1.வல்லினம்
ஆடிக்கார் தொடங்கி லம்போர்கினி, பென்ஸ், லேண்ட்ரோவர், ஜாகுவார் என சீரான இடைவெளியில் உயர்ரக கார்கள் அவ்வரங்கத்தை நோக்கி வந்த வண்ணம் இருந்தது. நிலவொளியிடம் போட்டி போட்டபடி அவ்விடம் முழுவதும் கண்கவர் விலையுயர்ந்த மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க, ஒவ்வொரு தொழிலதிபதிர்களும், முக்கிய புள்ளிகளும் தங்களுக்கே உரிய மிடுக்குடன் காரிலிருந்து இறங்கி வர, அவர்களை அழகாக வரவேற்றது சிவப்பு கம்பளம் மட்டுமல்ல, பத்திரிக்கை நிருபர்களும், புகைப்பட கலைஞர்களும் தான்.
பளிச் பளிச்சென்று அவர்களெடுக்கும் புகைப்படங்களின் சத்தங்கள் அவ்விடத்தினை நிரப்பியது. தொழில் துறையில் சாதித்தவர்களுக்காக நடத்தப்படும் பிரத்யேக விருது வழங்கும் விழா அது. பெரும் பொருட்செலவில் மிளிர்ந்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட மேடையை சுற்றிலும் உள்ள வட்ட வடிவ மேசையும், வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த நாற்காலிகளிலும், முக்கிய புள்ளிகளின் பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்தது.
அரங்கத்தின் கடைக்கோடிகளில் பொதுமக்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு வருகைப்புரிந்த தொழிலதிபர்கள் வருகைகள் ஒவ்வொன்றும் திரையில் ஓடிக்கொண்டிருக்க, அங்கிருந்த அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது அவன் ஒருவனுக்காக மட்டுமே. இதோ விழாவும் தொடங்கியது. ஆனால் விழாவின் நாயகனை மட்டும் காணவில்லையே? என்ற எதிர்பார்ப்பு அப்பட்டமாக தெரிந்தது அனைவரது முகத்திலும்.
முதல் ஒரு சில விருதுகள் வழங்கப்பட்டது. இடையிடையே நடனமும் நடந்திருந்தது. இவையனைத்தையும் நேரடி ஒளிப்பரப்பில் வெகுநிதானமாக பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவனது இரு பக்கமும் பெண்கள் அவனது தோள்பட்டையை அழுத்தி மசாஜ் செய்த வண்ணமிருக்க, அவனின் முகத்திலோ சிறு சலனமுமின்றிக் குடிக்கொண்டிருந்தது புன்னகை.
“பாஸ்…. பாஸ்.” என்று கூறிக்கொண்டே அந்த ஐந்து நட்சத்திர அறையில், நிதானமாக அமர்ந்திருந்த தனது முதலாளியை காண விரைந்து வந்தான் அவனின் பி.ஏவான வைகைச்செல்வன்.
உள்ளே வந்தவனுக்கோ தலை சுற்றாத குறைதான். அரைமணி நேரம் முன்பு, பார்த்த அதே நிலையிலேயே மேல்சட்டையின்றி அமர்ந்திருந்தான் அவன். குறும்பு தவழும் அதே கண்கள் கொண்டு வைகையின் மீது தன் பார்வையை பதித்தவன், “சொல்லு வைகை?” என்றான் வெகு நிதானமாக.
“பாஸ் ஃபங்சன் பாஸ்? உங்களுக்கு தான் அவார்டு கொடுக்குறாங்க?” என்று சிறு தயக்கத்துடன் எடுத்து உரைத்தவன் மனமோ, ‘இவரு உட்கார்ந்திருக்க தோரணையே சரியில்லையே. என்ன வில்லங்கம் பண்ண போறாரோ?’ என்று தீவிரமாக தனக்குள்ளே யோசிக்கவும் செய்தது.
“சோ வாட்?” என்று இரண்டே வரியில் அவன் முடித்துக் கொள்ள, அவனுக்கோ ‘அய்யோ’ என்றானது.
அவன் வருவானா? இல்லையா? என்று ஆயிரத்தெட்டு அழைப்புகளை ஏற்று, பேசியவன் அவன் அல்லவா? இனி சமாளிக்கும் தெம்பு தனக்கு இல்லை, என்று தெரிந்தவனோ, நின்னையே சரணடைந்தேன் என்று சொல்லாமல் தனது முதலாளியான அவன் முன்பே சரணடைந்து விட்டான்.
“பாஸ் ஃபங்சன் மேனேஜர் கால் பண்ணி கேட்குறான். இன்னும் கொஞ்ச நேரத்தில, உங்களுக்கு அவார்டு தரப் போறாங்களாமாம்?”
“அவனை வர சொல்லு வைகை.” என்று வெகு நிதானமாக கூறியவன் வேறு எதுவுமே பேசவில்லை.
வைகையும் அவன் சொன்னதை தட்டாமல் செய்தவன் அழைப்பை விடுத்து கூறியிருக்க, அடுத்த பத்தாவது நிமிடம் மேனேஜர் அவ்விடம் வந்து நின்றான். விழா நடக்கும் இடத்தின் அருகேயே ஐந்து நட்சத்திர விடுதி இருப்பதாலும், அவன் கூறி வராமல் போனால்? என்ன நடக்கும் என்பதை நன்கு உணர்ந்ததாலும் அனைத்து வேலைகளுக்கு, நடுவில் ஓடோடி வந்திருந்தான் அவன்.
அவன் வருகையை வெளியே உள்ள சிசிடிவியின் உதவியோடு கண்ட வைகைக்கோ சற்று கவலையாக இருந்தது. ‘பாவம்டா நீ’ என்று மனதில் உச்சுக் கொட்டிக் கொண்டான்.
ருத்ரஜித் கண்களாலே அவனை உள்ளே அனுப்பச் சொல்ல, வைகையும் அவனை உள்ளே அழைத்தவன், நடப்பதை அமைதியாக நின்றுக் கவனிக்கத் தொடங்கினான்.
ருத்ரஜித் அமர்ந்திருந்த தோரணையைக் கண்டு அதிர்ந்த மேனேஜரோ, “ருத்ரா சா….ர்” என்று தயங்கியபடி அழைக்க, அவனை தன் இரு விழிகளால் பொசிக்கியிருந்தான் ருத்ரஜித்.
“என்ன மேனேஜர், பேர் சொல்ற அளவுக்கு வளர்ந்திட்டீங்களோ?” என்று அலட்சியப் பார்வையில் பார்க்க, அவனுக்கோ உள்ளுக்குள் கிலி பரவியது.
“சார்ரும் சொன்னேன் சா..ர்” என்றான் மனம் பதைபதைக்க.
“ஓ.. என்னையவே எதிர்த்து பேசுறியா?” என்றவன் அழுத்தமான பார்வையை அவன் மீது செலுத்தியிருந்தான்.
“அப்படி இல்லைங்க சார். இன்னும் கொஞ்ச நேரத்தில, அவார்டு தராங்க சார். ப்ளீஸ் ரெடியாகி வாங்க சார்.” என்று பயத்துடன் விழுந்தது அவனின் வார்த்தைகள்.
“ம்ம்ம் அப்போ தயார்ப்படுத்து, மிஸ்டர்….” என்று அவன் வேண்டுமென்றே இழுக்க,
“மனோகர்… அதான் என் பேரு சார்.” என்று தன்மையாக அவன் எடுத்துரைத்தான்.
“வாட்எவர், என் சர்ட், கோட் எடுத்துப் போட்டுவிடு.” என்று கட்டளையாக அவன் எடுத்துரைக்க, அதிர்ந்து போய் பார்த்தான்.
“என்ன பார்க்குற, போ.” என்றவன் அடிக்குரலை உயர்த்தியிருந்ததில் அன்னிச்சையாக நகர்ந்தது அவனின் கால்கள். பஞ்சு மெத்தையில் அழகாய் விரிக்கப்பட்டிருந்த சட்டையை கையில் எடுத்தவன் அவனது முறுக்கேறிய தேகத்தில் அணிவித்தான். அதன்பின் அவன் கைகளை விரிக்க, கோட்டை அணிவித்தவன், சட்டையை சரியாக பெல்ட்டின் உள்ளே அனுமதித்திருந்தான்.
அங்கிருந்த இரு பெண்களும் தங்களுக்கு அவ்வாய்ப்புக் கிடைக்கவில்லையே! என்று ஏக்கப் பெருமூச்சொன்றை விடுத்துக் கொண்டிருக்க, வைகை அங்கு நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி நின்றான்.
“ஷூ எடுத்துட்டு வா.” என்றான் மீண்டும் கட்டளையாக.
அதில் கூனியவன், அவனை அதிர்ச்சியோடு பார்க்க, அவனது கண்களோ அதே கட்டளையை பிறப்பித்தது. வேறு வழியின்றி அவன் சொன்னதை செய்தான் மனோகர்.
“ஷூ யாரு உங்க அப்பனா வந்து போட்டுவிடுவான்.” என்று எகத்தாளமாய் வந்து விழுந்தது ஆணவனின் வார்த்தைகள்.
மனோகரோ, பல்லைக் கடித்தவன் வேறு எதுவும் பேசாது அவன் கூறியதை செய்ய, அங்கிருந்த இரு யுவதிகளும் அவனைக் கண்டு நக்கலாகச் சிரித்தனர். அவமானமாக இருந்தது அவனுக்கு. கண்களோ கலங்கியது. அடிப்பணிந்து நடப்பவனைக் கண்டு ஏளனப் புன்னகையிட்டான் நம் நாயகன்.
“ம்ம்ம் எந்திரி. இங்கிருந்து போ.” என்றான் கர்ஜனையோடு.
விட்டால் போதுமென்று நினைத்தவனோ, “சரிங்க சார்.” என்று விரைந்து அங்கிருந்தோட, செல்லும் அவன் மனமோ ரணமாக வலித்தது. ஏழு வருடம் முன்பு அவன் இருந்த நிலையை நினைத்தும், தற்போது இருக்கும் நிலையையும் எண்ணியவனால் அழ மட்டுமே முடிந்தது. கடந்த சில வருடமாக அடி மட்டுமே கண்டவன் அல்லவா! அவன். அவனின் இந்நிலைக்கு காரணம் சாட்சாத் நம் நாயகன் மட்டுமே.
விழா மேடையில் தொகுப்பாளரும், தொகுப்பாளினியும் விழாவினை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தனர்.
“அடுத்ததாக நம்ம வழங்க போற விருது யாருக்குனா? மிகச்சிறந்த இளம் தொழிலதிபருக்கான விருது.” என்று தொகுப்பாளர் கூறினார்.
” இருங்க இருங்க. அவரை பத்தி நான் தான் சொல்வேன். தொழில்துறையில் வந்த ஏழே வருடத்தில் தனக்கான இடத்தை பிடித்தவர். அவரு நின்னா டிரெண்டு, நடந்தா டிரெண்டு ஆமாங்க நம்ம சோசியல் மீடியாவின் மிக பிரபலமான ஸ்டார் அவர்தான். இளம்பெண்களின் மனதை திருடும் மாயக்காரர். என்ன கேர்ள்ஸ் எல்லாரும் ரெடியா?” என்று தொகுப்பாளினி பிரியலேகா மேடையில் கூற, ஆங்காங்கே இருந்த இளம் யுவதிகளோ, “ருத்ரா ருத்ரா” என்று கரகோஷம் எழுப்பினர்.
“அடடா சொல்லாமலே கண்டு பிடிச்சுட்டீங்க. அந்த விருதுக்கு சொந்தக்காரர் நன் அதர் தென் மிஸ்டர் ருத்ரஜித்.” என்று கண்கள் மின்ன தொகுப்பாளினி எடுத்துரைக்க, அனைவரும் அவனது வருகையை எதிர்பார்த்தபடி காத்திருக்க, தனக்கே உரிய தோரணையில் சிவப்புக்கம்பளத்தில் நடந்து வந்தான் ருத்ரஜித்.
அலைஅலையான கேசமும் அவனோடு சேர்ந்தாட, குறும்பு மின்னும் கண்கள், முகத்தில் தவழும் புன்னகை, அப்புன்னகையை மறைக்கும் கருந்தாடி என கருப்புநிற சட்டையும், சாம்பலும், அரக்கும் கலந்த வண்ணம் இருக்கும் கோர்ட் சூட்டில் மிக கம்பீரமாக நடந்து வந்தான் ருத்ரஜித். ஆணவனின் நடையும், வசீகரிக்கும் புன்னகையும், கட்டுக்கோப்பான உடல்வாகும் அனைவரையும் அவன் புறம் இழுக்க, திரையில் தெரிபவனையே மெய்மறந்தபடி பார்த்தனர் அனைவரும்.
அவனை வளைத்து வளைத்து புகைப்படக் கலைஞர்கள் படம் பிடித்துக்கொள்ள, புன்னகையோடு அவர்களை கடந்து வந்தான் ருத்ரஜித்.
“நம் விழாவின் நாயகன். தன்னடக்கத்தின் மறுபெயர், டிரெண்டிங் சூப்பர் ஸ்டார். இளம் தொழிலதிபர் மற்றும் ஆதிமந்திரா நிறுவனத்தின் தலைமை நிறுவனர் மதிப்பிற்குரிய ருத்ரஜித் அவர்களை அன்புடன் மேடைக்கு அழைக்கிறோம்.” என்று வரவேற்றார் தொகுப்பாளர். அந்நேரம் கூட்டத்தில் உள்ள அனைவரின் கரகோஷமும் அரங்கத்தை நிரப்பியது.
மேடையில் ஏறியவனோ, புன்னகையோடு அனைவரையும் கண்டு கை அசைக்க, அங்கு குழுமியிருந்த அனைவரின் கண்களும் அவன் மீதுதான். அதுவும் இளம்பெண்கள் அவனைக் கண்டு “ருத் சோ க்யூட்” என்று ஆர்ப்பரித்தபடி அமர்ந்திருந்தனர். மேடையில் ஏறியவன் அங்கிருந்த பெரியவர்களுக்கு மரியாதை நிமித்தமாக கைகூப்பி வணக்கம் வைத்தான்.
“என்ன பணிவு, என்ன பண்பு” என்று பெருமையாக அனைவரும் பேச, அங்கு மூலையில் நின்ற மனோகருக்கு வயிறெல்லாம் எரிந்தது. சற்று முன்பு அவன் முன்னே கூனிக்குறுகியவன் அவன்தானே. கண்கள் கலங்கிப் போயிருந்தவனுக்கு அங்கு நிற்கவே இயலவில்லை.
ருத்ரஜித்தின் புகைப்படம் திரையில் நிரம்பியிருக்க, அவனது கைகளில் இளம் தொழிலதிபருக்கான விருது வழங்கப்பட்டது. அதை ஏற்றவன் தன் அக்மார்க் புன்னகையை பரிசளித்தான்.
“என்ன மனோகர், ச்சே ச்சே சர்வேஷ் மனோகர்…. வயிறு எல்லாம் புகையிது போல.. ஏழு வருசத்துக்கு முன்னாடி நீங்க வாங்குன அவார்டு. இப்போ அதே இடத்துல சாதாரண எடுபிடி மேனேஜரா நிக்குற உங்க நிலைமை. பார்க்கவே கஷ்டமா தான் இருக்கு.” என்று வேண்டுமென்றே அவனின் அருகே வந்த வைகை பேச, அவனையே உறுத்து விழித்தான் மனோகர்.
‘நீயெல்லாம் பேசுற அளவுக்கு என் நிலைமையை மாத்துனதே, உன் பாஸ் தான்டா.’ என்று மனதில் நினைத்தானே தவிர, வாய் திறந்து எதுவும் பேசவில்லை. அப்படி பேசினால் நடக்கும் விபரீதம் அவன் அறிவான் அல்லவே.
ஏழு வருடம் முன்பு, ருத்ரஜித் முன் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்தவன் கூறிய வார்த்தைக்குத்தானே இந்நிலையில் இருக்கிறான் அவன்.
“தம்பி இந்த பிஸ்னஸ் எல்லாம் தெரிஞ்சுக்குற வயசு உனக்கு இல்லை. ஏன் என் கம்பெனிக்கு ஒரு கிளர்க்கா இருக்க கூட உனக்கு தகுதி இல்லை. போ போய் ஏரியா பசங்ககூட சேர்ந்து கிரிக்கெட் விளையாடு. அதுதான் உன் ஃபேஸ்க்கு செட்டாகும். வந்துட்டான் பொடி பையன்.” என்று சர்வசாதாரணமாக அவன் கூறிய வார்த்தைகளை இன்று அவனுக்கே திருப்பியிருந்தான் ருத்ரஜித்.
அன்று இருபத்தி இரண்டு வயது இளைஞனாக அனைவரின் முன்பு அவமானப்பட்டவன், இன்று தனது இருபத்தி ஒன்பது வயதில் தொழில்துறையில் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் வல்லமைக் கொண்டவனாக உயர்ந்துள்ளான் என்றால், அனைத்திற்கும் அவனது திறமை மட்டுமே காரணம்.
“சார் இந்த தருணத்துல நீங்க சொல்லவிரும்புறது?” என்று பிரியலேகா ஆவலோடு கேட்க, மைக்கினை பெற்றவன்,
“விருது வழங்கிய ஜேஆர் அவார்ட்ஸ்க்கு நன்றி. அப்புறம் எப்போதும் என்னை உற்சாகப்படுத்தும் உங்க அனைவருக்குமே நன்றி.” என்றான் புன்முறுவலோடு.
“ருத் சார். ரொம்ப சார்ட்டா முடிச்சுட்டீங்க.. இளம் வயதிலேயே சாதித்தவங்க நீங்க, இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?” என்று தொகுப்பாளர் ஆர்வத்தோடு கேட்டார்.
” உங்களை நம்புங்க. உங்களை யாராவது டீமோட்டிவேட் பண்ணாலும் உங்களை மட்டுமே நம்புங்க. ஒரு நாள் இந்த உலகம் உங்களை திரும்பி பார்க்கும்.” என்று அவன் கூறவும் கரகோஷம் எழுந்தது.
“சார் அப்படியே என்னை பத்தி ஒரு வார்த்தை சொல்லுங்க சார்.” என்றாள் பிரியலேகா பெரும் ஆர்வத்துடன்.
“ரொம்ப அழகா தொகுத்து வழங்குறீங்க மிஸ் பீயூட்டிபுல்.” என்றவன் அக்மார்க் புன்னகையை உதிர்க்க, “அய்யய்யோ பறக்குறேனே.” என்று சிறகே இல்லாமல் பறந்தாள் தொகுப்பாளினி பிரியலேகா.
“சார் ஒரு செல்ஃபி?” என்று பிரியலேகா கேட்க, “கண்டிப்பா.. வாங்க.” என்று கூறியவன் தொகுப்பாளர்கள் இருவரிடமும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
பின் விருதினை கையில் ஏந்தியவன் கம்பீரமாக படிக்கட்டிலிருந்து இறங்க, அவன் கீழே இறங்கியதும் அவார்டை வாங்கிக் கொண்டான் வைகை. மனோகரை நக்கல் பார்வை பார்த்த ருத்ரஜித்தோ, அங்கிருந்த அவனுக்கென்ற இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்.
“ஹலோ மிஸ்டர் ருத்ரஜித்.” என்று அவனிடம் தேடி வந்து கைக்கொடுத்து வாழ்த்திவிட்டு சென்றனர் அனைவரும். அதில் ஒருவரது மகளோ ருத்ரஜித்தை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள்.
“ஹலோ ருத்ரஜித். சீ இஸ் மை டாட்டர் ஸ்வரா.” என்று அவர் அறிமுகப்படுத்த கருப்பு நிற கவுன் அணிந்திருந்த பெண்ணவளோ, “ஹாய் ருத்” என்று வசிகரிக்கும் புன்னகையை உதிர்த்தாள்.
அதை கண்டும் காணதவன் போல், “ஹாய்.” என்று மட்டும் கூறியவன் நிகழ்ச்சியை கவனிக்கத் தொடங்கியிருந்தான்.
வைகைக்கோ ஸ்வராவைக் கண்டு பத்திக்கொண்டு வந்தது. ‘போடி போ…. இன்னைக்கு உனக்கு இருக்கு. டன் கணக்குல வழியவா செய்யுற?’ என்று மனதில் நினைத்துக் கொண்டபடி சற்று தள்ளி அமர்ந்துக் கொண்டான்.
விழா இனிதே முடிவடைய, வந்திருப்பவர்களுக்காக இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ருத்ரஜித்தோ, முக்கிய புள்ளிகளுடன் பேசிக்கொண்டே ஒயினை பருகிக் கொண்டு இருந்தான். ஸ்வராவோ மதுக்கோப்பையுடன் அவனையே வலம் வந்தபடி இருந்தாள். சரியாக அவன் தனியே வருவதற்காக காத்துக் கொண்டிருக்க, ருத்ரஜித்தோ புகைப்பதற்காக தனியே செல்ல, அவன் பின்னே சென்றாள் ஸ்வரா.
“எங்க இவரு..?” என்று நாலாபுறமும் அவள் கண்கள் தேட, அவளது இடையை வளைத்து தன்புறமாக மறைவான இடத்தில் இழுத்துச் சென்றான் ருத்ரஜித்.
“மேடம் என்னை தான் தேடுறீங்களோ?” என்று அவளின் காதுமடலில் இதழ் குவித்தவன் கேட்டதிலும், அவனது நெருக்கத்திலும் இன்ப அதிர்ச்சி அடைந்தவள், அவனையே ஆர்வம் பொங்கிட பார்த்தாள்.
“வாவ் ருத் பேபி. யூ லுக் சோ ஹேண்ட்சம்.” என்று குழறியவளின் கைகளோ அவனது கழுத்தை வருடியது.
“யூ லுக் சோ ஹாட்.” என்றவனது உதடுகள் அவளின் கழுத்தில் பதிய, தன் நாக்கை கடித்தவள், அவனது பின்னந்தலையை தன் இரு கைகளால் இதமாகக் கோர்த்துக் கொண்டாள்.
“ருத் பேபி. ஐ ரியலி லவ் யூ. நம்ம மேரேஜ் பண்ணிக்கலாமா?” என்றவள் இன்ப அவஸ்தையில் நெளிந்துக் கொண்டே கேட்க, பெண்ணவளின் கழுத்தில் உதடு குவித்திருந்தவன் தன் பல் பதியும் அளவிற்கு கடித்தான். வலியில் அவள் துள்ள, தன்னிடம் இருந்து பிரித்து கீழே உதறியிருந்தான் ருத்ரஜித்.
“ஹே நீ என்ன வேம்பயர்ரா….? இப்படி கடிக்குற பைத்தியக்காரா?” என்றாள் வலியில் துடித்தப்படி.
அடுத்தநொடி அவளது கழுத்தை பிடித்தவன், தன் உயரத்திற்கு அவளை தூக்கியிருக்க, அதில் மூச்சுத் திணறினாள்.
“ஹேய் ஸ்வீட் ஹார்ட் ஏன் என்னாச்சு?” என்று கூறிக்கொண்டே அவளது கழுத்தை விட, இருமினாள் பெண்ணவள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது. குரல்வலையோ ரணமாக வலித்தது.
“அச்சச்சோ பேபி. இப்போ சொல்லு கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று அவளை ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டே கேட்டதில் பதறியவளுக்கு உடல்நடுக்கம் எடுக்க, “ஆளைவிடுடா சாமி.” என்று கூறிக்கொண்டே அங்கிருந்து பிழைத்தால் போதுமென்று ஓடினாள்.
ஃபபே உணவுகளை சுவைத்த வைகையோ, அவள் ஓடுவதைக் கண்டு, மெலிதாக புன்னகைத்துக் கொண்டவன், உணவினை உண்ணுவதில் கவனம் செலுத்தினான்.
பின் அங்கிருந்து ருத்ரஜித் செல்ல, அவன் பின்னே தட்டோடு சென்றான். “நான் கார்ல இருக்கேன் வைகை. நீ சாப்பிட்டு வா.” என்றவனின் சொல்லுக்கு மறுபேச்சின்றி “சரிங்க பாஸ்” என்றவனோ மீண்டும் உண்ணும் பணியினை செவ்வென செய்தான்.
தனது பதினாறாம் அகவையிலிருந்தே ருத்ரஜித்துடன் இருப்பவன் வைகை. அவனது அந்த வயதில் தான், அவனின் தந்தை குடிபோதையில் வைகையின் அன்னையினை கொல்ல முயற்சித்தார். அந்நொடி தன் அன்னையை காக்க அவரைப் பிடித்து சுவற்றில் தள்ளியிருந்தான் வைகை. அந்த நொடி அவர் தலையில் பட்ட கூர்மையான ஆணி அவரின் உயிரை காவு வாங்க, பதறியவன் வீட்டைவிட்டு ஓடினான்.
போலீஸிடம் சிக்காமல் அவன் தப்பிக்க பார்க்க, அன்று அவன் மறைந்த இடம் தான் ருத்ரஜித்தின் வீடு. அவனை யாரென்று விசாரித்து, அவன் செய்த செயல் தெரிய, பதினெட்டு வயது நிரம்பிய ருத்ரஜித்தான் அவனுக்காக தன் தந்தையிடம் பேசி, அவனைக் காப்பாற்றியிருந்தான். அதன்பின் அவன் படிப்பு முதற்கொண்டு உதவியவன் ருத்ரஜித்தே. படிப்பு முடிந்ததும் ருத்ரஜித்திற்கு தனிப்பட்ட பி.ஏ வாக மாறிப்போனான் வைகை.
செய்நன்றி உணர்வு என்றுமே வைகைக்கு உண்டு. ஆதலால் தான் ருத்ரஜித் என்ன செய்தாலும் துணையாக இருந்தான். வெளி உலகம் மற்றும் வீட்டை பொறுத்தவரை அவனைவிட நல்லவன் இவ்வுலகில் யாருமில்லை. ஆனால் அவனுள் ஒளிந்திருக்கும் அக்மார்க் வில்லத்தனத்தை அறிந்த ஒரே ஒருவன், வைகைசெல்வன் மட்டுமே.
உணவை உண்ட வைகையோ விரைந்து வெளியே வர, அதே சமயம் காரைத் திறந்தபடி வெளியே வந்தாள் இளம் நங்கை ஒருத்தி. அவளைக் கண்டதுமே வைகைக்கு கோபம் துளிர்த்தது. ருத்ரஜித்திடம் பிடிக்காத ஒரே விசயம் இது மட்டும் தான். கோபத்தோடு காரில் ஏறிக்கொண்டான் வைகை.
அவர்கள் பின்னே பாதுகாவலர்கள் புடை சூழ வர, ருத்ரஜித்தோ தனது கன்னத்தில் படிந்த லிப்ஸ்டிக் கரையை அகற்றிக் கொண்டிருந்தான் காரில் இருந்தபடியே.
முன் கண்ணாடி வழியாக பார்த்த வைகைக்கோ முகம் கடுகடுவென இருந்தது. அதை கண்டுக்கொண்ட ருத்ரஜித்தோ, “என்னடா ரொம்ப பொறாமையோ?” என்றான் நக்கலாக.
“பாஸ்… உங்ககிட்ட பிடிக்காத ஒரே விசயம் இதுதான் பாஸ். ஏன் இப்படி பண்றீங்க?” என்று ஆதங்கத்தோடு கேட்டான் அவன்.
அவனது கேள்வியில் அவனை முறைக்க, “தப்புதான் கேள்வி கேட்டது தப்பு தான். சாரி.” என்று கூறிக்கொண்டே வண்டியினை ஓட்டினான் வைகை.
அடுத்த நிமிடமே, ருத்ரஜித்தின் உதடுகளில் புன்னகை நிரம்பியது. அவனின் இந்த புன்னகை பலவித அர்த்தங்களை சுமந்திருக்கும். கண்ணாடி வழியே பார்த்த வைகைக்கு நன்கு புரிந்தது. அடுத்த ஆப்பு தனக்கு தான் என்று.
“வண்டியை நிறுத்து வைகை.” என்று அவன் நினைத்தது போன்றே மிக தீவிரமாக ஒலித்தது ருத்ரஜித்தின் குரல்.
“ஏன் பாஸ்?” என்று தவிப்போடு அவன் கேட்க, “சொன்னதை மட்டும் செய்.” என்று அதிகாரமாக கூறியதில் வண்டியை ஓரமாக நிறுத்தினான் வைகை. பின்னிருக்கை கதவினை திறந்தவன் வெளியேற, வைகையும் பதட்டத்தோடு காரைவிட்டு இறங்கியிருந்தான்.
அவனது முகத்தை அழுத்தமாக பார்த்தவன், அடுத்த நொடியே டிரைவர் சீட்டில் ஏறியிருக்க, “பாஸ்” என்று பரிதவிப்போடு பார்த்தான் அவன். காரின் கண்ணாடியை கீழே இறக்கியவன், ” பாடிகார்ட்ஸ்கூட வீட்டுக்கு போற வழியைப் பாரு.” என்றவன் அலட்சியப் பார்வை பார்த்தான். அப்பார்வையே கூறியது தனக்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு நீ வளரவில்லை என்று? .
“பாஸ்…” என்று பாவமாக அவன் பார்க்க, அவனை அழுத்தமான பார்வை பார்த்தவன், காரினை புயல் வேகத்தில் கிளப்பியிருக்க, கார் ஏற்படுத்திய புழுதியில் இருமியபடி நின்றான் வைகை.
இருபக்கமும் வந்துக் கொண்டிருந்த பாதுகாவலர்களோ, “சார் என்ன அதுக்குள்ள மறைஞ்சுட்டாரு.” என்று ஆச்சரியமாய் கேட்க, “அவர் மறையாட்டி தான் ஆச்சரியமே. வண்டியை எடுங்கடா. நம்ம போவோம்.” என்ற வைகையோ அவர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
புயல்வேகத்தில் மறைந்த நம் வேந்தனவனோ, தனது உயர்ரக காரினை ஒரு வீட்டின் முன் நிறுத்தினான். அங்கிருந்த ஒரு நபரோ, விரைந்து வந்து ஒரு சாவியினை அவனிடம் ஒப்படைக்க, அதை வாங்கியவனோ, தனது காரை அவ்விடம் நிறுத்திவிட்டு, அந்த மாருதி காரினை எடுத்துக் கொண்டபடி அங்கிருந்து புயல்வேகத்தில் சென்றான்.
யுவதிகளின் மனங்களை
தன் புன்னகையால் கவரும்
மாயவன் அவன்.…
இரட்டை வேடமிடும்
தந்திரம் புரியும்
தந்திரனும் அவன்.…
தந்திரக்காரனின்
மாயவலையில்
சிக்கிக்கொள்ளும்
வல்லினம் அவளோ……?
