எப்போதும் எங்கேயும் இறங்கிப் போகாதவனுக்கு, இந்த சின்னஞ்சிறு சிட்டுக் குருவியிடம் தன் பலம் எடுபடாமல் போனதில் சற்றே திமிர் தலைதூக்கி விட்டிருந்தது.
போக்கு காட்டும் அவளைக் கண்டுகொள்ளாமல், தயார் நிலையிலிருந்த மற்ற அனைத்து அறைகளை, இறுதிப் பார்வையிடுவதற்காகப் புறப்பட்டுச் சென்றான் ஜோ…
அவன் அங்கிருந்து போன பிறகுதான் அங்கிதாவிற்கு உயிரே திரும்பி வந்தது. ஆசுவாசமாய் ஒரு இடத்தில் கால் நீட்டி அமர்ந்தாள். அசதியில் கண்களைச் சுழற்றிக் கொண்டு வர, அப்படியே உறங்கியும் போனாள்.
அப்பொழுதுதான் கூட்டத்தில் ஒருவன் தன்னுடைய பொருட்களோடு சேர்த்து வைத்திருந்த செல்போனைக் காணவில்லை என்பதையே கவனித்தான்.
வேகமாக தன்னுடைய பொருள்களெல்லாம் அலசி ஆராய்ந்து தேடிப் பார்த்தான். ஆனால் செல்போன் கிடைக்கவே இல்லை…
எப்போது தொலைந்ததென்றே தெரியாமல் அவன் தலைகுனிந்து நிற்க, விஷயம் வெகு விரைவாகவே ஜோவின் காதுகளுக்குப் போனது.
வந்த கோபத்திற்கு அவனைப் போட்டுப் புரட்டி எடுத்த ஜோ, “இடியட் ஒரு செல்போனை பத்திரமா வச்சிருக்க தெரியலையா உனக்கு? பொறுப்பில்லாம இருக்குறவன் என்னோட கூட்டத்துக்குத் தேவையே இல்லை…
இன்னொருதடவ இப்படி கேர்லெஸ்ஸா இருந்தா உன்னை கொன்னு பொதச்சுட்டு போய்கிட்டே இருப்பேன்…” என்று வெறிபிடித்த வேங்கையாய் கர்ஜித்தான்.
உடலெல்லாம் இரத்தம் வழிய பாவமாய் நின்றிருந்தான் அடி வாங்கியவன்.
மோகன், “அவன அப்புறம் கூட கவனிச்சிக்கலாம். இப்ப தொலைஞ்ச செல்போன் எங்க இருக்குன்னு முதல்ல தேடு…” என்று ஜோவை வேறு பக்கம் திசை திருப்பினான்.
ஜோ தன்னுடைய லேப்டாப்பை எடுத்து அதில் ஏதோ ஒரு டிராக்கிங் டிவைஸ் மூலமாக தொலைந்து போன செல்போனை தேடினான். அடுத்த ஐந்தே நிமிடத்தில் ஜோவிற்கு அந்த செல்போன் எங்கே இருக்கிறதென்ற தகவல் தெரிந்துவிட்டது.
அவனுக்காக வெளியே காத்திருந்தவர்களிடம், “இனிமே அந்த செல்போனை பார்த்துக்குறது என்னுடைய பொறுப்பு. நீங்க எல்லாரும் உங்களோட வேலைய பாருங்க..” என்று கூறி விட்டு அங்கிதா உறங்கிக் கொண்டிருக்கும் மருத்துவ வீட்டிற்குச் சென்றான் ஜோ.
ஜோ தன்னை கண்டுபிடித்துவிட்டான் என்பது தெரியாமல், அங்கே ஏதுமறியா குழந்தை போல் அமைதியாய் அமர்ந்த வாக்கிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள் அங்கிதா.
ஜோ அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டு, அவள் கன்னத்தின் மீதுலாவிய கூந்தல் இழைகளை மெதுவாய் தூக்கி காதின் பின்னால் சொருகினான்.
அவனது தீண்டலில் அந்தப் பெண் சிலை மெல்ல அசைந்து கொடுத்தது. அவள் அசைவுகளை ஆழ்மனதால் ரசித்த ஜோ, இன்னும் நெருங்கி அவள் நெற்றியில் ஒரு இச்.. வைத்தான்.
கெட்ட கனவு கண்டதைப் போல உறக்கத்திலிருந்து பதறிக் கொண்டு எழுந்தாள் அங்கிதா..
‘உன் கனவு உண்மையடி சகி..’ என்றுரைப்பதைப் போல மூச்சுக்காற்று தொடும் தூரத்தில் அமர்ந்திருந்தான் ஜோ.
“என்ன? என்ன வேணும்?” என்று கேட்டுக் கொண்டே பின்னால் நகர்ந்தாள் அங்கிதா.
“ஒண்ணுமில்ல, நம்மளோட கூட்டத்தில ஒருத்தர் தன் செல்போனை தொலைச்சுட்டாராம். அதைப்பத்தி உனக்கு ஏதாவது தெரியுமானு கேட்க வந்தேன்” என்று அவனும் சிறந்த நடிகனாய் பாவனையோடு பேசினான்…
உடனே அங்கிதா தன் துப்பட்டாவைக் கொண்டு தன்னுடைய மார்புப் பிரதேசம் முழுவதிலும் இழுத்து மூடிக்கொண்டு, “இல்லையே எனக்கு எதுவும் தெரியாது..” என்றாள்.
ஜோ அங்கிதாவின் கண்களைப் பார்த்து விஷமமாய் ஒரு சிரிப்பு சிரித்தபடியே, “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? என் பேரு ஜோ, இந்த இந்தியாவே என்ன சல்லடை போட்டுத் தேடுதாம்.
அதுவும் ஒரு நாள் ரெண்டு நாள் கிடையாது, கிட்டத்தட்ட எட்டு வருஷமா போலீசுக்கும் ஆர்மிக்கும் தண்ணி காட்டுறேனாம்.
என் ஆளுங்கள மாசா மாசம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு யார் கண்ணுக்கும் தெரியாம ஷிப்ட் பண்ணுறேனாம்…
இதுவரைக்கும் நாங்க எங்க இருக்கோம், எப்படி வேற இடத்துக்கு போறோம், கைக்கு சிக்கினாலும், அடுத்த அஞ்சு நிமிஷத்துல காத்தா மறையிற திறமை எப்படி இந்த கூட்டத்துக்கு வந்ததுனு எவனாலயும் கண்டுபிடிக்க முடியலையாம்.
இத்தனை பிரச்சனைகளையும் மீறி மாசா மாசம் ஊருக்குள்ள போயிட்டு வர்றேனாம், வருஷா வருஷம் மீட்டிங்க்காக வெளிநாட்டுக்கே போயிட்டு வர்றேனாம்…” என்றிட, அங்கிதாவுக்கு இப்போதே நெற்றியெல்லாம் வியர்த்துப் போயிருந்தது.
ஜோ தன் கைக்குட்டையால் அவள் முகத்தை துடைத்துக் கொண்டே, “இப்ப இந்த நிமிஷம் இந்தியாவோட எந்த மூலைக்கு வேணும்னாலும் என்னால இஷ்டத்துக்கு போய் சுத்திட்டு வர முடியும்…
அப்படிப்பட்ட என்கிட்டயே நீ உன்னோட தில்லாலங்கடி வேலைய காட்ட நினைக்கிறயா? இந்த தைரியம்தான்டி உன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சதே. பட், பழைய மாடல் போனக்கூட என்னால ட்ராக் பண்ண முடியும்னு டாக்டரான உனக்கு தெரியாம போச்சே.. ச்ச்சூ…” என்று உச்சுக் கொட்டினான்.
அங்கிதா அசைய மறந்து உறைந்திருக்க ஜோ, “சரி போனது போகட்டும். இந்த விளையாட்ட இதோட முடிச்சுக்கலாம். அந்த செல்போன வெளியே எடு..” என்று அங்கிதாவிடம் கைநீட்டிக் கேட்டான் ஜோ.
‘இதுல எப்படி ட்ராக் பண்ண முடியும்? போட்டு வாங்க ட்ரை பண்றானா? ஆனா தெளிவா பேசுறானே.. தரலனா அடிப்பானோ?!..’ என பயந்து கொண்டே அங்கிதா தன் ஆடைக்குள் ஒளித்து வைத்திருந்த செல்போனை எடுத்து ஜோவின் கையில் கொடுத்தாள்.
அதை வாங்கிக்கொண்ட ஜோவின் கண்களில் பழையபடி வில்லதனம் குடியேற அங்கிதாவின் முகத்தைப் பார்த்தபடியே, “குடுத்த வச்ச செல்போன், எவ்வளவு நேரமா அங்க இருந்துச்சோ?” எனச் சொல்லி அந்த செல்போனிற்கு முத்தம் ஒன்றைக் கொடுத்தான்…
அவ்வளவுதான் அங்கிதாவிற்கு கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்ததுபோல் ஆகிவிட்டது. வெறி பிடித்தது போல் அவன் தலைமுடியைப் பிடித்து ஆய்ந்தாள்.
‘ஐயோ.. அம்மா..’ என்று ஜோ அலறிய அலறலில், அசந்து உறங்கிக் கொண்டிருந்த நோயாளிகள் அனைவரும், பின்னங்கால் பிடறியில் அடிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
கொலை வெறியோடு சண்டையிட்டவள், கட்டிப் பிடித்து உருண்டு புரண்டு, கடைசியில் அவன் கையிலிருந்த அந்த போனை பிடுங்கியே விட்டாள். தன் ஒட்டு மொத்த பலத்தையும் உபயோகித்து அதைத் தரையில் எறிந்து சுக்குநூறாகச் சிதறச் செய்த பிறகே அவளுக்கு சித்தம் தெளிந்திற்று.
அவளோடு குட்டி மல்யுத்தம் நடத்தி முடித்திருந்த ஜோ, அவளின் ஆங்காரம் கண்டு நன்றாக உருண்டு புரண்டு சிரித்துக் கொண்டிருந்தான்…
அங்கிதாவிற்கு இன்னும் கோபம் தணிந்ததாய் தெரியவில்லை. குப்புற படுத்துகிடந்த ஜோவின் முதுகில் ஏறி தன்னால் முடிந்த வரை மொத்து மொத்தென்று மொத்தினாள்…
ஆனால் அவனுக்கு அவள் அடிப்பது இன்னும் அவள் தன்னுடன் விளையாடுகிறாள் என்பதுபோல் சிரிப்பையே தந்தது.
ஜோவை அடித்து அடித்து கடைசியில் அங்கிதாவின் கைகள்தான் ஓய்ந்து போனது. அசந்துபோன அங்கிதா களைத்த முகத்தோடு தரையில் சரிந்து அமர்ந்தாள்…
வாடிய மலர் போலிருந்த மங்கையின் முகத்தை, ஜோ தன் இரு கைகளாலும் ஏந்திப் பிடித்தான்.
அவன் முத்தமிட வருவதாய் நினைத்துப் பயந்த பேதையோ, ‘உனக்கு ஒத்துழைக்க மாட்டேன்’ என்பது போலத் திமிறினாள்.
அவளை வலுக்கட்டாயமாக தன் பக்கம் திருப்பிய ஜோ, “இனிமே இந்த மாதிரி சில்லித் தனமா எந்த வேலையும் செய்யாத. உனக்கு ஏதாவது தேவைனா எங்கிட்ட நீ கேளு, சரியா?…” என்று அன்பாய் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறிச் சென்றான்.
ஜோ அங்கிருந்து கிளம்பிச் சென்ற அடுத்த கணம், அங்கிதாவின் இதழ்களில் வில்லத்தனமான புன்னகை அரும்பி நின்றது..
அவள் உறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்புதான், அவளுக்காக அக்கறை எடுத்து காவலர்களை அனுப்பிய இன்ஸ்பெக்டர் பரத்வாஜின் நம்பருக்குக் கால் செய்திருந்தாள்.
“சார்.. ஜோ என்னை கடத்திட்டு வந்து வச்சிருக்கான், என்ன விடவே மாட்டேன்னு சொல்லுறான். இந்த கூட்டத்துல நீயும் சேரணும்னு கட்டாயப்படுத்துறான்” என்று தன்னைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் புட்டு புட்டு வைத்துவிட்டாள்..
அந்த பெண் மேல் உண்மையான அக்கறை வைத்திருந்த பரத்வாஜ், “இப்ப எந்த இடத்துல இருக்குறீங்க அங்கிதா?” என்று பரிதவிப்போடு கேட்டான்.
“எனக்கு சரியா தெரியல, இது ஏதோ ஒரு உயரமான மலை மாதிரி இருக்கு. ஆரம்பத்துல மலையடிவாரத்தில இருந்தோம். இங்க மழை வரப்போகுதுனு ஜோவுக்கு தகவல் வந்ததும், எங்கள உச்சி மலைக்கு கூட்டிட்டு வந்துட்டான்.
அடிவாரத்தில் இருந்து இங்க வர கிட்டத்தட்ட அஞ்சு மணி நேரம் ஆச்சு. இது எல்லாமே உங்களாலதான். உங்களுக்கு அவனைப் பத்தின இன்ஃபர்மேஷன நான் கொடுத்ததால இப்போ என்னை இந்த இடத்துக்கு கடத்திட்டு வந்து சித்திரவதை செய்யிறான்..
கையில கிடைச்சவன நீங்களும் உங்க டிபார்ட்மெண்ட் ஆட்களும் தவற விடாம இருந்திருந்தா எனக்கு இன்னைக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?
அதுகூட பரவாயில்ல, இதுவரைக்கும் என்ன காப்பாத்த நீங்களும் உங்க டிபார்ட்மெண்ட்டும் எந்த முயற்சியும் எடுத்ததாவே தெரியல…
என்ன மீறி எவனால உன்னை நெருங்க முடியும்னு தினமும் சொல்லிக் காட்டுறான். நியூஸ் சேனல்ல இப்போ என்னோட பேர் கூட வர்றது இல்லனு கேலி பண்ணுறான்.
அவன் சொன்னது சரினு எனக்கும் தோண ஆரம்பிச்சிருச்சு. உண்மையிலேயே என்னைக் காப்பாத்த நீங்க ஏதாவது நடவடிக்கை எடுப்பீங்களா மாட்டீங்களா?
மொத்தமாக தலைமுழுகிட்டீங்கனா அதையாவது எனக்கு சொல்லித் தொலைங்க. இதுதான் என் விதினு ஏத்துக்கிட்டு வாழப் பழகிக்கிறேன்” என்று அழுதாள்….
எதிர்முனையில் இயலாமையால் உருவான தவிப்போடு அவள் புலம்பலைக் கேட்டுக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பரத்வாஜ், “என்ன மன்னிச்சிடும்மா. உன் விஷயத்தில எல்லாமே என் கைய மீறி நடந்தது. ஆனா அதுக்காக உன்ன அப்படியே கைகழுவிட மாட்டேன்.
கொஞ்சம் பொறுமையா இரு.. நீ காணாம போன அடுத்த நாள்ல இருந்தே நம்ம கவர்மெண்ட் அதிகாரிங்க மூலமா ஜோசித்ட்ட பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்குது..
ஆனாலும் அவன் இப்ப வரை உன்ன கடத்தினத ஒத்துக்கவே இல்ல. அதுபோக அவன் எப்படி உன்ன கடத்திட்டு போனான்ற ஆதாரமும் எங்க கிட்ட இல்ல.
அவனும் அவனுடைய கூட்டமும் எப்போ எங்க இருக்குறாங்க? எப்படி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எந்த தடயமும் இல்லாம நகர்ந்து போறாங்கனு எதையுமே எங்களால கண்டுபிடிக்க முடியல..
அப்படியே கண்டுபிடிச்சாலும் அவனை அரெஸ்ட் பண்றது அவ்வளவு சுலபமில்ல. ஏன்னா அவனுக்கு எதிரா ஆர்டர் கொடுக்க எந்த பெரிய அதிகாரியும் முன்வர மாட்டாங்க. அப்படியே வந்தாலும் அரசியல்வாதிங்க அவங்களை உண்டு இல்லைனு பண்ணிடுவாங்க.
அப்படிப்பட்டவன சாதாரண போலீஸ்காரங்க எப்படி மோத நினைப்பாங்க? எல்லாருக்கும் உயிர் பயம் உண்டு தானம்மா? வெளிய சொன்னா வெட்கக் கேடு…
அன்னிக்கு ராத்திரி நான் உன்ன காப்பாத்த முயற்சி செஞ்சதுக்காக, எனக்கு டிரான்ஸ்பர் போட்டுட்டாங்க. குடும்பம் குழந்தைனு எதுவும் இல்லாததால சுலபமா என்ன நானே இந்த சூழ்நிலைக்கு பழக்கப் படுத்திக்கிட்டேன்.
இப்ப வரைக்கும் நானும், கமிஷனரும்தான் உன்ன மீட்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்குறோம். ஆனா அவன் எங்கள ரொம்ப சுலபமா தோற்கடிக்கிறான்..”
பரத்வாஜ் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அங்கிதா வலி நிறைந்த குரலில், “அப்படின்னா அவன் சொல்ற மாதிரியே நான் கடைசி வரைக்கும் இந்த கூட்டத்தோட தான் வாழனுமா? என்னை காப்பாத்த உங்களாலயும் உங்க அரசாங்கத்தாலயும் முடியாதா?” என்றாள்.
“நான் என்னால முடியலனுதான் சொன்னேன். ஆனா சோசியல் மீடியாவால உன்னை காப்பாத்த முடியும். நீ பேசின எல்லாத்தையும் என் செல்போன்ல ரெக்கார்ட் பண்ணிட்டேன்.
இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள நான் இத ரகசியமாக சோசியல் மீடியால வைரல் ஆக்கிடுறேன். உன்னோட கதறலை கேட்டு கண்டிப்பா பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கொந்தளிப்பாங்க.
இப்ப எங்கிட்ட முடியாதுன்னு சொல்ற அதே கவர்ன்மென்ட் மக்களோட குரலுக்கு செவி கொடுத்தே ஆகணும்…
அவனிட்ட இருந்து உன்னை காப்பாத்த மறுபடியும் பேச்சுவார்த்தை நடக்கும். அப்போ அவனால கண்டிப்பா நீ அவன் பிடியில இல்லைனு பொய் சொல்ல முடியாது.
எனக்காக இன்னும் ஒரு வாரம் மட்டும் பொறுத்துக்கோம்மா.. கண்டிப்பா உனக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்….” என்று அவளுக்கு போதுமான அளவு நம்பிக்கை வார்த்தைகளைத் தந்துவிட்டு போன் காலை கட் செய்தார்..
அவர் சொன்னதை எல்லாம் மனதில் அசை போட்டுப் பார்த்த அங்கிதா, ‘நிச்சயம் எனக்கு ஏதாவது வழி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில்தான் இங்கே இப்போது தைரியமாக உட்கார்ந்து இருக்கிறாள்.
பரத்வாஜ் சொன்னதைப் போலவே, அங்கிதா அழுதுகொண்டே பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவிக் கொண்டிருந்தது.
பொதுமக்கள் ஸ்டேட்டஸ் வைத்து விளையாட, ஒரு சில சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்ப, ஆங்காங்கே மாதர் சங்கங்களும் போர்க்கொடி தூக்க அங்கிதா விவாதப் பொருளானாள்.
டிவி நிகழ்ச்சிகளிலும், யூடியூப் சேனல்களிலும் அடிக்கடி இந்த பிரச்சனை சம்பந்தப்பட்ட வீடியோக்களே வலம் வர, கவர்மெண்ட்டிற்கு தலைவலி ஆரம்பமானது.
‘இதற்கு மேலும் நாம் எதுவும் செய்யாமல் இருந்தோமெனில் மக்கள் இதை மதப் போராட்டம், ஜாதிக் கலவரம் என்று வேறு எதிலாவது திசை திருப்பி விடுவார்கள். அதற்கு முன்பாக நாமே முதல் அடியை எடுத்து வைக்கலாம்’ என்ற முடிவுக்கு வந்தது அரசாங்கம்.
ஒரு நல்ல நாள் பார்த்து அரசாங்க அதிகாரி, ஜோவுக்கு தொடர்புகொண்டு அங்கிதா பற்றிய பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்.
“ஜோ நீங்க செஞ்சது கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாதது, நீங்க கடத்திட்டுப் போன அந்தப் பொண்ணை திரும்ப அனுப்பி வைங்க. அதுக்கு பதிலா கவர்மெண்ட் நீங்க கேட்கிற நிபந்தனை எதுவா இருந்தாலும் செய்து தரும்….” என்றார்.
ஜோ சிறிதும் பிசிறு இல்லாமல், “நான் அப்படி எந்த ஒரு பொண்ணையும் கடத்திட்டு வரவே இல்லையே…” என்று முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தான்.
“நான் சும்மா கேக்கல சார், ஆதாரம் இருக்கு. அந்தப் பொண்ணு கதறி அழுறது சோஷியல் மீடியா முழுக்க சுத்துது..”
“அது எனக்கு ஆகாதவங்க யாராவது டப்பிங் வாய்ஸ்ல ரெடி பண்ணி, உங்களுக்கு தப்பான தகவல் கொடுத்திருக்கலாம்…
இதுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்ல. இந்தப் பழிய என் மேல போடாதீங்க.. ஒருவேளை எதிர்க்கட்சிக்காரங்க இப்ப இருக்குற ஆட்சியைக் கலைக்க இப்படி ஒரு புரட்சியை உருவாக்க நினைச்சு இப்படி செஞ்சிருக்கும்.
முதல்ல அந்த பொண்ணோட எதிரிகள் வட்டாரத்தில சரியாக விசாரிங்க சார். அவ க்ளினிக்ல ராத்திரி நேரம் ஆள் வந்துட்டு போற சிசிடிவி வீடியோஸ், என் கைக்கே கிடைக்குது தெரியுமா.
முதல்ல அந்த ஆள் யாருனு விசாரிங்க, அப்படி யாரும் கிடைக்கலனா அதுக்குப்பிறகு என்கிட்ட வாங்க. அப்ப வேணும்னா உங்க பதவிய காப்பாத்துறதுக்கி நான்தான் பொண்ண தூக்குறேன்னு ஒத்துக்கிறேன்” என்று திமிர் தெறிக்கப் பதிலளித்தான்.
