காதல் கணம்-29 (இறுதி)

காதல் கணம் 29

இறுதி அத்தியாயம்

தங்களின் வழக்கமான மருத்துவமனைக்கு வீசியை அழைத்து வந்திருந்த மகாவிற்கு ராஜமாணிக்கத்தை விட்டு வந்தது ஏதோபோல் இருந்தது. அவசரமாக மருத்துவமனையை விட்டு வெளியேறினான்.

வித்யா வீசிக்கு மருத்துவம் பார்க்கப்படும் அறைக்குள் நின்றுகொண்டு சிவனேஸ்வரன் கூறிய உண்மைகளையெல்லாம் ஒன்றுவிடாமல் கூறினாள். பக்கத்தில் ஷ்ரதாவும் நின்றிருந்தாள்.

சிவனேஸ்வரனின் திட்டத்திற்கும், ஆதீஸ்வரன், தாரிணியின் இறப்பிற்கும் மட்டுமே ஷ்ரதாவின் முகம் உணர்ச்சிப் பிழம்பாகியதைக் கண்டு, ‘அப்போ ஷ்ரதாவுக்கு எல்லாம் ஞாபகம் வந்திடுச்சா?’ என்று துணுக்குற்றான் வீசி.

ஷ்ரதா தற்போது அவனது தோளிலிருந்து எடுக்கப்பட்ட ரத்தம் தோய்ந்த தோட்டாவை தான் கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள்.

வீசிக்கு மீண்டுமொரு அதிர்ச்சி இது. ‘ஷ்ரதாவுக்கு எப்போ இது மாதிரி ரத்த வெள்ளத்தை பார்க்கவெல்லாம் தைரியம் வந்தது?’ என்றே வியந்தான் அவன்.

ஷ்ரதாவோ தனக்குள்ளாகவே மறுகிக் கொண்டிருந்தாள். ‘என்னால எத்தனை இழப்பு! கோகிலா அத்தை சொன்னதுல தப்பேயில்ல. எனக்கு அதிர்ஷ்டமிருந்திருந்தா இப்படியொரு அப்பாவுக்கு நான் மகளாவே பிறந்திருக்க மாட்டேன். விதி ஏன் என் வாழ்க்கையில மட்டும் இப்படி விளையாடுது? ச்சே! எனக்கு எதுவுமே ஞாபகம் வராம போயிருக்கணும். இன்னைக்கு காலையில எனக்கு எதுவுமே ஞாபகம் வந்திருக்கக்கூடாது’ என்று நினைத்தவளின் வாயில் விம்மல்கள் வெடிவெடியாய் விட்டுவிட்டு வெடித்தன.

எவ்வளவோ முறை அவளின் அழுகையை பார்க்கப் பிடிக்காமல் திட்டியிருக்கும் வீசிக்கு, இன்று அவளுடன் சேர்ந்து அழ வேண்டும் போல் இருந்தது.

‘மிகப்பெரிய தப்பு செஞ்சிட்டேன் ஷ்ரதா’ என்று ரணத்தின் ஆழத்தில் உள்ளுக்குள் கேவினான்.

அவனுக்குப்போடும் தையல் ஒவ்வொன்றும் தன்னை குலை நடுங்கச் செய்ய வெளியே ஓடிவிட்டாள் ஷ்ரதா.

வித்யாவும், வீசிக்கு கட்டுப்போட்ட பின் மகாவுடன் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

மகா அவளிடம் வீசியைப் பார்க்க ராஜமாணிக்கம் விரும்புவதாகச் சொல்லவும், அழகாய் விழிகளில் அபிநயம் பிடித்தவள், “தாராளமா பார்க்கட்டுமே, பேசட்டுமே. எனக்கென்ன வந்தது? ஆனா, என் விஷயத்துல மட்டும் அவரை இனி தலையிட வேண்டாம்னு சொல்லிரு மகா.” என்று குரலில் கண்டிப்பு காட்டினாள் அவள்.

மகா, “சரிங்க பாப்பா” என்று அவளுக்கு தாழ்ந்துபோனான்.

இனி அவன் தான் அவளுக்கு எல்லாம் எனும்போது வெறென்ன வேண்டும் அவனுக்கு!

அவன் புறப்படும்போதே ஒரு எண்ணம் முளைத்து அவளை உறுத்தியது. ‘அப்பா மேல நான் இவ்ளோ கோபப்படுறதுக்குக் காரணம் வீசி தானே? வீசியை என்னால மறக்க முடியுமா? என் எட்டு வருஷ கனவை நினைச்சுப் பார்க்காம இருக்க முடியுமா? முடியலைனாலும் முடிஞ்ச மாதிரி நடிக்கணும்.’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் அவள்.

வீசியின் அறையைவிட்டு வெளியே வந்த ஷ்ரதா வராந்தாவில் உட்கார்ந்து சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஆயில் பெயிண்ட் சட்டங்களையே வெறித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அதுவரையிலும் தெரியாத பசி அப்போது தான் மேலெழுந்து வந்து கொண்டிருந்தது.

இடையே, ஒரு பகீர் உணர்வு தோன்றி அவளை புரட்டிப்போட்டது. ‘இன்னைக்கு காலைல நான் செஞ்ச கொலை?’

அதன்பின், அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. கைகால்கள் எல்லாம் வியர்த்து, “இன்னைக்கு பொழுது விடிஞ்சே இருக்கக்கூடாது முருகா!” என்று தழுதழுத்தாள்.

நேற்றிரவு வித்யாவை நினைத்து வெகுநேரம் படுக்கையில் புரண்டு‌கொண்டிருந்த ஷ்ரதா எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

ஆனால், காலையில் விழித்தபோது அவள் மூளைக்குள் மின்சாரம் செலுத்தியது போல் பலத்த வேகத்தில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நினைவுப் பாலங்கள் செப்பனிடப்பட்டுக் கொண்டிருந்தது போலவே, மூடிய இமைகளை அசைத்துக்கொண்டே இருந்தாள்.

திடுக் திடுக்கென்று ஓரிரு சம்பவங்கள் அவள் நினைவு வட்டத்துக்குள் தலைகாட்டியபோது, அவளின் முகம் அதற்கேற்றாற் போன்ற பாவனைகளை வெளிப்படுத்தியது.

இறுதியில் ஒரு தரமான சம்பவம் ஞாபகம் வர ஓவெனக் கதறினாள். அது ஆதீஸ்வரன் அவளுக்கு தாலி கட்டிய சம்பவம். சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் சுற்றி முற்றி பார்த்தவள், நிகழ்காலம் உரைக்கவும் நிம்மதியடைந்தாள். பின், உண்மையை தெரிந்துகொள்ளும் விதமாக தன் தாய்வீட்டிற்கு கிளம்பினாள்.

கீழே வந்தவளிடம் அபிராமி, “நைட் வருண் வீட்டுக்கு வரலையாம்மா?” என்று கேட்க, அவரிடம் பொய் சொல்லி சமாளித்துவிட்டு கோவிலுக்கு செல்வதாகப் புறப்பட்டுவிட்டாள்.

தன் வீட்டிற்கு சென்றவளை மீனாட்சி உபசரிக்க, அவளோ நிற்காமல் நேரே தனது தந்தையின் அறைக்குச் சென்றாள். அப்படி சென்றபோது தான் அவர் பேசியதனைத்தையும் அவள் கேட்க நேர்ந்தது.

திரும்பிய விஜயாதித்தன் ஷ்ரதாவைப் பார்த்ததுமே நெருப்பை மிதித்தது போல் திகைத்துவிட்டார். ஒரு தடுமாற்றம் ஓடி மறைந்தது அவர் முகத்தில்.

ஷ்ரதா அவரை திகிலுடன் பார்த்தபடியே அடியெடுத்து வைத்தாள்.

“நீங்க மாறவே இல்லைலப்பா? உங்க கொடுங்குணம் மாறவே செய்யாதுல்ல? உங்களை மாதிரி ஒருத்தருக்கு மகளா பிறந்ததுக்கு என்னையே எனக்கு அழிச்சிக்கணும் போலயிருக்கு.” என்று அருவருத்தாள்.

“என்ன ஷ்ரதாம்மா என்னென்னமோ பேசற?”

“ச்சீ! என்னைத் தொடாதீங்க. உங்க பாவப்பட்ட கையால என்னைத் தொட வேணாம். எத்தனை பேர் உயிரை குடிச்சதோ இந்தக்கை?”

“ஷ்ரதாம்மா”

“எனக்கு எல்லாம் ஞாபகம் வந்திடுச்சு. இப்போ நீங்க பேசினதையும் நான் கேட்டுட்டேன். இதுக்கு மேலயும் நீங்க என்கிட்ட நடிக்க வேணாம்.”

“சரிம்மா, நம்ம விவாதத்தை நான் வெளிய போயிட்டு வந்த பின்னாடி வச்சிக்கலாம்.” என்று அவர் வெளியே செல்ல எத்தனிக்க,

“இல்ல.. இல்ல.. நான் உங்களை வெளியப்போக விடமாட்டேன்.” என்று தடுத்தாள் ஷ்ரதா.

“தள்ளிப்போ ஷ்ரதா”

“இல்ல.. இல்ல.. நீங்க போகக்கூடாது”

“நிச்சயம் நான் போயே ஆகணும். நான் ரொம்ப நாளா காத்திருந்த தருணம் இது”

சடுதியில் அவர் காலில் விழுந்தவள், “ப்ளீஸ்ப்பா, அவரை ஒண்ணும் பண்ணிடாதீங்க” என்று கெஞ்சினாள்.

“நீ சின்ன வயசுல நான் தொழிலுக்குப் போகும்போது என் காலைக் கட்டி அழுதது தாம்மா ஞாபகம் வருது” என்றவர் உதாசீனமாய் அவளது பிடியிலிருந்து தனது கால்களை விலக்கிக் கொண்டார்.

அவர் முன்னேற, “அப்பா நில்லுங்க!” என்று உச்சஸ்தாயில் கத்தியவளை, கேலியாக திரும்பிப் பார்த்தார் அவர்.

கையில் துப்பாக்கியுடன் அவரை குறி பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா. அவர் உடனே தனது இடுப்பை தடவிப் பார்த்தார்.

ராஜமாணிக்கத்தை மிரட்டும் அவசரத்தில், தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியை டீபாயிலேயே மறந்துவிட்ட தனது மடத்தனத்தை இப்போது எண்ணி நொந்தார்.

“ஷ்ரதா துப்பாக்கியைக் கொடு!” என்று அருகில் வந்தவரிடம்,

“தரமாட்டேன்” என்றவாறே துப்பாக்கியை கெட்டியாக இறுக்கிப் பிடித்துக்கொண்டாள்.

“கொடு கழுதை” என்று ஒரே எட்டில் அவளை சமீபித்து, அவளின் கையிலிருந்த துப்பாக்கியை பலவந்தமாக பறிக்க முயன்றார் விஜயாதித்தன்.

இருவரின் வலுவிலும் துப்பாக்கி ஒவ்வொரு மூலையாக குறி வைத்துத் திரும்பியது.

இறுதியில் விஜயாதித்தனின் வலது தொடையிலேயே குண்டு இரண்டுமுறை இறங்கியது. விஜயாதித்தன் தான் சுடப்பட்டதை உணர்ந்ததுமே துப்பாக்கியை விட்டுவிட்டார். ஷ்ரதா சுட்டுவிட்டு தன் கையிலிருந்த துப்பாக்கியை ஏதோ விஷ ஜந்துவை பார்ப்பதுபோலவே பார்த்து தூக்கி வீசிவிட்டாள்.

அவரின் தொடையிலிருந்து வழிந்த ரத்தம் அவரின் வேஷ்டி  முழுவதும் பரவ, ஷ்ரதா இன்னும் விக்கித்தவள் விக்கித்தபடியே நின்றிருந்தாள்.

பின், பயத்தில் அவ்விடத்தைவிட்டு ஓட முயன்றாள். ஆனால், அவளால் வெளியேற முடியாதபடி, அனைத்தையும் பார்த்துவிட்ட மதுபாலா அவளை எதிர்கொண்டு நின்றிருந்தாள்.

எப்போதும் தான் விஜயாதித்தனுக்கு காலைஉணவு கொடுக்கும் நேரத்திற்கு கையில்  ட்ரேயுடன் வந்திருந்தவள், விஜயாதித்தன் அருண்மொழியிடம் பேசியதையும் கேட்டுவிட்டாள்; ஷ்ரதா சுட்டதையும் பார்த்துவிட்டாள்.

ஷ்ரதா, “அண்ணி.. அண்ணி..” என்று நடுங்கியபடியே அவளருகில் வர, மதுபாலா இயந்திரம் போல் பதிலளித்தாள்.

“நான் செய்ய நினைச்சதை நீ செஞ்சிட்ட ஷ்ரதா.” என்றாள்.

“இல்ல அண்ணி, நான் வேணும்னே பண்ணல” என்று மதுபாலாவின் தோளில் முகம் புதைத்துத் தேம்பினாள்.

அவளின் முதுகை நீவிவிட்ட மதுபாலா விஜயாதித்தன் துடிப்பதை வெறித்தபடியே, “நீ எப்படி பண்ணுனியோ, ஆனா சரியா தான் பண்ணியிருக்க” என்றாள்.

அவளுக்கு எப்போதிலிருந்து விஜயாதித்தனை கொல்லும் வெறி வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால், அந்த எண்ணம் நிச்சயமாக ஷ்ரதாவைப் போல் சற்று நேரத்திற்கு முன்பு மட்டும் முளைத்ததன்று.

ஷ்ரதாவின் அழுகை நிற்பது போல் தெரியவில்லை எனவும், அவளை தன்னைவிட்டுப் பிரித்து, “போதும் ஷ்ரதா. அழுகையை நிறுத்து. இது அழறதுக்கான நேரமில்ல.” என்று அவளின் தோள்களை உலுக்கினாள்.

ஷ்ரதா முகம் சிவந்து, “அண்ணி, எனக்கு ரொம்ப பயமாயிருக்கு அண்ணி.” என்று மீண்டும் அவளை கட்டிப் பிடித்தாள்.

“இங்கப்பாரு ஷ்ரதா” என்று மீண்டும் அவளை பலவந்தமாக தன்னைவிட்டுப் பிரித்த மதுபாலா,

“நீ சீக்கிரம் போய் வருணைக் காப்பாத்தணும் ஷ்ரதா. அவன் இப்போ ஆபத்துல இருக்கான்.” என்று நினைவுபடுத்தினாள்.

“ஆமா அண்ணி” என்று தலையாட்டிய ஷ்ரதா,

“வாங்க அண்ணி” என்று கூப்பிட்டபோது,

“இல்ல ஷ்ரதா, என்னால இவரை இப்படியே விட்டுட்டு வர முடியாது. நீ போ! நான் இவரை ஹாஸ்பிடல்ல சேர்க்குறேன்” என்று வலுக்கட்டாயமாய் அனுப்பினாள்.

ஷ்ரதா ஏமாற்றமாக வெளியே செல்ல எத்தனித்தபோது, “நில்லு ஷ்ரதா” என்று தடுத்த மதுபாலா,

கீழே கிடந்த விஜயாதித்தனின் கைப்பேசியை எடுத்து கொடுத்து, “உங்கண்ணனுக்கு இதுலயிருந்து உத்தரவு போனா தான் என் தம்பியை நீ காப்பாத்த முடியும்” என்று அவளுக்கு யோசனை சொல்லி அனுப்பி வைத்தாள்.

கைப்பேசியை நன்றிப்பெருக்குடன் வாங்கிக்கொண்ட ஷ்ரதா கதவை நெருங்கியபோது, “ஷ்ரதா, இங்க நடந்ததை மறந்திரு. வெளிய யார்கிட்டயும் சொல்லாத” என்று அறிவுறுத்தினாள் மதுபாலா.

அவளின் குரலிலிருந்த அதிகாரம் ஷ்ரதாவை காரணம் கேட்காமலேயே சரியென்று தலையாட்ட வைத்தது.

புயல் வேகத்தில் வெளியேறியவள் வழியில் செல்லும்போது தன் முருகனை வேண்டிக்கொண்டே வந்தாள். “வருணத்தானுக்கு மட்டும் எதுவும் ஆகக்கூடாது முருகா” என்றே உருப்போட்டாள்.

இடம் தெரியாமல் முட்டிமோதி வந்ததால் அவள் எவ்வளவு விரைவாக வந்தும், வீசியை குண்டடியிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. அவன் தோளில் தோட்டா இறங்கிய பின்பே அவளால் அங்கு வந்தடைய முடிந்தது.

இருமுறை துப்பாக்கி சுடப்படும் ஓசைக்கேட்டதும், ஷ்ரதா அனுப்பிய செய்தியை தனது தந்தையின் கட்டளையாக நினைத்துக்கொண்டு வித்யாவை விடுவித்த அருண்மொழி, திடீரென புது எண்ணிலிருந்து தனக்கு அழைப்பு வரவும் ஏற்று காதில் வைத்தான்.

“ஹலோ! கிரானைட் ஃபேக்டரி முதலாளி விஜயாதித்தனோட பையன் அருண்மொழி தானே சார் நீங்க?”

“ஆமா, நீங்க யாரு?”

“நாங்க கீரைத்துரை போலீஸ் ஸ்டேஷன்லயிருந்து பேசுறோம் சார். நீங்க கொஞ்சம் ஸ்டேசன்வரைக்கும் வர முடியுமா ப்ளீஸ்?”

“சார், என்ன விஷயமான்னு சொன்னீங்கன்னா?”

“ஒண்ணுமில்ல சார், உங்க வைஃப் மதுபாலா பத்தி உங்ககிட்ட கொஞ்சம் விசாரிக்கணும் அதான்.”

“என் வைஃப் பத்தியா? சார், நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்குப் புரியலையே?”

“உங்க வைஃப் கொஞ்சநேரத்துக்கு முன்னாடி உங்கப்பாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க சார். ட்ரீட்மெண்ட் பண்ணின டாக்டர்ஸ் அவர் கால்ல புல்லட்ஸ் எப்படி வந்ததுன்னு கேட்டதுக்கு, தன் மாமனார் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை பண்ணினதாகவும், தான் அவரை கால்ல சுட்டுட்டதாவும் வாக்குமூலம்  கொடுத்திருக்காங்க. சார், அவங்க புத்தி சுவாதீனத்தோட தான் இருக்காங்களா?” என்றவர் விசாரிக்க, அருண்மொழியின் கையிலிருந்து கைப்பேசி நழுவி விழுந்தது.

சிலமணி நேரங்களுக்கு முன் தன் வீட்டில் நடந்த சம்பவங்களை நினைத்ததுமே தொண்டைத் தண்ணீர் வற்ற கதறியழுதாள் ஷ்ரதா.

திடுமென அவளுக்கு வலப்புறமிருந்து வந்த ராஜமாணிக்கம், “வீசி உள்ள தானேம்மா இருக்கான்?” என்று வினவியபடியே அவளைக் கடந்து வேகநடையுடன் தன் ஆட்கள் மூவர் பின்தொடர உள்ளே சென்றார்.

ஷ்ரதா அறையின் கதவருகிலேயே நின்றுகொண்டு அவர்களைப் பார்த்திருந்தாள். வீசி ராஜமாணிக்கத்தை கண்டதுமே உடல் இறுகிப்போனான். முகம் வெறுப்பை உமிழ்வது போல் இருந்தது.

தன்னைப் பார்த்ததும் உடல்மொழியிலேயே அவன் செலுத்தும் மரியாதை காணாமல் போயிருந்ததை அவரும் உணராமல் இல்லை.

“எட்டு வருஷத்துக்கு முன்னாடி புக் ஸ்டால்ல விஜயாதித்தன் ஆட்களைப் போட்டு நீ புரட்டி எடுத்தியே, அப்போ தான் வீசி உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். அன்னைக்கு உன்கிட்ட அடிவாங்கினவங்கள்ல என் ஆளும் ஒருத்தன். விஜயாதித்தன் கிட்ட முடியாம, என்கிட்ட ப்ரொமோசனுக்கு சிபாரிசுக் கேட்டு வந்த கான்ஸ்டபிளும் உன்னைப் பத்தி சொன்னான். இந்த உலகத்துல சிறந்த பொருளை யாரும் தங்களதா ஆக்கிக்கிறனும்னு தானே நினைப்பாங்க? நானும் அப்படி நினைச்சதுல தப்பில்லையே வீசி?”

“தப்பில்ல தான் சார். ஆனா, என்னை ஒரு பொருளா நீங்க நினைச்சது தான் சார் தப்பு” என்று மட்டையால் அவர் தலையில் ஓங்கி அடிப்பது போல் கூறினான் வீசி.

“நீ என்னை துரோகின்னு நினைக்கிறியா வீசி? நினைக்கிறதா இருந்தா நினைச்சிக்கோ. ஆனா, உன்னை மாதிரி ஒருத்தனாலும் என் மனசுல இடம் பிடிக்க முடியாதுடா. நல்லாயிருந்துட்டுப் போ!” என்று ஆசிர்வதிக்கும்போதே சிவந்த அவரது வலக்கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கோடாக கீழிறங்கி விட்டது.

தொண்டையைச் செருமி தன்னை சமாளித்துக்கொண்டு வெளியேற முயன்றவரை, “நான் இனிமே வீசியில்ல சார். வருண்.. வருண் சக்கரவர்த்தி” என்றுகூறி நிதானிக்கச் செய்தான் அவன்.

திரும்பிப் பார்த்தவர், அதன் அர்த்தம் புரிந்தவராய், “இனி அவன் உனக்கானவன். அவனை நல்லா பார்த்துக்கோம்மா” என்று வலக்கை உயர்த்தி ஷ்ரதாவை ஆசீர்வதித்து விட்டுப்போனார்.

ஷ்ரதா ராஜமாணிக்கம் கிளம்பிய பின் வீசியின் அருகில் உட்கார்ந்தாள். அவனின் கட்டு போடப்பட்ட காயத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவருமே ஒரு வார்த்தை பேசவில்லை. அந்த மௌனம் வார்த்தைகளிட்டு நிரப்பக்கூடியதாகவும் இல்லை.

‘மன்னிப்பு’ என்ற வார்த்தைரிப்பன் வெட்டி அவர்கள் தங்களது உரையாடலை தற்போது துவங்கலாம் தான். ஆனால், அதை சொல்வதற்கு இருவருமே தயாராக இல்லை. அந்த கணத்தின் இனிமையை அனுபவிக்கவே இருவரும் விரும்பினார்கள்.

அவன் எவ்வளவு துன்புறுத்தியிருந்தாலும் ஷ்ரதாவால் அவனிடம் போலியாகக்கூட முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள முடியாது. இது கேட்பதற்கு முட்டாள் தனமாகத் தோன்றலாம். ஆனால், உண்மை அதுவே.

அவளின் அழகை ஆராதித்தவர்களில் எத்தனையோ பேர் அவளை சுற்றி சுற்றி வந்தார்கள். ஆனால், எது அவளை வீசியை மட்டுமே சுற்ற வைத்தது? எது அவளை அவனை மட்டுமே திரும்ப திரும்ப நினைக்க வைத்தது? எது அவளை அவனை மட்டுமே நேசிக்க வைத்தது?

அந்த ‘எது?’ என்ற ஒன்று இருக்கும் வரை அவளால் அவனிடம் அடிமைப்பட்டு கிடக்கும் தன் மனதை சிறை மீட்பது கடினமே!

எப்போது வீசி ஷ்ரதாவின் கழுத்தை வளைத்து தனது வலக்கையைப் போட்டான்; எப்போது அவள் இதழ் நோக்கி குனிந்தான் என்று தெரியவில்லை. ஆனால், இதழ்கள் நான்கும் ஒன்றோடொன்று ஆயுள் கைதியாய் சிறைப்பட்டுக் கொண்டன!

இனி அவர்களுக்குள்ளான காதல் கணங்கள் ஒவ்வொன்றும் தித்திக்கும் என்பதில் ஐயமில்லை!

சுபம்!

நாவலின் இறுதி வரை என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ். 

இந்த ஆன்டிஹீரோ‌ போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பளித்த எழுத்தாளர்கள் ரியாமூர்த்தி மற்றும் தீக்‌ஷிதாலட்சுமி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  

இக்கதை வண்ணங்கள் 2022 நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. ஆனால், மறுவாசிப்பில் அதன் முடிவை மட்டும் கொஞ்சம் மாற்றியிருக்கிறேன். 

இந்நாவல் குறித்த உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ். 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!