நேசப்பிணி-2

பஞ்சாயத்து முடிந்த பிறகு மயிலா உற்சாகத்தோடு துள்ளி குதித்தபடி, தன்னுடைய வீட்டுக்கு விரைந்தாள். தந்தனா மெட்டில், கண்டபடி ஸ்ருதியோடு தாளம் சேராமல் எதையெதையோ பாடிக் கொண்டே கால்கள் தரையில் படாதபடி பறந்தது அந்த பட்டாம்பூச்சி…

“கடவுளே!! நடக்குறதெல்லாம் கனவா இல்ல நிஜம்மான்னு எனக்கே தெரியலியே!! வர வெள்ளி கிழமை எனக்கும் என் மச்சானுக்கும் கண்ணாலம்… ஐயோ.. நெனச்சாலே புல்லரிக்கிதே!” என்று நினைத்துக் கொண்டே அவள் வீட்டை நெருங்கும் போது, யாரோ ஒரு பெண் அழுது கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. உடனே நின்று அந்த குரலை கவனித்தாள். அந்த சத்தம் அவளுடைய பக்கத்து வீட்டிலிருந்து வந்து கொண்டு இருந்தது. 

“யாருலே இது! இந்த நேரத்துல இங்கன உக்காந்து அழுதுட்டு இருக்கவ?” என்று முணுமுணுத்துக் கொண்டே சத்தம் வந்த திசையை நோக்கி நகர்ந்தாள் மயிலா. 

அது வேறு யாருமல்ல, அவளுடைய உயிர் தோழி ராசாத்தி தான். தன்னுடைய வீட்டு வாசலில் உட்கார்ந்து, அழுது கொண்டு இருந்தாள். 

மயிலா இப்போது இருக்கும் சந்தோஷமான மனநிலையில் காட்டுப்புலியே எதிரில் வந்தால் கூட அதன் வாலை பிடித்து கரகரவென சுழற்றி காற்றில் வீசிவிடுவாள். அப்படி ஒரு தெம்போடு இருந்தாள். ராசாத்தியை சும்மா விடுவாளா?

ராசாத்திக்கு அருகில் சென்று, “ஏ புள்ள, ராசாத்தி. எதுக்கு இப்போ வாசல்ல உக்காந்து அழுதுட்டு இருக்கவ? உங்கப்பன் சிவனாண்டி மண்டைய போட்டானா என்ன?” என்று சொல்லி சிரிக்க, ராசாத்தி வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டாள். 

“இப்ப எதுக்கு எம்மேல கோவப்படுத? நான் என்ன புள்ள செஞ்சேன்? உன்கிட்ட எவ்ளோ சந்தோஷமான விஷயம் சொல்லலாம்னு நெனச்சிட்டு வந்தேன் தெரியுமா… நீ என்னடான்னா இப்டி ஒப்பாரி வச்சு என் சந்தோஷத்தையே கெடுக்குரியே!”

“உனக்கென்னம்மா, நீ ஆசைப்பட்டவனே உன் கழுத்துல தாலி கட்டப்போறான். நீ சந்தோஷமா தானே இருப்ப. என் நெலமை அப்படியா?” என்று சொல்லிவிட்டு மேலும் அழுதாள் ராசாத்தி. 

“ஓ!… அப்போ உனக்கு விஷயம் தெரிஞ்சி போச்சா? நல்லது, என் வேலை ரொம்பவே சல்லிசா முடிஞ்சி போச்சு… இதைத்தானே நான் உங்கிட்ட சொல்லலாம்னு நெனச்சேன். ஆனா” என்று சொல்லி முடிப்பதற்குள் ராசாத்தி வேகமாக குறுக்கிட்டு, 

“நானும் பஞ்சாயத்துக்கு வந்திருந்தேன். அங்க நடந்த எல்லாத்தையும் பாத்தேன்!” என்று சொல்லிவிட்டு மேலும் அழுதாள். 

“பாத்தியா? நீ எங்க நின்னுட்டு இருந்த? நான் உன்ன பாக்கவே இல்லையே!! சரி அத விடு, இப்ப ஏன் புள்ள அழுகுற?”

“என்னத்த நான் சொல்ல!! இந்த ஊர்ல பாக்குற மாதிரி கண்ணுக்கு லட்சணமா இருந்ததே, அந்த குமரன் ஒருத்தன் தான். இத்தனை நாளும் நம்ம ரெண்டு பேரும் சேந்து தான அவனுக்கு நூல் விட்டோம்? இனிமே நான் எப்டி அவன ஏறெடுத்து பாப்பேன்? நம்ம ரெண்டு பேரும் தானே அவன கண்ணாலம் கட்டிக்கலாம்னு ஆசைப்பட்டோம். நான் சும்மா உன்ன வெறுப்பெத்தலாமேன்னு தான், எங்க அம்மா அவனுக்கும் எனக்கும் கண்ணாலம் பேசி முடிச்சிட்டாங்கன்னு பொய் சொன்னேன். அதுக்காக, நீ இப்டி பஞ்சாயத்து வரைக்கும் போவேன்னு நான் நெனச்சு கூட பாக்கலியே! ஐயோ போச்சே!! எல்லாம் போச்சே.. என் ஆசை மண்ணோட மன்னா போச்சே!!” என்று தலையில் அடித்துக் கொண்டு புலம்பினாள் ராசாத்தி. 

“என்ன புள்ள சொல்ற? அப்டீனா நீ சொன்னதெல்லாம் நெசம் இல்லியா!! ஐயோ கடவுளே!! நீ சொன்னத நெசம்னு நம்பி நான் பஞ்சாயத்து வரைக்கும் போயிட்டேனே! அதுவும் எம் மச்சான் மேல பொய்யான பழிய வேற போட்டுப்புட்டேனே!! பாவம் என் மச்சான்… பஞ்சாயத்துல என்னமா அவமானப்பட்டு நின்னுச்சி தெரியுமா? என்னை பத்தி அது என்ன நெனச்சிருக்கும்?” என்று ஒரு கணம் புலம்பியவள், 

மறுகணமே மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி நாக்கை வாயோரம் வெடுக்கென நீட்டியபடி, “ஹா… அதனால என்ன? என்னைக்கா இருந்தாலும் என் மச்சான் தானே என் கழுத்துல தாலி கட்டியாகணும். என்னைக்கோ நடக்கப்போறது, இப்பவே நடக்குதுன்னு நெனச்சிக்க வேண்டியது தான்…” என்றாள் சாதாரணமாக. 

ராசாத்தி அழுகையை நிறுத்திவிட்டு மயிலாவை பார்த்து, “நீயெல்லாம் மனுஷியாடி” என்று சொல்லிவிட்டு முறைத்தாள். 

“என்னடி முறைக்கிற? முதல்ல எனக்கும் என் மச்சானுக்கும் கண்ணாலம் முடியட்டும். கண்ணாலம் முடிஞ்ச கையோட என் மச்சான் கிட்ட அத்த இத்த பேசி, எப்படியாச்சும் அத கூட்டிக்கிட்டு டவுன்க்கு போயிடுவேன். இந்த ஊர்லயெல்லாம் இனிமே யாரு இருப்பாங்க? ஒரு ஃபோன் உண்டா? ஒரு டிவி உண்டா? அவசரத்துக்கு வைத்தியம் பாக்க ஒரு ஆஸ்பத்திரி தான் உண்டா? சந்தோஷமா செத்த நேரம் சினிமா பாக்கலாம்னா, ஒரு டென்ட் கொட்டா தான் இருக்கா? அவ்ளோ ஏன்? எதாவது வாங்கி திங்க ஒரு கடகண்ணி இருக்கா? ச்சே ச்சே… இந்த ஊர்லயெல்லாம் எப்படித்தான் மனுஷ பயலுக வாழுறீங்களோ? ஹிம்…” என்று சொல்லிக் கொண்டு இருக்க, ராசாத்தி பொறுமையை இழந்து விட்டாள். 

“போதும் நிறுத்து மயிலா, நான் அமைதியா இருக்கேங்குறதுக்காக நீ பாட்டுக்கு ஓவரா பேசிட்டே போகாத! விட்டா ரொம்பத்தான் நீளுது உன் வாயி. நீயும் இந்த கிராமத்துல பொறந்து வளந்தவ தான், அத மறந்துடாத…” என்றாள். 

“சரிதான் போடி!! அவன கல்யாண மேடை வரைக்கும் வர வச்சிட்டேன். இந்த ஊர விட்டு கூட்டிட்டு போக மாட்டேனா? அடுத்து கண்டிப்பா அந்த வேலைய தான் பாக்கப்போறேன்…”

“நீ ரொம்ப பேசுறடி…”

“ஏய்! நான் அப்டி தாண்டி பேசுவேன்.. போவியா. வயித்தெரிச்சல் புடிச்சவளே.”

“வேணாம், நீ அவன் கெடச்ச சந்தோஷத்துல ரொம்பத்தான் ஆடிட்டு இருக்க. இதுக்கெல்லாம் சேத்து வச்சு எதிர்காலத்துல ரொம்ப வருத்தப்படப் போற, ஆமா…” 

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீ உன் வேலைய பாருடி…” என சொல்லிக்கொண்ட எழுந்தவள், திடீரென நின்றாள்.

“இன்னொன்னு சொல்றேன் கேளு. இதுக்கு மேல என் மச்சான நீ பாத்தேன்னு தெரிஞ்சிது, உன் கண்ணு ரெண்டையும் நோண்டி காக்காவுக்கு போட்ருவேன். இனி என் மச்சான் எனக்கு மட்டும் தான் சொந்தம்…” என்று மயிலா சொல்ல, ராசாத்தி மீண்டும் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். 

“சரி சரி.. என் கல்யாண விஷயமா யாரும் வந்து போவாங்க. இந்த நேரத்துல இப்டி வாசல்ல உக்காந்து அழுகாத, வர்றவங்களுக்கு சங்கடமா இருக்கும். பேசாம நீ கொல்லப்பக்கம் உக்காந்து அழுகேன்?…” என்று சொல்லிவிட்டு அதே உற்சாகத்தோடு தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தாள் மயிலா. 

வீட்டு வாசலுக்கு வரும்போது அங்கே திண்ணையில் இருந்த உண்டிவில்லை பார்த்து, ஒரு கணம் அப்படியே நின்றாள். அவளுடைய நினைவுகள் உண்டிவில்லை சுற்றி சுழன்றது.

மூன்று மாதத்துக்கு முன்பு தான் குமரன் அந்த கிராமத்திற்கு வந்து இருந்தான். செவத்தம்மா நிலத்தை இரவில் அவன்தான் காவல் காப்பான். ஒரு நாள் இரவு நேரம், குமரன் நிலத்தின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் செயற்கை பந்தலின் மேல் நின்றிருந்தான். அவனுடைய நிலத்துக்கு பக்கத்து நிலம் மயிலாவின் தந்தையுடையது. கதிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருப்பதால் ராசாத்தியும் மயிலாவும் அன்று இரவு காவலுக்கு வந்திருந்தனர்.

நேராக உட்காராமல் சரிந்து விழும் ராசாத்தியிடம், “எதுக்குடி வில்லாட்டம் வளைஞ்சுட்டு வர்ற?” என்று சிடுசிடுத்தாள் மயிலா.

“என்னடி நீ… காலைலருந்து காட்டு வேலை செஞ்சு ஒடம்பு தீயா நோவுது. எங்காத்தா, சாயங்காலம் பொண்ணுங்க தூங்குனா குடும்பத்துக்கு ஆகாதுன்னு சொல்லி செத்த நேரம் கூட படுக்க விடுறதில்ல. சரி ராத்திரிலயாச்சும் தூங்கலாமேன்னு பாத்தா, இங்க நீ… ஏன்டி, உன் வீட்டு நெலத்த காவ காக்க, என்னை எதுக்குடி கூட்டியாந்த?” என்று சலித்துக் கொண்டாள்.

“ஆங்… கூட்டாளிக்காக இது கூட செய்யலேன்னா எப்டி? நாளைக்கு உனக்கு கண்ணாலம் முடிஞ்சா மொத ராத்திரிக்கி முழிப்பேல, அப்டி நெனச்சுக்கடி.” 

“மொத ராத்திரிக்கி முழிக்கிறதும் இதுவும் ஒன்னாவே? அங்கென என் மச்சான் சிரிச்சு சிரிச்சு பேசுவாப்டி. செல்லமா வச்சுக்குவாப்டி. ஆனா நீ…”

“அம்புட்டுதான? வா, நானும் சிரிச்சு பேசுறேன். சந்தோசமா இரு. அதை விட்டுட்டு சும்மா பொலம்பாத..”

“அது எல்லாம் முடியாது. நான் வீட்டுக்கு போறேன்.”

“ஹேய்! ஓங்கி ஒன்னு போட்டேன்னா. ஒழுங்கா சொல்ற பேச்ச கேளு. இல்லேன்னா அவ்ளோதான் சொல்லிட்டேன்” என்று பேசிக் கொண்டு இருந்த மயிலாவின் குரல் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்து விட்டது. 

“என்னடி கொரலு தேயுது? என்ன சமாச்சாரம்?” என்றாள் ராசாத்தி.. 

“ஷ், சத்தம் போடாத புள்ள. கொஞ்சமாச்சும் நாகரீகமா நடந்துக்க.” 

“நாகரீகமா… நானு… சர்த்தான்.. ஆடு ஏன் திடீர்னு பம்முதுனு தான் புரியல” என்று சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் நோட்டமிட்டாள். பக்கத்து நிலத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த குமரன், மெதுவாக நடந்து இந்த பக்கம் வருவதை கவனித்தாள் ராசாத்தி. 

உடனே மயிலாவின் பக்கம் திரும்பி, அவளை ஏற இறங்க பாத்துவிட்டு, “ஓ.. இதுதான் விஷயமா? என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு பாத்தேன். இப்பல புரியுது, அது பக்கத்து நிலத்த.. அப்படியே மேய பாக்குதுன்னு” என்று கிண்டல் செய்தாள் மயிலாவை. 

“ஹேய் ச்சீ… என்ன பேசுற நீ? இங்க பாரு, சின்ன வயசுலருந்து உனக்கும் எனக்கும் எப்படியாச்சும் இந்த கிராமத்த விட்டு டவுனுக்கு போயிறணும்னு ஆசை இருக்குல்ல..”

“இருக்கு.. அதுக்கு?” 

“உனக்கு டவுன பத்தி என்னடி தெரியும். எப்பவோ சின்ன வயசுல தீவாளிக்கும் பொங்கலுக்கும் துணி எடுக்க போனதோட சரி. அங்க போனா எப்டி பேசணும்? எப்டி பழகனுன்னு எதாவது தெரியுமால்லே உனக்கு? அதோ அந்தாளு டவுன்லருந்து தானே வந்திருக்கான். அதான் அவன் மூலமா எதுனாச்சும் கத்துக்கிடலாம்னு பாத்தாக்க, நீ எதுக்கு புள்ள இப்டி கிண்டலடிக்கித?”

“ஓ அவ்ளோ அறிவாளியா நீ. நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேனா? நம்பிட்டேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்க, மயிலாவின் தோட்டத்துக்குள் ஏதோ ஒரு அசைவு தெரிந்தது. 

இருவரும் திடுக்கிட்டு, அது என்ன என்று உற்றுப் பார்க்கும்போது தான் காட்டுப் பன்றி ஒன்று உள்ளே வந்து விட்டது என்று புரிந்தது.

மயிலா, “போய் விரட்டுடி!”

“எதே?! நானா? உன் வயல் தான, நீ விரட்டுடி.”

“எனக்கு பன்னினா பயம்டி.”

“பின்ன எனக்குமட்டும்?!”

என்ன செய்வதென்று புரியாமல் இருவரும் யோசித்துக் கொண்டு இருக்க, திடீரென அந்த காட்டுப் பன்றி, அலறிக் கொண்டு வந்த வழியில் திரும்பி ஓடியது. இருவரும் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள். அதற்குள் மீண்டும் மற்றொரு பன்றியும் தன் மறைவிடத்திலிருந்து ஓட்டம் பிடிக்க, அதை தொடர்ந்து எல்லா பன்றிகளும் அங்கிருந்து ஓடி விட்டது. 

இருவரும் ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்க்க, அங்கே குமரன் தன் உண்டிவில்லை, பன்றிகள் மேல் குறி வைத்தபடி தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். மின்னல் வேகத்தில் அவன் கல்லை அடிக்க, அந்த வில் விஜயன் அர்ஜுனனே தரையிறங்கி வந்துவிட்டது போல பெண் பிள்ளைகள் இருவரும் ஆச்சரியத்தோடு அவனை பார்த்தார்கள். 

குமரன் மீது மயிலாவுக்கு காதல் உருவான தருணம் அதுதான்! கண்களில் அப்படி ஒரு புத்துணர்ச்சியோடு இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டு இருக்க, குமரன் அவர்களை பொருட்படுத்தாமல் மீண்டும் அவனுடைய இடத்துக்கு சென்று நின்று கொண்டான். 

பெண்ணுக்குள் காதல் வந்துவிட்டால், கண்ணாளனின் விரல் நகர்வும் கவிதையாய் தெரியும்‌ என்பது எத்தனை உண்மை! அவனின் சிறு சிறு அசைவுகளையும் ரசிக்க ஆரம்பித்தாள் மயிலா. அவளைப் போலவே, அவனுடைய நடை உடை பாவனைகள் அந்த ஊர் மக்களையும் கவர்ந்தது. பிற பெண்கள் அவனோடு பேச முயல்வது மயிலாவுக்கு பிடிக்கவில்லை. 

குறுக்கு புத்தி வேலை செய்ய, “ஏடி ராசாத்தி, ஊர்ல உள்ள எல்லா கண்ணும் அவனைத்தான் மொய்க்குது. பேசாம நாம ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து மத்த கழுதைகளை அடிச்சு விரட்டிடுவோம். நம்மள்ல யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கோ அவளுக்கு இன்னொருத்தி விட்டுக்கொடுத்துறணும், ஒத்துக்குறியா?” என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டாள்.

ஏமாளி ராசாத்தியும் தனக்கொரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டாள். அன்றிலிருந்து பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போல, மயிலாவும் ராசாத்தியும் அவனையே சுற்றி சுற்றி வர துவங்கினார்கள். 

 (மயிலாதான் மெயின் வில்லி போலயே! உஷாராகிக்க குமரா…)

 

❤️ Loading reactions...
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page