தன் கால் நூற்றாண்டு வாழ்வில் அவள் இவனைப் போல ஒருவனைப் பார்த்ததே இல்லை…
அழுக்குச்சட்டை அழகனவன்.. கார்மேகங் கண்ட தோகையாய் அவள் மனம் இலக்கின்றி கூத்தாடியது.
இருவரி இதழ்கள், இலக்கணமாய் அமைந்த மூக்கு, இமை மூடிக்கிடந்தாலும் இறுகியே இருக்கும் புருவம் என்று ஜோவின் வதனத்திலேயே, பசை போட்டது போல இரவு பகலாய் அவள் விழிகள் ஒட்டிக் கிடந்தது.
ஜோவின் உருவத்தை அங்கிதா தன் இள மனதில் பசுமரத்தாணியாய் பதிய வைத்திருந்த நேரம், “பேபிம்மா..” என்று மெல்ல முணங்கினான் ஜோ.
அதற்கே அவசரமாய் விழுந்தடித்து எழுந்து கொண்ட அங்கிதா, “சொல்லு ஜோ.. என்னாச்சு? எதாவது வலிக்குதா?..” எனக் கேட்டுக் கொண்டே, அவன் காயங்கள் அனைத்தையும் ஒரு முறை சரி பார்த்தாள்.
அரை மயக்கத்தில் மெல்லச் சிரித்தவன், “சந்தோஷமா இருக்கு” என்றான்.
அவளும் அவனருகே சரிந்து படுத்துக் கொண்டு, “ஏன்?..” என்றாள்.
“எனக்காகவும் வருத்தப்பட ஒரு ஜீவன்..” என்றிட, அவனிடமிருந்து காதல் மொழிகளை எதிர்பார்த்திருந்த அங்கிதா, அவன் உதிர்த்த ஏக்கம் ததும்பும் வார்த்தைகள் கண்டு முகம் வாடிப்போனாள்.
“அம்மா அப்பாவே வேண்டாம்னு தூக்கி எறிஞ்சுட்டுப் போன பல கோடி ஜீவன்ல நானும் ஒண்ணு. சத்தியமா நான் பாசத்துக்காக ஏங்கல, தப்பித் தவறிகூட எம்மேல யாரும் பாசம் காட்டக் கூடாதுன்ற நினைப்போட எல்லாரையும் என்னவிட்டு தூர நிறுத்தி வச்சேன்.
செத்தாலும் கவலை இல்லனு சுத்திட்டு இருந்த என் வைராக்கியத்த நீ ஒரே நிமிஷத்துல தூள் தூளா உடைச்சுட்ட. இப்ப எனக்கு சாவ பார்த்து பயமா இருக்கு, உன்னோட வாழணும்னு ஆசையா இருக்கு.
கல்யாணம், குழந்தை, குடும்பம்னு நானும் கனவு காணுறேன் பேபி. உன் விஷயத்துல மட்டும் நான் ஏன் முட்டாளாகுறேன்? ஏன் என் உடம்பும் மனசும் என் பேச்சைக் கேட்கவே மாட்டேங்குது? ஏன் நீ மட்டும் போதும்னு திரும்பத் திரும்ப எனக்கு தோணிட்டே இருக்கு..” என்று கேட்டுக் கொண்டே மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட்டான்.
அங்கிதாவிற்கு ஜோவின் உளறலைக் கேட்டு வருத்தமாக இருந்தது..
‘என்ன காப்பாத்துறேன்ற பேர்ல போலீஸே எங்க ரெண்டு பேரையும் கொல்ல பாக்குறாங்களே.. இதுக்கு மேலயும் நான் இவனோட இருந்தா, என்னால இவன் உயிருக்கும் ஆபத்து வந்திடும்.
கடத்திட்டு வந்தாலும் இப்ப வரை என் உயிர காப்பாத்தனும்னு நினைச்சான். அவன் மனசு முழுக்க காதல் இருந்தாலும், இந்த நிமிஷம் வரைக்கும் எங்கிட்ட எல்லை தாண்டி போனதில்ல.
அப்படிப்பட்டவனுக்கு என்னால எந்த பிரச்சினையும் வரக்கூடாது. நான் திரும்பி போயிட்டா, போலீஸ் இவன விட்ருவாங்க. இவன் திரும்பவும் பழைய பவரோட தன் இஷ்டப்படி எல்லாரையும் ஆட்டி வைக்கலாம்…’ என்று நினைத்தவள், அவ்விடம் விட்டுச் செல்லத் துணிந்தாள்.
பதுங்கு குழி வீட்டை விட்டு வெளியே வந்ததும், அங்கிதா வேண்டுமென்றே ஊர் மக்கள் அதிகம் இருக்கக்கூடிய இடத்திற்குப் போய், நட்ட நடுவீதியில் அமர்ந்து கொண்டாள்..
ஏற்கனவே தொலைந்துபோன இருவரையும் தேடி ஆங்காங்கே உலவிக் கொண்டிருந்த போலீசார், அங்கிதாவைக் கண்டதும் கருவேப்பிலை கொத்து போல அள்ளிக் கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் பரத்வாஜ், அங்கிதாவை முதல் வேலையாக வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தான்.
“ஏன் இவ்வளவு அவசரமா என்னை வேற இடத்துக்கு அனுப்புறீங்க?” என்று கேட்டாள் அங்கிதா.
“அது ஒண்ணும் இல்லம்மா, அந்த ஜோவும் அவன் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளும் முதல் தடவையா உன் விஷயத்திலதான் ஆதாரத்தோட மாட்டியிருக்காங்க. அதனால ஒரு சில அரசியல்வாதிகளுக்கு நீ இருக்குற இடம் தெரியக்கூடாது.
நீ செத்தா உன்னோட சேர்த்து எல்லாமே அழிஞ்சு போயிடும்னு உன்னத் தேடி அலையிறாங்க. எங்க ஆட்கள்லயே அந்த அரசியல்வாதிகளுக்கு ஆதரவா சில கருப்பு ஆடுகள் இருக்கு.
அவங்க கையில நீ மாட்டிக்க கூடாதுனுதான், எனக்கு நம்பிக்கையான போலீஸ்கூட உன்னை வேற ஊருக்கு அனுப்பி வைக்கிறேன்.
நீ அங்க போய் சேர்ந்ததும் உடனே ஒரு பிரஸ்மீட் போட்டு, நீ உயிரோட வந்துட்டன்ற செய்தியை மீடியாக்கு சொல்லிடுவோம். அப்பதான் எனக்கு முழு நிம்மதி கிடைக்கும்..” என்றான்.
அவளுமே அதைத் தான் செய்ய நினைத்திருந்தாள், அதற்காகத்தான் ஊருக்கு நடுவில் வந்து அமர்ந்தாள்…
‘எக்காரணம் கொண்டும் கொலைப்பழி ஜோ மீது விழுந்துவிடக் கூடாது…’ என்பதில் அவள் மனம் அத்தனை உறுதியாயிருந்தது.
பரத்வாஜின் திட்டத்திற்கு அவள் உடன் பணிந்திட, அடுத்த அரைமணி நேரத்தில் பக்கத்து ஊரில் அவளுக்கான ப்ரஸ் மீட் ஆரம்பமானது.
பரத்வாஜ் அவர்கள் முன்பாக, “நாங்க டாக்டர் அங்கிதாவ காப்பாத்தி கூட்டிட்டு வந்துட்டோம். மழையால உருவான மண் சரிவு இவங்கள அந்தக் கூட்டத்தில இருந்து தனியா பிரிச்சிடுச்சு. தெய்வாதீனமா மழைத் தண்ணீர் மலையோட அடிவாரத்துக்கு இழுத்துட்டு வந்திருக்கு.
நல்லவேளையா தேடல் பணியில் இருந்த காவலர்கள் கண்ணுக்கு டாக்டர் மேடம் மயங்கின நிலைமையில கிடைச்சாங்க. அவசர அவசரமா முதலுதவி செஞ்சு நாங்க அவங்களை காப்பாத்திட்டோம்..” என்றார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவளுடைய அப்பா அம்மா அங்கு வந்துவிட, அங்கிதா அங்கிருந்து பாதுகாப்பாக இன்னொரு ரகசிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.
‘ஜோ பயங்கரமானவன், அவனை நேரம் பார்த்துத்தான் அடிக்க வேண்டும். ஆனால் அங்கிதா அப்படியல்ல.. வாய்ப்பு கிடைத்த அடுத்த நொடியே எமலோகத்திற்கு வழியனுப்பி வைக்கப்பட வேண்டியவள்..’ என்பது பிரணவ் தோட்டேவின் எண்ணம்.
ஆதலால் அதற்கேற்றபடி தன் ஆட்டத்தை மாற்றிக் கொண்டார் அவர். காவலர்களின் ஆபரேஷன் நல்லபடியா முடிந்து விட்டது என்று ஊருக்கும் உலகத்திற்கும் அறிவித்து விட்டு, வந்த வழியே அவர்களைத் திருப்பி அனுப்பியாயிற்று.
அங்கிதா அவள் வீட்டை அடைந்துவிட்டாள். ஆனாலும் பரத்வாஜ் அவள் வீதியில் பத்து காவலர்களை பாதுகாப்புக்கென நிறுத்தியிருந்தான். மரணத்தைத் தொட்டுவிட்டு வந்திருந்தபடியால், ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்து அவளை வீட்டிற்குள் அழைத்து அழைத்துச் சென்றனர்.
கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக அவளைப் பார்க்காமல் பிரிந்திருந்த அவளின் அப்பாவும் அம்மாவும், உணர்ச்சி வேகத்தில் அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதனர்.
அவள் பிரிவால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த அவளின் அம்மா, அங்கிதாவைத் தனியாக பாத்ரூமுக்கு கூட அனுப்பப் பயந்து, தானும் கதவின் அருகிலேயே நின்றிருந்தார்.
அந்த அளவிற்கு அவளின் குடும்பத்தினரின் மனநிலையை இந்த சம்பவம் வெகுவாய் பாதித்திருந்தது. அவர்களை இன்னும் சோதிக்கும்படியாக அடுத்தடுத்த நிகழ்வுகள் நிகழ்ந்தது.
நள்ளிரவு நேரம் அங்கிதாவைப் பார்க்க, அவள் வீடு தேடி வந்தான் பரத்வாஜ்..
வந்தவன் அவள் கேள்வி கேட்கும் முன்பே, “என்னை மன்னிச்சிடும்மா, நான் உன்ன பத்தின தகவல வெளியில சொல்லாம இருந்திருக்கனும். ஆதாரத்த அழிக்கிறேன்னு மத்தவங்க உன்ன டார்கெட் பண்ணாம இருந்திருப்பாங்க.
இதுவரைக்கும் அந்த ஜோ எந்தப் பொண்ணையும் கடத்தினதே கிடையாது. அப்படிப்பட்டவன் முதல் தடவையா கடத்தின பொண்ணு நீதான்.
போன அஞ்சு வருஷத்துல எங்களுக்கு எத்தனையோ இன்பார்மர் மூலமா, ‘ஜோ அங்க இருக்கான், இங்க இருக்கான், சீக்கிரமா வந்தா புடிச்சிடலாம்’ னு அவன பத்தின ஆயிரத்தெட்டு தகவல் வந்திருக்கு.
ஆனா ஜோ அவங்க யாரையும் திரும்பிக் கூட பாக்கல…
எப்பவும் எது செஞ்சாலும் திமிரோட, ‘ஆமா நாந்தான் செஞ்சேன்’னு கெத்தா பதில் சொல்றவன், அங்கிதா விஷயத்துல எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லனு அடிச்சுப் பேசினான்.
சுலபமா கொல்றத விட்டுட்டு அவன் ஏன் உன்ன கடத்திட்டுப் போனான்ற காரணம் புரியாம குழம்பியிருந்த நேரம், அவனே உன் ஹாஸ்பிடல்ல ராத்திரி நேரம் ஆளுங்க சுத்துறதா எனக்கு ஹிண்ட் கொடுத்தான்.
அத செக் பண்ணினதுக்கு அப்புறந்தான் முழுக் கதையும் எனக்கு விளங்குச்சு. என்னப் போலவே ஜோவும் உன்ன காப்பாத்த நினைச்சிருக்கான். என்ன செய்ய? எல்லாமே என் கையை மீறி போனதுக்கு அப்புறம்தான், எனக்கு புத்தி வந்திருந்தது..
என்கூட வேலை செய்யிற சிலரே எனக்கு எதிரா இருந்ததால நான் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில இருந்தேன். என்னாலதான் உனக்கு இவ்வளவு கஷ்டம் வந்துச்சுன்ற குற்ற உணர்ச்சி என்னை இத்தனை நாளா கொலையா கொன்னுடுச்சும்மா.
நீ நல்லபடியா திரும்பி வந்த அப்புறந்தான் எனக்கு போன உயிரே திரும்பி வந்தது. ஆனா இது உனக்கு நிரந்தரமான தீர்வு இல்லம்மா, அந்த பிரணவ் அரசியல்ல பழந்தின்னு கொட்டை போட்டவன், அவன் உன்ன அழிக்காம விட மாட்டான்.
இப்பதைக்கு நீ இங்க இருக்குறது பாதுகாப்பு இல்லம்மா. தன் தலைய காப்பாத்திக்க அரசியல்வாதிங்க என்ன வேணாலும் பண்ணுவானுங்க, அவங்க கையில நீ சிக்கிடக்கூடாது.
திரும்பத் திரும்ப ஜோவும் நானும் வந்து காப்பாத்த முடியாது. பெட்டர், உங்களுக்கு வெளிநாட்டுல ஏதாவது சொந்த பந்தம் இருந்தா உடனே அங்க போயிடுங்க.
உங்க அம்மாவ நினைச்சு கவலைப் படாதம்மா, இது அதிர்ச்சியால வந்த பயம். மன நல பயிற்சிக்கு நானே ஏற்பாடு பண்றேன், சீக்கிரமே அவங்க நார்மலாகிடுவாங்க. டாக்டர் நீங்க, உங்களுக்கு இதுக்கு மேல நான் சொல்லி புரிய வைக்க தேவையில்ல, யோசிங்க..” என்று கூறினார்..
அவருடைய உண்மையான அன்பையும் அக்கறையையும் புரிந்து கொண்ட அங்கிதாவின் அப்பா, தன் பிள்ளையின் எதிர்காலம் குறித்துக் கவலை கொள்ளத் துவங்கினார்.
‘ஏற்கெனவே அங்கிதாவின் அம்மா தினம் தினம் அவளைக் கவனித்துக் கொள்கிறேன் எனும் பெயரால் தன் மனதைக் குழப்பிக் கொண்டு இருக்கிறாள்.
இப்போது பரத்வாஜ் வேறு தன் பங்குக்கு சில பல அணுகுண்டுகளைத் தூக்கிப் போட்டுருக்கிறார். பல பிரச்சனைகளைக் கடந்து இப்போதுதான் என் மகள், என் கைக்குக் கிடைத்திருக்கின்றாள்.
அவள் இந்த ஊரில் இருந்தால், அக்கம்பக்கத்து ஆட்களும், உறவினர்களும் இனிமேல் என் பெண்ணோடு எப்படிப் பேசிப் பழகுவார்கள் என்று தெரியாது.
நோயாளிகளாக வரும் ஆட்கள் கூட தேவையில்லாததைப் பேசி நம் பிள்ளையை மனதளவில் காயப்படுத்துவார்கள்…
அதற்குப் பதிலாக அவள் வெளிநாடு சென்றால், பழைய நியாபகங்களை எல்லாம் மறந்து நிம்மதியாக இருக்க முடியும். ஒரு வருடம் அவள் சிங்கப்பூர் சென்று தங்கி இருக்கட்டும்.
விரும்பினால் அங்கேயே திருமணம், வேலை என்று செட்டிலாக்கி விடட்டும்…’ என்ற முடிவிற்கே வந்துவிட்டார் அவர்.
அதுதான் சரியான வழி என்றெண்ணி, அடுத்த நாளே தன் மனைவியையும் மகளையும் உட்கார வைத்துப் பேசினார்.
அங்கிதாவோ, “இல்லப்பா, அம்மா நான் இல்லாம மனசளவுல ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க. நான் திரும்பவும் அவங்கள விட்டுட்டு போனா சரியா வராது..” என்றாள்.
ஆனால் அவளின் அம்மாவோ, “எனக்கு என்னடி கேடு? குத்துக்கல்லு மாதிரி நல்லா இருக்கேன். நீ அப்பா சொன்னமாதிரி கொஞ்ச நாள் வெளிநாட்டுக்கு போயிடு..” என்றிட, அங்கிதாவின் முகத்தில் ஈயாடவில்லை..
“என்னம்மா சொல்ற?..” என்றாள் அங்கிதா.
அவளின் அம்மா அவளுக்குப் பதில் சொல்லாமல் தன் கணவரின் முகம் பார்த்து, “இவகிட்ட என்னத்த கேட்டுகிட்டு, நீங்க சொல்லுங்க, நான் சிங்கப்பூர்ல இருக்குற என் அண்ணனுக்கு பேசவா? இல்ல நீங்க உங்க லண்டன் தம்பிட்ட கேட்குறீங்களா?..” என்றார்.
‘சிங்கப்பூரில் போலீஸ் வேலையில் இருக்கிறார் அங்கிதாவின் தாய் மாமா செல்வராஜ். அவரும் அவருடைய காவல் துறை நண்பர்கள் சிலரும் ஒன்றாக இணைந்து ஒரே இடத்தில் வீடு வாங்கி குடியிருக்கிறார்கள்.
அவர்கள் அத்தனை பேரையும் மீறி அந்தப் பகுதியில் வேறு எவராலும் நுழைய முடியாது. அதனால் அவளை அங்கு அனுப்புவது தான் மிகச் சரியாக இருக்கும்..’ என்று நினைத்த அங்கிதாவின் அப்பா சிங்கப்பூருக்கு ஓட்டுப் போட்டார்.
அங்கிதா, “நான் போக மாட்டேன், நான் இல்லாததால அவங்க உங்கள எதாவது செஞ்சுட்டா?..” என்றாள் அழுதபடியே.
ஆனால் அவர்களோ, “அம்மாடி, எங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்ல. ஆனா நீ பாதுகாப்பான இடத்துல இருக்கணும். அதுதான் எங்களுக்கு முக்கியம்..” என்று கூறிவிட்டனர்.
அங்கிதாவின் அனுமதி இன்றியே அனைத்தும் நிகழ்ந்தேறியது. பரத்வாஜ் உதவியோடு ரகசியமாய் அன்றிரவே அவளை வலுக்கட்டாயமாகச் சிங்கப்பூருக்கு அனுப்பிவிட்டனர்…
‘கண்ணிமைக்கும் நொடியில் என் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது?..’ என்று எண்ணியவளின் விழியில், நிழலாடியது ஜோவின் உருவம்.
