மாலை நேரத்து செவ்வானத்தின் பொன்னிற ஒளி எங்கும் பரவி இருக்க அந்த ஊரின் மையத்தில் பெரிய தேக்குமர கதவுகளோடு கம்பீரமாக வீற்றிருந்தது அந்த பெரிய வீடு.
அந்த வீட்டின் சமையலறையில் அந்த வீட்டின் பெண்கள் அணி குழுமி இருக்க “வயசான காலத்துல இந்த மனுஷனுக்கு இவ்வளவு வீராப்பு தேவையா? என்னதான் இருந்தாலும் அவங்களும் நா பெத்த புள்ளைங்க தானே ஒரு புள்ளைக்காக இப்படி மொத்த குடும்பத்தையும் உதறி தள்ளிட்டு தனியா இருக்கது நல்லாவா இருக்கு. அவ ஊர விட்டு போய் பத்து வருஷமாவுது இன்னும் எங்க இருக்கா எப்படி இருக்கான்னு ஒன்னும் தெரியல. இவனுங்களும் சும்மாவா இருக்கானுங்க. அவளை தேடிட்டு தானே இருக்காங்க. இப்படி நம்ம கூட இல்லாத ஒருத்திக்காக நம்ம கூட இருக்க பசங்களை நோகடிச்சு தானும் கஷ்டப்பட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்தி இந்த மனுஷன் அப்படி என்ன சாதிக்க போறாரு அவரு பாட்டுக்கு பண்ண வீட்ல போய் தனியா இருக்காரு வயசான காலத்துல இப்படி தனியா இருந்து ஒன்னு கிடக்கும் ஒன்னு ஆனா என்ன பண்றது அந்த ஆள் முகத்தை முழுசா பார்த்தே பத்து வருஷம் ஆகுது” என சுந்தராம்பாள் புலம்பிக் கொண்டிருக்க அவர் மருமகள்களோ என்ன சொல்லி அவரை சமாதானப்படுத்துவது என்று கூட தெரியாமல் அவரை பாவமாக பார்த்திருந்தனர்.
“சரி விடுங்க அத்தை எல்லாம் சீக்கிரமே சரியாகிடும் கார்த்திக் அவ கூட தான இருக்கான். அவன் அவளை நல்லா பார்த்துப்பான். நீங்க வேணா பாருங்க கூடிய சீக்கிரம் கார்த்திக்கே மனசு மாறி அவளை இங்க கூட்டிட்டு வருவான். நம்ம எல்லாரும் பழைய மாதிரி ஒன்னா இருப்போம்” ஏன்னா அவர் மூத்த மருமகள் மீனாட்சி ஆறுதலாக சொல்ல “எனக்கு அந்த நம்பிக்கையே இல்லை மீனா பத்து வருஷம் வராதவனா இப்ப வந்துற போறான் எனக்கு அவங்க எங்கயாவது ஒரு இடத்துல சந்தோஷமா இருக்காங்கன்னு யாராவது சொன்னா கூட போதும் இப்படி பெத்த புள்ள இருக்காளா இல்லையான்னு கூட தெரியாம தவிக்கிற நிலைமை எந்த அம்மாவுக்கும் வந்துறக்கூடாது” என இவ்வளவு நேரம் கணவரை எண்ணி கவலைப்பட்டவர் இப்போது மகளை எண்ணி புலம்பிக் கொண்டிருந்தார்.
நியூயார்க் நகரின் மினிசோட்டா பகுதி. வெளியில் மரங்களின் கொட்டும் பனிப்பொழிவால் நரை விழுந்திருக்க, அந்த அமைதியான சூழலில் தட்ப வெப்பத்திற்கேற்ப பிரம்மாண்டமான கண்ணாடி சுவர்களால் நவீன வசதிகளுடன் அமைந்திருந்தது அந்த இருமாடி அமெரிக்கன் வீடு.
அந்த வீட்டின் ஒரு அறையில் கண்ணாடி முன் நின்று தன் முடியை காய வைத்துக் கொண்டிருந்த ஷர்மிளாவை பின்னாலிருந்து கட்டிக் கொண்டான் கார்த்திக்.
தன் தோளில் கிடந்தவனின் தலையை கோதி விட்டவள், “டைம் ஆயிடுச்சு கார்த்தி, கீழ பசங்க வெயிட் பண்ணுவாங்க உன் பொண்ணு நீ இல்லாம சாப்பிட மாட்டா” என்று சொல்ல, “அதெல்லாம் அர்ஜுன் பார்த்துக்குவான்” என்றவாறு அவள் கழுத்தில் முகம் புதைத்தான் கார்த்திக்.
அவனை தன்னிடமிருந்து விலக்கியவள், டைம் ஆயிடுச்சு, ஆபீஸ் போக வேணாமா? போய் குளிங்க என்றவாறு அவனை குளியலறைக்குள் தள்ளிவிட, ஒரு புன்னகையுடன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான் கார்த்திக்.
கீழே சமையலறையில் அர்ஜுன் சமைத்துக் கொண்டிருக்க, வெண்பாவும், கவினும் அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.
வெண்பா அந்த டொமேட்டோவை அப்படி கையில வச்சு கட் பண்ணா உன் கையும் சேர்ந்து கட் ஆயிரும் என்றவாறு அவள் கையிலிருந்த தக்காளியை வாங்கியவன், அவள் கையை பிடித்து அதை வெட்டிக் காட்ட, அவள் சொன்னது போலவே வெட்டியவள், அவன் முகம் பார்க்க, “குட் கேர்ள் “என அவன் கன்னத்தை கிள்ளினான் அர்ஜுன்.
அவன் பாராட்டில் அவள் முகம் பிரகாசிக்க, அவன் சொல்லிக் கொடுத்தது போல ஏனைய காய்கறிகளை வெட்ட ஆரம்பித்தாள்.
“மாமா இங்க பாரு நான் சுட்ட தோசை வட்டமா வந்துருச்சு” என்ற ரியானின் குரல் கேட்டு திரும்பியவன் அவனுக்கும் அதேபோல் கன்னத்தை கிள்ளி பாராட்ட “இன்னும் எவ்வளவு நேரம்டா” என்றவாறு சமையலறைக்குள் நுழைந்தாள் ஷர்மிளா.
எல்லாம் முடிஞ்சது ஷர்மி இதை கொண்டு போய் டைனிங் டேபிள்ல வச்சிரு என அர்ஜுன் அவன் கையில் உணவுப் பதார்த்தங்களை கொடுக்க உள்ள வந்தது ஒரு குத்தமாடா என புலம்பிக்கொண்டே உணவுப் பதார்த்தங்களை டைனிங் டேபிளில் அடுக்கி வைத்தாள்.
அவள் அடுக்கி வைக்கவும் அவர்கள் மூவரும் டைனிங் டேபிள் வந்து சேர “மம்மி அப்பா எங்க” என்று கேட்டாள் வெண்பா “உங்க அப்பா தானே வருவாரு இரு” என்று ஷர்மிளா சொல்ல படிகளில் இறங்கி வந்தான் கார்த்திக். அவனை மேலிருந்து கீழ் பார்த்த கவின் “டேட் எங்க கிளம்பிட்டீங்க” என்று சந்தேகமாக கேட்க “இது என்னடா கேள்வி ஆபீஸ்க்கு தான்” என்று கார்த்திக் சொல்ல “டேட் இன்னைக்கு சண்டே” என்றாள் வெண்பா.
அப்போதுதான் காலண்டரை பார்த்தவன் தன் மனைவியை திரும்பி முறைக்க அவளோ ஒரு நக்கல் சிரிப்புடன் “உங்க அப்பாவுக்கு நாள் கிழமையே சரியா தெரியல இதுல வாய் மட்டும் வங்காள விரிகுடா வரைக்கும் நீளும்” என்று வெண்பாவிடம் சொல்ல “ஏய் ஏய் இன்னைக்கு சண்டேன்னு எனக்கு தெரியாதா ஆபீஸ்ல கொஞ்சம் வொர்க் இருக்கு அதான் சரி என்ன பிரேக்பாஸ்ட்” என்றவன் டைனிங் டேபிளில் அமர அர்ஜுன் என சினுங்கலாக அழைத்தாள் வெண்பா.
“நீ எதுக்குடி சினுங்குற” என ஷர்மிளா கேட்க “உன் புருஷன் இன்னைக்கு இவளை வெளியே கூட்டிட்டு போறேன்னு ப்ராமிஸ் பண்ணாரு அதை மறந்துட்டு இப்ப ஆபீஸ் போகப்போறேன்னு சீன் போடுறாருல்ல அதான்” என்று விளக்கமளித்தான் அர்ஜுன்
வெண்பாவின் முகம் வாடி இருப்பதை கண்ட ஷர்மிளா “உங்க அப்பாவுக்கு ஆபீஸ் எல்லாம் ஒன்னும் இல்ல சண்டேன்னு மறந்துட்டு ரெடி ஆகிட்டு வந்துட்டாருல அதை சமாளிக்கத்தான் ஏதோ உளறிக்கிட்டு இருக்காரு இதுக்கெல்லாம் அப்செட் ஆகுறதா” என ஷர்மிளா அவள் கன்னம் பிடித்து கொஞ்ச தன் பெரிய விழிகளால் கார்த்திக்கை முறைத்தது அந்த 20 வயது குழந்தை.
அவள் முறைப்பதை கண்டவன் “சரி சரி இன்னைக்கு நம்ம எங்க போலாம்” என்று கேட்க தியேட்டர் போலாம் என்றாள் ஷர்மிளா.
“போம்மா எப்ப பாரு தியேட்டர் பார்க் கிரவுடே இல்லாத பீச்ன்னு போர் அடிக்குது இன்னைக்கு அமியூஸ்மென்ட் பார்க் போலாம்” என்று ரியான் சொல்ல “அமியூஸ்மென்ட் பார்க் எல்லாம் வேணாம் நம்ம வேற எங்கயாவது போலாம்” என உடனே மறுத்தாள் ஷர்மிளா. அவள் மறுப்பில் அவன் முகம் வாடி போக “அமியூஸ்மென்ட் பார்க் போலாம் ஷர்மி எப்ப பாரு கிரவுடே இல்லாத இடத்துக்கு போய் பசங்க என்ன பண்ண போறாங்க” என அர்ஜுன் சொல்ல “என்ன அர்ஜுன் விளையாடுறியா” என ஷர்மி எகிற மேசையின் கீழ் அவள் காலை மிதித்தான் அர்ஜுன்.
“அமியூஸ்மென்ட் பார்க்கா அது எப்படி இருக்கும்” என வெண்பா சந்தேகமாக கேட்க “அக்கா அமியூஸ்மென்ட் பார்க்ல நிறைய ரைட்ஸ் இருக்கும் நிறைய ஸ்டால்ஸ் இருக்கும் நிறைய பேர் ஸ்பைடர்மேன் அயன்மேன் காஸ்டியூம் எல்லாம் போட்டு இருப்பாங்க” என்று ரியான் சொல்ல “அப்போ ஏன் எங்களை இதுவரைக்கும் அங்க கூட்டிட்டு போனதே இல்ல என முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கேட்டாள் வெண்பா.
“அதுதான் இப்ப போலாம்னு சொல்லியாச்சுல்ல சீக்கிரம் போய் ரெடியாகிட்டு வாங்க” என என்று கார்த்திக் சொல்ல இருவரும் ஆர்வமாக சென்று தயாராக ஆரம்பித்தனர்
அவர்கள் சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்ட ஷர்மிளா “எதுக்கு அர்ஜுன் அமியூஸ்மென்ட் பார்க் போலாம்னு சொன்ன வெண்பா கிரவுடை பார்த்தா பயப்படுவான்னு தெரியும் இல்ல” என்று எகிற
“இதோ பாரு ஷர்மி அவ பயப்படறான்னு அப்படியே விட முடியுமா முதல்ல அவளை குழந்தை மாதிரி ட்ரீட் பண்றத நிறுத்து அவளை கொஞ்சம் ஃப்ரீயா விடு இப்படி எல்லாத்துக்கும் பயந்துகிட்டே இருந்தா அவ எப்படி சொசைட்டிய ஃபேஸ் பண்ணுவா நான் அவ கூடதானே இருக்கேன் நான் அவளை பார்த்துக்கிறேன் அப்ப சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன் ஷி இஸ் மை ரெஸ்பான்சிபிலிட்டி” என்று அர்ஜுன் தீர்க்கமாக சொல்ல “அதுதான் அவன் சொல்றான்ல போய் ரெடியாகு அர்ஜுன் நீயும் போய் ரெடியாகு” என்றான் கார்த்திக்.
“என்னங்க அது” என ஷர்மி ஏதோ சொல்ல வர “அதுதான் அர்ஜூன் அவன் பாத்துக்குறேன்னு சொல்றான் இல்ல வெண்பாவுக்கு எது சரின்னு நம்மளை விட அவனுக்கு நல்லாவே தெரியும் நீ போய் ரெடியாகு நீ ரெடியாகத்தான் லேட் ஆகும்” என்று அவன் அவளை அதட்ட
“யோவ் வெண்பாவுக்கு வெளிய ஃபுட் ஒத்துக்காது அதுதான் சமைக்கணும்னு சொல்ல வந்தேன்” என அவள் சொல்ல “ஷர்மி அதெல்லாம் மார்னிங்கே நாங்க சமைச்சிட்டோம் 11 மணிக்கு எழுந்திருச்சிட்டு பிரேக்பாஸ்ட் பண்ணல லஞ்ச் பண்ணலன்னு சீபே போய் ரெடியாகு” என்று அர்ஜுன் அவளை விரட்ட “வர வர இந்த வீட்ல எனக்கு மரியாதை ரொம்ப தேயுது” என புலம்பிக்கொண்டே தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் ஷர்மிளா
வயல் வரப்பிற்கு சற்று தள்ளி இருந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்தவாறு வயலை பார்த்துக் கொண்டிருந்தார் ராஜலிங்கம். அவர் மனதை ஆயிரம் கவலைகள், ஏக்கங்கள், குற்ற உணர்வு என்பன ஆக்கிரமித்திருக்க, தன் மகளின் நினைவில் மூழ்கி இருந்தவரை கலைத்தது கதிரேசனின் குரல்.
அப்பா என்று அவன் அழைத்ததுதான் தாமதம். அவன் முகத்தைக்கூட பார்க்காமல் எழுந்து விறுவிறு என நடக்க ஆரம்பித்து விட்டார்.
ஓடி வந்து அவரை மறித்தவாறு நின்ற கதிரேசன், “நான் பண்ணது பெரிய தப்புன்னு எங்களுக்கு தெரியும்ப்பா. அவ உங்க பொண்ணுன்னா, அவ எங்க தங்கச்சிப்பா சின்ன வயசுல இருந்து நான் அவ கூட பேசினது இல்ல. அதுக்காக அவ மேல பாசம் இல்லன்னு அர்த்தம் இல்லப்பா எங்களுக்கும் அவளை பிடிக்கும் ஆனா அதை காட்டிக்க எங்க வெட்டி வீராப்பு விடல அவளுக்கு இப்படி எல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா, அன்னைக்கு நாங்க அவளை விட்டுருக்க மாட்டோம். அந்த நேரத்துல அவ கொஞ்ச நாள் எங்களை விட்டு தள்ளி இருந்தா போதும்னுதான் தோணுச்சு இப்படி அவ ஒரேடியா எங்களை விட்டுட்டு போவான்னு நாங்க நினைக்கலப்பா” என்று சொல்ல,
அவனை நேர்கொண்டு பார்த்தவன், “என் பொண்ணை பார்த்து பத்து வருஷம் ஆச்சு. கார்த்திக் அவளை நல்லா பார்த்துப்பான். அது எனக்கு தெரியும். ஆனா இப்ப வரைக்கும் அவங்க ரெண்டு பேரும் இருக்காங்களா இல்லையான்னு கூட எனக்கு தெரியாது. கடைசி வரைக்கும் அவ முகத்தைக்கூட பார்க்காம போய் சேர்ந்துருவோமோன்னு பயமா இருக்குடா” என அவர் கரகரத்த குரலில் சொல்ல, அவர் கையை பற்றிக்கொண்டவன், “தங்கச்சியைக் கூட்டிட்டு வர்றது என் பொறுப்பு” என்று சொல்ல, “இதைத் தானடா பத்து வருஷமா சொல்றீங்க” என விரக்தியாக கேட்டார் ராஜலிங்கம்.
பத்து வருஷமா உங்க கூட பேசாத பையன், இப்போ அவனோட குற்ற உணர்ச்சியை தாண்டி உன்கிட்ட பேசுறான்னா, இன்னுமா உங்களுக்கு புரியல என கதிரேசன் கேட்க, அம்மு கிடைச்சிட்டாளா? எங்கடா இருக்கா? எப்படி இருக்கா? என ராஜலிங்கம் ஆர்வமாக கேட்க, அமெரிக்கால இருக்காப்பா இப்போதான் கண்டுபிடிச்சோம் அவளை கூட்டிட்டு வர பார்த்திபன் போயிருக்கான் என்று கதிரேசன் சொல்ல, முகம் கொள்ளா புன்னகையுடன் அவன் முகம் பார்த்தார் ராஜலிங்கம்.
அதே சமயம், தன் தங்கையை அழைத்து வருவதற்காக மனம் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் விமானத்தில் ஏறினான் பார்த்திபன்.
