9.வேய்ந்தனனின் வல்லினம்

9. வல்லினம்

மண்டபத்தை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தான் விஷ்வஜித். அவனது குழப்பமும், கடுமையும் தத்தெடுத்திருந்த முகத்தை கண்ட வைகைக்கும் ஏதோ ஒன்று சரியில்லை என்பது மட்டும் உறுதியாகத் தோன்ற, என்னவென்று தெரியாமல் போனதால் குழப்பத்துடனே மகிழுந்தில் அமர்ந்திருந்தான் வைகைச்செல்வன்.

விஷ்வாவிற்கோ குழப்பம் மட்டுமே மிஞ்சியது. அவன் ஹோட்டலிலிருந்து கிளம்பும் முன் அவன் அனுப்பிய ஆட்களை தொடர்பு கொண்டவன், நிலைமையை பற்றி விசாரிக்க அவர்கள் சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான் விஷ்வா. 

கடத்தவந்த திருமணப் பெண்ணை காணவில்லை என்று அவர்கள் கூறியதுதான், அவனது அதிர்ச்சியின் முதல் காரணம். விசயம் அறிந்ததுமே காரை கிளப்பிக்கொண்டு செல்வதற்கு தயாராக, வைகை அவனைக் கண்டுக் கொண்டான். வேறு வழியின்றி அவனையும் தன்னோடு அழைத்தபடி மண்டபத்திற்கு சென்று கொண்டிருக்கிறான் விஷ்வஜித்.

‘லியா..’ என்று அவன் மனதிற்குள் கண்ணீர் வடித்ததை அவன் மட்டுமே அறிவான். அடுத்த அரை மணி நேரத்தில் மண்டபத்தை அடைந்தனர் இருவரும். காரினைவிட்டு இறங்கியதும் அவன் ஓட்டமும் நடையுமாக மண்டபத்திற்குள் சென்றான்.

“இவரு ஏன் இவ்ளோ வேகமா போறாரு. இன்னும் கல்யாணம் நடக்க ஒரு மணி நேரத்துக்கு மேல இருக்கே?” என்று யோசித்த வைகை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை பிரகல்யா கடத்தபட்ட விசயத்தினை.

மண்டபத்திலிருந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி என்பது துளியளவு கூட இல்லை. நாதஸ்வர வாத்தியங்களின் இசைகள் கேட்க வேண்டிய அவ்விடத்தில் சொந்தங்களின் புரணிகள் பரவியபடி இருந்தது. மணமக்கள் வீற்றிருக்க வேண்டிய மேடை கலையிழந்து வெறிச்சோடி இருக்க, பிரகல்யாவின் பெற்றோர் கலங்கிப் போய் நின்றனர்.

“பார்த்து பார்த்து பண்ணது எல்லாமே வீணா போய்டுச்சே. இப்படி சபைக்கு முன்னாடி எங்க பையன் அசிங்கப்பட்டு நிக்குறானே.” என்று தலையில் அடிக்காத குறையாக வைஜெயந்தி அழுதே கரைந்தார்.

“உங்க பொண்ணுக்கு விருப்பம் இல்லைனு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் கூட, இப்படி ஒரு சூழ்நிலையில வந்து நிற்க வேண்டிய அவசியமே இல்லையே?  என்னங்க பதில் சொல்லப் போறீங்க?” என்று ஆதங்கமும் கோபமும் கலந்தபடி மிக நியாயமாகக் கேட்டார் இந்திரன்.

சற்று நேரம் முன்பு வரை தன் மகளுக்காக வாதாடிய சத்யராஜ், சொல்ல வார்த்தைகளற்று கூனி குறுகிப் போய் நின்றார். அவரது நிலைக்கு காரணம் கல்யாண அறையிலிருந்து கிடைக்கப்பட்ட பிரகல்யாவின் கடிதம். ‘தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. எனது கனவுகளை நனவாக்க உங்களை விட்டுப்பிரிகிறேன். என்னை மன்னிச்சிடுங்க டாடி, மம்மி.’ என்று கைப்பட எழுதி வைத்த கடிதமும் அவளது கையெழுத்தும் அவரை நம்ப செய்திருந்தது.

இருந்தும் தன் மகள் அவ்வாறு செய்பவள் அல்லவே என்று உள்ளுக்குள் தோன்றிக் கொண்டே இருக்க, கண்கள் கலங்கிப்போய் நின்றிருந்தார் மனிதர்.

“எங்க பொண்ணு விருப்பம் இல்லாமல் நாங்க இந்த கல்யாணத்தை பண்ணலைங்க. நிச்சயம் எங்க பொண்ணு அப்படி பண்ணிருக்க மாட்டாங்க. இப்போகூட யாருக்காவது ட்ரீட்மெண்ட் கொடுக்க போயிருப்பாங்க. இதோ வந்திடுவா.” என்று பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டே பேசினார் சரஸ்வதி.

“அக்கா அப்படி பண்ண மாட்டா. என் அக்காவை தப்பா பேசாதீங்க.” என்று இதழ்களை மடித்து தேம்பி அழும் அபூர்வாவை பார்க்கும் போதே பாவமாக இருந்தது அங்கிருந்த அனைவருக்கும்.

இங்கு அவரவர் தரப்புக் கூற்றுக்களை பகிர, நடப்பது அனைத்திற்கும் காரணமானவனோ, உணர்ச்சிகள் துடைத்த நிலையில் இறுகிய முகத்துடன் காணப்பட்டான். வந்த உறவுகள் அனைவரும் அவனுக்காக இரக்கப்பட, உள்ளே வந்த விஷ்வஜித்தோ சிலைபோல் நின்றான் என்றால், வைகையோ பேரதிர்ச்சி பொங்க நின்றான்.

‘நேற்று இவன்தானே பெண்ணை கடத்துவது என்று பேசிக்கொண்டிருந்தான்.’ என்ற எண்ணம் விஷ்வஜித்தின் மீது தோன்ற, சந்தேகத்துடன் அருகில் நின்ற விஷ்வாவைப் பார்த்தான் வைகைசெல்வன்.

அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்து பதில் பார்வை பார்த்தான் விஷ்வா. 

“அஜ்ஜூ அண்ணா… நீங்களா?” என்றவன் சந்தேகப்பட்டு கேட்டதும் அவனது கைகளை பற்றி தனியாக வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருந்தான் விஷ்வா.

“டேய் ஏன்டா. நீயே என்னை மாட்டி விட்டிடுவ போலயே. டேய் நிஜமா இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைடா.” என்று சுற்றி தன்னை யாரேனும் பார்க்கிறார்களா? என்று கண்களை நாலாபுறமும் சுழலவிட்டபடி கூறினான்.

“உங்களை நம்பலாமா? ஏன்னா நீங்க தானே நேற்று பொண்ணை கடத்துறதா பேசுனீங்க?” என்று கூறுபவனது வாயை பொத்தியவன்,

“டேய் சத்தமா பேசி என்னை கோர்த்து விட்ராதடா. எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என் டவுட்டே ருத்ரா மேலதான் இருக்கு. லியா அப்படி பண்ற பொண்ணு கிடையாதுடா.” என்று உண்மையாக கவலைப்பட்டது அவன் மனம்.

அவனது கண்களில் தெரியும் உண்மையைக் கண்ட வைகைக்கு ‘இவன் இல்லையோ’ என்ற எண்ணம் மேலோங்க, “நம்புறேன் அஜ்ஜூ அண்ணா. ஆனால் பாஸ் எதுக்கு அவரு வாழ்க்கையே கெடுக்கணும்?” என்றவனது பார்வை மேடையின் அருகே நின்ற ருத்ரஜித்தின் மீது படிந்தது.

“அதுதான்டா எனக்கும் யோசனையா இருக்கு. உங்கிட்ட எதாவது ருத்ரா சொல்லியிருக்கானா? இல்லை அவனோட போக்குல எதாவது மாற்றம் இருக்கா?” 

“அஜ்ஜூ அண்ணா. அவரு அப்படி எதுவும் சொல்லலையே. அவரு அக்கா, தங்கச்சி இரண்டு பேரையும் சைட் அடிச்சுட்டு தானே இருந்தாரு.” என்று வைகை சொன்னதும் தான் தாமதம், விஷ்வாவின் மூளையில் பொறித்தட்ட, 

“அப்போ.” என்றவன் கண்களை தீவிரமாக்கியதும், “அப்போ பாஸ், தங்கச்சியை கல்யாணம் பண்ண பிளான் பண்றாரோ?” என்று வைகையும் கேட்க, 

“எக்ஸாக்ட்லி வைகை. அடுத்து இவ்ளோ ஏற்பாடு பண்ணியாச்சு, பேசாமல் சின்ன பொண்ணை கல்யாணம் பண்ணி வைங்கனு எவனாவது சொல்லுவான். அப்புறம் குடும்ப மானத்தை காப்பாற்றுவதற்காக அந்த பொண்ணை கட்டிக்க சொல்லி அவங்க அப்பா, அம்மா கேட்பாங்க. அந்த பொண்ணு அழுதுட்டே வந்து மணமேடையில உட்காரும். ருத்ரா தாலிகட்டுவான். இதுதான் நடக்கும் நீ வேணா பாரு” என்று விஷ்வஜித் சொல்லி முடிக்க, கேட்ட வைகைக்கோ பக்கென்று ஆனது.

“அப்போ அப்படி மட்டும் நடந்தால் கண்டிப்பா பிரகல்யா மிஸ் ஆனதுல பாஸ்க்கு எதோ லிங்க் இருக்குனு அர்த்தம். வாங்க அஜ்ஜூ அண்ணா என்ன நடக்குதுனு பார்ப்போம்.” என்று வைகை கூறியதும், விஷ்வாவும் நடப்பதை காண்பதற்காக பதட்டம் சிறிதும் குறையாமல், மணமேடையை நோக்கி சென்றான்.

அவர்கள் பேசிவிட்டு வருவதற்குள் அதே பேச்சுக்களும் அழுகைகளும் தொடர்ந்த வண்ணமே இருந்தது.

திருமணத்தை பார்க்க வந்த ரமேஷ் கூட பிரகல்யாவிற்காக பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் அனைவரின் வாதமும் வீணாகிப் போனதுதான் மிச்சம்.

அதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இருந்த பெரியவர்கள், மணமேடையை நோக்கி எழுந்து வந்தனர். “முடிஞ்ச விசயத்தை பேசி ஒண்ணும் பண்றதுக்கு இல்லை. சட்டு புட்டுன்னு ஆகுற வேலை என்னவோ அத பாருங்க.” என்றவர் யோசனை சொல்ல, வைகையோ விஷ்வாவை திரும்பி ஒருமுறை பார்த்தான்.

விஷ்வாவும் கண்களாலே ‘வேடிக்கை மட்டும் பாரு’ என்று கண்ணசைக்க, அவனும் பதிலுக்கு தலையசைத்தவன் அங்கு நின்றிருந்த ருத்ரஜித்தை ஒருமுறை பார்த்தான்.

முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாது, அவமானமும் வருத்தமும் போட்டிப்போட இறுகிய முகத்துடன் நிற்பவனைக் கண்டு, ‘இவரை பார்த்தால் உண்மையா வருத்தப்படுற மாதிரி தான இருக்கு. இவரை நம்பலாமா? வேண்டாமா? நம்புற அளவுக்கு இவரு ஒண்ணும் நல்லவர் இல்லையே? சரி என்ன நடக்குதுனு பார்ப்போம்.’ என்று எண்ணியவன் நடப்பதை கவனிக்கத் தொடங்கியிருந்தான்.

“அதான்னே. நடந்தது நடந்து போச்சு. எப்பா சத்யா. உம்பொண்ணு செஞ்ச தப்பை நீதான்யா சரி பண்ணனும்.” என்று மற்றொரு பெரியவரும் பேச, 

“இவ்ளோ நேரம் இவனுங்க எல்லாம் எங்க இருந்தாங்கனே தெரியலையே. பிரச்சினைனு வந்ததும் பஞ்சாயத்து பண்ண, சரியா ஆஜர் ஆயிடுறாங்க.” என்று விஷ்வாவின் காதோரம் முணுமுணுத்தான் வைகை.

“கொஞ்சம் அமைதியா இருடா.” என்று விஷ்வா சீறவும் தான் அமைதியானான் வைகை.

“என் பொண்ணு சார்பா நான் எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறேன். ஆனால் என் பொண்ணு நிச்சயம் வருவாங்க, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.” என்று கலங்கியபடிக் கூறினார் சத்யராஜ்.

“வரது வராதது வேற விசயம்பா. இத்தனை ஏற்பாடு பண்ணி, கல்யாணம் நடக்காமல் போனால், அது மாப்பிள்ளைக்கு தானே அசிங்கம். எங்க வீட்டு பையன் ஏன் அசிங்கப்பட்டு நிற்கணும். இதுக்கு முடிவு சொல்லுங்க?” என்று மாப்பிள்ளை வீட்டார் சார்பாக பெரியவர் ஒருவர் கேட்க, “அதான்னே” என்று கேள்வி எழுப்பத் தொடங்கியிருந்தனர் அங்கிருந்த அனைவரும்.

“அதுக்குனு ஓடிப்போன பொண்ண தேடி கூப்பிட்டா வர முடியும்?” என்று கூட்டத்தின் நடுவே ஒரு பேச்சு வர, அந்த பேச்சில் கூனிக் குறுகிப்போய் காதுகளை அடைத்துக் கொண்டபடி தூணில் சரிந்து நின்றார் சத்யராஜ்.

“என்னங்க?” என்று சரஸ்வதியும் அழ, “டாடி.” என்று தன் தந்தையின் கைகளை பற்றிக்கொண்டபடி அபூர்வாவும் வெடித்து அழுதாள்.

மனதை கல்லாக்கியபடி நிமிர்ந்த மனிதர், “நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க. அதையும் செய்யுறேன்.” என்றார் வெறுமையான குரலில். 

“முதல் பொண்ணு பண்ண தப்பை, இரண்டாவது பொண்ணை கட்டிக்கொடுத்து சரிபண்ணுங்க. இது தான் நியாயமும் கூட.” என்று சபையிலிருந்து அறுபது வயது மதிக்க தக்க மனிதர் ஒருவர்  மீசையை முறுக்கியபடி, சட்டை மடிப்பு கலையாதவாறு வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் கூறினார்.

வைகையோ தன்னருகே இருந்த விஷ்வாவை அதிர்ச்சியுடன் ஏறிட்டான். அவன் சொல்வது போலவே நடக்கின்றதே என்று அவன் மனம் நினைக்க, உணர்ச்சி துடைத்த முகத்துடன் நின்றிருந்தான் விஷ்வா.

அங்கிருந்த அனைவரும் அதையே ஆமோதிக்க, வைஜெயந்தியும் இந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரின் மனதிற்கும் அதுவே சரியெனப்பட்டது. ருத்ரஜித்திற்கு ஆயிரம் பெண்கள் கூட வரிசைக்கட்டிக் கொண்டு நிற்பார்கள். ஆனால் பொதுவெளியில் அவமானப்பட்டது பட்டதுதானே. இதற்கு மேல் வேறு திருமணத்திற்கு அவன் சம்மதிக்க மாட்டான். ஆதிமந்திரைக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் இருக்க அதுவே சரியென பட்டது இருவருக்கும்.

அதைக்கேட்ட அபூர்வா தான் அதிர்ந்துப் போனாள். தனது அன்னை தந்தையின் முகம் பார்க்க, அவர்களது கலங்கிய முகம் அவளது மனதை பிசைய, சத்யராஜ் சரஸ்வதி இருவருமே தன் மகளை கண்கள் கலங்கிப் போய் பார்த்தனர் என்பதைவிட கண்களாலே இறைஞ்சினர்.

“உங்க விருப்பம்.” என்று தலையசைத்தவளுக்கோ மனதே இல்லை. ஒருபுறம் பிரகல்யாவை பற்றிய கவலை அவளை வாட்டியெடுக்க, மறுபுறம் தன் தமைக்கையின் கணவராக நினைத்த ஒருவரை திருமணம் புரிவதை நினைக்கும்போதே ரணமாக வலித்தது.

அதுவரை பிடித்து வைத்த கல் போல் நின்றிருந்த ருத்ரஜித்தோ, “கொஞ்சம் நிறுத்துறீங்களா? ஒரு பொண்ணு இல்லைனா, இன்னொரு பொண்ணா? எப்படி உங்களால இப்படிலாம் யோசிக்க முடியுது?” என்று கோபத்தோடு அங்கிருந்த மணமகன் அறை நோக்கி சென்றிருந்தான் ருத்ரஜித். 

“ருத்ரா…” என்று அழுத வண்ணம் வைஜெயந்தியும் உடன் செல்ல, இந்திரனோ, “அவனை சம்மதிக்க வைக்க வேண்டியது எங்க பொறுப்பு. பொண்ணை தயாரா அழைச்சிட்டு வாங்க.” என்று கூறிவிட்டு அவர்கள் பின்னே சென்றார்.

“அஜ்ஜூ அண்ணா இங்க என்ன தான் நடக்குது? ஆனால் பாஸ் சம்மதிக்கலையே?” என்று வைகை குழப்பத்தோடு கேட்க, வெற்றுப் புன்னகையை பரிசளித்தான் விஷ்வா.

“இது எல்லாம்  அவனோட டிராமா. நீ வேணா பாரு, பட்டு வேஸ்டி சட்டையோட, மாலையும் கழுத்துமா மேடைக்கு வர தான் போறான்.” என்று ருத்ரஜித்தை முற்றும் முழுதும் அறிந்தவனாகக் கூறினான்.

இங்கு அபூர்வாவை அழைத்துச்சென்ற சரஸ்வதியோ, அழுகைப் பொங்க தன் மகளை தயாராக்கத் தொடங்கினார்.

“ம்மா… எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்மா. அக்கா வந்திடுவாம்மா. இல்லை அக்கா எதாவது பிரச்சனையில இருப்பாளோ?” என்று உதடுகள் துடிக்கக் கேட்டாள்.

மணமகள் அறையின் கதவினை அடித்து சாத்திய சரஸ்வதியோ, “இன்னுமா நீ நம்புற? பூர்வா உன்னை இந்த இக்கட்டான நிலையில நிறுத்துறது எங்களுக்கு மட்டும் சந்தோசமா? அப்பாவை நினைச்சு பாருடி” என்று கூறிக்கொண்டே அவள் அணிந்திருந்த தாவணியை கழற்றியவர், பிரகல்யாவிற்காக வாங்கப்பட்ட ரவிக்கை மற்றும் பாவடையை அவளது கைகளில் திணித்தார்.

“போட்டுட்டுவா.” என்றவருக்கு அதற்கு மேல் நாவே எழவில்லை. கட்டிலில் பொத்தென்று அமர்ந்தபடி மனதிற்குள்ளே கண்ணீர் வடித்தது தாயின் உள்ளம்.

தனது தாயின் வேதனையைக் கண்டு மனமுடைந்தவளோ, கண்களில் கண்ணீர் கசிந்திட, இயந்திரத்தனமாக பாவடையும், ரவிக்கையும் அணிந்தபடி வந்தாள். 

அவளை விரக்தியாய் பார்த்த சரஸ்வதியோ, பட்டுப்புடவையை மடிப்பெடுத்துக் கட்டிவிட்டார். புடவைக்கூட கட்டத் தெரியாத தனது இளைய மகளை வலுக்கட்டாயமாக கல்யாண வாழ்க்கைக்குள் திணிக்க போகிறோமே? என்று அழுகை பொங்கி வந்தது. இருந்தும் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவர், பெண்ணவளுக்கு புடவையை கட்டிவிட்டார். 

‘ஏன் அக்கா? நீ எங்க போன?’ என்று தனது பெரிய கண்களில் திரண்டு வந்த கண்ணீரை அடக்க இயலாது தவித்த அபூர்வாவோ உதடுகள் துடிக்க அழுதாள். 

அவள் அழுகைக்கு காரணமானவளோ, இருட்டு அறை ஒன்றில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக்கிடந்தாள். சுற்றிலும் இருட்டு மட்டுமே. அபூர்வாவின் அழைப்பு இவள் செவியைத் தீண்டியதோ என்னவோ மயக்கம் தெளிந்தவள், மிக கடினப்பட்டே தன் கண்களை திறந்தாள்.  இருட்டில் அவ்விடம் பயங்கரமாக காட்சியளிக்க, காணும் இடம் யாவும் இருள் சூழ்ந்திருப்பதைக் கண்டவள் “அம்மா…” என்று உரக்க கத்தினாள்.

நல்லவன் என்று நம்பியவன் தன்னை கடத்தி வந்தது, நேற்று இரவு நடந்தது என அனைத்தும் படம் போல் பெண்ணவளின் முன் திரையாய் தோன்ற, தனது காதல் கனவுகள் ஒவ்வொன்றும் பிழையாய் மாறிவிட்டதே. ஏன்? எதற்கு? என்று விடைதெரியாத கேள்விகளில் குமுறியவள் “நோ.. ” என்று கதறத் தொடங்கினாள். 

“என்னை ஏன் ஏமாத்துனீங்க ருத்ரஜித்? நான் எங்க இருக்கேன்?” என்று அவளது இதழ்கள் துடித்தது. 

இருட்டு என்றாலே பயம் கொள்ளும் பெண்ணவளுக்கு முகம் எல்லாம் வியர்த்தது.

மூச்சு வேறு வாங்கியது. கட்டப்பட்ட கையும் காலும் நடுக்கம் எடுக்க, “யாராவது இருக்கீங்களா? ரொம்ப பயமா இருக்கு.” என்று கத்தியவளது மேனி மீதே பல்லி ஒன்று விழ, அது விழுந்த அதிர்ச்சியில் கத்தியவள், “அம்மா.” என்று அலறியபடி உருண்டவளுக்கு, பயத்தில் மேலும் உடல் தூக்கிவாரிப் போட்டது.

விழிகளில் திரண்ட கண்ணீரோடு கேவியபடி அழுதவளின் சத்தம் கூட வெளியே கேட்கவில்லை. அழுகையில் கரைந்தவளின் சத்தம் கூட மானிடர் யாரையும் தீண்டாத வகையில் சுற்றிலும் அடர்ந்தகாடு சூழ்ந்திருக்க, தனித்த அவ்வீட்டில் பெண்ணை சிறையெடுத்திருந்தான் ருத்ரஜித்.

இங்கு மண்டபத்திலோ, பிரகல்யாவின் கழுத்தை அலங்கரிக்க வேண்டிய நகைகள் அபூர்வாவின் கழுத்தில் மாட்டப்பட, கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தையே வெறித்துப் பார்த்தாள் இளையவள்.

அதே சமயம் ருத்ரஜித்தை சமாதானம் செய்தபடி மணமேடைக்கு அழைத்து வந்தனர் வைஜெயந்தியும், இந்திரனும். அதைக்கண்ட வைகை கவலையோடு விஷ்வாவைக் காண, விரக்தியில் முறுவலித்தான் விஷ்வஜித்.

அவன் மணமேடைக்கு வந்த அடுத்த ஐந்தாவது நிமிடம் சரஸ்வதி, அபூர்வாவை அழைத்துக்கொண்டு வர, அவளோ தலையைக் கவிழ்ந்தவள், இயந்திரத்தனமாக நடந்து வந்தாள்.

ஒரே நாளில் தன் மொத்த புன்னகையும் தொலைந்து விடும் என்று கனவிலும் அவள் நினைக்கவில்லை. அந்த நிமிடம் கூட தன் அக்கா வந்துவிடமாட்டாளா? என்று ஏங்கியது பெண்ணவளின் மனம்.

ருத்ரஜித்தோ தனக்கு எதிரே இருந்த அக்னிக்குண்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவனது அருகே அபூர்வாவை சரஸ்வதி அமரவைக்க, தலையை நிமிர்ந்தவள் தன் அன்னையையும் தந்தையையும் வலியுடன் ஏறிட்டாள்.

மூத்த மகளது செயலில் வேதனைப் பொங்க நின்றவர்களுக்கு, அந்த நொடி வேறு வழி தெரியவில்லை. இளையவளை கண்டு மனதிற்குள் அழுதனர். படிப்புக் கூட இன்னும் முடியவில்லை. ருத்ரஜித்தை விட பத்து வயது இளையவள் வேறு. எண்ணற்ற எண்ணங்கள் பெற்றோருக்கு தோன்றாமல் இல்லை. இருந்தும் மறுக்க இயலாத நிலையில் தவித்தனர் இருவரும்.

தனது அருகே அமர்ந்திருந்த அபூர்வாவை ஏறெடுத்தும் கூட பார்க்கவில்லை ருத்ரஜித். வைஜெயந்தி சொன்ன ஒரே காரணத்திற்காக மேடையில் அமர்ந்திருப்பது போல அனைவரும் நம்பும்படி அமர்ந்திருந்த ருத்ரஜித்தோ தனக்கு நேரெதிராக இருந்த விஷ்வஜித்தை தான் பார்த்தான்.

‘என்னடா?’ என்பது போல் அவன் கண்கள் அவனிடம் பேச, ‘நினைச்சத நடத்தி முடிக்க பார்க்குறியோ?’ என்று தீவிரமாக பார்த்தது விஷ்வாவின் கண்கள்.

‘நான் நினைக்குறது மட்டும் தான் நடக்கும்.’ என்று இகழ்ச்சியுடன் வளைந்தது ஆணவனின் இதழ்கள். ‘எவ்வளவு தூரம் போறனு நானும் பார்க்குறேன்.’ என்று முறைத்தான் விஷ்வா. இருவரது பார்வை பரிமாற்றத்தை பார்த்தபடி நின்றிருந்த வைகை யாருக்கோ வந்த விருந்து போல் வேடிக்கை மட்டுமே பார்த்தான்.

‘இந்த புரியாத பிரதர்ஸ் இரண்டு பேருக்கு நடுவுல வந்து அநியாயமா மாட்டிவிட்டுட்டியே ஆண்டவா?’ என்று எண்ணியவனுக்கோ, அபூர்வாவை பார்க்கும் போதே பாவமாகத் தான் இருந்தது.

விஷ்வா ஆகட்டும், வைகை ஆகட்டும் இருவராலுமே வேடிக்கை மட்டுமே காணமுடிந்தது. காரணமே இன்றி திருமணத்தை எவ்வாறு நிறுத்த இயலும்? ஆதலால் தானே பிரகல்யாவை கடத்தி திருமணத்தை நிறுத்தலாம் என்று நினைத்திருந்தான் விஷ்வா. கடைசியில் அதுவும் நடக்காமல் போக, இயலாமையுடன் நின்றிருந்தனர் இருவரும்.

ஐயரோ மங்கள நாணை ருத்ரஜித்தின் கைகளில் கொடுக்க, அதனை இறுக்கமாய் இருகைகளால் பெற்றுக்கொண்டான். அபூர்வாவுக்கோ உடல் நடங்கியது. இங்கும் அங்கும் அவளது கருவிழி அசைந்தாட, விழிநீரோ திரண்டு வந்து ஒவ்வொரு சொட்டாக அவளது மடிமீதே விழத் தொடங்கியிருக்க, மங்களநாணை பெண்ணவளின் கழுத்தில் கட்டுவதற்காக சென்றவனோ, ஒருநிமிடம் அவளையே உற்றுப் பார்த்து ஆழ்ந்த பெருமூச்சொன்றை விடுத்தவன், தாலியைக் கட்டாது மணமேடையிலிருந்து எழுந்துக் கொண்டான்.

அவனது செயலில் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைய, தாலிக்கட்ட வேண்டிய தருணத்தில் எழுந்தவனைக் கலங்கியிருந்த கண்களோடு ஏறிட்டாள் அபூர்வா. வைகை கூட பே’வென்று தான் நின்றிருந்தான். 

“அஜ்ஜூ அண்ணா இங்க என்ன நடக்குது.” என்று தலையை சொறிந்தபடிக் கேட்டவனுக்கு பதில் ஒன்றும் கூறாது நின்றிருந்தான் விஷ்வா.

தன் எதிரேயிருந்த விஷ்வாவையும் திரும்பி ஒருமுறை பார்த்தவனது இதழ்களின் ஓரம் தெரிந்த இகழ்ச்சியான புன்னகை, விஷ்வாக்கு எதையோ உணர்த்த, அவன் ஆடும் ஆட்டத்தில் மற்றவர்கள் அனைவரும் பங்கேற்பாளர்கள் மட்டுமே என்பது நன்கு விளங்கியது அவனுக்கு.

மங்கயவளைக் கடத்தியவனும் அவனே…

அவமானத்தில் நிற்பவனும் அவனே…

கண்ணீருக்கு காரணமும் 

அவனே…

கண்ணீரில் கரையவிட்டவனும்

அவனே…

தனதாட்டத்தை உருவாக்கி வேடிக்கைக் காட்டும்

வேய்ந்தனவனும்

பிரம்மன் தானோ….?

 

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!