“அய்யோ எங்களுக்கு நெஞ்சு வலி வந்திடும் போல. மலர் உன்னை வேணாம்னு சொல்லிட்டாளா?! அப்புறம் எதுக்கு இப்போ வந்து உன்கிட்ட கொஞ்சிப் பேசிட்டு போறா? என்னடா குழப்புற?!” என்று மூவரும் கோரஸாக கேட்க,
பாலா தங்களுக்குள் நடந்த அத்தனை கதைகளையும் சொல்லி முடித்தான்.
கன்னத்தில் கை வைத்து, கதை கேட்ட மூவரும், “எப்படியோ கமிட் ஆகிட்ட, வாழ்த்துக்கள் மச்சான்?” என்றவாறு அவனை கட்டிக் கொண்டனர்.
கேண்டீனுக்குள் பாலாவின் நண்பர்கள் மூவரும் நுழைந்ததும், அவர்களைப் பார்த்த மலரின் கண்கள், ஆர்வதோடு அவனைத் தேடி அலைபாய்ந்தன.
“வாடா பாலா!” என்று ரகு உரக்க அழைக்க, மலர் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.
ஆனால், அங்கு பாலா வந்திருக்கவில்லை. ஏமாற்றத்தோடு அவள் முகம் திருப்பிய தருணம், மூவரும் ஒருவருக்கொருவர் ‘ஹை-ஃபை’ செய்து கொண்டு அவளைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தனர்.
‘வானரக் கூட்டம்… மூஞ்சியப் பாரு!’ என்று தன் மனதிற்குள் அவர்களைத் திட்டியபடியே, டேபிளிலிருந்து கோபமாக எழுந்தாள் மலர்.
வேகமாக நகர்ந்தவள், எதிர்பாராதவிதமாக எதிரே வந்து கொண்டிருந்த பாலா மீது பலமாக முட்டி மோதி நிலைதடுமாறினாள். அவள் கீழே விழப் போன நொடியில், பாலா சட்டென்று அவளது இடையை வளைத்துப் பிடித்துக் கொண்டான்.
பாலா அவளைத் தாங்கிப் பிடித்து நிலைநிறுத்த, மலர் படபடப்புடன், “சாரி பாலா…” என்று அரக்கப்பரக்கக் கூறியவாறே அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
பாலா மெல்ல புன்னகைத்தபடி தன் நண்பர்கள் அமர்ந்திருந்த மேஜையின் முன் சென்று அமர்ந்தான்.
“என்னடா மச்சான்… அந்த ‘ஃபிளவர்’ உன்னைத் தேடுதான்னு பார்க்க நாங்க சும்மா ஒரு பிளான் போட்டா, கடவுள் உனக்கு வேற லெவல்ல ஒரு பிளான் போட்டிருக்கார் போல! நிஜமாவே நீ மச்சக்காரன்டா!” என்று ரகுவும் மற்ற நண்பர்களும் அவனைக் கலாய்க்கத் தொடங்கினர்.
அதேநேரம், டேபிளில் ஏதோ மறந்துவிட்ட பொருளை எடுக்க அங்கு வந்த மலர், அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டாள். அவள் பாலாவைக் கோபமாக முறைத்துப் பார்த்துவிட்டு விறுவிறுவென அங்கிருந்து சென்றாள்.
அவளது பார்வையில் இருந்த கோபத்தைக் கண்ட பாலா அலறிப்போய், “டேய்! நீங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறேன்னு சொல்லி, கடைசியில எங்களை நிரந்தரமா பிரிச்சு விட்டுடாதீங்கடா…” என்று தன் நண்பர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டான்.
*****
நாட்கள் நகர… மலர் பாலாவைப் பார்க்கும் போதெல்லாம் மென்மையாகப் புன்னகைத்தாள். அவனோ, தன் கண்கள் அவள் மீது பதியும் தருணங்களிலெல்லாம் இதழ்க்கடையில் சிரிப்பைத் தத்தளிக்க விட்டான். அவ்வப்போது இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் பொழுதெல்லாம், வார்த்தைகளின்றி மௌனமாகவே காதல் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
அப்படியொரு நாளில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செழியன் திடீரென அலுவலகத்திற்கு வந்திருந்தார். வந்தவர், பாலாவையும் மலரையும் உடனடியாகத் தன் அறைக்கு அழைத்தார்.
இருவரும் படபடக்கும் இதயத்துடன் இயக்குனரின் அறைக்குள் நுழைய, செழியன் அவர்களை அமருமாறு சைகை செய்தார். அவர்கள் அமர்ந்ததும், அவனை ஏறிட்டு நோக்கியவர், “பாலா… உங்க கம்பெனி கேஸ் இப்ப என்னாச்சு?” எனக் கணீரென்ற குரலில் வினவினார்.
“அங்கிள்… பைனான்சியர்கிட்ட பணம் ஏற்பாடு பண்ண கொஞ்சம் டைம் கேட்டிருக்கோம்,” என்றான் பாலா தாழ்ந்த குரலில்.
செழியன் அவனை உற்றுப் பார்த்தபடி, “அவ்வளவு பெரிய தொகையை எப்படி ரெடி பண்ணப்போற பாலா?” என்றார் யோசனையாக.
“தெரியல அங்கிள்… ஜூவல்ஸ், ப்ராப்பர்ட்டி எல்லாமே இப்ப லாக்லதான் இருக்கு. கோர்ட் கேஸ் முடியாம எதுலயும் கை வைக்க முடியாது,” என்று பாலா விரக்தியோடு கூறியதும், அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த செழியன், சற்று மௌனமாக யோசித்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தார்.
“பாலா… அந்தப் பணத்தை நான் தர்றேன். நீங்க முதல்ல பைனான்சியர்கிட்ட அதைக் கொடுத்துட்டு, கோர்ட்ல இருக்கிற எல்லா ஸ்டே ஆர்டரையும் ரிலீஸ் பண்ணப் பாரு. அதுக்கப்புறம் மத்த ப்ராப்பர்ட்டியை வச்சு பேங்க்ல லோனோ அல்லது வேற வழியிலேயோ பணம் ரெடி பண்ணி, புரொடக்ஷனை ஸ்டார்ட் பண்ணுங்க,” என்றார் நம்பிக்கையூட்டும் குரலில்.
அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியிலும் நன்றியுணர்ச்சியிலும் பாலாவின் கண்கள் கலங்கின. “அங்கிள்…” என்று அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் தவித்தான்.
“எவ்ளோ நாள் தான் கம்பெனியைக் குளோஸ் பண்ணி வைக்க முடியும் பாலா? இந்தப் பணத்தை நான் உனக்குக் கடனாத்தான் தர்றேன். நீ மீண்டு வந்து, உன்னால எப்ப முடியுமோ அப்போ இதைத் திருப்பிக்கொடு,” என்று செழியன் பெருந்தன்மையுடன் கூறியவர் மலரை நோக்கி அர்த்தமாய் புன்னகைத்தார்.
மீண்டும் பாலாவிடம் திரும்பி, “மலரைக் கொஞ்ச நாளைக்கு உனக்கு பர்சனல் அசிஸ்டென்ட்டா கூடவே வச்சுக்கோ. பிசினஸ்ல எல்லா விஷயத்துலயும் அவங்களோட கருத்தைக் கேட்டுக்கோ. ஆனா, இறுதி முடிவு உன்னோடதா மட்டும்தான் இருக்கணும். ஒருவேளை உனக்கு வேண்டாம்னு தோணும்போதோ, இல்ல அவங்களுக்கு அங்க ஒர்க் பண்ணப் பிடிக்கலனாலோ… தாராளமா இங்கேயே வந்து டீம் லீடர் போஸ்டிங்ல கண்டினியூ பண்ணட்டும்,” என்றார்.
அடுத்த நொடி, அவள் புறம் திரும்பியவர், “மலர், உன்கிட்ட முன்னாடியே கேட்காம நான் இதை முடிவு பண்ணிட்டேன்மா. இது உனக்கு புரொமோஷன் மாதிரிதான். புது போஸ்டிங், கூடவே நல்ல சம்பளமும் தரச் சொல்றேன். உன்னோட திறமை இப்போ பாலாவோட கம்பெனிக்கு தேவைப்படுது. உனக்கு இதில் விருப்பம் இல்லைனா தயங்காம சொல்லிடுமா,” என்று கனிவோடு கேட்டார்.
“ஓகே சார்… நான் போறேன்!” மலர் சற்றும் யோசிக்காமல் சரியென சம்மதித்தாள்.
அவள் அவ்வளவு எளிதாக ஒப்புக்கொண்டதைக் கேட்ட பாலா, முகத்தில் அத்தனை ஆச்சரியத்துடன் திரும்பி அவளை நோக்கினான்.
செழியன் புன்னகைத்தபடி, “மலர்தான் உன்னோட கம்பெனி கேஸைப் பத்தி என்கிட்ட சொல்லி இந்த ஐடியாவைக் கொடுத்தாங்க, அவங்க சொன்னது எனக்கும் சரின்னு தோணுச்சு. நாளைக்கே நான் உனக்குப் பணம் தர்றேன். முதல்ல கேஸை முடிச்சுட்டு, அடுத்த வாரமே உன்னோட கம்பெனியை ஓபன் பண்ணு. இனிமே பாலாவோட வாழ்க்கையில நடக்குற எல்லாமே வெற்றியா மட்டும்தான் இருக்கும். வேற என்ன உதவி வேணும்னாலும், பிசினஸ்ல ஏதாவது விஷயத்துல அறிவுரை வேணும்னாலும் என்கிட்ட தயங்காம கேளு. வாழ்த்துக்கள் பாலா!” என்று வாழ்த்தினார்.
அவர் கூறியதைக் கேட்ட பாலாவின் முகமெல்லாம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. மலர்தான் தனக்காகப் பரிந்து பேசினாள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.
அறையை விட்டு வெளியே வந்தவன், கேண்டீனில் காத்துக்கொண்டிருந்த தன் நண்பர்களிடத்தில் வேகமாகச் சென்று விஷயத்தைக் கூறினான். சொல்லும்போதே சந்தோஷத்தைத் தாங்க முடியாமல் அவர்கள் மூவரையும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
அப்போது மலர் அவர்கள் அருகே வர, பாலா அவளை நெகிழ்ச்சியோடு பார்த்தான். “ரொம்ப தேங்க்ஸ் மலர்… நீ செஞ்ச இந்த உதவியை என் லைஃப்ல நான் எப்பவும் மறக்க மாட்டேன்,” என்றான் உணர்ச்சிவயப்பட்டவனாக.
மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த அவனது முகத்தையே பார்த்த மலர், இதழ்களில் குறும்புப் புன்னகை அரும்ப, “ம்ஹூம்… வெறும் தேங்க்ஸ் மட்டும்தானா? ட்ரீட்லாம் எதுவுமே இல்லையா பாலா?” என்றாள்.
“ஈவ்னிங் கண்டிப்பா வெளிய போகலாம் மலர்!” என்று பாலா சம்மதிக்க, அதைத் தொடர்ந்து எல்லோரும் அவரவர் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினர்.
‘இதெல்லாம் மலர் என்ற தேவதையால்தான் சாத்தியமானது. அவள் என் வாழ்வில் வந்த அதிர்ஷ்ட தேவதை!’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே தன் இருக்கைக்குச் சென்றான் பாலா.
மாலை நேரம் வந்ததும், பாலா அவளைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றான். குளிர்ந்த கடற்காற்று அவர்கள் மீது வீசிக் கொண்டிருக்க, இருவரும் மணற்பரப்பில் அமர்ந்தனர்.
“எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு மலர்… என்னைப் பத்தி யோசிக்கவும், எனக்காகக் கவலைப்படவும் இந்த உலகத்துல ஒருத்தங்க இருக்காங்கன்னு நினைக்கும் போதே மனசு முழுக்க ஏதோ நிம்மதி பரவுது,” என்றவன் காதல் ததும்பும் விழிகளோடு அவளை நோக்கினான்.
பேசிக்கொண்டே, தன் அருகில் அமர்ந்திருந்தவளின் மென்கரத்தை எடுத்து, தன் இரு கரங்களுக்குள் பற்றிக் கொண்டான். அவளது விழியோடு விழி கலந்தவன், “நான் உன்னை எவ்வளவோ கஷ்டப்படுத்தியிருக்கேன் மலர்… அப்படியிருந்தும் நீ ஏன் எனக்கு இவ்வளவு நல்லது பண்ற?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.
“பாலா… நீங்கன்னு இல்ல, உங்க இடத்துல வேற யாரா இருந்தாலும் நான் இதைத்தான் பண்ணியிருப்பேன். ஏன்னா, உங்களை நல்ல ஃப்ரெண்டா நினைக்கிறேன். அதுமட்டும் இல்லாம நீங்க ரொம்ப நல்லவர். எங்க ஹோமுக்கு இத்தனை காலமா ஸ்பான்சரா இருக்கீங்க. ஒருவகையில உங்க பணத்துலதான் நான் வளர்ந்திருக்கேன், சாப்பிட்டிருக்கேன். அந்த நன்றிக்கடன்… இப்படி எது வேணும்னாலும் எடுத்துக்கலாம்,” என்று மலர் எதார்த்தமாகக் கூறியதும், பாலா அவளது கையைத் தன் பிடியிலிருந்து விடுவித்தான்.
அவளிடமிருந்து அவன் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு அவளிடமிருந்து தேவையானது வெறும் நட்போ நன்றிக்கடனோ அல்ல… அவளது தூய்மையான காதல்தான்! அவளோ தன்னை இன்னும் நண்பன் என்ற எல்லைக்குள்ளேயே நிறுத்தி வைத்திருக்கிறாள்.
‘ஆனால், அவள் கண்களில் தெரிவது காதல்தானே? பின் ஏன் அதைத் தன்னிடம் மறைக்கிறாள்? என்னை மறுக்கிறாள்?’ என்று எண்ணியபடி பாலா தனக்குள்ளேயே புன்னகைத்துக் கொண்டான்.
இருந்தும் அவனது நம்பிக்கை குறையவில்லை. ‘என்றாவது ஒருநாள் இதே மலர் தேடி வந்து தன்னிடம் காதலைச் சொல்வாள்!’ என ஆழமாக நம்பினான்.
‘காதலில் காத்திருத்தல் தானே அழகு!’ என்று தனக்குள்ளே தேற்றிக்கொண்ட பாலா, அவளை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்தான். அதன்பின், அவளைப் பத்திரமாக விடுதியில் இறக்கிவிட்டுத் தன் இல்லத்திற்குத் திரும்பினான்.
மறுநாள் அலுவலகத்தில், செழியன் சொன்னபடியே நிறுவன மேலாளர், மலர் மற்றும் பாலாவின் நண்பர்களைச் சாட்சியாக வைத்து, அவனுக்குத் தேவையான பணத்தை முறைப்படி வழங்கினார்.
அடுத்த வாரம்… ஒரு நன்னாளில் பாலாவே நேரடியாக விடுதிக்கு வந்து மலரைத் தன் காரில் அழைத்துக் கொண்டு அவனுடைய கம்பெனிக்குச் சென்றான்.
‘ஆர். பி. சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ்’ (RB Software Solutions) என்று எழுதப்பட்டிருந்த அந்த அடுக்குமாடிக் கட்டிடத்திற்குள் அவனது கார் நுழைந்தது.
நிறுவனத்தின் கீழ்தள நுழைவாயிலில் ஊழியர்கள் அனைவரும் பாலாவின் வருகைக்காகக் ஆவலோடு காத்திருந்தனர்.
பாலா வாகனத்தை நிறுத்திவிட்டு முதலில் இறங்கினான். நேராக மறுபுறம் நடந்து சென்று, மலருக்காகக் காரின் கதவைத் திறந்துவிட்டான். அவன் எப்போதுமே அவளிடம் காட்டும் அதே தனிப்பாசம்தான் இது.
இருந்தாலும், இன்று அவன் கோட்-சூட் அணிந்து செம மிடுக்காக, கம்பீரமாக நின்றிருந்தான். ஒரு பெரிய நிறுவனத்தின் சி.இ.ஓ தனக்காக இப்படி இறங்கி வந்து கதவைத் திறப்பது மலருக்குச் சற்றுச் சங்கடமாக இருந்தாலும், அவளது மனதிற்குள் ஒரு மெல்லிய மகிழ்ச்சி அரும்பத்தான் செய்தது.
நிறுவனம் மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்படப் போவதால், வாசலில் வண்ண ரிப்பன் கட்டி எல்லாவற்றையும் தயாராக வைத்திருந்தனர். அங்கிருந்தவர்கள் பாலாவை நோக்கி ரிப்பனைக் கட் செய்யுமாறு கூறினர்.
அவனோ புன்னகையுடன் கத்திரிக்கோலை வாங்கி மலரின் கையில் கொடுத்தான். அவள் பதற்றத்துடன், “வேண்டாம் பாலா…” என்று தயங்கிப் பின்வாங்கிட, அவனோ பிடிவாதமாக அவளது கைகளில் அதைக் திணித்தான்.
வேறு வழியின்றி மலர் கத்திரிக்கோலால் ரிப்பனைக் கட் செய்ய முயன்ற அந்த நொடியில், பாலா சட்டென்று அவளது கையின் மேல் தன் கரத்தை வைத்து இறுக்கமாகத் பற்றிக் கொண்டான்.
எதிர்பாராத அந்தத் தொடுதலில் அதிர்வடைந்து அவள் சட்டென்று திரும்பி அவனது விழிகளைப் பார்க்க, அதற்குள் இருவரது கரங்களும் இணைந்து, அந்த ரிப்பனை அழகாகக் கட் செய்திருந்தன.
காதல் மலரும்🌹
