தப்பிக்க முயற்சி செய்ததைத் தவிர வேறெந்த தவறும் செய்யாத அங்கிதா, அறிவுக்குத் தென்படாத ஒரு மாயவலையில் சிக்கி மனம் குமைந்தாள்.
அசையாமல் நின்றிருந்தவளை, “சீக்கிரம் போய் டிரஸ் மாத்து..” என்று விரட்டினான் ஜோ.
அவள் அந்தப் பக்கம் போனதும், இந்தப் பக்கம் ஜோ தங்களது பயணத்திற்குத் தேவைப்படும் எல்லா பொருட்களையும் மூட்டை கட்டும் வேலையைச் செய்தான்.
அங்கிதா தன் ஆடையை மாற்றிக் கொண்டு வெளியே வர, ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவளது இரு கைகளையும் இணைத்துக் கட்டி வைத்தான் ஜோ.
“நான் தப்பிச்சு போக மாட்டேன், ப்ளீஸ் என்னோட கைய கட்டாத” என்று கெஞ்சினாள் அங்கிதா.
“என்னால உன்ன நம்ப முடியாது.. கொஞ்சம் அசந்தா நீ என்னையே தூக்கி சாப்பிட்டுடுவ. உன்ன பத்திரமா மலை உச்சி வரை கூட்டிட்டு போகணும்..” என்றவன், அவளை அப்படியே இழுத்துக் கொண்டு சென்றான்..
முதல் முறை அவன் கையையும் காலையும் கட்டும்போது அடக்குமுறை என்றெண்ணி ஆற்று வெள்ளமாய் வானுக்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்தவள், இப்போது எந்தச் சலனமும் இல்லாத குவளை நீர் போல அவன் உடன் நடந்தாள்.
அதற்குக் காரணம், ஆரம்பக்கால அங்கிதாவிற்கு ஜோவின் குணம் தெரியாது. இப்போதிருக்கும் அங்கிதாவிற்கு, அவனுக்கு தன் உயிரைவிட என் உயிர் மேல் என்று தெரியும்.
வானிலை கொஞ்சம் சுமூகமானதும், மண்ணுக்கு அடியில் இருந்த ரகசிய வீட்டிலிருந்து ஜோ அங்கிதாவுடன் வெளியே வந்தான்.
தரையோடு ஒட்டி இருந்த அந்த மரக் கதவின் மேல் மணலைப் போட்டு மீண்டும் மூடிவிட்டு, இருவரும் நடக்கத் தொடங்கினர். ஐந்து நிமிடங்கள் கூட நடந்திருக்கவில்லை, மீண்டும் அங்கே பலத்த மழை பொழியத் துவங்கியது.
‘புறப்பட்டாயிற்று, இனி யோசிக்க வேண்டாம்..’ என்று எண்ணிய ஜோ தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தான்.
சில மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, எங்கிருந்தோ வந்த ஒரு துப்பாக்கிக் குண்டு நேராக ஜோவின் அடிவயிற்றினைத் துளைத்தது…
அடுத்த கணமே அவளைப் பாதுகாப்பாக ஒரு மரத்தின் மறைவில் நிற்க வைத்த ஜோ, அவளின் கைக் கட்டுகளை அவிழ்த்து விட்டான். விடுதலை கிடைத்த பிறகும் அங்கிதா அச்சத்தில் அவன் முதுகுக்குப் பின்புறம் பம்மிக் கொண்டு நின்றாள்.
எதிரிகள் யாரென்று அறிவதில் அவன் தன் முழு கவனத்தையும் செலவழிக்க, அங்கிதாவுக்கோ தொடர்ந்து தன்னால் காயங்கொள்ளும் அவன் உடல் நிலையை நினைத்து கவலையாய் இருந்தது.
சற்று தூரத்தில் மறைந்திருந்த போலீஸ் கூட்டத்தில் ஒருவன் தன் வாக்கி டாக்கி மூலம், “அவன சுட்டாவது அந்தப் பொண்ண மீட்கணும்னு மேலிடத்து ஆர்டர், விடாம சுடுங்க…” என்று மற்றவர்களுக்கு உத்தரவிட்டான்…
கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, ஜோ மறைந்திருக்கும் மரத்தைச் சுற்றி வளைக்கத் திட்டம் தீட்டியது. அதைப் புரிந்து கொண்டவன், அதற்கு மேலும் தாமதிக்கக் கூடாது என்றெண்ணி அவளை அழைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான்.
அங்கிதாவும் அவனுடன்தான் இருக்கிறாள், இந்நேரம் சுட்டால் அவளுக்கும் சேர்த்து ஆபத்து, என்பதை மறந்து கைக்கு வந்த படியெல்லாம் சுட ஆரம்பித்தது காவலர் கூட்டம்.
துப்பாக்கி தோட்டாக்கள் ஒரு இஞ்ச் இரு இஞ்ச் இடைவெளியில் அங்கிதாவைத் தாண்டி செல்ல, அவளுக்கும் இப்பொழுது உயிர் பயம் வந்துவிட்டது. குண்டடிபட்ட ஜோ சிறிதும் அஞ்சியதாகத் தெரியவில்லை..
எப்பொழுதும் அவன் முதுகுக்குப் பின்னால் ஒரு துப்பாக்கி இருக்கும். இன்று அதுதான் அவளுக்காக அவன் வைத்திருக்கும் ஒற்றை கவசம்.
‘ஆயுதம் இருந்தாலும் இல்லாமல் போனாலும் என் துணிச்சலுக்கு எந்தக் குறையும் நேராது..’ என்பது போல தொடர்ந்து முன்னேறினான் ஜோ.
காவலர்கள் குழுவுக்கு மலையின் பாதையில் நடக்கத் தெரியாததால், கால் வழுக்கி அடிக்கடி விழுந்து வாரியது.
அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஜோ, நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடும் குழந்தைபோல, அசால்ட்டாக மரங்களுக்குப் பின்னால் பதுங்கிப் பதுங்கியே அவளோடு சேர்ந்து தப்பித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு உதவி செய்யும் நினைப்பில் மீண்டும் மழையின் வேகம் அதிகமாகியது. அப்போதும் கடமை தவறாத காவலர்கள், அவ்விருவரையும் பின் தொடர்ந்து வந்தனர்.
ஜோ தன் எதிரிகளுக்குப் போக்கு காட்டியபடியே ஓடியதில், இருவரும் தப்பிச்செல்ல ஒரு சரிவான பாதையினைக் கண்டு பிடித்துவிட்டான். காவலர்களோ கண் முன்னால் ஆள் இருந்தும் கண்மூடித்தனமாய் சுட்டு துப்பாக்கி குண்டுகளின் பெரும்பான்மையை வீணாக்கி வைத்திருந்தனர்.
ஜோ அங்கிதா இருவரும் ஒரு சிறிய மலைச்சரிவில், நீரோட்டத்தோடு சேர்ந்து சறுக்கிக் கொண்டே சென்றனர். ஐந்து நிமிடம் சறுக்கலில் சென்ற அந்தப் பாதை, நேராக ஒரு எஸ்டேட் போன்ற இடத்தில் அவர்களை இறக்கிவிட்டது.
ஜோ சுற்றும் முற்றும் பார்த்தான், அங்கே ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. அவன் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து அங்கிதாவை அந்தப்பக்கம் கூட்டிச் சென்றான்.
ஆயுதம் இல்லாமல் அவனை பின் தொடர்ந்து செல்ல யாருக்கும் தைரியமில்லை. காவலர்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் சிதற, ஜோவும் அங்கிதாவும் பத்திரமாய் தப்பியோடி விட்டனர்.
ஏற்கனவே கையில் காயம், இப்போது புதிதாய் வயிற்றிலும் ஒன்று… கூடுதல் பரிசாய் அவள் வேறு அவ்வப்போது தப்பிக்கும் முயற்சியில் அவனைத் தாக்கி இருந்தாள்.
உடலெங்கும் காயம் கொண்டிருந்ததால் ஜோவின் நடையினது வேகம் குறைந்திருந்தது. அதைக் கண்ட அங்கிதா, மனம் தாங்காமல் ஜோ பிடித்து நடப்பதற்கு வசதியாக, பிடிமானம் போல் தன் தோள்களைக் கொடுத்தாள்.
ஜோ, “வேண்டாம், நானே நடப்பேன்..” என்றான் வீம்பாய்.
அங்கிதா, “என்ன செஞ்சா என்ன நம்புவ?..” என்று குரல் தழுதழுக்க ஒரு கேள்வி கேட்டதும், அவன் வீராப்பெல்லாம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்து போனது.
காவலர்கள் கூட்டம், தப்பிச் சென்றவனை இன்னும் மலைகளிலேயே தேடி அலைந்து கொண்டிருந்தது. இங்கே ஜோ ஒரு மரத்தை நோக்கி கை காட்டிட, அங்கிதா புரிந்து கொண்டு அவனை கைத் தாங்கலாய் அங்கே அழைத்துச் சென்றாள்.
இம்முறை அவளே மரத்தின் அடியில் இருக்கும் கதவைத் தேடித் திறந்து, தானே புது வீட்டினுள் முதலில் புகுந்தாள். இந்த இடமும் இதற்கு முந்தைய வீட்டைப் போலவே அத்தியாவசிய பொருட்களோடு அழகாய் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
ஜோ உள்ளே போனதும், மிகவும் சாதாரணமாக கிச்சனில் இருந்த கத்தியைக் கொண்டு தன் வயிற்றிலிருந்த அந்த புல்லட்டை எடுத்தான். அங்கிதா அழுகாத குறையில் அமர்ந்திருந்தாள்..
காயத்தின் வீரியத்தால், வெகு விரைவிலேயே அரை மயக்க நிலையடைந்தான் ஜோ. ஏற்கனவே பயத்தில் வெலவெலத்துப் போய் இருந்த அங்கிதா அவன் மயங்கிச் சரியத் துவங்கியதும் இன்னுமே நடுங்கிப் போனாள்.
அவனைக் கைத்தாங்கலாய் பிடித்து வந்து பெட்டில் படுக்க வைத்தவள், தாங்கள் இருக்கும் இடத்தையும், சூழ்நிலையையும் சிறிதும் பொருட் படுத்தாமல் அங்கிருந்து வெளியேறினாள்.
ஊருக்குள் சென்றவள், ஆள் நடமாட்டமின்றி இருந்த ஒரு மெடிக்கல் ஷாப்பிற்கு போய், துப்பாக்கியைக் காட்டி அவனுக்குத் தேவையான மருந்துகள் அத்தனையையும் வாங்கிக் கொண்டாள். அதேகதைதான் காய்கறி கடைக்கும்..
முதலுதவி செய்து மருந்துகள் போட்டுவிட, ஜோ முழு மயக்கத்திற்குச் சென்றான். அவளே அவனுக்குத் தேவையான உணவையும் தயார் செய்து, வேலையோடு வேலையாய் ஈரத்துணியுடன் மயங்கிக் கிடந்த அவனுக்கு, உலர்ந்த ஆடைகளையும் மாற்றி விட்டாள்.
அவன் வசதிக்கேற்ப அந்த அறையின் பொருட்கள் அனைத்தையும் இடம் மாற்றி வைத்தாள். காலையில் மயங்கிய ஜோ, மாலையில் தான் கண் விழித்தான்..
கண்களைத் திறந்து பார்த்தவனுக்குப் பேரதிர்ச்சி..
தலைமாட்டில் தண்ணீர், அதன் கூடவே வாசம் பரப்பும் உணவுப் பதார்த்தங்கள், உடலில் அடிபட்ட காயங்கள் அனைத்திற்கும் கட்டு, ஒரு சட்டையையும் லுங்கியையும் போட்டுக்கொண்டு தன்னைக் கட்டிப் பிடித்தார் போல் உறங்கிக் கொண்டிருந்த அங்கிதா…
‘இதென்ன கனவா? நனவா? இல்ல நான் இறந்து சொர்க்கத்திற்கு வந்துட்டேனா?’ எனும் குழப்பத்தோடு கண்களை நன்றாகத் திறந்து பார்த்தான்.
அப்போதுதான் அவளே தன் ஆடைகளை மாற்றி இருப்பதையும் கவனித்தான்.
தூங்கிக் கொண்டிருந்த அங்கிதாவின் முன் நெற்றியில் முதல்முறையாக முத்தமிட்ட ஜோ, காதல் கலந்த தோரணையில் ‘பேபிம்மா லவ் யூ டி..’ என்றான்..
ஆனால் பாவம் அதனைக் கேட்பதற்குத்தான் அந்த ஜீவனுக்குக் கொடுப்பினை இல்லை போலும்..
‘அரசன் போல அத்தனை பேரையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்த ஜோ, தன்னால்தான் இந்த நிலைமையில் படுத்துக் கிடக்கிறான்…’ என்று எண்ணி அழுது அழுது ஓய்ந்தவள், இப்பொழுதுதான் அசந்து தூங்கத் துவங்கி இருந்தாள்..
அவள் கன்னங்களில் கண்ணீர் கோடுகளைக் கண்ட ஜோ ஆனந்த மிகுதியில், அவளைத் தன்னுடன் இறுகக் கட்டி அணைத்துக் கொண்டு உறங்கிப் போனான்..
மறுநாள் காலையில் இருவரும் ஒருசேர கண் விழித்தனர். அங்கிதா ஜோவிற்குத் தேவையான உணவுகள் அனைத்தையும் தன் கைகளாலேயே சமைத்து, ஊட்டியும் விட்டாள்..
உடலில் தெம்பு வந்ததும் ஜோ, “இவ்வளவு நாளா என்ன பார்த்தாலே பயந்து ஓடின போலீஸ் கூட்டம் முதல் தடவையா என்னை கொல்ல முயற்சி செஞ்சிருக்கு. இது கண்டிப்பா அந்த பிரணவ் தோட்டே வேலையாத்தான் இருக்கும்.
என்னால கோடிக்கணக்குல லாபம் வரும் போது இனிச்சது, ஒரு பிரச்சனைனு வந்ததும் கசக்குதா? எவ்வளோ தைரியமிருந்தா என்னையே கொல்ல ஏற்பாடு செஞ்சிருப்பான் அந்தக் கிழவன்?.. அவன என் கையாலேயே நசுக்கிக் கொல்லனும்…” என்று ஆர்ப்பரித்தான்.
அங்கிதா, “பொறு ஜோ, முதல்ல உனக்கு உடம்பு கொஞ்சம் தேறட்டும். ரெண்டு மூணு வாரம் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அதுக்கப்புறம் மத்த விஷயத்த பாத்துக்கலாம்…” என்றாள்.
“இல்ல பேபி, நீ மருந்து வாங்குறதுக்காக வெளியில போயிட்டு வந்திருக்க. கண்டிப்பா போலீஸ் இந்த ஊர் முழுக்க நம்மள சல்லடை போட்டு தேடுவாங்க. அவங்க கண்ணுல பட முன்னால நாம இங்கிருந்து தப்பிக்கணும்டி” என்றான்.
“அது தெரிஞ்சுதான் சொல்லுறேன். தேடுறவங்க தரையிலதான் தேடுவாங்க, தரைக்கு கீழே நாம இருப்போம்னு யாருக்கும் தோணாது. எனக்குத் தெரிஞ்சு இதுதான் இப்போதைக்கு நமக்கு பாதுகாப்பான இடம்.
நான் ஏற்கனவே ஒரு வாரத்துக்கு வேணுங்கிற அளவுக்கு சாப்பாடு, மருந்து, தண்ணீர் எல்லாமே கொண்டு வந்துட்டேன். உன்னோட காயத்துக்கும் முறையா மருந்து போட்டாச்சு.
பேசாம மோகனை இந்த வாரக் கடைசியில வர சொல்லலாம். அதுக்குள்ள உன் உடம்பு நல்லா தேறிடும், போலீஸ் இந்த ஏரியாவுல நம்மள காணும்னு வேற பக்கம் தேட போயிடுவாங்க” என்று கூறினாள் அங்கிதா.
ஜோவிற்கும் அவள் கூறுவதுதான் சரி என்று தோன்றியது..
‘என்னிடம் நாங்கள் உங்களைத் தேடவில்லை என்று பொய் சொல்லிவிட்டு, இங்கே ராத்திரி பகலாக ரகசியத் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்..
இந்த நிலையில் நாமும் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே இந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வர முடியும்’ என்று நினைத்தான் ஜோ.
ஜோ, “சரி, மோகன் நம்மள காணும்னு தேடுவான். நீ போய் கீழ இருக்குற ரேடியோ டிரான்ஸ்மிட்டர் மூலமா மோகனுக்கு தகவல் சொல்றியா?..
நீயே இந்த வார கடைசில வரச்சொல்லி அவன்கிட்ட தகவல் சொல்லிடு” என்றவன், அங்கிதாவிற்கு அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று சுருக்கமாக சொல்லித் தந்தான்.
அங்கிதாவும் அவன் சொன்னபடியே ரேடியோ டிரான்ஸ்மிட்டர் கருவியை ஆக்டிவேட் செய்தாள். எதிர் முனையில் மோகன் பேச, ஜோ சொல்லித்தந்த வார்த்தைகள் எல்லாம் அச்சுப்பிசகாமல் அப்படியே அவனிடம் ஒப்புவித்தாள்.
“மோகன்… சரி அப்போ நாங்க ஞாயித்துக் கிழமை நடு ராத்திரியில உங்களோட இடத்துக்கு வர்றோம். அதுவரைக்கும் ரெண்டு பேரும் பத்திரமா இருங்க” என்று கூறினான்.
அங்கிதா அதை அப்படியே ஜோவிடம் சொல்ல, “அப்ப ஒரு வாரம் உங்கிட்ட நான் அடி வாங்கனுமா..” என்றவனின் முகத்தில் ஏகத்துக்கும் கேலி பரவியிருந்தது.
பொய் முறைப்போடு, நாக்கைத் துருத்தி, விரலால் மிரட்டி அவனை அச்சுறுத்தினாள் அங்கிதா. அந்தப் பேதையின் இதழ்களோ, அவளின் அனுமதியின்றி புன்னகையைச் சுமந்திருந்தது.
டாக்டர் என்பதால் ஜோவின் அனுமதியைக் கேட்காமல் அனுதினமும் இரண்டு முறை அவன் காயங்களைச் சுத்தப்படுத்தி மருந்து போட்டுக் கட்டினாள். உடலுக்கு ஊட்டச் சத்து தரக்கூடிய உணவாய் பார்த்துச் சமைத்துக் கொடுத்தாள்.
அவள் காட்டும் அனுசரணையில், ஜோவுக்கு காயம் மறந்து குதூகலமாய் துள்ளிக் குதிக்கத் தோன்றியது. இப்போதெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு அங்கிதா தருவதைத் தின்றிடும் அளவுக்கு, ஜோ அவளை முழு மனதோடு நம்பினான்…
ஆறு நாட்களாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் நகர, அவளை நம்பித்தான் ஏழாம் நாள் இரவும் தூங்கப் போனான் ஜோ.
மறு நாள் காலையில் கண் விழித்துப் பார்க்கும் பொழுது மோகனும் அவனோடு வந்த மூன்று ஆட்களுந்தான் அவன் கண் முன்னால் நின்றிருந்தனர்…
அங்கிதாவை அறையின் ஒவ்வொரு அணுவிலும் தேடித் தவித்த ஜோ, அவள் அங்கே இல்லை என்றதும் துள்ளி எழுந்து அமர்ந்தான்.
ஜோ பதற்றத்தோடு மோகனிடம், “அங்கிதா எங்கடா?” என்று கேட்டான்..
“நான் வரும் பொழுது அவ இங்க இல்லையே, நீ மட்டும்தான் தனியா இருந்த. அந்த பொண்ணு அழுதுட்டே இருக்குறதால, ஒரு வேள நீ பாவப்பட்டு ரிலீஸ் பண்ணிட்டயோனு நினைச்சேன்..” என்று கூறினான்..
புருவம் சுருக்கி யோசித்த ஜோ திடீரென்று ஞாபகம் வந்தவனாய், “ஆமா, நீ நாளைக்கு தான இங்க வர்றதா அவ சொன்னா? அப்புறம் ஏன் இன்னிக்கே வந்த?..” என்று கேட்டான்.
மோகனுக்கு மொத்தமும் விளங்கிவிட, “ஜோ, நான் இன்னைக்கு காலைல வர்றேன்னு தான் சொல்லியிருந்தேன். அவளும் நான் சொன்னதைக் கேட்டுட்டு சரி சரினு பதில் சொன்னாடா…” என்றான்…
ஜோவிற்கும் இப்பொழுது எல்லாமே புரிந்துவிட்டது..
“அடிப்பாவி… உன்னப் போய் நம்பினேன் பாரு.. என் புத்திய செருப்பால அடிக்கணும். சான்ஸ் கிடைச்சதும் தப்பிச்சுட்டாளே. அவள எங்க தேடி, எப்படி திரும்ப கூட்டிட்டு வருவேன்?” என்று புலம்பியபடியே தலையில் அடித்துக் கொண்டான் ஜோ.
