அங்கு நடந்ததை எல்லாம் ஜன்னல் வழியாக மயிலா பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். அவளுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது. அவன் சுய ரூபத்தை பார்த்து அதிர்ந்து போன ராசாத்தியும் கலங்கிய கண்களோடு அங்கிருந்து சென்று விட்டாள்.
செவத்தம்மா சத்தமாக, “ஏன்டா, உனக்கு கூறு கீறு கெட்டுப் போயிருச்சா? இப்ப எதுக்கு வீட்டுக்கு வந்த புள்ளைய விரட்டி விடுற?” என்று திட்டிக் கொண்டிருக்க,
“பேசாத பாட்டி… வர்ற கோபத்துக்கு என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என இவனும் பதிலுக்கு திட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தான்.
உடனே மயிலா அவன் காலை பிடித்துக் கொண்டு, “மச்சான்! என்ன மன்னிச்சிடு, சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது. நடந்தது எல்லாமே பாட்டியோட வேலை. நீயும் நானும் நல்லா இருக்கோனுமின்னு அதுதான் என்னத்தயோ செஞ்சுப்புடுச்சி” என்று அழுதாள்.
“அடச்சீ வாய மூடு! நீயும் கெழவியும் கூட்டு சேர்ந்துதான எல்லாத்தையும் செஞ்சுருக்கீங்க. அப்புறம் என்ன பொய் வேண்டி கிடக்கு? அதுசரி, உனக்கு பொய் சொல்றதுக்கு சொல்லிக் கொடுக்கணுமா என்ன? பஞ்சாயத்தை கூட்டி, ஊருக்கு முன்னால அவ்வளவு பெரிய பொய்ய வாய் கூசாம சொன்னவதான நீ.”
அதை கேட்டவுடன், மயிலாவுக்கு இதயமே நின்றுவிடுவது போல் இருந்தது. அன்று முதல் குமரன் அவளிடம் சரியாக பேசுவதே இல்லை. அவளை தன்னுடைய அறைக்குள் நுழையவும் விடவில்லை. அவசரத்திற்கு உடைமாற்றிக் கொள்ள வந்தாலும், இரண்டு நிமிடத்திற்கு மேல் அவளை அங்கு இருக்க விடமாட்டான். அவன் நடவடிக்கை பார்த்து மயிலா மிகவும் வருத்தப்பட்டாள். தனியாக அமர்ந்து, அடிக்கடி அழுது கொண்டிருந்தாள். பாட்டிக்கு, அவளை பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.
எனவே மீண்டும் மயிலாவுக்கு ஒரு யோசனை சொன்னார்…
“இங்க பாரு கண்ணு. ஆம்பளைனா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க. நாமதான் வளைஞ்சி கொடுத்து போகணும். எங்க பிடிக்கனுமோ அங்க பிடிக்கணும். எங்க விடணுமோ அங்க விடனும். இதெல்லாம் ஒரு நேக்கு போக்கு…”
“நீ சொல்ற மாதிரி செஞ்சா, மச்சான் என்ன ஏத்துக்குமா கெழவி?”
“என் பேரன் நல்லவன் தான்… என்ன, அவன் இப்போ கொஞ்சம் கோபத்துல இருக்கான். நீ பண்ணி வச்ச காரியம் ஒன்னும் லேசுபட்டது இல்லியே! அந்த கோவம் இருக்கத்தானே செய்யும். அவ்ளோ சீக்கிரம் எல்லாத்தையும் மறந்துட்டுஅவன் உன்ன ஏத்துக்கணும்னு நினைக்காத கண்ணு. கோபம் குறைய கொஞ்ச நாள் ஆகத்தானே செய்யும்.”
“திரும்பத் திரும்ப அதையே சொல்லி திட்டுது. எனக்கு எம்புட்டு வருத்தமா இருக்கு தெரியுமா? எங்கப்பாருலாம் இப்படி கெடயாது.”
“அஞ்சு விரலும் ஒன்னு போலயா இருக்கு. அப்படித்தான் மனுஷங்களும். சில பேருக்கு கோவமே வராது. சிலரு உடனே திட்டி தீத்துடுவாங்க. அதோட கோவம் சரியா போயிடும்… ஆனா என் பேரன் சரியான கல்லுளி மங்கன். பஞ்சயாத்துல ஒரு வார்த்தை கூட பேசாம இருந்துட்டு, எல்லாத்துக்கும் சேத்து உன்ன பழி வாங்கிட்டு இருக்குறான். இந்த வகையறா கொஞ்சம் கொஞ்சமாத்தானே சரியாகும்… அதுக்காக நீ அழுதுட்டே இருந்தா எல்லாம் மாறிடுமா? நீ தான் கண்ணு அவன் மனச மாத்தோணும்…” என்று சொல்ல,
“நானும் அந்த நினைப்புல தான் கல்யாணம் கட்டுனேன். அது தான் என் முகத்த கூட பாக்க மாட்டேங்கிதே. பேசாம ஊரக்கூட்டி உண்மைய சொல்லிடவா? பஞ்சாயத்துல என்ன தண்டனை கொடுத்தாலும் நான் வாங்கிக்கிடுதேன்.”
“அடி கழுதை, ஆம்பள பொழப்பும் பொம்பள பொழப்பும் ஒண்ணா? நாளபின்ன எந்த நாயாவது உன் கைய புடிச்சாலும், நீ நியாயம் கேக்க முடியுமா? யாரு உன்ன நம்புவா சொல்லு…” என்று கேட்க, அவள் அமைதியாகி விட்டாள்.
“இங்க பாரு கண்ணு. இந்த செவத்தம்மா உசுரோட இருக்குற வரைக்கும், நீ என் பேரன் பொண்டாட்டிதேன். சொல்லிப்புட்டேன் ஆமா…”என்று அதட்ட மயிலா அப்போதும் சமாதானம் ஆகியபாடில்லை.
“அவன் உனக்கு புருஷனா மாறனும்னு எதிர்பார்க்கிறதுக்கு பதிலா, பேசாம நீ அவனுக்கு ஒரு பொண்டாட்டியா மாறிடேன்” என்று சொல்ல, மயிலா குழப்பத்தோடு பாட்டியை பார்த்தாள்.
“நான் என்ன சொல்றேன்னு புரியலையா? அது சரி படிச்ச புள்ளயாச்சே, ஒடனே புரிஞ்சிக்குவன்னு பாத்தா. இப்டி புரியாம முழிச்சுட்டு இருக்கியே! சொல்றேன் கேளு… மொதல்ல, அவன் மனசுல இடம் புடிக்கிற வழிய பாரு. அவனுக்கு துணிமணி எல்லாம் துவச்சு போட்டு, வீட்ட சுத்த பத்தமா வச்சுக்க. நல்லா வாய்க்கு ருசியா சோறாக்கி போடு. நாலு நாள் நல்ல சோறு தின்னுட்டா, தானா அதை தேடி வருவான். ராத்திரியில அவன் மனசு கோணாம நடந்துக்க. எங்க போயிருவான்? எப்படியும் உன்கிட்ட தானே வந்தாகணும்…” என்று சொல்ல, மயிலாவுக்கும் இதெல்லாம் சரி என்று தோன்றியது.
பாட்டி சொன்னதை அப்படியே செய்தாள் மயிலா. முதலில் குமரனின் துணிமணிகளைத் துவைத்து வெயிலில் காயப் போட்டாள். பிறகு வீடு முழுக்கச் சுத்தம் செய்து, அவனுடைய அறைக்கு வந்தாள். கயிற்றுக் கட்டிலில் போட்டிருந்த போர்வையை உதறி விரித்தாள். மூலையில் இருந்த பரணில் நிறைய பழைய பொருட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொன்றாக எடுத்து வெளியே போட்டுக் கொண்டிருந்தவள், ஒரு சாக்குத் துணிக்குள் ஏதோ கனமான பொருள் இருப்பதை உணர்ந்தாள். அதை இழுத்துப் பார்த்தபோது, உள்ளே ஒரு சூட்கேஸ் இருந்தது. அந்த சூட்கேஸ் அவர்களுடைய கிராமத்துச் சூழலுக்குச் சற்றும் பொருந்தாத ஒன்று. அதைப் பார்த்த மயிலாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
அவள் ஊரில் பெரும்பாலானோர் துணிகளை வைக்க தகரப் பெட்டிகளைத்தான் பயன்படுத்துவார்கள். வசதியான சில வீடுகளில் மரப்பெட்டிகள் இருக்கலாம். ஆனால் இது… இது அல்ட்ரா மாடர்ன் ரகத்தைச் சேர்ந்த ட்ராலி சூட்கேஸ். நம்பர் லாக், செல்போன் சார்ஜ் போடும் வசதி என்று புதுமையாக இருந்தது.
அதைப் பார்த்ததும் மயிலாவின் மனதில் சந்தேகம் எழுந்தது. குழப்பத்துடன் அதைத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அது நம்பர் லாக் போட்டு பூட்டப்பட்டிருப்பதை கவனித்தாள். அதைத் திறக்க முடியாமல் எண்களை மாற்றி மாற்றி சுழற்றிக் கொண்டிருந்தாள். சரியாக அந்த நேரத்தில் குமரன் அறைக்குள் நுழைந்தான். மயிலா அந்த சூட்கேஸை வைத்திருப்பதைப் பார்த்த குமரனுக்கு இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. அவன் முகத்தில் பீதி படர்ந்தது.
“ஏய்! நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க? யாரைக் கேட்டு என்னோட பொருள் மேல கைய வெச்ச?” என்றவன் மயிலாவை தரதரவென இழுத்து வந்து அறைக்கு வெளியே தள்ளினான்.
“ம்ம்…” என அலறியபடி தரையில் விழுந்தாள். அவளை திரும்பியும் பார்க்காமல் உள்ளே சென்றவன், சூட்கேஸை மீண்டும் இருந்த இடத்திலேயே வைத்து பத்திரப்படுத்தினான்.
“இன்னொருதடவ அதை தொட்ட நான் மனுஷனா இருக்க மாட்டேன். அதுக்குள்ள எவ்ளோ முக்கியமான பொருள் எல்லாம் இருக்குது தெரியுமா?”
‘அவன் டவுனில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், இதுபோன்ற சூட்கேஸை வைத்திருக்கிறான். முறை தெரியாமல் திறக்க முயன்ற தன் மீதுதான் பிழை!’ என்று எண்ணிக் கொண்டாள் மயிலா.
“அது வந்து மச்சான், பரண் முழுக்க ஒட்டடை அடைஞ்சு போச்சு. அதான் நான் ரூம சுத்தம் செய்யலாம்னு போனேன்” என்றாள் பாவமாக.
“ச்சீ வாய மூடு… நீ வாய தொறந்து பேசினாலே எனக்கு பத்திக்கிட்டு வருது.”
அவள் மிகவும் தாழ்ந்த குரலில், “ஏன் இவ்ளோ கோபப்படுற? நான் உனக்கு நல்லது தானே செஞ்சேன். இதுக்கு முன்னால நீ எத்தனையோ தடவை எம்மேல கோவப்பட்டுருக்க… அப்போ எல்லாம் நான் ஏதோ தப்பு பண்ணி இருப்பேன். ஆனா இப்போ நான் எந்த தப்புமே பண்ணலயே. அப்புறம் ஏன் மச்சான் இம்புட்டு கோவம்?” என்று கேட்டாள்.
“ரொம்ப யோக்கியச்சி மாதிரி பேசாத. நீ எவ்ளோ பெரிய நாடகக்காரின்னு எனக்கு தெரியாதா. இந்த பசப்புற வேலையெல்லாம் உன் ஊரு பஞ்சாயத்தோட வச்சிக்கோ. எங்கிட்ட வேணாம்.”
“இல்ல மச்சான் நான்…”
“பேசாதடி! என் சம்பந்தப்பட்ட பொருளை இனி நீ எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது பார்த்துக்க…” என்று சத்தமா அதட்டினான். அந்த சப்தம் வெளியில் இருந்த செல்விக்கு கேட்டுவிட, அவள் ஜன்னல் வழியே இவர்கள் அறையை எட்டிப் பார்த்தாள்.
அதை கவனித்துவிட்ட மயிலா சமாளிக்கும் விதமாக, “சும்மா எல்லாத்துக்கும் திட்டாத மச்சான். உன் பொருள தொட எனக்கும் உரிமை இருக்கு. அதுக்கு ஆதாரம் பாரு…” என்று தாலியை நீட்டி கூற, அவனுடைய கோபம் மேலும் தலைக்கேறிவிட்டது.
“பொண்டாட்டியா? நீயா? முதல்ல ஒரு பொண்ணா நடந்துக்க பாரு. ஆனா நீ அதுக்கு கூட லாயக்கில்லாதவ…” என்று ஆத்திரம் தீர கத்தினான். இவளுக்கும் உணர்ச்சிகள் கரை கடந்துவிட்டது!
“ஓஹோ, நான் பொண்ணா இல்லாம தான் ராத்திரி நீ என்கிட்ட அப்படியெல்லாம் நடந்துக்கிட்டியா?” என்று அழுது கொண்டே கேட்டாள்.
“உன் அழகுல மயங்கிட்டதா நினைச்சுட்டு இருக்கியோ? எனக்கு அப்போ நேரம் சரியில்ல. வேறென்ன நான் சொல்ல?”
“ஆமா, துரைக்கு ரம்பையும் ஊர்வசியும் பொண்டாட்டியா வர காத்துட்டு இருந்தாங்க. இந்த கிராமத்துக்காரிய கட்டிகிட்டதால வாழ்க்கை வீணாப் போயிருச்சு. சும்மா போ மச்சான்…”
“எனக்குப் பொண்டாட்டியா வரணும்னா ரம்பை, ஊர்வசியாட்டம் ஒன்னும் பேரழகியா இருக்க வேணாம். ஒரு சொட்டு புத்தியிருந்தா போதும். வாழ்க்கைய சரிபாதியாப் பங்கு போட்டுக்கிற மனசு இருக்கணும். இப்படிப் பொய் சொல்லிப் பழி போட்டு வாழ்க்கைய நாசமாக்கக் கூடாது.
எனக்கு வரப்போற பொண்டாட்டி எப்படி எல்லாம் இருக்கணும்னு நான் எம்புட்டு ஆசைப்பட்டேன் தெரியுமா? என் தலையெழுத்து, நீ எனக்கு பொண்டாட்டியா வந்து தொலச்சுட்ட. உன்னப் பாத்தாலே எனக்குப் புடிக்கல. ச்சீ… என் கண்ணு முன்னாலயே நிக்காத போ…” என்று காச் மூச்சென கத்திட, மயிலா கதறி கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.
குமரனோ அவள் அழுதால் எனக்கென்ன என்று மீண்டும் அவளை வெளியே தள்ளிவிட்டு, தன் அறைக்குள் அடைந்து கொண்டான். இவள் அழுதபடி கொல்லைக்கு போக, பக்கத்து வீட்டு செல்வி அங்கு வந்தாள். அவளுக்கு இத்தனை நாட்களில் மேம்போக்காக விஷயம் ஓரளவு பிடிபட்டிருந்தது. ஆனாலும் வெளியே சொல்லாமல் இருந்தாள்…
“என்ன புள்ள? எதுக்கு நீ இப்படி தேம்பித் தேம்பி அழுவுற? நீ அழுவுறத நாங்க இது வரைக்கும் பாத்ததே இல்லையே. உன்ன இப்படி வாடிப்போன மொகத்தோட பாக்கவே எனக்கு கஷ்டமா இருக்கு. என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்கான் அந்த மனுஷன்? கல்யாணம் பண்ணி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து இப்படி கொடுமை படுத்துறானா? அப்படி என்ன ஊரு உலகத்துல இல்லாத பழி அவன் மேல விழுந்திருச்சாம்? கட்டிக்கிற ஆசையில சொன்னதுதான? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அதையே புடிச்சு தொங்கிக்கிட்டு இருப்பானாம்?
ஏதோ நடந்தது நடந்து முடிஞ்சு போச்சு. அதுக்காக உன் மேல கோவப்பட்டு ஒதுக்கி வச்சிட்டா எல்லாம் சரியா போயிடுமா? என்ன இருந்தாலும் நீதானே அவனுக்குப் பொண்டாட்டி. நாளைக்கே அவனுக்கு உடம்புக்கு சொகமில்லாம போனாக்கூட நீதானே கூட இருந்து கண்ணும் கருத்துமா பாத்துக்கப் போறவ. அதெல்லாம் அவனுக்குப் புரியாதா என்ன? நீ கண்ணத் தொடைச்சிக்கோ புள்ள…” என்று கனிவாக ஆறுதல் கூறினாள்.
ஆனால் மயிலாவால் தன்னுடைய அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் உள்ளுக்குள் உடைந்து நொறுங்கி போயிருந்தாள். வார்த்தைகள் அவளை விட்டு எப்போதோ பிரிந்து விட்டது போல, வெறும் விசும்பல்கள் மட்டும் அவளது துயரத்தை வெளிப்படுத்தின.
