7.வல்லினம்
மயங்கிக்கிடந்த விஷ்வாவினைக் கண்டு புன்சிரிப்பொன்றை உதிர்த்தவனுக்கோ, பழைய ஞாபகங்கள் எட்டிப் பார்த்தது. சரியாக இருபத்தி ஒன்பது வருடங்களுக்கு முன்பே, இருவருக்குமான போட்டி ஆரம்பித்துவிட்டது.
ஆதிமந்திரை மற்றும் கரிகாலன் இருவருக்குமே திருமணமாகி ஐந்து வருடம் கழித்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்க, கரிகாலனின் தம்பியான இந்திரனுக்கும், வைஜெயந்திக்கும் திருமணமாகி ஒரேவருடத்தில் குழந்தை உருவாகியிருந்தது.
கரிகாலனின் தாயார் நித்திலவள்ளிக்கோ, அச்செய்தி ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் மூத்தமகனது வாரிசை பார்க்க இயலாது போய்விட்டதே என்ற கவலை அப்பட்டமாக இருந்தது. அந்த வருத்தம் நாளடைவில் தன் மூத்த மருமகளின் மீது கோபமாக திரும்ப, எண்ணற்ற பேச்சுக்களை வாங்கத் தொடங்கினார்.
பெரிய வீட்டுப் பெண், இதுவரை அவரை யாரும் அதட்டிக் கூட பேசியது இல்லை. இந்நிலையில் தற்போது, மகாலட்சுமியாய் போற்றி வரவேற்ற மாமியாரே, பிள்ளை பெத்தேடுக்க வழியில்லை என்று குத்திக்காட்ட ஆரம்பித்ததும் மிகுந்த மனவேதனைக் கொண்டார் ஆதிமந்திரை.
நாளடைவில் தலைச்சுற்றல், வாந்தி என அவருக்கு ஏற்பட, பித்தம் என்று வீட்டினர் அனைவரும் நினைக்க, அவரின் கருவில் ஏற்கனவே உருவாகி வளர்ந்துக் கொண்டிருந்தான் ருத்ரஜித். விசயம் தெரிந்ததும் வீட்டில் உள்ள அனைவரும் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.
மாதங்கள் விரைந்தோட, இருமருமகள்களுக்கும் பிரசவவலி ஒரே நேரத்தில் வந்தது. முதலில் விஷ்வா பிறப்பான் என்று தான் அனைவரும் நினைத்திருக்க, அதற்கு மாறாக ருத்ரஜித் பிறக்க, விஷ்வஜித்தின் அண்ணனாக மாறிப்போனான் ருத்ரஜித்.
இருவருக்கும் ஒன்றுபோலவே ருத்ரஜித் மற்றும் விஷ்வஜித் என்று பெயர் வைத்து மகிழ்ந்தனர். ஆனால் அவர்களது சிறு வயது பருவம் பாகுபாடுகள் நிறைந்து காணப்பட்டது.
ஐந்து வயது இருக்கும் போது ருத்ரஜித், விஷ்வஜித்திடம், “அஜ்ஜூ, வா நம்ம கண்ணாமூச்சி விளையாடலாம்.” என்று அழைத்துக் கொண்டு சென்றான்.
விஷ்வஜித்தின் கண்களை கட்டிவிட்டவன், தன்னைத் தொடுமாறு உரைக்க, விஷ்வாவோ தட்டித்தடுமாறி அவனை பிடித்துவிட்டான்.
“ஹே ருத் நீ அவுட்டு…. அவுட்டு.” என்றான் துள்ளிக்குதித்துக்கொண்டே.
“ஏய் அண்ணானு கூப்பிடு. பேரை சொல்லி கூப்பிடாத.” என்றான் அப்போதே ஒற்றை விரலை ஆட்டியபடி.
“நம்ம ஒரே நாள்ல தான பிறந்தோம். போடா உன்னை அண்ணா சொல்லி கூப்பிட மாட்டேன்.” என்று கொக்காணி காமித்தான் விஷ்வா.
“ஓ அப்படியா. இருடா உன்னை கவனிச்சுக்குறேன்.” என்று முணுமுணுத்தவனோ, தன் கண்களை கட்டிக்கொண்டு அவனை பிடிப்பதற்காக சென்றவன் வேண்டுமென்றே அங்கிருந்த குழியில் விழுந்துவிட, விஷ்வாவோ பயந்தே விட்டான்.
“அம்மா… அப்பா ருத்ரா விழுந்துட்டான்.” என்று தேம்பி தேம்பி அழுதான்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அவ்விடம் வந்தனர் இந்திரனும் வைஜெயந்தியும்.
இந்திரனோ, குழியில் விழுந்த ருத்ரஜித்தைக் கண்டு பதறி அடித்து ஓடி சென்று அவனை தூக்கினார். ருத்ரஜித்தின் தலையில் வேறு ரத்தம் வர, வைஜெயந்தியோ துடித்தே விட்டார் .
“அய்யோ என்னங்க பையனுக்கு ரத்தமா கொட்டுதே. அக்கா கேட்டாங்கனா என்னனு சொல்லுவேன். ஏங்க டாக்டரை கூப்பிடுங்க. ” என்று கண்ணீரை விட, அடுத்தநொடியே மருத்துவரை அழைத்திருந்தார் இந்திரன்.
மருத்துவர், அவனது காயத்திற்கு மருந்திட்டு போக, மயக்கத்திலிருந்து எழுந்த ருத்ரஜித், தனது சித்தப்பாவை தாவிக் கட்டிக்கொண்டான்.
“ரொம்ப வலிக்குது சித்து.” என்று தேம்பியவன் அழ, அவனை சமாதனப்படுத்த முயன்றார் இந்திரன்.
“எப்படி ருத்ரா விழுந்த? குழி பக்கத்துல ஏன் என்னோட தங்கம் போனீங்க?” என்று வைஜெயந்தியும் அவனது தலையை வருடிக்கொண்டு கேட்க,
“சித்திமா. நான் போல.. அதுவந்து” என்று அழுதவனின் விழிகள் விஷ்வஜித்தை பார்த்தது.
“என்னாச்சு ருத்ரா?” என்று விஷ்வாவை ஒருமுறை பார்த்துக்கொண்டே வைஜெயந்தி மீண்டும் கேட்டார்.
“சித்திமா. தம்பி தான் என்னை தள்ளிவிட்டான். அவனை அண்ணானு கூப்பிட சொல்லி சொன்னதுக்கு.” என்றான் தலைகுனிந்துக் கொண்டே.
விஷ்வாவோ, “இல்லைம்மா.. அவன் பொய் சொல்றான். நான் பண்ணலை.” என்றான் உதட்டை பிதுக்கியபடி.
“எங்க முன்னாடியே ருத்ராவை அவன்னு சொல்ற? நீ பண்ணாலும் பண்ணியிருப்படா. இந்த வயசுலயே என்ன புத்தி உனக்கு?” என்று தன் மகனது முதுகில் நான்கு அடிவைக்க, வலியில் துடித்துப் போனான் விஷ்வா.
“என்னங்க வேண்டாமுங்க சின்னபையன்.” என்று வைஜெயந்தி தடுத்தும் அவர் அடிக்க வர,
“நிறுத்துங்க தம்பி.” என்று தடுத்து நிறுத்தியிருந்தார் ஆதிமந்திரை.
கோவிலுக்கு சென்றவர் அப்போதுதான் வீட்டிற்கு வர, சிறு பிள்ளையை போட்டு அடிக்கும் இந்திரனின் செயலில் கோபம் கொண்டவர், விஷ்வஜித்தை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.
“பெரியம்மா” என்று அழும் மழலையின் முதுகை வாஞ்சையோடு வருடிவிட்டவரோ, அதன்பின் இந்திரனை திட்டிவிட்டு, தன் மகனுக்கும் அறிவுரை சொன்னார்.
“என்ன ருத்ரா இது. இது என்ன கோலி மூட்டுற பழக்கம். இது ரொம்ப தப்பு. அவனை நீதான் பத்திரமா பார்த்துக்கணும். நீங்க இரண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்கக்கூடாது.” என்று இருவரிடமும் கூறியவர் அங்கிருந்து செல்ல, விஷ்வாவைக் கண்டு சிரித்தான் ருத்ரஜித். விஷ்வஜித்துக்கோ அவனது கெட்ட எண்ணம் அன்றே புரிந்துவிட, அவனோடு விளையாடுவதையே நிறுத்தியிருந்தான்.
அதன் பின் வருடங்களோட, பத்தாம் வகுப்பில் , பன்னிரண்டாம் வகுப்பில் அனைத்திலும் முதல் மாணவன் ருத்ரஜித். விஷ்வஜித்தோ ஓரளவு படிக்க, ருத்ரஜித்தோடு அவனை ஒப்பிட்டு குற்றம் பார்ப்பதே வேலையாகி போனது இந்திரனுக்கு. அதுவே நாளடைவில் ருத்ராவின மீது விஷ்வஜித்திற்கு வெறுப்பை உண்டாக்கியது.
ருத்ரஜித்தை தலைமேல் சுமந்துக் கொண்டு பாசத்தை காட்டும் தன் பெற்றோரை விட்டும், வீட்டைவிட்டும் தனது கல்லூரிப்படிப்பிற்காக வெளியூர் சென்ற விஷ்வா, படிப்பு முடிந்த பிறகும்கூட வீட்டிற்கு வருவதை தவிர்த்திருந்தான்.
எப்போது வந்தாலும் தந்தையின் வசைப்பாடு கேட்டு கேட்டு சலித்தே போய்விட்டான் அவன். அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் பெரியம்மா ஆதிமந்திரை மட்டுமே. ஏனோ அவர் மட்டுமே அவனை சரியாக புரிந்துக்கொண்டு அவனது தேவைகளை கவனித்தார்.
ஆனாலும் விதி அவரது வாழ்விலும் விளையாடிவிட, மொத்தகுடும்பமும் துயரத்திலிருந்தது. அதன்பின்னர் அந்த வீட்டிற்கு வருவதை முற்றிலும் தவிர்த்து விட்டான் அவன். மயங்கிக்கிடந்த விஷ்வஜித்தினை கண்டு கடந்தகால நினைவுகளை நினைத்தவனுக்கு இன்றும் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.
“இப்போகூட என் வழியில குறுக்க வந்து பல்பு வாங்குறியேடா அஜ்ஜூ.” என்று அவனை செல்லமாக வீட்டில் அழைக்கும் பெயரைக் கொண்டு கூறினான்.
மூன்று மணி நேர பயண முடிவில் அவன் வீட்டை அடைந்திருக்க, அருகே கிடக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்தவன் விஷ்வஜித்தின் முகத்தின் மீதே ஊற்றியிருந்தான். மொத்த தண்ணீரும் முகத்தில் பட்ட நொடி, தன் கண்களை சுருக்கியபடி எழுந்த விஷ்வாவோ, ருத்ராவைக் கண்டு சற்று அதிர்ச்சி அடைந்தான்.
அந்த அதிர்ச்சியோடு அவனது முகமும் கோபத்தில் சிவக்க, அவனை அனல் பார்வை பார்த்தான்.
“இது எல்லாம் உன் வேலையாடா ருத்ரா?” என்றான் கோபத்தோடு.
“அண்ணன்கிற மரியாதை கொஞ்சமாவது இருக்கா உனக்கு?”
“அது எப்போதும் உன் மேல எனக்கு வராதுடா. ஒருநிமிசம் எனக்கு முன்னாடி பொறந்துட்டனு திமிருல தான ஆடுற.” என்றவனது முகமோ கடுமையை தத்தெடுத்திருந்தது.
“ஹாஹா. அந்த ஒரு நிமிசம் உனக்கு முன்னாடி பிறந்தவன் தான் உன்னை காப்பாற்றியிருக்கேன். எதுக்குடா இந்த வேண்டாத பொழப்பு உனக்கு. ராஜா மாதிரி இருக்க வேண்டியவன், ரிப்போர்ட்டரா எதுக்கு நீ கஷ்டப்படனும்? இதுல உன்னை கடத்த நாலு ரவுடிங்க வேற.”
“எனக்கு நான் நியாயமா இருக்கேன். அந்த திருப்தி போதும். என் விசயத்துல நீ தலையிடாத”
“பார்ரா. சின்ன திருத்தம் நீதான் என் விசயத்துல மூக்கை நுழைக்குற? பட் இருந்தாலும் இதுகூட நல்லாருக்குடா. மகாபாரதத்துலயே அண்ணன் தம்பிங்களுக்குள்ள தான சண்டை வரும்.”
“இதிகாசம் பேசுற அளவுக்கு வளர்ந்துட்டியே. பரவாயில்லை கெட்டது பண்ண துரியோதனின் நிலை கடைசியில என்ன ஆச்சுனு தெரியும்ல?”
“ஹாஹா. நான் துரியோதனனாகவே இருந்துட்டு போறேன். அதுல எனக்கு எந்த கவலையும் இல்லை. அப்புறம் இது ருத்ரஜித்தோட ராஜ்ஜியம். இங்க நான் மனசு வைக்காமல் எதுவும் நடக்காது.” என்று கண்களை சிமிட்ட,
“அதையும் பார்க்கலாம்டா.” என்று கூறிய விஷ்வா, காரின் கதவை திறந்து வெளியேற, செல்லும் அவனைக் கண்டு இதழ் வளைத்து சிரித்தான் ருத்ரஜித்.
‘பெரிய அர்ஜூனன் இவரு. அர்ஜூனனுக்கு கூட நாலு மனைவியாமே. ஆனால் துரியோதனுக்கு ஒரே மனைவி தான். கெட்டவனை கெட்டவனா பார்க்காமல் அவனுக்குள்ள இருக்க நல்லதையும் தான் கொஞ்சம் பாருங்கடா.’ என்று மனதிற்குள் நினைத்தபடி காரிலிருந்து இறங்கினான் ருத்ரஜித்.
இறங்கிய விஷ்வா, தான் எங்கு இருக்கிறோம் என்பதைக் கண்டு தன் தலையில் அடித்துக்கொண்டவன், “ச்சே” என்று கூறவும், வீட்டிலிருந்து அவனின் அன்னை வைஜெயந்தி வெளியே வரவும் சரியாகியிருக்க, மகனைக் கண்ட சந்தோசத்தில் வரவேற்றார் வைஜெயந்தி.
“அஜ்ஜூ வாடா. இப்போதான் அம்மா நினைப்பு வருதா உனக்கு? ஆனந்தகண்ணீர் ஊற்றெடுக்க, தன் மகனை அணைத்துக் கொண்டார்.
“சாரிம்மா.” என்று கூறியவன் மேற்கொண்டு எதையும் பேசவில்லை. அவனது கண்களோ, காரிலிருந்து இறங்கிய ருத்ரஜித்தை முறைத்துப் பார்த்தது.
“சித்திமா இந்த ஆரத்தி தட்டு ரெடியா வெச்சுக்க சொன்னேன்னே. எங்க காணோம்?” என்று ருத்ரஜித் நினைவூட்ட,
“ரெடியா இருக்குடா ருத்ரா. நீ எனக்கு கொடுத்த வாக்கை காப்பாத்திட்ட. என் பையனை திரும்பவும் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துட்ட ருத்ரா.” என்று தன்வயிற்றில் பிறக்காத மகனது கன்னத்தை ஆதரவாக பற்றிக் கொண்டார்.
விஸ்வஜித்தின் விழிகள் ருத்ரஜித்தை கேள்வியாக பார்க்க, ‘எல்லாம் என் செயல்.’ என்று கண்களாலே பதிலுரைத்தான் ஆடவன்.
அதன்பின் வைஜெயந்தி ஆரத்தி எடுத்தபடி, தன் மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க,
“நில்லு” என்ற இந்திரனின் குரல் அவனை உள்ளே செல்லவிடாமல் தடுத்தது.
“எங்கடா வந்த? இப்போ மட்டும் ஏன் வந்த? இப்போதான் எங்களை கண்ணுக்கு தெரிஞ்சுதா?” என்று கோபத்தோடு கத்தியதில், விஷ்வஜித்தோ, ‘இதுக்கு எல்லாம் காரணம் நீதான்டா.’ என்பது போல் ருத்ரஜித்தை முறைத்தான்.
“சொல்லுடா… இப்போ தான் நாங்க தெரியுறோமா?” என்று கத்தினார்.
“சித்து விடுங்க.” என்று ருத்ரஜித் அவரை சாமாதானம் செய்ய முயற்சித்தான்.
“இல்லை ருத்ரா. இப்ப மட்டும் இவன் எதுக்கு வரணும். இவன் பொறுப்பா வளரணும்னு தான ஆசைப்பட்டேன். அப்பாவா கண்டிக்கக்கூட எனக்கு உரிமை இல்லையா?” என்று துக்கம் அவரது தொண்டையை அடைத்தது.
தன் தந்தையை சமாதானம் செய்ய அவன் எதுக்கு செல்ல வேண்டும்? என்று நினைத்த விஷ்வஜித், அவனது கைகளை நாசுக்காக நகர்த்திவிட்டு தன் தந்தையின் கரத்தை பற்றியவன், “சாரிப்பா. இந்த முறை என்னை நம்புங்க. இனி யாருக்காவும் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன்.” என்று ஓரக்கண்ணால் ருத்ரஜித்தை பார்த்தபடிக் கூறினான்.
“போதும்பா. ஒவ்வொரு முறையும் உன்னை நம்பி ஏமாந்தது போதும். ருத்ராக்கு சப்போர்டா நம்ம நிர்வாகத்தை வழிநடத்துவனு நம்புனேன். ஆனால் நீ படிப்பு முடிஞ்சதும், எங்கயோ போயிட்ட.” என்றார் விரக்தியாக.
“இந்த ஒரு முறை என்னை நம்புங்கப்பா. நான் கோபத்துல சில விசயங்களை யோசிக்காமல் பண்ணிட்டேன் தான். ஆனால் இப்போ உங்க நம்பிக்கையை காப்பாற்றுவேன்.”
“நிஜமாவாடா. இல்லை இவன்கிடக்குறானு போயிடுவியா?”
“சத்தியமாப்பா.” என்று அவரின் கண்களைப் பார்த்து அவன் கூறியநொடி. ஏழு வருட மகனை பிரிந்து வாழ்ந்த இந்திரனின் மனம் சற்று இழகி போயிருக்க, அவனை வாரி அணைத்துக் கொண்டார்.
தந்தையின் உண்மையான பாசத்தை காலதாமதமாக புரிந்துக் கொண்டாலும் அவரின் அன்புக்காக ஏங்கிய இதயத்துக்கு ஆறுதலாக இருந்தது அவரது அணைப்பு. வைஜெயந்தி கண்களில் ஆனந்த கண்ணீரே நிரம்பியது.
“அஜ்ஜூ ரொம்ப சந்தோசமா இருக்குடா. சித்து இன்னொரு சர்பிரைஸ் இருக்கே அது சொல்லுங்க?” என்றான் ருத்ரஜித் ஆவலோடு.
இவனது ஆர்வமே எதோ சரியில்லை என்பதை விஷ்வாவிற்கு உணர்த்த, தன் தந்தையை கேள்வியாக பார்த்தான்.
“அதை மறந்துட்டேன் பாரு. நம்ம ஆதிமந்திரா காஸ்மாட்டிக்ஸ் அண்டு ஹெர்பெல் பேக்டரியோட சி.இ.ஓ நீதான்டா. ருத்ரஜித் எப்போவோ அந்த கம்பெனி ஷேர்ஸ் உன் நேம்ல மாத்திட்டான். நீதான் அதை நிர்வகிக்கப்போற. வேர்ல்ட் லெவல்ல நடக்குற கான்ப்ரென்ஸ்க்கு நீதான் போகப் போற.” என்று பெருமிதம் பொங்க கூறினார்.
ஆதிமந்திரா குரூப் ஆஃப் கம்பெனியில் ஒரு அங்கம் தான் காஸ்மாடிக்ஸ். இதை தவிர்த்து ஹெல்த் டிரிங்ஸ், இயற்கை உரம், இரும்பு எஃகு தொழிற்சாலை என பல்வேறுபட்ட நிறுவனங்களைக் கொண்ட குழுதான் ஆதிமந்திரா குரூப் ஆஃப் கம்பெனிஸ்.
அதில் உள்ள மிகப்பெரிய நிறுவனமான காஸ்மாடிக்ஸை தன்னிடம் இந்நேரத்தில் இவன் ஒப்படைக்கிறான் என்றால் அதன்பின்னே மறைந்திருந்த சூழ்ச்சி அவனை வெகுவாக இடித்தது.
அவனாக தந்திருந்தால் நிச்சயம் மறுத்திருப்பான், ஆனால் தந்தையின் மூலம் அவன் கொடுத்ததை மறுத்தால், மேலும் தன்னை அவர் வெறுக்க நேரிடும். தன் தமயனின் சூழ்ச்சிகளை வெளி உலகிற்கு நிரூபிக்க, தான் அவ்வீட்டில் இருந்தாக வேண்டும் என்ற நிலை அவனை யோசிக்க வைத்தது.
ருத்ரஜித்தோ ஆணவம் கலந்தப் பார்வை பார்த்தான். “உனக்கு வேற ஆஃப்சனே இல்லை சி.இ.ஓ.” என்று அவனை அணைத்தபடி காதில் உரைத்தான்.
பதிலுக்கு மெல்லிய புன்னகையை உதிர்த்தவன், “இதையே எனக்கு சாதகமா மாத்திக் காட்டுறேன்.” என்றான் அவனது காதுக்குள்.
“பார்க்கலாம்.” என்று கூறிக்கொண்டே ருத்ரஜித் அவனிடமிருந்துப் பிரிய, விஷ்வஜித்தோ, “சரிங்கப்பா. நான் இந்த பொறுப்பை ஏத்துக்குறேன்.” என்றான் புன்னகையோடு.
அவனது சொல்லில் இந்திரன் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. “ஜெயந்தி ஸ்வீட் கொண்டுவாமா.” என்று புன்னகையோடு சொன்னவர், அடுத்தநொடியே தன் மகனிடம் திரும்பி, “விஷ்வா. வீட்டுக்கு வந்ததும் வராததுமா நாளைக்கே உன்னை கான்ஃபெரன்ஸ்க்கு சிக்காக்கோ அனுப்பப் போறேன்டா. ஒண்ணும் பிரச்சினை இல்லை. உன்கூட வைகையையும் அழைச்சுட்டு போ. முப்பது நாள் நடக்கயிருக்க இந்த கான்ஃபெரன்ஸ் கண்டிப்பா உனக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும்.” என்று சத்தமின்றி குண்டை தூக்கிப் போட, அதை எதிர்பாராதவனோ அதிர்ந்து போய் ருத்ரனை பார்த்தான்.
‘இது எல்லாம் உன் வேலை தானா?’ என்பது போல் பார்த்தது அவனின் கண்கள்.
‘அதுநானே…’ என்று கண்களை சிமிட்டினான் ருத்ரஜித்.
“ஓகே சித்து. அவன் ஃபிரஸ் ஆகட்டும்.” என்று விஷ்வஜித்தை கையோடு அழைத்துக்கொண்டு சென்றான் ருத்ரஜித்.
“எப்படிடா நம்ம பிளான்?”
“சகிக்கலை. எதுக்கு என்னை அவசரமா இந்தியால இருந்து துரத்தி விட பார்க்குற?”
“ச்சேச்சே உனக்கு ட்ரைனிங் கொடுக்கத்தான். அதுமட்டுமில்ல இனி நீ லியா லியானு நான் கட்டிக்கப் போற பொண்ணு பின்னாடி சுத்தக்கூடாது இல்லையா?” என்றவன் கூறியநொடி அவனது முகத்தில் சிறு அதிர்ச்சி எட்டிப் பார்த்தது.
“ஹாஹா ஷாக்கை குறை. என்னை சுத்தி மட்டுமில்ல, என்ன சுத்தி இருக்கவங்களுக்கு நடக்குறதுகூட எனக்கு தெரியும். தம்பிங்குறதுனால இதோட விடுறேன்.” என்று உறுத்து விழித்தவன் அவனது அறையிலிருந்து செல்ல,
“ச்சே” என்று அந்த அறையிலிருந்த தலையணையை விஷ்வஜித் தூக்கி எறிய, அவனது அறையைக்கடந்து சென்ற சாலா மீதே விழுந்தது.
தன் மேல் விழுந்த தலையணையைக் கண்டு பதறியவள் கத்த, விஷ்வாவோ அவளை முறைத்தப்படி, “எதுக்கு கத்துற?” என்றான் கர்ஜனையாக.
“ஒன்னுமில்லை.” என்றவளோ அவனை திரும்பி பார்த்துக்கொண்டே அங்கிருந்து சென்றாள்.
அதன்பின் நாட்கள் மெல்ல உருண்டோட, பிரகல்யாவின் வாழ்க்கையையே புரட்டிப்போடவிருந்த ருத்ரஜித் மற்றும் பிரகல்யாவின் திருமணநாளும் வந்தது.…
மென்மையானவளின் காதல்
கனவை, கானல் நீராய்
மாற்றவிருக்கும் தருணம்
இதுவோ….!
நம்பியவன் வதைக்க போகும்
நொடிதணில் மீட்பவன்
பறந்துபோக,
காரிகையின் நிலைதான்
என்னவோ….!
