மலர் -23
“நான் உனக்கு துரோகம் பண்ணல ரெஜி . எங்கேஜ்மெண்ட் அன்னிக்கு என்ன நடந்ததுன்னு யோசிச்சு பாரு. உனக்குத்தான் எல்லாத்துக்குமே வேற பிரண்ட்ஸ் இருக்காங்களே? அப்புறம் ஒப்புக்கு சப்பானியா நான் எதுக்கு ? என்னோட தாலி எதுக்கு?”
ஆனந்திடம் குழைந்தாள். கண்களை துடைத்துக் கொண்டாள் .
“ம்ம்! ஒத்துக்கறேன். நாந்தான் தப்பு பண்ணினேன். ஏதோ கோபத்துல சொன்னா அதை அப்டியே எடுத்துக்குவியா? எல்லாத்தையும் மறந்துடலாம். நீ தாத்தா பாட்டிக்காக தானே கல்யாணம் பண்ணிகிட்ட ?
“நீ அவ கூட செக்ஸ் வச்சிகிட்டியா? இல்ல தானே? இருக்காது. உன்னால எனக்கு துரோகம் பண்ண முடியாது. எனக்குத் தெரியும்.” அவளேப் பேசிக் கொண்டிருந்தாள்.
“ இந்த சனியனை டைவர்ஸ் பண்ணிடு . நாம ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கலாம், கல்யாணம் பண்ணிக்கலாம். ஹனி மூனுக்கு ஸ்விஸ் போகலாம், அங்க நீயும் நானும் மட்டும். உனக்கு எவ்ளோ குழந்தைங்க வேணுமோ அவ்ளோ பெத்துக்கலாம். ஜாலியா ரொமான்ஸ் பண்ணலாம் , ஓகேவா ?”
அண்ணன் மதன் சொன்ன வார்த்தைகள் தான் அவளை இப்படியெல்லாம் கெஞ்ச வைத்தது.
வர்மா சொத்துக்களை மதன் பேரில் பாதி எழுதி வைத்திருந்தார். மேலும் தொழில் முறை முடிவுகளை எடுப்பதற்கும் அவனுக்கே உரிமை கொடுத்திருந்தார். மகளுக்கு கார்டியனாக மதன் தான் இருக்க வேணும். மீதம் இருக்கும் அனைத்து சொத்துக்களும் ரெஜிதாவின் குழந்தைக்கு 18 வயதிற்கு பிறகே கிடைக்கும். உயிலை எழுதி வைத்தவர், அனைத்தையும் விட்டு விட்டு இமயத்தில் இருக்கும் ஒரு ஆஸ்ரமத்திற்கு சேவை செய்ய சென்று விட்டார்.
மகளுக்கு பொறுப்பு இல்லாததாலும் , சொத்துக்காக ஆசைப்பட்டு யாரும் மகளை ஏமாற்றி விடக் கூடாது என்பதாலும் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறி இருந்தார்.
“இங்க பாரு ரெஜிதா! பிரண்ட்ஸ் பிரண்ட்ஸ்ன்னு நீ சுத்தினது போதும் . இதெல்லாம் நிறுத்திக்க. ஆனந்துக்கும் அவங்க வீட்டுல நர்சா வந்த பொண்னோடையே கல்யாணம் ஆகிடுச்சாம். ஒரு வருடமாவது ஒழுங்கா இரு. ஆபிசுக்கு வந்து பிஸ்னஸ் கத்துக்க. அப்புறம் வேற யாராவது ஒரு நல்ல மாப்பிளையை பாத்து கல்யாணம் பண்ணி வைக்கறேன். சீக்கிரமா ஒரு குழந்தையை பெத்துக்கோ. நீ பிசினசுல என்ன சம்பாதிக்கரையோ அது எல்லாத்தையும் நீயே எடுத்துக்கோ”
“அது வரைக்கும் ? உன்கிட்ட நான் பிச்சை எடுக்கணுமா?”
“அண்ணன் தங்கச்சிக்கு கொடுக்கறது ஒன்னும் பிச்சை இல்லை . ஆனா நான் கட்டுபாடாத்தான் கொடுப்பேன். தேவையானதுக்குத் தான் செலவு பண்ணுவேன். நீ தண்ணி அடிக்கவும், கஞ்சா அடிக்கவும் ஒரு பைசா கிடைக்காது” சொல்லி விட்டு வேலைக்கு சென்று விட்டான்.
அதுதான் ரெஜிதாவிற்கு இப்படி ஒரு வெறியை கொடுத்திருந்தது. ரெஜிதா ஆனந்தை சமாதானப் படுத்த இன்னும் அருகில் வந்தாள் . அவன் கவனமாக தள்ளி நின்று கைகளை பின்னே கட்டிக் கொண்டான். ரெஜிதாவுக்கு புரிந்து விட்டது.
தன்னிடம் கொஞ்சிக் குழைந்தவன் இவன் இல்லை. தொழிலில் காட்டும் நிமிர்வை அவன் எப்போதுமே இவளிடம் காட்டியதில்லை. இப்போது காட்டி விட்டான்.
“இங்க பாரு ரெஜி! இந்த கல்யாணம் நான் யாருக்காக பண்ணிக்கிட்டேன்? தாத்தா பாட்டிக்காக . அப்புறம் அவங்கள கஷ்டப்படுதிட்டு நான் எcபடி உன்ன கல்யாணம் பண்ண முடியும் ?”
“அப்டின்னா உனக்கு என்ன விட அவங்க தான் முக்கியமா ?”
“இதுக்கான பதில் உனக்கே நல்லா தெரியும் ரெஜி, அதுவும் இல்லாம இனிமே உன்னோட மைண்ட் செட் டுக்கும் எனக்கும் ஒத்து வருமான்னு எனக்கே சந்தேகம் வந்துருச்சு. நீயெல்லாம் வேற. நாங்கல்லாம் எவ்ளோ பெரிய பணக்காரங்களா ஆனாலும் பழைய சீப்பான புத்தியிலிருந்து எங்களால வெளில வர முடியாது. தண்ணி, சிகரெட், கஞ்சா இன்னும் இத்யாதிகள் என்னால எடுத்துக்கவும் முடியாது. ஏத்துக்கவும் முடியாது. ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிச்ச கௌரவம் எல்லாம் ஜஸ்ட்! ஜஸ்ட்! சில நொடிகள்ல போய்டுச்சு. அதுவும் உன்னால.”
பல்லைக் கடித்து கோபத்தை மறைத்துக் கொண்டான்.
“என்னால அதை எல்லாம் எப்படி யோசிக்காம இருக்க முடியும்? தாத்தா பாட்டி அவங்களையும் நான் இழக்க விரும்பல. அதுவும் உனக்காக. சோ நீ வேற யாராவது பார்த்துக்கோ”
“கல்யாணம் பண்ணிக்க கொள்” என்ற வார்த்தையை கவனமாகத் தவிர்த்தான்.
“நான் உனக்கு இன்னொன்னும் தெளிவா சொல்லிக்கறேன். எது எப்படி இருந்தாலும் அவதான் எனக்கு மனைவி. அதை மாத்த முடியாது” அழுத்தமாக சொன்னான்.
அவனே உணராமல் சொன்ன வார்த்தைகள் தான் இறுதியில் வந்தது. அதன் முக்கியத்துவம் அவன் அறியவில்லை. ஆனால் அவனை மாத்த முடியாது என்பதை ரெஜிதா உணர்ந்து விட்டாள் . இருப்பினும் முயற்சியை விடாதவளாக,
அவன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் சட்டென எம்பி அவன் உதட்டோடு உதடு பொருத்தினாள் .
“நீ எங்கிட்ட நிச்சயம் வருவ ஆனந்த் “
அவள் சொல்லி விட்டு போய் விட்டாள் . இவனுக்குத்தான் அருவருப்பாக இருந்தது. எத்தனை நாட்கள் அவளுடன் இதழ் பொருத்தி இருப்பான்? அதில் தேன் சுவை இருந்ததா? இதழில் தேன் சுவை உண்டு என்பதை காட்டக் கூடியவள் அடக்க முடியாமல் அங்கே தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
முத்தம் என்பதையே, ஏன் இந்த உலகத்தையே முதன் முதலில் காட்டிய ஜீவனும் அங்கே தான் இருந்தது. வீட்டு வாயிலில்..
இனி ஆனந்த் எப்படி இருக்கப் போகிறான்? வாழ்கையில் முதன் முதலாக சரியான முடிவை எடுத்திருக்கிறான். எப்போதும் இப்படி இருப்பானா? இதுதான் முதல் முறையா? பார்க்கலாம்.
அன்று முழுவதுமே அமிர்தா அடங்காமல், அடக்க முடியாமல் அழுது கொண்டிருந்தாள். அவள் நிலைமை புரிந்த தாத்தா அவளை பார்க்க வரவில்லை. பாட்டி சொல்லியும் திட்டியும் கூட அவள் அழுகை நின்ற பாடில்லை. பாட்டிக்கு புரிந்து விட்டது. இப்போ அமிர்தாவின் தேவை அறிவுரை அல்ல. ஆனந்த் மட்டுமே. அவன் வந்து தான் அவளைத் தேற்ற வேண்டும். ஆனந்திடம் வந்து பாட்டி எத்தனையோ கெஞ்சி பார்த்தார்.
“பாட்டி சும்மா இந்த மாதிரி சில்லி திங்ஸ்க்கெல்லாம் என்கரேஜ் பண்ணாதீங்க.”
“இது ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல பா . ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.”
“பாட்டி என்ன தொந்தரவு பண்ணாதீங்க. எனக்கு ஈவினிங் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் இங்க வீட்டுல இருக்கறது ப்ரிபரேஷனுக்காக உங்களுக்கு பஞ்சாயத்து பண்ண இல்ல” சொல்லி விட்டு வேகமாக அலுவல் அறைக்குச் சென்று தன் வேலையை தொடர்ந்தான்.
பாட்டி தன் அறையில் சோர்ந்து போய் அமர்ந்தார்.
“என்ன சுந்தரி! அவ எப்படி இருக்கா ?”
“என்னத்த சொல்ல? அவளால இந்த அவமானத்தை தாங்கிக்கவே முடியல. என்னதான் இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு இது பெரிய விஷயம் தானே ?”
“நாம இந்த கல்யாணத்த பண்ணி பெரிய தப்பு பண்ணிட்டோமோ ?”
“ஏண்டி ? இன்னிக்கு ரெஜிதா வந்து கத்தினதுல பயந்துட்டியா ?
“ஆமாங்க! அது மட்டும் இல்ல , ஒரே ஒரு வார்த்தை ஆனந்த் வந்து அழாதன்னு சொன்னா அந்த பொண்ணுக்கு சமாதானமா இருக்கும். ஆனா அவன் என்னையே கத்திட்டு போறான். எனக்கென்னமோ ரொம்ப பயமா இருக்குங்க. ஆனந்த் மனசுல இன்னும் அந்த ரெஜிதா தான் இருக்காளோ ? அவ பின்னாடியே இவன் போய்ட்டா அமிர்தாவோட நிலைமை என்ன ? நாம பண்ணது ரொம்ப பெரிய தப்புங்க”
தாத்தாவுக்கும் மனதில் ஏதோ ஒரு உறுத்தல் இருந்தது.
முரளிக்கு அழைத்து சில நாட்களுக்கு அக்காவை வீட்டில் வைத்துக் கொள்ளச் சொல்லி போன் செய்தார். முரளியும் வந்து அழைத்துச் சென்றான். ஆனால் அடுத்த இரண்டு நாட்களிலேயே வந்து விட்டாள் . என்னதான் இருந்தாலும் பொண்ணுங்களுக்கு அவங்க புருஷன் வீடுதான். மனதில் சந்தோசப்பட்டுக் கொண்டார் அமிர்தாவின் அன்னை.
மனைவி வீட்டில் இல்லாததும் கணவனுக்குத் தெரியாது. அவள் திரும்பியதும் தெரியாது. அவள் இல்லாமல் பெரியவர்களுக்கும் நாய்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் கூட கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனந்தன் பொறுத்தவரை வீட்டில் பல சாமான்கள் இருக்கும், அமிர்த்தாவும் இருப்பாள். அவளுக்கு அவ்வளவுதான் மரியாதை . பெரியவர்களின் வார்த்தைக்காக ஒரு கட்டாய கல்யாணம். அவ்வளவே. அதில் மனம், உணர்ச்சி, காதல் இது எதுவும் கிடையாது.
வீட்டிற்கு அவள் திரும்பி வந்தாலும் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. முத்து வைரனிடம் இருந்து தப்பிக்க உடம்பு முடியவில்லை என்று சொல்லி ஏமாற்றினாள் . நாம் என்ன சொன்னாலும் நம்பும் குழந்தைகள் தானே அவை. அவ்வப்போது அவளுக்கு உடல் நலமாக இருக்கிறாளா என்று வந்து பார்த்துக் கொள்வார்கள். அவள் படுத்துக் கொண்டால் அருகில் வந்து அமைதியாக அமர்ந்து கொள்வார்கள்.
என்னதான் கஷ்டப்பட்டு மனதை தேற்றிக் கொண்டாலும் அமிர்தாவுக்கு ஆண் வேலைக்காரர்கள் முன்பு செல்வதற்கு வெட்கமாகத்தான் இருந்தது. யாருக்கும் தெரியாத மாதிரி ஒளிந்து ஒளிந்து வேலைக்குச் செல்வாள், ஒளிந்து ஒளிந்து அறைக்கு திரும்பி விடுவாள். மீண்டும் வெள்ளிக் கிழமை வந்தது. அவளும் அறையை விட்டு வெளியில் வரவில்லை.
அறையை சுத்தம் செய்ய வந்த கமலாவிடம், “அக்கா! இன்னிக்கு அவங்களையே செஞ்சு சாப்பிட சொல்லுங்க” என்று கூறி விட்டாள் .
அடுத்த சில நிமிடங்களில் வந்தவள், “அம்மா நீங்க செய்யலைன்னா யாருக்கும் சாப்பாடு வேண்டான்னு சொல்லிட்டாங்கம்மா.”
“ஏன் ? இந்த பிடிவாதம் ?”
“அவங்களுக்கு அவங்க அம்மா செஞ்சு குடுத்தாதான் சாப்பிடுவார்களாம்.”
அவர்களுக்காக மனம் அடித்துக் கொண்டது.
“சரி! நான் செய்யறேன். ஆனா அவங்க யாரும் அங்க இருக்கக் கூடாது. நீங்க வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.”
“சரிங்கம்மா”
சமையலை முடித்தாள் .
தலைமை சமையல்காரர், “எந்த அம்மாவும் சமைச்சு வச்சுட்டு போடாம இருக்கமாட்டாங்கம்மா”
தலை குனிந்து அனைவருக்கும் பறி மாறினாள் . அவர்களின் முகத்தை கூட அவளால் பார்க்க முடியவில்லை.
இலையில் வைத்தும் யாரும் உண்ணாததைக் கண்டு அவர்களின் முகத்தை பார்த்தாள் .
“அம்மாவை தப்பா பாக்கற அளவுக்கு நாங்க யாரும் கெட்டவங்க இல்லம்மா.”
அனைவரும் கையெடுத்துக் கும்பிட்டனர். அவர்களின் அன்பில் அவளுக்கு அழுகை வந்தது. கண்களில் வந்த கண்ணீரை கழுவிக் கொண்டு முகம் துடைத்து அனைவருக்கும் மன மகிழ்வுடன் பரிமாறினாள்.
அன்னபூரணியாக நின்றவளை பார்த்த பாட்டிக்கும் மனம் நிம்மதி அடைந்தது. ஆனால் இதை எல்லாம் ஆனந்தன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
அவள் உணவருந்தியதும் அவளை அலுவல் அறைக்கு அழைத்தான்.
முக்கியமாக கணினியில் வேலை செய்துக் கொண்டிருந்தவன் பேசுவதற்காக இவள் காத்துக் கொண்டிருந்தாள். கதவின் அருகில் நின்றிருந்தவளை “உள்ளே வா” என்று அழைக்கவும் இல்லை, “உட்கார்” என்று சொல்லவுமில்லை.
அவளை பார்த்து தலை தூக்கியவன், “அமிர்தா லாக் தி டோர்”
கதவு மூடப்பட்டது.
“எஸ் அமிர்தா! சாப்பிட்டியா?” அதில் அன்பில்லை . பார்மலாக இருந்தது.
“ம் ஆச்சு”
“குட்! லாஸ்ட் வீக் நடந்த பிரச்சனைல நீ கொஞ்சம் அப்சட்டா இருந்த ரைட்?”
பதில் சொல்லவில்லை.
“மேடம் இப்போ சரியாகிடீங்க போல!”
“ம்!” மெதுவாக தலையாட்டினாள்.
“குட். பட் இதுக்கு முன்னாடி இந்த ஒன் வீக் நீ எப்படி மத்தவங்க கிட்டேர்ந்து ஒதுங்கி இருந்தியோ அதே மாதிரியே இருந்துக்கோ.”
“ஏன்?”
“யூ டாமிட்! நீ இங்கேர்ந்து போக போறவன்னு அவங்களுக்குத் தெரியாது. பட் உனக்கு தெரியுமில்ல ? முக்கியமா அந்த வாயில்லா ஜீவன்கள். நம்மள மாதிரி அதுங்களுக்கு நடிக்க தெரியாது. சொன்னதை செய்.”
முள் மலரும் ..
