15.வேய்ந்தனனின் வல்லினம்

15.வல்லினம்

சுற்றிலும் புல்வெளிகள் சூழ்ந்திருக்க, மரங்கள் சூழ் அவ்விடத்தில், சாம்பிராணியின் மணம் நிரம்பியிருந்தது.  மிகவும் புகழ்பெற்ற மடம் அது. தன் நண்பர்களின் சொல்கேட்டு அவ்விடமிருக்கும் புகழ்பெற்ற ஜோதிடரான பரமாநந்தனைக் காண்பதற்காக வந்திருந்தார் சத்யராஜ். 

பிரகல்யா காணாமல் சென்று ஆறு மாதங்கள் கடந்த நிலையில், அவர் தேடாத இடமே இல்லை. காவல்துறையில் புகார் கொடுத்திருந்தும் தன் மகள் பற்றிய செய்தி அவரை வந்தடையவே இல்லை. 

அன்பு மகளின் பிரிவு அவரையும் அவரது மனைவியையும் வாட்டியெடுக்க, அடுக்கடுக்காக தோன்றியிருக்கும் இந்த இன்னல்களிலிருந்து மீள்வதற்காக கடைசி வழியாக ஜோதிடத்தை நம்பி வந்திருந்தார் மனிதர்.

எடை குறைந்து, கவலையில் பொலிவிழந்து போய் மனக்கஷ்டங்களுடன் அவர் மடத்திற்குள் நுழைந்திருக்க, பரமாநந்தனின் சீடர்கள் அவரை காத்திருக்குமாறு கூறினார்.

பூஜை அனைத்தையும் முடித்துவிட்டு வந்தவர் அவரது இருக்கையில் சம்மணமிட்டு அமர்ந்துக்கொண்டார் பரமாநந்தன். பின் ஒவ்வொருவராக அவரைக் காண்பதற்காக உள்ளே அனுப்பியிருக்க, ஐந்தாவது ஆளாக உள்ளே நுழைந்தார் சத்யராஜ்.

அவரது நிர்மலமான முகம், மங்களகரமான தோற்றமும் இவரது மனதிலும் நிம்மதியை படரச்செய்திருக்க, கைகூப்பி வணங்கினார் சத்யராஜ்.

“உட்காருங்க.” என்றவர் கூறியதும் அவருக்கு பக்கவாட்டில் அமைந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டார் சத்யராஜ்.

“ஐயா. அது வந்து.” என்றவர் தொடங்கும் முன்னே அவரைப் பற்றி கணித்தவர், “ரொம்ப பெரிய துன்பம் வந்து உங்களை ஆட்டுது. பெற்றெடுத்தவளோட பிரிவுல வருந்தி இப்போ என்னைத்தேடி வந்திருக்கீங்க.” என்றவர் பட்டென்று கூறியதும், அவரது பதிலில் அன்னிச்சையாக விரிந்தது சத்யராஜின் கண்கள்.

பொதுவாகவே ஜோதிடத்தின் மீது ஓரளவுக்கு நம்பிக்கை அவருக்கு இருந்தது. தற்போது அது பன்மடங்கு அதிகரித்திருக்க, தன் மகளைப் பற்றி அறிந்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை பிறந்தது அவருக்கு.

“ஐயா என் மகள் இப்போ எங்க இருக்காணு மட்டும் தெரிஞ்சா போதும். அவ எப்படி இருக்கா, என்ன பண்றானு தெரியாமல் தினம்தினம் செத்து பிழைக்குறோம். இந்த ஆறுமாசமா நாங்க தேடாத இடமில்லை.” கண்கலங்க கூறினார்.

“கவலைப்படாதீங்க. சீக்கிரமே உங்க மகள் உங்களைத் தேடிவரப் போறா. உங்க பொண்ணோட ஜாதகத்தைக் கொடுங்க.” என்றவர் கடவுளை வணங்கி பின் சோலியை உருட்டினார்.

சத்யராஜ் அவரது பதிலுக்காக காத்திருந்தார்.

“உங்க மூத்த பொண்ணுக்கு திருமண தோஷம் இருந்திருக்கு. மேடைவரை சென்று கல்யாணம் நின்றிருக்குமே?” என்றவர் கூறியநொடி, சத்யராஜ் வியந்தவர்,

“ஆமாங்க ஐயா. பொண்ணு கல்யாணம் நின்றுச்சு. அந்த கல்யாணத்துல தான் என்ன பொண்ணு எங்களைவிட்டு போனாள்.”

“ம்ம்ம்ம். உங்க இரண்டாவது பொண்ணோட மாங்கல்ய பலம் தான் உங்க மூத்த பொண்ணை உங்ககிட்ட சேர்க்கப் போகுது.”

“புரியலங்க ஐயா. மூத்த பொண்ணு இருக்கப்போ இரண்டாவது பொண்ணுக்கு எப்படி கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?”

“நான் சொல்லலைங்க. அவங்க விதி அதுதான் சொல்லுது. உங்க இரண்டாவது மகள் கழுத்தில் தாலி ஏறினால் மட்டுமே மூத்தவளுக்கு திருமணம் ஆகும் என்று ஜாதகம் அடிச்சு சொல்லுது.”

“அப்போ அதுனால தான் இவ்வளவு பிரச்சினையுமா?”

‘வேற என்ன காரணம் இருக்கப் போகுது. நல்லா இருந்த பெண் கல்யாணத்தை விட்டு எதற்காக போகணும்? எல்லாம் அவன் செயல். விதியை மதியால் கூட மாற்ற முடியாது.” இறைவனை வணங்கியபடி கூறினார்.

“அப்போ இதுக்கு என்ன தான் வழி. எனக்கு எங்க பொண்ணு கிடைக்கணும். என்ன பரிகாரம் வேண்டுமானாலும் பண்றேன்.”

“உங்க இரண்டாவது மகளுக்கு வரும் தை மாதம் முடிவதற்குள் திருமணத்தை நடத்தி வைங்க. மூத்தவள் தானாக உங்களிடம் வந்து சேருவாள்.” மிக உறுதியாக கூறினார் அவர்.

“என் பொண்ணு வந்துட்டா அது மட்டும் போதும். என் இரண்டு பொண்ணுங்களும் சந்தோசமா இருந்தாலே போதும் எனக்கு.” என்று மனதாரக் கூறியவர் தட்சனையை வழங்கியபடி அவரிடமிருந்து விடைபெற்றிருக்க,  செல்லும் அவரைக் கண்டு காரணத்துடன் புன்னகைத்தார் பரமாநந்தன்.

                       ***

பிரம்மாண்டமான கட்டிடத்தின் முன்பு நின்றிருந்த வந்தனாவோ, “இதுதான் உங்க மாமாவோட கம்பெனியா? அபூ. செமையா இருக்குடி.” என்று வியந்த வண்ணம் கூறினாள்.

“இதுமட்டுமில்லை ருத் மாமாக்கு நிறைய கம்பெனி இருக்கு..” என்றாள் அபூர்வா பெருமிதம் பொங்க.

“அப்போ இண்ட்ர்ன்சிப் இங்கேயே வந்திருக்கலாமே. சுலபமா மார்க் வாங்கியிருக்கலாம்.”

“ஆசை தான். மாமா படிப்பு விசயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதுவும் இல்லாமல் அவரு ரொம்ப பிஷி. நானே கஷ்டப்பட்டு மாமாவோட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கேனா பார்த்துக்கோ.” என்று கூறிக்கொண்டே தன் தோழியை உள்ளே அழைத்துச் சென்றவள், ருத்ரஜித்தை பார்க்க வந்திருப்பதாக கூறிக்கொண்டிருக்க, அச்செய்தி முதலில் வைகைக்கு தெரிவிக்கப்பட்டது.

வந்தனாவோ கம்பெனியின் உள்ளேயிருக்கும் பிரம்மாண்டத்தை விழி விரித்துப் பார்த்தவள், “வாவ்” என்று சொல்லிக்கொண்டே திரும்ப அவ்விடம் வந்து சேர்ந்தான் வைகைசெல்வன்.

“ஹாய்… அபூர்வா வாங்க.” என்றவன் வரவேற்க, 

“ஹாய் வைகை அண்ணா. மாமாவை பார்க்கணும்.” என்றாள் புன்னகை மாறாமல். 

“இப்போ தான் பாஸ் மீட்டிங் முடிச்சுட்டு, ரெஸ்ட் எடுக்க அவரோட ரூம் போயிருக்காரு. நீங்க வேணா அங்க போய் பாருங்க அபூர்வா.”

“ஓகே அண்ணா. எப்படி போகணும்?”

“கடைசி பிளோர், ருத்ரஜித் சார் ரூம் இருக்கும்.” என்றவன் கூற, அவனிடமிருந்து விடைபெற்ற அபூர்வாவோ முன்னோக்கி செல்ல, அவள் பின்னே சென்றாள் வந்தனா.

“ஹலோ மேடம் நீங்க எங்க போறீங்க?” என்று வைகை சொடுக்கிட்டு அழைக்க, வந்தனாவோ திருதிருவென விழித்தபடி அபூர்வாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

“அண்ணா இவ என்னோட பிரெண்டு தான்.” என்றாள் அபூர்வா.

“சாரிமா. பேமலி மெம்பர்ஸ் தவிர யாரும் அலோவ்டு இல்லை. ஏனா எங்களுக்கு சார் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்.” என்றவன் கூறினாலும் அவன் மனசாட்சியோ, ‘அவருகிட்டயிருந்து தான் மத்தவங்களுக்கு பாதுகாப்பு வேணும்டா மடையா’ என்றுரைக்க, அந்த நிமிடம் மயூராவின் முகம் அவன் கண் முன் வந்து சென்றது. என்ன தான் ஆறு மாதங்கள் ஓடினாலும் கண்முன்னே நடந்த நிகழ்வை, இன்று நினைத்தாலும் அவனுக்கு சங்கடத்தினை ஏற்படுத்த தான் செய்தது.

“என்ன பார்த்தா கொலைகாரி மாதிரியா தெரியுது?” என்ற வந்தனாவின் முணுமுணுப்பு வைகையின் காதுகளில் தெளிவாக வந்து விழுந்தது.

‘குட்டிபிசாசு ரொம்ப பேசுதே.’ என்று நினைத்துக் கொண்டவன், “அபூர்வா உங்க பிரெண்டுக்கு எடுத்து சொல்லுங்க. எனக்கு அசைன் பண்ண வேலையைத் தான் நான் பார்க்குறேன்.” என்றான் அவளை முறைத்துக்கொண்டே.

“வந்து ப்ளீஸ் டி. நான் வர்றவரைக்கும் நீ விசிட்டர் ரூம்ல வெயிட் பண்ணு செல்லம்.” என்று செல்லம் போட்டு அபூர்வா கெஞ்சியதில், ஒரு வழியாக சம்மதித்தாள் வந்தனா.

‘உன்கூட வந்தேன்ல என்னை சொல்லணும்.’ என்று தலையில் அடிக்காத குறையாக நினைத்தவள், “சீக்கிரம் போய்ட்டு வா.” என்று சிடுசிடுப்பாக கூற, அபூர்வாவோ அவளிடமிருந்து விடைபெற்று ருத்ரஜித்தைக் காண விரைந்தாள்.

இங்கு வைகையோ வந்தனாவை முறைத்தவன், “ஹே பாப்பா அங்க லெஃப்ட் திரும்பி ரைட் கட் பண்ணினா விசிட்டர் ரூம் இருக்கும். அங்க போய் வெயிட் பண்ணு.” என்றான் கடுகடுத்தக் குரலில்.

“பாப்பாவா. நான் பெரிய பொண்ணுங்க.” என்று கருவிழியை உருட்டிபடி கூற, அவனோ “சோ வாட்” என்றான் அசட்டையாக.

“சரியான சிடுமூஞ்சி.” என்று முணுமுணுத்தாள் அவள்.

“வாட்?” என்றவன் புருவம் தூக்க, அவளுக்கோ அவனது குரலில் நடுக்கம் தோன்றியது.

“ஒண்ணும் இல்லை. நீங்க சொன்ன விசிட்டர் அறைக்கு கூப்பிட்டு போக முடியுமா?” என்றாள் சமாளிப்பாக.

“தெளிவா தான சொன்னேன். காதுல விழலயோ?”

“இல்லை புரியலை.” என்றவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

“சரி வா உன்னை கொண்டு போய் விடுறேன்.” என்றவன் சலித்துக்கொள்ள,

“அப்படி சலிப்பா யாரும் என்ன விட வேண்டாம். நானே போயிக்குறேன்.” என்று வெடுக்கென்று கூறியவள் எந்த புறம் போவதென்று தடுமாறியபடி நிற்க, அவளது கைகளை பற்றி  அழைத்து சென்றான் வைகை.

அவனது திடீர் செயலில் அதிர்ந்தவள், அவனை நிமிர்ந்து பார்க்க, “இதுதான் விசிட்டர் ரூம்.வெயிட் பண்ணு.” என்றவனோ அதற்கு மேல் அவ்விடம் நிற்காமல் சென்று விட்டான்.

“சரியான சிடுமூஞ்சி கார மிளகாய்.” என்றவள் அவனை முறைத்துக்கொண்டே இருக்கைக்குச் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

இங்கு அபூர்வாவோ ருத்ரஜித்தின் அறையைத் தட்டினாள்.  “எஸ் கமின்” என்றவனின் அழைப்பில் உள்ளே சென்றவள் அவ்விடத்தின் பிரம்மிப்பில் தன் மலர் கண்களை விரித்தாள்.

பொதுவாகவே ருத்ரஜித்திற்கு இருக்கும் வேலைப்பளுவில் அவன் வீட்டிற்கு செல்வதற்கு கூட நேரமிருக்காது. ஆதலால் தான் தனது ஒவ்வொரு ஆபிஸின் மேல்தளத்திலும் தனக்கென ஒரு சாம்ராஜியத்தையே அமைத்து வைத்திருந்தான்.

மிக பிரம்மாண்டமான மின்விளக்குகள் பொருந்தியிருக்க, அதற்குள்ளே மினி குடியிருப்பே இருந்தது. மேலும் அவ்வறையிற்குள்ளே இருக்கும் சிறிய அளவிலான நீச்சல் குளம், வெளியே வேடிக்கை பார்ப்பதற்காகவே அமைக்கப்பட்ட பால்கனி. கலைநயமிக்க பொருட்கள் என மிளர்ந்தது ருத்ரஜித்தின் அறை.

“மாமா.” என்றவள் புன்னகையோடு அழைக்க, 

“இங்க இருக்கேன் அபூ.” என்று நீச்சலடித்தப்படி கூறினான் ருத்ரஜித்.

அவன் சத்தம் கேட்டு அவ்விடம் திரும்பியவள், “வாவ் மாமா… செமையா இருக்கு இந்த ரூம். இதுக்குள்ள நீச்சல் குளம் எல்லாம் இருக்கு” என்று துள்ளிக் குதித்தாள்.

“ஓகே பேபி. நீ முன்னாடி உட்காரு. நான் வந்திடுறேன்.” என்றவன் கூறியதும் தண்ணீரில் நீந்துபவனை திரும்பிப் பார்த்தபடியே முகப்பு அறைக்கு சென்று அமர்ந்துக் கொண்டாள் அபூர்வா.

ஐந்தே நிமிடத்தில் அங்கிருந்து வந்தவன், மாற்றுடை அணிந்தபின்னரே அவள் முன்பு வந்தமர்ந்தான். சிறியவளுக்கு எந்த நிலையிலும் சலனத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதில் அவனுக்குள் மிகுந்த கவனம் இருந்தது. அவனது செயலை ஓரளவு புரிந்தவள், ருத்ரஜித்தை பெருமிதம் பொங்க பார்த்தாள்.

“ஹேய் பேபி இண்டர்ன்சிப் எப்படி போகுது? எப்போ ஊருக்கு போற?”

“இன்னும் இரண்டு நாள்ல முடியுது மாமா. கொஞ்சம் போர் தான். பட் இன்னைக்கு நான் ரொம்ப ஹாப்பி. கடைசியா உங்களை ஹோட்டல்ல பார்த்தது.  அதுக்கு அப்புறம் இப்போ தானே உங்களை பார்க்குறேன்.”

“ஆமா பேபி. ஆனாலும் அதான் போன்ல பேசுறோமே?”

“மாமா இது எல்லாம் ரொம்ப டூ மச். பண்றது வாரத்துல ஒரு போன்கால். அதுலயும் சாப்டியா பேபி? அப்பா அம்மா நல்லாருக்காங்களா பேபி? அதோட நிறுத்திக்கிறது.” என்றாள் புருவத்தை உயர்த்தியபடி.

“ஹே ரிலாக்ஸ். படிக்குற பொண்ணை தொந்தரவு பண்ணக்கூடாதுனு தான்.” என்றான் தோள்களை உலுக்கியபடி.

“அப்போ நீங்க. போன் பேசுறதை பெருசா சொல்லவேக் கூடாது.” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் பெண்.

“சரிவிடு. என்ன சாப்பிடுற? பிரகல்யா பத்தி எதாவது தகவல் கிடைச்சுதா?” என்றவன் கேட்டநொடி அவள் மலர்ந்த முகம் ஒருநொடியில் வாடியது.

“இல்லை. அக்கா என்ன பண்றானே தெரியலை. அக்காக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ஆனால் எங்கிட்ட கூட அவ பேச நினைக்கலை.” என்று உதட்டை பிதுக்கியவளது கண்களில் கண்ணீர் திரண்டது.

“பேபி ரிலாக்ஸ்.” என்றவன் அவளிடம் சென்று ஆதரவாக தலையினை வருடிக் கொடுத்தான்.

அவனது கைகளை கெட்டியாக பற்றியவள், “மாமா அக்கா என்னை மறந்துட்டா தான?” என்று தேம்பியபடி கேட்க, 

“அப்படி இருக்காது பேபி. உன் அக்கா எங்கயிருந்தாலும் உன்னை பத்தி மட்டும் தான் யோசிப்பா.” என்றவன் வாஞ்சையோடு கூற, அவனது இடையை வளைத்து அவன் வயிற்றில் முகம் புதைத்து அழுதவள் அவனிடம் அந்நொடி ஆறுதலைத் தேடினாள்.

“ஒன்னும் இல்லை அபூ. நீ அழுறது எனக்கு கஷ்டமா இருக்குடா. உன் அக்காவை நானும் தேடிட்டே தான் இருக்கேன் பேபி. சீக்கிரமே கண்டுபிடிச்சு உன்னோட சேர்த்து வைப்பேன்.” என்றான் ஆறுதலாக.

தனக்காக துடிப்பவனை காதலோடு நிமிர்ந்து பார்த்தவள், “எனக்கு இது போதும் மாமா. உங்க வார்த்தைகள் தான் எனக்கு யானை பலத்தைக் கொடுக்குது.” என்றாள் சிவந்த விழிகளுடன்.

அவளது கன்னங்களில் வழிந்திடும் கண்ணீரினை அழுத்தமாக துடைத்தவன், “ஒன்னும் இல்லை. நான் இருக்கேன்.” என்று கூறிக்கொண்டே அவளது கைகளை மெதுவாக விடுவித்தவன், “வெயிட் பேபி உனக்கு காஃபி கொண்டு வரேன்.” என்று கூறிக்கொண்டே நாசுக்காக நகர்ந்துச் சென்றான்.

அவனது அன்பில் எப்போதும் போல உருகியவள், தன் மனநிலையை மாற்றும் பொருட்டு நீச்சல் குளத்தை நோக்கி சென்றாள். 

அதனருகே சென்றவள் தண்ணீரை தன் கைகளால் கலைத்துவிட்டபடி வெறித்துக் கொண்டிருக்க, அவள் ஆட்டிய வேகத்தில் அவள் கைகளிலிருந்த கைக்கடிகாரம் தண்ணீரில் விழுந்தது.

“அச்சச்சோ.”  அந்த கடிகாரம் மிகவும் பிடித்தமான ஒன்று. அவளுக்கும், பிரகல்யாவிற்கும் ஒன்று போல தந்தை வாங்கித்தந்த கடிகாரம் அல்லவா அது.

பதறியபடி கடிகாரத்தை எடுப்பதற்காக கைகளை உள்நுழைக்க,  நீச்சல் குளத்தின் ஆழத்தால் கடிகாரத்தை அவளால் எடுக்க இயலாது போனது.

“இப்போ என்ன பண்றது?” என்று யோசித்தவள் அதன் பின் எதைப்பற்றியும் யோசிக்காமல் நீச்சல் குளத்தில் இறங்கியிருக்க, ஆழம் வரை குனிந்து மூச்சை அடக்கி உள்ளே சென்றவளுக்கு, நீச்சல் தெரியாத காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட, பட்டென்று மேல எழுந்தவள் மூச்சிறைத்தபடி தத்தளித்தாள். 

“மாமா… மா…மா.” என்றவள் கத்திக்கொண்டே எழப்பார்க்க, நீச்சல் குளத்தின் ஆழம் அவளை உள்வரை இழுத்துச் சென்றது. மூச்சுவிட இயலாது தவித்தவள் திணற, சத்தம் கேட்டு அவ்விடம் வந்த ருத்ரஜித், அதிர்ந்துவிட்டான்.

அவனால் கண்கொண்டு அவளது துடிப்பைக் காண இயலவில்லை. அடுத்த நிமிடமே எதை பற்றியும் யோசிக்காமல் தண்ணீரில் குதித்தவன், நீரின் ஆழத்தில் மூழ்கிச் செல்பவளது இடையை வளைத்து அழுத்தமாக பற்றிக்கொண்டான்.

நிறமில்லாத நீருக்குள் நீல நிறம் தெரிவது போல, கண்கள் சொருகும் நிலையிலும் கூட அவனைக் கண்களில் நிரப்பியவள், “ஐ லவ் யூ மாமா.” என்று நீருக்கடியில் சொல்லியிருக்க, வார்த்தைகளில் சத்தம் இல்லை என்றாலும் அவளது உச்சரிப்பினைக் கண்டவன் விழிகள் விரிக்க, அவள் வாய் மலர்ந்ததின் விளைவில் தண்ணீர் பெண்ணவளின் வயிற்றை நிரப்ப, கண்களை முழுவதுமாக மூடினாள் அபூர்வா.

நேரம் விரயமாக்காமல் அவளது இடையை கெட்டியாக பற்றியவன் தண்ணீரின் மேல நீந்திக்கொண்டு வந்தவன் மெல்ல அவளை மேலேயேற்றி தானும் ஏறிக்கொண்டான்.

“பேபி… பேபி” என்றழைத்த வண்ணம் பெண்ணவளின் கன்னத்தை தட்டியவன், கால்களையும், கைகளையும் உரசி தேய்த்தான்.

தண்ணீர் விழுங்கியவள் என்பதால் பெண்ணவளின் வயிற்றை இதமாக அவன் அழுத்த,   அபூர்வாவின் உதடுகளிலிருந்து நீர் சிறிதுசிறிதாக வெளியேறியது.

சாதாரண நீச்சல் குளம் என்று நினைத்தவளுக்கு அதன் ஆழம் பற்றி தெரியாமல் போனதே வினையாய் மாறியது. ருத்ரஜித்துக்கு நீச்சல் என்றால் மிகவும் பிடிக்கும். அதற்காகவே மிகவும் ஆழமாக வடிவமைத்திருந்தான் அந்த செயற்கை குளத்தினை.

“பேபி கண்ணைத் திற பேபி.” என்று கன்னம் தட்டியும் விழிப்பு வராததால் பதறியவன், அந்நொடி முதலுதவி புரிவதற்காக அவள் இதழில் தன் இதழை பொருத்தியிருந்தான். அந்த நிமிடம் அவளது உயிர் மட்டுமே அவனது கவனத்தில் பதிந்ததே தவிர்த்து, ஈரத்துணியில் தன் முன் படுத்திருந்தவளது நிலையை எண்ணி காமம் துளியளவும் துளிர்க்கவில்லை.

அவனது மூச்சைப்பெற்றவள், கொஞ்சம் கொஞ்சமாக கண்களைத் திறந்தவள் பலமாகவே இருமினாள்.

“தேங்க் காட்.” என்று அவள் கண்விழித்ததும் தான் பெருமூச்சொன்றை விட்டான் ருத்ரஜித்.

“நா.. நான் செத்துட்டேனா மாமா. இது என்ன சொர்க்கமா?” அந்நிலையிலும் பெண்ணவள் இவ்வாறு பேச, அவனுக்கோ கோபமாக வந்தது.

“ஸ்டாப்பிட் அபூ.” என்றவன் பற்களை கடிக்க, கண்களை மூடி மூடித் திறந்தவள், இதமாக புன்னகைத்தாள்.

அவளது உதடுகள் நடுங்கிக் கொண்டே இருந்தது. அவளது நடுக்கத்தை உணர்ந்தவன் அவள் எழுந்துக்கொள்ள உதவிப் புரிந்தான்.

தன்னை நோக்கி கைகளை நீட்டும் தன்னவனையே காதலாக பார்த்தவள், அவன் கைப்பற்றியபடி எழுந்து நின்றாள்.

அவள் எழுந்ததும் அவளது கைகளைப் பற்றிக் கொண்டு அழைத்துச் சென்றவன், அங்கிருந்த இருக்கையில் அமர வைத்திருக்க, அவனை இமைமூடாமல் பார்த்தபடி அமர்ந்தாள்.

ருத்ரஜித்தோ அவள் தலை துடைப்பதற்காக துண்டினை எடுத்தவன் அவளிடம் கொடுக்க, மலுங்க மலுங்க விழித்தாள் பெண்.

பெருமூச்சொன்றை விடுத்தவன், பூந்துவலைக் கொண்டு அவனே அவளது தலையை துவட்டி விட்டான். முதன்முறையாக அவன் செய்வதால் அவளுக்கு வலிக்குமோ என்று பட்டும் படாமல் அவன் துடைக்க, மெல்ல அவனது கைகளைப் பற்றியவளோ, “அழுத்தமா துடைங்க.” என்று உரைக்க,

“நீ இருக்கியே பேபி?” என்று வாய்விட்டு திட்டிக்கொண்டு, பெண்ணவளின் கார்க்கூந்தலை துவட்டி விட்டான். 

“பேபி. உனக்கு சூடா காஃபி கொண்டு வரேன் குடி. அப்புறம் நான் அங்க போனதும், இங்க நீ எதாவது சேட்டை பண்ணுனனு வை, அவ்வளவு தான்.” செல்லமாக முறைத்துவிட்டே அவளுக்காக காஃபியினைக் எடுக்கச் சென்றான்.

அவன் காஃபியோடு அவளை நோக்கி வர, அவனையே பார்த்தவள் காஃபியினை பெற்றுக் கொண்டாள். ஒவ்வொரு மிடறாய் அவள் உறிஞ்சிக் குடிக்க அந்த குளிருக்கு அது இதமாக இருந்தது.

“பேபி. தண்ணீல எதுக்கு அப்படி சொன்ன?” என்றவனின் ஒற்றைக் கேள்வியில் பொறை ஏறிட, திருதிருவென விழித்தாள் பெண்.

“சொல்லு பேபி. நீ பேசாமல் இருந்திருந்தால், இவ்ளோ டென்ஷன் ஆகியிருக்கத் தேவையில்லை.”

“அது வந்து மாமா.”

“அபூர்வா நிஜம் எதுவோ அத புருஞ்சுக்கோ. இரக்கத்தின் பேருல வரது காதல் இல்லை. அது மட்டுமில்ல நீ சின்ன பொண்ணு இந்த வயசுல உனக்கு யாராவது சின்னதா செஞ்சாலும் ஹீரோ மாதிரி தான் தெரியும். கொஞ்ச வருசத்துல நீயே புருஞ்சுப்ப. அப்போ யோசிக்கும் போது உனக்கே சிரிப்பு தான் வரும்.” என்றவன் எடுத்துரைக்க, அபூர்வாவுக்கோ விழிகள் கலங்கிப் போனது.

இங்கு வெளியே அவளுக்காக காத்திருந்த வந்தனாவோ, சலித்துத்தான் போனாள்.

“அடியே அபூ என்னடி அங்க பண்ற? அரை மணி நேரமாச்சு?” என்று கொட்டவியை விட்டவள், “இவ்வளவு பெரிய ஆஃபிஸ்ல ஒரு காஃபி தண்ணீகூட கொடுக்க மாட்டேங்குறானுங்க. சரியான கஞ்சூஸ்…”  புலம்பிக் கொண்டே அமர, அடுத்த பத்தாவது நிமிடம் சூடான தேநீரை கொண்டு வந்துக் கொடுத்தான் பணியாளர் ஒருவன்.

அதை பெற்றவளோ “தாங்ஸ்.” என்று புன்னகைத்தபடி, “ஏழுமலையானே நான் கேட்டது யாருக்கு கேட்டதோ இல்லையோ,  ப்யூன்க்காவது கேட்க வெச்சீங்களே. தாங்ஸ்பா.” என்றவள் புன்னகையோடு திரும்ப, அவள் முன்பே வந்து நின்றான் வைகை.

“டீ நல்லாருக்கா?” என்றவன் கேட்டதில் ஒரு மிடறு விழுங்கியவள், ‘நல்லாயில்லைனு சொன்னா வேற டீ தருவாறோ?’ என்று யோசித்தவள், பின் வேண்டாம் என்று நினைத்தபடி, “ரொம்ப நல்லாருக்கு” என்றாள் முழித்துக்கொண்டே.

அவளது முகப்பாவணைக் கண்டு வைகைக்கு சிரிப்பு தான் வந்தது. இருந்தும் அடக்கியவன், “எங்க ஆஃபிஸ் டீ தான். தண்ணீர் கலக்காமல் செஞ்சது. இன்னொரு தடவை ஆஃபிஸ் பத்தி எதாவது சொன்ன? அவ்ளோ தான்.” என்று அலுங்காமல் குலுங்காமல் மிதமான குரலில் எச்சரித்தான்.

“நான் சொன்னது உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றவள் அதிர்ந்து போய் கேட்க,

“பாப்பா அக்கட சூடூ.” என்றவன் புருவத்தை உயர்த்தியபடிக் காட்ட மேலேயிருக்கும் சிசிடிவியைக் கண்டவள், “ஹீ ஹீ  கேமராவா?” என்று முப்பத்திரண்டு பல்லையும் காட்டினாள்.

அவனோ “ஆமா” என்று தலையாட்டிவிட்டு நகர்ந்திருக்க, “சொதப்பிட்டியே வந்து.” என்று தன் தலையில் அடித்துக் கொண்டாள் வந்தனா.

ருத்ரஜித் முன்பு விழி நீர் கலங்க அமர்ந்தவள் நிமிர்ந்தபடி, “இது ஒன்னும் இரக்கத்தாலயோ, ஈர்ப்புனாலயோ வந்த காதல் இல்லை. இப்பவும் எப்பவும் உங்களை நான் காதலிப்பேன் மாமா. உங்களை மட்டும் தான் காதலிப்பேன். ஐ லவ் யூ சோ மச்.” என்றவள் அடுத்த நொடியே அவனை இறுக அணைத்துக் கொள்ள, “அபூர்வா.” என்று தன்னிடமிருந்து அவளை பிரித்தெடுத்தவன், பெண்ணவளின் கன்னத்தில் பளார் என்று அறைந்திருக்க, அதிர்ந்து தான் போனாள் அபூர்வா.

பார்த்த நொடி பூத்ததல்ல

என் காதல்…

உன்னை புரிந்தபின் மலர்ந்தது

என் காதல்.…

நீ என்னைவிட்டு விலகிச்செல்லும்

போதெல்லாம் காதல் வளர்ந்ததே

தவிர குறையவில்லை.…

காதலா, முடிந்தால் என் காதலை

புரிந்துக்கொள்…

இல்லையென்றாலும் உன்

வார்த்தைக் கொண்டு என் காதலை

காயப்படுத்தாதே..…

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!