தில் குமரனுக்கு நெஞ்சு துடித்தது…
“எப்படியோ நீ நெனச்சத சாதிச்சிட்டேல்ல?” என்று ஆத்திரத்தோடு கேட்டான்.
ஆனால் மயிலா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “ஆமா!! என்ன வேற என்ன செய்ய சொல்லுதிய? நீங்க மட்டும் நான் கேக்கும்போதே சரின்னு சொல்லி இருந்தா, நான் எதுக்கு இப்படியெல்லாம் பண்ணப் போறேன்? ஆனது ஆயிடுச்சி.. போங்க, போயி கண்ணாலத்துக்கான வேலைய பாருங்க மச்சான்..” என்று சொல்ல, குமரன் பற்களை கடித்தபடி அவளை முறைத்தான்.
“இப்ப எதுக்கு மச்சான் என்ன பாத்து மொறைக்கிறீய? அதான் பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்லிட்டாங்கள்ல!! இனி உனக்கு வேற வழியே இல்ல… வரட்டா…” என்று சிரித்துக் கொண்டே அங்கிருந்து குதித்து ஓடினாள்.
ஆடு தானா வந்து தலைய கொடுத்துடுச்சு!
அவன் புடிச்சு அடிச்சு உப்புக்கண்டம் போடப்போறான்!
மயிலா என்ன ஆகப்போறானு தெரிஞ்சுக்க விரும்பினா ஒரு லைக்கு கமெண்ட் தட்டுங்க ❤️
