தாரகையின் மாயோன்

மாயோன் -19

ஸ்ருதி அங்கே வந்தவள் யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்…

ஸ்ருதி எங்கே சென்று வந்தாள் பார்க்கலாம் .

விக்ரம் ஸ்ருதிக்கு அழைத்தவர் தான் ஊரிலிருந்து வந்து விட்டதாக கூறி அவளை தன் வீட்டிற்கு வரச் சொன்னார். இவளும் இதை கல்பனாவிடம் கூறியவள், “அம்மா நான் எப்படி இனியாவை தனியா விட்டுட்டு போறது” என்றாள்.

கல்பனா தேவி,”இனியாவை நான் பார்த்துக்கிறேன் டா. அப்பா கூப்பிடறாங்க தானே?நீ போயிட்டு வா”

“ஸ்ருதி இங்கே வந்ததிலிருந்து எனக்கு கனவு வரதில்லடி நீ போய்ட்டு வா”என்று இனியா ஸ்ருதிக்காக பொய்யுரைத்தாள்.

கார்த்திக் அவள் கூறியதைக் கேட்டு அவளை முறைக்க ,அவளும் அவனின் பார்வையை பார்க்க முடியாதவளாக சிரம் தாழ்ந்து நின்றாள்.

ஸ்ருதி,”இனியா என்ன விளையாடறியா நேத்திக்கு என்ன நடந்துச்சு எனக்கு தெரியும் டி..நான் உன்னை விட்டு போக மாட்டேன் போடி”

“ஸ்ருதி நாங்க இத்தனை பேர் இருக்கோமேடா நாங்க பார்த்துக்கறோம் .அப்பா நீ போகலனா சத்தம் போடுவாங்க தானே? நீ கிளம்பு”என்றான் கார்த்திக்.

ஸ்ருதி கார்த்திக் கூறவும் அவள் வீட்டுக்கு சென்று விட கல்பனா ,சரவணராஜனும் ஒரு திருமணத்திற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது. சரவண ராஜன் அலுவலகம் சென்று வந்தவர் கல்பனாவை கிளம்பும் படி சொல்ல அப்போதுதான் கல்பனாவுக்கு திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஞாபகம் வர ,”என்னங்க நீங்க ஆபிஸ் போகும்போது

எனக்கு ஞாபகம் படுத்தியிருக்கலாமே. எனக்கு மறந்தே போச்ச.நான் வரலங்க இனியா தனியா இருப்பா. நீங்க மட்டும் போயிட்டு வாங்க”என்றார்.

இனியா,” ஆன்ட்டி நீங்க போயிட்டு வாங்க இவங்க இத்தனை பேரு இங்க இருக்காங்களே.. எனக்கு ஏதாவது ஒரு பிரச்சனை சொன்னா .என் கையில் ஃபோன் இருக்கு ,ஃபோன் பண்ணா இவங்க  வரப் போறாங்க” என்றதும் கல்பனாவும் ,சரவணராஜனும் மனமில்லாமல் கிளம்பினார்.

நிகழ்காலத்துக்கு வருவோம்…

இனியா  ,”ஸ்ருதி என்னடா ஆச்சு?ஏன் டல்லா இருக்க”என்றும் அவளிடம் பதில் இல்லாமல் போக..இதை கவனித்த அன்பு ஸ்ருதியின் தலையில் கொட்ட அதில் தன்னிலை அடைந்த ஸ்ருதி அன்பை ஓங்கி அறைந்து இருந்தாள்.

அன்பு அதிர்ச்சியில் தாடையைப் பிடித்துக் கொண்டு நிற்க !பாலாஜி அபிஷேக் ஸ்ருதியை நெருங்க கார்த்திக் ,”ஸ்ருதி நீ என்னடா பண்ற “என்றதும்,

ஸ்ருதி தான் செய்த தவறை உணர்ந்தவள்  ,”சாரி சாரி டா அன்பு தெரியாம அடிச்சுட்டேன் என்னை மன்னிச்சிடு “என்று அழுதாள்.

இவளின் இந்த செயல் அனைவருக்கும் வித்தியாசமாக இருக்க கார்த்திக்,”ஸ்ருதி  இங்க பாருமா. நானும் வந்ததிலிருந்து உன்னை பார்த்துட்டு தான் ‌ இருக்கேன். எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க. என்ன நடந்தது சொல்லு அப்பா திட்டினாங்களா?”

“இல்ல  அண்ணா அப்பா எதுவும் சொல்லல.என்மேல் பாசமா இருந்தார்..அவர்  என்கிட்ட நடந்துகிட்டது எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு ,ஆனாங அந்த சந்தோஷத்தை என்னால கொஞ்சம் நேரம் கூட அனுபவிக்க முடியல அண்ணா”

“இனியா இப்போ நீ எதுக்கு அழற என்ன நடந்துச்சு சொல்லப் போறியா இல்லையா? புவனேஷ் கால் பண்ணாரா? அவருக்கு உன் மனசை புண்படுத்தறதே வேலையாப் போச்சு உண்மைய சொல்லுடி அவருடைய வேலை தானே இது?” என்று அபிஷேக் கேட்க…

கார்த்திக்,”டேய் அபி  இப்போ எதுக்கு அவனை இதுல இழுக்கிற. அவன் தான் இப்போ இவள பத்தி புரிஞ்சுகிட்டானே”

ஸ்ருதி,”இல்ல அண்ணா இல்ல அவர் அவர் என்னை ‘என்று அழுதவள் நடந்ததைக்  கூறினாள்.

ஸ்ருதி தன் அப்பா  தன்னிடம் பாசமாக நடந்துக் கொண்டதை புவனேஷிடம் சொல்ல அவனுக்கு அழைக்க அவன் அழைப்பை ஏற்கவில்லை.மீண்டும்  இரண்டு முறை அழைக்க

மூன்றாம் முறை அழைப்பை ஏற்றவன்

“ஏய் அறிவுகெட்ட முண்டம் .ஃபோனை எடுக்கலனா முக்கியமான வேலையா இருப்பாங்க தெரியாதா?ஏன் மறுபடியும் மறுபடியும் ஃபோன் செய்து என் உசுர வாங்கற.அப்படி என்ன‌ உயிர் போற

விஷயம்.சீக்கிரம் சொல்லி தொல “என்றான்.

ஸ்ருதி அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவள்,”மாமா என்ன ஆச்சு ஏன் மாமா இப்படி பேசறீங்க ஏதாவது பிரச்சனையா?”

“ஆமாண்டி என் பிரச்சனையே நீதான் .என்னைக்கு நான் உன்னுடைய காதலை ஏத்துக்கிட்டேனோ .அன்றிலிருந்து நிம்மதி இல்லாம தான் சுத்தறேன்”

உன் அப்பா மாதிரி முட்டாள் தனம் செய்ய விரும்பல.என்ன புரியலையா ?நான் உன்னை திருமணம் செஞ்சுகிட்டா கண்டிப்பா எங்க அப்பா எனக்கு எந்த சொத்தும் தர மாட்டாரு.உன்னை திருமணம் செஞ்சுட்டு நான் சம்பாதிக்கிற இந்த பணத்தை மட்டும் வச்சுக்கிட்டு நான் என்ன செய்யறது.

அதனால் நம்ம இருவருக்கும் பிரச்சினை தான் வரும். திருமணம் முடிந்து நாம சண்டைபோட்டு பிரிவதைவிட இப்பவே பிரிஞ்சிடலாம்”என்றான்.

புவனேஷின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஸ்ருதியின் மனதை நெருஞ்சி முள்ளாய் தைக்க,” மாமா இதுக்காக தான் நீங்க என்னை வேண்டாம் சொல்றீங்களா ?உங்களுக்கும் என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும் மாமா .ஏன் இப்படி மாத்தி பேசறீங்க.எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா கண்டிப்பா நம்ம கல்யாணத்துக்கு உங்க அப்பா சம்மதம் சொல்வார்.அப்படியே சொல்லாட்டியும் திருமணம் முடிந்த பிறகு நான் அவர் மனசை மாத்துவேன்.. அவர் சொத்து வேண்டாம். அவருடைய ஆசீர்வாதம் மட்டும் நமக்கு போதும் மாமா .நம்ம நிம்மதியான வாழ்க்கை வாழலாம் .பணம் மட்டுமே மனிதனுக்கு நிம்மதியை தராது .

அதற்கு உதாரணம் என்னுடைய அப்பா மட்டும்தான் மாமா .

அம்மா இல்லாம அவர் எவ்வளவு கஷ்டப்படறார் என்று எனக்கு தான் தெரியும்.. ப்ளீஸ் மாமா புரிஞ்சுக்கோங்க, என்னை விட்டு விலகிப்போகாதீங்க “என்று அழுதாள் ஸ்ருதி.

“ஏய் லூசா நீ எனக்கு உன்ன பிடிக்கல அதுவும் ஒரு காரணம் போதுமா?”என்றான் புவனேஷ்.

“என்ன மாமா சொல்றீங்க.. அன்னைக்கு நீங்களும் தானே என்னை பிடிச்சிருக்குன்னு 

என்னை விரும்பறேன்னு சொன்னீங்க”

“அது நீ என் அத்தை மகள் என்ற பாசத்துல சொல்லிட்டேன் .

மத்தபடி உன் மேல எனக்கு இன்ட்ரஸ்ட் கிடையாது. இதுக்கு மேல் நான் உன்கிட்ட பேச விரும்பல ஃபோனை வை. உன் அப்பனுக்கு இருக்குற ரோஷம் உனக்கும் இருந்தா என்கிட்ட பேச ட்ரை பண்ணாத “என்றவன் அழைப்பை துண்டித்தான்.

ஸ்ருதி அவன் பேசியதை கேட்டு புழுவாய் துடித்தவள் தன் அம்மாவிடம் அழுது புலம்பியவள் . மறுநாள் காலை அவர் அப்பா வெளியூர் செல்ல கார்த்திக் வீட்டிற்கு நடைபிணமாக திரும்பி வந்தாள்.

ஸ்ருதி நடந்த அனைத்தையும் கூற அதில் அனைவரும் அதிர்ச்சியடைய

“நான் தான் சொன்னேனே கார்த்தி பார்த்தியா?அவர் என்னைக்கும் திருந்தவே மாட்டார் ” என்று அபிஷேக் சத்தமிட அவனின் நண்பர்கள் அவனை சமாதானம் செய்தனர்.

கார்த்திக் கோபத்தின் உச்சத்திற்கே சென்றவன் புவனேஷ்க்கு அழைத்தவன் அவனை ஒரு இடத்திற்கு வருமாறு கூறினான்.

புவனேஷ் வந்தவனை  கார்த்திக் ஓங்கி அறைய புவனேஷ் எதுவும் கூறாமல் தன் தாடையில் கை வைத்து நின்றான்.

“என்னடா  திமிரா ஒரு பொண்ணு உன்னை ஏமாத்திட்டு போனப்போ உன்னுடைய மன நிலைமை எப்படி இருந்துச்சு.சாகற அளவுக்கு போனியா இல்லையா? அவள் உனக்கு துரோகம் செஞ்சிட்டா  சொல்லி எப்படி அழுது புலம்பின. இப்போ நீ என் தங்கச்சிக்கு செஞ்சதுக்கு பேரு என்னடா.

சரியான சுயநலக்காரன் டா நீ .

காதலை சரியா புரிஞ்சுக்காம இப்படி பண்ண அந்த பெண்ணைக்  கூட மன்னிக்கலாம் .ஆனால் நீ ஏற்கனவே அதன் வலியை அனுபவித்தவன் இப்போ  அதே வலியை உன்னையே உயிராக நினைத்தவளுக்கு கொடுக்கிறியே ?உன்னை நினைச்சாலே எனக்கு வெறுப்பா இருக்கு , சொல்லித் தொலைடா ஏன் இப்படி பண்ண” என்று கேட்டான் கார்த்திக்.

“கார்த்திக்  நீயும் நான் அவ மனசு கஷ்டப்படனும் என்று அப்படி பேசியிருப்பேன் நம்பறியாடா. எனக்கு வேற வழி தெரியல டா .ஸ்ருதியை நான் எப்படியும் சமாதானம் செய்திடுவேன்.ஆனால் எங்க அப்பாக்கு புரியவைக்க மட்டும் தான் அப்படி நடந்துக்கிட்டேன்” 

என்று அவன் நடந்த விஷயத்தை கூறினான்.

“அம்மா , அப்பாகிட்ட நான் ஸ்ருதியை திருமணம் செய்துக்க போறேன் சொன்னேன்.அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க . ஆனால் அப்பா நீ அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்ககூடாது.அவள் நம்ம வீட்டுக்கு மருமகளா வரக்கூடாது  .ஏற்கனவே அவங்க அம்மா என்னை தலை குனிய வச்சுட்டுப் போயிட்டா.. அவள் அப்பன் என் மானத்தை வாங்கிட்டு சுதந்திரமா சுத்திகிட்டு இருக்கான். உனக்கு நான் முக்கியம் அப்படின்னா  அந்தப் பெண்ணை விட்டுட்டு ,நான் சொல்ற பெண்ணை திருமணம் செஞ்சுக்கோ ”

“அப்பா நீங்க என்ன பேசுறீங்க .சொந்த தங்கச்சி பெண்ணை அப்படி பேச உங்களுக்கு எப்படி மனசு வந்தது .நான் அவளைத்தான் திருமணம் செய்துப்பேன்னு சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க.”

“நான் உயிரோடு இருக்க மாட்டேன்.. உங்க அம்மா விதவையா தான் நிற்பா. அதுமட்டுமில்லாம என்னுடைய சொத்து எதுவும் உனக்கு வராது.ஏன்னா அந்த விக்ரம் மகள் உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுறதே  இந்த சொத்துக்காக தான். அதை முதல்ல நீ புரிஞ்சுக்கோடா முட்டாள்” என்றார்.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!