வீட்டை அடைந்த இருவரும் குளித்து விட்டு இரவு உணவிற்கு அமர்ந்தனர். மாமியாரின் முகம் தெளியாமல் இருப்பதை கண்டு தயங்கியபடி மயூரி மரகதத்திடம் கேட்டாள்.
“அத்தை,..நாளைக்கு.. உங்களை ரேடியோ ஸ்டேஷனுக்கும்,நான் பரதம் கத்துக்கும் கிளாசுக்கும் கூட்டிட்டு போகவா..? “ என்றாள்.
அவரும் முகம் தெளிய ஆர்வமாக சம்மதித்தார்.மயூரி புன்னகையுடன்
“அத்தை, எனக்கு பரதம் கிளாஸ்ல சலங்கை பூஜை பண்ணனும்.. “ என்று அவள் கூற
“ ஆமாம்…நானே கேட்கணும்னு நினைச்சேன்..எனக்கு தெரியும்.. “ என்றார், மயூரி ஆர்வமாக
“ அத்தை..! உங்களுக்கு பரதம் பற்றி எல்லாமே தெரியுமா..? “என்றாள்.
“ம்ம்..தெரியும்.. “என்றவர் குரல் உள்ளே சென்று மீண்டும் நினைவுகளில் மிதந்தார்
“அத்தை..என்ன ஆச்சு..? “ என்று அவர் தோள் தொட்டு கேட்டாள் மயூரி.
“ஹ்ம்.. ஒண்னும் இல்லை..கண்டிப்பா போவோம்.. “என்றவர் “மயூரி, எனக்கு..கொஞ்சம்.. தலை பாரமா இருக்கு..நான் போய் படுத்துகிறேன். காலையில் எப்பவும் போல கிளம்பி உன் கூட வரேன்.. “ என்றவர்,அவள் பதிலை எதிர்பாராமல் அவர் அறைக்கு சென்று விட்டார்.
மயூரிக்கு மாமியாரின் இன்றைய மனநிலை ஏனோ புரியவில்லை.அவளும் தன் அறைக்கு சென்றவள் மெத்தையில் யோசனையுடன் படுத்தாள். சிந்தனையிலேயே உறங்கியும் போனாள்.
காலை மாமியார் கூறியது போல விரைந்து கிளம்பியவள், கீழே இறங்கி அடுக்களைக்குள் சென்றாள்.
அங்கே மரகதம் புன்னகை முகமாக வரவேற்றார்.
“ வா மயூரி சாப்பிடலாம்.. “என்றார்.
இருவரும் சிரித்து அரட்டை அடித்தபடி உண்டு முடிக்க
“என்ன மயூரி கிளம்பலாமா..?”என்றார் மரகதம்.
சந்தோஷமாக தலை அசைத்து கிளம்பிய மயூரிக்கு மாமியாரின் நேற்றைய முக மாற்றமும், சிந்தனை முகமும் தனது பிரமை என்றே தோன்றியது.
இருவரும் காரில் ஏற மயூரி திருதிருவென விழித்தாள். மரகதம் அவளை பார்த்து
“என்னாச்சு மயூரி..? ஏன்.. இப்படி முழிக்கிற..? “ என்றார்.
“ இல்ல அத்தை…ம்ம்.. “என்று கண்களை டிரைவர் கந்தசாமியை நோக்கி சைகை செய்தாள்.
அவரும் டிரைவரை பார்த்துவிட்டு புரியாமல் “ம்ம்..என்ன மயூரி..? “ என்றார்.
“ப்ச்…அத்தை..!இவருக்கு தெரிஞ்சா உங்க மகன் கிட்ட.. “ என்று மரகதத்தின் காதின் அருகே சென்று தயங்கி கூறினாள்.
“ப்ச்..அச்சோ… நான் கூட என்னவோன்னு பயந்துட்டேன்.. “ என்றவர். “கந்தசாமி எனக்கு உண்மையா இருப்பான். நான் ஒன்னு சொல்லிட்டா.. என் மகனுக்கு கூட அதுல தடா தான்.. “ என்றார் புன்னகையுடன்,பின் அவரே
“என்ன கந்தசாமி..? அப்படித்தானே..? இன்னைக்கு போக போற இடத்தை பற்றி என் மகன் கிட்ட சொல்ல மாட்ட தானே..!” என்றார் மரகதம்.
“நீங்க சொல்லிட்டா..எப்படிமா சொல்றது..!” என்று சிரித்தார்.
“ அதானே..!”என்று மயூரியிடம் கண்களால் டிரைவரை காட்டி பெருமிதமாக இல்லாத காலரை தூக்கினார் மரகதம்.
மயூரியும் புன்னகையுடன்
“ அப்போ..ஓகே அத்தை..!” என்று குதூகலமாக தான் ஆர்.ஜேவாக வேலை பார்க்கும் வானொலி நிலையத்தை கூறினாள்.
வானொலி நிலையத்தை அடைந்ததும்
”ஏம்மா.. இங்க எதுக்கு வந்திருக்கோம்..? “”
என்று ஆர்வமாக கேட்டார் கந்தசாமி.
”நம்ம மயூரி தான் ஆர்ஜே மீரா கந்தா”
என்றார் மரகதம் புன்னகையும் பெருமையுமாக
”அப்படியா..! சின்னம்மா எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லாம இருந்திருக்கீங்க..!”
என்று கூறியவர் காரில் இருந்து இறங்கிய மயூரியை பார்த்து
”அப்போ ஆர் ஜே கதிர் உங்களுக்கு தெரியும் தானே மா”
என்றார் ஆர்வமாக
மயூரி அவரை இடுப்பில் கை வைத்து முறைத்ததை கவனிக்காதவர், தன் பாக்கெட்டில் இருந்த சிறு துண்டு பேப்பரை எடுத்தவர்
”சின்னமா இந்த பேப்பர்ல அவர் கையெழுத்து வாங்கி தாங்க என் பொண்ணு அவரோட ஃபேன்”
என்றார்.
பேப்பரை வாங்காமல் மயூரி முறைத்துக் கொண்டிருக்க, கந்தசாமியோ புரியாமல் விழித்தார். சிரிப்பை அடக்க முடியாமல் மரகதம்
”கந்தா அவள நீ பாராட்டலனு கோவமா முறைக்கிறாளாம்”
என்று சிரித்தார்.
கந்தசாமியும் தலையை சொரிந்தபடி
”ஐயோ அம்மா.. நான் உங்க ஷோக்கு தான் ரசிகன். இந்த பேப்பர்ல பின்னாடி உங்க கையெழுத்து போட்டு தாங்க”
என்றார்.
மயூரியோ
”வேண்டாம் அண்ணா பரவால்ல அந்த லூசு கதிர்கிட்ட இருந்தே வாங்கி தரேன்”
என்று அந்த பேப்பரை பிடுங்கி சென்றாள்.
சிரித்தபடி கந்தசாமி தோளில் தட்டிவிட்டு மயூரியுடன் சென்றார் மரகதம்.வானொலி நிலைய வாசலிலேயே கதிர் நின்றிருக்க, மயூரி அவனை மரகதத்திடம் அறிமுகம் செய்து வைக்க மரகதம் கண்கள் விரிய புன்னகையுடன்
”ஐயோ கதிர் தம்பி..! உங்கள பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்”
என்று அவன் கைகளைப் பற்றி குலுக்கினார்.
இருவரும் ஆர்வமாக பேச ஆரம்பிக்க இருவரும் பேசட்டும் என்று மயூரி தன் ஷோவை நடத்த உள்ளே சென்றாள்.
அன்றைய ஷோவை மனநிறைவுடனும்,குதூகலகமாகவும் நடத்தி முடித்திருந்தாள் மயூரி. வெளியே வந்த மயூரியை பெருமிதமாக பார்த்த மரகதம்
”மயூரி நீ ஷோ பண்ணும் போது உன் முகத்தில் தனி தேஜஸ் தெரியுது அந்த அளவுக்கு உனக்கு இது புடிச்சிருக்கா..?”
என்றார் அவள் கைகளை பற்றி,புன்னகையுடன் அவரைப் பார்த்தவள்,
”ஆமா அத்தை,முதல்ல என்னமோ.. சும்மாதான்.. ஆரம்பிச்சேன்.போகப்போக மனசுக்கு நிறைவா இருக்கு”
என்றாள் மகிழ்வுடன்.
”இந்த சந்தோஷம் எப்பவும் உன்னிடம் இருக்கணும்”
என்றார்.
அடுத்ததாக இருவரும் அவள் பரதம் கற்றுக் கொள்ளும் பள்ளிக்கு சென்றனர். வகுப்பு நடக்கும் பள்ளி வாசலில் நடனம் ஆடும் புகைப்படங்களை பார்த்த மரகதம் மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கினார்.
அவர் தோள் தொட்டு
”அத்தை,வாங்க உள்ள போகலாம்”
என்றாள் மயூரி.
பெருமூச்சுடன் உள்ளே சென்றார் மரகதம்.அப்பொழுதுதான் பிள்ளைகள் வகுப்புகள் முடிந்து வெளியே வரவும், உள்ளே செல்வதுமாக இருந்தனர்.அவர்களை பார்த்தபடி மயூரியுடன் உள்ளே சென்ற மரகதத்தின் முகத்தில் முன்பிருந்த மகிழ்ச்சி இல்லை.மயூரிக்கு இதில் ஏதோ இருப்பது போல தோன்றினாலும், அதைக் கேட்க அவள் மனம் தடை போட்டது.
உள்ளே அவளின் ஆசிரியரிடம் தன் மாமியாரை அறிமுகம் செய்துவிட்டவள்,சலங்கை பூஜைக்கு தேவையானதை கேட்டறிந்து கொண்டாள் மரகததின் முக மாற்றம் அவளுக்கு அன்றைய வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமில்லை.
அதனால் இருவரும் கிளம்பி விட்டனர். மரகதம் அமைதியாகவே வர மயூரியே பேச்சை ஆரம்பித்தாள்.
”அத்தை எனக்கு ஒரு சலங்கை வாங்கணும்.. வாங்கிட்டு வீட்டுக்கு போலாமா..?”
என்றாள் தயக்கத்துடன்.
”ம்ம்.. கண்டிப்பா வாங்கலாம் மயூரி, கந்தசாமி சலங்கை வாங்கும் கடைக்கு போகலாம்”
என்றார் மரகதம் வராத புன்னகையை வரவழைத்துக்கொண்டு.
அவரின் சங்கடம் புரியாவிட்டாலும் அமைதியாகவே இருந்தாள் மயூரி. சலங்கை வாங்கும் கடையில் மரகதம் பணத்தை எடுக்க
”அத்தை, ப்ளீஸ்..என்னோட கனவே என் உழைப்பில் வாங்க விரும்புகிறேன்”
என்றாள் அவர் கைகளை பற்றி
மென் புன்னகையுடன் அவள் கன்னத்தை தட்டியவர்
”சரிடா மா”
என்றார் பெருமையுடன்.
வீடு வந்த பிறகு மரகதம் மீண்டும் பழையபடி மாற,மாமியாருக்கும் மருமகளுக்கும் வீட்டில் குதூகலமாக மகிழ்ந்தனர். மேலும் இரண்டு நாட்கள் மாமியார் மருமகளின் ஆட்டம் நன்றாகவே சென்றது.
அன்று வெள்ளிக்கிழமை மரகதம் காலையிலேயே கோயிலுக்கு சென்று இருந்தார். மயூரி இந்த ஒரு வாரம் கல்லூரி விடுமுறையில் இருந்தாள். அவளை கோவிலுக்கு அழைக்க ஷோவிற்கு தயார் ஆகவேண்டும் என்று மயூரி செல்ல வில்லை. தன் வேலையை முடித்து விட்டு வெளியே வந்தவள் என்ன செய்வது என்று யோசிக்க, கீழே செல்லவும் மனம் இல்லை. மொட்டை மாடிக்கு சென்று பார்க்க விரும்பினாள்.
“ஹ்ம்ம்…இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு மாசம் ஆகப்போகுது இன்னும் மொட்டை மாடிக்கு போனதில்ல.. ச்சை… இந்த ஹிட்லருக்கு பயந்து ரூம்..ரூம் விட்டா ஹாலுன்னு இருக்கேன்.. “ என்று புலம்பியபடி மாடியை நோக்கி நடந்த மயூரி சட்டென நின்றாள்.
அவள் திரும்பி மரகதம் திறக்க கூடாது என்று கூறிய அந்த பூட்டி இருந்த அறையைப் பார்க்க
”இந்த அறைக்குள்ள என்ன ரகசியம் இருக்கு..! ஒருவேளை ஹிட்லர் உள்ள புலி எதுவும் பெட்டா வைத்திருப்பாரோ..!”
என்று இடுப்பில் ஒற்றை கையை ஊன்றி யோசனையுடன் பார்த்தவளுக்கு
அதை திறந்து பார்த்தால் என்ன என்று தோன்றியது
”இதுக்கு சாவி எங்க இருக்கும்”
என்று யோசித்தவள்,
”எப்படியும் சரளாக்கா கிளீன் பண்றதுக்கு வச்சிருப்பாங்க இல்ல”
என்று தோன்றியதும் விறுவிறுவென கீழே சென்று சரளாவை கேட்க
”எதுக்கு…மா…அந்த… ரூம் சாவி”
என்று தயங்கினார்.
”ஐயோ அக்கா பயப்படாதீங்க அவர்தான் ஊர்ல இல்லையே.. அத்தை கிட்ட நான் சொல்லிக்கிறேன். நீங்க குடுங்க சும்மா பார்த்துட்டு கொடுத்துடறேன் அஞ்சு நிமிஷம் தான்..!”
என்று கேட்டாள் சரளாவும் தயங்கியபடி
” சீக்கிரம் வந்துருங்க.. அம்மா வந்தா கோச்சுக்க போறாங்க”
என்று அடுக்கலையில் இருந்த ஒரு அலமாரியை திறந்து சாவியை எடுத்து தந்தார்.
சாவி கையில் கிடைத்தவுடன் சிட்டாய் பறந்தாள் மயூரி. அந்த அறையின் வாயிலில் நின்றபடி கடவுளை வேண்டிக்கொண்டு சாவியையிட்டு கதவை திறந்தாள்.
கதவை திறந்தவளுக்கு ஒரு நிமிடம் மூச்சு அடைத்துவிட்டது. அவள் காண்பது உண்மைதானா..?இது கனவாக இருக்குமோ..? என்று நினைத்தவள் கையை ஒரு முறை கிள்ளி பார்த்துக்கொண்டாள்.
கனவில்லை என்று தெரிந்த பின்னோ மனதில் பெரும்
மகிழ்ச்சி, புன்னகையுடனும் சந்தோஷ மிகுதியிலும் உள்ளே ஓடி அறையின் நடுவே நின்று கன்னங்களில் கைவைத்து சுற்றிப் பார்த்தாள்
”ஐயோ..! இது உண்மையிலேயே ஹிட்லர் தானா..? கடவுளே… என்னால நம்பவே முடியலையே..!”
என்று மீண்டும் மீண்டும் ஆச்சரியப்பட்டாள்.
அவளின் கண்கள் சுற்றி சுற்றி ரசித்து மகிழ்ந்தது. அங்கே இருந்த சுவர்களை அலங்கரித்தது,ரஞ்சனின் புகைப்படங்கள்.
அதிலும் சாதாரண புகைப்படங்கள் அல்ல, ஒவ்வொரு புகைப்படத்திலும் ஓர் அபிநயம் பிடித்து பரத உடையுடன் மிக அழகாக இருந்தான். அந்த அறையில் இருந்த மேஜை ஒன்றில் கோப்பைகளும் மெடல்களும் நிறைந்திருக்க அருகே ஒரு மேஜையில் சலங்கையும், ஒரு பெரிய டேப் ரெக்கார்டரும் இருந்தது.
கோப்பைகளை கொண்டிருந்த மேஜையின் இலுப்பறையில் புல்லாங்குழல்கள், அதன் அருகே இருந்த சிறு திறப்பில் ஆல்பங்கள் அதை எடுத்துப் பார்த்தவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
அவை ரஞ்சன் அரங்கேற்றம் செய்த புகைப்படங்கள், பல பரத வித்தவர்களிடம் பரிசு வாங்கியது போல புகைப்படங்கள், என்று நிறைய இருந்தது.
மேஜையின் ஓரத்தில் ஒரு கூடை பந்தும் இருந்தது சுவற்றில் இருந்த புகைப்படத்தில் ரஞ்சன் கூடைப்பந்து உடையுடன் பந்தை கைகளில் வைத்தபடி புன்னகையுடன் அவனின் லேசர் பார்வையுடன் இருந்தான்.
இவை அனைத்தையும் பார்த்த மயூரிக்கு தலைகால் புரியவில்லை. சுற்றி சுற்றி அவளும் ஆடினாள். அந்த டேப் ரெக்கார்டர் ஓடுமா..?என்று தோன்ற அதன் அருகில் சென்று அதை உயிர்பித்து ஆன் செய்யும் நேரம் கீழே இருந்து சரளா கத்தி அழைத்தார்.
”மயூரி மா”
என்று
இவள் இருந்த ஆர்வத்தில்
”வரேன் அக்கா”
என்றவள். அந்த டேப்ரெக்கார்டை இயங்கச் செய்தாள்.
“ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ..? “ என்று பாடல் ஓடத்துவங்க
“ ஹைய்” என்று இரு கைகளையும் தட்டிக்கொண்டு குதித்தாள். குதித்தவள் அதே பாடலுக்கு தன் பரத வகுப்பில் கற்றுக் கொடுத்ததை ஆடவும் செய்தாள்.
ஆடிக்கொண்டே ஒரு சுற்றுச் சுற்றி நிற்க வாயிலில் நிழல் ஆடியதை கண்டு திரும்பியவள். அதிர்ந்து அப்படியே நின்றாள்,வாயிலை அடைத்துக் கொண்டு சிவந்த விழிகளுடன் ரஞ்சன் நின்றிருந்தான்.
