8.வல்லினம்
ருத்ரஜித் வெட்ஸ் பிரகல்யா என்னும் பிரம்மாண்டமான பூக்கள் கொண்டு செய்த பெயர் பலகை திருமண மண்டபத்தின் முன் அழகாய் காட்சியளிக்க, வரவேற்பறையில் நின்றபடி அனைவரையும் பன்னீர் தெளித்து வரவேற்றனர் சத்யராஜ் மற்றும் சரஸ்வதி தம்பதியினர். தன் செல்ல மகளது திருமணவிழா என்பதால் இருவரது முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி. திருமணத்திற்கான ஒவ்வொரு ஏற்பாட்டையும் உடனிருந்து கவனித்தே செய்திருந்தார் சத்யராஜ்.
சற்று நேரத்தில் நிச்சயதார்த்தமும், மறுநாள் திருமணமும் நடக்கவிருந்ததால் மண்டபமே பரபரப்பாக காட்சியளித்தது. மாப்பிள்ளையை வரவேற்பதற்காக பெண்வீட்டார் அனைவரும் ஆவலோடு காத்திருக்க, மேளதாளம் முழங்க, உற்றார் உறவினர்கள் புடைசூழ
காரிலிருந்து மண்டபத்திற்கு வந்திறங்கினான் ருத்ரஜித்.
என்றும் அவனது கன்னங்களில் உறவாடிக் கொண்டிருந்த அடர்ந்த தாடியினை நீக்கியவன், தனது அக்மார்க் புன்னகையை உதிர்க்க, அவன் அணிந்திருந்த அடர் மெரூன் நிற சர்வாணியும், அதன்மேல் சட்டையாக சந்தனநிற கோட்டும் அவனை மேலும் வசீகரித்துக் காட்டியது. அவனோடு வைஜெயந்தியும் இந்திரனும் பெற்றோர் ஸ்தானத்தில் வந்து இறங்க, மேளதாளம் முழங்க பெண்வீட்டார் அவர்களை வரவேற்றனர்.
ஏற்கனவே தயார் நிலையிலிருக்கும், ஆரத்தி தட்டினை கையில் ஏந்திக் கொண்டு முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன், அவள் அக்கா எடுத்துக்கொடுத்த ராமர்பச்சை நிற வேலைப்பாடுகள் மிக்க தாவணியில், ருத்ரஜித்தின் முன்புவந்து நின்றாள் அபூர்வா.
குறைந்த ஒப்பணை அலங்காரத்தில் தேவதைப்போல மிளிர்ந்தவளை ரசித்த ருத்ரஜித்தின் கண்கள், பெண்ணவளின் இதழ்கடையோரம் விழும் சிறுகுழியினை விட்டு அகலாமல் இருக்க, அந்தநொடி தன் எண்ணத்தை நினைத்து அவன்மீதே அவனுக்கு கோபம் துளிர்த்தது. அக்கோபத்தை தனக்கு தடையாக மாறிப்போன பிரகல்யாவின் மீது திசைத் திருப்பியவனது முகம் நொடியில் கடுமையைத் தத்தெடுத்திருந்தது.
“வாங்க மாமா.” என்று புன்னகை மாறாது அழைத்த அபூர்வாவின் மென்மையான குரலில், தீயில் உருகும் வெண்பனிபோல் ஆடவனின் கோபமுகமும் நொடியில் கரைந்துருகிப் போனது.
அபூர்வாவோ, அவனைக் கண்டு புன்னகை மாறாது ஆரத்தித் தட்டை வலயிடமாக பின் இடவலமாக மூன்று முறை சுற்றியவள், “மாமா ஃபல்கா எதாவது தட்டுல போடுங்க.” என்றாள் ஆர்வமாக. பதிலுக்கு அழுத்தமாக புன்னகைத்தவனோ, தனது வாலெட்டை தேட, அதுவோ, அவனது காருக்குள் இருந்தது.
அபூர்வாவோ அவனின் முகமாற்றத்தை புரிந்தவளாக “கூகுள் பேவோ, இல்லை போன்பேவோ எது பண்ணாலும் டபுள் ஓகே மாமா.” என்று கண் சிமிட்டிக் கொண்டே கூறியதில் அங்கிருந்த அனைவரும் சிரித்தே விட்டனர்.
வைஜெயந்தியோ இந்திரனை பார்த்து, “ஏங்க ருத்ரா கையில பணம் கொடுங்க.” என்றார். இந்திரனும் பணத்தை எடுக்கப்போக, அவரிடம் திரும்பிய ருத்ரஜித்தோ மறுப்பாய் வேண்டாமென்று தலையசைத்தான்.
நொடியில் தனது சுண்டு விரலில் மாட்டியிருந்த அவனது மிகமுக்கியமான மோதிரம் ஒன்றை கழட்டி எடுத்தவனோ, ஆரத்தி தட்டில் போடாது பெண்ணவளின் கைகளை பற்றி, உள்ளங்கையில் வைக்க, அபூர்வாவோ அவனது அதிரடி செயலில் விழிகளை விரித்தவள் அதை ஏற்பதா? வேண்டாமா? என்று குழம்பிப்போய் பார்த்தாள்.
அங்கிருந்த மற்ற உறவுகள், மாப்பிள்ளையின் தாராள மனசை புகழ்ந்து பேச, வைஜெயந்தியும் இந்திரனுமே ஒருநிமிடம் திகைத்துப்போய் பார்த்தனர். அவர்களுக்கு தெரியும் அல்லவா? அந்த மோதிரத்தை இதுவரை அவன் கழற்றியதே இல்லை என்று.
ருத்ரஜித்தோ எதை பற்றியும் கவலைக் கொள்ளாமல், “விலைமதிப்பில்லா இந்த மோதிரத்தை பத்திரமா வெச்சுக்கோ.” என்றான் புன்னகை மாறாமல்.
அடுத்த நிமிடமே தன் தந்தையை திரும்பியவள் பார்க்க, அவரும் அன்பாக கொடுத்ததை பெற்றுக் கொள்ளும்படி தலையை அசைத்ததும்தான் மோதிரத்தை தனது விரலில் போட்டுக் கொண்டாள் அபூர்வா.
‘ இங்க நான் வந்ததுக்கான சரியான அர்த்தம் உன் கைவிரல்கள்ல தெரியுது அபூ பேபி.’ என்று நினைத்தவனோ அம்மகிழ்ச்சி மாறாது மண்டபத்திற்குள் தன் காலடியை மிக அழுத்தமாய் பதித்திருந்தான்.
பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வீற்றிருக்கப்பட்ட பிரேத்யேக இருக்கையை நோக்கி அவன் நடந்து செல்ல, அவன்முன் மலர்தூவியபடி நடனகுழுவை சேர்ந்தவர்கள் நடனம்புரிந்துக் கொண்டே அவனை வரவேற்க, கண்கள் கர்வம் பொங்க நடந்தவன், தனக்கே உரிய தோரணையில் மிடுக்காய், அங்கிருந்த பிரேத்யேக இருக்கையின் மீதே அமர்ந்துக் கொண்டான்.
அதேசமயம் மணமகளது அறையில், கண்ணாடி முன்பு அமர்ந்திருந்தாள் பிரகல்யா. கழுத்திலிருக்கும் குந்தன் நகைகளை சரியாக பொருத்திக் கொண்டிருக்க,
“பாப்பா.” என்று அழைத்துக்கொண்டே பிரகல்யாவின் அறைக்கு வந்தார் ரமேஷ்.
“ரமேஷ் அண்ணா வாங்க.” என்று புன்னகையோடு அவள் பேச, ராணிப்போல் அலங்கரிக்கப்பட்ட தனது டாக்டர் அம்மாவினை பூரிப்புடன் பார்த்தது அவரின் கண்கள்.
“மாப்பிள்ளை ரொம்ப அழகா இருக்காரு பாப்பா. நீங்க இரண்டு பேருமே ரொம்ப சந்தோஷமா இருக்கணும்.” என்று மனதாரக் கூறிக்கொண்டே தனது மகளை அவள் முன் அழைத்து வந்தவரோ,
“குட்டிமா அக்காக்கு மோதிரம் போட்டு விடுடா.” என்று உரைக்க,
“இது எல்லாம் எதுக்கு ரமேஷ் அண்ணா.” என்றாள் பிரகல்யா மறுப்பாக.
“நீயும் என் பொண்ணு தான் பாப்பா. அன்பா கொடுக்குறதை மறுக்காமல் வாங்கிக்கோ பாப்பா.” என்று புன்னகையோடு அவர் கூறியதும் மறுக்க இயலாது பெற்றுக் கொண்டவள், தனது பிரேஸ்லெட்டைக் கழற்றி சிறுமியின் கைகளில் போட்டுவிட்டாள்.
“என்ன பாப்பா இது எல்லாம்?” என்றவர் பதற, “அன்பா கொடுக்குறதை மறுக்க கூடாது ரமேஷ் அண்ணா.” என்று அவர் வாயை அடைத்த பிரகல்யாவை பெருமிதம் பொங்க பார்த்தார் ரமேஷ்.
பின் மணப்பெண்ணை அழைத்து செல்வதற்காக அவளது தோழிகள் வர, ரமேஷிடம் விடைபெற்றவள், மஞ்சள் மற்றும் இளம் ரோஜா வர்ண லெகாங்காவில் தோழியர் புடைசூழ மேடையை நோக்கி முகம் மலர்ந்தபடி நடந்துச் சென்றாள்.
அவளையே அழுத்தமாய் ருத்ரஜித் பார்க்க, தன்னவனின் பார்வையில் நாணத்தினால் சிவந்தவளோ, அவனைக் கண்டு மெலிதாக புன்னகைக்க, அவனும் பதிலுக்கு புன்னகைத்தான்.
அந்த புன்னகைக்கு பின்னே மறைந்திருக்கும் ராட்சசனை அவள் உணராது போனது தான் அவளின் பிழையோ? பல்வேறு ஆசைகளை சுமந்தபடி அவனது அருகே வந்து நின்றவள் அங்கிருந்த உறவினர்களைப் பார்த்து, மரியாதை நிமித்தமாக இளநகையோடு வணக்கம் புரிந்தாள்.
‘எவ்ளோ சிரிக்கணுமோ சிரிடி. இன்னும் கொஞ்ச நேரத்தில நீயே நினைச்சாலும் உன்னால சிரிக்க முடியாது.’ என்று ஏளனமாய் பெண்ணவளைப் பார்த்தது ஆணவனின் கண்கள்.
அதன்பின்னர் நிச்சயதார்த்த தட்டுக்களை இருவீட்டினரும் மாற்றிக்கொள்ள, பிரகல்யாவை புடவை மாற்றுவதற்காக அறைநோக்கி அழைத்துச் சென்றாள் அபூர்வா.
****
நான்கு சுவற்றிற்குள்ளே வீற்றிருந்த விஷ்வஜித்தின் மனம் ஒரு நிலையிலேயே இல்லை. இன்று காலையிலேயே சிகாகோவிலிருந்து வைகைச்செல்வனை அழைத்துக் கொண்டு இந்தியா வந்திருந்தவனுக்கு அடுத்தடுத்து வேலைகள் நிறையவே இருந்தது.
அந்த வேலையின் முதல்கட்டமாக தனது கைபேசியை உயிர்ப்பித்தபடி தீவிரமான விசயத்தை பேசத் தொடங்கியிருந்தான்.
“கல்யாண பொண்ணை இன்னைக்கு நைட்டே தூக்கிடுங்க. ஆனால் சின்ன கீறல்கூட அவ மேல விழக்கூடாது.” என்று கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவனின் மனமோ எப்பாடுப்பட்டாவது பிரகல்யாவை மீட்க வேண்டும் என்றே நினைத்தது.
“சரிங்க சார். பெரிய இடத்து கல்யாணம் வேற, ரிஸ்க் அதிகம். பேமெண்ட் பார்த்து பண்ணுங்க.” என்றான் மறுமுனையில் இருந்தவன்.
“நீ காரியத்தை சரியா பண்ணு. நீ கேட்டதை விடவும் அதிகமா கொடுக்குறேன்.” என்றவனோ அவனது திட்டத்தைக் கூறியபடி போனை அணைக்க, விஷ்வாவினை உணவுண்ண அழைப்பதற்காக வந்த வைகைசெல்வனோ அனைத்தையும் கேட்டுவிட்டான்.
“அஜ்ஜூ அண்ணா. யாரை கடத்த போறீங்க? இதுக்காகத்தான் அவசரமா நம்ம இந்தியா வந்தோமா?” என்றான் அதிர்ச்சியாக.
“டேய் இது வேற விசயம்டா. என் பிரெண்டோட லவ்வரோட கல்யாணம். பொண்ணை தூக்கிட்டு நாளைக்கு என் பிரண்டுக்கு கல்யாண பண்ணி வைக்கப்போறோம்.”
“ஓ… ஓகே. ஆனால் ஏன் நம்ம இந்தியா வந்த விசயத்தை பாஸ்கிட்ட சொல்லலை.” என்றவனின் மனதிலோ அந்த உறுத்தல் இருந்துக்கொண்டே இருந்தது.
“என் விசயத்துல ருத்ரா தலையிடுறதை நான் விரும்பலை. நீ போய் தூங்குடா. நாளைக்கு நம்ம ருத்ராவோட கல்யாணத்துக்கு போகணும்.” என்று ஒருவாறு சமாளித்தவன், வைகையை அனுப்பியிருந்தான்.
“லியா உன்னை காப்பாற்ற எனக்கு வேற வழி தெரியலை. என்னால நீ கஷ்டப்படுறதை பார்க்க முடியாது. உன்னை ருத்ராகிட்டயிருந்து நான் மீட்கணும்.” என்றவனின் மனதில் முழுவதுமாக நிரம்பியிருந்தாள் பிரகல்யா.
ஆனால் அவன் அறியாதது ஒன்றுமில்லை. அவ்வளவு எளிதாக அவளை விட்டுவிடுவானா ருத்ரஜித்? விஷ்வஜித் இங்கு வேறு ஒரு திட்டம் தீட்ட, அங்கு ருத்ரஜித்தோ அவனுக்கு முன்பே தனது திட்டத்தை செயல்படுத்தக் காத்திருந்தான்.
***
மண்டபத்தில் ஐயர் பத்திரிக்கை வாசிக்க, நிச்சயதார்த்தப் புடவையை மாற்றிக்கொண்டு பிரகல்யாவும், பெண்வீட்டு சார்பாக எடுத்துக்கொடுத்த பட்டு வேஸ்டி சட்டையை அணிந்துக் கொண்டு ருத்ரஜித்தும் எதிரெதிரே அமர்ந்துக் கொண்டனர்.
அதன்பின்னர் மணமகளுக்கு நலங்கு வைக்கும் சம்பிரதாயம் நடந்தது. சந்தனத்தை குழைத்து பெண்ணவளின் கன்னங்களில் தடவியிருக்க, அழகோவியம் போல் மிளிர்ந்தாள் பாவையவள். அபூர்வாவும் தன் பங்கிற்கு தன் அக்காவின் கன்னங்களில் சந்தனத்தை கொண்டு நிரப்பியிருந்தாள்.
அதன்பின்னர் பிரகல்யாவும் ருத்ரஜித்தும் மோதிரத்தை மாற்றிக் கொள்வதற்காக எழுந்து நின்றனர். ருத்ரஜித்தின் கைகள் பிரகல்யாவின் கைகளை பற்றியிருந்த அபூர்வாவின் கைகளை உரசிக்கொண்டே, பிரகல்யாவின் கையில் மோதிரத்தை மாட்டியிருக்க, அவனது கண்களோ அபூர்வாவின் விரலில் இருந்த தன் மோதிரத்தை கண்டு புன்னகைத்துக் கொண்டது.
பிரகல்யாவும் புன்னகையோடு ருத்ரஜித்தின் விரல்களில் மோதிரத்தை மாட்டிவிட்டவளோ அவனை முழுவதுமாக நம்பினாள்.
அபூர்வாவோ, “பார்ரா.. என்னக்கா ஒரே சைட்டிங் தான் போல.” என்று கண்சிமிட்டியபடி இருவருக்குமே “கன்கிராட்ஸ் அக்கா மாமா.” என்று புன்னகை முகம் மாறாது கூறியவள் கனவிலும் அறியவில்லை, இந்த மகிழ்ச்சியான நிலை நாளை இருக்காது என்பதை.
பின் உறவுகள் அனைவரும் இருவரையும் வாழ்த்தி விடைபெற, இரவு உணவினை உண்டுவிட்டு அனைவரும் அவரவர் அறை நோக்கி உறங்குவதற்காக சென்றனர். விடிந்தால் கல்யாணம் என்பதால், படுத்த உடனே அனைவரும் அயர்ந்து தூங்கத் தொடங்கியிருந்தனர்.
மணப்பெண்ணின் அறையில் அமர்ந்திருந்த பிரகல்யாவோ, அங்கிருந்த கண்ணாடியின் முன் அமர்ந்துக்கொண்டே தனது ஒவ்வொரு நகைகளையும் கழற்றி வைத்துக் கொண்டிருக்க, அவ்விடம் வந்தாள் அபூர்வா.
“அடடா… என் கண்ணே பட்டிடும் போலயே. பிரக்ஸ் அசத்துற?” என்றுக் கூறிக்கொண்டே வந்த அபூர்வாவோ தன் தமக்கை பிரகல்யாவின் தோள்பட்டையை தன் இருகைகளால் வளைத்து பிடித்துக் கொண்டபடி சிரித்தாள்.
அபூர்வா சொன்னதை போல் பச்சை நிற பட்டில் தேவதைப் போல் ஜொலித்திருந்தாள் பிரகல்யா. மூக்கில் இருக்கும் வைரமூக்குத்தி மேலும் அவள் முகத்திற்கு அழகு சேர்க்க, அவளது கன்னத்தில் பூசப்பட்டிருந்த சந்தனம் மேலும் அழகாய் காட்டியது. தன் தங்கையின் கூற்றில் இதழ்பிரித்து வெட்கத்தில் சிரித்தாள் பிரகல்யா.
“தூங்க போற நேரத்துல தான் அக்கா கண்ணுக்கு தெரியிறேனா உனக்கு?”
“அக்கா நீயே பார்த்தியே. ஸ்சப்பா எத்தனை வேலை. டாடியும் மம்மியும் என்னை ஒரு வழி பண்ணிட்டாங்க. மணப்பெண்ணா இருந்தால் எவ்வளவு ஜாலியா இருக்கலாம். ஒரு வேலையும் செய்ய வேண்டியது இல்லை.”என்ற அபூர்வாவோ ஏக்கப் பெருமூச்சொன்றை விடுத்தாள்.
என்னடி… பெருமூச்சு எல்லாம் பலமா இருக்கு?”
“அதுவா அக்கா… என் கல்யாணத்தை பத்தி நினைச்சு பார்த்தேன். அதான் எப்போ வரும்னு, இப்போ ரொம்ப ஏக்கமா இருக்கு.” என்றவளைக் கண்டு இளநகை புரிந்தவள்,
“அதுக்கு இன்னும் குறைஞ்சது இரண்டு வருசமாவது ஆகும். இன்னும் காலேஜ் கூட முடிக்கலை, அதுகுள்ள கல்யாணத்தை பத்தி பேசுறியா நீ?”
“ப்ச்… அது இல்லைகா. உனக்கு நார்மல் அரெஞ்சுடு மேரேஜ்கா. ஆனால் எனக்கு அப்படி கிடையாது. சும்மா ஆன்ட்டி ஹீரோ ஸ்டையில்ல மேரெஜ் நடக்கணும்.” என்று கண்களை விரித்தவள், தனது முப்பத்திரண்டு பல்லையும் காட்ட, அவளை புரியாத பார்வை பார்த்தாள் அவளின் தமக்கை.
“என்ன பேச்சு அபூமா. கதைகள் வேற. நிஜம் வேற.” என்ற பிரகல்யாவின் பார்வையில் தன் தங்கையைப் பற்றிய கவலை அப்பட்டமாக தெரிந்தது.
“போ அக்கா. நார்மலா கல்யாணம் நடக்குறதுல என்ன த்ரில் இருக்கும். கிட்நாப் பண்ணி தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுனாதானே வேற லெவல்ல த்ரில் இருக்கும்.” என்று உற்சாகமாக கூறும் தன் தங்கையின் தலையிலேயே செல்லமாக கொட்டினாள்.
“போடி போய் தூங்குற வழியைப் பாரு. நாளைக்கு சீக்கிரம் எழுந்திரிக்கணும்” என்று அதட்டியவள், பின் நாளை நடக்கவிருக்கும் திருமணத்தை எண்ணிப் பார்த்தாள். நினைக்கும் போதே முகம் சிவந்தது, அது வெட்கத்தாலா? இல்லை தன் கணவனாக வருபவனை நினைக்கும் போதே தோன்றிய கர்வத்தாலா? என்றவள் அறியவில்லை.
அன்று இரவு அனைவரும் உறங்கும் நடுநிசி வேளையில் பிரகல்யாவின் கைபேசி சிணுங்க, அதிலிருந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சி! பயம்! வெட்கம்! என்று பல்வேறுப்பட்ட உணர்ச்சிகள் அவள் முகத்தில் ஒரு சேரத் தோன்ற புன்னகைத்துக் கொண்டாள் பிரகல்யா.
இதுவரை ருத்ரஜித் பிரகல்யா இருவருமே மனம்விட்டு தனியாக பேசியதில்லை. திருமண பேச்சு நடந்த பிறகும் கூட அவனாக அழைத்து அவளிடம் போனில் பேசவும் இல்லை. இவளுக்கும் அவனிடம் பேச நேரம் இல்லாமல் கிளினிக்கே கதியென்று இருந்தாள். தற்போது தனியாக பேச ஆசையாக இருப்பதாக குறுஞ்செய்தியை அனுப்பியிருப்பவனை நினைக்கும்போதே பிரகல்யாவிற்கு சிரிப்புதான் வந்தது.
“சரியான கேடி இவரு. எல்லாரு முன்னாடியும் நம்மகிட்ட பேச அவ்வளவு வெட்கப்படுறாரு. இப்போ பாரு தனியா பேசணும்னு கூப்பிடுறாரு.” என்றவள் தனது வெட்கத்தை மறைக்க வெகுவாக முயற்சித்தவள் தோற்றுப்போக,
கட்டிலிலிருந்து சத்தமின்றி எழுந்தாள்.
அவ்விடம் உறங்கிக் கொண்டிருந்த அபூர்வாவைப் பார்த்து லேசாக புன்னகைத்து, ‘இப்போ மட்டும் உங்க மாமாவை நான் பார்க்கப் போறது தெரிஞ்சா கலாய்ச்சு தள்ளிடுவ நீ. சோ சமத்தா தூங்கு அபூமா.’ என்று தங்கையிடம் மானசீகமாக கூறியவள் சத்தமின்றி மண்டபத்தின் பின்புறம் நோக்கி சென்றிருந்தாள்.
ஆள்நடமாட்டம் அற்ற அவ்விடத்தில் நின்றவளின் தேகத்தில் சில்லென்ற குளிர் காற்று மோத, தனது சேலை முந்தானைக் கொண்டு தனது உடலை மறைத்தவளின் கண்களோ சுற்றும் முற்றும் தன்னவனையே தேடியது.
“என்னதான் தேடுறியா?” என்றவனின் அழைப்பில் உடலில் ஒருவித சிலிர்ப்பு தோன்ற, பட்டென்று அவனை நோக்கி திரும்பியவள் இமைமூடாமல் பார்த்தாள்.
மெல்ல அவளின் அருகே அடியெடுத்து வைத்த ருத்ரஜித்தோ அழுத்தமான பார்வை பார்த்தான். அவனது இதழ்களிலே முறுவல் பூத்திருந்தது. அந்த முறுவலைக் கண்டு தானும் சிரித்தவள் அறியவில்லை அந்த முறுவலின் பின் ஒளிந்திருக்கும் ரகசியத்தை.
அவளின் அருகே நெருங்கியவன் பெண்ணவளின் கண்களையே ஆழமாக பார்க்க, படபடத்த நெஞ்சினை கட்டுப்படுத்த இயலாமல் தவித்தாள் பிரகல்யா.
“பயப்படுறியா?” என்றவனின் கேள்வியில் “இல்லை” என்று மறுப்பாக தலையாட்டியவளோ வெட்கத்தோடு அவனை ஏறிட்டாள்.
“பரவாயில்லையே. இந்த நேரத்துலையும் நான் கூப்பிட்டனு இவ்வளவு தூரம் வந்திருக்க?”
“இதுவரை தனியா நம்ம பேசுனது இல்லை. நீங்க இவ்ளோ ஆர்வமா கூப்பிடும்போது வராமல் எப்படி இருக்க முடியும்?” என்றாள் புன்முறுவலோடு.
“ரொம்ப அழகா சிரிக்குற?” என்றவன் கூறவும் அவள் முகம் வெட்கத்தில் மலர, அதேசமயம் பின்னிருந்து அவளது முகத்தை மயக்கமருந்து நிரம்பிய கைக்குட்டைக் கொண்டு பொத்தினான் முகமூடி அணிந்த ஒருவன்.
இவை அனைத்தும் அவள் சுதாரிக்கும் முன்பே நடந்துவிட, அதிர்ந்தவள் அவனிடமிருந்து திமிறிபடி, “ஏன்?” என்பது போல் தன் முன் நின்ற ருத்ரஜித்தை வலி நிறைந்த பார்வை பார்க்க, தன் கண்களின் அழுத்தத்தைக் கூட்டியிருந்தவன்,
“பயப்படுடி…” என்று ஆக்ரோசமான குரலில் கத்த, மயக்கமருந்து செலுத்திய அந்த முகமூடி அணிந்தவனின் கைகளின் மீதே மயங்கி சரிந்தது பிரகல்யா மட்டும் அல்ல. அவளது திருமண கனவுகளும் தான். அவனை முழுதாக நம்பிய பெண்ணவளின் நம்பிக்கையும் தான்.
மயங்கியவளை காரில் ஏற்றச் சொல்லி தன் பார்வையாலே கட்டளையிட்ட ருத்ரஜித்தின் கண்களில் பழிவெறி மின்ன அவ்விடம் விட்டு நீங்கியவன் மீண்டும் மண்டபத்திற்குள்ளே சென்றிருந்தான்.
பிரகல்யா வெட்ஸ் ருத்ரஜித் என்னும் பெயர்பலகையோ அர்த்தமற்றுபோக, காற்றில் வேகமாக அசைந்தாடிக் கொண்டிருந்தது.
விரலோடு விரல் கோர்த்து
உன்னோடு வலம்வர நினைத்த
என் நேசத்தை,
சில்லுசில்லாய் சிதறச்செய்துவிட்டு,
கருணையேயின்றி என் காதலை வதம் செய்து விட்டாயே
சிதறியது காதல் மட்டுமல்ல
உன் மீது நான் கொண்ட – என்
நம்பிக்கையும் தான்……
