நேசப்பிணி-3

மயிலாவும் ராசாத்தியும் கல்யாணம் செய்வதென்றால் குமரனைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். இருவருக்குள்ளும் ஒரு ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டு, அவனை பின் தொடர ஆரம்பித்து விட்டனர்.

அப்படி ஒரு நாள் அவனை பின் தொடர்ந்து செல்லும் போது, ஒருமுறை அவன் ஆற்றங்கரையில் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது, இரு சில்வண்டுகளும் அவனுக்கே தெரியாமல் அவனை புதர் மறைவிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான், மயிலா அவன் உடம்பிலிருந்த மச்சத்தையும் கவனித்திருந்தாள். 

அந்த மச்சத்தை வைத்துதான், பஞ்சாயத்தையே தனக்கு சாதகமாக மாற்றியிருந்தாள். அதை வைத்தே, கல்யாணம் வரை கொண்டு வந்தும் விட்டாள். இதையெல்லாம் நினைத்துக் கொண்டே அந்த உண்டி வில்லை கையில் எடுத்தவள், ஆதுரமாய் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு கடும்பசி. உண்டது செரிக்கும்படி ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வந்திருக்கிறாளே. அந்நேரத்தில் சுடச்சுட சாப்பாடும் தயாராகி இருந்தது. சந்தோஷமாக எடுத்து தட்டில் போட்டுக் கொண்டு, கயித்துக் கட்டிலில் அமர்ந்து காலை ஆட்டியபடி சாப்பிட தொடங்கினாள். முதல் வாயை வைக்கப் போகும் போது, மீண்டும் வாசலில் யாரோ ஒரு பெண் அழும் சத்தம் கேட்டது.

“ச்சே, இந்த ஊர்ல நிம்மதியா ஒரு வாய் சோறு கூட சாப்பிட முடியல. ஆனது ஆச்சு, அடுத்த வேலையை பார்ப்போம்னு பட்டணத்துக்காரங்க மாதிரி நடந்துக்குறாங்களா? போனதையே நினைச்சு பொலம்ப வேண்டியது. இந்த ராசாத்திய நான் கொல்ல பக்கம் தானே உட்கார்ந்து அழுன்னு சொல்லிட்டு வந்தேன். இவ பாட்டுக்கு என் வீட்டு வாசல்லயே வந்து ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுட்டா. சனங்க இப்படி இருந்தா ஒரு மனுஷி எப்படி நிம்மதியா சோத்த திங்க முடியும்? இந்தா இருடி வரேன்!” என்று புலம்பிக் கொண்டே வாசலுக்கு வந்தாள்.

ஆனால் இந்த முறை வாசலில் அழுது கொண்டு இருந்தது ராசாத்தி இல்லை. அவளுடைய அம்மா பேச்சி தான். அதுவும் தலைவிரி கோலமாய் திண்ணையில் உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தார்.

“எம்மா நீயா? என்னாச்சுமா? எதுக்கு அழுற?”

“ஐயோ மயிலா, அரும பெருமையா உன்ன பெத்து வளர்த்தேனே. இப்டி தொலைக்கக் கூடாதத தொலைச்சிட்டு வந்து நிக்கிறியேடி! நானும் உங்கப்பனும் சின்ன வயசுலருந்து உனக்கு கஷ்டம் தெரியாம செல்லம் குடுத்து உன் இஷ்டப்படி வளர்த்தோமே. அது உனக்கே வெனயா வந்துடுச்சே. அடியே பேச்சியாத்தா, என் புள்ள வாழ்க்கை இப்படியா ஆகணும்? இதுக்குதானா இவள என் வயித்துல வெதச்சு விட்ட? என் வயிறு பத்தி எரியுதுடி!” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். 

மயிலா, அவருக்கு அருகில் வந்து அமர்ந்து, “பரவாயில்ல விடும்மா, எனக்காக நீ ஏன் அழுற? நான் என்ன, எவன்கிட்டயோவா கெட்டுப்போனேன்? என்னோட வருங்கால புருஷன் கிட்ட தான? விடுமா, பாத்துக்கலாம்! நீ அழுது உன் உடம்ப கெடுத்துக்காத” என்று கூறி அவர் முதுகை நீவிவிட்டாள்.

“இன்னும் ஒரு வாரத்துல எனக்கு கல்யாணம். நீ போயி அதுக்கான வேலைய பார்க்காம இப்படி அழுதுட்டு இருந்தா என்ன அர்த்தம். அதெல்லாம் உன்ன விட்டா வேற யாரு பாப்பாங்க? எங்கப்பனுக்கென்ன உங்கப்பன மாதிரி ரெண்டு மூணு பொண்டாட்டியா இருக்கு? இவ இல்லனா அவ பார்ப்பானு விட்டுட்டு போக? எழுந்து வேல வெட்டிய பாரும்மா…” என்று கூற, அழுக மறந்து அவள் முகம் பார்த்திருந்தார் பேச்சி. 

“ஆங், அப்புறம் சொல்ல மறந்துட்டேன். எனக்கு சீருல கண்டிப்பா ஆயிரம் அதிரசம் வேணும். ஆயிரத்துல ஒன்னு கொறஞ்சா கூட, நான் ஒத்துக்கவே மாட்டேன். பஞ்சாயத்து கூட்டி உன் மானத்தை வாங்கிடுவேன். இன்னொரு விஷயம் சொல்லணும், கல்யாணம் முடிஞ்ச கையோட என் மச்சான கூட்டிக்கிட்டு டவுனுக்கு குடித்தனம் போகலாம்னு இருக்கேன். நீ கொடுக்கப் போற அதிரசத்துல ஐநூற நானே கொண்டு போயிருவேன். ஊருக்கு பத்தலனு என் பங்குல நீ கை வைக்க கூடாது பாத்துக்க” என்று அப்பாவியாக தன் தாயிடம் விரல் நீட்டி பேசிக் கொண்டு இருந்தாள்.

அவளுடைய அம்மா அதைக் கேட்டு வாயடைத்து உட்கார்ந்திருக்க, “அட எந்திரிச்சு வாமா! விசேசம் வச்ச வீட்டுல இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி உட்கார்ந்து இருக்க கூடாது” என்றாள் மயிலா சாதாரணமாக.

“அடியே! என்னடி, நீ பாட்டுக்கு டவுனுக்கு போறது, அது, இதுன்னு சொல்ற? இதுக்குத்தான் அந்த பய பின்னால சுத்துனியா?”

“ஆமா, வேறெதுக்குனு நெனச்ச?”

“இங்க பாரு புள்ள, டவுனு பக்கம் பூரா களவாணி பயலுவளா இருப்பானுகன்னு உங்க ஐயா எத்தனை வாட்டி சொல்றாரு. உன்னைய நாளு கிழமைக்கு பார்க்கணும்னா, நான் என்னடி பண்ணுவேன்? இங்க இருந்தாலாவது, அப்பப்போ ஒரு எட்டு வந்து பாப்பேன்.”

“இத்தன வருஷமா நீதான காலாகாலத்துல மூட்ட முடிச்ச கட்டிக்கிட்டு உன் மாமியா வீட்டுக்கு கிளம்புனு திட்டுவ? இப்ப என்ன பாசம் பொத்துக்கிட்டு வருது?”

“ம்ச்ச், விளையாடாத புள்ள. டவுனுக்கு வந்து போக எனக்கு வழி கூட தெரியாதே. எதுக்குடி இப்படி என் தலையில, கல்லுக்கு மேல கல்லா போட்டுக்கிட்டே இருக்க?” என்று ஆதங்கமாக கேட்டார்.

“ஐயோ அம்மா! டவுனுக்கு போறதெல்லாம் கம்ப சூத்திரமா? ஒருவாட்டி நான் போயிட்டேன்னா  அது எப்படி, என்னன்னு கத்துக்க போறேன். உன்ன கூட்டிட்டு போகும் போது ஒண்ணொன்னா உனக்கும் சொல்லிக் கொடுத்துருவேன்.”

“அடிபோடி இவளே, உங்கப்பனாலயே அது முடியல.”

“சரி விடு… இப்போ, நீ சமத்தா போயி கல்யாணத்துக்கு வேண்டிய வேலைய பாரு. சேலை எடுக்கணும், தாலி செய்யணும், சொந்தக்காரங்களுக்கு எல்லாம் சொல்லி அழைக்கணும். சாப்பாட்டுக்கு ஆள் புடிக்கணும். எவ்வளவு வேலை இருக்கு? இப்படி அழுதுட்டு இருந்தா, எப்ப எல்லாத்தையும் பார்த்து முடிப்ப?” என்று சொல்லிக் கொண்டே, அம்மாவின் கையை பிடித்து, உள்ளே இழுத்துச் சென்றாள்.

அவள் தன் கைவசம் இருக்கும் நல்ல புடவைகளை தரம் பிரித்துக் கொண்டிருந்த நேரம், அவளுடைய அப்பா சிகாமணி அவளின் முன்னால் வந்து நின்றார். அவருடைய முகத்தில், எள்ளும் கொள்ளும் வெடிக்க, மயிலாவும் பேச்சியும் விதிர்த்துப் போய் நின்றிருந்தார்கள்.

பேச்சி மெதுவாக, “ஏங்க…” என்று சொல்லி முடிப்பதற்குள், பளார்! என அவருடைய கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.

“இதுக்குத்தான் பொம்பள புள்ளைய அடக்க ஒடுக்கமா வளர்க்கணும்னு, அப்போல இருந்து தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். என் பேச்சைக் கேட்டியா? இப்போ எங்க கொண்டு வந்து விட்டுட்டா பாத்தியா?” என்று சொல்லிக் கொண்டே, மீண்டும் அறையப் போனார். 

மயிலா குறுக்கே வந்து, “எப்பா, நிறுத்துப்பா… அம்மாவை எதுக்கு அடிக்கிற?” என்று அவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்தாள்.

“எதுக்கா? உன்னை அடிக்க முடியாமத்தான் என் பொஞ்சாதிய அடிக்கேன். நீ குறுக்க வராத. தயவு செஞ்சு எட்டக்க போயிரு.”

“ஏம்ப்பா இப்படி பண்ணுற?”

“எல்லா பிரச்சனையும் உன்னால தான். ஒழுக்கமா இருனு உனக்கு நான் எத்தனையோ தடவை புத்தி சொல்லி இருக்கேன். ஒரு நாளாவது என் பேச்சக் கேட்டிருப்பியா? இப்படி ஊருக்கு முன்னால, எங்கள அவமானப்படுத்திட்டு வந்து நிக்கிறியே. வெளிய தல காட்ட முடியல. உன் பொண்ணு தனக்குத்தானே பிராது கொடுத்திருக்கானு சுண்டக்கா பயலெல்லாம் கேலி பேசுறான். நம்ம குடும்ப கவுரவத்தையே குழி தோண்டி புதைச்சுட்டியே” என்று சத்தமாகக் கத்தினார்.

அடி வாங்கி, கன்னம் பழுத்து சிவந்திருந்த போதிலும், பேச்சி மீண்டும் குறுக்கிட்டு, “இப்ப எதுக்கு நம்ம புள்ளையை வையிரீங்க? அந்த களவாணிப்பய செஞ்ச தப்புக்கு, அவனுக்கு கோவிலா கட்ட முடியும்? நம்ம பிள்ளை ஞாயம் கேட்டதுக்கு, அது மேல ஏன் கோபப்படுறீங்க?” என்று கேட்டார்.

“இவ ரொம்ப ஒழுக்கமா? இவ மட்டும், நம்ம பேச்சைக் கேட்டு நல்லபடியா நடந்து இருந்தா, அவன் எதுக்குடி, இப்டிலாம் நடந்துக்க போறான்? எல்லாம் உன்ன சொல்லணும். இன்னும் அவ பக்கமே பேசுற பாரு…”

மீண்டும் மயிலா இடைமறித்து, “எப்பா! தயவு செஞ்சு கோபப்படாம, நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க! நான் உங்களுக்கும் அம்மாவுக்கும் உதவி பண்ணி தான் கொடுத்து இருக்கேன்!” என்று சொல்ல, சிகாமணி குழப்பத்தோடு அவளை திரும்பிப் பார்த்தார்.

மயிலா பயத்தை விழுங்கிவிட்டு, எப்படியோ வலுக்கட்டாயமாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள். 

“ஆமாம்பா! கோபப்படாம, நான் சொல்றத ஒரு நிமிஷம் பொறுமையா கேளுங்க. நம்ம நிலம் இருக்கிறதுலயே, கடைசில இருக்கு. அதுவும் ரொம்ப குட்டியா இருக்கு. எப்பாடு பட்டாலும், நம்மளால அந்த நிலத்துல நல்லபடியா விவசாயம் பார்க்க முடியல. ஆனா, அதுக்கு பக்கத்துல தான், கிழவியோட இடம் இருக்கு. அவளுக்கு ஒரே ஒரு பேரன் மட்டும் தான். அவனும் டவுனுக்கு போயிட்டா அவனோட நிலத்தையும் நீ தானே பார்த்துக்கணும்? ரெண்டு நிலமும் ஒன்னா சேர்ந்தா, இந்த ஊர்லேயே நீ தான் பெரிய மிராசு!” என்று கூற சிகாமணியின் மனது இரண்டு நிலத்தையும் ஒன்று சேர்த்து கணக்கு போட்டு பார்த்தது. 

“அது மட்டுமில்ல, இந்த கல்யாணம் நடக்கணும்னு பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்லி இருக்காங்க. அதுக்கு என்ன அர்த்தம்? நம்ம கால் காசு கொடுக்க தேவையில்லைன்னு அர்த்தம்! எனக்கு நீங்க சீர் வரிசை செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. வெறும் கல்யாண செலவு மட்டும் தான். மத்த பணமெல்லாம், உனக்கு மிச்சம் தானப்பா. அந்த பணத்துக்கு நம்ம ராசாத்தியோட நிலத்தையும் வாங்கிறலாம். அவள கட்டிக்கொடுக்க அவங்க என்ன பணம் காசா சேர்த்து வச்சிருக்காங்க? கேட்டுப் பாருங்க, கிடைச்சா வாங்கிருங்க.”

பேச்சி, “நல்ல யோசனைங்க…” என்றாள் கண்ணீரை துடைத்துக் கொண்டே.

“அதுமட்டுமல்லப்பா… கல்யாணம் முடிஞ்ச கையோட, நான் எப்படியாச்சும் மச்சான கூட்டிட்டு டவுனுக்கு போயிடுவேன். சரக்கு இறக்க நீங்க தினமும் டவுன்க்கு வந்து போயிட்டு தானே இருக்கீங்க? இனிமே அங்க வரும்போது, எங்க வீட்டுலயே தங்கிக்கலாம். சாப்பிடுற செலவும், தங்குற செலவும் உங்களுக்கும் மிச்சம். அம்மாவும் டவுன பார்த்ததே இல்லை, அவங்களையும் கூட்டிட்டு வரலாம். சினிமா, பார்க்கு, கடைகண்ணினு சுத்தலாம். நல்லா யோசிச்சு பாருப்பா!” என்று சொல்ல, அவர் யோசிக்க ஆரம்பித்துவிட்டார். 

எப்படியோ அவரையும் ஒரு வழியாக குழப்பி விட்டோம் என்று நிம்மதி அடைந்தாள் மயிலா.

“ஏங்க, மயிலா சரியாத்தான் சொல்லுது. நடந்தது நடந்து போச்சு. நமக்கு இருக்குறது ஒத்த புள்ள. அவளோட கல்யாணத்த நல்லபடியா பண்ணி பார்க்க வேண்டாமா? நாம கல்யாணத்துக்கான ஏற்பாட்டை பண்ணலாமுங்க” என்றாள் பேச்சி.

“எனக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா. நானும் அதப்பத்தி தான் யோசனை பண்ணிட்டு இருக்கேன். நம்ம கையில ஒரு வாரம்தான் இருக்கு. அதுக்குள்ள எவ்வளவு வேலை செய்ய வேண்டி இருக்கு?” 

பேச்சி, “முதல்ல சாப்பாட்டுக்கு பேசுங்க. துணிமணிய ராத்திரி டவுனுக்கு போவீங்களே, அப்ப முடிச்சிருங்க. என்னால ஏண்டதை நான் செய்யிறேன்.” 

“சரி பேசிட்டு வாரேன். உன் புள்ளைக்கு என்ன கலருல புடவை வேணும்னு கேட்டு வை” என்று சொல்லிவிட்டு, துண்டை உதறி தோளில் போட்டபடி வீட்டிலிருந்து வெளியேற, மயிலா சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள். 

அவள் அதீத கனவோடு எதிர்பார்த்த அந்த வெள்ளிக்கிழமையும் வந்து விட்டது.

வாயாடி பெண்ணின் கல்யாணம் என்பதால், ஊரே கோலாகலமாக இருந்தது. ஊர் மக்கள் எல்லோரும் ஆற்றங்கரைக்கு அருகில் இருந்த எல்லை காளி கோவிலில் ஒன்று கூடி இருந்தார்கள். அந்த கிராமத்தில் நடக்கும் எல்லா நல்ல காரியங்களுக்கும் அவர்கள் அங்கே கூடுவது வழக்கம்.

அந்த கிராமத்துக்கே உரிய பாணியில், மயிலா அலங்காரம் செய்யப்பட்டு அங்கே அழைத்து வரப்பட்டாள். மயிலாவின் முகத்தில் கல்யாண பூரிப்பு தெளிவாக தெரிந்தது. அவள் ராசாத்தியை அந்த கூட்டத்தில் தேடிப் பார்த்தாள். ஆனால் அங்கு ராசாத்தி மட்டும் இருக்கவில்லை. அதை நினைத்து ஒரு பக்கம் அவளுக்கு வருத்தமாக இருந்தாலும், குமரனை திருமணம் செய்து கொள்ள போகும் சந்தோஷம்தான் அதிகமாக இருந்தது.

சிறிது நேரத்தில், குமரனும் அங்கே அழைத்து வரப்பட்டான். மணமகனாக அலங்கரிக்கப்பட்டிருந்த குமரனின் முகத்தில் எந்தவித உணர்வும் இல்லை. அவன் அமைதியாக, மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு, சம்பிரதாயங்களை செய்து கொண்டு இருந்தான்.

அந்த ஊர் வழக்கப்படி, கல்யாணம் சூரியன் அடங்கும் நேரத்தில் தான் நடக்கும். அந்த இதமான மாலை வேளையில், குமரனுக்கும் மயிலாவுக்கும் நல்லபடியாக திருமணம் நடந்து முடிந்தது. இருவரும், மாலையும் கழுத்துமாக, செவத்தம்மா பாட்டியின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்கள்.

செவத்தம்மாவுக்கு சிறு வயதிலிருந்தே மயிலாவை நன்றாக தெரியும். இதற்கு முன் செவத்தம்மாவுக்கு அவள் மீது எந்த ஒரு நல்ல அபிப்பிராயம் எதுவும் இருக்கவில்லை. ஏனென்றால் மயிலா அதுவரை ஊருக்குள் செய்து வைத்த ரகளைகள் அப்படி. 

ஆனால் இன்று, தன்னுடைய பேரனை கல்யாணம் செய்து கொண்ட பிறகு, அவருக்கு மயிலா மீது தனி பாசம் வந்துவிட்டது. வம்சத்தை வளர்க்க போகும் அவளை, முறைப்படி வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

வாயாலேயே வடை சுட்டு, எல்லாரையும் கவுத்திட்டா!!! நம்ம ஆளு அவ மகுடிக்கு மயங்குதானு பார்ப்போம் 😁

❤️ Loading reactions...
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page