காதலெனும் அசுரன் எத்தனை கொடூரமானவன்!!
சிரிக்கத் தெரியாத ஒருவனையும், சேவையுள்ளம் கொண்ட பெண்ணையும் இணைத்து நிறுத்தினால், பாவையவள் படப்போகும் பாடு எவ்வளவு?!?!
அங்கிதாவுக்கு மயக்க மருந்தின் உபயம் இல்லாமலேயே உடல் கிறங்கிச் சரிந்திடத் தயாராகியது.
ஜோ நிதானமான குரலில், “உன்ன பார்த்ததும் புடிச்சிருச்சு.. எனக்குத் தெரியும், உனக்கும் எனக்கும் செட் ஆகாதுனு. விலகிப் போகத்தான் நினைச்சேன், விதி நம்மள சேர்க்குது.
என்னால உனக்கு இப்போ கொடுக்க முடிஞ்சது ரெண்டே ஆப்ஷன்தான், ஒண்ணு நீ எங்களோட கூட்டத்துக்கு டாக்டரா இரு..
அப்படி இல்லைனா எனக்கு பொண்டாட்டியா இரு. இந்த ரெண்டுல நீ எதுவா இருக்க விரும்புற?” என்று அங்கிதாவைப் பார்த்து கேட்டான் ஜோ…
நேருக்கு நேராய் அவனைப் பார்க்கவே அஞ்சி நடுங்கிய அங்கிதா, “நான் டாக்டராவே இருக்குறேன்” என்றாள் அழுதபடியே..
“நல்ல முடிவு.. உனக்கே தெரியும் நாங்க எல்லாரும் மனுஷங்க இல்ல மிருகம். என்னை மீறி எதையாவது செஞ்சா அதோட பின் விளைவுகள் எப்படி இருக்கும்னு உனக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
எங்கிட்ட இருந்து தப்பிக்க முயற்சி செய்யிறத விட்டுவிட்டு நல்ல பொண்ணா நாளையில இருந்து எங்க ஆளுங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கிற வேலையைப் பாரு” என்று கூறியபடியே பாத்ரூமிலிருந்து வெளியேறினான்…
இதுவரை கால்களை உபயோகித்தே பழக்கம் இல்லாத குழந்தை போல, தட்டுத் தடுமாறிய படி பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள் அங்கிதா. அவன் எப்போதோ இங்கிருந்து புறப்பட்டு விட்டான் என்பதற்கு அத்தாட்சியாக அவனின் ஈர உடைகள் அறையின் ஓரத்தில் பரவிக் கிடந்தது.
தேகம் வலுவின்றி துவள, பொத்தென்று தரையில் விழுந்தாள் அவள்… அச்சம், அவமானம், இயலாமை அனைத்தும் சேர்ந்து அழுகையாய் அவள் விழிகளில் வெளிப்பட்டது…
அடுத்த நாள் பொழுது விடிந்த பிறகும் ஜோ அவளுடைய அறைக்கு வரவே இல்லை. அழுது அழுது ஓய்ந்து போன அங்கிதா, இறுதியில் தன்னை தானே தேற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று.
அவளுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் வந்துவிட்டதென சொல்லி, மோனிகா பாப்பா அங்கிதாவை மருத்துவத்திற்கு ஒதுக்கப்பட்ட மர வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்..
அங்கே அத்தியாவசியமான மருந்து வகைகளும், அனைத்து வகையான ரத்தங்கள் அடங்கிய குளிர் சாதனப் பெட்டியும் இருந்தது.
‘எப்படி ஒரே நாளில் இத்தனையையும் கொண்டு வந்தார்கள்? இங்கே இவற்றைப் பராமரிக்க முடியுமா?..’ என்று ஏகப்பட்ட கேள்விகள் அவளுள்.
ஆனால் அவளுக்கு யாரும் அங்கே பதில் சொல்லப்போவது இல்லை.. ஆதலால் அடிபட்டு காயங்களோடு இருந்தவர்களுக்கு முறையாய் மருத்துவ உதவிகளைச் செய்யத் தொடங்கினாள்…
அனைத்தையும் முடித்துவிட்டு, அக்கடாவென அவள் அமரும் நேரம் ஜோ அங்கே வந்தான். அங்கிதா மறந்தும் அவன் முகம் பார்க்கவில்லை.
வேண்டுமென்றே அவளின் அருகில் வந்து நின்ற ஜோ பிறருக்குக் கேட்காத குரலில், “சாரி..” என்றான்.
தன் வாழ்நாளில் எப்போதும் யாரிடமும் மன்னிப்பு கேட்டிடாத அந்த அசுரன், முதல் முறையாக அவளிடம் மன்னிப்பு கேட்டு இறைஞ்சினான்.
அவள், ‘ம்…’ எனும் ஒற்றைச் சொல்லுடன் பேச்சுவார்த்தையை முடிக்க எண்ணினாள்.
“ரியலி சாரி.. தெரியாம..” என்றவன் அதற்கு மேல் பேச வார்த்தை கிடைக்காமல் அலைமோதினான்.
அபலையிடம் அத்துமீற முயன்றவனுக்கு அவ்வளவு எளிதில் மன்னிப்பு கிடைத்துவிடுமா?..
அவன் குரல் தன் செவியில் நுழையவே இல்லை என்பதைப்போல மருந்துகளின் கணக்கு வழக்கை அட்டவணையிட்டுக் கொண்டிருந்தாள் அங்கிதா.
“ம்ச்சு.. அதான் சாரினு சொல்லிட்டேன்ல? இன்னும் ஏன் மூஞ்சிய தூக்கி வச்சிருக்க? இன்னொருவாட்டி கட்டி பிடிக்கனுமா?” என்றதும் தன்னிச்சையாய் அவளின் தேகம் சிலிர்த்தது.
சுற்றுமுற்றும் பார்வையை ஓட்டியவள் உறுதியான குரலில், “எதுவா இருந்தாலும் அந்த வீட்ல பேசிக்கலாம், இங்க என் பேஷண்ட்ஸ் இருக்காங்க. டிஸ்டர்ப் பண்ணாம போ..” என்றாள்.
தலைவன் எனத் தெரிந்தும் தன்னை விலக்கி நிறுத்தும் அப்பெண் பாவையின் கோபம் கண்டு, ‘அடிப்பாவி..’ என்று முணுமுணுத்தவன், நின்ற வாக்கிலே பின்னால் நடந்தான்.
அந்த நொடி முதல் அங்கிதா தன் வேலையிலேயே முழு நாளையும் செலவிடத் தொடங்கினாள். நோயாளிகளிடம் பேச்சு கொடுத்து பழக முயன்றாலும் அவர்கள் இவளை ஏற்றுக் கொள்வதாய் இல்லை.
‘இவர்களுக்கு எங்கிருந்து காயம் வருகிறது? உடல் தேறியதும் எங்கே செல்கின்றனர்? ஜோ தன்னோடு தங்க வைத்திருக்கும் யாரும் இந்த கிராமத்தில் இருந்து வெளியேறவில்லையே.
எனில் கிராமத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் எப்படி இவர்கள் இருக்கும் இடம் தேடி வருகிறது?…’ என எதுவுமே அவளுக்கு தெரியவில்லை.
இங்கு நடக்கும் சம்பவங்கள் உண்மையில் அங்கிதாவிற்கு மிகப்பெரிய ஆச்சரியமாய் இருந்தது.
‘ராணுவத்திற்கும் காவலர்களுக்கும் அதி நவீன இயந்திரங்களை அரசு வாங்கிக் கொடுத்து என்ன பிரயோஜனம்? இங்கே இவர்கள் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…
கிராமப்புறத்திற்கு வாகனங்களையும், வசதி வாய்ப்புகளையும் வழங்க முடியாமல் அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இங்கோ, இன்டர்நெட் இருக்கிறது, கரெண்ட் கிடைக்கிறது, மருத்துவ உபகரணங்களும், காய்கறி பழங்களும் மணம் மாறாமல் வாரம் இருமுறை வந்துவிடுகிறது..
கல்வி கற்க வழியில்லாமல் ஆண்டுதோறும் பல குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாய் மாறும் அவலம் வட மாநிலம் முழுவதும் நிறைந்து கிடக்கிறது.
ஆனால் இங்கோ சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் முதல் துப்பாக்கி வரை அனைத்தையும் உபயோகிக்கத் தெரிந்திருக்கிறது.
இவ்வளவு அதிகாரம் கொண்ட கூட்டத்திடம் ஒற்றைப் பெண்ணாய் என்னால் என்ன செய்ய இயலும்?
ஜோ சொன்னதைப் போல இறைவனே வந்து கரம் நீட்டினாலும் இவனிடமிருந்து என்னால் தப்பித்துப் போக முடியாதோ?..’ என்று அங்கிதா கவலையோடு தன் வேலையைத் தொடர்ந்தாள்.
அவள் திரும்பிப் பார்க்கும் முன் ஒரு மாதம் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்திருந்தது. அங்கிதா தனது நோயாளிகளிடம் எந்தவிதமான பிரச்சனையும் செய்யாமல் இருந்தாள்.
அவர்களுடைய கூட்டத்தில் தானும் ஒருத்தி என்பதைப் புரிந்து கொண்டது போல, அவர்கள் கூடவே இருந்து மருத்துவம் தவிர மற்ற எல்லா விதமான வேலைகளையும் செய்து கொடுக்க ஆரம்பித்தாள்..
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவள் மோனிகா போன்ற சின்ன குழந்தைகளிடம் நன்றாகப் பேசவும் விளையாடவுமாய் இருக்க, மோகன் அவளுக்காக ஒரு சில சலுகைகளைத் தந்தான்.
அந்த கிராமத்தில் அவள் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போய் வர உரிமை உண்டு எனும் நிலைக்கு அவளை உயர்த்தினான்.
சின்ன குழந்தைகளிடம் நட்பாக விளையாடும் அங்கிதாவிடம் அந்தப் பிள்ளைகளின் அம்மாக்களும் நன்றாகவே பேச்சுக் கொடுத்து பழகினார்கள்..
அடுத்து வந்த நாட்களில் தப்பிக்கும் அளவு தனிமை கிடைத்தாலும், அங்கிதா அங்கிருந்து தப்பிப்பதற்கு எவ்வித முயற்சியும் செய்யவில்லை.
‘அங்கிருக்கும் அனைவரிடமும் அவள் நன்றாக பழகுகிறாள்…’ என்ற சேதி காற்று வாக்கில் ஜோ காதுகளுக்கும் வந்தது.
மற்றவர்களைப் போல கண்ணால் காண்பதை நம்பி விட்டால் அவன் ஜோ இல்லையே.. அவளின் நடவடிக்கை மேல் இப்போதும் ஒரு கண் வைத்திருந்தான்.
அவனுக்கு எப்போதும் எல்லோர் மேலும் சந்தேகம் தான் என்று தெரிந்த மற்றவர்கள், அவனுடைய கண்டிப்பை உதறித் தள்ளிவிட்டு அவளிடம் சகஜமாய் பேசிப் பழகிட ஆர்வம் காட்டினார்கள்.
நாளடைவில் குழந்தைகளோடு பூப்பறிக்கச் செல்வது, பிறரது வீட்டிற்குப் போய் உணவருந்துவது, மருத்துவ அறையில் தங்கியிருக்கும் நோயாளிகளைத் தவிர மற்றவர்களையும் அரசல் புரசலாய் நலம் விசாரிப்பது என்று தன் குணத்தை முற்றிலுமாய் மாற்றிக் கொண்டாள் அங்கிதா.
அதன் விளைவாக அங்கு இருக்கும் அனைவருக்கும் அவள் ஒரு உற்ற தோழி போல மாறி விட்டாள். ஒரு கட்டத்தில் ஜோவுக்கு அவள் மற்றவர்கள் கலகலப்பாகப் பேசி பழகுவதைப் பார்த்து கொஞ்சம் பொறாமையே வந்து விட்டது.
காதலனுக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய கரிசனம் கண்டவருக்கும் கிடைத்தால் கண்ணாளனின் கண்கள் சிவக்கத் தானே செய்யும்?!
‘என்னையும் கொஞ்சம் கவனி!..’ என்று நேரடியாகக் கேட்க அந்த கூட்டத்தின் தலைவனுக்குத் திராணி இல்லை.
ஆதலால் அவள் பார்வையை தன் பக்கம் திருப்ப வேறுவிதமான யுத்திகளைக் கையில் எடுத்தான்..
சம்பந்தா சம்பந்தமில்லாத விஷயங்களைச் சொல்லி அவளிடம் சண்டை போட்டான். வாய் தவறி அவள் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசி விட்டாலோ, சிறு முரண்டு செய்தாலோ அவ்வளவு தான்…
உடனே, இதுதான் சந்தர்ப்பம் என்று கொக்கரித்தபடி அவளைத் தூக்கி வந்து தன் அறைக்குள் அடைத்து வைத்து விடுவான். சைக்கோ போன்ற அவனின் செய்கைகளால் நாளுக்கு நாள் அவளுக்கு மூச்சு முட்டியது.
இதன் காரணமாகவே அங்கிதா இப்பொழுதெல்லாம் அவன் சொல்லும் எந்த வேலையையும் செய்ய மாட்டேன் என்று கூறுவதில்லை…
‘கழுத கக்கூஸ் கழுவுற வேலையா இருந்தாலும் கம்முனு செஞ்சுட்டு வந்திடுவோம்..’ எனும் மனப் பக்குவத்திற்கு வந்து விட்டாள்.
தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று அவள் ஒவ்வொரு நாளும் அவனை விட்டு ஒதுங்கி இருக்கப் பழகிக் கொண்டதால் ஜோ அவளின் அண்மை கிடைக்காமல் ஏக்கம் கொண்டான்.
அந்த சமயத்தில்தான் ஜோவிற்கு அதைவிட இன்னொரு பெரிய பிரச்சனை வந்து சேர்ந்தது. இந்த வருடம் பருவமழை சீக்கிரத்திலேயே வரப் போவதாக வானிலைத் தகவல்கள் வந்தது.
இந்த இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்குப் புறப்படலாம் என்ற முடிவிற்கு வந்தான் ஜோ…
அரசன் போல அவன் உத்தரவிட்டதும் அத்தனை பேரும் அடி பணிவது கண்ட அங்கிதா, தானும் நல்ல பிள்ளைபோல கூட்டத்தோடு கோவிந்தா போட்டு விட்டாள்.
அவன் தாங்கள் பயணிக்கப் போகும் புது இடத்தைப் பற்றியும், அந்தப் பயணப் பாதையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களைப் பற்றியும், புது இடத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியும் விளக்கம் தந்தான்.
அவன் சொற்பொழிவு முடிந்த உடனே அங்கிருந்த மக்கள் அனைவரும் அவரவர் வீட்டைப் பிரிக்க ஆரம்பித்தனர்…
திருவிழாக் கூட்டத்தில் தொலைந்த பாவனையில் இருந்த அங்கிதாவும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, கூடமாட வேலை செய்து கொடுத்தாள்.
பிரிக்கப்பட்ட வீடுகள், மரக்கட்டைகளாக உருமாறிற்று. அவற்றைப் பத்திரமாக மரக்கிளைகளிலும் மரப் பொந்துகளிலும் பதுக்கி வைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக ஒரு வீட்டைப் பிரிக்கும் போது அங்கிதாவுக்கு, ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இருந்த ஒரு பழைய நோக்கியா மாடல் செல்போன் ஒன்று கிடைத்தது. அவசர அவசரமாய் அது செயல்படுகிறதா என்று சோதித்துப் பார்த்தாள்.
ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் நான் என் வேலையில் சரியாக இருப்பேன் என்று பறை சாற்றும் படியாக அது ஆன் ஆகியது.
அடுத்த நொடியே அங்கிதா வேகமாய் அதனை எடுத்து ஸ்விட்ச் ஆப் செய்து தன்னுடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்தாள். மொத்த கூட்டமும் மலை அடிவாரத்திலிருந்து உச்சி மலைக்குச் செல்வதற்காக ஆயத்தமானார்கள்…
வீடுகளைப் பிரித்தபின் மீதமிருந்த பொருட்களை மூட்டையாகக் கட்டி, ஆண்கள் சுலபமாக தங்கள் தோள்களில் தூக்கிக் கொண்டனர்.
பெண்கள் குழந்தைகளையும் உணவுப் பொருட்களைத் தத்தமது கைகளில் ஏந்திக் கொண்டனர்.
‘கிராமமா இருக்கும்போது இவங்க நிறைய பொருள் வச்சிருந்த மாதிரி இருந்தது, அதையே பிரிச்சு எடுத்துட்டுப் போகும் போது இவ்வளவு கம்மியா தெரியுது?
ரொம்ப ஈசியா எல்லாத்தையும் அடக்கிட்டாங்க!! உண்மையில ஒரு மனுஷன் வாழ இவ்வளவு தான் தேவைப்படுமா? இல்ல எனக்குத்தான் சரியா கணக்கு தெரியலையா?’ என்ற குழப்பத்துடனே கூட்டத்தோடு இணைந்து நடந்தாள் அங்கிதா.
இதற்கு முன் மலையேறி பழக்கமில்லாத அவளுக்கு சீக்கிரத்திலேயே கால்கள் அசந்து விட்டன.
எப்படியாவது அவளைக் கூட்டத்தின் வேகத்தோடு மலை உச்சிவரை கூட்டிச் செல்ல வேண்டும், எனும் எண்ணத்தோடு அவள் பின்னாலேயே ஜோ நடந்து வந்தான்.
அவளோ அவனிடமிருந்து முடிந்த வரைக்கும் விலகியிருக்க வேண்டும் என்பதற்காக வேகவேகமாய் முன்னேறிச் சென்றாள். அவளறியாது அவன் திட்டம் சிறப்பாக வேலை செய்தது..
கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் பயணம் செய்த கூட்டம், எதிர்பார்த்ததை விட விரைவாகவே மலை உச்சியை வந்தடைந்துவிட்டது. அங்கு வந்து சேர்ந்தவுடன், ஒரு குகையிலிருந்து மரக்கட்டைகளை எடுத்து வந்து திரும்பவும் வீடு செய்ய ஆரம்பித்தது அக்குழு.
கர்ம சிரத்தையோடு ஜோவினுடைய வீட்டைத் தான் முதலில் கட்டி முடித்தார்கள்.
அவனோ தன் பதவி மறந்து ரோமியோ போல, அங்கிதாவைச் சுற்றி வருவதையே வேலையாய் செய்து கொண்டிருந்தான். அவளோ அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக, இறக்கப்பட்ட மருந்து பொருட்களைச் சரி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் முகம் கொடுத்துப் பேசாததால், முறுக்கிக் கொண்ட ஜோ, தன் மர வீட்டினுள் சென்று இன்ன பிற வேலைகளைப் பார்க்கத் துவங்க, இந்தப் பக்கம் மற்ற வீடுகளும் மளமளவெனத் தயாரானது..
அங்கிதாவிற்கு ஓய்வெடுத்தே ஆக வேண்டும் எனுமளவு உடல் அசதி இருந்தாலும், தங்களுக்காக அமைக்கப்பட்ட வீட்டிற்குள் செல்லத் தயங்கி, மற்றவர்களுக்கு உதவி செய்யும் தோரணையில் அங்கேயே உலவிக் கொண்டிருந்தாள்.
‘உச்சந்தலை வரை பித்தம் ஏறிக்கிடக்கும் ஜோ, உள்ளே சென்ற அடுத்த கணமே என்னைக் கட்டிப் பிடிக்க வந்து விடுவானே??
அப்படி அவன் என்னைக் கட்டிப் பிடித்து விட்டால், நான் உள்ளே ஒளித்து வைத்திருக்கும் செல்போனைக் கண்டுபிடித்து விடுவானே..
அப்புறம் அவன் எப்பவும் சொல்வதைப்போல கடவுளே வந்தாலும் என்னை அவனிடமிருந்து காப்பாற்ற முடியாது…
இங்கேயே மயங்கி விழுந்தாலும் விழுவேனேயன்றி, அவன் அசதியடையும் வரைக்கும் அந்த வீட்டிற்குள் செல்ல மாட்டேன்..’ என்ற முடிவோடு வெளியிலேயே கிடையாய் கிடந்தாள்.
அவர்களுக்கு வீடுகள் கட்டுவதும் பிரிப்பதும் மாதம் ஒருமுறை செய்யக்கூடிய செயல். ஆகையால் பத்து நிமிடத்தில் அனைத்து வீடுகளும் தயாராகிவிட்டது.
கொண்டு வந்திருந்த பொருட்களை எல்லாம் அந்தந்த வீடுகளுக்குள் கொண்டு போய் வைத்தனர். இவர்களில் இன்னொரு பிரிவு சமையல் வேலையையும் செய்து முடித்துவிட்டது.
வேலைகள் எல்லாம் நல்லபடியாக முடிந்து விட ஜோ அங்கிதாவைத் தேடி வெளியில் வந்தான்.
அவள் ஜோவிடமிருந்து தப்பிப்பதற்காக, “நான் என்னோட ஹாஸ்பிடல் ரூம்ல பேஷண்ட்ஸ் கூட கொஞ்ச நேரம் இருக்கப் போறேன். ரொம்ப தூரம் நடந்ததால அவங்க டயர்டா இருக்காங்க..
க்ளைமேட் சேஞ்ச்னால அவங்க காயம் வேற இன்ஃபெக்ஷன் ஆகிப்போச்சு. நான் வர லேட் ஆகும், நீங்க போய் உங்க வேலைய பாருங்க” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு மருத்துவத்திற்கென ஒதுக்கிய வீட்டிற்குள் ஓடி ஒளிந்தாள்…
ஏற்கனவே காலையிலிருந்து அவள் அருகாமையைத் தேடித் தவித்துக் கிடந்த ஜோ, இன்று எப்படியாவது அவளிடமிருந்து ஒரு சிறு முத்தத்தையாவது பெற்று விட வேண்டுமென்றுதான் அங்கு வந்திருந்தான். அவனிடம் இந்த உப்பு சப்பில்லாக் காரணங்கள் எல்லாம் எடுபடுமா?
மருந்து மாத்திரைகளின் கணக்குகளைச் சரி பார்ப்பது போல, தன்னால் முடிந்த அளவு தன்னைத் தானே பிஸியாகக் காட்டிக் கொண்டாள்.
ஜோவுக்கு அவள் தன்னிடமிருந்து தப்பிக்கத்தான் அப்படிச் செய்கிறாள் என்று அப்பட்டமாகவே தெரிந்தது..
‘எப்படி இருந்தாலும் என் பார்வை வளையத்திற்குள் தானே இருக்கப் போகின்றாய். என்னை விட்டு எங்கே போய்விட முடியும் உன்னால்?
இப்போதைக்கு வெற்றி பெற்றதாய் எண்ணி பூரித்துக் கொள். இதற்கும் சேர்த்து இன்று ராத்திரியில் உன்னை நன்றாகக் கவனிக்கிறேன்…’ என்று முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து சென்றான் ஜோ.
