அசுரன்-16

அங்கிதாவின் பூம்பாதங்கள் சிங்கப்பூர் மண்ணில் அழுந்தப் பதிந்து நடந்தது. ஏர்போர்ட் வாசலிலேயே அவளுக்கென காத்திருந்தது அவளுடைய செல்வராஜ் மாமாவின் குடும்பம்.

 

மாமாவும் அத்தையும் அவளைச் சிறுவயதிலிருந்தே மிகவும் செல்லமாக வைத்திருந்தவர்கள். அவர்களையும் தாண்டி அவர்களுடைய பெண் பிருந்தா…

 

ஐந்து வயது இளையவளாக இருந்தாலும் அங்கிதாவும் அவளும் சிறு வயதிலிருந்தே இணை பிரியா தோழி போலப் பழகி வந்தனர். வெகு சுலபமாக அங்கிதா அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாய் இணைந்துவிட்டாள்.

 

செல்வராஜ் தன் தங்கையின் மகளை சகஜமாக்க விரும்பி எண்ணிலடங்கா சலுகைகளைக் கொடுத்தார். லாபவாதியான பிருந்தாவும் அந்த ஆட்டத்தில் வலுக்கட்டாயமாக இணைந்து கொள்ள, அவளின் விளையாட்டால் வீடு கலகலப்பானது.

 

வயசு பெண்கள் ஒன்று சேர்ந்தால் என்னவெல்லாம் செய்வார்கள்?..

 

விடிந்தால் ஷாப்பிங், இரவானால் செல் போனில் தற்சமயம் பரபரப்பாய் ஓடும் வெப் சீரிஸ் என்று இருப்பதினையே வழக்கமாய் வைத்திருந்தனர். 

 

ஒரே ரசனையைக் கொண்ட இரு பெண் பிள்ளைகளும், தங்களுக்குள் அனைத்து விஷயங்களையும் பாகுபாடு இல்லாமல் பகிர்ந்து கொள்வது வழக்கம். இப்போதும் பிருந்தா தன் சீக்ரட் க்ரஷ் வரை அங்கிதாவிடம் அனைத்தையும் ஒப்புவித்து விட்டாள்.

 

ஆனால் அங்கிதா தன் மனதின் ஆழத்தில் நங்கூரம் பாய்ச்சியிருந்த அவன் பெயரை மறந்தும் பிருந்தாவிடம் சொல்லவில்லை. அதன் காரணம், அவளே அவனை இன்னும் காதல் கொண்டதை உணரவில்லை..

 

பிருந்தா அங்கிதாவின் ஒவ்வொரு நொடியையும் மிகவும் ரசித்து ரசித்து செலவு செய்ய வைத்தாள்‌…

 

ஆனால் எவ்வளவு தான் அங்கிதாவிற்கு தன்னுடைய மனதைப் புத்துணர்வாக்கிக் கொண்டாலும், தினம் தினம் புதுப் புது விஷயங்களைப் பார்த்தாலும், பலவிதமான புது மனிதர்களோடு பழகினாலும் எதையோ பறிகொடுத்த உணர்வு இருந்து கொண்டே இருந்தது..

 

அவள் எவ்வளவுதான் தன்னுடைய மனதை மாற்ற முயன்றாலும், அவளால் எந்த ஒரு விஷயத்தையும் முழு சந்தோஷத்தோடும், முழு நிம்மதியோடு அனுபவிக்க முடியவில்லை.

 

சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் பொழுது பசி வராமல் போகும். ஷாப்பிங் போக வேண்டும் என்று நினைக்கிறாள், ஆனால் கை நிறைய பணம் இருந்தும் அவளால் எந்த ஒரு ஆடையையும் பிடித்து எடுக்க முடியவில்லை..

 

எல்லோராலும் ரசிக்கப்படும் சுவாரஸ்யமான விஷயங்களைத் தானும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாள், ஆனால் அதனோடு மனது ஒன்றாமல் அந்த மலைக்காட்டில் உலவிக் கொண்டிருக்கும்..

 

மற்றவர்களுக்கு எதுவும் தெரியக் கூடாது என்பதற்காக அனைத்தையுமே விரும்பி செய்வது போல் நடிக்கத் துவங்கினாள் அங்கிதா.

 

அந்த நடிப்பை சிறுபிள்ளைத் தனமுடைய பிரியங்கா நம்பிவிட்டாள். ஆனால் அங்கிதாவின் அத்தையும் மாமாவும் அவளுடைய இயல்பான குணத்திற்கும், இந்த நடிப்பிற்கும்  இருக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை சுலபமாகக் கண்டறிந்து விட்டனர்..

 

அவர்கள் பிருந்தாவிடம், “அங்கிதா ரெண்டு மாசமும் இருக்க கூடாத இடத்துல இருந்துட்டு வந்திருக்கா. அவளுடைய மனசு அப்படித்தான் இருக்கும். நீ அவளை இன்னும் கேர் எடுத்து பார்த்துக்கோ..” என்று பொறுப்பை ஒப்படைத்தனர்.

 

பிருந்தாவும் தன்னால் முடிந்த வரை அங்கிதாவை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் முதல் நாளிலிருந்தே முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்..

 

ஆனால் அவளுடைய அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்திருப்பதை, அவளே இப்போது தான் அறிந்து கொண்டாள்.

 

ஆதலால் தன் நண்பர்கள் குழுவோடு அங்கிதாவையும் இணைத்து விட்டு, அவளுடைய இருபத்து நான்கு மணி நேரத்தையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைக்க முயற்சித்தாள் பிருந்தா.

 

அப்போதும் அங்கிதா அவ்வப்போது தனிமையை விரும்பி ஒதுங்கிப் போக, அங்கிதாவின் அத்தை தன்னாலானதை முயற்சிக்கலாம் என்று களத்தில் இறங்கினார்..

 

அங்கிதா தன் மனதை ஒரு நிலைப்படுத்தினால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றெண்ணியவர், அவளை யோகா வகுப்பிற்கும் ஓவிய வகுப்பிற்கும் அனுப்ப ஏற்பாடு செய்தார்…

 

தினசரி காலையில் இரண்டு மணி நேரம் யோகா கிளாஸ், அதிலிருந்து மதியம் வரை டிராயிங் கிளாஸ். மதியத்திற்கு மேல் பிருந்தாவின் வானரக் கூட்டத்தோடு அவுட்டிங், ஷாப்பிங், வெப் சீரிஸ், இரவானதும் குடும்பத்தோடு அரட்டைக் கச்சேரி என்று அட்டவணை போட்டு அங்கிதாவின் வேலைகளை நெறிப்படுத்தினார்.

 

மற்றவர்கள் தனக்காகப் படும் துயரம் புரிந்த அங்கிதா அவர்களுக்காக மட்டுமே சிரிக்கிறாளே தவிர, பழையபடி கலகலப்பாக மாறவே இல்லை.. 

 

இப்படியே அங்கிதாவின் பொழுது போய்க் கொண்டிருக்க, ஒருநாள் ஓவிய வகுப்பு முடிந்து வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது, மனித தலைகளுக்கு நடுவே ஒரு முகத்தைப் பார்த்தாள்..

 

தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது அவன் கிட்டத்தட்ட ஜோ மாதிரி தெரிய, தன்னை மறந்து வேகமாக அவன் முன்னே சென்று பார்த்தாள் அங்கிதா.

 

அது ஜோ இல்லை…

 

“சாரி…” என்று சொல்லிவிட்டு தன் பாதையில் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

 

அவளுக்கு வெகு தாமதமாக ஒரு விஷயம் விளங்கியது..

 

‘அவனுக்குத்தான் என் மேல் கண்டதும் காதல் வந்ததே அன்றி, இந்த நிமிடம் வரை அவன் மீது எனக்கு எந்தவித ஈடுபாடும் கிடையாதே. ஆனாலும் ஏன் என் இதயம் அவனைத் தேடிச் சென்ற நொடிகளில் பல நூறு மடங்கு வேகமாய் துடித்தது?’ என்று தன் மனதைத் தானே சுய அலசல் செய்து பார்த்தாள்.

 

‘மனிதாபிமானம்..’ என்று இத்தனை நாட்களாக அவள் அறிவு சொல்லிக் கொண்டிருந்த ஒரு வார்த்தையை, இன்று மனம், ‘காதல்..’ என்று மொழி பெயர்த்துக் காட்டியது.

 

அங்கிதா மீண்டும் பேசா மடந்தையானாள்..

 

நாட்கள் அமைதியாக நகர்ந்திருக்க, ஒரு நாள் யோகா வகுப்பில் அவள் யோகா செய்து கொண்டிருக்கும் பொழுது, கண்ணாடிக் கதவிற்கு வெளியே நின்று ஒரு உருவம் தன்னை வேடிக்கை பார்ப்பது போலத் தோன்றியது.

 

இங்கே யோகா கிளாஸ் நடக்கிறது என்பதைக் கூட மறந்து போன அங்கிதா, வேகமாய் வெளியே வந்து பார்த்தாள். 

 

அந்த சாலைப் பகுதி, ‘இங்கே அப்படி யாரும் வரவில்லை..’ என்று பறைசாற்றுவது போல ஆள் நடமாட்டமின்றி காலியாகக் கிடந்தது. 

 

இருந்தும் அவளுக்கு மனம் கேட்கவில்லை.. 

 

‘ஒருவேளை ஜோ இங்கே எங்கேயாவது மறைந்து நிற்பானா?!…’ எனும் எண்ணத்தோடு அந்தச் சாலையில் அங்குலம் அங்குலமாய் அவனைத் தேடித் திரிந்தாள்.

 

யோகா ஆசிரியை அவளிடம் வந்து விசாரிக்க, “நான் ஜோவ பார்த்தேன், அவன் இங்கதான் இருக்குறான்” என்று பிதற்றினாள். 

 

ஏற்கனவே அவள் அத்தை மூலமாக நடந்து முடிந்த எல்லா விஷயங்களும் தெரிந்திருந்த அந்த ஆசிரியை, அவள் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். 

 

அந்தச் சாலையில் அப்படி ஒரு ஆள் வந்து சென்றதற்கான ஆதாரங்கள் ஏதுமின்றிப் போக, அவளைச் சமாதானம் செய்து வீடு வரை பத்திரமாகக் கூட்டிச் சென்றார்.

 

அடுத்த வாரமே இதே பொலொரு சம்பவம் ஓவிய வகுப்பிலும் நடந்தது.. இம்முறையும் அங்கிதா தெருத் தெருவாய் ஜோவைத் தேட ஓடிவிட்டாள். இரண்டு ஆசிரியைகளும் முன்னெச்சரிக்கை உணர்வோடு செல்வராஜிற்குத் தகவல் தந்து விட்டனர்.

 

அங்கிதாவின் அத்தையும் மாமாவும் நிஜமாகவே அவளுடைய நிலைமையை நினைத்து மிகவும் கவலையடைந்தனர். அதன் பிறகு அங்கிதா அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்றாள்.

 

எங்கு சென்றாலும், எந்த பக்கம் திரும்பினாலும், ஜோ இருப்பது போலவே ஒரு மாயை அவள் கண்முன்னால் வந்து வந்து மறைந்தது. அதை விரும்பியே அவள் வெளியில் சுற்றினாள்.

 

அவள் உண்மையைச் சொன்னாலும் யாருமே அவளை நம்புவதற்குத் தயாராக இல்லை. 

 

‘இந்தியாவில் இருக்கும் ஒருவன் இங்கே வந்து இவளைப் பார்த்து விட்டு, எதுவும் செய்யாமல் மறைந்து போவானா?’ எனும் கோணத்திலேயே அவர்களின் யோசனை சென்றது.

 

உண்மையை நிரூபிக்க நினைத்து அங்கிதா அலசி ஆராய்ந்தால், அவன் வந்து சென்ற பாதையில் அவனுடைய பாதச் சுவடு கூட இருப்பது கிடையாது. இருபத்தி நான்கு மணி நேரமும் போனில் கேமராவை ஆக்டிவேட் செய்து வைப்பது என்பது அவ்வளவு சாத்தியமில்லாத ஒன்று.

 

இப்போதெல்லாம் இரவில் அடிக்கடி அங்கிதாவுக்கு அவன் தன் அருகில் படுத்திருப்பது போன்ற பிம்பம் தோன்றுகிறது. கனவா நிஜமா என்று யோசிக்க விடாது, முத்தம் தந்தே அவளை உறங்க வைக்கிறது அவ்வுருவம்.

 

‘கண்டிப்பாக இதையும் யாரும் நம்பப் போவது இல்லை.. பிறகேன் அவன் வந்து செல்வதை நான் பிறருக்கு நிரூபிக்க வேண்டும்?..’ என்ற நிலைக்குப் போய்விட்டாள் அவள்.

 

அவளது அத்தையும் மாமாவும், ‘தினமொரு திணுசாக மாறிடும் இந்த பிள்ளையை என்ன செய்வது?..’ என்று தெரியாமல் வருத்தத்தில் மூழ்கியிருந்தனர்..

 

அதற்காக அவளை அப்படியே விட்டு விடவும் முடியாதே.. 

 

அங்கிதாவின் பெற்றோருக்கு போன் செய்த செல்வராஜ், “அங்கிதாவுக்காக நாங்க செய்யாத வேலைனு எதுவுமே மிச்சமில்ல. ஆனாலும் அவ இன்னமும் தனிமை விரும்பியா இருக்கிறா. 

 

கொஞ்சம் கொஞ்சமா மனச தேத்தலாம்னு நினைச்சா, இப்ப புதுசா ஒரு பிரச்சனைய கொண்டு வந்திருக்கா. எப்போ பார்த்தாலும் ஜோ இங்கதான் இருக்கான்னு அங்கதான் இருக்கான்னு சொல்றா..

 

‘இல்லமா, அவனுக்கு இந்தியாக்குள்ள மட்டும்தான் பலம் உண்டு. போலீஸ் தேடுற ஒரு ஆள், ப்ளைட் ஏறி இவ்வளவு தூரம் வர்றதெல்லாம் சாத்தியப்படாது’னு நாங்க எவ்வளவு தூரம் எடுத்துச் சொன்னாலும், அவ அதை காதுலயே போட்டுக்க மாட்டேங்குறா..

 

தினமும் காலையில சொல்லாம கொள்ளாம எங்கேயாவது கிளம்பிப் போயிடுறா, ராத்திரி வரைக்கும் திரும்ப வர்றது இல்ல. சரியா சாப்பிடாம தூங்காம துரும்பா இளைச்சு போயிட்டு இருக்குறா.

 

இப்படியே இருந்தா நல்லதுக்கு இல்ல. பேசாம அவள ஒரு மனநல மருத்துவர்ட்ட காட்டுவோமா? ஏன் சொல்றேன்னா, நடந்து முடிஞ்ச சம்பவத்தால அவ ரொம்ப பயந்திருக்கா போல. 

 

முறையான சிகிச்சை கொடுத்தா, தன்னோட மாய உலகத்தை விட்டு சீக்கிரமே வெளியில வந்திடுவானு எனக்கு தோணுது..

 

நம்ம பொண்ணு ஒரு டாக்டர், நிலமைய நாம எடுத்துச் சொன்னா தன்னோட பிரச்சனையை கண்டிப்பா அவளால புரிஞ்சுக்கிட்டு சீக்கிரமா மீண்டு வர முடியும்.‌

 

நீங்களும் நான் சொல்றத கொஞ்ச நாளுக்கு கண்ணை மூடிட்டு கேளுங்க. நம்ம அங்கிதா நமக்கு வேணும்னா அவளுக்கு சரியான ட்ரீட்மெண்ட் கொடுத்தே ஆகணும்.

 

இல்ல வேண்டாம்னு நீங்க நினைச்சா, இப்பவே நாங்க அவள இந்தியாவுக்கு அனுப்பிடுறோம், எங்களால செய்ய முடிஞ்சது இதுதான்” என்றார் முடிவாய்.

 

சில நாட்களுக்கு முன்பு வரை டாக்டராக இருந்த பெண், இன்று நோயாளியாய் இன்னொரு டாக்டரிடம் செல்வதை நினைத்து உள்ளுக்குள் உடைந்து போனார் அங்கிதாவின் அம்மா..

 

மனைவி மருகுவதைக் கண்ட அங்கிதாவின் அப்பா, ‘இப்போதே என்னால் இவளைத் தேற்ற முடியவில்லையே, அங்கிதாவும் உடன் சேர்ந்தால் எப்படி சமாளிக்க?.. இருவரும் இப்போதைக்கு தனித்தனியே இருப்பதுதான் சரி..’ என்றெண்ணினார்.

 

வேறு எந்த நல்ல வழியும் தோன்றாத காரணத்தினால் அங்கிதாவின் அப்பா செல்வராஜிடம், “நீங்க சொன்னபடி, அவளுக்கு அங்க ட்ரீட்மெண்ட் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க” என்று சம்மதம் தெரிவித்துவிட்டார்…

 

அங்கிதாவிடம் விஷயத்தை நாசுக்காக எடுத்துச் சொன்னார் செல்வராஜ்…

 

தனக்காக தன்னுடைய அப்பா அம்மா வருத்தப்படுவது பிடிக்காமல், மனமுவந்து சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டாள் அங்கிதா.

 

செல்வராஜ் சொன்ன அந்த மனநல மருத்துவரின் செல்போன் நம்பர் மற்றும் விலாசம் இரண்டையும் பெற்றுக்கொண்டு தானாகவே அவ்விடம் சென்றாள் அங்கிதா.

 

அங்கு மருத்துவர் இருக்கையில் கால்மேல் கால் போட்டபடி உட்கார்ந்து இருந்தான் ஜோ.

 

அங்கிதா வாயடைத்துப் போய் பார்த்துக் கொண்டிருக்க அவனோ சந்தோஷமாய், “ஹாய் பேபி..” என்று புருவம் உயர்த்திப் புன்னகைத்தான்.

 

“நீ… நீ… நீ ஜோதான?..”

 

“இல்லையே, நான் டாக்டர்டி.. என் பேரு கெவின்” என்று சொல்லிச் சிரித்தான்.

 

“ஓ.. ஓகோகோ…” என்றவள் அவனுக்கு எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

 

“சொல்லுங்க, உங்களுக்கு என்ன செய்யுது?..” என்று நிஜமான டாக்டர் போல சீரியஸாகக் கேட்டான் ஜோ.

 

“ஒரு கிறுக்கன் என்ன கிறுக்கியாக்க ட்ரை பண்றான் டாக்டர்..”

 

ஜோ செல்லமாய் அவளை முறைத்துக் கொண்டே, “அப்படியா?..” என்றான்.

 

அங்கிதா அழும் குரலில், “ஆமா, கடத்துவான், காதலிப்பான், காப்பாத்துவான், கடைசியில கழட்டியும் விடுவான்..” என்று கூறிவிட்டு இல்லாத கண்ணீரைத் துடைத்தெடுத்தாள்.

 

உணர்ச்சி வேகத்தில் ஜோ, “ஏய், பொய் புழுகினி, நான் எப்ப டி உன்ன கழட்டி விட்டேன்? நீதான் என்னை கழட்டி விட்டுட்டு போன?” என்று கேட்டுவிட்டான்.

 

விருட்டென தன் இருக்கையிலிருந்து எழுந்த அங்கிதா, “மாட்டுனயா? பம்பரகட்ட மண்டையா, ஸ்டெதஸ்கோப்ப எந்த டாக்டர் மாட்டனும்னு எந்த டாக்டர் மாட்டக் கூடாதுனு தெரியாத நீயெல்லாம் ஏன்டா டாக்டர் வேஷம் போடுற?.. 

 

இதுல ஒரு நாள் என்னையே போலி டாக்டருனு சொல்லி கேலி பண்ணேல நீ..” என்றவள், பட் பட்டென அவன் தலையில் நான்கு கொட்டு கொட்டினாள்.

 

ஜோ, “ஏய்.. வேணாம்டி.. வலிக்குது.. நான் என் குற்றத்த ஒத்துக்குறேன்.. மீ பாவம்டி..” என்று கெஞ்சிக் கதறியதை அவள் செவிமடுக்கவே இல்லை.

 

“உன்னால என் குடும்பமே என்ன நம்ப மாட்டேன்னு சொல்லிடுச்சுடா. எதுக்குடா இப்படி செஞ்ச? எதுக்கு?..” என்று விடாமல் அவனை அடி வெளுத்தெடுத்தாள்.

 

“ஏன்னு நான் சொல்றேன்மா..” என்றொரு குரல் அவளின் பின்பக்கம் ஒலித்திட, அதைக் கேட்டு அவள் கைகள் தானாக அமைதியாகிற்று..

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!