21.வல்லினம்
கழுத்தில் தாலியுடன் விஷ்வாவின் அருகில் நிற்கும் பிரகல்யாவை பார்த்ததும் அனைவரும் அதிர்ந்தனர். விஷ்வா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தால் கூட இந்தளவு அதிர்ச்சி அடைந்திருக்க மாட்டார்கள். திருமண மேடையிலிருந்து ஓடிய பெண்ணை கரம் பிடித்திருக்கிறான் என்றால், இருவருக்கும் இடையில் முன்பே காதல் இருந்திருக்குமோ? அதற்காக தான் கல்யாணதன்று ஓடிவிட்டாள் போல, எதற்காக அவன் மறைக்க வேண்டும்? ஒரே நேரத்தில் இந்திரன் மனதில் பல்வேறு வினாக்கள் எழுந்தது.
“அஜ்ஜூ என்னடா பண்ணி தொலைச்சிருக்க?” வைஜெயந்தி தான் மனம் பொறுக்காமல் முதலில் கேள்வியினைக் கேட்டார்.
“ம்மா… முதல்ல குற்றவாளி மாதிரி வெளிய நிக்க வெச்சு கேட்காதீங்க. இது உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும் தான். எதுவா இருந்தாலும் உள்ள போய் பேசிப்போம்.” என்று அவன் வாய் கூறினாலும் கண்கள் என்னவோ ருத்ரஜித்தையே ஏறிட்டது.
அவர்கள் இந்த மிகப்பெரிய முடிவினை எடுக்கக் காரணமே அவன் தான். பிரகல்யா எதுவுமே பேசவில்லை என்றாலும் முகம் இறுகிப் போய் காணப்பட்டாள். அவளது விழிகள் அபூர்வாவையே வலி நிறைந்தப் பார்வை பார்த்தது. தான் இவ்வளவு தூரம் முயன்றும் அவளைத் தன்னால் காக்கவே இயலவில்லையே? என்று நினைக்கும் போதே தன்னைத் தானே அறுவருத்தாள்.
அபூர்வாவும் கண்கள் கலங்க பிரகல்யாவை பார்த்தாள். ஆறு மாதங்கள் பிரிந்த பிரிவு அழுகையாக வெளிப்பட்டாலும், அவளுக்கு தன் அக்காவின் மீது சிறு கோபம் இருக்கத் தான் செய்தது. அக்கா ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அப்பா அம்மா முன்னிருந்து திருமணம் நடத்தி வைத்திருப்பார்களே? என்ற வருத்தம் அப்பட்டமாக தெரிந்தது.
“அக்கா” என்று வலி நிறைந்த பார்வை பார்த்தவள், நொடிப்பொழுதுகள் கூட தாமதிக்காமல் பிரகல்யாவை நோக்கி செல்லப் பார்க்க, ருத்ரஜித்தோ அபூர்வாவின் கைகளைப் பற்றி தடுத்து நிறுத்தியிருந்தான்.
“அபூ எல்லாரும் பேசிட்டு இருக்காங்கல்ல அமைதியா இரு.” என்றான் அழுத்தம் திருத்தமாக. அவன் பேச்சையும் மீற இயலாது பரிதவிப்புடன் கண்கள் கலங்கிப் போய் பார்த்தாள் அபூர்வா.
பிரகல்யாவிற்கு மனம், பொறுக்கவில்லை. தன் தங்கையை தன்னிடம் நெருங்கவிடாது செய்பவனை கோபமாக ஏறிட்டது அவளது பார்வை. அவள் பார்வையே, ‘அவள் என் தங்கை’ என்று சொல்ல,
‘அவள் என் மனைவி’ என்பதை தன் அழுத்தமான பார்வையிலே பறைச்சாற்றி இருந்தான் ருத்ரஜித். அவனது ஒவ்வொரு கண் அசைவிலும் எள்ளல் அப்பட்டமாக தெரிந்தது.
“அவனை மேல வர சொல்லு ஜெயந்தி.” சுற்றம் கருதி தன் குடும்ப விசயங்களை வேலையாட்களின் முன்பு பேசப்பிடிக்காமல் இந்திரன் மேல் அறையை நோக்கி சென்றார்.
“அஜ்ஜூ நீ மட்டும் மேல போடா.” என்ற வைஜெயந்தியின் பார்வை பிரகல்யாவின் மீது வெறுப்பினை உமிழ்ந்தது.
தன் அன்னையை முறைத்தவன், பிரகல்யாவின் கைகளைப் பற்றிக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான். பிரகல்யாவும் அவன் இழுத்த இழுப்பிற்கு தலையாட்டி பொம்மை போல பின் தொடர்ந்தாள்.
“அஜ்ஜூ…” ஜெயந்தி கோபத்துடன் கத்தினார்.
“ம்மா… சீ இஸ் மை வொய்ப்.” என்று விஷ்வா அழுத்தம் திருத்தமாக கூறியதும், ஜெயந்தியின் வாய் அடைத்துக் கொண்டது. தன் மகனா இவ்வாறு பேசுவது? என்று கண்கள் கலங்க ஏறிட்டார்.
“என்னடா, இவ உன்னை மொத்தமா மாத்திட்டாளா? நம்ம குடும்பத்தை சபையில நிற்க வெச்சு அசிங்கப்படுத்துனவடா இவ. இப்போ அவ வந்ததும் அம்மாவையே எதிர்த்து பேசுறியா?”
“அம்மா எதுவுமே முழுசா தெரியாமல் பேசாதீங்க. லியா தான் அந்த கல்யாணப் பொண்ணுனு எனக்கு அப்போ தெரியாது. ஏனா நான் தான் லியாவை காதலிச்சேன், அதுவும் நீங்க ருத்க்கு பொண்ணு பார்க்குறதுக்கு முன்னாடியே.” என்றவனை ஒரு நிமிடம் அதிர்ந்து திரும்பி பார்த்தாள் லியா.
தனக்காக எத்தனை பொய்களை சர்வ சாதாரணமாக உரைக்குறானே? நிஜமாலுமே இவன் ருத்ரனின் தம்பி தானா? இவனது நல்ல குணம் ஒன்று கூடவா ருத்ரஜித்திற்கு இல்லை என்ற ரீதியில் அவள் பார்வை இருந்தது.
“அங்க என்ன சத்தம்? மேல வர சொல்லி எவ்வளவு நேரமாச்சு?” மாடியில் நின்றபடி இந்திரன் கேட்கவும் தான் வழியினை விட்டார் ஜெயந்தி.
ருத்ரஜித்தைக் கடந்து விஷ்வஜித் செல்ல, ஒரு நொடி விஷ்வாவின் பார்வை ருத்ரஜித்தின் மீது படிந்து மீண்டது. ருத்ரஜித்தும் சலிக்காதப் பதில் பார்வை பார்த்தான்.
‘காப்பாற்றிட்டதா நினைப்பா?’ என்றவனின் பார்வை விஷ்வாவிடம் கேட்க,
‘ஷி இஸ் மை கேர்ள். இதுக்கு மேல அவளை கஷ்டப்படுத்த நினைக்காத?’ என்ற ரீதியில் பெண்ணவளின் கைகளை அவன் முன்பே அழுத்தமாக பற்றிக்கொண்டபடி படிகளில் ஏறினான் விஸ்வஜித்.
பிரகல்யா யாரையும் பார்க்கவில்லை. அவள் பார்வை அபூர்வாவின் மீது மட்டுமே இருந்தது. அவள் கழுத்தில் தொங்கும் தாலியைக் காணும் போதே குற்ற உணர்வு அவளைப் படுத்தியெடுத்தது.
ருத்ரஜித்தோ, அதற்கு மேல் அவ்விடம் நிற்க பிடிக்காமல் தனதறைக்குள் நுழைந்துக் கொள்ள, அபூர்வா மட்டுமே பாவமாக நின்றாள். இத்தனை நாள் கழித்து அக்காவைக் கண்டும் அவளை கட்டியணைக்கக் கூட முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கத் தான் செய்தது.’அக்கா நன்கு உடல் மெலிந்து விட்டாள் அல்லவா? அக்கா முகம் ஏன் வாடியிருக்கிறது?’ என்றெல்லாம் அவள் மனம் யோசித்தது.
அறையில் நுழைந்த ருத்ரஜித்திற்கு கோபம் தலைக் கேறியது. விஷ்வாவிற்கு பிரகல்யாவின் மீது காதல் இருப்பதை அவன் அறிவான் தான். ஆனால் திருமணம் புரிந்து வந்திருப்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.
‘காதலிச்ச பொண்ணை நீ கல்யாணம் பண்ணலாம். ஆனால் உன் தம்பி பண்ணக்கூடாதா?’ அவன் மனசாட்சி கேள்விக் கேட்க,
ஆம் ருத்ரஜித்தின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவள் அபூர்வா தான். முதல் பார்வையிலேயே அவள் தனக்கானவள் என்பதை முடிவெடுத்திருந்தவன், தடுமாறும் தருணமும் ஓரிடத்தில் வந்திருந்தது.
“ஹான் பண்ணக்கூடாது. அதுவும் அவளை கல்யாணம் பண்ணவேக்கூடாது. நட்சத்திரா சாவுக்கு காரணமான அவளை கல்யாணம் பண்ணது ரொம்ப பெரிய தப்பு விஷ்வா…” கர்ஜித்தவன் அறைக்கதவை படார் என்று அடித்து சாத்தினான்.
அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. இதுவரை அவன் திட்டம் அனைத்துமே சரியாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் இந்த திருமணம் மட்டும் அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை? கோபத்தில் கண்கள் சிவக்க அமர்ந்திருந்தான் ருத்ரஜித்.
அவன் அறை நோக்கி வந்த அபூர்வாவோ, ருத்ரஜித்தை நெருங்கி அவனது தோள்பட்டையின் மீது கைகளை வைத்தாள்.
“மா..மா அக்கா வந்துட்டா. நான் அவகிட்ட பேசணும்.” என்று கூறும்போதே அவள் கண்கள் கலங்கியிருந்தது.
“பேசு அபூ, தாராளமா பேசு. பரவாயில்லை உன்னை பத்துன அக்கறை உங்க அக்காக்கு இல்லைனாலும், உனக்கு அவ மேல பாசம் இருக்கே. இப்போ கூட அக்கானு நீதான் துடிக்குற. அந்த பொண்ணு என்னடானா என் தம்பியை கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கா. முன்னாடியே சொல்லியிருந்தால் நான் பண்ணி வெச்சிருப்பேனே.” குரல் உடைந்து விரக்தியில் அவன் பேச, அவன் நிலைக் கண்டு துடித்துப் போனவள் அவனை அணைத்து ஆறுதல் கூறினாள்.
“மாமா சாரி மாமா. அக்கா பண்ணது உங்களுக்கு கஷ்டத்தை கொடுத்திருக்கும். ஆனால் அக்காவை தப்பா நினைச்சிடாதீங்க மாமா. அவ நல்லவ.” என்று தேம்பி அழுதாள்.
“நான் கெட்டவங்கனு சொல்லலையே பேபி. ரொம்ப வலிக்குது பேபி. அதுவும் என் தம்பியை கல்யாணம் பண்ணிட்டு வருவாங்கனு நான் நினைக்கலை பேபி.”
“மாமா அவங்க உங்க பிரதர்னு எனக்கு தெரியாது. அக்காக்கு தெரிஞ்சிருக்குமானு தெரியலை. ஆனால் நான் பார்த்த போட்டோஸ்ல இருந்தது இவங்க இரண்டு பேரும் தான்.” என்று அபூர்வா சொன்ன செய்தியில் யோசனையில் விரிந்தது ருத்ரஜித்தின் கண்கள்.
****
இந்திரனின் கண்கள் விஷ்வாவினை குற்றப்பார்வை பார்த்தது. வைஜெயந்தியும் கோபத்துடன் நின்றிருந்தார். மேலே இவர்கள் நால்வரை தவிர யாரும் இல்லை.
“விஷ்வா அப்போ உனக்கு இந்த பொண்ணை முன்னாடியே தெரியும்? அப்படி தானே?”
“ஆமா அப்பா. இரண்டு வருசத்துக்கு முன்னாடியே அவங்களை தெரியும். லியாவை தான் ருத்க்கு பொண்ணு பார்த்திருக்கீங்கனு மட்டும் எனக்கு தெரியாது. உங்களுக்கே தெரியும் நான் அப்போ இந்தியால இல்லை.”
“ம்ம்ம். அது சரி அப்போ அந்த பொண்ணாவது முன்னாடியே சொல்லியிருக்கலாமே. இந்த பொண்ணால அவங்க வீட்டுல உள்ளவங்க மட்டும் இல்லாம நாங்களும் அசிங்கப்பட்டு நின்னோம். ருத்ரா அத்தனை பேர் முன்னாடியும் தலைக்குனிஞ்சு நின்னான்.” இந்திரன் அவ்வாறு சொல்லவும் பிரகல்யாவின் கண்களில் கோபம் எட்டிப் பார்த்தாலும், ஒருபக்கம் பரிதாபமும் துளிர்த்தது.
‘அந்த நிலையை ஏற்படுத்தியதே அவன் தானே? கடவுளே இந்த அளவு தன் குடும்பத்தையே நம்ப வைத்து ஏமாற்றியிருக்கானே?’ வருத்தம் இழையோட பார்த்தாள். தன்னைப் போல ஏமாந்தவர்கள் என்ற கரிசனைப் போல அவளுக்கு.
“லியா கல்யாண மேடையில இருந்து போக காரணம் நான் தான்.” என்று மீண்டும் அவளுக்காக அவன் பரிந்துப் பேச வாயடைத்துப் போனாள் லியா.
இந்திரனும் வைஜெயந்தியும் அவனை கலக்கத்துடன் ஏறிட்டனர்.
“என்னடா சொல்ற?” வைஜெயந்தி பரிதவிப்புடன் கேட்டார்.
“ஆமா அம்மா. அந்த கல்யாணத்துக்கு முதல் நாள் போன்ல என் காதலை லியாகிட்ட சொன்னேன். அவ முதல்ல மறுக்கத்தான் செய்தாங்க. நான் செத்துடுவேனு சொன்னதும் தான் மண்டபத்துல இருந்து அவங்க வெளியே வந்தாங்க. இதுல அவ தப்பு எதுவுமே இல்லை. முழுக்க முழுக்க என் தப்பு தான். அப்புறம் எனக்கு முன்னாடியே ருத்ரஜித் பிரகல்யாக்கு தான் கல்யாணம் ஆகுறது தெரிஞ்சிருந்தால், இவ்வளவு தூரம் போக விட்டிருக்க மாட்டேன்.” பழி முழுவதையும் தன் மீது போட்டுக் கொண்டு அவன் பேசியிருக்க, இந்திரனின் கைகள் அவனது கன்னத்தை பதம் பார்த்தது.
அந்த அறையினை பிரகல்யா எதிர்பார்க்கவில்லை. ஆனால் விஷ்வா எதிர்பார்த்திருப்பான் போல. அவன் முழுமையாக அடியினை ஏற்றுக்கொண்டு அமைதியாக நின்றான்.
“என்ன காரியம் பண்ணியிருக்க? அப்போ உன்னால தான் இந்த பொண்ணு அசிங்கப்பட்டாளா? அந்த பொண்ணுக்கு கூட கெட்டப் பேரைத் தான் வாங்கி கொடுத்திருக்க. உன்னால என்னைக்குமே நாங்க நிம்மதியா இருக்கலடா.” என்று மறு கன்னத்திலும் ஓங்கி அறைய, அவர் அறைந்த வேகத்தில் விஷ்வாவின் உதடு லேசாக கிழிந்து ரத்தம் கசிந்தது.
அவ்வளவு தான் அதிர்ந்து விட்டாள் பிரகல்யா. ‘தனக்காக அவன் ஏன் பொய் சொல்லி அடிவாங்க வேண்டும்?’ என்று நினைத்தவள் வாயைத் திறக்க வர, அவளது கைகளைப் பற்றி தடுத்து நிறுத்திய விஷ்வா, கண்களாலே வேண்டாம் என்றான்.
“விஷ்வா…” என்றாள் இயலாமையுடன். அவளது கலங்கிய பார்வை கெஞ்சியது, உண்மையை சொல்லவிடு என்று.
“இது எனக்கும் எங்க அப்பாக்கும் நடுவுல இருக்க பிரச்சினை லியா. அவர் பையன் தப்பு பண்ணியிருக்குறதுனால அடிக்குறாரு. நீ இதுல இடையில வராத.” என்றவனின் உறுதியை அவளால் மீற முடியவில்லை. அந்நொடி தர்மசங்கடத்தில் சிக்கித் தவித்தாள் பெண்.
இந்திரன் அடித்த ஒவ்வொரு அடியையும் ஏற்றுக்கொண்டான் விஷ்வா. அவன் அடிவாங்குவதைக் காண இயலாது அவள் துடிக்க, வைஜெயந்தி தான் தடுத்து நிறுத்தினார்.
“போதும்ங்க. தோளுக்கு மேல வளர்ந்த பையனை அடிக்குறது தப்புங்க. அதான் கல்யாணம் பண்ணிட்டானே. இனி ஆக வேண்டியது பார்ப்போங்க.” என்றார் அழுதுக்கொண்டே. அவருக்கும் தன் மகன் மீது கோபம் தான். இருந்தாலும் அவன் அடிவாங்குவதை ஒருக்கட்டத்திற்கு மேல் அவரால் தாங்க இயலவில்லை.
“என்னமோ பண்ணி தொலை. முதல்ல சம்மந்தி வீட்டுக்கு விசயத்தை சொல்லு.” கோபத்தில் கூறிவிட்டு சென்றார் இந்திரன்.
“அஜ்ஜூ நீ உன் ரூம்முக்கு போடா. எங்க கிட்ட நீ ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.” என்று வேதனையுடன் கூறினார் வைஜெயந்தி.
“சொன்னாலும் உங்களுக்கு உங்க ருத்ரா தான்மா பெருசு.” விரக்தியில் கூறியவன் பிரகல்யாவை அழைத்துக் கொண்டு அவனது அறைக்குள் செல்ல, தூரத்திலிருந்து நடப்பதை வேடிக்கைப் பார்த்த வத்சலாவின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது.
*****
“ஃபர்ஸ்ட் எய்டு கிட் எங்க இருக்கு?” என்றாள் பிரகல்யா.
“கபோர்ட்க்குள்ள தான் இருக்கும். பெரிய காயம்லாம் இல்லை லியா. நீங்க வொரி பண்ணிக்காதீங்க.” என்றவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே, கபோர்ட்டை திறந்தாள் லியா.
முதலுதவிப் பெட்டியை அவள் எடுக்க, அவளது கைகளில் தட்டுப்பட்டது கைக்கடிகாரம் ஒன்று. அதன் அருகே இருந்த முதலுதவிப் பெட்டியை மட்டும் எடுத்துக் கொண்டவள் அவனைக் நோக்கி வந்தாள்.
பின் விஷ்வஜித்தின் காயத்திற்கு மருந்திட்டாள் பிரகல்யா. அவனது காயத்திற்கு மருந்து இடும் போது, அவளையும் அறியாது கண்ணீர் சுரந்தது. ஒவ்வொரு சொட்டாக கண்ணீர் துளிகள் அவன் மீது விழ, நிமிர்ந்து அவளைப் பார்த்தான் விஷ்வா.
“உன் கண்ணீர் துளிகளை யாருக்காகவும் வீணடிக்காத லியா.” என்றவனை அழுத்தமாக ஏறிட்டது அவளது கண்கள்.
“எதுக்கு விஷ்வா. உங்களுக்கு இது தேவையா? பழி ஓரிடம் பாவம் ஓரிடம்னு இதை தான் சொல்வாங்க போல. போதும் விஷ்வா நீங்க அடிவாங்குறத பார்க்க முடியலை.” என்றவள் அவனது இதழ் காயத்தில் மருந்தினை வைக்க, அவனையும் மீறி முகம் சுருக்கினான்.
“பழியும் பாவமும் யாரையும் விடாது லியா. எல்லாத்துக்கும் காரணம் இருக்கு.” வலியிலும் சிரித்தது அவனது இதழ்கள்.
“போதும் விஷ்வா. நீங்க ஏன் அடி வாங்கனும். அதுவும் எதுவுமே பண்ணாமல்.” என்று கண்ணீர் விட்டவளது கைகளை ஆறுதலாகப் பற்றிக் கொண்டது விஷ்வாவின் கைகள்.
“ரிலாக்ஸ். உன் வலிக்கு முன்னாடி என் வலி பெரிசு இல்லை லியா.” என்றவன் அவளது தலையை அழுத்தமாக வருட, தனக்காக பேசும் அவனது அன்பை வியப்பாக பார்த்தவள், “தாங்ஸ் விஷ்வா” என்றாள் கண்கள் கலங்க.
இருவரது பார்வையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்க, ஐந்து மணி நேரம் முன்பு நடந்தக் காட்சிகள் இருவரின் கண்களுக்கு முன்னும் நிழலாடியது.
தான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் என்று நினைத்தவள் தற்கொலை செய்ய முயற்சிக்க, அவளைத் தடுத்து நிறுத்திய விஷ்வா, தான் யார் என்பதை கூறியிருந்ததில் அதிர்ந்துப் போனாள் பிரகல்யா.
“ட்ரஸ்ட் மீ லியா” என்றவனின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைப்பதை தவிர அவளுக்கும் வேறு வழியில்லை.
“இனி எப்படி என் அபூவை நான் காப்பாற்ற முடியும்?” கண்கள் கலங்க ஏறிட்டாள்.
“அபூர்வாக்கு ருத்ரஜித் பத்தி தெரிய வந்துச்சுனா?”
“அவ நம்புவாளா விஷ்வா. ருத்ரஜித் மேல அவளுக்கு நம்பிக்கை ரொம்ப அதிகம். ஆதாரம் இல்லாமல் நான் எப்படி பழி போட முடியும்? அதுவும் ருத்ரஜித் மேல பழி போடுற அளவுக்கு நான் ஒன்னும் நல்லது பண்ணலை.” என்று கூறியவளுக்கு அந்நொடி நட்சத்திராவின் முகம் கண்களை நிரப்பியது.
“லியா எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. அதவிட இப்போதைக்கு நம்ம எது பண்ணாலும் சீக்கிரமே பண்ணனும். நேரம் போக போக எல்லாமே முடிஞ்சிடும். என்னை நம்பு லியா.”
“அபூர்வாவை காப்பாற்ற, நான் என்ன வேணாலும் பண்றேன். என் தங்கையை ருத்ரஜித் பிடியிலிருந்து மீட்கணும். என்னை என்ன வேணாலும் பண்ணட்டும். என் தங்கச்சியை ஏன் அவன் பழி வாங்கணும்?நான் உங்களை நம்புறேன் விஷ்வா.”
“நிச்சயமா மீட்கலாம். நீ அந்த வீட்டு மருமகளாக வரும் போது.” என்றவனின் பதிலில் அதிர்ந்துப் போனவள்,
“புரியலை என்ன சொல்றீங்க விஷ்வா?” என்றாள் குழப்பத்துடன்.
“எதிரியோட பக்கத்துல இருந்தால் மட்டுமே காரியத்தை சாதிக்க முடியும். அதுக்கு நீ அந்த வீட்டுக்குள்ள போகணும்.”
“ஆனால் அது எப்படி சாத்தியம்?”
“நம்ம கல்யாணம் பண்ணிக்கனும் லியா. என் மனைவியா உன்னால அந்த வீட்டுக்கு வர முடியும் தானே.” என்றவனின் பதிலில் ஸ்தம்பித்துப் போனாள் லியா. அவளது கருவிழிகளில் குழப்பமும் பதட்டமும் அப்பட்டமாக தெரிந்தது.
அவளது கலக்கத்தை உணர்ந்தவனோ, “மத்தவங்களை பொறுத்தவரைக்கும் தான் அது கல்யாணம் லியா. நம்மளை பொறுத்த வரைக்கும் இது அபூர்வாவை காக்கப் போற முயற்சி. ட்ரஸ்ட் மீ லியா.” என்றான் அவளை ஊடுருவும் பார்வை பார்த்தபடி.
தனக்கு வேறு எந்த வழியும் இல்லை என்பதை உணர்ந்தவள் கண்களை மூடி ஒரு நிமிடம் யோசித்தாள். விஷ்வாவின் நல்ல குணம் அவளுக்குள் நம்பிக்கையைக் கொடுத்திருந்தது. தன் தங்கையை காக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சம்மதித்தாள் பெண்.
“சரி விஷ்வா. எனக்கு சம்மதம்.” என்றவள் எதைப் பற்றியும் கவலைக் கொள்ளவில்லை. தன் வாழ்வை தொலைத்தாவது தங்கையை மீட்க வேண்டும் என்ற லட்சியத்துடன் அவனது கரங்கள் பற்றிக்கெண்டு வந்துவிட்டாள் பிரகல்யா. அதை நினைத்து இருவருமே பெருமூச்சொன்றை விட்டபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
****
ஊரிலிருந்து வந்திருந்தனர் சத்யராஜ் மற்றும் சரஸ்வதி தம்பதியினர். பிரகல்யாவை கண்ட மகிழ்ச்சியில் அவளது தந்தை சத்யராஜ் விழிகள் கலங்கிப் போய் அவளை அணைத்திருக்க, சரஸ்வதி தன் மகளை அடித்த பின்னரே அணைத்திருந்தார். பின் இந்திரன் நடந்தவற்றை சொல்ல, அப்போது தான் சத்யராஜிற்கு உயிரே வந்தது.
“என்னை மன்னிச்சிடுங்க சம்மந்தி. என் மகன் பண்ணது தான் தப்பு.” என்றார் கலக்கத்துடன்.
“அய்யோ சம்மந்தி பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க. இப்படி தான் நடக்கணும்னு விதியிருக்கு. என் பொண்ணு எங்களுக்கு கிடைச்சுட்டா அது போதும். ஜோசியர் சொன்னதுப் போல அபூர்வா கல்யாணம் முடிஞ்சதுமே என் மூத்த மகளும் கிடைச்சுட்டா. நான் நம்புன மாதிரி அவ மேல எந்த தப்பும் இல்லை.” என்றவருக்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கியது.
பின் அவர்கள் நால்வரும் பேசட்டும் என்பதற்காக இந்திரனும், வைஜெயந்தியும் அங்கிருந்து சென்றுவிட, பிரகல்யா, அபூர்வா மற்றும் அவர்களது பெற்றோர் என நால்வர் மட்டுமே அவ்விடம் இருந்தனர்.
ருத்ரஜித் அவ்விடம் வரவேயில்லை. அபூர்வா மட்டும் வெகு நேரமாக நின்றிருந்தவள், அனைவரையும் பாவமாக பார்த்தாள். அவள் பார்வை பிரகல்யாவின் மீதே இருந்தது. இந்திரன் நடந்தவற்றை தெளிவுபடுத்தவும் தான் பிரகல்யாவின் மீது இதில் தவறில்லை என்பது அவளுக்கு புரிந்திருக்க, தன் அக்காவின் இரக்க குணம் தான் அவளை இந்த முடிவினை எடுக்க வைத்திருக்கும் என்பதை உணர முடிந்தது அவளால்.
பிரகல்யாவும் தன் அன்னை தந்தையின் தோளில் சாய்ந்து கேவி கேவி அழுதாள். அவர்களைப் பார்க்க மாட்டோமா? என்ற ஏக்கம் இன்று நிறைவேறியது அல்லவா.
“பாப்பா அழாதடா.” என்ற சத்யராஜ், அப்போது தான் தனியாக நின்றிருந்த அபூர்வாவை கவனித்தார்.
“பாப்பாம்மா நீயேன் அங்க தனியா நிற்குற?” என்று இளையவளை அழைத்தவர், “பாப்பா நீ எங்ககிட்ட திரும்ப கிடைக்கனும்னு அபூ பண்ண விசயங்கள் ஒவ்வொன்னுமே ரொம்ப பெருசு. நீ இல்லாதப்போ எங்களுக்கு ஒரே ஆறுதல் நம்ம அபூ மட்டும் தான்.” என்று இளையவளை பற்றி பெருமையாக கூற, தன்னிடம் வரத் தயங்கும் தமக்கையை “வா” என்று மனதார அழைத்தாள் பிரகல்யா.
அடுத்த வினாடியே பிரகல்யாவை அணைத்திருந்தாள் அபூர்வா. “அக்கா உன்னை தப்பா புருஞ்சுட்டேன்கா. அங்கிள் சொன்ன அப்புறம் தான் எனக்கு எல்லாமே புரியுது. ஐ அம் ரியலி சாரிக்கா. ஆனால் நீ இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டோம்கா” என்று உதட்டை மடித்துக் கொண்டு அவள் அழுத அழுகை பிரகல்யாவை கலங்கடித்தது.
“ஏய் பொண்ணு. என் தங்கமே எதுக்குடி அழுற? அக்காக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்லை. இந்த பெரிய மனுசியோட அறிவு பத்தி எனக்கு மட்டும் தான் தெரியும். நீ குழந்தைடி அபூ.” அவளது கன்னத்தை தன் இரு கைகளாலும் ஏந்திக் கொண்டு கூறியவள் தன் குழந்தையான அபூர்வாவின் நெற்றியில் முத்தமிட, இது போல நட்சத்திராவின் நெற்றியிலும் அவளிட்டிருந்த முத்ததின் நினைவு வந்தது.
” மை டியர் ஜூனியர் உனக்கு என்ன வேணும் சொல்லு?” என்று மூக்கினை பிடித்து ஆட்டிக் கொண்டு இவள் கேட்க, பளீச்சென்று புன்னகைத்தாள் நட்சத்திரா.
“சின்னதா ஒரே ஒரு முத்தம். ” என்றவளோ தன் நெற்றியை சுட்டிக்காட்ட, மெலிதாக புன்னகைத்த பிரகல்யாவோ, அவளது கன்னத்தை இரு கைகளாலும் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டிருக்க,
“லவ் யூ லியாக்கா…” என்று நட்சத்திரா உரைத்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளது காதில் மறுபடியும் ஒலிப்பதுப் போல் தற்போது கேட்க,
“இ.. இல்லை.” என்று அதிர்ந்தவளுக்கோ அபூர்வாவின் முகம் கூட நட்சத்திராவின் முகமாக ஒரு நொடித் தெரிய, தன் தலையைப் பற்றிக் கொண்டு மயங்கி சரிந்தாள் பிரகல்யா… அவளோடு அவள் நினைவுகளும் பழைய நினைவுகளை மீட்கத் தொடங்கியது..…
முத்தமிட்ட ஈரம் கூட
காயவில்லை…
உன் சுவடை நான்
முழுவதுமாக
அழித்து விட்டேனே.…
இத்தனை நாள்
உன் நினைவுகளில்
வாழ்ந்தேன்….
உன் உயிரை
பறித்தவள் நான்
என்ற செய்தி
அறிந்த நொடி முதல்
என் நாட்கள்
ஒவ்வொன்றும் ரணமாக
மாறியது கண்மணியே……
