உருத்திரா❤️ 13

 

‘இவன் கண்ணை மறைத்து எதுவும் செய்ய முடியாதா? அப்போ காலம் முழுக்க தங்கக்கூண்டில் மாட்டுன கிளி மாதிரி இங்கேயே இருக்கணுமா?’

அந்த எண்ணமே அவளைப் பலம் இழக்க வைத்தது.

‘இல்லை… நான் இங்கேயே மாட்டிக்கக்கூடாது. எனக்கு இன்னும் நிறைய வேலை, முடிக்க வேண்டிய பொறுப்புகள் இருக்கு. நாளைக்கு சரபன் சார் வந்ததும் பேசணும்’ என்று முடிவு செய்தாள்.

“ ஏன் உங்க முகம் இன்னும் யோசனையாகவே இருக்கு! நிலா எல்லாத்தையும் சமாளிச்சிடுவா கவலைப்படாதிங்க”

பார்வதி ஆறுதலாகப் பேசியும், சோமசுந்தரத்தின் முகத்தில் இருந்த கவலை மட்டும் குறையவில்லை. எதையோ தீவிரமாக யோசித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தார்.

“நம்ம பொண்ணைப் பத்தி தெரியாதா பார்வதி? அவ தைரியமானவன்னு நமக்குத் தெரியும். ஆனா, அந்தத் தம்பியோட நிலைமைதான் கொஞ்சம் பயமுறுத்துது. ருத்ரா இப்போ இருக்கிற நிலையில, நிலாவோட வாழ்க்கை எப்படி இருக்கும்னு நினைச்சாலே மனசு பதறுது”

“எல்லாம் நல்லபடியா நடக்கும். நிலா அந்த வீட்டுக்குப் போன பிறகும் நம்ம பொண்ணுதான். அவளுக்கு எதுவும் ஆக நாம விட்டுடுவோமா?”

மனைவியின் வார்த்தைகளில் இருந்த நம்பிக்கை அவருக்கு ஓரளவு ஆறுதலைக் கொடுத்தது.

“சரி நாளைக்கு நடராஜன் சார் வீட்டுக்குப் போகணும். காலையில ரெடியா இரு திகளையும் லீவு போடச் சொல்லிடு” என்ற அப்பாவின் வார்த்தையில், அறைக்குள் இருந்து வந்த திகள்விழி முகத்தைச் சுளித்தாள்.

“நான் லீவு போடலை அப்பா! எனக்கு அங்க வர விருப்பமும் இல்லை. நீங்க போயிட்டு வாங்க”

“திகள்!” என சோமசுந்தரத்தின் குரல் சற்று கடுமையாக ஒலிக்க, அவளோ அலட்சியமாகத் தந்தையைப் பார்த்தாள்.

“உனக்கு வாய் அதிகமாகிடுச்சு. உன் அக்கா மட்டும் அந்தக் குடும்பத்துக்கு மருமகளாகப் போகலை. நீயும் அந்த வீட்டோட இரண்டாவது மருமகள். நல்லது, கெட்டது எல்லாத்தையும் அனுசரிச்சு பேசக் கத்துக்கணும். நினைச்சதை எல்லாம் எடுத்தெறிஞ்சு பேசுறது நல்லதில்லை”

“எனக்கு அங்க வரப் பிடிக்கலைன்னு சொல்றதுகூடத் தப்பா அப்பா?”

“உன் அக்கா மட்டும் மருமகளாக இருந்தா, நான் ஏன் உன்னை அமைதியா போக சொல்லப்போறேன்? பத்ரன் தம்பியை நீ விரும்புறது எங்களுக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? நாளைக்கு அந்த வீட்டுக்கு நீ கண்டிப்பா வரணும்” என பார்வதி கண்டிப்பாக சொல்லிட,

“அவரு அக்காகூடத் தனியா பேச விட மாட்டேங்கிறாரும்மா! நான் அவளைக் கூட்டிட்டு ஓடிப்போற மாதிரி என்னைப் பார்த்து முறைக்கிறார். என் அக்காவை நான் அவருக்காக விட்டுக்கொடுக்கணுமா?”

திகள் குரல் கலங்கி வந்தது! இத்தனை வருடங்கள் கூடவே இருந்தவளை திடீரென ஒருவன் பிரித்து கொண்டுபோனது மட்டுமல்லாமல் அவளையும் உரிமை கொண்டாடக்கூடாது என்கிறான். 

அக்காவின் வாழ்க்கையில் இன்னொருவர் வருவதில் அவளுக்கு வருத்தமில்லை. ஆனால், அந்த வருகைக்குப் பிறகு தங்களுக்குள் இருந்த உரிமையும் இருக்கக்கூடாது என நினைப்பது எப்படி சரி!

“திகள், நிலாவுக்காக நீ பேசுறது இதுவே கடைசியா இருக்கணும்! உன் வாழ்க்கையைப் பத்தி நீ கவலைப்படு. இதே மாதிரி எல்லார்கிட்டயும் எடுத்தெறிஞ்சு பேசிக்கிட்டு இருந்தா, பத்ரன் தம்பிக்கு உன்னைப் பிடிக்காமப் போயிடும். என்னதான் இருந்தாலும் அவர் ருத்ராவோட தம்பி,அந்த உறவுக்காவது மரியாதை கொடுத்துப் பேசணும்” என்று சோமசுந்தரம் சொன்னார்.

“சரிப்பா நான் எடுத்தெறிஞ்சு பேசலை போதுமா? பிளீஸ் நாளைக்கு நான் வரலை. தயவுசெய்து என்னை விட்டுடுங்க!” என முகத்தைத் திருப்பிக்கொண்டு, வேகமாகத் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.

கதவு மூடியதும் அவளுடைய முகத்தில் இருந்த கோபம் போய் பத்ரன் நினைவில் பசலை தாக்கத் தொடங்கியது.

கடந்த சில நாட்களாகப் பத்ரன் அவளுக்கு ஒருமுறைகூட அழைக்கவில்லை. அவளும் அவனுக்கு அழைக்கவில்லைதான். ஆனால் அவன் தன்னைத் தேடி வருவான், தன்னுடன் பேசுவான் என்ற எதிர்பார்ப்பாப்போடு

ஒவ்வொரு முறையும் போனை எடுத்துப் பார்த்துவிட்டு, அவனிடமிருந்து எந்தச் செய்தியும் வராததைப் பார்த்ததும் ஏமாற்றத்தோடு வைத்துவிடுவாள்.

‘நான் போன் பண்ணலைன்னா இவரு பண்ண மாட்டாரா? அப்படியென்ன பெரிய ஈகோ இவருக்கு?’ என தலையணையைத் தூக்கி எறிந்தவள், அடுத்த நொடியே அதை எடுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டாள்.

‘இப்படியே இருந்துக்கட்டும்! எனக்கென்ன?’வாய்க்குள் முணுமுணுத்தாலும், மனமோ அவனை ஒருமுறையாவது பார்த்துவிட ஏங்கிக்கொண்டிருந்தது.

 

அதே நேரம், நடராஜன் வீட்டில் தன்னுடைய அறையில் இருந்த பத்ரனுக்கும் உறக்கம் வரவில்லை.

படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தவன், இறுதியில் எழுந்து பால்கனிக்கு வந்தான். இரவின் அமைதியில் நிலவை வெறித்தபடி நின்றவனுடைய நினைவுகள் முழுவதும் திகள்விழியையே சுற்றி வந்தன.

‘காதல் வர்ற வரைக்கும் நிம்மதி, சந்தோஷம்னு எல்லாம் நல்லாத்தான் இருக்கும். காதல் வந்துட்டா இருக்கிற நிம்மதியையும் பிடுங்கிட்டுப் போயிடும்’ என்ற வார்த்தைகளுக்கு அவன் காதல் சரியான பொறுத்தம்.

நிலாவுக்காகப் பேசுகிறேன் என்ற பெயரில் தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் துச்சமாக நினைத்துப் பேசுகிறாள் திகள். அவளுடைய கோபத்துக்குப் பின்னால் இருக்கும் காரணம் அவனுக்குப் புரியாமல் இல்லை. 

அவர்களுக்கும் ருத்ராவின் இந்த நிலைமை சரிசெய்யாமல் திருமணம் செய்ய விருப்பம் இல்லை, ருத்ரா சாதாரண ஆளாக இருந்தால் பரவாயில்லை பைத்தியம் என்று பெயர் வாங்கியிருக்கும் போதே குடும்பத்தை வைத்து செய்கிறான். தெளிவாக இருந்தால் அவன் தலைமுடியை கூட அசைக்க முடியாது. 

நிலாவை அப்படியே விட அவன் குடும்பம் தயாராக இல்லை, எந்த சூழ்நிலையும் அவளுக்கு துணையாக நிற்கும். 

இது எதையும் புரிந்துகொள்ளாமல் திகள் எடுத்தெறிந்து பேசும்போது அவனுக்குக் கோபம் வரத்தானே செய்யும்!

நாளைக்கு வீட்டுக்கு வந்து அதிகமா பேசப்போறா! எனக்கு கோவம் வராம இருக்கணும் என்ற யோசனையில் தூங்கிப்போனான் பத்ரன். 

“ஆமாம் நாளைக்கு வீட்டுக்கு வரதா சொல்லியிருக்கேன். நிலா இன்னும் ருத்ராவுக்கு மாத்திரை கொடுத்துட்டுத்தான் இருக்கா. எல்லாம் சரியா நடக்கும்னு நம்புறேன்”

சரபன் யாரிடமோ கைப்பேசியில் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

‘இதைச் செய்யலாமா? வேண்டாமா?’

ஒருமுறை அல்ல, நூறாவது முறையாக யோசித்துவிட்டான்.

நிலாவை அந்தச் சூழ்நிலையிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டுமென்றால், ஏதாவது செய்தாக வேண்டும். ருத்ராவைச் சமாளிப்பது அவனுடைய பொறுப்பு. அதற்காக நிலாவின் வாழ்க்கை பாழாவதை அவனால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

நீண்ட நேர யோசனைக்குப் பிறகு, ஒரு முடிவுக்கு வந்தவன் தூங்க ஆரம்பித்தான்.

 

ஆளாளுக்கு ஒவ்வொரு கவலையில் தூங்க சிரமப்பட, ருத்ராவின் அறையில் 

அவனுடைய அணைப்பில் இதமாகத் தூங்கிக்கொண்டிருந்தாள் நிலாஞ்சி.

சற்று நேரத்திற்கு முன்புவரை அவளைத் தொல்லை செய்து, கோபப்படுத்தி அழவைத்தவனை சமாளிக்க முடியாமல், “போ நான் பக்கத்து ரூம்ல போய்த் தூங்கிக்கிறேன்!” என்று கோபமாக எழுந்து ஓடியவளை, பின்னாலேயே சென்று வாரிச் சுருட்டிக்கொண்டான் அந்த அக்னிராட்சசன்.

“விடு… என்னை விடுடா! எனக்கு கிராண்டா வெட்டிங் வேண்டாம், இரண்டு குடும்பம் மட்டும் இருந்தா போதும்னு சொல்றேன். ஏன் இவ்வளவு பெருசா பண்ணனும்னு அடம்பிடிக்கிற?”

“பாட்டி, தாத்தா ஆசைக்காக ஆரலி”

என்றவன் பதிலில் நிலா அமைதியாகிவிட்டாள்.

அவளுடைய அமைதியைப் பார்த்தவன்,

“என்ன மேடம் யோசனை பலமா இருக்கும் போல? அப்போ ஐடியாவும் பலமாத்தான் இருக்கும். உனக்குக் 

குடுக்கப்போற தண்டனை அதைவிட பலமா இருக்கப்போகுது!” என கண்ணடித்தவனை நெஞ்சில் அடித்தாள் நிலா.

“எப்போ பார்த்தாலும் தண்டனை குடுக்கிறதுலயே குறியா இருக்க! நீ மத்தவங்களுக்குக் கொடுக்கிற தண்டனை இருக்கட்டும். நீ பண்ற தப்புகளுக்கு யாரு தண்டனை கொடுக்கிறது?”

“எனக்கு யாருடி தண்டனை குடுப்பா?” ருத்ரா பேச்சில் இருந்த நக்கலை கண்டு இன்னும் கோபப்பட்டாள்.

“என்னை கத்திமுனையில நிறுத்தி உன்னோட காரியத்தைச் சாதிச்சுக்கிற. எனக்கு விருப்பமே இல்லாம உன் கூட இந்த கல்யாணம்! வேற வழியே இல்லாம உன்னோட வாழ வேண்டிய சூழ்நிலை. இதுக்கெல்லாம் யாரு தண்டனை கொடுக்கிறது?”

அவளுடைய குரலில் இருந்த வலி, ருத்ராவின் சிரிப்பை மறையச் செய்தது.

நிலா கன்னத்தை வருடியவனோ, 

“நீ குடு ஆரலி. உன் கையால என்ன தண்டனை கொடுத்தாலும் வாங்கிக்கிறேன். பட் இப்போ வேண்டாம், எல்லாம் முடிஞ்சதும் உன் கையால என்னைக் கொன்னாகூட சந்தோஷமா செத்துப்போவேன்” என்றவனின் வார்த்தைகளில் இருந்த அழுத்தம் அவள் மனதை அசைத்துபார்த்தது.

“வாயை மூடு!” என அவனுடைய நெஞ்சில் அடித்தவள், அடுத்த நொடியே அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.

“நீ ஒன்னும் சாக வேண்டாம், அமைதியா தூங்கு!” என்ற நிலா முகத்தை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்ட ருத்ரா, அவளுடைய நெற்றியில் முத்தமிட்டான்.

அடுத்த நாள் காலை, நடராஜன் வீட்டில் இரு குடும்பத்தினரும் கூடியிருந்தனர்.

வீட்டில் பெரியவர்கள் திருமணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, ருத்ரா வழக்கம்போல சோபாவில் அமர்ந்து கைப்பேசியில் கேம் விளையாடிக்கொண்டிருந்தான்.

அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த நிலாஞ்சி, தன்னுடைய அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். தங்கை வரவில்லை என வருத்தமாக இருந்தது.

அலுவலகத்திற்கு கிளம்பி தயாராகி கீழே வந்த பத்ரன், முதலில் தேடியது தன்னுடைய குட்டச்சியைத்தான்.

அவளை காணாமல் டென்ஷனில்

முகம் இறுக, யாரிடமும் சொல்லாமல் வேகமாக ஆபிஸ் போய்விட்டான்.

சரபனோ நிலாவிடம் தனியாகப் பேசுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைக்காதா? என்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

அந்த நேரத்தில் பெரியவர்கள் திருமணத்தைப் பற்றிய பேச்சைத் தொடங்கினர்.

“இன்னும் இரண்டு வாரத்துல நல்ல நாள் இருக்கு தம்பி. அன்னைக்கே கல்யாணத்தை வச்சுக்கலாம் அதுக்கப்புறம் ரிசப்ஷன் வச்சுக்கலாம். நீங்க என்ன சொல்றீங்க?” என நடராஜன் கேட்டதும், சோமசுந்தரம் தலையசைத்தார்.

“ கல்யாண தேதி உங்க விருப்பம் சார். எங்க பொண்ணுக்கு நகை, சீர்னு கொஞ்சம் சேர்த்து வச்சிருக்கோம். அதை நீங்க மறுக்காம வாங்கிக்கணும் எங்களுக்கும் மனசுக்கு நிறைவா இருக்கும்”

அவர் சொன்னதைக் கேட்ட ருத்ரா நிமிர்ந்து ஏதோ பேசவர, அவனுடைய கைகளைப் பிடித்து அழுத்தினாள் நிலா.

“வேண்டாம் ருத்ரா. அவங்க மனசைக் கஷ்டப்படுத்தாத, எனக்கு வலிக்கும்”

நிலா சொன்ன எனக்கு வலிக்கும் என்ற வார்த்தை அவனிடம் வேலை செய்தது.

பெரூமூச்சோடு சரி என தலையசைத்தான்.

அவனுடைய தோளில் சாய்ந்துகொண்ட நிலா மெல்லிய குரலில், “எனக்கு டீ போடப்போறேன் உனக்கும் சேர்த்துப் போடவா?” என்று கேட்டாள்.

“ம்ம்ம்” என அவனிடமிருந்து ஒற்றைச் சத்தம் மட்டுமே வர, சமையலறையை நோக்கிச் சென்றாள்.

அவள் சென்றதும், சரபனும் யாரும் கவனிக்காதபடி அவள் பின்னால் போனான்.

சமையலறையில் அடுப்பைப் பற்றவைத்த நிலா, டீக்கான தண்ணீரை வைத்தாள்.

அவளுடைய முகத்தில் இருந்த சோர்வையும் கவனித்த சரபன், கதவை ஒட்டியபடி நின்றான்.

“நிலா!”

“என்ன சார்?”

“இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணம். உனக்கு ஓகேதானே?”

அவனைப் பார்த்து வேதனையாகச் சிரித்த நிலா, “ஏன் சார் நீங்களும் கிண்டல் பண்றிங்க, என் வேதனை உங்களுக்கு மட்டும் இல்ல யாருக்குமே புரியாது. பார்த்திங்கல்ல என் அம்மா, அப்பா ஆசையா எனக்குக் கொடுக்க நினைக்கிற நகையைக்கூட வாங்குறதுக்கு இவர்கிட்ட நான் கெஞ்ச வேண்டியிருக்கு”

அவளுடைய கண்களோ அடுப்பின் மீது கொதித்துக்கொண்டிருந்த டீயைக் விரக்தியாக பார்க்க, மனம் ருத்ரா மீது வெறுப்பிலும் ஆத்திரத்திலும் சிக்கியிருந்தது.

“ எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு இவனைக் கொன்னுட்டு ஜெயிலுக்கு போகக்கூடத் தயங்க மாட்டேன்!”

“ஏன்மா இவ்வளவு கோபப்படுற? கொஞ்சம் அமைதியா இரு. உன் நிலைமை எனக்குப் புரியுது அதனால உனக்கு உதவி பண்ணலாம்னு ஒரு யோசனையோட வந்திருக்கேன்”

 

“இவர்கிட்ட இருந்து தப்பிக்கிறதுதான் இப்போதைக்கு எனக்குத் தேவைப்படுற ஒரே உதவி. அதை உங்களால செய்ய முடியுமா? முடியாதுன்னா விட்டுடுங்க சார், தயவுசெய்து எனக்கு நம்பிக்கை குடுத்து ஏமாத்தாதிங்க.”

சரபன் அவளைச் சில நொடிகள் பார்த்தான்.

“நான் உன்கிட்ட கொடுத்த இன்ஜெக்ஷனும் மருந்தும் பத்திரமா இருக்கா?”

“ஆங்… இருக்கு சார்”

“அது வலிமையான மயக்க மருந்து. கல்யாணத்துக்கு முதல் நாள், அவனுக்கு ஊசி போட உன்னால முடியும்னா போட்டுடு”

நிலாவின் கையிலிருந்த கப் கீழே விழுந்தது.

“ஐயோ!” என பயத்தில் வாயைப் பொத்திக்கொண்டாள்.

“சார் என்ன சொல்றீங்க? அவருக்குத் தெரிஞ்சா…”

“பயப்படாத நிலா! ஒருவேளை ஊசி போட முடியலைனா இதை வச்சுக்கோ”

என ஒரு மாத்திரையை அவளிடம் கொடுத்தான்.

“இதுவும் மயக்க மருந்துதான், இதைத் தண்ணீரில் கலந்து கொடுத்துடு. அவன் மயங்கினதும் நீயும் உன் குடும்பமும் அங்கிருந்து கிளம்பிடணும். விடியுறதுக்குள்ள நீங்க அந்த ஊர்லயே இருக்கக்கூடாது, அதுக்கப்புறம் இங்க நடக்கிறதை நான் பார்த்துக்கிறேன்”

அவன் பேச்சில் நிலாவின் முகம் வெளிறிப்போனது.

“சார் உண்மை தெரிஞ்சா உங்களை அவர் கொன்னுடுவார்”

“அவ்வளவு தூரம் போக மாட்டான்” என சரபன் சாதாரணமாகச் சொன்னாலும், அவனுடைய முகத்தில் பயம் இருந்தது.

“அடிப்பான், திட்டுவான் பரவாயில்லை. உன் குடும்பமே அவன்கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறதுக்கு நான் இரண்டு அடி வாங்கிக்கிறதுல தப்பில்லை”

“ஆனா திகள் கல்யாணம்? அவளுக்கும் பத்ரன் சாருக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருக்காங்களே! அவரு ரொம்ப நல்லவர் சார். என் தங்கச்சிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கப்போகுது நாங்க இங்கிருந்து போயிட்டா…”

“நிலா உன் வாழ்க்கையே இங்கே அந்தரத்தில் தொங்கிட்டு இருக்கு, இந்த நிலையில்கூட உன் தங்கச்சி வாழ்க்கையைப் பத்தி யோசிக்கிறியே!”

அவன் கேள்வியில் அமைதியாக நின்றாள் நிலா!

“பத்ரன் புரிஞ்சுப்பான், அவன் விழியை விரும்புறான். நீ ஏன் போறேன்னு காரணத்தைச் சொன்னா, அவனுக்குப் புரியாம இருக்காது. முதல்ல நீ இங்கிருந்து பாதுகாப்பா வெளியே போ அப்புறம் என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்”

“எனக்குப் பயமா இருக்கு சார். மாட்டிக்கிட்டா என்னை உயிரோட விட மாட்டார்”

“பயந்துகிட்டே இருந்தா எதுவுமே செய்ய முடியாது. கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி, ருத்ரா வீட்டு வாசல்ல என் நண்பனோட கார் காத்திருக்கும். அதுல ஏறி உன் குடும்பத்தை கூட்டிக்கிட்டு ஊரைவிட்டுப் போயிடு. அதற்கான ஏற்பாடுகளை நான் பார்த்துக்கிறேன்”

நிலா அவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.

“அவன் கத்துவான், ஆர்ப்பாட்டம் பண்ணுவான் நாங்க பார்த்துக்கிறோம். நீ மட்டும் அவன் சந்தேகப்படுற மாதிரி நடந்துக்காத, வழக்கம்போல பேசுற மாதிரி பேசு. அவன் உன்கிட்ட எதிர்பார்க்கிற மாதிரியே நடந்துக்கோ”

என்றவன் வார்த்தையில் யோசனையில் நின்றாள் நிலா!

“இன்னும் இரண்டு வாரம் மட்டும்தான் நிலா. வாழ்க்கை முழுக்க ஆரலின்ற அடையாளத்துக்குள்ளேயே சிக்கிக்கிட்டு வாழப்போறியா? இல்ல இரண்டு வாரம் நடிச்சு நிலாவா தப்பிச்சு போகப்போறியா? நல்லா யோசிச்சு முடிவெடு”

அவளுடைய இதயத்தைத் துளைக்கும் வார்த்தைகளைச் சொல்லிவிட்டு சரபன் வெளியேறினான்.

அவன் சென்ற பிறகும் நிலா அசையாமல் நின்றாள்.‘நான் இங்கே இருக்கக்கூடாது…’ என அவளுடைய உதடுகள் மெதுவாக முணுமுணுத்தன.

“ஆரலி!” என்ற ருத்ராவின் குரல் கேட்டதும், திடுக்கிட்டுத் திரும்பிய நிலா,

“ஆங்… வந்துட்டேன்” என முகத்தில் இருந்த கலக்கத்தை மறைத்துக்கொண்டு வேகமாக அவனிடம் சென்றாள்.

“கிளம்பலாம்”

“இன்னும் கொஞ்ச நேரம் ருத்ரா. அம்மா, அப்பாகூடப் பேசிட்டு வரேனே…” என தயக்கத்துடன் கேட்டாள்.

ருத்ரா கண்கள் அவளுடைய முகத்தை ஒருநொடி ஆராய்ந்தன, அடுத்த நொடியே முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு “ஃபைன்” என்றான்.

நிலா கண்களை விரித்து “நிஜமாவா? நான் பேசிட்டு வரவா? திட்ட மாட்டியே?” என்று ஆச்சரியத்தில் கேட்டாள்.

“நோ’ என்றவன் உதட்டில் தோன்றிய சிரிப்பை அவள் கவனிக்கவில்லை.

சந்தோஷத்தில் அவனுடைய கன்னத்தில் முத்தமிட்டவள், “தேங்க்ஸ் ருத்ரா!” என்று சொல்லிவிட்டு பெற்றோரைத் தேடி ஓடினாள்.

நேரம் போனதே தெரியாமல் வீட்டில் பெண்கள் நால்வரும் பேசிச் சிரித்தபடி சமையல் செய்துகொண்டிருந்தனர். சோமசுந்தரம், நடராஜன், மகாதேவன் மூவரும் திருமண ஏற்பாடுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் சோமசுந்தரத்தின் கைப்பேசி ஒலித்தது.

“ஹலோ திகள்?”

“அங்கிள் நான் திகளோட ஃபிரெண்ட் பேசுறேன்!” மறுமுனையில் கேட்ட பதற்றமான குரலில் சோமசுந்தரம் நிமிர்ந்து அமர்ந்தார்.

“என்னம்மா ஆச்சு?”

“அங்கிள் திகள் பிராக்டீஸ் பண்ணிட்டு இருக்கும்போது போர்டு அவ மேல விழுந்துடுச்சு. கை வலி தாங்க முடியாம அழுதுட்டு இருக்கா, நாங்க ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டு வந்திருக்கோம் நீங்க சீக்கிரம் வாங்க!”

என மருத்துவமனையின் பெயரைச் சொல்லிவிட்டு அந்தப் பெண் அழைப்பைத் துண்டித்தாள்.

“பார்வதி, திகள் ஹாஸ்பிடல்ல இருக்காளாம் சீக்கிரம் கிளம்பு!” என்ற சோமசுந்தரத்தின் குரலில் பதற்றம் அதிகமாக இருக்க, “ஐயோ என் பிள்ளைக்கு என்ன ஆச்சோ!”

பார்வதி பதறியபடி எழுந்தாள்.

“விழி தங்கத்துக்கு என்ன ஆச்சு?” என்று அபிராமி கேட்க, “நாங்களும் வரோம். வாங்க!” என்று குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்குக் கிளம்பினர்.

வழியில் சோமசுந்தரத்தின் கைப்பேசிக்கு வங்கியிலிருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ, சார்?”

“சார், உடனே பேங்குக்கு வர முடியுமா? இங்கே பெரிய பிரச்சினையா இருக்கு. மேனேஜர் சார் உங்க மேல ரொம்பக் கோபமா இருக்கார்!” என கிளார்க் பதற்றமாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

ஒரு பக்கம் மகளின் உடல்நிலை, மறுபக்கம் வங்கியில் ஏற்பட்ட பிரச்சினை. சோமசுந்தரத்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

“நிலா நான் பேங்குக்குப் போக வேண்டியிருக்கு. மேனேஜர் உடனே வரச் சொல்றாரு. நீ அம்மாவோட இருந்து தங்கச்சியைப் பார்த்துக்கோ ஏதாவது பிரச்சினைன்னா உடனே எனக்கு போன் பண்ணு.”

“சரிப்பா நீங்க கவலைப்படாம போங்க நான் பார்த்துக்குறேன்” என அப்பாவை அனுப்பிவைத்தவள் மனம் அமைதியடையவில்லை. எல்லாமே ஒரே நேரத்தில் நடப்பதுபோல இருந்தது.

மருத்துவமனை அறைக்குள் நுழைந்ததும், திகள்விழி படுக்கையில் மயக்க நிலையில் இருப்பதை கண்டார்கள்.

அவளுடைய வலது கை விரல்களில் கட்டுப் போடப்பட்டிருந்தது. அருகில் நின்றிருந்த குடும்பத்தினர் அனைவரின் முகத்திலும் கவலை.

சற்று நேரத்தில் அறைக்குள் வந்த டாக்டர் “நல்லவேளை அந்தப் போர்டு விழும்போது கையால தாங்கியிருக்காங்க. வேகமா தலையிலயோ தோள்பட்டையிலயோ விழுந்திருந்தா பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். கைல தசை வீக்கம் தான் ஒரு வாரத்துல சரியாகிடும். அதுவரைக்கும் கைக்கு நல்லா ஓய்வு கொடுக்கணும்” என தெளிவாக சொல்லிவிட்டு போனார்.

என்ன பண்ண இதோட போச்சே என நிம்மதி அடைந்தாலும், போட்டியை நினைத்து கவலையாக இருந்தனர்.

“அவ எவ்வளவு ஆசையா அந்தப் போட்டிக்குத் தயாரானா தெரியுமா?” என்று வருத்தப்பட்டார் சாம்பவி.

“விழி எழுந்ததும் இதை எப்படிச் சொல்லப்போறோம்னே தெரியலை. கண்டிப்பா அழுவா” என்று நிலா கவலையுடன் சொன்னாள்.

அனைவரும் கவலையுடன் நின்றுகொண்டிருந்தபோது, அறைக்குள் வேகமாக நுழைந்த பத்ரன், “எல்லாரும் வெளியே வெயிட் பண்ணுங்க” என்றான்.

திடீரென வந்தான் வெளிய போக சொல்றான் என அனைவரும் முழிக்க “வெளியே போங்கன்னு சொன்னேன்!” என்ற கர்ஜனையில் வேறு வழியின்றி அனைவரும் வெளியேறினர்.

‘அண்ணனுக்கு மேல சைக்கோவா இருப்பான் போல’ என்று நிலா திட்டியபடி வெளியே வந்தாள்.

“நிலா தங்கம் என் பேரனை சைக்கோனு தான மனசுல திட்டுன’ என்ற அபி பாட்டியை கண்டு முழித்தவளோ “ம்கூம்” என்று மறுப்பாக தலையை ஆட்டினாள்.

“பரவாயில்ல திட்டிக்கோ அண்ணன் சைக்கோ நம்பர் ஒன், இவன் இரண்டாவது தான் வருவான்” என்ற பாட்டியை பாவமாக பார்த்தாள் நிலா.

‘லூசு குடும்பம் இது!’ என்று நினைக்காமல் இருக்கமுடியவில்லை. 

அத்தை அவளை பயம்காட்டாதிங்க! என்றபடி சாம்பவி அவளருகில் வந்தார்.

“நிலா ருத்ராகிட்டப் பேசினியா?”

அவர் கேள்வியில் ‘ஐயோ! அவனை மறந்துட்டேனே!’ என்ற பதற்றத்துடன் போனை எடுத்து, ருத்ராவுக்கு அழைத்தாள்.

அவனுக்கு போன் போகவில்லை, ‘அவனுக்கு போன் போகல ஒருவேளை இதுக்குக் காரணம்…”

நிலா உடனே நடராஜனை நோக்கி அழுத்தமான பார்வையை கொடுத்துவிட்டு வெளியே போக, நடராஜன் பெருமூச்சோடு அமர்ந்தார்.

தள்ளாத வயதில் அவரும் என்ன செய்வார்! அடித்து திருத்தும் வயதிலா பேரன் இருக்கிறான், அமைதியாக அமர்ந்துவிட்டார்.

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!