அத்தியாயம் – 1

அந்த கதவின் துளை வழியாக பார்த்தவளின் விழிகள் பயத்தில் நடுங்கி போக, உடன் உயிர் பயமும் வந்து ஒட்டிக் கொண்டது.

கருவில் வேறு ஒன்பது மாத குழந்தை. படபடப்பிலும் அச்சத்திலும் பிரசவ வலி நேர்ந்து விடுமோ என்ற பயமும் சேர்ந்துக் கொள்ள, அமைதியான அந்த இரவு நேரத்தில் மூச்சு சத்தம் கூட யாருக்கும் கேட்டு விட கூடாதென்று பயந்தாள் பெண்ணவள்.

நடுங்கிக் கொண்டு இருந்த இதயத்தோடு ஒன்பது மாத கருவை சுமந்துக் கொண்டு யாருக்கும் சத்தம் கேட்காதவாறு மெதுவாக நடந்து பின் பக்கம் வந்தவள், நயனங்கள் பயத்தில் வெளிறி போய் இருக்க, வியர்வை உடல் முழுவதும் நனைத்துக் கொண்டு அவள் பாதம் நிற்க முடியாமல் நடுக்கம் கொடுக்க, மூச்சும் வாங்க ஆரம்பித்தது.

ஆனாலும் எப்படியாவது தன் உயிரையும் தன் குழந்தை உயிரையும் காப்பாற்றி விட வேண்டும் என்று முனைப்பில் இருந்தவள் கரம் கெட்டியாக பின் பக்கம் இருக்கும் கதவின் பிடியை பிடித்துக் கொண்டு இருந்தது.

செவியோ கூர்மையாக முன் பக்க கதவு திறக்கும் சத்தத்தை கேட்பதில் இருக்க, அதே போல் கதவும் திறக்கும் சத்தம் கேட்க, இவளும் கேட்கும் சத்தத்தை வைத்துக் கொண்டு மெதுவாக பின் பக்க கதவை திறந்தாள்.

சரியாக அறை கதவு திறந்துக் கொள்வதற்குள், முன் பக்கம் திறந்த கதவின் சத்தம் நின்று விட, இவளுக்கு திக்கென்று ஆனது.

இவள் பாதி அளவு தானே கதவை திறந்து வைத்து இருக்கிறாள். தன் பாதி உடல் கூட இந்த வழியாக நுழைய முடியாதே என்ற பதற்றம் சட்டென்று ஏற்பட்டு விட, அதில் சுருக்கென்று அடி வயிற்றில் வலி தோன்ற பல்லை கடித்துக் கொண்டு வலியை தாங்கிக் கொண்டவள் அப்படியே அந்த இருட்டில் கதவின் பக்கத்தில் சாய்ந்துக் கொண்டாள்.

முதல் முறை தான் ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறோம் என்று எண்ணி வேதனைக் கொண்டவள் மனமோ ‘தங்கம் பயப்படாதீங்க அம்மா உங்களை எப்படியாவது காப்பாத்திடுவேன்’ என்று அந்நிலையிலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு தைரியத்தை கூறினாள்.

கருவில் இருந்த குழந்தைக்கு தைரியம் கூறினாளா இல்லை தனக்கு தானே தைரியம் கூறிக் கொண்டாளா என்று அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

அப்பொழுது “ஐயா உங்க சம்சாரத்தை ரூம்ல காணும். நம்ம கொலை பண்ண வரோம்னு தெரிஞ்சிட்டு தப்பி போயிட்டாங்களா? எதுக்கும் நான் வேணும்னா பின் பக்கம் போய் பார்த்துட்டு வரவா?” என்று பேசுவதை செவியில் வாங்கியவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

தன் உயிராக நினைத்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி இப்பொழுது குழந்தையை சுமந்துக் கொண்டு இருக்கும் தன்னையும் குழந்தையையும் தன் கணவனே கொலை செய்ய சொல்லி இருக்கிறானே என்ற துயரம் அவள் நெஞ்சை அடைத்துக் கொள்ள, தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை எப்படியாவது தன் பிள்ளையை மட்டுமாவது காப்பாற்றி விட வேண்டும் என்று துடித்தாள்.

அப்பொழுது பின் பக்கம் யாரோ ஒருவர் வரும் காலடி சத்தம் கேட்க, மீண்டும் கதவின் பிடியை பிடித்துக் கொண்டு காதை கூர்மையாக்கினாள்.

அவள் நினைத்தது போலவே மற்றொரு கதவு திறக்கும் சத்தம் கேட்ட அந்த சத்தத்திற்கு ஏற்றது போல் இவளும் கதவை வேகத்துடன் முழுமையாக திறந்து வெளியேச் சென்றவள் அதே வேகத்துடன் கதவை சாற்றி வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு நொடியும் தாமதிக்காமல் அந்த இருட்டான பாதையில் வேகமாக நடந்தாள்.

அவளால் ஓட கூட முடியவில்லை. நடப்பதற்கே மூச்சு வாங்கியது. ஆனாலும் உயிர் பயம், அவளை துணிச்சலாக நடக்க வைத்தது.

கிட்டத்தட்ட பாதை தார் ரோட்டை வந்தடைய, அவளும் மூச்சு வாங்க தார் ரோட்டில் பாதத்தை வைத்த அந்த கணம், அதே சாலை வழியாக வேகமாக வந்த ஒரு கார், உயிருக்கு பயந்து வந்த கர்ப்பிணி பெண்ணான இவள் மீது மோத, அதில் பறந்து போய் கீழே விழுந்தவளுக்கு தலையிலும் இடுப்பு மற்றும் வயிற்று பகுதியிலும் கை கால் என்று உடல் முழுவதுமே பலத்த அடிப்பட்டு அந்த இடத்திலே மயங்கி சரிந்தாள்.

அவள் மீது மோதிய வேகத்தில் கார் ஒரு குலுக்கலுடன் நின்று விட, “என்னாச்சி எது மேலேயோ மோதிட்டோம் போல” என்று குலைவாக பேசியபடி எதன் மீது கார் மோதியது என்று பார்ப்பதற்காக காரிலிருந்து இறங்கியவன் பாதம் தரையில் பட்டும்படாமல் தள்ளாடியபடி இறங்கினான்.

போதையின் உச்சியில் இருந்தவனின் பார்வைக்கு வேறு இருளில் எதுவும் புலப்படவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தானே தவிர, கீழே தரை அவன் கருத்தில் கூட பதியவில்லை போல்.

“என்னடா இது மேகத்துல மிதக்குற மாதிரி இருக்கு. அந்த கடைக்காரன் கொடுத்தது செம சரக்கு போல. அடிச்சதும் அப்படியே சொர்க்கத்துல மிதக்குற மாதிரியே இருக்கு” என்று மதுவின் பிடியில் உளறியவனின் கரம் காரின் பிடியில் வைக்க, அந்நேரம் மயக்கத்தில் இருந்தாலும் பிரசவ வலி ஏற்பட மெல்லியதாக அவளின் முணங்கல் சத்தம் இவனின் செவியில் தீண்டியது.

சத்தம் கேட்டதும் மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தான். ஆனால் அவன் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை.

“என்னடா இது இப்போ தான் யாரோ முணங்கியது போல இருந்துச்சி. ஆனா திரும்பி பார்த்தா யாரையும் காணும். ஒருவேளை பேய் பிசாசோ” என்று சொல்லிக் கொண்டே இடுப்பில் இருக்கரத்தையும் ஊன்றியபடி நேராக நின்றவன் “ஏய் நீ எந்த பேயா வேணாலும் இரு. இல்ல பிசாசா வேணாலும் இரு. ஆனால் என் முன்னாடி வராம இரு. நானே செம கொலை காண்டுல இருக்கேன். எவனாவது என் கண்ணு முன்னாடி வந்தீங்க. பேய் பிசாசுனு கூட பாவம் பார்க்க மாட்டேன் அடிச்சி தூக்கிட்டு போயிட்டே இருப்பேன்” என்று பேய்களையே மிரட்டியவன் மீண்டும் காரில் ஏற போனான்.

அப்பொழுது “ம்மா…” என்று வலியில் யாரோ முணங்கும் சத்தம் மீண்டும் கேட்க, அவனோ “அடங் கொய்யாலே, சொல்லிட்டே இருக்கேன்…” என்று பேசிக் கொண்டே திரும்பியவனின் விழிகள் இடுங்க “அங்கே ஏதோ உருண்டையா கிடக்குது” என்று தள்ளாடியபடியே சற்று அருகில் செல்ல அதிர்ச்சியில் அவன் விழிகள் விரிந்து போனது.

அங்கே உதிரங்கள் நிறைந்து போய் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பெண்ணை பார்த்து.

அப்பெண்ணை பார்த்ததுமே அடித்த போதை கூட சட்டென்று இறங்கி விட, மெதுவாக அவள் அருகில் சென்றான்.

பார்த்ததுமே புரிந்துக் கொண்டான் கர்ப்பிணியாக இருக்கிறாள் என்று. அவள் அருகில் மேலும் நெருங்கி “ஏய் உயிரோட இருக்கீயா?” என்று கேட்டவனை எதைக் கொண்டு அடிக்கலாம் என்று அந்த இயற்கையே கோபம் கொண்டு மழை தூற ஆரம்பித்தது.

மழை நீர் அவள் முகத்திலும் பட ஜில்லிட்டு போனது போல் “ஆ…” என பெரும் மூச்சோடு கண்களை திறந்தவள் எதிரே நின்று இருந்தவனை பார்த்தவள் அப்படியே மீண்டும் மயங்கி போனாள்.

அதை கண்டு ஆடிப் போனவன் சுற்றும் முற்றும் மீண்டும் ஒருமுறை பார்த்தான். அந்த இருளான சாலையில் இவர்கள் இருவரை தவிர வேற யாருமே இல்லை என்பதை உணர்ந்தவன், மனசாட்சியை கழட்டி அடமானத்திற்கு வைத்தது போல், வேகமாகச் சென்று கார் கதவை திறந்து உள்ளே ஏறி காரை எடுத்துக் கொண்டு அங்கே இருந்து கிளம்பி இருந்தான் இக்கதையின் நாயகன்.

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!