காதல் கணம் 28
‘விஜயாதித்தன் பொல்லாதவன். இங்க எங்கயோ தான் ஒளிஞ்சிருக்கான். நிச்சயம் வீசி உயிரோட இருக்கிறவரை என் பொண்ணு எனக்கு கிடைக்கப்போறதில்ல. ஆனா, வீசியை என்னால சுட முடியுமா?’
விஸ்கியின் வேகத்தில் ராஜமாணிக்கத்தின் ரத்தவோட்டம் அதிகரித்தது.
அவர் வீசியைத் தேடியபோது அவன் அவருக்கு பின்னே, மேலேயிருந்து தொங்கிக் கொண்டிருந்த இரும்புச் சங்கிலியுடனான வளையங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ராஜமாணிக்கத்தின் முகம் வேதனையில் சுருங்கியது. கைகளோ வெடவெடத்தன. தனது பதினைந்து வயதில் முதல்முதலாக அவர் பிஸ்டலை தொட்டபோது கூட அதைப் பார்த்து பயந்ததாகவோ, கைகள் நடுங்கியதாகவோ நினைவில்லை.
ஆனால், இப்போது அவரின் கையிலிருந்து பிஸ்டல் நழுவும் போல் இருந்தது. வசதிக்காக தனது இரு கைகளாலும் பிஸ்டலை இறுக்கிப் பிடித்துக்கொண்டவர் முயன்று விசையை அழுத்தினார். க்டப்!
ராஜமாணிக்கத்தின் வரலாற்றில் முதல்முறை குண்டு குறி தவறியது அன்று தான். ஒரு இன்ச் இடைவெளியில் உயிர் தப்பிய வீசி, அரண்டு அவரைப் பார்த்தான். ஏனையவர்களும் ராஜமாணிக்கத்தின் கையிலிருந்த துப்பாக்கியையே கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
முன்னால் அவன் திரும்பி இருந்தபோதே சரியாக சுட முடியவில்லை. ‘அடே! முதுகில் குத்திய துரோகி’ என்றவன் நேருக்கு நேராக தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் போதா அவரால் சுட முடியும்?
அந்த நைன் எம்எம் அறுநூத்திபத்து கிராம் எடையுள்ள சாம்பல் வண்ண பிஸ்டலை மகாவிடம் தூக்கிப்போட்டு, “மகா, வீசியை சுடு” என்று உத்தரவிட்டார்.
வீசியின் உடலெங்கும் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.
மகா குழப்பத்தோடு கேட்டான், “அண்ணே, இவனைப்போயா?” என்று.
அவர் அதிகாரமாக இரைந்தார். “நான் சொல்றதை செய் மகா!”
“இல்லண்ணே முடியாது. நம்ம இங்க வித்யா பாப்பாவைத் தேடித்தானே வந்தோம்? வாங்க தேடுவோம்.” என்றான் மகா.
“முட்டாள்! வீசியை போட்டாத் தான்டா விஜயாதித்தன் உன் பாப்பாவை அனுப்புவான்.”
இவ்விடத்தில் ராஜமாணிக்கம் மட்டும் வித்யா கடத்தப்பட்டதில் இந்த வீசியும் விஜயாதித்தனுக்கு உடந்தை என்று சொல்லியிருந்தால் கூட, நிச்சயம் மகா யோசிக்காமல் வீசியை சுட்டிருப்பான். ஆனால், ராஜமாணிக்கம் வேறல்லவா சொல்கிறார்.
“ஏண்ணே, நாளைக்கு கமலாக்காவை கடத்தி வச்சிட்டு என்னை போடச் சொன்னாலும் போட்டிருவீங்களாண்ணே?”
“மகா!”
“இல்லண்ணே, உங்க மருமகன்னு தலைல தூக்கி வச்சி ஆடினவனுக்கே இந்த நிலைமைன்னா, எங்களை மாதிரி அனாதைப் பசங்களையெல்லாம் ஈஸியா போட்டிருவீங்கல்லண்ணே?”
“விஜயாதித்தன் சாதிச்சிட்டான் மகா. அவன்கிட்ட நான் தோத்துட்டேன்” என்றவரின் முகம் வேதனையை பிரதிபலிக்க திரும்பி நின்றுகொண்டார்.
அவனுக்கு அவரின் நிலை புரிந்தது. திரும்பி வீசியைப் பார்த்தான். அவன் இதழ்களோ புன்னகைத்துக் கொண்டிருந்தன. அது விரக்திப் புன்னகையா? அல்லது, அலட்சியப் புன்னகையா? என்று இனங்காண முடியவில்லை மகாவால்.
அடுத்து வீசி பேசிய வார்த்தைகள் மகா கற்பனை பண்ணிக்கூட பார்க்க இயலாதது.
“என்ன மகா யோசிக்கிற? சுடு என்னை. உனக்கு இது முடியாத காரியமா என்ன? ஏன் தயங்குற? வித்யாவுக்காக தானே மாணிக்ஜி என்னை போடச் சொல்றாரு? இதோ இதே இடத்துல எட்டு வருஷத்துக்கு முன்னாடி தோலுரிச்ச ஆடு மாதிரி செத்துத் தொங்கியிருக்க வேண்டியவன் மகா நான். இந்த உயிர் அவர் போட்ட பிச்சை. அவருக்காகப் போறதுல எனக்கு சந்தோசம் தான்.” என்றான்.
மகாவிற்கு வீசியின் மேல் வெறுப்பாகயிருந்தது. எப்படி இப்படி அப்பழுக்கற்றவனாக இவனால் இருக்க முடிகிறது? ஒவ்வொருமுறையும் எனக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணுவதே இவனுக்கு வேலையா? என்று முகத்தை சுளித்தான்.
இதுவரை ராஜமாணிக்கத்தின் பேச்சை மீறிப் பழகிறாத மகா, இன்றும் அதே போல் பிஸ்டலை வீசியை நோக்கி உயர்த்திப் பிடித்தான்.
வீசி நேர்கொண்ட பார்வையுடன், ‘நீ சுடு. நான் சாகத் தயார்’ என்பது போலவே தன் இரு தோள்களையும் விரித்து நெஞ்சை நிமிர்த்திக் காட்டினான்.
ஒருவன் இப்படி நிற்பானாயின் யாரால் தான் அவனை சுட முடியும்? கையில் வாளையேந்திவிட்டு துர்க்கைக்கு களப்பலி கொடுக்க தயங்கிக் கொண்டிருந்தான் மகா. அவன் மனம் அலைக்கழிந்துகொண்டே இருந்தது. ‘இவன் எனக்கு கீழ இருக்கணும்னு தான் நினைச்சேனே தவிர, இருக்கவே கூடாதுன்னு நினைக்கலையே. ஆனா, வீசியை இப்ப சுடாம போனா வித்யாவை… ஆமா, நிச்சயம் வித்யாவை காப்பாத்த முடியாது’ -இவ்வெண்ணம் எழுந்ததுமே நெஞ்சை திடப்படுத்திக்கொண்டு முதல் குண்டை வீசியின் நெஞ்சை நோக்கிப் பாயவிட்டான் மகா.
ராஜமாணிக்கம் போல் மகாவுக்குமே குறி தவறி குண்டு வீசியின் புஜத்திலேயே இறங்கியது.
சூடான ரத்தம் தெறித்து வெளியேறிய வேளையில், மகா ட்ரிக்கரை இழுத்து அடுத்தக் குண்டை பாய்ச்சவிருந்த நொடியில், இருவருக்கும் இடையில் வந்து நின்றாள் ஷ்ரதா. மகா அவளைப் பார்த்ததுமே சுதாரித்து பிஸ்டலை கீழிறக்கினான்.
வீசியுமே, “தள்ளிப்போ ஷ்ரதா” என்று அவளை இடப்பக்கமாகப் பிடித்து தள்ளிவிட்டான்.
ராஜமாணிக்கம் முதற்கொண்டு சுற்றியிருந்த அனைவருமே அதிர்ந்து அவளைப் பார்த்திருக்க, “உங்களுக்கு எட்டு வருசமா விசுவாசியா இருந்தவருக்கு நீங்க கொடுக்கற பரிசு இது தானா?” என்று எழுந்து நின்றபடியே நியாயம் கேட்டாள்.
ராஜமாணிக்கம் குரலில் ஜீவனில்லை என்றாலும் உறுதியிருந்தது. “என் பொண்ணுக்காக நான் எதுவும் செய்யத் தயாராயிருக்கேன்.” என்றார்.
ஷ்ரதா, “உங்கப்பொண்ணு.. உங்கப்பொண்ணு..” என்றபடியே சுற்றி முற்றி பார்த்தவள், தரையில் விழுந்திருந்த போனை எடுத்து அருண்மொழி என்றிருந்த எண்ணிற்கு வாட்ஸாப்பில் “வித்யாவை விடு” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.
பிறகு, போனை முழுமையாக அணைத்துவிட்டு, “இப்போ.. இப்போ உங்கப்பொண்ணு வந்துருவா” என்றாள்.
சொன்னபடியே வெளியேயிருந்து, “அப்பா” என்று கூவிக்கொண்டே ஓடி வந்து ராஜமாணிக்கத்தின் நெஞ்சில் விழுந்தாள் வித்யா.
ஷ்ரதா வீசியை நெருங்கி பரிதவித்தபடியே அவனது கைக்காயத்தைப் பார்த்தாள்.
அவன் தன் அடிபட்ட தோளைப் பிடித்துக்கொண்டே, “நீயெப்படி இங்க? இது யார் போன்?” என்று விசாரித்தான்.
வித்யா ராஜமாணிக்கத்தின் நெஞ்சிலிருந்து விலகியவள், சுற்றி அனைவரையும் பார்த்தாள்.
மகாவின் கையில் துப்பாக்கி, வீசியின் புஜத்தில் குண்டடி, உண்மை விளங்கியதுமே, “அற்புதம்பா! ரொம்ப அற்புதம். அந்த சிவனேஸ்வரன் சொன்னப்போக்கூட நான் நம்பல. ஆனா, இப்போ நம்புறேன்பா. நீங்களும் வீசியை கொல்லத் தயாராகிட்டீங்கல்ல?” என்று அழுகையுடன் வெடித்தாள்.
ஏற்கனவே துடித்துப் போயிருந்தவர், அவளின் கேள்வியில் இன்னும் இடிந்துபோனார்.
“வித்யா..”
“வேண்டாம்பா. எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம். ஆனா, என் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. விஜயாதித்தனோட புக் ஸ்டால் பத்தி கலெக்டருக்கு துப்பு கொடுத்தது யாரு? நீங்க தானே? சொல்லுங்கப்பா! நீங்க தானே? அப்போ நீங்க தான் எல்லாத்துக்கும் காரணம்? வீசியை விஜயாதித்தன்கிட்ட மாட்டிவிட்டு, நீங்களே அவரை காப்பாத்துற மாதிரி காப்பாத்தி, அவரை அவருக்கு எதிரா திருப்பிவிட்டு.. எதுக்குப்பா? ஏன் இந்த கெட்டபுத்தி உங்களுக்கு? என் ஆட்டம் பரதநாட்டியம்னா உங்க ஆட்டம் இப்படி மனுசங்களை வச்சி ஆடுறது தானாப்பா?” என்று கண்கள் இடுங்கக்கேட்டாள் மகள்.
“வித்யா” என்று அவளை இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்டார் ராஜமாணிக்கம்.
“போங்கப்பா உங்களை நான் என்னவோன்னு நினைச்சேன். நீங்க என்னடான்னா..” என்று அவரை கீழ்த்தரமான ஒரு ஆளாக ஒதுக்கிவிட்டு வீசியின் அருகில் வந்தாள்.
வீசி, ஷ்ரதா என இருவருமே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள்.
தனக்குத் தெரியாமலேயே தான் சதுரங்கத்தில் ஒரு காயாக நகர்த்தப்பட்டு கொண்டிருந்த உண்மை வீசியை குத்திக் கிழித்துப்போட்டது. மனம் செயலொடிந்து ராஜமாணிக்கத்தை அசையாது பார்த்தான்.
வீசியை நெருங்கிய வித்யாவோ அதிரடியாக ஷ்ரதாவின் துப்பட்டாவை இழுத்து, வீசியின் கைக்காயத்திற்கு கட்டுப்போட்டாள். ஷ்ரதாவிற்கு அந்த அழுகையிலும் வித்யாவின் உரிமையான செயலில் கோபம் வந்தது. வித்யா ஷ்ரதாவின் காரமான பார்வையை உள்வாங்கிக்கொண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
பின், வீசியிடம் ஷ்ரதாவின் சார்பில் நியாயம் கேட்டாள்.
“வீசி, எனக்குத் தெரிஞ்சு உங்களுக்கு ஷ்ரதா மேல கோபம்னா, நீங்க ஊரைவிட்டு ஓடிப்போக கூப்பிட்டும் அவ அன்னைக்கு பாலத்துக்குக் கீழ வராதது தானே?” என்று சரியாகக் கேட்டாள்.
ஷ்ரதா லயம் தப்பிய இதயத்துடிப்புடன் அவனை தலையுயர்த்திப் பார்த்தாள்.
வீசி குழப்பரேகைகளுடன் வித்யாவைப் பார்க்க, வித்யா, “எனக்கு எப்படி தெரியும்னு பார்க்கறீங்களா? அன்னைக்கு ஷ்ரதாவை அங்க வரவிடாம தடுத்ததே சிவனேஸ்வரன் தான். அவர் தான் எல்லாத்தையும் என்கிட்ட சொன்னாரு.” என்றாள்.
இடையில் ஷ்ரதா குறுக்கிட்டு, “வித்யா, நீங்க என்ன சொல்றீங்க?” என்க,
வித்யா ஞாபகம் வந்தவளாக, “ஓ! உனக்கு எல்லாம் மறந்துப்போயிடுச்சில்ல ஷ்ரதா? இப்போ விலாவரியா சொல்ல நேரமில்ல. மொத வீசியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப்போகனும். மகா, போய் வண்டியை எடு!” என்று கட்டளையிட்டபடியே அவன்புறம் திரும்பினாள்.
“அது வந்து பாப்பா.” என்று மகா தயங்க,
“பாப்பா இல்ல, எஜமானியம்மா! என்ன புரியலையா? அப்பாவுக்கு உடம்பு முடியலை இல்லையா? இனி நான் தான் அவர் தொழிலை எடுத்து செய்யப்போறேன். போ! போய் வண்டியை எடு!” என்று உத்தரவிடும் தொனியில் சொன்னாள்.
செல்லாக்காசாய் புறந்தள்ளப்பட்ட ராஜமாணிக்கம் ‘செல்’ என்று அவனுக்கு உடல்மொழியில் அனுமதி வழங்கினார்.
ஓட்டப்பந்தயவீரன் போல் ஓடி வண்டியின் கதவைத் திறந்தான் மகா.
ஷ்ரதா மற்றும் வித்யாவின் கைத்தாங்கலுடன் வீசி காரினுள் ஏற்றப்படும் முன், தள்ளி நின்ற காரின் டிக்கியிலிருந்து வந்த சத்தத்தில், “அது என்ன சத்தம் மகா?” என்றாள் வித்யா.
மகா ஓடிப்போய் தன் ஆட்களிடம் சாவி வாங்கி வந்து அந்தக் காரின் டிக்கியைத் திறக்க, உள்ளிருந்து கீழே புரண்டு விழுந்தான் சிவனேஸ்வரன். வீசியைத் தவிர்த்து மற்ற அனைவரும் அவனை அதிர்ச்சியாகப் பார்த்தனர்.
வித்யா சிவனேஸ்வரனின் கட்டுகளை அவிழ்க்க உத்தரவிட்டவள், அவனை நெருங்கி, “உங்க தப்பு புரியாம, இப்பவும் நீங்க பிடிவாதமா இருப்பீங்கன்னா நீங்க மனுஷனே இல்ல சிவனேஸ்வரன்.” என்றாள்.
அவன் ஷ்ரதாவை அடிபட்ட பார்வை பார்த்தான். ஆனால், அவள் விழிகளோ வீசியின் மீதே நிலைத்திருந்தன.
“ஷ்ரதாக்கூட இருந்தா தான் வீசி சந்தோசமா இருப்பாருன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சி. ஆனா, வீசியால தான் ஷ்ரதாவை சந்தோஷமா வச்சிக்க முடியும்னு உங்களுக்கு தான் புரியல.” என்றாள்.
வித்யாவின் வார்த்தைகள் அவனுக்குள் மின்சாரத்தை பாய்ச்சியது போல் இருந்தது.
ஷ்ரதா இன்னும் வீசியையேப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் சுயமரியாதைக்கு மட்டுமின்றி அவன் காதல் மனதிற்கே பெரிய அடியாக அமைந்தது அது. உண்மைகள் ஏன் இவ்வளவு கசப்பானவையாக இருக்கின்றன? என்று முட்டிபோட்டபடியே தரையில் குத்தி அழுதான் சிவனேஸ்வரன்.
“ம், காரை எடு மகா” என்ற வித்யா, மகாவின் கண்களுக்கு கதாநாயகி போலவே தெரிந்தாள்.
அனைவரையும் ஏற்றிக்கொண்ட கார் புழுதி கிளப்பிக்கொண்டு செல்ல, வெகுநேரத்திற்குப் பின்பே, ஷ்ரதா தன்னைவிட்டு நெடுந்தூரம் சென்றுவிட்டதை உணர்ந்தான் சிவனேஸ்வரன்.
காதல் கணம் கூடும்…
